9.29.2009

ஈழம் குறித்த பிஞ்ஞவீனத்துவக் கதை அல்லது உரையாடல்


எனக்கு அப்பாம்மாவால் இடப்பட்ட பெயர் கிருகலட்சுமி. நான் பிணம் – பிரியன், நொய்யனார், பாரு நந்திதா, சோ.பி. மாணக்யா, ச்சோவு சுந்தர், மறை கழன்றவன், மீ.ஜி. சுரேஷ் இவர்களையெல்லாம் வாசித்தபிற்பாடு என் பெயரை புகலி என்று மாற்றிவைத்துக்கொண்டேன். அந்தப் பெயர் எனக்குப் பொருத்தமாக இருப்பதாக காதல் பெருகிவழியும் மாலையொன்றில் என் மடியில் படுத்திருந்தபடி சத்தியன் சொன்னான். நாங்கள் எப்போதாவது பிசாசுகளின் வாயால் பேசமுற்படுகையில், எனது பெயரிலுள்ள ‘க’வைத் தூக்கிவிட்டு ‘புலி’என்றே சத்தியன் என்னை விளித்துப் பேசுவான். சத்தியன் சராசரித் தமிழன். அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவன்தான் இந்தக் கதையில் அதிகபட்சமான உரையாடலை நிகழ்த்திச் செல்கிறவன் (ஹா) என்றவகையில் அவனை அறிமுகப்படுத்தித் தொலைக்கிறேன். புத்தகம் வாசிப்பதும் அவ்வப்போது எழுதுவதும் தனக்கு எதிர் அரசியல் பேசும் நண்பர்களின் விவாதங்களைக் கட்டுடைப்பதுமாகிய (ஹா) வேலைகளைச் செவ்வனே செய்துவருகிறான். இவை கழிந்த நேரங்களில் நாங்கள் படுத்துக்கொள்வதுமுண்டு.

“தொன்மங்களிலிருந்து மிதந்துவந்த மலர்களின் வாசனையில் களியேறி உன்மத்தித்த அவன் அந்த வாசனை வரும் திசை தேடியலைந்து நெடுவழியில் தொலைந்துபோய்க்கொண்டிருக்கையில் சந்தித்த அநிருத்தாவின் விழிகளிலிருந்து வழிந்த ஆன்மநிவேதனத்தை அருந்தி அவளில் காமுற்று சுயமைதுனம் செய்துகொள்ளத் தனதிடம் திரும்பிச்சென்றான்…”என்ற வரிகளை நான் வாசித்த நாளிலிருந்து சத்தியனைத் தேடியலைந்து மூத்திரவாடையடிக்கும் அறைச்சுவரொன்றில் முட்டிநின்றேன். (மூத்திரம் என்ற சொல் வராவிட்டால் நொய்யனார் இந்தப் பிரதியை பின்னவீனத்துவம் இல்லையென்று நிராகரித்துவிடுவான்) அவன் எனக்கு வாங்கிக்கொடுத்த இரண்டு போத்தல் 70ரூபா கோல்கொண்டாவில் நான் கவிழ்ந்துபோனதுமன்றி, அன்றுமுதல் அவனது அறையில் வசிக்கலுற்றேன்.
சத்தியன் சிக்கலில்லாத அறைத்துணை.
ஒன்றுக்கடித்துவிட்டு கழிப்பிருக்கையின் மேல்மூடியைத் திரும்பவும் இறக்கிவிட மறந்துபோவதன்றி, உள்ளாடையை கால்வரை இறக்கிவிட்டு நின்றநிலையிலேயே ஒரு காலைத் தூக்கி அதை உத்தேசமாக அறையின் மூலையொன்றில் சுழற்றியெறிந்து- பின் தேவைப்படும் போது மட்டும் அதைக் கால்களால் கொழுவி இழுத்து அணிந்துகொள்ளுமளவு சுத்த நேசன் என்பதன்றி, அவனது காலுறைகளிலிருந்து கிளர்ந்தெழும் நாற்றம் செத்த எலிகளை நினைவுபடுத்தி எனது புத்தகங்களின் பாதுகாப்பைக் குறித்த மனத்தொந்தரவை எனக்குத் தருவதன்றி, நடுநிசியில் துர்க்கனவு கண்டு ‘புலி கொல்… புலி கொல்’என்று கத்துவதன்றி அவனால் எனக்கு எந்த உவத்திரமும் நேர்ந்ததில்லை.
நாங்கள் வோட்காவும் ஆரஞ்சுப் பழச்சாறும்போல அவ்வளவு நெருக்கமாக வாழ்ந்திருந்தோம். திரு.அல்பிரட் அவர்கள் எங்களது அறைக்கு வந்து அப்படியொரு விவாதத்தை ஆரம்பித்துவைத்திருக்காவிட்டால் இனிய வாழ்வு இவ்விதமே கழிந்திருக்கும். அவர் சிவந்த நிறமுடைய உயர்ந்த மனிதர். பெரும்பாலும் இயற்கை உபாதை அழைக்கும்போதும் உணவு உட்கொள்ளவும் மட்டுமே புத்தகங்களை விலக்கி எழுந்துபோகும் பழக்கமுடையவர். இருந்தும், சமகாலச் செய்திகளை அவர் தனது நாக்குநுனியில் சேகரித்துவைத்திருந்தார்.

காருண்யம் பெருகிவழியுமொரு நண்பனின் கடனுதவியால் அன்றைய மாலையைக் கொண்டாடிக்கொண்டிருந்தவேளையில் அல்பிரட் எங்களது அறையை நாடி வந்தார். ஐஸ் துண்டங்கள் மிதந்த மஞ்சள்நிறத் திரவக் கடவுளைப் பங்குபோடப் புதிதாக ஒருவர் முளைத்ததில் கலவரமுற்றது சத்தியனின் முகம். ஆனால், மரியாதை நிமித்தம் அவன் அவரைச் சகித்துக்கொள்ளவேண்டியிருந்தது. அல்பிரட் அருமையான சம்போகி என்பதை நான் எப்படியோ அறிந்துவைத்திருந்தேன். அதனால், அவரது பிரசன்னம் என் முகத்தில் காதலின் ஒளியைப் பூசியது என்பதை நான் உங்களிடம் இரகசியமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

பேச்சு வழக்கம்போல அரசியலை நோக்கித் திரும்பியது. அகதிமுகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களைப் பற்றி துயரந்ததும்பிய குரலில் நெடுநேரம் சொல்லியழுதவாறிருந்தான் சத்தியன். அவனது துயரம் அறைச்சுவர்களை அழுக்கிலிருந்து மஞ்சள்நிறத்திற்கு மாற்றியது. இருந்தாற்போல அல்பிரட் அவர்கள் ஒரு கேள்வியை சத்தியனை நோக்கி எறிந்தார்.

“கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய போராளிகள் என்னவானார்கள் நண்பரே?”

அந்தக் கேள்வியால் சத்தியனின் முகம் துர்க்கனவு கண்டு விழித்தவனுடையதாயிற்று. பிறகு மெல்ல அவிழும் மலரினையொத்ததாகக் கனிந்தது.

“அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுவிட்டார்கள். இத்தனை இலட்சம் மக்களின் வாழ்வைச் சீரழித்து அகதிமுகாம்களுக்குள் தள்ளியவர்களுக்குத் தக்க தண்டனை கிடைத்திருக்கிறது”ஏறக்குறைய அவன் கூவினான்.

சத்தியனின் முகம் அத்தனை விகசித்து நான் பார்த்ததே இல்லை. மலங்கழித்துவிட்டு கழிப்பறையிலிருந்து வெளியில் வரும்போதுகூட அத்தனை ஆசுவாசத்தை நான் அவனது முகத்தில் கண்டதில்லை. அல்பிரட் நெடியதொரு பெருமூச்சோடு என்னைப் பார்த்தார். ஐயமில்லாமல் அழகன்தான் இந்த மனிதன் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

“புலிகள் உருகுவேயிலிருந்து வந்தவர்களா?”

சத்தியனின் முகம் கெட்ட வார்த்தைகளாலான பின்னூட்டத்தை வாசித்ததுபோலாயிற்று. அவனது உதட்டுக்குள் எனக்கு மிகப் பரிச்சயமான அந்தத் தூஷணத்தை உணர்ந்தேன்.

“இல்லை”

“பீஜிங்கிலிருந்து வந்தவர்களா அவர்கள்?”

“இல்லை”

“அவர்களில் யாருடையவாவது அப்பாவின் பெயர் மிக்கெலாஸ்கி என்றிருக்கிறதா?”

“இல்லை”

“செனாற்றோ என்ற கடைசிப் பெயருடையவன் எவனாவது புலியெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறானா?”

“சாத்தியமில்லை”சத்தியன் உரக்கக் கத்தினான்।

“சீ வான் குங் என்ற அப்பன் பெயரைக் கொண்டவன்?”

“இல்ல்ல்ல்லை”சத்தியனின் தாடி உரோமங்கள் சிலிர்த்துக்கொண்டன. அவனது கைகள் பக்கத்திலிருந்த செந்நிற கெட்டி அட்டைபோட்ட புத்தகத்தை வெறியோடு பற்றின.

“அப்படியானால் அவர்களையும் விடுவிக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை?”

திரு.அல்பிரட் தன் நீளமான விரல்களால் கழுத்தைச் சொறிந்தபடி கேட்டார்.

“அவர்கள் கொலைகாரர்கள்”சத்தியன் கத்தினான்.

“சகோதரனே! அவர்கள் உங்களுக்காகவும் போராடவில்லையா?”

“இல்லையென்று சொல்லமுடியாது… அதேசமயம் அவர்கள் சகோதரர்களையே கொன்றுகுவித்தவர்கள். அதிகம் ஏன்? கடைசி நேரங்களில் அவர்களை நம்பிய மக்களையே கொன்றழித்தவர்கள்… ஐயமிருந்தால் புகலியைக் கேட்டுப்பாருங்கள்”

திரு। அல்பிரட் தனது செம்பட்டை இமைகளை மலர்த்தி என்னைப் பார்த்தார். அந்தச் சமயத்தில் நான் அவரை முத்தமிட விரும்பினேன்.

“அப்படித்தான் அறிகிறோம். ஆனாலும், இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அதே மக்களுக்காகத்தான் தம்முயிரை அர்ப்பணித்து மாய்ந்துபோனார்கள்” என்றேன்.

“நீயொரு துதிபாடி”கத்தினான் சத்தியன். என்னைக் குறிவைத்து அவனால் வீசியெறியப்பட்ட புத்தகம் குறிதவறி, வைன் குவளையைத் தள்ளிக்கொண்டுபோய் சுவரோடு சாத்திவைத்து நொருக்கியது.

“தலைவர்கள் தவறுசெய்தார்கள்... அவர்கள் அழிக்கப்பட்டார்கள் எனில், அவர்களால் வழிநடத்தப்பட்ட போராளிகள் என்ன செய்வார்கள்… பாவம்” அல்பிரட் மதுவாசனையுடைய பெருமூச்சொன்றினை வெளியேற்றினார்.

“சிறைகள் வதைக்கூடங்கள் அல்லவா? எனக்கு உங்கள் நாட்டின் சிறைக்கூடங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது”எனத்தொடர்ந்தார் மேலும்.

சத்தியனின் கண்கள் கனவுகாண்பதுபோன்ற கிறக்கத்திலாழ்ந்தன. கலவியின் உச்சத்தில் அவன் அப்படிக் கிறங்குவதைக் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

“சப்பாத்துக் கால்களால் பலமாகத் தாக்குவார்கள். பிறகு தலைகீழாகக் கட்டித்தொங்கவிடுவார்கள். மிளகாய்த்தூள் நிரப்பப்பட்ட சாக்குப்பையால் முகத்தை மூடிக் கட்டுவார்கள். இடமிருந்தும் வலமிருந்தும் கனத்த இரும்புக்குழாய்களால் தாக்குவார்கள். மலங்கழிக்கும் இடத்தினுள் இரும்புக்குழாய்களைத் திணிப்பார்கள். கொழுவியிழுக்கக்கூடிய கம்பியை மலவாசலுக்குள்ளால் செலுத்திச் செலுத்தி இழுக்கும்போது கம்பிகளில் தசைகள் ஒட்டிக்கொண்டு வரும். முதுகுத்தோலை உரித்து அதனுள் மிளகாய்த்தூளை வைத்து மறுபடியும் தைத்துவிடுவார்கள். கால்களையும் கைகளையும் இருவர் பிடித்துக்கொள்ள குதிகால்களில் குண்டாந்தடிகளால் அடிப்பார்கள். நகக்கணுக்களுள் ஊசிகளைச் செலுத்துவார்கள். தேர்ந்த பல்வைத்தியரைப் போல பற்களைக் குறடுகளால் இழுப்பார்கள். பெண்களாயிருந்தால் பிறப்புறுப்பினுள் இரும்புக்குழாய்களையும் தங்களையும் உள்நுழைப்பார்கள்…”
அல்பிரட் பதைத்துப் போய் எழுந்து நின்றார். அவரது கன்னங்களில் கண்ணீர் வழியவாரம்பித்திருந்தது.

