7.28.2009

மனதின் நடை


மாபெரிய பால்வெளி. அதில் சூரியனைச் சுற்றியும் சுழன்றும் செல்லும் பூமியென்ற சிறு கிரகம். அகன்ற நிலப்பரப்பில் ஒரு நாடு. அதிலொரு நகரம். அங்கே குட்டியூண்டு பகுதி. அந்தக் குட்டியூண்டு பகுதியிலொரு குட்டியூண்டு அறையில் ஒரு சதுர அடிக்கும் குறைவான ஒரு பெட்டியின் முன்னமர்ந்து நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறோம். பால்வெளியையும் இந்தப் பெட்டியையும் இணைத்தும் நினைத்தும் பார்க்க கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது. வேலிச்சண்டை, கோழிச்சண்டையிலிருந்து இணையச் சண்டைக்கு நாங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதை எண்ணித் திருப்தியுற வேண்டியதுதான்.

களைப்பு, அயர்ச்சி, ஆற்றாமை, மனவுளைச்சல், துக்கம் எல்லாம் கலந்த மனநிலையொன்றிலிருந்து உற்சாகத்திற்கு மீட்டிருக்கிறது இடமாற்றம். சனங்களும் வாகனங்களும் நெருநெருக்கும் தெருக்களிலிருந்து தப்பித்து வந்துவிட்டதாய் தற்காலிக மகிழ்வொன்று ஊற்றெடுக்கிறது. எத்தனை சுத்தம் இந்த வீதிகள், எத்தனை நாசூக்கு இந்த மனிதர்கள் என்று வியக்கும் மனதிற்கு ‘புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும்’என்பதும் புரியாமலில்லை. மேலும், மாநகரங்களில் தரியாத கிராமத்தவளின் மனம் இருக்கும்வரை மேலைத்தேயங்களில் நிலைக்காமல் பெயர்ந்தோடும் கால்களை நானறிவேன். இந்த மாதத்தில் இலண்டனில் வெயிலும் குளிரும் கைதேர்ந்த பரிசாரகனால் கலக்கப்பட்ட ‘காக்டெய்ல்’போல கூடியிருக்கின்றன. செழிசெழியென்று செழித்தடர்ந்த மரங்கள் நிறைந்த பூங்காவில் கைவீசி நடக்கும்போது கசடுகள் பின்னழிந்து மறையக் காண்கிறேன். நம்மைக் கட்டிவைத்திருக்கும் அன்றேல் நாம் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் கணனியை முதலில் விட்டுத்தொலைய வேண்டுமென்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அப்படி விடுவதென்பது அடையாளத்தைத் தொலைப்பது மாதிரியும் அறிமுகமற்ற மனிதர்கள் நடுவில் தொலைந்து போவது போன்ற திகைப்பிருளினுள் ஆழ்த்துவதையும் சொல்லித்தானாக வேண்டும்.


