3.10.2009

நாற்றமெடுக்கும் அரசியலும் நாற்காலிச் சண்டைகளும்…


தேர்தலையொட்டி வெளியாகும் செய்திகளையும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும் பார்க்கும்போது மனிதர்கள் இத்தனை குரூரமாகவும் தந்திரமாகவுமா இருப்பார்கள் என்று வியந்து மாளவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ‘எசப்பாட்டு’ கச்சேரிகளில் ஈழத்தமிழர்களின் தலை உருளாமல் இருந்தாலாவது ‘போங்கய்யா நீங்களும் உங்கள் புண்ணாக்கு அரசியலும்’என்று புறக்கணித்துவிடலாம். ஆனால், தேர்தல் விருந்துபசாரத்தில் ஈழத்தமிழர்களின் குருதி அவர்களுக்கு மதுவாயிருப்பதும், சிதறிய சதைத்துண்டுகள் உணவாயிருப்பதும்தான் வருத்துகிறது. பிணங்களின் மீது மேடை அமைத்து அப்போதுதான் உருவியெடுத்த குடலை ஒலிவாங்கியாக்கி பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, சுயநலத்தின் நிர்வாணம் அருட்டுகிறது.

கடைசி மூச்சுக்கூட ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபடிதான் பிரியவேண்டும் என்று அடாவடியாக அடம்பிடிக்கிற கலைஞருக்கு, ஈழத்தமிழர்களின் மனங்களில் தான் என்னவாக இருக்கிறேன் என்பது இன்னமும் புலப்படவில்லையா? ‘நீலி’என்றும் ‘சாத்தான்’என்றும் அண்மையில் மேலதிக பட்டங்களைப் பெற்ற ஜெயலலிதா அம்மையார், கால மறதியின் மீது வைத்திருக்கும் அளவுக்கதிகமான நம்பிக்கையையும் பாராட்டத்தான் வேண்டும். வாக்குகளுக்காக எல்லோரும் ஏறும் மேடையில்(ஈழத்தமிழர்களின் பாடையில்) நாமும் ஏறித்தான் பார்ப்போமே என்று உண்ணாவிரதத்தில் குதித்திருக்கிறார். வாக்காளர் அட்டை என்னும் துருப்புச் சீட்டைக் கையில் வைத்திருக்கிறவர்களே தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கிற பரிதாபத்தைத் தமிழகத்தில்தான் காணமுடியும். தேர்தலின் முன் ராஜாக்களாகவும் தேர்தல் முடிந்ததும் ஜோக்கர்களாகவும் பார்க்கப்படும் மக்களே இங்கு பரிதாபத்திற்குரியவர்கள்.

‘காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான கூட்டணி பலமாக இருக்கிறது… திடமாக இருக்கிறது’என்று கலைஞர் மீண்டும் மீண்டும் தனது வார்த்தைகளைத் தானே நம்பாததுபோல அறிவித்துக்கொண்டிருக்கிறார். ‘ஆம்… ஆம்.. நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம்’என்று அவர்களும் ஏதோ ‘நெருடும்’ குரலில் வழிமொழிந்துகொண்டுதானிருக்கிறார்கள். காங்கிரஸ் ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் அனுப்பும். அந்த ஆயுதப் பரிவர்த்தனையைக் கண்டுகொள்ளாத கலைஞர், அவ்வாயுதங்களால் அழிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இரங்கி அறிக்கை அம்பு விடுவார். இந்திய அரசு நோயும் நானே… நோய்க்கு மருந்தும் நானே என்று, ‘திருவிளையாடல்’ பாணியில் பாடாத குறைதான். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மருத்துவர் குழுவடங்கிய விமானம் இந்தியாவிலிருந்து ஈழத்திற்குப் புறப்பட்டிருக்கிறது. இந்த முரண்நகைகளையெல்லாம் கசப்பானதொரு புன்னகையோடு பார்த்துத்தொலைக்கவேண்டியிருக்கிறது.


‘கலைஞரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை’ என்று சொன்னால் அது தவறு. தான் பேசுவது இன்னதென்று அவர் புரிந்தே பேசுகிறார். ‘ஈழத்தில் நடக்கும் மனிதப்பேரவலங்களையிட்டு நான் மனம்வருந்துகிறேன்’என்று ஒருநாள் அறிக்கை விடுவார். அதே ஈழத்தமிழர்களுக்காகத் தன்னைக் கொளுத்திச் செத்துப்போன முத்துக்குமார் என்ற, மானுடத்தின்பால் பேரன்பு மிக்க இளைஞனது தீக்குளிப்பைக் கண்டும்காணாதது போல கண்மூடியிருப்பார். அந்தச் சோதிப்பெருஞ்சுடரின் தியாகத்தை ‘தீக்குளிப்பது தீவிரவாதச் செயல்’என்று சொல்லி மின்மினியாக்கி அணைத்துவிடுவார்கள் அவரைச் சார்ந்தவர்கள். ஈழத்தமிழர்களுக்காக இரங்குகிறார் என்றால், முத்துக்குமாரின் மரணத்தையடுத்துப் பொங்கியெழுந்த மாணவர்களது உணர்வுகளுக்கு, எழுச்சிக்குத் தடைபோடும்வகையில் விடுதிகளையும் கல்லூரிகளையும் மூடியது எதனால்? இத்தனை காலம் கழித்து தமிழகம் எழுந்ததே என்று கொண்டாடியிருக்கவேண்டாமா ‘தமிழினத் தலைவர்’!

