3.27.2009

மனதை ‘விசிறி’ய கடிதம்


பெரிய பெரிய ‘இளக்கிய’வாதிகளுக்கு (இளகிய அல்ல. ஏனென்றால் அவர்களது சமூக அக்கறை கேள்விக்குட்படுத்தத்தக்கது. பக்கத்தில் குண்டு விழுந்தாலும் கண்களை மூடிக்கொண்டு அடுத்த பதிவைப் பற்றிச் சிந்திக்கப் போய்விடுகிறவர்கள். அது ஆன்மீகம் சார்ந்தோ காதலைத் தழுவியோ சுயபுராணமாகவோ இருக்கும். மனிதப் பேரவலங்களைப் பற்றி மௌனமாயிருப்பதற்கான காரணங்களும் கைவசம் இருக்கும்) வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வருவதையும், அதை அவர்கள் தங்களது இணையத்தளங்களில் பிரசுரிப்பதையும் பார்த்திருக்கிறேன். எனக்கும் சில மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் வருவதுண்டு. மின்னஞ்சலில் ‘உங்கள் எழுத்து நடை வியப்படைய வைக்கிறது’ என்றோ, ‘உங்கள் பதிவைப் படித்து நான் அழுதேன்’(அதுதானே வழக்கம் ) என்றோ, ‘நீங்கள் ஒவ்வொரு நாட்களும் பதிவு போடமாட்டீர்களா?’என்றோ எழுதியிருப்பார்கள். வலைப்பூவில் இடுமளவிற்கு அக்கடிதங்கள் நீண்டவையல்ல. அண்மையில் எனக்கு எழுத்தாளரல்லாத ஒரு வாசகரிடமிருந்து கடிதம் வந்தது. அவர் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கிறார். அவரது வாசிப்பு ஞானம் பரந்தது. அவ்வளவு வாசித்திருக்கிறார். தவிர, ஒவ்வொரு வரிகளிலும் திளைத்து அதை மனப்பாடம் செய்து வைத்து நம்மிடம் சொல்லித் திணறடிப்பவராக இருக்கிறார். என்னுடைய கவிதைத் தொகுப்பு, சிறுகதை இரண்டைப் பற்றியும் தனித்தனியாக எழுதியிருந்தார். முதலில் கவிதைத் தொகுப்பு பற்றி எழுதியதைப் பதிவிடுகிறேன்.


ந.ராஜா

08-03-2009


தமிழ்நதி அவர்களுக்கு,


நேற்று (07-03-2009) உங்களுடைய ‘சூரியன் தனித்தலையும் பகல்’ கவிதைத் தொகுப்பைப் படித்தேன். யோசிக்கிறேன் என்ன எழுதுவது என்று. என் யோசனைக்குப் பின் வலிகள் நிறைந்த உங்கள் அனுபவக் கவிதைகள். உங்கள் வலிகளை ‘எ(ங்க)ன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்த வலிகளை நான் எவ்வாறு அனுபவிப்பது எனத் தெரியவில்லை. தப்பித்துக்கொள்ளும் தந்திரமல்ல எனது வார்த்தைகள். ‘தாங்கமுடியாத உணர்வின் உச்சிப்புள்ளியைத் தொடுகிறபோது அது கவிதையாகிறது’என்று உங்கள் முன்னுரையில் எழுதியிருக்கிறீர்களே… அதுபோல தாங்கமாட்டாத என் ஆதங்கத்தின், ஆற்றாமையின், இயலாமையின் அது ஏற்படுத்தும் கோபத்தின் வெளிப்பாடாக இக்கடிதம் இருக்கக்கூடும்.


‘நான் நாடோடியும் அகதியுமானவள்’என்று நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது ஏற்படும் குற்ற உணர்ச்சியை எதைக் கொண்டும் என்னால் நிரப்பமுடியாது. ஏதோ ஒரு இதழில் ‘பாரதி’யின் பாஞ்சாலி சபதத்தில் இருந்து யாரோ மேற்கோள் காட்டியிருந்த வரி ஒன்று நினைவிற்கு வருகிறது. துரியோதனனைப் பார்த்து பாஞ்சாலி சொல்வதாக ‘மன்னனென இறுமாந்திருந்தோம். பொசுக்கென்று ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்துவிட்டாய்’ (நான் பாஞ்சாலி சபதம் படித்ததில்லை. தவறிருப்பின் மன்னிக்கவும்) அப்படி பொசுக்கென எல்லாவற்றையும் தொலைத்தது போலிருக்கிறது நீங்கள் நாடோடியும் அகதியுமானவள் என்றெழுதும்போது.