சில விடயங்களில் பைத்தியக்காரர்கள் நம்மைவிடத் தெளிவானவர்கள் என்றும் தோன்றுகிறது. (அனானிக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறேன்) களத்தில் யாரோ சண்டை பிடித்தார்கள்; யாரோ செத்துப்போனார்கள்; யாரோ சிறைப்பட்டார்கள்; யாரோ அங்கவீனர்களாக்கப்பட்டார்கள்; யாரோ பசித்திருக்கிறார்கள்; ஒரு உணவுப்பொட்டலத்துக்காக யார் யாரோ வரிசையில் நிற்கிறார்கள்; யாரோ வன்கலவப்பட்டார்கள்; யாரோ வாழ்ந்த வீட்டிலேயே புதைந்துபோனார்கள்; யார் யாரோ இரவுகளில் விம்மி வெடித்து அழுதுகொண்டிருக்கிறார்கள்; யாரோ காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்; யாரோவின் குழந்தை தரையிலடித்துக் கொல்லப்பட்டது; யாரோ… யாரோ… நாம் இணையத்தில் பம்மாத்துக் காட்டிக்கொண்டிருக்கிறோம். முன்னமே ஒத்திகை பார்த்துக் காயப்படாமல் பொருதும் குத்துச்சண்டை வீரர்களினுடையதைப் போன்ற பொய்மை நம்மிலும் இருக்கிறது. ஆதவனோடு முரண். ஷோபா சக்தியோடு சண்டை. குணாளனோடு முறுகல். அவர்களுக்கெல்லாம் நான் ஆகாதவள். புலியெதிர்ப்பாளர்களுக்கெல்லாம் புலி ஆதரவாளர்கள் வெத்துவேட்டுக்கள். வெண்ணை வெட்டிகள். புலி ஆதரவாளர்களுக்கோ புலியெதிர்ப்பாளர்கள் துரோகிகள். கத்தியினால் கீறிப் பிளக்கும் வலியை விட அதிகமாகத்தான் இருக்கிறது வார்த்தைகளால் கீறுவதும் கீறப்படுவதும். எத்தனை இலகுவாகக் கட்சி பிரிகிறோம். எத்தனை இலகுவாக குத்தி முறிகிறோம். கோடை மண்டைக்குள் அனலை ஊற்றுகிறது. சொற்களில் நெருப்புத் தெறிக்கிறது. ஆளற்ற வீட்டில் பெருகும் விஷ ஜந்துகள் போல வன்மம் வளர்கிறது.

எல்லோருக்கும் ஏதோவொன்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. எழுத்து, இசை, காதல், காமம், பணம், இசம்… ஏதோவொரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடத் தோன்றுகிறது. ஒரு தேசாந்திரியாக எங்கோ ஒரு கிராமத்தில் பசுங்கதிர்கள் அசையும் அழகைப் பார்த்துக்கொண்டு வரம்பில் அமர்ந்திருக்கும்போது, ‘தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது?’என்ற கேள்வி எழப்போகிறதா என்ன?

தமிழில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருநூறு பேர் எழுதுகிறோம். அதிகபட்சமாக ஒரு பத்தாயிரம் பேர் படிப்பார்களாயிருக்கும். அதிலும் கவிதை படிப்பவர்கள் ஆயிரத்துக்கும் குறைவு. ஐந்நூறு பிரதிகள் போட்டால் இழுத்துப் பறித்துத் தீர்வதிலிருந்து தெரிகிறது கவிதையின் ‘சீத்துவம்’ அந்த இருநூறு பேருக்குள் எத்தனை குழுக்கள். போட்டா போட்டிகள். வட்டங்கள், சதுரங்கள், முக்கோணங்கள். ‘அவன் அவளோடு படுத்த கதை’கள். ‘அவள் அவனோடு குடித்த கதை’கள். ‘பிடித்து ஆடிய இடுப்பில் இருக்கிறதா கட்டுடைப்பு’என்ற நையாண்டிகள்.

இதையெல்லாம் தாண்டி வாழ்க்கை இருக்கிறது. தெருவில் நடந்துபோகும் ஒருவனை நிறுத்தி “நீ சூரியன் தனித்தலையும் பகல் வாசித்திருக்கிறாயா?”என்றால், ‘தப்பி வந்துட்டியா’என்பதுபோலத்தான் பார்ப்பான். வாழ்நாளில் ஒரு கவிதைகூட வாசித்திராமல், ஒரு எழுத்தாளப் பெருமக்களின் பெயரும் பரிச்சயமில்லாமல், அரசியலே பேசாமல் கோடானுகோடிப் பேரின் வாழ்க்கை நகர்ந்துகொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கு அடையாளங்கள் வேண்டியிருக்கவில்லை. சாமரங்கள், பல்லக்குகள், வாரிசு அறிவித்தல் தடாலடிகள் அவசியமாகவில்லை.