உண்மையை உரத்துப் பேச இங்கு ஒரு சிலர்தான் உண்டு. அந்த ஒரு சிலரில் உண்மையும் நாவன்மையும் ஒருசேரப் பொருந்திய சீமான், புதுச்சேரியில் வைத்து உண்மைகளைப் போட்டுடைத்தார் என்ற காரணத்திற்காகச் சிறையில் தூக்கிப் போட்டார்கள். ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார்’ என்று கொளத்தூர் மணி அவர்களையும் சிறையிலடைத்தார்கள். தினம் தினம் செத்து மடியும் சகோதரர்களுக்காகக் குரல்கொடுப்பது பயங்கரவாதச் செயலாயிருக்கிறது. இராஜபக்ஷ என்ற இரக்கமற்றவனுக்குத் துணைபோகிறவர்களை உரத்துக் கேள்வி கேட்பது அதிகாரத்தின் செவிகளில் நாராசமாய் விழுகிறது. அதே விடயத்தை வேறு வார்த்தைகளால் ‘போரை நிறுத்து’என்று தி.மு.க.வினரும்தான் கேட்டார்கள். ஒப்புக்காகவேனும் காங்கிரஸாரும் கேட்கிறார்கள். ‘ஏனடா கொலைசெய்கிறாய் பாவிப்பயலே’என்று சீமான் அறச்சீற்றத்தோடு கேட்டதுதான் தவறாகிவிட்டது. இந்தியாவின் போர்நிறுத்த வேண்டுகோளை எள்ளல் புன்னகை இதழ்க்கடையில் வழிந்தோட ராஜபக்ஷேவும் கோத்தபாயவும் பார்த்துக்கொண்டிருக்கவில்லையா? இந்தியா அடிக்கிறமாதிரி அடிக்கிறது@ இலங்கையோ அழுகிற மாதிரி அழுகிறது. இந்தப் பிரம்ம இரகசியம் எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

உண்மையைப் பேசினால் காராக்கிரகம் என்பதே எல்லா அரசுகளதும் நிலைப்பாடாயிருக்கிறது. ஜனநாயகம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பதெல்லாம் அகராதியில் முடக்கப்பட்ட சொற்களாகிவிட்டன. நிமலராஜன், தராக்கி, லசந்த, அண்மையில் வித்தியாதரன் என்று நீள்கிறது இலங்கை அரசின் பட்டியல். ஊடகக்காரர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் இலங்கை முதன்மையானதாக இருக்கிறதாம். இந்தியா இவ்விடயத்திலும் இலங்கையின் ‘பெரியண்ணா’வாக இருக்க நினைக்கிறாற்போலிருக்கிறது.

மறுபடியும் நமது பிலாக்கணத்துக்கு வருவோம். ஒரு ஊரிலே ஒரு மாமியார்க்காரி இருந்தாளாம். அதே வீட்டில் ஒரு மருமகளும் இருந்தாளாம். ஒரு பிச்சைக்காரன் வாசலிலே வந்து ‘அம்மா பிச்சை’என்றானாம். மருமகள் எழுந்துவந்து ‘பிச்சை இல்லைப் போ’என்றாளாம். பிச்சைக்காரன் ஏமாற்றத்தோடு திரும்பிப்போகும்போது மாமியார்க்காரி கூப்பிட்டாளாம். ‘இவங்க ஏதோ போடப்போறாங்க. நல்லவங்க’என்று நம்பிக்கையோடு பிச்சைக்காரன் திரும்பிவந்தானாம். ‘பிச்சை இல்லையென்று அவ என்ன சொல்றது… நான் சொல்றேன்… பிச்சை இல்லைப் போ’என்றாளாம் மாமியார்க்காரி.
மேற்சொன்ன கதை ஞாபகத்திற்கு வரும்படியாக அடிக்கடி சம்பவங்கள் நடந்துதொலைக்கின்றன. பழ.நெடுமாறன் அவர்களது தலைமையிலான ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கமோ அதுபோன்ற வேறு ஏதாவது அமைப்புக்களோ கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவார்கள். அதற்கு தமிழக காவற்துறை அனுமதி வழங்க மறுத்துவிடும். அதே போன்றதொரு கூட்டத்தை தி.மு.க.நடத்தத் தடையேதுமில்லை. ஆக, சட்டம் என்பது கை வலுத்தவனின் கையாள் ஆகிறது. ‘ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்காதே என்று நீ என்ன சொல்வது… அதையும் நான்தான் சொல்வேன்’என்ற தொனி புலப்படுகிறதல்லவா? ‘செத்த வீடானால் நான்தான் பிணம்...கல்யாண வீடானால் நான்தான் மாப்பிள்ளை’என்று சொல்வார்களே…. அதுபோல.

எல்லா இடங்களிலும் தாமே துருத்தித் தெரியவேண்டும் என்று மாநில அரசு முண்டியடித்ததன் விளைவுதான் வழக்கறிஞர்களின் தலைகளில் அடியாக விழுந்திருக்கிறது. முத்துக்குமார் பற்றவைத்துவிட்டுப் போன தீ வழக்கறிஞர்களுக்கிடையில் பற்றியெரிந்தால், காங்கிரசின் மீதான தி.மு.க.வின் விசுவாசம் என்னாவது? ‘மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம்’என்பதே காங்கிரசாரின் தாரக மந்திரமாக இருக்கும்போது ‘தமிழர்களை மறந்துவிடுவோம்… வரலாறு நம்மை மன்னித்துவிடும்’என்பதாகத்தானே பிற்பாட்டு அமையவேண்டும்! அதை மீறும் எவர் மீதும் சட்டம் பாய்கிறது. காவற்துறையின் செயலுக்கு கலைஞர் அவர்கள் பொறுப்பில்லை என்றால், காவற்துறை மாநிலத்தை ஆள்பவரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? ஈழத்தமிழனை இலங்கை இராணுவம் அடிக்கிறது. ஈழத்தமிழனுக்காகப் பேசுபவனை இங்குள்ள காவற்துறை மிரட்டுகிறது. ஆக, வாளேந்திய சிங்கத்திற்கும் தூணேந்திய சிங்கங்களுக்கும் ‘தமிழர் ஒவ்வாமை’நோய் எனக் கொள்ளலாமா?