‘எந்தத் தேவதையைக் கொன்றழித்தோம்

எல்லாத் திசைகளிலும்

இருளின் ஆழத்தில்

‘அம்மா’என விம்மும் குரல் கேட்க’


என்று ‘நாடோடியின் பாடல்’முடிவில் நீங்கள் எழுதியதைப் படித்த பின்பு இவ்வாறு நான் நினைக்கிறேன். ஒருவேளை நீங்கள் தேவதைகளைக் கொன்றழித்திருந்தால் சுபிட்சமாக இருந்திருப்பீர்கள் என. ‘அதிகாரமும் தேவதைக் கதைகளும்’அதைப் படித்தவுடன் உடனே எனக்குக் குடிக்கத் தோன்றிவிட்டது. ஏனென்றால், உண்மைகளை மறைக்க அல்லது மறக்க மது தேவையானதாயிருக்கிறது.


‘துன்பியல் நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருக்கும்

மகத்தான ஞாபகசக்தியுடையோரே!

எம்மை ஏன் மறந்து போனீர்?

எம்மை ஏன் மறந்து போனீர்?’


என்று நீங்கள் எழுதியதற்குப் பதில் உங்கள் கையால் கன்னத்தில் நான் அறைவாங்கியிருக்கலாம்… வலித்திருக்காது எனக்கு. இப்போது காலமெல்லாம் அந்த வலி என் இதயத்தில் என்றென்றும் மாறாத ரணமாக இருக்கப்போகிறது. உண்மையில் ஒரு தமிழனாக (குறைந்தபட்சம் மனிதனாக) நான் என்ன செய்திருக்கவேண்டும்? என் தொப்பூள் கொடி உறவுகளுக்காக அரசியல்வாதிகளைப் போல தெருவில் மனிதச்சங்கிலி என்று கைகோர்த்து நின்றிருக்கலாம். அல்லது உண்ணாவிரதம் என்று ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்துவிட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உண்ணாநோன்பை மாநகரின் மத்தியில் நிகழ்த்தியிருக்கலாம். இல்லாவிடில் நான் பள்ளி, கல்லூரி மாணவனாக இருந்திருந்தால் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சாலையின் நடுவில் அமர்ந்து ஆக்ரோஷமாக தொண்டை நரம்புகள் புடைக்க சிங்களவன் அரசை எதிர்த்து கோஷம் போட்டுவிட்டுக் கைதாகியிருக்கலாம். ச்சே! இதெல்லாம் செய்து பார்த்தும் செவிமடுக்காத அரசுகளைக் கண்டு மனம் வெறுத்து மாண்டுபோயிருக்கலாம் தீக்குளித்து முத்துக்குமாரைப் போல… ஆனால்… ஆனால் அதற்கு மேல் என்னால் என்ன செய்யமுடியும்? ஏதாவது செய்யத்தான் வேண்டும்.
காசி ஆனந்தன் அவர்களின் ஹைக்கூ ஒன்றைப் படித்தேன் ‘போராளி’என்னும் தலைப்பில்…


‘நீ செத்தவனுக்காக அழுதவன்

அவன்

அழுதவனுக்காகச் செத்தவன்'


என் மரணம்கூட இப்படித்தான் இருக்கவேண்டும். போர்க்களத்தில் சாகலாம்; ஆனால் போதி மரத்தடியில் சாகக்கூடாது. கவிதைகள் என்னை நெகிழச் செய்திருக்கின்றன; ஆனால் உங்கள் கவிதைகள்தான் என்னை உணர்ச்சிவசப்படுத்தியிருக்கின்றன. வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு என்ன செய்வது? செயலாற்ற முடியாத கோபம் என்னைக் குற்ற உணர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. உங்களது (தொகுப்பில் உள்ள) எல்லாக் கவிதைகளைப் பற்றியும் எழுதலாம்தான். சட்டென்று என்னை வெறுமை சூழ்ந்துவிடுகிறது. ஒரு சூனியம் நிலைத்துவிடுகிறது. வெறும் வார்த்தைகள் என் கடித வரிகள். இதை உங்களுக்கு எழுதுவானேன் எனத் தோன்றுகிறது. கிழித்து எறிந்துவிடலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ‘துரோகத்தின் கொலைவாள்’ ஈழம் சாராத கவிதை.


