5.25.2009

விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு


நம்பிக்கை, பற்றுக்கோடு, வாழ்வின் மீதான பிடிப்பு எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு நிர்க்கதியாகத் தெருவில் விரட்டப்பட்ட அவமானத்தோடும் கோபத்தோடும், விம்மிப் பொருமும் மனதை அடக்கிக்கொண்டு இதனை எழுதுகிறேன். இது அழுது தீரும் துயரமல்ல; எதிர்ப்படும் பொருட்களை, எதிரியை அடித்து நொருக்கும் கோபம். இந்தக் கோபத்தை நான் எழுத்தில் இறக்கிவைத்துவிட வேண்டும். இல்லையெனில் மனநோயாளியாக இறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். எழுத்து ஒன்றே எனது வடிகால். அதன் வழியாக எனது துயரத்தைக் கடத்திவிட்டு, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் சுயநலம் இதன் பின்னணியில் நிச்சயமாக இல்லை. இந்த உணர்ச்சிக் கடலுக்குள் மூழ்கிவிட்டேனென்றால், நாளை எனது சமூகத்திற்கென்று ஒரு துரும்பையும் கிள்ளிப்போட முடியாது போய்விடும் என்ற சின்ன அறிவினால் செலுத்தப்பட்டு கணனியின் முன்னமர்ந்திருக்கிறேன்.

19.05.09 என்ற கொடிய நாளைப் பதிந்துவிட்டுத் தொடர்கிறேன். சிங்கள அரசின் இறுமாப்புடன் கூடிய அறிவிப்பு 18ஆம் திகதியிலிருந்தே வர ஆரம்பித்திருந்தது. நாங்கள் மறுத்தோம். ‘இல்லை… எங்கள் தலைவரை யாராலும் தோற்கடிக்க முடியாது’என்றோம். ‘அதிமானுடர்களுக்கு மரணமில்லை’என்று மறுபடியும் மறுபடியும் தளர்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தோம். 19ஆம் திகதி மதியம் ஒன்றரை மணியளவில் கவிஞர் இளம்பிறையிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அழுத அழுகையில் முதலில் அவர் என்ன சொல்கிறார் என்பதே எனக்குத் தெளிவாகவில்லை. “தொலைக்காட்சியைப் பாருங்கள் தமிழ்நதி… நம் தலைவரின் உடலைக் காட்டுகிறார்கள்”என்றார். எல்லாம் இருண்டது போலிருந்தது. கைகள் நடுங்கின. அந்தக் கணம் ஒரு கனவென முடிந்துவிடும்@ நான் விழித்து எழுந்துவிடுவேன் என்று நினைத்தேன். “நம் குலதெய்வத்தைக் கொன்றுவிட்டார்கள்”என்று அவர் தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தார். “ஐயோ… ஐயோ…!”என்று அரற்றினார். தொலைக்காட்சியில் நெஞ்சத்தைப் பதறவைக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். தலைவரின் முகந்தான். சந்தேகமேயில்லை!

நான் வேறொரு ஆளாக சமையலறைக்குள் நடந்துபோவதை நான் பார்த்தேன். அச்சம் கட்டுப்படுத்தவியலாத கிருமியைப் போல பெருகவாரம்பித்தது. ஒரு துணியை எடுத்து எல்லாவற்றையும் துடைக்க ஆரம்பித்தேன். அரிசிக்கு அளவாகத் தண்ணியைக் கலந்து வைத்தேன். பொருட்களை அதனதன் இடத்தில் கொண்டுபோய் வைத்தேன். பெருமழையின் முன்பான காற்றின் மௌனம்! என்னை நான் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் துணியை எடுத்து ஏற்கெனவே சுத்தமாக இருந்த இடத்தைத் துடைக்கவாரம்பித்தேன். மூளைக்குள் எதுவோ வெடித்துச் சிதறுவது போலிருந்தது. நான் எங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்ற பிரக்ஞை நினைவிலிருந்து ஒருகணம் சறுக்கி மறைந்தது. தெளிவிற்கும் பைத்தியத்திற்குமிடையிலான விளிம்பில் அந்நேரம் நின்றுகொண்டிருந்ததை இப்போது பயத்தோடு நினைவுகூர்கிறேன். வேம்பில் அப்போதும் குயில் பாடிக்கொண்டிருந்தது. தொலைவில் சினிமாப் பாட்டுக் கேட்டது. தெருவில் பழைய பேப்பர்க்காரன் கூவிக்கொண்டு போகிறான். நான் சிறுகச் சிறுக சிதைந்துகொண்டிருந்தேன். கைகளை இறுக்கிப்பிடித்து கதவில் ஓங்கியறைந்தேன். சமையலறையிலிருந்து படுக்கையறை அன்றைக்கு வெகு தூரத்திலிருந்தது.