‘எல்லா மாடும் ஓடுதுன்னு வயித்து மாடும் கூட ஓடிச்சாம்’என்று சொல்வார்கள். ஜெயலலிதா அம்மையாரின் உண்ணாவிரத அறிக்கையைப் பார்த்தபோது அதுதான் நினைவில் வந்தது. ‘போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்’என்று திருவாய் மலர்ந்தருளியவர் இதே தேவியார்தான். ஒவ்வொரு காலத்திற்கென்று ஒவ்வொரு நாகரிகம் புதிது புதிதாகப் பிறக்கும். கால் விரிந்த பெல்பொட்டம், தோள்வரை தலைமயிர் வளர்த்தல் இப்படியாக. அந்தச் சாயலில் தேர்தல் காலத்திலும் சில காய்ச்சல்கள் பரவும். வரவிருக்கும் தேர்தலின்போது கட்சிகள் தூக்கிப்பிடிக்கும் கொடி ‘ஈழப்பிரச்சனை’யாயிருப்பது வருந்தத்தக்கதே. அங்கே நாளாந்தம் ஒருவேளைச் சாப்பாடு கூட இல்லாமல் குழந்தைகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். பசியால் குடல் உள்ளிழுத்து முறுக்கி கண்கள் இருண்டு தண்ணீருக்காய் தவித்து விழுந்து இறந்துகொண்டிருக்கிறார்கள் வன்னியிலுள்ள தமிழர்கள். இறந்தவர்களை எடுத்துப் புதைக்கப் போகும்போது எறிகணை தாக்கி மண்ணில் சரிவது சாதாரண நிகழ்வாயிருக்கிறது. அத்தகைய பேரழிவின் மத்தியில், பட்டினியின் பிடியில், மனச்சிதைவின் விளிம்பில் மரணம் வரும் நொடியை எண்ணிக்கொண்டிருப்பவர்களது பிணங்கள் மீது அரசியல் நடத்தும் எவரும் மனிதர்கள் என்ற வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்.
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அம்பலத்தேறி ஆடுவதுபோல பா.ம.க.ஆடவில்லையே தவிர, வளைய வேண்டிய இடத்தில் வளைந்து குனிய வேண்டிய இடத்தில் குனிந்து சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது சங்கதி. மருத்துவர் அய்யா மதிப்பிற்குரிய சோனியா அம்மையாரைச் சென்று சந்தித்து சமரசம் பேசியிருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. தானாடாவிட்டாலும் மத்தியிலுள்ள தன் வாரிசுக்காக காவடி ஆடவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து எரிந்த தியாகிகளுடைய ஈமச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டு இனவெறியை எதிர்த்துக் குரல்கொடுக்கும் ராமதாஸ் ஐயா ஒரு முகம் என்றால், மத்தியில் மகனை அமர்த்தி, தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்தப் போராடும் இருப்பின் தவிப்புத் தெறிக்கும் மற்றுமோர் முகமும் மருத்துவருக்குண்டு.

ஆக, இங்கே தேர்தல் கோலாகலம் ஆரம்பமாகிவிட்டது. நாற்காலிக்கான குடுமிப்பிடிச் சண்டைகளுக்கு இனிக் குறைவிராது. ‘போக மாட்டேன்.. போக மாட்டேன்’என்று அடம்பிடிக்கிறார் கலைஞர். ‘போயேன்… நானும் கொஞ்சம் ஏமாற்றுகிறேனே…’என்று முறுக்குகிறார் ஜெயலலிதா. ‘சற்றே விலகியிருங்களேன் நந்திகளா’என்று கடுக்கின்றன ஏனைய கட்சிகள். அரசியல் தெளிந்தவர்கள் இம்முறையும் ஏமாற மாட்டார்கள். இங்கு நடக்கும் இழுபறிகளை அறியாத சனங்கள், அரசியல் அறிவற்றவர்களை நினைத்தால்தான் அடிவயிற்றைக் கலக்குகிறது. ஆனால், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போவது விழப்போகும் வாக்குகள் மட்டுமல்ல என்பதை நாமறிவோம். பணமும் அரிவாளும் சாராயமும் வேட்டி சேலைகளும் சண்டித்தனமும் கள்ள ஓட்டுக்களும் ஆட்டோக்களும் அச்சுறுத்தல்களும்கூட தேர்தலில் தோன்றாத்துணையாக இருக்குமென்பதை அனைவரும் அறிவோம்.

வாழ்க பணநாயகம்! வெல்க அராஜகம்!

18 comments:

Anonymous said...

good article

please publish this

உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக…


இந்திய மத்திய அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகும் கருணாநிதி குடும்பத்தின் தொலைக்காட்சிகள் எங்கள் வீடுகளில் தேவையா ?
அண்மைக் காலங்களில் எமது தேசம் சுமக்கும் துயரங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் கண்களில் கண்ணீரையும் மனங்களில் நிரந்தர வலியையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் எமது சொந்தங்கள் சுமக்கும் இந்தத் துயரங்களை எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை என்பதும், எத்தகைய வெளிநாட்டு ஊடகங்களும் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவில்லையே என்ற ஏக்கமுமாகவே நாட்கள் நகர்கின்றது.