‘தற்செயலாகவோ தன்னுணர்வுடனோ நம் ஆடைகள்

உரசிக்கொள்கிறபோது

விலங்குகள் விழிக்கின்றன’


என்று இயல்பான நடையில் கவிதை மிளிர்கிறது. உண்மையில் அனைவருமே அத்துரோகத்தின் கொலைவாளைப் பிரயோகிக்கவே விரும்புகிறோம் என்றே நினைக்கிறேன்.


எத்தனையோ எழுத நினைக்கிறேன். வார்த்தைகள் வசப்பட மறுக்கின்றன. புலம்பெயர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதனால் பெயரை ‘தமிழ்நதி’என்று மாற்றிக்கொண்டீர்களோ? திரைகடலோடி திரவியம் தேடியதுபோய் திரைகடலோடி அடைக்கலம் தேடும் அவலத்திற்கு ஆளாகிவிட்ட எம் தமிழ்ச்சமூகம் நிஜமாகவே ‘தமிழன்’என்று சொல்லி தலைநிமிர்ந்து நிற்கமுடியவில்லை. இரவு விடியும் என்பது நம்பிக்கையல்ல, அது நியதி. இயற்கையின் சுழற்சி. அதுபோல ஈழம் மலரும் என்பதும் இயற்கையின் நியதிதான். உங்களை நேரில் சந்திக்கவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். தாங்கள் வசிக்கும் வீட்டின் கீழ்த்தளத்தில் இருக்கும் சீனிவாசன் எனது நண்பர். அவரோடு ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக உங்களைப் பற்றிச் சொன்னார். உங்களைத் தெரியும் என்றேன். அதற்கு முன் உங்களுடைய சில கவிதைகளை வார இதழ்களில் வாசித்திருக்கிறேன். பிற்பாடு நீங்கள் குமுதத்திற்கு எழுதிய கடிதத்தையும் படித்தேன். ஆகையால் உங்கள் கவிதைத் தொகுப்பையோ கட்டுரைகளையோ படித்த பிறகுதான் உங்களைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். சீனுதான் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்தார். இதைப் படித்துவிட்டு உங்கள் கவிதை பற்றி நேரில் பேசலாம் என்றிருந்தேன்.


ஆனால், இப்போது ஒருபோதும் உங்களை நேரில் சந்தித்து உரையாட முடியாது என்றுணர்கிறேன். உங்கள் கண்களைச் சந்திக்கும்போது ‘ஏன் எம்மை மறந்து போனீர்?’என் உங்கள் கேள்வி உங்கள் கண்களில் தொக்கி நிற்கும். அதை என்னால் பார்க்கவியலாது என் பார்வையை விலக்கிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். ‘விசாரணைச் சாவடி’என்ற கவிதையில் நீங்கள் ‘கேவலமாக’ப் புன்னகைப்பதைப் போலத்தான் நானும் நடந்துகொள்ள வேண்டியிருக்கும். உங்கள் அருகில் அமரமுடியாது. உங்கள் உள்ளத்தில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் அக்கினியின் வெம்மை என்னைத் தகிக்கச் செய்யும். ‘என்ன செய்துவிட்டாய் நீ எமக்காக’ என்று அந்தத் தீ கேள்விக்குறியாய் குதித்தாடும் என்முன்.


‘பறவையின் சிறகிலிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராப் பக்கங்களில்

தன் வாழ்வை எழுதிச் 'செல்கிறது'


என்ற பிரமிளின் கவிதை வரிக்கிணங்க இருக்கிறது உங்கள் அனுபவக் கவிதைகளும் பின்னட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படமும்.
‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ உங்களைப் போல் எந்தத் தமிழ்ப்பெண்ணும் இப்படிக் கசிந்தழுதிருக்க மாட்டார்.

அன்புடன் ராஜா


7 comments:

selvan said...

painful & soul searching letter for all tamils

யாத்ரா said...

கனத்த மனத்தோடு,,,,,,,,,,

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிமேல் உங்கள் பதிவுகளையோ,கவித்தொகுப்பையோ, சிறுகதைகளையோ இன்னும் இன்ன பிறவோ படித்தாலோ, படிக்க நேர்ந்தாலோ, எனக்கு ஒரு வெட்கி தலைகுனியும் உணர்வுதான் வரும்.