“வரலாறு உங்களை மன்னிக்காது”என்றார்.

“அவர்களும் உங்களவர்கள். வேற்றுக் கிரகவாசிகளல்ல. தமது மக்களுக்காகப் போராட அழைக்கப்பட்டவர்கள். அவர்களின் சிறையிருப்பை நீ கொண்டாடுகிறாயா?”

சத்தியனுக்குள் பேய் புகுந்துகொண்டுவிட்டது.

“தாம் செய்வது இன்னதென்று அறிந்துதான் செய்கிறது எங்கள் நாட்டு அரசாங்கம்... நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ… இது எங்கள் உள்நாட்டு விவகாரம்”என்று கத்தினான்.

அல்பிரட் திடீரென முழங்காலிட்டு அமர்ந்து மஹ்மூத் தார்வீஷின் கவிதையொன்றைச் சொல்லவாரம்பித்தார்। துயரமும் போதையும் அவரது முகத்தை வைன் நிறத்திற்கு மாற்றியிருந்தன.

……………………
தீப்பொறி கனலும் விழிகளும்
இரத்தம் படிந்த கரங்களும் உடையவனே!
இரவு குறுகியது
சிறைச்சாலைகள் என்றென்றைக்கும் எஞ்சியிரா
சங்கிலிக் கணுக்களும் எஞ்சியிரா
நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை
……………………………

கவிதையின் நான்காவது வரியில் நான் அல்பிரட்டோடு இணைந்துகொண்டேன். கவிதைப் பிரார்த்தனையின் இடையில் கடைக்கண்ணால் சத்தியனைப் பார்த்தபோது அவன் எனது புத்தகங்களையும் உடைகளையும் கூடத்தில் கொண்டுவந்து குவிக்கவாரம்பித்திருந்தான். அசதாவால் மொழிபெயர்க்கப்பட்ட ‘வீழ்த்தப்பட்டவர்கள்’ குப்புறக் கவிழ்ந்து இரங்கிய கண்களால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது.

பிற்குறிப்பு: நீதி யாதெனில், வாடகை கொடுப்பவனோடு ஒண்டிக்கொண்டிருக்கிற ஆள் முரண்படக்கூடாது.



35 comments:

soorya said...

சபாஷ்..!
வெளுத்துக்கட்டுங்க.

Unknown said...

மீண்டும் ஒரு முறை படிச்சா தான் விளங்கும் போலிருக்கு. அப்படி இருந்தால் தான் அது பின்நவீனத்துவமா? பின்நவீனத்துவ கதையிலே நீதியெல்லாம் சொல்வாங்களா?

சுகுணாதிவாகர் said...

அன்பின் இனிய தமிழ்,

உங்களது 'பிஞ்ஞவீனக் கதையைக்' கட்டவிழ்ப்பது ஒன்றும் ஆணாதிக்கம் இல்லையே?

சத்தியன் ‍ = சத்தியக்கடதாசி. ஆக ஷோபாசக்தி அல்லது சுகன் அல்லது கூபாஷக்தி அல்லது கிகன்.

இங்கு சத்தியன் அழுக்கானவன், பெண்களிடம் படுப்பவன் என்றெல்லாம் வரக்கூடிய விவரணைகள் ஷோபாசக்தி குறித்த வழமையான பிம்பங்களிலிருந்து நீங்கள் எழுதவில்லை என்று நான் நம்புகிறேன், கலாச்சார அடிப்படைவாதத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நான் கருதுவதால்.

ஆனால் ,'புலிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள்(அ)கொல்லப்பட வேண்டியவர்கள்' என்னும் கருத்தை யார் முன்வைத்தது? சுகனின் கருத்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியவை. இலங்கை அரசை ஆதரிக்கும் நிலைக்குச் செல்பவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கூடாது என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. ஷோபாசக்தி, "சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் புலிப்போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று என்னிடமே நேர்காணலில் தெரிவித்தார். அது இதழிலேயே பதிவாகியிருக்கிறது. ஒரு பொய்யான குற்றச்சாட்டை நையாண்டியின் பெயரால் நிறுத்துவது என்ன வகையான நீதி?

மேலும் 25000 போராளிகள் மக்களுக்காக வாழ்ந்தார்கள், மக்களுக்காகப் போராடினார்கள் என்பதற்காக மக்களைக் கொல்வது அறம் சார்ந்ததா? அதைத் தியாகம் என்னும் பெருங்கதையாடலின் வழியாக நியாயப்படுத்த விரும்பும் உங்களுக்கு என்ன அரசியல் நேர்மை இருக்கிறது? புலிகளால் இறுதிநாட்களில் கொல்லப்பட்ட மக்களும் ஒன்றும் உகாண்டாவிலிருந்து வந்த‌வர்களோ அவர்களது அப்பன் பெயர்கள் சூன்‍ வா சங்கும் இல்லையே. தங்கள் சொந்த மக்களைத்தானே கொன்றார்கள். (ஆனால் அதற்காக வேற்று நாட்டு/இன மக்களைக் கொல்வது நியாயம் என்று ஆகாது.) அப்படியானால் இறுதியில் சரணடைந்த போராளிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வு இல்லை என்கிறீர்களா? 25,000 போராளிகள் அர்ப்பணித்தார்களா, 'அர்ப்பணிக்கப்பட்டார்களா?' என்கிற கேள்வியும் இருக்கிறதுதானே!மொகமத் தார்வீஷ் கவிதை மட்டுமல்ல, தீபச்செல்வனின் கவிதையொன்றையும் உங்களுக்கும் ஆல்பிரட்டுக்கும் படிப்பதற்ககாகப் பரிந்துரைக்கிறேன்.


அபிராஜூன் தங்கை லூர்த்தம்மாவின் கண்கள்
o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

01
லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்
அலைந்து கொண்டிருந்தன.
அந்தத் துவக்கு மிகப் பாரமாக இருந்தது
என்கிறாள்
அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.

மீளவும் அவள் ஓடி வந்து
சருகுகளிற்குள் ஒளிந்துகொண்டாள்.
அப்பொழுது அவள் பார்த்துக்கொண்டிருக்க
அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.
கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக
லூர்த்தம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.
அபிராஜ் துவக்கின் சூட்டில்
வாடிவிட
லூர்த்தம்மாவை தேடிக்கொண்டிருந்தான்.
களங்கள் எங்கும் குருதி வடிந்துகொண்டிருந்தது.