இதில் ஊடகம் தொடர்பான விடையத்தை நாம் எடுத்து கொள்வோம். தன் சொந்த மொழிக்கு இனத்திற்கு இளைக்கப்படும் கொடுமைகளை தமது சொந்த அரசியல் பொருளாதார நலன்களுக்காக திட்டமிட்டு வெளிக்கொணராத தழிழ் ஊடகங்களே இருக்கும் போது எவ்வாறு வேறு தேசியம் சார்ந்த, வேற்றுமொழி சார்ந்த ஊடகங்கள் எமது செய்திகளை வெளிக் கொண்டு வரவில்லை என்று கவலைப்படலாம்?.

ALJAZEERA இந்த தொலைக்காட்சியை நீங்கள் அறிவீர்கள். ஈராக்கின் மீது அமெரிக்கா நடத்திய மிகமேசமான தாக்குதல்களை, அமெரிக்க ஆதரவு ஊதுகுழால்களாக செயற்பட்ட பல ஊடகங்கள் குறிப்பாக, தொலைக்காட்சிகள் மறைக்க முயன்ற மனிதஉரிமை மீறல்களை உலகின் முன் துணிச்சலுடன் வெளிச்சமாக்கியது. அத்துடன் அண்மையில் GAZA வில் இஸ்ரேலிய அரசு நடாத்திய கொடிய தாக்குதல்களை உடனுக்குடன் உலகின் கண்களுக்கு காண்பித்து மானிடத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்பியது. அல்ஜசீரா தொலைகாட்சியின் இத்தகைய நடவடிக்கைகளால் குறித்த செய்திகள் உடனுக்குடன் வெளிவந்தது மட்டுமன்றி உலகமெல்லாம் வாழும் இஸ்லாமிய மக்களை ஒன்றாக்கி தமது இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான ஒட்டு மொத்த அரபு மக்களின் குரலையும், இஸ்ரேலுக்கு எதிரான அனைத்துலகத்தின் கண்டனங்களையும் ஒலிக்கச் செய்தது. அத்துடன் பலஸ்தீன மக்களிற்கான ஆதரவு அலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.மொத்தத்தில் அல்ஜசீரா அரபுகளின் ஊடகமாக செயல்பட்டு வருகின்றமை வெளி வெளி உண்மை.

இனி எங்கள் விடையத்துக்கு வருவோம். இன்று தமிழ் மீடியா உலகில் அதிக ஆதிக்கத்தைச் செலுத்திவரும் சன் குழுமத்தைச் சேர்ந்த தொலைக்காட்சிகள் குறிப்பாக சன் TV KTV கலைஞர் TV போன்ற தொலைக்காட்சிகள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் பெரும் ஆக்கிரமிப்பை செய்துள்ளது. அதாவது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் சந்தையை இலக்கு வைத்து செய்யப்படுகின்றது இந்த வியாபாரம்.

உலகத் தமிழினமே ஈழத்தில் துயருறும் தன் இனத்துக்காக கண்ணீர் வடிக்கும் இன்நேரம் அதாவது உலகத்தின் மௌனத்தை ஆதாரமாக கொண்டு சிங்கள இனவெறி அரசு நடத்திவரும் கொடிய இன அழிப்புப் போரை போரின் பதிவுகளை வெளிக்கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய வாய்ப்புக்கள் இருந்தும் இந்தத் தொலைக்காட்சிகள் ஏன் எமது மக்களின் கண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஈழத்து உறவுகளின் துன்பங்களைக் கண்டு துடிக்கிற பொழுது தழிழீழ மக்களின் அழிவுகள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மூடிமறைத்து தங்கள் குடும்பத்தின் தில்லுமுல்லு அரசியலை காப்பாற்றும் கபடநோக்கத்தோடு மத்திய அரசின் தமிழின அழிப்பு அரசியலுக்கு துணைபோகின்றது.

கருணாநிதி நினைத்திருந்தால் பெருமளவு தமிழர்களை உயிரழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். என்ற உண்மை ஒருபுறம் இருக்க தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்தும் இனஅழிப்புத் தாக்குதல்களை தமிழக மக்களுக்கு காண்பித்து தமிழக மக்கள் மத்தியில் இன்றுள்ள எழுச்சியை பேரெழுச்சியாக்கி அதன் மூலம் மத்திய அரசிற்கு பெரும் அழுத்தங்களை கொடுத்து ஈழதமிழர்களின் கண்ணீரைத் நிரந்தரமாக துடைப்பதற்கான அரிய வாய்ப்புக்களை உருவாக்கவும் வல்ல பலமான ஊடகக் குழுமமாக விளங்கும் கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் (கலைஞர் TV SUN TV KTV தொலைக்காட்சிகள் உட்பட அனைத்தும்) இதனைச் செய்யாதது ஏன் ?

(தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமிழகத்தின் எழுச்சியின் முக்கியத்தும் பற்றி மேலும் அறிய மு.திருநாவுகரசு எழுதிய தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் கட்டுரைத் தொகுப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதனைத் தோற்கடிக்க முடியாத சுழ்நிலையும் எனும் கட்டுரையில் காண்க.)

இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் விடையாக உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூட்டிக் கொள்ளவும் தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன்குடும்பத்துக்கே உரித்ததாக்க விரும்புகின்ற தேர்தல் காலத் தமிழர் கலைஞர்” என்று கருணாநிதியையும் அவர் ஆட்சிபற்றியும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரன் தன் மரணசாசனத்தில் குறிப்பிட்டுள்ள வரிகளை கவனத்தில் கொள்ளலாம். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்காமல் உடன்பிறப்பே என்று பிதற்றும் இந்த வாய்ச் சொல்வீரர்களை எரிந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்(டில்)டை தொடர்ந்து பிடுங்க அனுமதிக்கப் போகின்றோமா?
www.nerudal.com

பதி said...

சாட்டையை சொடுக்கி உள்ளீர்கள் !!!

//தேர்தல் விருந்துபசாரத்தில் ஈழத்தமிழர்களின் குருதி அவர்களுக்கு மதுவாயிருப்பதும், சிதறிய சதைத்துண்டுகள் உணவாயிருப்பதும்தான் வருத்துகிறது. பிணங்களின் மீது மேடை அமைத்து அப்போதுதான் உருவியெடுத்த குடலை ஒலிவாங்கியாக்கி பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, சுயநலத்தின் நிர்வாணம் அருட்டுகிறது.//

தமிழகத் தமிழர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல...

//தேர்தலின் முன் ராஜாக்களாகவும் தேர்தல் முடிந்ததும் ஜோக்கர்களாகவும் பார்க்கப்படும் மக்களே இங்கு பரிதாபத்திற்குரியவர்கள்.//

இது தான் மக்களாaட்சியின் மகத்துவம்...

//இந்நேரத்தில் மருத்துவர் குழுவடங்கிய விமானம் இந்தியாவிலிருந்து ஈழத்திற்குப் புறப்பட்டிருக்கிறது. //

அது போரில் காயம்படும் சிங்கள இராணுவத்தினருக்கு உதவ என செய்திகள் அடிபடுகின்றன...

//பேரழிவின் மத்தியில், பட்டினியின் பிடியில், மனச்சிதைவின் விளிம்பில் மரணம் வரும் நொடியை எண்ணிக்கொண்டிருப்பவர்களது பிணங்கள் மீது அரசியல் நடத்தும் எவரும் மனிதர்கள் என்ற வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்.//

இருக்கலாம்.. ஆனால், தமிழக அரசியல்வியாதிகள் என்னும் வரையறையில் இவைகள் அனைத்தும் அடக்கம்....

//தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போவது விழப்போகும் வாக்குகள் மட்டுமல்ல என்பதை நாமறிவோம். பணமும் அரிவாளும் சாராயமும் வேட்டி சேலைகளும் சண்டித்தனமும் கள்ள ஓட்டுக்களும் ஆட்டோக்களும் அச்சுறுத்தல்களும்கூட தேர்தலில் தோன்றாத்துணையாக இருக்குமென்பதை அனைவரும் அறிவோம். //

இதை அறியாமல், தமிழகத் தேர்தலில் ஏதேனும் ஒரு மாற்றம் நடக்கும் என எதிர்பார்க்கும் ஏமாளிகளை (இதில் நானும் அடக்கம்) என்னவென்று சொல்ல்வது??

சிவாஜி த பாஸ் said...

//////// வாய்ப்புக்களை உருவாக்கவும் வல்ல பலமான ஊடகக் குழுமமாக விளங்கும் கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் (கலைஞர் TV SUN TV KTV தொலைக்காட்சிகள் உட்பட அனைத்தும்) இதனைச் செய்யாதது ஏன் ? /////////////

இப்படி செய்யறதுல 5 காசு லாபம் இருந்தாகூட அவங்க செய்வாங்க, அது கூட இல்லாத விடயமாயிற்றே!

தமிழநம்பி said...

///ஈழத்தமிழர்களின் குருதி அவர்களுக்கு மதுவாயிருப்பதும், சிதறிய சதைத்துண்டுகள் உணவாயிருப்பதும்தான் வருத்துகிறது. பிணங்களின் மீது மேடை அமைத்து அப்போதுதான் உருவியெடுத்த குடலை ஒலிவாங்கியாக்கி பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, சுயநலத்தின் நிர்வாணம் அருட்டுகிறது///

vuNmayai sariyagap purinthu migach chariyaga viLakki irukkireergal.

Anonymous said...

நாட்டு நடப்பை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள்! அத்தோடு தெலுங்கன் தகர பாலுவை பற்றி எழுததற்கு என் கண்டனங்கள்! கேம்ப்ரிஜ் யுனிவர்சிட்டி கேண்டின் சப்ளையர் இந்த நாட்டு தேர்தலில் நிற்கும் போது தமிழ் உணர்வாளர் நீங்கள் ஏன் நிற்க கூடாது??

ராஜ நடராஜன் said...

சொல்வதை சொல்லி வைப்போம்.ஒருமுகப் பட்ட தலைமை அமையாத சூழல் இது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேல் இவங்க அரசியல் நாறிப் புழு நெளியுது. இதில் எதுவும் புதிதில்லை.பழகி விட்டது...

Anonymous said...

Good Article Sister.
You are writing what we thought to say in loudly in Tamilnaadu Streets. The only problem with the Tamils is they have short term memory lost (Except the so called Tamils in Congress) and will forget every thing when they cast the vote. Hope Tamils in Tamilnaddu will not repeat the same mistake.

/வாய்ப்புக்களை உருவாக்கவும் வல்ல பலமான ஊடகக் குழுமமாக விளங்கும் கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் (கலைஞர் TV SUN TV KTV தொலைக்காட்சிகள் உட்பட அனைத்தும்) இதனைச் செய்யாதது ஏன் ? //

I hope now the disapro Tamils should understand the true commercial nature of these TV channels and will not renew their subscription in the future. They should do that otherwise its will be a cheating for the people who lost / loosing their life in Vanni.