“நாங்கள் அநாதைகளாகிவிட்டோம்”

“நாங்கள் கைவிடப்பட்டுவிட்டோம்”

“எங்களை வஞ்சகத்தினால் ஏமாற்றிவிட்டார்கள்”

“எங்கள் கடவுளைக் கொன்றுவிட்டார்கள்”

“நாங்கள் இனி அடிமை நாய்கள்”

நான் பெருங்குரலெடுத்து அழுதேன். எதிர்ப்பட்ட பொருட்களையெல்லாம் கைகளால் குத்திக் குத்தி அழுதேன். எனக்கு என் மனிதர்களைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அவர்களின் பக்கத்தில் போய்விட அன்றைக்கு மிகவிரும்பினேன். விமானத்தில் பறந்தாலும் அவர்களைச் சென்றடைய 24 மணிநேரம் எடுக்கும் என்பதை நினைத்தேன். இலங்கையில் இதனைக் குறித்து அழுவதற்கும் அனுமதியில்லை என்ற பயங்கரம் முகத்தில் அறைந்தது. உலகெங்கிலும் இருக்கும் எங்கள் உறவுகளை நினைக்குந்தோறும் கண்ணீர் கடலாய் பெருகிக்கொண்டேயிருந்தது. ஒட்டுமொத்த சனங்களையும் கட்டிக்கொண்டு கத்தியழவேண்டும் போலிருந்தது. கோபம் பெருந்தீயாய் சுழன்று மூசியது. இடைவிடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. குறுஞ்செய்திகள் நிறைந்துகொண்டிருந்தன. ‘எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் கடவுளை அவர்கள் கொன்றுவிட்டார்கள்’என்பதைத் தவிர என்னால் வேறெதுவும் சொல்லமுடியவில்லை. ஆற்ற மாட்டாமல் பூங்குழலி நெடுமாறனைத் தொலைபேசியில் அழைத்து அழுதேன். ‘தைரியமாயிருங்கள். அப்படி எதுவும் நடந்திராது’என்றார் அவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது… பித்துப் பிடித்தாற்போல ஒரே வார்த்தைகளைத்தான் நான் அவரிடம் பேசியிருக்கிறேன்..
“எனக்குப் பயமாயிருக்கிறது… எனக்குப் பயமாயிருக்கிறது”

வெளிநாட்டுக்கு அழைத்த தொலைபேசி அழைப்புகளெல்லாம் வியர்த்தமாயின. கனடாவில் சாமம். ஐரோப்பா இன்னமும் எழுந்திருக்கவில்லை. அக்காவின், அண்ணாவின் பிள்ளைகள் கண்கள் எங்கோ வெறித்திருக்க செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்கள். குற்றவுணர்வில் ஒருவன் நாற்காலிக்குள் தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தான். உணவு என்பது மறந்துபோயிருந்தது. ஆங்கிலத் தொலைக்காட்சியொன்று சந்தடிசாக்கில் விடுதலைப் புலிகளை உலகிலேயே கொடூரமான பயங்கரவாதிகளெனச் சித்தரிக்க முயன்றுகொண்டிருந்தது. அந்த வர்ணனையாளியின் குரலிலிருந்த வன்மம் வெறியேற்றியது. அவள் நஞ்சை இடைவிடாமல் உமிழ்ந்துகொண்டிருந்தாள். நான் அவள் குரலை வெறுத்தேன். ‘உனக்கு எங்கள் தலைவரைப் பற்றி என்ன தெரியுமென்று ஆலாபனை பண்ணுகிறாய்?’ என்று அவளிடம் கத்தவேண்டும் போலிருந்தது. அவள் இலங்கை மற்றும் இந்திய அதிகாரங்களின் குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஒரு தேசியத் தலைவனைத் தன்னால் முடிந்தவரை கேவலப்படுத்தினாள். வரலாறு வியந்து பார்த்திருந்த விடுதலைப் போராட்டத்தை சிறு குழுவொன்றின் சண்டையெனச் சித்தரித்தாள்.

தொலைக்காட்சியைப் பார்க்குந்தோறும் நெஞ்சு கொதித்தது. எத்தனையோ பேரின் உயிராயிருந்தவன், ஒரு அநாதையைப்போல நந்திக்கடலோரத்தில் எவனோ தன்னுடலைப் புரட்டிப் பார்க்கக் கொடுத்துவிட்டுச் செத்துப்போவதென்பது நம்பமுடியாததாக இருந்தது.

நான்கு மணியளவில் டென்மார்க்கிலிருந்து என் கணவருடைய தம்பியின் மனைவி பேசினாள். விடுதலைப் போராட்டத்தில் தீராத காதலுடைய அற்புதமான பெண் அவள்.

“அக்கா! கூர்ந்து கவனியுங்கள். அது பிளாஸ்டிக் சேர்ஜரி முகம் போல உங்களுக்குத் தோன்றவில்லையா..? இறந்துபோனவர்களின் கழுத்தை அப்படிச் சுலபமாகத் திருப்ப முடியுமென்றா நினைக்கிறீர்கள்?”