இனந்தெரியாத கால்களில் மோதுகிறபோது
அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.
குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.

02
அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக்கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.
மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்.
அபிராஜிடம் துப்பாக்கியை கொடுக்கப்பட்டு
பரிசோதிக்கப்படுகிறது.
வந்திறங்கும் சிறுவர்களுக்காக
தயாரிக்கப்படும் இலக்கங்களை
அபிராஜ் எண்ணுகிறான்.
அபிராஜின் கால்கள் மடங்கிப்போகின்றன.

இப்போது லூர்த்தம்மாவின் கண்களை
இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.
பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.

அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.
லூர்த்தம்மாவின் கண்களில்
சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக்கொண்டிருந்தன.
துவக்குகள் லூர்த்தம்மாவையும்
அபிராஜையும் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.

லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகிற கண்கள்
அபிராஜின் முன் அலைந்துகொண்டிருந்தன.
----------------------------------------------------------------
(தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட 15வயதுச் சிறுமியான லூர்த்தம்மாவும் அவளின் அண்ணனான 16வயதுடைய அபிராஜிம் இராணுவத்திடம் சரணடைந்து- கைதுசெய்யப்பட்டு அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களுடன் 94 சிறுவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 44பேர் சிறுமியர்கள் எனவும் லூர்த்தம்மா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தாள்.)

பிரியங்களுடன்...

சுததம்பட்டம்+ஆணாதிக்கம்+ஆதிக்கசாதி மனப்பான்மை கொண்ட சுகுணாதிவாகர்.

யுவன் பிரபாகரன் said...

ஈழம் குறித்த பிஞ்ஞவீன (???)
ஈழம் குறித்த அமைப்பியல்
ஈழம் குறித்த பின் அமைப்பியல்
ஈழம் குறித்த ஸ்டரக்சுரலிசம்
ஈழம் குறித்த மார்க்சிசம்
ஈழம் குறித்த சர்ரியலிசம்
ஈழம் குறித்த எக்ஸ்டன்சியலிசம்
இன்னும் இது போல் நிறைய கதைகளை அல்லது உரையாடலை உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்


இப்படிக்கு

ழாக் ழீன் பிரென்

Unknown said...

///நீதி யாதெனில், வாடகை கொடுப்பவனோடு ஒண்டிக்கொண்டிருக்கிற ஆள் முரண்படக்கூடாது///
ம்ம்... அடுத்த பாகம் ஆரம்பமா அக்கா. என்னவோ போங்கள்.

தமிழ்நதி said...

வாங்க சூரியா நலமா?

இணைய அரட்டையில் வந்திருந்தீர்கள். நான் கவனிக்கவில்லை. பிறகுதான் பார்த்தேன். வரவுக்கு நன்றி.

ராஜா,

இது பின்னவீனத்துவக் கதையா இல்லையா என்பதெல்லாம் உண்மையில் எனக்குத் தெரியாது. சும்மா குசும்புக்காக ஒரு மாதிரி எழுதிப் பார்த்தேன். புரியாவிட்டால் ஒன்றும் பிரச்சனையில்லை. எல்லாம் புரிந்துதான் என்ன செய்யப்போகிறோம்?

கிருத்திகன்,

:) என்ன அவ்வளவு துல்லியமாகக் கணக்கெடுக்கிறீர்கள்? வருகைக்கு நன்றி.

தமிழ்நதி said...

அன்பின் இனிய சுகுணா திவாகர்,(:)

நீங்கள் ஏன் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்பது எனக்கு முதலில் புரியவேயில்லை. உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துபேச இப்படி வரிந்துகட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் நான்கூட உங்கள் முன்னாள் தோழிதான். ஆனால், உங்களுக்கு நான் இட்ட பின்னூட்டத்திற்குப் பதிலளிக்கும்போது நளினமாக இழிவுசெய்திருந்தீர்கள். நகைப்புக்குறி அதை நாகரிகப்படுத்திவிட்டாலும் என்னால் அதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

சரி... இந்த 'சத்தியன்'உங்கள் பிரியத்திற்குரிய நண்பர் ஷோபாசக்தி கிடையாது. அந்தப் பெயரை முதலில் பிராங்கோ என்று வைத்தேன். பிராங்கோவும் அல்பிரட்டும் குழம்பித் திரிவார்கள் அன்றேல் தெரிவார்கள் என்பதனால் பிறகு மாற்றிவிட்டேன். காகம் 'கக்கா'போனால் கறுப்பாகத்தான் இருக்குமென்பது உங்களது முடிந்த முடிபு. அதனால், நான் யாரைப்பற்றி எழுதினாலும் ஷோபா சக்தியோடு கொண்டுவந்து முடிச்சுப் போடுகிறீர்கள். இந்தக் கதையில் வரும் புகலி அவனோடு படுத்துக்கொள்கிறாள். அப்படியானால்.... உங்கள் கற்பனைக் குதிரையை மேற்கொண்டு விரட்டாதிருந்தமைக்கு நன்றி.

ஆம். நீங்கள் நினைத்தது சரி. நான் கலாச்சார அடிப்படைவாதி இல்லை. இன்னுஞ் சொல்லப்போனால் கலாச்சாரம் என்ற பெயரிலான சில பக்கச்சார்பான கீழ்மைவாதங்களை வெறுப்பவள். கலாச்சாரம் பணக்காரர்களுக்கு ஒருவிதமாகவும் ஏழைகளுக்கு மறுவிதமாகும் இயங்கும்தன்மையினாலேயே எனக்கு அதன்மீது அளவுகடந்த அதிருப்தி.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் சுகுணா திவாகர்?

"ஆனால் ,'புலிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள்(அ)கொல்லப்பட வேண்டியவர்கள்' என்னும் கருத்தை யார் முன்வைத்தது?"

"புலிகளால்தான் எங்கள் மக்களுக்கு இந்த நிலை.. இந்த நிலை"என்ற வலுத்த கூச்சல் உங்கள் செவிகளில் விழவில்லையா? "தம் சகோதரர்களையே கொன்றார்கள் அல்லவா... அவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்"என்ற வன்மம் தெறிக்கும் சொற்களை நீங்கள் கேட்டதில்லையா?