//பேரழிவின் மத்தியில், பட்டினியின் பிடியில், மனச்சிதைவின் விளிம்பில் மரணம் வரும் நொடியை எண்ணிக்கொண்டிருப்பவர்களது பிணங்கள் மீது அரசியல் நடத்தும் எவரும் மனிதர்கள் என்ற வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்.//

History is recording every thing. Our lost, pain, their cheatings, Karunanithi's drama, etc etc...

-RB from Dubai

King... said...

அனுதாபங்கள் உங்களுக்கு நேரமும் சக்தியும் வீணடித்ததற்கு

இதுக்கெலாம் ஒரு பதிவா...

தெரியாத விசயங்களா இவை...
இது எங்களுக்க கறுப்பு-வெள்ளை காலத்திலிருந்தே தெரியுமே தமிழ்நதி..

King... said...

ஆனால் உண்மையில்... ஜெயலலிதாவின் தைரியமும் நம்பிக்கையும் தமிழ் மக்கள் மீதான அவருடைய அபிப்பிராயமும் தமிழ்நாடு பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விசயங்களில் இது ஒஸ்காரிலும் பெரியது!

தமிழ்நதி said...

ஆம் கலாநிதி மாறனுக்கு சன் டிவி. கலைஞருக்கு கலைஞர் டிவி. ஜெயலலிதாவுக்கு ஜெயா டிவி. பா.ம.க.விற்கு மக்கள் டிவி... என்று ஒவ்வொருவரும் வைத்திருக்கிறார்கள். அதில் நகைச்சுவையான நிகழ்ச்சி யாதெனில் செய்திகள்தான். அண்மையில் சன் டிவி செய்திகளுக்கிடையில் போடுகிறார்கள் 'திண்டுக்கல் சாரதி'திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறதாம். (அதை அவர்கள்தான் எடுத்திருந்தார்கள்) இதுவொரு செய்தி. இதை ஒளிபரப்புகிறார்கள்!!

அண்மையில் இலங்கைக்குப் போயிருந்தபோது, கொழும்பில் கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி நேரத்தின்போது திரை வெறும் நீலமாகக் கிடப்பதைப் பார்த்துவிட்டு ஏனென்றேன். 'நாங்கள் செய்திகளைப் பார்த்து உண்மைகளை அறிந்துகொள்ளக்கூடாதாம்'என்றார்கள். கலைஞர் செய்திகளில் ஈழத்தமிழர் தொடர்பான உண்மைகளை எங்கே காட்டுகிறார்கள்; அதைப்போய் மினக்கெட்டு இருட்டடிக்கும் இலங்கை அரசாங்கத்தின் புத்திசாலித்தனத்தை என்னவென்பது? ஜெயா டிவியிலோ அவர்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு பள்ளம் கிடந்தாலும் அது கலைஞர் தோண்டியது என்பார்கள். இப்படிப் போகிறது கதை...


பதி,

அந்த மருந்துகள் நேரடியாக வன்னிக்குப் போனாலும், அவை வன்னியிலுள்ள இராணுவத்தினரைச் சேரவே வாய்ப்புகள் அதிகம்.

அட! தமிழக அரசியலில் மாற்றம் வருமா? நம்புகிறீர்களா? எனக்கும் ஒரு நப்பாசை இருக்கிறது பார்க்கலாம்.

--

சிவாஜி த பாஸ்

'நாம் எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள்'என்பது உங்கள் பெயரைப் பார்த்தபோது நினைவில் வந்தது. அரசியல் என்றாலே காசுதான்.. 'காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது'என்றொரு பாடல் இருக்கிறதல்லவா?


நன்றி தமிழ்நம்பி.


ராஜநடராஜன்,

ஒருமுகப்பட்ட தலைமை அமையவில்லை என்று வருத்தப்பட்டீர்கள். ஆனால், ஒருமுகப்பட்ட சிந்தனையோடுதான் அனைவரும் இருக்கிறார்கள். அதாவது மக்களை எந்தவகையிலாவது ஏமாற்றுவது என்ற ஒருமுகப்பட்ட சிந்தனை.


பாண்டியன்,

இந்தக் குசும்பு குசும்பு என்பது இதுதானா..? நல்லாயிருங்கப்பூ... என்னை அடிக்கவேண்டுமென்றால் வார்த்தையால் அடியுங்கள். இப்படித் தேர்தல் அது இதுவென்று பயமுறுத்தாதீர்கள்.

பாரிஸ் யோகன்,

ம் அது தெரிந்ததுதானே..?

---
RB,

தமிழர்களுக்கு உண்மையில் ஞாபக மறதியா அன்றேல் வேண்டுமென்றே சலுகைகளுக்காக மறக்கிறார்களா என்பது குழப்பமாகவே இருக்கிறது. ஆனால், அவர்கள் முன் இருக்கும் தெரிவைப் பாருங்கள்... 'இருக்கிறவனுல தீங்கில்லாதவனுக்குப் போட்டுத் தொலைக்க வேண்டியதுதான்'என்று நினைக்கும்படியாகத்தானே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். 'இவனன்றோ தலைவன்'என்று மகிழ்ந்து கொண்டாடி வாக்களிக்கக்கூடிய மாதிரி யார் இருக்கிறார்கள்?

ஆம். புலம்பெயர்ந்த தமிழர்கள் சன் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும்தான். ஆனால், தமிழ்த் தொலைக்காட்சிகளில் கொஞ்சூண்டு தமிழாவது எஞ்சி இருக்கிறது. அதுவும் புலம்பெயர்ந்த நாடுகளில் இளைய தலைமுறை தமிழோடு உறவாட ஒரு கருவியாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

எவர் மறந்தாலும் மறக்கடித்தாலும் வரலாறு மறக்காது. மன்னிக்கவும் மாட்டாது தோழரே.