என் கண்களை நம்பி நான் ஏமாந்து போனேனா?

“அவரைப் போலவே இருக்கிறதே…”

“இப்போது அவ்வளவு இளமையாகவா இருக்கிறார் நம் தலைவர்?”

உண்மை! மனதின் இருள் எல்லாம் வடிந்துபோய் வெளிச்சம் பரவத் தொடங்கியது. இதுவரை பிதற்றிய மனம் இப்போது மறுவளமாகப் பேசத் தொடங்கியது.

“அவர் கொல்லப்படக் கூடியவரல்லவே… தனது உடலைக் கூட எதிரிகள் கைப்பற்றக் கூடாது என்று, இந்திய இராணுவ காலத்தில் தனக்குப் பக்கத்தில் எப்போதும் பெற்றோல் கலன்களுடன் போராளிகளை வைத்திருந்தவரல்லவா அவர்…?”

“அவரை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாது. அவர் அதிமானுடர்!”

மகிழ்ச்சியில் கண்ணீர் கொட்டவாரம்பித்தது. உறைந்திருந்த வீடு மறுபடி இயங்கத் தொடங்கியது.

பிறகு தொடர்ந்த நாட்களில் குழப்பகரமான செய்திகள் வரத் தொடங்கின. தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை வெளியிட்டன. ‘இசட் தமிழ்’தொலைக்காட்சியில் தலைவரின் நேர்காணல் இடம்பெறவிருப்பதாக ஒரு குறுஞ்செய்தி பரபரப்பாக அலைந்தது. பிறகு அதை மறுத்து குறுஞ்செய்தியொன்று அன்று மாலையே வந்துசேர்ந்தது.

‘தலைவர் வீரமரணம்’என்றொரு மின்னஞ்சலை எனது நம்பிக்கைக்குரிய தோழன் ஒருவன் அனுப்பியிருந்தான்.

“இல்லை. நான் நம்பமாட்டேன். அவர் எங்களை அப்படி நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போகமாட்டார்”என்று நான் அடித்துக் கூறினேன். எனது குரல் தளுதளுத்தது. எனது வார்த்தைகளை நானே நம்பவில்லையா?

“இதற்குள் ஏதோ இருக்கிறது…”என்று மனம் உறுத்திக்கொண்டேயிருந்தது.

‘தலைவர் இல்லை என்று அறிவிக்கப்போகிறார்கள்’என்ற குறுஞ்செய்தி வந்த அன்றே ‘தலைவர் இருக்கிறார்’என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நம்பிக்கையோடு நிமிர்ந்தபோது ‘தலைவர் இல்லை’என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

என்னதான் நடக்கிறது?
உளவியல் போரில், எஞ்சியிருப்பவர்களையும் கொன்றுவிடத் தீர்மானித்துவிட்டார்களா?

19ஆம் திகதியன்று ஏறக்குறைய நாங்கள் செத்துப்போய்விட்டோம். செத்துக்கொண்டிருக்கிறவர்களை குத்திக் குத்தி இன்னமும் உயிர் இருக்கிறதா என்று சித்திரவதை செய்கிறார்களா?

எங்களைப் போன்றவர்களின் வீடுகளில் ‘பிரபாகரன்’என்ற சொல் ஒலித்து நாங்கள் கேட்டதில்லை. எங்களால் ‘தலைவர்’ என்றே அவர் விளிக்கப்பட்டார். கடவுளர் படங்களுக்குப் பக்கத்தில் வைத்து வணங்கத்தக்கவரே அவர். ஆனாலும் இறந்தவர்களின் படங்களை மட்டுமே கடவுளுக்குப் பக்கத்தில் வைப்பார்கள் என்ற ஐதீகத்தினால் அதை நாங்கள் செய்ததில்லை. அவரது பெயர் எங்கு உச்சரிக்கப்பட்டாலும் தொண்டை அடைத்துக்கொண்டு கண்ணீர் பெருகி வழியுமளவுக்கு பெரும்பாலான தமிழ்மக்கள் அவரை நேசித்தார்கள். ஆராதித்தார்கள். மதித்தார்கள். நெஞ்சுருகினார்கள். பல்லாயிரம் போராளிகளும் மக்களும் அவரது ஒரு சொல்லுக்காகக் காத்துக்கிடந்தார்கள். அந்தப் பெயர்தான் எங்களையெல்லாம் உருக்கும் மந்திரம். மாயச் சொல்! தீராத வசீகரம்! உயிர்நிலை! பூமியைச் சுழல வைக்கும் மைய அச்சு!