ஓட்டங்கள் எல்லாம் சூனியத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டன. விவாதங்கள் பொருளற்றுக் கரைவதைப் பார்க்கமுடிகிறது. இப்போது வேண்டியது சுயவிமர்சனமன்றி வேறில்லை. நிலவெறிக்கும் ஒரு இரவில் தனித்த கரையில் கட்டப்பட்டிருக்கும் ஓடம்போல சின்னத் தளம்பலாகத் தளம்பிக்கொண்டிருக்கிறது மனம். அது ஓயவேண்டும். ஒரு பளிங்குபோல துலங்கவேண்டும். அதுவரையில் உலகத்தை வேடிக்கை பார்க்கலாம்; ஒரு குழந்தையின் விழிகளோடு.

15 comments:

Jawahar said...

நாம் எந்தத் தொழிலில் இருக்கிறோமோ அந்தத் தொழிலில் இருக்கும் நம் நண்பர்களையும் போட்டியாளர்களையும் அந்தத் தொழிலை விடுத்து வேறு அடையாளத்தில் பார்தோமென்றால் விவாதங்களும், விவகாரங்களுமே மிஞ்சும். உங்கள் சக எழுத்தாளர்களை புலி ஆதரவு அடிப்படையில் பார்ப்பதைத் தவிர்த்து, எழுத்தின் வகையையும்,தரத்தையும் வைத்துப் பார்த்தீர்களேயானால் வேறுபாடுகள் மறையும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவை விரோதத்துக்கு அடிகோலா என்று உறுதியாகச் சொல்வேன்.

http://kgjawarlal.wordpress.com

நளன் said...

மாற்ற‌ங்க‌ளென்ப‌வை இய‌ற்கையான‌வை.
த‌னித்து அமைதியாக‌ ந‌ம்மை ப‌ற்றி நாமே விமர்சித்துக்கொள்ளும் த‌ருண‌ங்க‌ள் தான் ந‌ம்மை உண‌ர‌ச்செய்யும்.
இப்பொழுது உங்க‌ள் ம‌ன‌ம் குழந்தையென இல‌கியிருப்ப‌து போல் தெரிகிற‌து.
வாழ்த்துக்க‌ள் உங்க‌ளின் இந்த‌ மாற்ற‌ங்க‌ளுக்கு :)

- ந‌ள‌ன்

ஈரோடு கதிர் said...

என்னாயிற்று தமிழ்நதி..
ஏன் இந்தப் பிரளயம் மனதிற்குள்... இந்த வெற்று மௌனம் மட்டும் என்ன கொண்டு வந்திடும். அவரவர் அரிப்பு அவரவர்க்கு, அதற்காக அவரவர் சொறிதல் அவரவர்க்கே...

சரமாய் கோர்த்து சுகமாய் மணக்கும் உங்கள் எழுத்து நடை மிக முக்கிய ஆளுமை படைத்தது. அந்த ஆளுமையை எதன் பொருட்டும் அழுத்தி வைக்காதீர்கள்..

தொடர்ந்து எழுதுங்கள்....

அரங்கப்பெருமாள் said...

உலகத்தை காணலாம் குழந்தை விழிகளோடு... உண்மைதான், ஆனால் "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்" இதை யாரும் மறுக்க முடியாது.நம்மை சுற்றி பலதும் நடக்கும்,அதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? இந்திய விடுதலைப் போரில் கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர்? அப்போது இந்திய மக்கள் தொகை எவ்வளவு? கலந்து கொள்ளாதவர்களுக்கு விடுதலைத் தாகம் இல்லை என்றா நினைக்கிறீர்கள்? நம் மக்களிடையும் துரோகிகள் இருந்தனர். கலந்து கொள்ளாதவர்கள்,கருத்து சொல்லாதவர்கள்,துரோகிகள் எல்லாம் சேர்ந்ததுதான் மக்கள் கூட்டம்.கூட்டத்தோடு கலத்தல் எளிது.


"கொலை வாளினை எடடா,மிக கொடியோர் செயல் அறவே,குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா."