மேற்கண்ட வார்த்தைகளால் உந்தப்பட்டுத்தான் நான் இந்தக் கதையை எழுதினேன். நாங்கள் எல்லோரும் முகாமில் அடைபட்டிருக்கும் மக்களுக்காகவே பெரும்பாலும் கதைத்துக்கொண்டிருக்கிறோம். அங்கே சிறைப்பட்டு வதைபடும் அந்தப் போராளிகளும் எம்மவர்தான்; அவர்கள்மீதும் கவனம் விழட்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. எப்போதும் கட்டுரை எழுதிச் சலித்துவிட்டது. அதனால் கதையாக எழுதினேன்.

இங்கே சுகனையோ ஷோபாசக்தியையோ நான் குறிப்பிட்டு எழுதவில்லை. என் மனதில் பொதுவாக எழுந்த ஒரு பிம்பத்தை வைத்து எழுதினேன். ஆக, உங்களுக்கே அவர்களைப் பற்றி உள்மனதில் அப்படி ஒரு 'சித்திரம்'மனதில் இருக்கிறதோ... அதனால்தான் உடனே விழித்துக்கொண்டு 'அவர்களா.. அப்படிச் சொன்னார்களா? சொல்லவில்லையே'என்று பதறுகிறீர்கள்.

"25,000 போராளிகள் மக்களுக்காக மாண்டார்கள் என்பதனால், அவர்கள் மக்களைக் கொல்வது அறமா?"என்று கேட்டிருக்கிறீர்கள். மக்களை அவர்கள் கொன்றதை நான் எங்கும் நியாயப்படுத்தவில்லை. 'அவர்கள் போராடினார்கள்.. பிறகு கொன்றார்கள்... எனினும் சகவுயிர்கள் என்றவகையில் அவர்களும் காப்பாற்றப்படவேண்டியவர்கள்'என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

"கொலையை தியாகம் என்ற பெருங்கதையாடலின் வழியாக நியாயப்படுத்துகிறீர்களா?"என்று கொதித்துப்போய்க் கேட்டிருக்கிறீர்கள். தியாகம் - துரோகம் என்ற சொற்களெல்லாம் தம்மளவில் பொருளிழந்து நாளாயிற்று. நான் இற்றைத்தேதியில் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. அதென்ன 'பெருங்கதையாடல்?'அதையேன் இதற்குள் கொண்டுவந்து செருகுகிறீர்கள்? உங்கள் வாதத்திற்குக் கனம் சேர்க்கவா?

புலிகள் மக்களைக் கொன்றது தவறு என்று நான் சொல்கையில் உங்களது ஏனைய விவாதங்கள் அடிபட்டுப்போகின்றன. நீங்கள் அநாவசியமாகக் கொதித்திருக்கிறீர்கள். தேவையற்ற இடங்களில் சூலாயுதத்தைத் தூக்க வேண்டிய அவசியமில்லை. (சூலாயுதம் என்றபடியால் என்னை இந்துத்துவவாதி என அறிவிக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்)

தமிழ்நதி said...

சுகுணா பின்னூட்டத்தின் தொடர்ச்சி. பின்னூட்டம் நீளமாக இருப்பதால் வலைப்பூ ஏற்க மறுக்கிறது. பின்னூட்டங்களின் அளவை அதிகரிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடவை பதிலளிக்கும் தந்திரங்களை நான் கையாள்வதில்லை:)

இறுதியில் சரணடைந்த போராளிகளுக்கும் அர்ப்பணிப்பு உணர்வு இருந்தபடியால்தான் நான் இவ்வளவு பேசிக்கொண்டிருக்கிறேன். 'அவர்கள் போராடினார்கள் என்பதற்காக அவர்கள் மக்களைக் கொல்லலாமா?'என்று முதலில் சாடுகிறீர்கள். பிறகு, 'இறுதியில் சரணடைந்த போராளிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வு இல்லையென்கிறீர்களா?'என்று முரண்(டு)படுகிறீர்கள். குழப்பமாகப் பேசிப் பழகிப்போய்விட்டது போலும்.

தீபச்செல்வனுக்கு நன்றி. இதற்கெல்லாம் பயன்படும் கவிதைகளை வரவேற்கிறேன். நானும் அந்தக் கவிதையை வாசித்திருக்கிறேன்.

சுயதம்பட்டம்: உங்கள் கடைசிப்பதிவின் பின்னூட்டங்களுக்கான பதில்களில் உண்மையில் அதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஆணாதிக்கம்: உமா ஷக்திக்கும் எனக்கும் நீங்கள் அளித்த பதிலில் நான் அதை அடையாளம் கண்டேன்.

ஆதிக்கமனப்பான்மை: 'காலச்சுவட்டில் நீங்கள் எழுதக்கூடாது; எழுதவே கூடாது'என்று என்னோடு தோழனாகப் பழகிய காலத்தில் என்னோடு சண்டை போட்டபோது என்னால் அதை உணரமுடிந்தது. எதில் எழுதுவது அன்றேல் எழுதாமலிருப்பது என்பது எனது தெரிவு என்று நான் உங்களுக்கு அப்போது பதிலளித்தேன்.

சர்ச்சைகளே வேண்டாமென்றால்... விதி யாரை விட்டது? நீங்கள் கோபத்தோடு திரும்பி வரக்கூடும் என்பதை நான் உணர்கிறேன். விவாதம் தரக்குறைவாக இருக்காதென நம்புகிறேன்.

ஸ்டாலின் குரு said...

சபாஷ் அருமையான பதிவு

ஸ்டாலின் குரு said...

புலிகளும் மக்களை கொன்றதாக நீங்களும் குறிப்பிடுவது சற்று
நெருடலாக இருக்கிறது தோழர் தமிழ்நதி.போருக்கு பின்னால் புலிகள் மீண்டும்
மக்கள் மத்தியல் அரசியல் பணிகளில் ஈடுபடுவதையும்,மக்களோடு
இணைவதையும் தடுக்கும் வகையில்,புலிகளின் அணிகளுக்குள் இருந்த
இலங்கை மற்றும் அந்நிய அரசுகளின் கூலிகள் அந்த படுகொலைகளை
நிகழ்த்தியிருக்கும் வாய்ப்பை வெகு சுலபமாக நீங்கள் எவ்வாறு நிராகரிக்க
இயலும்.

ஸ்டாலின் குரு said...

சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களைக் கூட இலங்கை
ராணுவம் சுட்டுக்கொன்றது,புலிகளின் ராணுவ ரீதியிலான பலத்தில் மட்டுமல்ல
அவர்களின் மக்கள் மத்தியிலான அரசியல் பணிகளின் மீதும் கொண்ட பயத்திலும்
என்பது நாம் புரிந்துகொள்ள கூடிய ஒன்றுதானே.

KP Suresh said...

TamilNathy,

Suguna Divakar'kku ungalin pathilkal nermaiyaga irunthathu!