உலகெங்கிலும் வாழும் அன்னையரின் மூத்த பிள்ளை அவர். அவரவர் வயது நிலைக்கேற்ப அண்ணனாக, தம்பியாக, பிள்ளையாக பெரும்பாலான குடும்பங்களில் வாழ்ந்தவர் அவர். (நான் ஏன் இறந்தகாலத்தில் இதை எழுதுகிறேன்?) இளம்பிறையின் வார்த்தைகளில் சொல்வதானால் எங்கள் ‘குலதெய்வம்’ அவர்தான். எங்களைப் போன்றவர்களின் வாழ்வில் பெருங்கனவாக ஒன்று இருக்குமென்றால், அது எங்கள் ‘தலைவரை’ப் பார்ப்பது மட்டுமே. போர் ஓய்ந்திருந்த காலகட்டத்தில் (2002 பெப்ரவரியின் பிறகான சில ஆண்டுகள்) புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஊருக்குப் போய் வந்தார்கள். திரும்பி வந்தவர்களிடம் கேட்பதற்கு எங்களிடம் ஒரேயொரு கேள்விதான் இருந்தது: “தலைவரைப் பார்த்தீர்களா?”
நான் வேலை செய்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து பலரும் போய் திரும்பி வந்து கண்கள் மினுக்கிட கதைகதையாகச் சொன்னார்கள். ஏக்கம் வழியும் விழிகளோடு நாங்கள் அதைக் கேட்டிருந்தோம். ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினையடுத்து (சதி) சுதுமலைக் கூட்டத்தில் தலைவர் பேசியபோது ஒரேயொரு தடவை அவரைக் கண்ணால் காணும் பேறுபெற்றேன்.
“நீங்கள் தலைவரைப் போய்ச் சந்திக்கவில்லையா?” கேட்டவர்களுக்கெல்லாம் என்னிடம் ஒரேயொரு பதில்தான் இருந்தது “சாதனையாளர்களைச் சந்திக்கும்போது, அதில் நூற்றில் ஒரு பகுதியாவது நாமும் சாதித்திருக்க வேண்டும்… இல்லையெனில் அவர்களைச் சந்திக்கும் அருகதையற்றவர்கள் நாங்கள். அவர்களைச் சந்திக்கும் உரிமை எங்களுக்கு இல்லை”

ஊடகங்கள் நிறையச் சொல்லிவிட்டன. என்றாலும் வரலாறு காணாத அந்த வீரனைப் பற்றி எழுதி மாளாது. எந்தத் தமிழுக்காக அவர் போராடினாரோ அந்தத் தமிழே தோற்று நிற்குமிடம் ஒன்று உண்டென்றால், அது பிரபாகரன் என்ற அதிமானுடனைக் குறித்துப் பேச முனையுமிடந்தான். நான் உணர்ச்சி மிகைப்பட்டு இதைச் சொல்லவில்லை.

இன்று, (24.05.09) ‘ஒப்பற்ற எங்கள் தலைவர் களத்தில் வீரமரணமடைந்துவிட்டார்’என்று செல்வராஜா பத்மநாதன் அறிவித்திருக்கிறார்.

எதை அஞ்சினோமோ அது உண்மையில் நடந்துவிட்டதா? எது நடக்கக்கூடாதென்று நாங்கள் பிரார்த்தித்தோமோ அந்தப் பிரார்த்தனைகளை ‘மேலான சக்தி’கள் மண்ணில் தூக்கி எறிந்துவிட்டனவா?

கடைசியில், ‘மொக்குச் சிங்களவங்கள்’என்று எங்களால் நகையாடப்பட்டவர்கள், ராஜதந்திரப் போரிலும் எங்களை வீழ்த்திவிட்டார்களா?
உண்மையல்லாத ஒன்றை உண்மைபோலக் காட்டி, எங்களைக் குழப்பியதன் வழியாக, எங்கள் பெருந்தலைவனுக்கு நாங்கள் இறுதியாகச் செலுத்தியிருக்க வேண்டிய மரியாதையை செலுத்தவிடாமல் அடித்துவிட்டார்களா? உண்மையை உண்மைபோலச் சொன்னால், வெளிப்படுத்தினால் உலகம் கொதிக்கும் ஒரு கோபப்பந்தாகிவிடும், அந்த எழுச்சி விபரீத விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதற்காக எங்களைத் திசைதிருப்பிவிட்டார்களா? எங்கள் தலைவனை அறியாதவர்களும் அவரது மரணத்தின் பின்னான எழுச்சியின்போது அவரை அறிந்துவிடுவார்களே என அஞ்சி நாடகமாடினார்களா? சீறி வெடித்திருக்க வேண்டிய ஒரு வெடிகுண்டைத் தண்ணீருக்குள் அமிழ்த்தி செயலிழக்கச் செய்துவிட்டார்களா?

அன்பானவர்களே! உங்கள் செய்திகளையே சோறும் தண்ணீரும் சுவாசமுமாக எண்ணிக் காத்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு இரகசியமாக ஒரு பொய்யையேனும் சொல்லுங்கள்.