அப்படி ஒரு உணர்வைத்தான் இந்த வாசகர் ஏற்படுத்தியிருக்கிறார்.

உங்கள் உள்ளக்குமுறலை பதிவிட்டு வெளிப்படுத்திய போதெல்லாம், அழுகை வருகிறதென்றும், அருமை என்றும் பின்னூட்டமிட்டதற்கு மிகவும் மனம் வருந்துகிறேன் தமிழ்.

உங்கள் வலியின் உயிர்நாடியை பிடித்தாற் போன்ற இந்த கடிதத்தை, மிக்க படித்தவர்கள் எழுதியிருந்தால் கூட வார்த்தைப்பூச்சு என்று நம்பிவிட்டு போயிருக்கலாம். ஆனால்
//எழுத்தாளரல்லாத ஒரு வாசகரிடமிருந்து கடிதம் வந்தது. அவர் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கிறார். //
இவரின் எழுத்துக்கள் நீங்கள் எம் போன்ற வாசகரைப்பார்த்து கேட்க நினைத்தயெல்லாம் கேட்டாற் போன்றே இருக்கிறது.

திரு. ராஜா அவருக்கு என் வணக்கமும், நன்றியும். வலியின் வலியை உணர்த்தியமைக்கு.

தமிழ்நதி said...

நன்றி யாத்ரா, செல்வன், அமர்தவர்ஷினி அம்மா.

கோழைத்தனமான அனானிக்கு,

உங்கள் பின்னூட்டம் பிரசுரிக்கப்படும் என்றும் அதற்கு நான் பதில் எழுதுவேன் என்றும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் திட்டமிட்டு என்மீது சேற்றை வாரியிறைக்க நான் அனுமதிக்க முடியாது. அதனால் உங்கள் பின்னூட்டத்தைப் பிரசுரிக்கவில்லை.

தங்கள் பெயரை வெளிப்படுத்திக் கருத்துச் சொல்லமுடியாத உங்களைப் போன்ற கோழைகளை நினைத்துப் பரிதாபப்படவே முடிகிறது. ஆம். நான் ஈழத்தைச் சேர்ந்தவள். அதன் அவலங்களை எழுதும் சமூகப் பொறுப்புணர்வு, பிறப்புரிமை எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக அந்த அவலங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்கள் குறுகிய மனதுடையவராக, மற்றவர்களின் முன்னேற்றத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவராக இருக்கவேண்டும்.இல்லையெனில் இவ்வாறெல்லாம் எழுத மனம்வராது. பிணங்களின் மீது அரசியல் செய்வதை அரசியல்வாதிகளுக்கே விட்டுவிடுவோம். எழுத்தாளர்களும் அதைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

காசு கொடுத்தால் எந்தச் செய்தியை வேண்டுமானாலும் பத்திரிகைகளில் போடுவார்களா? ம்... என்னே ஒரு அஞ்ஞானம்! அந்தக் கேவலமான குணம் எனக்கில்லை. எனக்கு எழுத்து வேறு.. வாழ்வு வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். உங்களால் முடிந்தால் என்னைப் பற்றிய அவதூறைக் கண்டுபிடித்துக் காட்டுங்கள். நிரூபியுங்கள். நான் கையும் மனமும் சுத்தமானவள். 'உங்கள் புத்தகங்களை வாங்கினேன். இனிமேல்தான் படிக்கவேண்டும்'என்று எஸ்.ராமகிருஷ்ணனிடம் சொன்னால் அது ஜால்ரா அடிப்பதா? நான் நாஞ்சில்நாடனிடம் சொல்லியிருக்கிறேன். கவிஞர் சுகுமாரனிடம் சொல்லியிருக்கிறேன். கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் சொல்லியிருக்கிறேன். 'எனக்கு உங்கள் எழுத்து பிடித்திருக்கிறது'என்று சொல்வது ஜால்ரா அடிப்பதா? அப்படியானால் அனைத்து வாசகர்களும் ஜால்ராதான் அடிக்கிறார்களா?

நான் யாரையும் காக்கா பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நான் நன்றாக எழுதுகிறேன் என்றால் வளர்வேன். இல்லையெனில் இல்லாது போவேன். 'வலிமையானது பிழைக்கும்'என்பதில் எனக்கு அசைக்கவியலாத நம்பிக்கை இருக்கிறது.