Pulikal'n thavarai "Mattum" thedi kandupidithu "pirandukirarkale"!
Avarkalin Vimarsanangalai RajaPakse,Karuna I, Karuna II, Sonia kumpalai noki "konjam Manithathodu" ketkalaame!.

Yethanai naalaikkuthan ithaiye ketpeerkal!!!
Avarkal Iruppai kaattikolla Thayavu seithu Paavapatta Eela Manitharkalin Unarsikalai avarkalin Vakkirankalal OOnappadutha vendaame!

Blog thorum padaiedupathai kaattilum!!! Mulvelikkullum konjam Etti paarthaal unmai theriyume!!! manitham Irunthal.....

பாண்டியன் said...

இறுதி கட்ட போரின் போது போராளிகளோடு பேசி மூன்று முக்கிய முடிவினை எடுத்தார் தலைவர்.. ஒன்று தனது மகன் தலைமையில் இறுதிவரை ஒரு பிரிவு களத்தில் நிற்பது..ஒரு பிரிவு அண்ணன் நடேசன் தலைமையில் காயம்பட்ட போராளிகளை அழைத்து கொண்டு சரணடைந்து சிகிச்சை பெற்று கொள்வது.. தலைவர் தலைமையிலான முக்கியஸ்தர்கள் அடங்கிய பிரிவு ஊடறுத்து தாக்கி வெளியேறுவது.. எனவே தலைவர் பாதுகாப்பாக உள்ளார்.. நவம்பர் மாதம் சூழ்நிலையை பொறுத்து மக்கள் உரை ஆற்றுவார்.. ராசபக்சே அறிவிக்கறான் 6 மாதங்களூக்குள் மீள் குடியேற்றம் நிகழாது என.. மக்கள் இருந்தால் தான் கொரில்லா போராளியாக போராட் முடியும் என தெளிவாக தெரிந்து வைத்துள்ளான் ..அவன் அறிவித்த மே மாததில் இருந்து கணக்கு வைத்தால் புரியும் எங்கு வந்து முடிகிறது என்று..கூடிய விரைவில் எரித்தியாவில் இருந்து நல்ல செய்திவரும்.. சிங்கள பாசிட்டுகள் அங்கு தூதரகம் அமைக்க தலையால் தண்ணி குடிப்பதில் இருந்து தெரியவில்லையா?.. தலைவர் தோன்றும் வரை மாற்று கருத்து மாணிக்கங்களின் எலும்பு துண்டுக்காக கக்கும் புரட்சிகர கருத்துகளை தலைவிதியே என கேட்டு கொண்டு இருக்கவேண்டியதுதான்

மற்றது.. இந்த கதையில் எனக்கு ஒப்புமை இல்லை..தனிநபர் ஒழுக்கம் செய்கை யாவும் கதைபடி மற்றும் நிஜபடி சரியே..ஆனால் இடம் சார்ந்த இடத்தில் கோளாறு உள்ளது..புலியை எதிர்த்து பேசுபவர்கள் இந்த மாதிரி மூத்திர சந்துக்குள்ளா தண்ணியடிக்கிறார்கள்.. அடபாவமே அக்கா தமிழ்நதி நீங்கள் ஏன் இப்படி அப்பாவியாக இருக்கிறீர்கள்? என கேட்க தோன்றுகிறது சென்னையிலேயே அம்சா எனும் நாயின் மூலமாக பிரேசுலெட் கொடுக்கிறார்கள்.. லேப்டாப் கொடுக்கிறார்கள்..5 நட்சத்திர விடுதியில் மது..மாது என அமர்களபடுத்துகிறார்கள்..எனவே கதையின் வரிகளை திருத்தும்படி கனிவோடு வேண்டுகிறேன்...

சின்னப்பயல் said...

சாதாரணமாக அனைவரும் செய்வதற்கு எதிர்மறையான வாக்கியங்கள்..

நிச்சயமாக இது பின்னவீனத்துவம் தான்..!

"பெரும்பாலும் இயற்கை உபாதை அழைக்கும்போதும் உணவு உட்கொள்ளவும் மட்டுமே புத்தகங்களை விலக்கி எழுந்துபோகும் பழக்கமுடையவர்"

இறுக்க சூழ்நிலையை மாற்றுவதற்காக இந்த வரிகளை சுட்டினேன்...

தமிழ்நதி said...

யுவன் பிரபாகரன், (ழாக் ழீன் பிரெர்)

பின்னவீனத்துவம்,முன்னவீனத்துவம், இடைத்துவம் எனக்கெதுவும் தெரியாது. இப்படி எழுத்தையும் ஆட்களையும் சட்டகத்துள் அடைப்பதே எனக்குப் பிடிப்பதில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டபடி எழுதமுடியாமைக்கு வருந்துகிறேன். நீங்கள் எழுதுங்களேன்... படிக்கிறோம்:)

ஸ்டாலின் குரு,

"புலிகளும் மக்களை கொன்றதாக நீங்களும் குறிப்பிடுவது சற்று
நெருடலாக இருக்கிறது தோழர் தமிழ்நதி."

அப்படித்தான் 'அடித்து'ச் சொல்கிறார்கள். உண்மை, பொய் விரைவில் வெளிவரும். பெரும்பான்மைக் குரல்கள் இத்தொனியிலேயே பேசிவருவதால் அத்தொனியிலேயே சென்று பதிலளிக்கவேண்டியிருக்கிறது. அப்படி எழுதும்போது நான் எவ்வளவு துயருற்றேன் என்பதை என் எழுத்தைத் தொடர்ந்து வாசித்துவந்திருந்தால் உங்களால் புரிந்துகொள்ளமுடிந்திருக்கும் தோழர்.

கடைசிநேரப் படுகொலைகளின் பின்னால் இருந்திருக்கக்கூடிய- இலங்கை அரசின் 'கலப்பு' சதி பற்றி நீங்கள் சொல்லியிருப்பதும் சிந்திக்கற்பாலதே.

கே.பி.சுரேஷ், 'தமிங்கிலிஷ்'கொஞ்சம் படுத்துகிறது. தமிழ் அல்லது ஆங்கிலம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்:) ஆம்... இளைத்தவனைக் கண்டால் ஏளனந்தானே... இதே கேள்விகளை உங்களால் பட்டியலிடப்பட்டிருப்பவர்களிடம் அவர்களால் கேட்கமுடியாது. எல்லாம் சமரசந்தான் வேறென்ன..?

