7.05.2009

வாணியின் வீடு - கவிஞர் சுகுமாரன்

வாணியின் வீடு

எவருக்கும் எங்கேயும் போக இடமில்லை
எனினும் எல்லோரும் போகிறார்கள்

அவர்கள் இவர்கள் நான் நாம்
எல்லாரும் போய்க்கொண்டிருக்கிறோம்

இந்தக் கைவிடப்பட்ட நிலத்தில்
வாணி, நீ மட்டும்

ஒருவேளை
உன்னோடு இருக்கலாம்
அநாதைப் பிள்ளைகள்
அநாதைப் பெற்றோர்
அநாதைப் பறவைகள்
அநாதைப் பிராணிகள்
அநாதைக் கடல்
அநாதைக் கானகம்
அநாதைக் காற்று
அநாதை இதயம்

ஒருவேளை
நாமும் நானும் இவர்களும் அவர்களும்
திரும்பி வரும்போது நீயும் இருக்கக் கூடுமோ?

புதையுண்ட எலும்பாக
புழுவரித்த சதையாக
கல்லில் உறைந்த கண்ணீராக
எல்லாராலும் கைவிடப்பட்ட
நீ வசித்த வீட்டின்
இடிந்த சுவரில் கீறிய பெயராக.


நன்றி: காலச்சுவடு

4 comments:

நேசமித்ரன் said...

நெகிழச் செய்யும் சொற்களுக்கு சொந்தக்காரர் கவிஞர் சுகுமாரன் எப்போதும்
அவரது சிலைகளின் காலம் மீள்வாசிப்புக்கு என்னை தூண்டியதற்கு நன்றி

தமிழ்நதி said...

நேசமித்ரன்,

எனக்கும் கவிஞர் சுகுமாரனின் எழுத்துக்கள் மிகப் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த கட்டுரையாளரும்கூட. கவிதைபோலவே உரைநடையும் நன்றாக இருக்கும். அண்மையில் வெளிவந்த ‘வெளிச்சம் தனிமையானது’தொகுப்பு படித்துப் பாருங்கள்.

manjoorraja said...

சுகுமாரனின் நல்லதொரு கவிதையை எடுத்திட்டதற்கு நன்றி.

அவரது கட்டுரைகளும் மிகவும் ஆழமானவை.

கலை said...

//புதையுண்ட எலும்பாக
புழுவரித்த சதையாக
கல்லில் உறைந்த கண்ணீராக//

என்னும் எத்தனை !!
கண்ணுக்குத் தெரியாமல் பரிதவிக்கும் வாழ்க்கையின் தவிப்புகள்

இணைப்பிற்கு நன்றிகள்