ஈழப்பிரச்சனையைப் பற்றி நான் தொடர்ந்து எழுதுவேன். உங்களுக்கேன் காய்ச்சலாக இருக்கிறது? உங்கள் முதுகின் மேல் வைத்து நான் எழுதவில்லை. உங்களால் முடிந்தால் நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்பதற்காக மற்றவர்களைக் கரித்துக்கொட்டாதீர்கள்.

உங்களைப் போன்றவர்களைப் புறந்தள்ளி நான் எழுதுவேன். என்னுடைய எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது. உங்கள் அழுக்கு மனங்களைத் துவைக்க எழுத்தாலும் முடியவில்லை என்பது வேதனைதான்.

உங்களைப் போல் உளவியல் போர் நிகழ்த்துபவர்களை நிறையப் பார்த்தாயிற்று. என்னை மட்டந்தட்ட நீங்கள் நினைக்கும்போதெல்லாம் உங்களைத் தாண்டி வளரவே வெறிகொள்கிறேன். வளர்வேன்.

kalyani said...

யார் இந்த அனானி.?அனானியாக வரும் போதே தெரிகிறதே நோக்கம் என்னவென்று. இப்படிப்பட்டவர்களை அலட்சியம் செய்வதே நல்லது அக்கா.சிறிது காலம் குரைக்கும்.பிறகு மறந்து விடும்.(இப்படிப்பட்டவர்களை நான் உயர்திணையில் சேர்ப்பது இல்லை)

தமிழ்நதி said...

நன்றி கல்யாணி,

கிட்டத்தட்ட இதே வார்த்தைகளைத்தான் ராஜனும் சொன்னார். 'நாய் என்றால் மரத்தைக் கண்டதும் காலைத் தூக்கவே செய்யும். நீங்கள் அதைப் புறக்கணியுங்கள்'என்றார். பேசாமல் 'அனானி'யையே தூக்கிவிடலாமா என்று யோசிக்கிறேன். (அந்தத் தெரிவை) நீங்களும் பதிவு போட ஆரம்பிக்கலாமே கல்யாணி.

தமிழ்நதி said...

ஐயா பிரம்மபுத்திரரே,

அல்லது என்னை எதிர்த்துச் சொல்லவேண்டிய எல்லாவற்றுக்கும் அந்தப் பெயரையே பயன்படுத்தி, தங்கள் பெயரை மறைக்கும் மகா துணிச்சல்காரர்களே!

நீங்கள் எந்தக் கடிதத்தைக் குறித்துச் சொல்கிறீர்கள் என்பது எனக்கு முதலில் விளங்கவில்லை. பிறகுதான் யோசித்துப் பார்த்தேன்... ஓ... உங்கள் மரமண்டை இப்படியும் வேலைசெய்யும் என்பதைப் புரிந்துகொண்டேன். எனது 'தீவிர'வாசகராகிய உங்களுக்கு எனது எழுத்து நடை தெரியாதா? ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கும் கடிதத்தை விட உருக்கமாக, அழகாக என்னால் கடிதம் எழுதமுடியும். தவிர, நான் எனக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை என்றால், 'தம்பி, சகோதரரே, ராசா'என்றெல்லாம் காலில் விழுந்து சொல்ல மாட்டேன். வெட்டொன்று துண்டு இரண்டுதான். ஏன் ஆனந்த விகடனிலேயே விசாரித்துப் பார்ப்பதுதானே? அங்கே உங்களுக்கு ஆட்கள் இருப்பார்கள்தானே? பிடிக்காதவர்களின் காலை நான் எதற்குப் பிடிக்கவேண்டும்? 'எல்லோரும் செத்துக்கொண்டிருக்கிறோம் ராசா.. நீங்கள் இந்த நேரத்தில் இப்படிக் கதைக்கக் கூடாது' என்று கெஞ்ச மாட்டேன். அந்தளவிற்கு எனக்கு ரோசம் இருக்கிறது. தவிர, பெயரில்லாமல் கடிதம் எழுத நான் என்ன உங்களைப் போல கோழையா? உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் என்னதான் அழும்பு செய்தாலும் நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் எழுதுவேன். பொறுக்கவில்லையென்றால் சுவரில் போய் முட்டிக்கொள்ளுங்கள். தெளிகிறதா பார்க்கலாம்.