வாங்க பாண்டியன்,

எங்கேயடா ஆளைக் காணோமே என்று பார்த்தேன்:)

நீங்கள் சொல்லும் அதிசயம் நடக்குமானால் அதைவிட வேறென்ன மகிழ்ச்சி நமக்கெல்லாம் இருக்கமுடியும்? ஆனால், இனியொருதடவை ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்பதே சரி. அழிந்தவரையில் போதும். இனி அரசியல் வழிகளில் முனைப்புக் காட்டவேண்டும்.

ம்... எனக்கு யார் யார் என்ன கொடுக்கிறார்கள் வாங்குகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. நான் அப்பாவிதான். மேலும், ஊகிப்பை முன்வைத்துக் கருத்துக்களை வெளியிடுவது சரியன்று.

'மூத்திரச்சந்து'என்பதெல்லாம் ஒரு லுல்லுல்லாயி... 'புலிகளும் எம்மவர்தான். அவர்களது விடுதலைக்காகவும் நாம் குரல்கொடுக்கவேண்டும்.'என்பதே நான் சொல்லவந்தது. கதையில் சேர்த்திருக்கும் மற்றெல்லாம் அதற்குச் சுவைசேர்க்கப் பயன்படுத்திய உப்பு, மிளகாய்த்தூள், புளி, பெருஞ்சீரகம், மல்லி இன்னபிற சமாச்சாரங்களே.

கதையின் வரிகளைத் திருத்தச் சொல்லிக் கேட்டிருந்தீர்கள். பார்க்கலாம்:)

சின்னப்பயல்,

"நிச்சயமாக இது பின்னவீனத்துவம்தான்" அப்படியா சொல்கிறீர்கள்...? அப்படியானால் நான் மேலும் பிரதிகளைக் கட்டமைக்கலாம் என்கிறீர்கள்... ஊத்திக்கிச்சு.

அற்புதன் said...

வணக்கம்,

புலிகள் மக்களைச் சுட்டனர் என்னும் பெரும்கதையாடால் சிறிலங்கா அரச ஊடகங்களாலும், புலத்தில் உள்ள புலி எதிர்ப்பாளாராலும்,மற்றும் சிறிலங்கா முகாம்களுக்குள் இருந்து தறப்பாழுக்குக் கீழ் இருந்தும் எழுதப்பட்ட அனாமதேயக் கட்டுரைகள் கடிதங்களினூடாகவே பரப்பபப் பட்டது.

சனல் நான்கில் தமிழ்வாணியிடம் இதே கேள்வி கேட்கப்பட்ட போது அவர் , அவ்வாறான கதைகளையோ சம்பவங்களையோ தான் காணவில்லை, கேட்க வில்லை என்று சொன்னார்.தமிழ்னாட்டுக்குத் தப்பிச் சென்றவர்களும் அவ்வாறே பேட்டிகளில் கூறி உள்ளனர்.

இங்கே பெரும் கதையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள் யார்?

உண்மைகள் உறங்கா, அவை மெல்ல மெல்ல வெளி வரும், அதுவரை கதையாடல்களை கதைகளாகவே கேட்போம்.

புலிகள் சுட்டனர் எனில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப் படுவார்கள்.
வன்னி மக்கள் அந்த முடிவை எடுக்கட்டும்.அவர்கள் சார்பாக எந்தப் பின் நவீனத்துவரும் முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.மேலும் அனாமதேயக் கதையாடால்கள் யாரால் ஏன் எதற்காகப் பரப்பப் படுகின்றன என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

selventhiran said...

சனிப்பெயர்ச்சி பலன்கள் படித்து விட்டீர்களா தமிழ்?!

டிஸ்கி-1: இங்கு சனி என்பது உண்மையான சனியைக் குறிக்கும். மாறாகத் தன்னைத்தான் குறிப்பதாக எவரேனும் நினைத்து கீ-போர்டினைப் பிராண்ட வேண்டாம் என 'ஒடுக்கப்பட்ட பதிவர்களின்' சார்பாக மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

பைத்தியகாரதனமான கதை

Suganthan said...

நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை
தனது விழிகளோடு ரோம் தேசம் போராடியது
செத்துக்கொண்டிருக்கும் கோதுமைக் கதிரின்
விதைகள்...

வறியவர்களாயிருக்கிறோம்...

"அவர்கள் அராபியர்கள் அவர்கள் கொலைகாரர்கள்"

என்னையொரு அராபியன் என்று பதிந்து கொள்...

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
பெரு நிலம் வதிந்திருந்தோம் வ‌ன் படை தரித்திருந்தோம்

நம்மை யாராகவும் பதிந்து கொள்ளவில்லை...

உயிரை சுடராக்கி கொடுத்தவனின் 22 ம் நினைவு நிரல்கள்
சிங்கள போலீசின் ஆளெடுப்பு வரிசையாகியிருக்கிறது
ஆறாயிரங்களாய்...

தனது விழிகளோடு ரோம் தேசம் போராடியது...

SS JAYAMOHAN said...

வணக்கம் தமிழ்நதி,

உங்களின் எழுத்துக் குதிரை
மிடுக்குடன் சுற்றி வந்திருக்கிறது,
அத்தனை வலிகளையும்
சுமந்தும்கூட !


எஸ். எஸ் ஜெயமோகன்

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்..

ஒரு விடுதலைபோராட்டம் மிகபெரிய சரிவினை சந்திக்கும் போதெல்லாம் அந்த போராட்டசார்பான பதிவுகள், புனைகதையாடல்கள் ... என எந்த வகையிலும் நிஜமான பதிவுகள் எழுதப்படாமல் போவது வழக்கமே.. அப்போதெல்லாம் துரோகிகளின் குரல்களும், பதிவுகளுமே தூக்கலாக நிற்பதும் நடுநிலை வாதியாக தன்னை காட்டிக்கொள்ளமுயலும் அறிவுஜீவிகள் அதனை பிடித்துக்கொண்டு தொங்குவதும் எதிர்பார்த்ததுதான்.

வழக்கமாக புலி எதிர்ப்பு பண்ணி ....... பார்ர்கும் கும்பல் முள்வேலிக்குள் அடைப்பட்டிருக்கும் மக்களையும் இதற்கு முன் கொல்லப்பட்ட மக்கள் பற்றியும் கவலை கொள்வதில்லை. முகாமில் புலிகளை தேடும் பணியில் அரசஊழியர்களுக்கு காட்டுகொடுக்கும் வேலையை செய்வதற்கு மனிதநேயம், மனித உரிமை முகமூடிகளை போட்டலைவார்கள். ஒரு வீரம் மிக்க விடுதலை வரலாற்றை முழுமையாக பதியாத/பதியமுடியாத சூழலில் துரோகிகளின் தும்மலுக்கு ஊருக்கு ஒரு கூட்டம் போட்டு பாராட்டுக்கள் வரத்தானே செய்யும்.
உங்களின் கதையில் எங்கு யாரை பொருத்திகொள்ளவேண்டுமென சுகுணா ஒரு சஜக்சன் தந்திருக்கிறார் என்கிற அளவில் நான் பார்க்கிறேன். அவர் அப்படி பார்த்திருக்கிறார். அரண்டவனுக்கு காண்பதெல்லாம் அரவம்தான்..