இதைப் படிக்கும் எத்தனை பேர் அந்த நாள்காட்டியை பார்த்திருபீர்கள் என தெரியாது. பிரபாகரன் அவர்களின் படம் போட்டு,அதற்கு கீழே-பாரதிதாசனது கவிதை- எழுதப்பட்டிருக்கும்.எனக்கு மிகச் சிறிய வயது அப்போது(1985-களில் இருக்கலாம்). "வாள்" என்பதற்கு "சொல்" எனவும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே "சொல்"லுகிறீகள்.

ஆனாலும் "ஆறாதே நாவினாற் சுட்டவடு" யாரால் மறுக்க முடியும் இதை.மலையில் தோன்றி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு இறுதியில் கடலில் கலக்கும் நீரைப் போல,நாமும் கலப்போம் இந்த பெரிய பால்வெளியில்.இந்த பால்வெளியும் தன்னுள்ளே அடக்கிக் கொள்ளும், நீரை அடக்கிக் கொள்ளும் நீலக் கடலைப் போல்.

Anonymous said...

naan ninaippathee sari. naan solvathee sari enra ungkal nilaip paaddaiyum suya vimarsanam seyyungkal.

nalla maarram theriyum.

soorya said...

என்ன செய்வது தோழி. இப்படியெல்லாம் ஆகுமென்று யார்கண்டார்கள்? சுயவிமர்சனம் ஆரோக்கியமானதாய் இருக்கவேண்டும்.
பல கலைஞர்கள் இதனால் விரக்தியின் விளிம்பிற்கே போயிருக்கிறார்கள். தற்போது எனது மன நிலையும் இப்படித்தான் இருக்கிறது. சமுத்திரத்தில் துடுப்புத் தொலைத்துவிட்ட ஓடக்காரர்கள் போன்றதொரு வாழ்வு.....!
பார்ப்போம்...காலம் மாறாமலா போகும்.

butterfly Surya said...

இதுவும் கடந்து போகும்.

தொடர்ந்து எழுதுங்கள்....

நேசமித்ரன் said...

மின்னற்பொழுதே தூரம்
ரணங்கள் ஆறும்
பிரார்த்தனைகள் எவ்வெப்பொழுதும்

எழுத்தொன்றே மீட்டெடுக்கும் மருந்து

S.S. JAYAMOHAN said...

தமிழ் நதி,

இந்தப் பதிவில் உங்களை ஒரு அமைதியான நதியாக
பார்க்க முடிகிறது. மகிழ்ச்சி !!

பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு தொல்லையடா ! என்ற
கண்ணதாசனின் கவிதை வரிகள்
நினைவுக்கு வருகிறது.

வளர்ந்து விட்டால்தான் தெரிகிறது
மனிதர்களில் இத்தனை நிறங்களா ? ! என்று.

அதிகம் சிந்திக்காமல், சமுதாயத்தைp பற்றி
கவலைp படாமல் இருப்பது ஒரு சௌகரியமான
செயல் என்று பலர் கருதுவது சரியா
என்று புரியவில்லை !


அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்

செல்வநாயகி said...

தமிழ்நதி,

கடந்துபோனவைகளில் உங்களோடு பேச நினைத்தவைகள் இன்னும்கூட மனதின் ஒருபக்கமாய்க் கனத்துத்தான் நிற்கிறது. என் "ஈழம்...வெறும் சத்தமிட்டுப் பின் சாகப் பிறந்தவர்களா நாம்?" எனும் இடுகையில் சிலநாட்களின் முன் நீங்கள் இட்ட பின்னூட்டுக்கு ஒரு பதில் அதிலேயே எழுதியிருந்தேன் படித்தீர்களா எனத் தெரியாது. எனினும் இப்போது நீங்களே தாண்ட நினைக்கும் ஒரு விடயத்தில் மீண்டும் உங்களை இழுத்துப் போடுவது பிழை என்பதாலும், வேறு சில காரண‌ங்களாலும் கடந்தவை குறித்துப் பேச வேண்டாமென நினைக்கிறேன்.