கிங்,

நாடகங்கள் நடக்கின்றன. நாங்கள் எப்போதும் பார்வையாளர்களாகவே இருக்கிறோம். பார்க்கலாம் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கப்போகிறதென்று. அது தமிழ்ச் சினிமாவைப் போல மாறாததாக இருந்துவிடப் போகிறது:)

Anonymous said...

இலங்கையில் தினம் தினம் செத்து மடியும் தமிழ் உறவுகளை காக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இது தான் சாக்கு என்று ஆபாசமாக பேசுவதும் கலவரத்தை தூண்ட பேசுவதும் கண்டிக்க வேண்டிய ஒன்று.

ஆதரவை கேட்டு தான் பார்க்கலாம் தர வேண்டும் என யாரையும் கட்டாய படுத்த முடியாது.

விடுதலைபுலிகள் இந்தியாவில் தடை செய்யபட்ட இயக்கம்.அவர்களுக்கு புகழ்மாலை சூட்டி வருங்காலத்தை தமிழ்நாட்டிலும் சீரழிக்க யாரும் தயாரில்லை.

சீமான் பேசியது

“ நான் சிறைசாலையில் பல கொலை குற்றவாளிகளை பார்த்தேன். என்ன குற்றம் செய்தாய் என வினவினேன். தன் உடன்பிறந்தோரையே கொலை செய்து உள்ளெ வந்தவர் பலர்.
நான் அவர்களிடம் சொன்னேன் ஏனய்யா உடன் பிறந்தோரை கொலை செய்கிறாய் , பார்பனர்களை கொலை செய்து விட்டு வந்து இருந்தால் நான் மகழிச்சி அடைந்து இருப்பேன் ...இப்படி தான் சீமான் சமீபத்தில் பேசினார்.

இப்படி பேசுபவர்களை கைது செய்யாமல் என்ன செய்வது சொல்லுங்கள்? இதை போல இலங்கை பிரச்சனையை வைத்து உள்ளூர் தனிபட்ட விரோத்ததை தீர்க்க நினைப்பது சரியா?

உங்களை பொறுத்தவரை அடுத்தவன் வீடு பாழ் ஆனாலும் பரவாயில்லை.. ஆனால் உங்கள் பிரச்சனைகளுக்கு மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என்று நினைபது போல உள்ளது

தோழமையுடன்
ராச சேகரன்

தமிழ்நதி said...

ராச சேகரன்,

"விடுதலைபுலிகள் இந்தியாவில் தடை செய்யபட்ட இயக்கம்.அவர்களுக்கு புகழ்மாலை சூட்டி வருங்காலத்தை தமிழ்நாட்டிலும் சீரழிக்க யாரும் தயாரில்லை."

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதால் தமிழ்நாடு சீரழிந்துபோகுமென்று ஏன் நினைக்கிறீர்கள்? எங்கள் நாட்டில் நிம்மதியாக வாழவேண்டும்.. அதற்கு உதவிசெய்யுங்கள் என்று கேட்பது இந்தியாவைச் சீரழிக்க அல்ல தோழர். ஈழத்தமிழ் மக்களின் முன்னே இருக்கும் ஒரே நம்பிக்கை விடுதலைப் புலிகள்தான். அதைவிட மாற்றுத் தெரிவுகள் எதுவுமில்லை என்பதை யாவரும் அறிவர்.

"உங்களை பொறுத்தவரை அடுத்தவன் வீடு பாழ் ஆனாலும் பரவாயில்லை.. ஆனால் உங்கள் பிரச்சனைகளுக்கு மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது போல உள்ளது"

நிச்சயமாக நாங்கள் அப்படி நினைக்கவில்லை. வாழ்வின் பெறுமதி அறிந்தவர்கள் நாங்கள். மரணத்திற்கு அருகில் இருப்பவர்கள். மற்றவர்களை அழிக்கவேண்டுமென்று ஏன் நினைக்கப்போகிறோம்? உலகத்திலுள்ள யாவரும் போர் இன்றி அமைதியாக வாழவேண்டுமென்பதே எங்களது விருப்பமும்.

தவிர, எங்களுக்கு உதவுங்கள் என்று எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் இந்தியா உதவவில்லை. மறுவளமாக ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்கிறது என்ற வெளிப்படையான உண்மை உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

'நீங்கள்' 'உங்கள்'என்று ஏன் இவ்வளவு காழ்ப்புணர்வோடு பிரித்துப் பேசுகிறீர்கள்... நாங்கள் அனைவரும் மனிதர்கள் அல்லவா?

Anonymous said...

//உங்களை பொறுத்தவரை அடுத்தவன் வீடு பாழ் ஆனாலும் பரவாயில்லை.. ஆனால் உங்கள் பிரச்சனைகளுக்கு மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என்று நினைபது போல உள்ளது//

ராஜசேகர், சீமானின் சில பேச்சுக்களில் எனக்கு உடன்பாடு இல்லைதான், ஆனால் அதே சீமான் கேட்கும் சில கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை!