“தலைவர் உயிருடன் இருக்கிறார்”

இந்த வார்த்தைகளின் வழி அணையாதிருக்கட்டும் எங்கள் மனங்களில் மூண்டெரியும் நெருப்பு. இளைய தலைமுறையிடம் தலைவர் கைமாற்றிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிற கடமைகளை அவர்கள் செய்துமுடிப்பார்கள். (இங்கு சுயநலம் மறுபடி பேசுகிறது. இன்னொருவரின் தோளில் அதை மாற்றத் தந்திரம் செய்கிறது.) இல்லை; நாங்கள் செய்துமுடிப்போம். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக எங்களை வழிநடத்திய தனிப்பெருந்தலைவன் எங்களுக்காக இனி ஒன்றும் செய்யவேண்டியதில்லை. காலமெல்லாம் போருக்குள் வாழ்ந்தவன் எங்கோ வெகுதொலைவில், தன்னை யாரென அடையாளப்படுத்திக்கொள்ளாமலே எங்கள் உயிர்நிலையாக இருந்துகொண்டிருக்கிறான் என்ற அற்ப நிம்மதியில், நிறைவில் மிகுதி நாட்களை நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.

தயவுசெய்து சொல்லுங்கள்.
“தலைவர் உயிருடன் இருக்கிறார்”என்று.

-நன்றி: உயிரோசை

12 comments:

கதிர் said...

தமிழ் நதி உங்களுக்குள் தோன்றிய உணர்வு குழப்பமும், கொந்தளிப்பும் அந்த 19ம் தேதி எனக்குள்ளும் நிகழ்ந்தது. அந்த நாள் முழுதும் பைத்தியம் பிடித்து போல் இருந்தது. பிரபாகரனின் மரணம் குறித்து யார் விவாதித்தாலும் ஒரு பெருங்கோபம் புயலாய் மனதில் வீசியது. (இயலாமையின் வெளிப்பாடும் கூட) தமிழினத்தை உலகம் வஞ்சித்திருக்கிறது. இந்தப் பாவத்தை உலகமும், இந்திய மீடியாக்கலும் எந்த நீர் ஊற்றி கழுவப்போகிறது

Anonymous said...

இதென்ன கோதாரி?
நீங்கள் கேட்கும் பொய்யைத்தான் ஈழத்தவர்களுக்காகக் குரல்தரவல்லவர்ககளாகத் தம்மை நினைத்துக் கொள்ளும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

போதாததுக்கு நக்கீரன், விகடன் துணையிருக்கிறதே? இன்னும் வேண்டுமானால் அறிவழகனோ கிறிவழகனோ அனாமதேயப் பேர்வழிகள் இருக்கிறார்கள்.

இவர்களை நீங்கள் நம்பவில்லையா?
___________________

பத்மநாதனை விடவும் தொடர்புகளுள்ள கொம்பன்கள் சொல்கிறார்கள் நம்புங்கள்.

பத்மநாதனை விடவும் குரல்தரவல்ல அருகதையுடையவர்கள் சொல்கிறார்கள் நம்புங்கள்.

எங்களைவிடவும் தலைவரை நேசித்த, அறிந்து வைத்திருந்த அனாமதேயங்கள் அறிக்கை விடுகிறார்கள்.

நம்புங்கள்!
----------------------

ஒன்றைக் கவனித்தீர்களா?
புலியெதிர்ப்புக் கும்பலும் தலைவரை நேசிப்பதாகவும் அவரின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப் படுத்த முண்டியடிப்போரும் இன்று ஒரேபுள்ளியில் வந்து இணைந்திருக்கிறார்கள். இரு தரப்பும் துரோகியென்று கைகாட்டுகின்றன ஒரேதிசை நோக்கி.

'மோட்டு'ச் சிங்களவனுக்கு இதைவிட வேறென்ன வெற்றி வேண்டும்?

--------------------------
தலைவனை இவ்வளவுதூரம் கேவலப்படுத்த இந்தப் புலி அடிவருடிகளால் முடிகிறதென்பது நம்ப முடியாமலிருக்கிறது. தலைவனைப் புகழ்வதாக நினைத்துக்கொண்டு இகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நக்கீரன், விகடனை விட்டுவிடுவோம். அவர்கள் எப்போதும் வியாபாரிகள். ஆனால் தன்னலமற்று ஈழ ஆதரவைக் காலகாலமாக தமது நிலைப்பாடாகக் கொண்டிருப்பவர்கள் செய்கிற குளறுபடிகள் தாங்க முடியவில்லை.

பாவம் மக்கள் கூட்டம். தாம் உயிருக்குயிராய் நேசித்த தலைவனுக்கு வணக்கம் செல்லுத்தக்கூட அவர்களால் முடியவில்லை.