ஆனால் நீங்கள் எழுதுவதை எப்போதும்போலவே விருப்பத்துடன் பிந்தொடரவே விரும்புகிறேன் செய்கிறேன். இடமாற்றம் உங்கள் எழுத்துக்கு மீண்டும் மெருகேற்றட்டும்! எழுதுங்கள்!

Unknown said...

அன்பின் தமிழ், அமைதியான சூழ்நிலை உங்கள் மனநிலையை லேசாக்கும். சிறிது நாள்கள் எதைப்பற்றியும் நினைக்காமல் உங்களை மீட்டெடுத்து வாருங்கள். நிலவொளியில் கடல் அலைகளின் அருகே அமர்ந்து மிகப் பிடித்த பாடலைக் கேட்பது போன்ற மகிழ்ச்சியை உங்கள் எழுத்து எப்போதும் எமக்குத் தரும். சீக்கிரம் வாருங்கள், காத்திருப்பது நான் மட்டுமல்ல கவிதை கூறும் நல்லுலகமும் ;))

வேல் கண்ணன் said...

'நாளை பூ மலரும்'
சில நேரங்களில் மாற்றங்கள் தேவையாகிறது.
இந்த மாற்றம் உங்களை பக்குவமடைய செய்யும் என நம்புவோம் .

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

சற்று இடைவெளிக்கு பிறகான உங்கள் பதிவு கண்டு மகிழ்ந்தேன்.

நீங்கள் முடித்திருப்பதுபோல குழந்தைகளில் விழிகளோடு காண்போம் இவ்வுலகம்..அப்போது மிக அழகாக, புதியதாக, துள்ளலாக நேர்மையோடுமிருக்கும் ..

எழுதுங்கள்
விஷ்ணுபுரம் சரவணன்

S Prabhakar said...

உண்மைதான். கோடானுகோடிகளாய் வாழ்பவர்கள் பெரும்பாலும் இஸம் தெரியாதவர்கள் தான். ஆனால் அதுவே அவர்களின் பெருமைக்குரிய விஷயம் என எடுத்துக்கொள்ள முடியுமா ? கோடானு கோடி தொழிலாளர்கள் உதிரம் கொடுத்து நாயாய் உழைத்து, நாய்களாய் மரித்து வந்த சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அப்படியே தான் இருந்தது. ஒரு மார்க்ஸ் மண்டையைக் குழப்பி இந்த துயரங்களுக்கு காரணமென்ன என்று சிந்தித்தார். இப்போது தொழிலாளர் நிலைமை அப்படியே மாறிவிடவில்லை என்றாலும் அவர் செய்தது தவறா, வெட்டித்தனமா என்ன ? உங்கள் படைப்புகள் சமூகத்தை மாற்றுமா, மாற்றாதா, பேசுவது எல்லாம் வீணா என்ற சந்தேகம், குழப்பங்கள் எல்லாவற்றையும் விடுங்கள். அதை காலம் தீர்மானிக்கட்டும். உங்கள் அரசியல் எதிரிகளை முழுவதும் படியுங்கள். அவர்களின் அரசியலின் அடி நாதங்களை அகழ்ந்து எடுங்கள். பின்னர், அவர்களை விமர்சியுங்கள். சண்டை போடுங்கள். திட்டுங்கள். உங்கள் கருத்தை முன் வையுங்கள். அதனால் எதுவும் பயனா, இல்லையா என்பதை காலம் சொல்லட்டும்.

தமிழ்நதி said...

S.Prabhakar,

'உங்கள் அரசியல் எதிரிகளை முழுவதும் படியுங்கள். அவர்களின் அரசியலின் அடி நாதங்களை அகழ்ந்து எடுங்கள். பின்னர், அவர்களை விமர்சியுங்கள். சண்டை போடுங்கள். திட்டுங்கள். உங்கள் கருத்தை முன் வையுங்கள்.'

that is what i am going to do sir. thank you. sorry e-kalappai is not working.