தவிர, உங்கள் வீடு நாசமாகட்டும், ஆனால் எங்கள் பிரச்சனைகலுக்கு மட்டும் குரல் கொடுங்கள் என்று ஈழத் தமிழர்கள் சொல்ல வில்லை. சொல்லப் போனால் ஈழத் தமிழர்களின் இந்த நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். ஈழத்தில் அமைதியை நிலவச் செய்வது இந்தியாவின் தார்மீக கடமை. இதை ஒரு இந்தியனாக மிகுந்த வருத்தத்துடன் சொல்லுகிறேன். வரலாற்றின் பக்கங்களில் நாம் செய்த தவறுகள் மிக அழுத்தமாக பதிந்துள்ளது நண்பரே!!!

ஆதரவு கேட்டுதான் பார்க்கலாம் என்றால், இந்தியா ஆதரவு கொடுக்காமல் இருந்தால் பராவாயில்லை, ஆனால் இலங்கை அரசுக்கு ஏன் உதவ வேண்டும்? பாகிஸ்தான் தீவிரவாதி இந்தியாவில் நுழைந்து இந்திய அப்பாவி மக்களை கொல்லும் போது அதற்கு காரணம் பாகிஸ்தான் உளவு நிறுவனம்தான், ஆயுதம் கொடுத்தது அவர்கள்தான் என்று பாயும் இந்தியா, இன்னொரு நாட்டிலுள்ள மக்களை கொல்வதற்கு ஏன் ஆயுதம் தர வேண்டும்?

ஈழம் விஷயத்தில் இன உணர்வு கூட தேவையில்லை, மனிதாபிமானம் இருந்தாலே போதும்.

பிணங்களின் மேலதான் என் நாட்டின் எதிர்கால வளத்தை நட வேண்டும் என்றால் என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

எல்லாவற்றையும் விட கொடுமை இந்த அரசியல் கட்சிகளின் கபட நாடகங்கள். கூடிய சீக்கிரம் ராஜபக்சேயும் ஈழ மக்களின் உணர்வுகளுக்காக உண்ணாவிரதம் என்று அறிக்கை விடலாம், அந்த ரேஞ்சுக்கு எல்லாரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்று உயிரோசையில் உங்களின் பயணம்.....

படித்தேன்.

அப்படியே நானும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போன்ற ஒரு உணர்வு.

தனுஷ்கோடியும், மண்டபம் முகாமும்
இன்னமும் என் மனவெளியில்.

அருமையான எழுத்து நடை.

என்ன சொல்வதன்றே தெரியவில்லை.

வாழ்த்துக்கள், இன்னும் நிறைய எழுதி எழுத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தமிழ்நதி said...

நரேஷ்,

"ஈழம் விஷயத்தில் இன உணர்வு கூட தேவையில்லை, மனிதாபிமானம் இருந்தாலே போதும்."

என்று நீங்கள் சொன்னதில் உள்ள மனிதம் என்னைக் கவர்ந்தது. நான் ஒரு ஈழத்தவளாக இருந்துகொண்டு எங்கள் சனங்களுக்கு வக்காலத்து வாங்குவதிலும் பார்க்க, ஒரு இந்தியராக இருந்து நீங்கள் சொல்லியிருப்பதே எடுபடும் இல்லையா? எனது பக்கத்தை நான் சொல்வதிலும் அடுத்தவர் சொல்வதே நன்று.

அமர்தவர்ஷினி அம்மா,

சில சமயங்களில் கூச்சமாக இருக்கிறது. நல்லவேளை நீங்கள் எதிரில் இல்லை. முகத்திற்கெதிரில் யாராவது பாராட்டினால் கதையை வேறு திசைக்கு மாற்றிவிடுவேன். வலைப்பூவில் என்ன செய்வது? மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது தோழி! மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்தும் உங்கள் அன்பிற்கு நன்றி.

Anonymous said...

இந்திய ஜனநாயகத்தை வாய் கிழிய விமர்சிப்பவர்கள் புலிகள் ஜ்னநாயகத்தை மறந்தது ஏனோ?

அமிர்த்தலிங்கம், சிறிசபாரத்தினம் முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் கொலைகள் ஜனநாயகமோ?

கேள்வி கேட்பவர்களை எதிர்பவர்களை மனசாட்சி இல்லாமல் கொன்று குவித்த கூட்டத்தை ஆதரிக்கும் நீங்கள் இப்படி பேசுவதில் வியப்பு இல்லை

தமிழ்நதி said...

ழகரம்,

அது என்னமோ என்னிடம் வந்து இடக்குமுடக்காகக் கேள்வி கேட்பவர்களுக்கு வலைப்பூவே இருப்பதில்லை. முகத்தை மூடிக்கொண்டு வந்துதான் கேட்கிறார்கள்.

"இந்திய ஜனநாயகத்தை வாய் கிழிய விமர்சிப்பவர்கள் புலிகள் ஜ்னநாயகத்தை மறந்தது ஏனோ?"

புலிகள் முற்றிலும் சரியாக நடந்துகொள்கிறார்கள் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. புலிகளது தவறுகளை விமர்சிக்கும் நேரம் இதுவல்ல; மக்களின் அவலங்களைப் பற்றிப் பேசுவதே இன்றைய காலத்தின் தேவை என்றே சொல்லிவருகிறேன்.

கோபத்தில் 'அமிர்தலிங்கம்' 'அமிர்த்தலிங்கம்'ஆகியிருக்கிறார்:) 'அவர்களைக் கொன்றது நியாயமா?'என்று என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான் அவர்களைக் கொல்லவில்லையே!!!

"வியப்பு இல்லை"யல்லவா? பிறகேன் வீண் வாதம். நீங்கள் சொல்லி நான் மாறப்போவதுமில்லை. நான் சொல்லி நீங்கள் மாறப்போவதுமில்லை. அவரவர் கொள்கையில் (அப்படியொன்று இருந்தால்) அழுங்குப்பிடி!