சரி, உங்கள் கருத்தென்று ஒன்றிருக்கட்டும். தலைவரால் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வரும் அறிவித்தலை நடைமுறைப்படுத்த என்ன தயக்கம்? இவரில்லாவிட்டால் வேறெவரின் அறிவித்தலை ஏற்பீர்கள்? அனாமதேயமாக இணையத்தளங்களுக்கு அறிக்கை விடுபவர்களையா? அல்லது அனாமதேயங்கள் சொன்னதென்று செய்தியெழுதும் ஊடகங்கள் சொல்வதையா? இதற்குள் 'புலிகளின் அதிகாபூர்வச் செய்திகளை வெளியிடும்' என்ற அடைமொழியோடு சில செய்தித் தளங்கள் அடையாளங்காணப்பட்டு, அவை சொன்னால் நம்புவோம் என்ற நிலைமை.

தனக்கு இழவு கொண்டாட தலைவன் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் பேரெழுச்சியொன்றை ஏற்படுத்தியிருக்க வேண்டிய சந்தர்ப்பமொன்று கைநழுவிப் போகிறது.
=========================
பிரபாகரன் என்ற அடையாளத்தின் பெறுமதியே அச்சக்தி கடைசிவரைக் களமாடியது என்பதுதான்.

-மடலனுப்பியவன்

தமிழ்நதி said...

கதிர்,

உலகில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் நிலை அன்று அதுவாகவே இருந்திருக்கிறது. அதுவொரு கரி நாள். தற்காலிகமாகவேனும் நம்பிக்கை செத்த நாள். இப்போதும் நிலை ஒன்றும் மாறிவிடவில்லை. புண்ணுக்குக் கட்டுப்போட்டிருக்கிறோம். அது உள்ளுக்குள் இருந்து வலித்துக்கொண்டுதான் இருக்கிறது கதிர்.

அனானி நண்பரே,

உங்கள் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் விடையில்லை. நான் மிகச் சாதாரணள். ஒரு ஆதர்ச நாயகனைப் பார்த்துப் பார்த்துப் பிரமித்தவள். விடுதலைப் புலிகள் பெரிய பின்னடைவைச் சந்தித்துவிட்டார்கள்; விடுதலைப் போராட்டம் பல்லாண்டுகள் பின்தள்ளப்பட்டுவிட்டது. தோற்றாலும் வீரர்கள் வீரர்களே என்பதில் ஐயப்பட ஒன்றுமில்லை. வஞ்சகத்தாலும், முண்டுகொடுப்புகளாலும் வென்றாலும் பேரினவாதம் தோற்றதாகவே நாம் பொருள்கொள்கிறோம்.

தலைவரைப் பற்றி... யார் என்ன அறிவித்தல் விடுத்தாலும், அவர் உயிருடன் இருக்கிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது. கட்டுரையை எழுதும்போது அந்நேரத்து மனோநிலையில் 'உயிருடன் இருக்கிறார் என்று சொல்லுங்கள்'என்று இறைஞ்சினேன். ஆனால், யாரும் சொல்லாமலே உள்ளுணர்வு சொல்கிறது.. அவர் உயிருடன் இருக்கிறார் என்று. ஆனால், சில காரணங்களுக்காக அவர் 'மறைக்க'ப்படும்போது, உலகத்தின் கண்களுக்காக என்றாலும் அவருக்குரிய மரியாதை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 'போய் வாருங்கள்... காத்திருக்கிறோம்'என்று துயர் ததும்பக் கையசைத்திருக்க வேண்டும். அந்தப் பேரெழுச்சியின் வழியாக அந்த மகத்தான மனிதருக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும்.

நேற்று ஒரு நண்பர் கதைத்தார்... "இது தோல்வியன்று... ஒரு வகையில் வெற்றிதான். விடுதலைப் புலிகள் பலத்தோடு இருந்து பல்லாண்டுகாலம் போராடினார்கள். உலகம் திரும்பிப் பார்க்கவில்லை. இன்னும் இருபதாண்டுகள் போராடியிருந்தாலும் நிலைமை இப்படியே நீடித்திருக்கும். ஒரு தோல்வியின்போது உலகம் விழித்துக்கொண்டிருக்கிறது... 'தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும்; அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்'என்பதை, பல்லாயிரம் மக்களை, போராளிகளைப் பலியிட்டு உணர்த்தியிருக்கிறது விடுதலைப் போராட்டம். இதைத் தோல்வி என்று கொள்ளாதீர்கள். இது அரசியல் ரீதியான வெற்றி'என்றார். அதுதான் உண்மையோ...? இராணுவப் பாதையிலிருந்து அரசியல் பாதைக்கு உலகளாவிய ரீதியில் போராட்டம் திசைதிரும்பியிருப்பது வெற்றிதானே இல்லையா?

Chandravathanaa said...

தமிழ்நதி,

நானும் இப்படித்தான், பைத்தியக்காரி ஆகி விடுவேனோ என்று குழம்பினேன்.
மூளையின் நரம்பொன்று வெடித்துச் சிதிறி விடுமோ எனப் பயமாக இருந்தது.

இதே கேள்வி என்னிடமும்
தொலைக்காட்சியைப் பார்க்குந்தோறும் நெஞ்சு கொதித்தது. எத்தனையோ பேரின் உயிராயிருந்தவன், ஒரு அநாதையைப்போல நந்திக்கடலோரத்தில் எவனோ தன்னுடலைப் புரட்டிப் பார்க்கக் கொடுத்துவிட்டுச் செத்துப்போவதென்பது நம்பமுடியாததாக இருந்ததுஇன்னும் மனது அமைதியடையவில்லை.

சந்தனமுல்லை said...

பதிவை படித்து நெடுநேரம் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன் தமிழ்நதி! இது வெறுங்கனவாகவே இருந்திருந்துவிடக் கூடாதாவென்று எண்ணியபடி!! கண்களில் நீர் திரையிட சொல்கிறேன் தமிழ்நதி...“தலைவர் உயிருடன் இருக்கிறார்” !!

உமாஷக்தி said...

தமிழ், நம் தலைவர் இருக்கிறார். உண்மையை வெகு நாள்கள் மறைத்து வைக்க முடியாது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ ராஜபக்சே எனும் கொடுங்கோலனின் அழிவு வெகு சீக்கிரம் நிகழும். நம்பிக்கையின் வேரினைப் பற்றியிருப்போம், எல்லா சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்.

சாந்தி said...

எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு இரகசியமாக ஒரு பொய்யையேனும் சொல்லுங்கள்.

“தலைவர் உயிருடன் இருக்கிறார்”

தோழி தமிழ்நதி,
பொய் சொல்ல வேண்டாம் யாருமே ஆளாளுக்கு அறிக்கைவிட்டு அந்த மாபெரும் சுடரை அணைக்காமல் விடுவார்களேயானால் நிம்மதிதான்.

தான் வளர்த்த போர்க் குழந்தைகளுக்கெல்லாம் இறுதி மரியாதையை எத்தனை சிறப்பாக செய்து முடித்த எங்கள் சூரியனை நாம் ஒரு அநாதைபோல விட்டுவிடுகிறோமா என்ற துயரம் இந்த வாழ்வை ஏன் வாழ்கிறோம் என எண்ண வைக்கிறது.

உயிருடன் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையாகக் கூட இருக்கட்டும். ஆனாலும் இப்போது இல்லையெனப்படும் எங்கள் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடனை செய்ய தடைகள் விலகி நின்று வழிதருதலே சிறந்தது என்பது என் எண்ணம்.

உரியவன் இல்லாட்டில் ஒரு முளம் கட்டையென்ற எங்கள் ஊர்ப்பழமொழியை இப்போதைய அறிக்கைகள் மெய்யாக்குவது புரிகிறதா...?

தோழமையுடன் சாந்தி

சாந்தி said...

எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே

15:52, Posted by http://mullaimann.blogspot.com
எங்களுக்காய் வாழ்ந்து
எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே !
வணங்குகிறோம்.

சூரியனாய்ப் பிறப்பெடுத்துச்
சுதந்திரத்தின் காவலனாய்
கால்நூற்றாண்டையும் கடந்து
காடும் மேடும் களவாழ்வுமென
வாழ்வையும் உங்கள் வம்சத்தையும்
எங்களுக்காய்த் தந்தவரே !

காலப் பெருநதியில் காணாமல் போகாமல்
ஓயாமல் பாய்ந்த எரிமலையே !
காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள்
அவதாரனின் துயரில் அனைத்தும்
அசையவோ அடுத்து நகரவோ இயலாமல்
போட்டு வைத்த பிணங்கள் போல்
காலம் காப்பிடமின்றி அலைகிறது.

வஞ்சம் கொன்றது
எங்கள் வாழ்வைத் தின்றது
இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க
என்ன மர்மம் உள்ளதோ…..?
வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல்
இறுதிவரை போராடியே மாண்டீர் அல்லது மறைந்தீர்.

மரணம் மாவீரரை வென்றதில்லை – மாவீரம்
மரணத்தை வென்ற பெரும் வல்லமை படைத்ததை உங்கள்
வழிவந்த தோழதோழியரைக் களப்பலியெடுத்த
துரோகங்களே சாட்சியாக
`´சாவெனில் சமர் வாழ்வெனில் போரென்று`´
போனவர்கள் முடிவுகளில் கண்டோம்.

கடைசி நிமிட வேண்டுகையும்
காப்பாற்றுகிறோம் என்றவரின் கழுத்தறுப்பும்
ஓடிய காலப்பெருங்கடலை இடையறுத்துத் தடைவிழுத்தித்
தமிழரின் விதியறுத்து வென்றதாய் விழாக்காணும்
கொலைஞர்கள் இன்று போகட்டும்.
எல்லாளன் பின்னர் எழுந்த கதிரவன் உங்கள் பின்
எழுந்த எரிமலைகள் உள்ளார்கள் என்பதை
உறுதியுடன் நம்புகிறோம்.

உலகம் இதையெல்லாம் ஒதுக்கிவிட முடியாத
உண்மைகள் புரியப்படும் ஒருநாளில்
எல்லாம் ஒளிர்வு பெறும் முடிவு வரும்.
அந்நாள் வரையிலும் அமைதியுடனிருப்போம்.

நன்றியென்றுங்கள் கொடையை
மூன்றெழுத்துக்குள் முடக்கமாட்டோம்.
நாளையெங்கள் சந்ததிக்கு
நீங்களே முன்னோடி
முகவரி எல்லாம் நீங்களே….,
எங்கள் மூச்சுள்ள வரையுமுங்கள்
முகமே எங்களுக்கு விடிவெள்ளி.

நீங்கள் விரும்பிய தேசம்
நீங்கள் விரும்பிய விஞ்ஞானம்
உங்கள்விருப்பான எல்லாம் கொண்டு
எங்கள் வம்சம் எழுந்து வரும்
உங்கள் புதல்வர்களாய் புதல்விகளாய்…..,

எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே
எங்களால் இயன்றது
இன்று ஒரு நினைவிருத்தல்
இதைவிட ஒன்றுமேயில்லையிப்போது எங்களிடம்.
நாங்கள் விட்ட கண்ணீரால்
நிறைந்திருக்கும் நந்திக்கடல் சோம்பல் முறித்து எழும்
சோகம் துடைத்து வரும் நன்நாளில்
உங்கள் கனவுகளை நினைவாக்கி எழுந்து வருவோம்.
26.05.09

vignath said...

parabharan should be alive or he will be alive but singlavan politiceans and government but singalavan will suffer for their activity. am sure there wil be a great reavenge against the singlavans. though prabhaharan is efficent and brave he did not attace singlavan cithizeens. but rouge singlavan government attacaked poore innecent tamil citizeens.i think singlavan govrnment will get the title {worlds awful creatchure}.
i hope that again in many different ways lot of prabaharan will develop aganinst singalavan domination they will face many attack again

Anonymous said...

நன்று தமிழ்நதி.

நீங்கள் அஞ்சலி செலுத்த வேண்டியதில்லை.

நீங்கள் மட்டுமன்றி உங்களைப் போல் நிலைப்பாடுடையவர்களும் இதைச் செய்யக்கூடாதென்பது எனதும் என்னைப் போன்றவர்களதும் நிலைப்பாடு.

உந்த உள்ளுணர்வோடு என்ன கிளிசறின் கண்ணீரா விடப்போகிறீர்கள்? அதைவிடக் கேவலப்படுத்த ஏதுமிருக்க முடியாது. அது, தலைவன் தப்பியோடி ஒளிந்திருக்கிறான் என்ற கருத்தாக்கத்தைவிடவும் கொடுமையானது.

களத்தில் மாண்டான் தலைவனென்று நம்புபவர்கள் மட்டும் தலைவணங்குவோம் வாருங்கள். மற்றவர்கள் மாவீரர் நாள் வரைப் பொறுத்திருங்கள்.

தான் செத்து ஈழத்தமிழினத்தைச் சிதறடித்தான் தலைவன் என்று வரலாறு நிலைக்கட்டும்.
====================

உள்ளுணர்வை நான் எப்போதும் மதிப்பவன். அது பெரும்பாலும் சரியானதையே சொல்லுமென்ற நம்பிக்கையை வலுவாகப் பெற்றிருப்பவன்.

நீங்கள் படைப்பாளியாகக் கதைக்காத பட்சத்தில் உங்கள் உள்ளுணர்வுக்கு எனது மரியாதை எப்போதுமுண்டு.
-------------------
இது தனியே தமிழ்நதிக்கான எதிர்வினையன்று.

புரட்சிக்கவி said...

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கின்றார்.

நமது உணர்ச்ச்கிகளுக்காக, தலைவர் செய்மதிகளின் கழுகுப் பார்வைகளுக்கு இலக்காகிவிட வேண்டுகின்றீர்களா ? என்ன ?

இன்றும் (29/05/2009) வைகோவும், பழ.நெடுமாறனும் சொல்வதைக் கேளுங்கள் - "ஒரு இனத்தினையே துரோகம் செய்யக்கூடிய துரோகி நான் இல்லை, தலைவர் உயிரோடு இருக்கின்றார்"

*இயற்கை ராஜி* said...

முட்டும் கண்ணீரைத் துடைக்கவும் தோணவில்லை.. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..:-(((