தோழன் ஸ்டாலின்குருவிற்கான உங்களின் பதிவிலிருப்பதுபோல உண்மைகள் வெளிவரும் நாளுக்காக நாம் காத்திருப்போம்.

விஷ்ணுபுரம் சரவணன்

இளங்கோ கிருஷ்ணன் said...

தோழி!

உங்கள் பதிவு அருமை. மிக அழகான உரை மொழி உங்களுக்கு வாய்த்திருக்கிறது. கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை மிக நுட்பமாக பதிவு செய்கிறீர்கள். பின் நவீனத்துவமா? முன் நவீனத்துவமா? நடு நவீனத்துவமா? என்பது போன்ற வகைப்பாட்டு பிரச்சனைகளை விடுங்கள். இது ஒரு இலக்கியப் பிரதி. அவ்வளவே. அது போதும் நமக்கு.

கருப்பு பதிவர் said...

அடடே செருப்பு பதிவரே உங்களுக்கு ஆதரவா பின்னூட்டம் போட்டிருக்கார். அப்பன்னா நீங்களும் அறிவுஜீவி தான்.

சுகுணாதிவாகர் said...

அன்பின் இனிய தமிழ்,

எனக்கு சுகனையும் ஷோபாசக்தியையும் விட உங்களோடுதான் பரிச்சயம் அதிகம். அதிகபட்சம் சுகனோடு இரண்டுமுறையும் ஷோபாவோடு மூன்றுமுறையும் சந்தித்திருக்கிறேன் என்பதை தாண்டி பெரிதாய் எந்த தொடர்புகளும் இருந்தது கிடையாது. சுகன், ஷோபாசக்தியை விடவும் எனக்கு உங்கள் மீதுதான் பிரியங்களும் மரியாதையும் அதிகம். நான் இங்கே முன்வைத்திருப்பது அரசியல் ரீதியான விமர்சனங்கள்தான். ஆனால் அதைத் தனிப்பட்ட உறவோடு சுருக்கி நண்பர் xமுன்னாள் நண்பர் என்றெல்லாம் எதிர்வுகளைக் கட்டமைத்து விட முடிகிறது. உண்மையில் உங்கள் வார்த்தைகள் என்னை மிகவும் புண்படுத்தி விட்டன தமிழ். என்னால் எப்போதும் உங்களை ‘முன்னாள் தோழி’யாக நினைக்க முடியாது. என்னை முன்னாள் நண்பனாகக் கருதுவது உங்களின் உரிமை தொடர்பான விஷயம். மேலும் /உங்களுக்கு நான் இட்ட பின்னூட்டத்திற்குப் பதிலளிக்கும்போது நளினமாக இழிவுசெய்திருந்தீர்கள்./ என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. ‘‘எனக்கு கமலின் மீது அபிமானம் என்றால் உங்களுக்கு அ.மார்க்சின் மீது அபிமானம்’ என்றீர்கள். ‘நான் அ.மாவின் ரசிகன் இல்லை, குஷ்புவின் ரசிகன்’ என்றேன். இதில் உங்களை எங்கே நான் இழிவுபடுத்துகிறேன்? நான் குஷ்புவின் ரசிகனாக இருப்பது கூட ஆக மோசமான காரியமா?

கருணா தொடங்கி சுகுணா வரைக்கும் அனைவரையும் பொதுமைப்படுத்துகிற வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. புலிகளை விமர்சிக்கிற/,மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கிற இவர்களுக்கு இடையிலான வித்தியாசங்களை மறுக்கிற அநீதி இது. ‘‘புலிகள் மக்களைக் கொன்றார்கள், அதனால் புலிகள் கொல்லப்பட வேண்டியவர்கள்/சிறையிருத்தப்பட வேண்டியவர்கள்’’ என்று யாராவது சொன்னால் அது நிச்சயமாக பாசிசம்தான். ஆனால் அத்தகைய குரலை யார் முன்வைக்கிறார்கள் என்று எனக்கு அறியத்தர முடியுமா?

/புலிகள் மக்களைக் கொன்றது தவறு என்று நான் சொல்கையில் உங்களது ஏனைய விவாதங்கள் அடிபட்டுப்போகின்றன./

இப்படி ஒருபுறம் சொல்கிறீர்கள். இன்னொரு புறம் ஸ்டாலின்குரு போன்றவர்கள் ‘புலிகள் கொன்றதாக நீங்களும் சொல்லலாமா?’’ என்றவுடன் சடாரென வேறொரு குரலில் பேசுகிறீர்கள். ஏன் தோழி?

சுகுணாதிவாகர் said...

/பின்னூட்டங்களின் அளவை அதிகரிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடவை பதிலளிக்கும் தந்திரங்களை நான் கையாள்வதில்லை:)
/
எந்தளவுக்கு என்னைக் குறித்த‌ ஒரு இழிவான பிம்பத்தை உங்களால் சுலபமாகக் கட்ட முடிகிறது? நான் பெரும்பாலான நேரங்களில் பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றிகளும் சொன்னதில்லை, பதில்களும் சொன்னதில்லை. எப்போதாவதுதான் அதைச் சொல்வதற்கு நேரமும் மனசும் வாய்க்கிறது. நான் பின்னூட்டங்களுக்கு அலைபவன் என்பது மாதிரி இன்னும் எத்தனை பிம்பங்களை வைத்திருக்கிறீர்கள் தமிழ்?

/ஆனாலும், இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அதே மக்களுக்காகத்தான் தம்முயிரை அர்ப்பணித்து மாய்ந்துபோனார்கள்/ என்று சொல்லியிருந்தீர்கள், ஒருவேளை சரணடைந்தவர்களை எல்லாம் அர்ப்பணிப்புப் பட்டியலில் சேர்க்க மாட்டீர்களோ என்ற அய்யம்.

/சுயதம்பட்டம்: உங்கள் கடைசிப்பதிவின் பின்னூட்டங்களுக்கான பதில்களில் உண்மையில் அதைக் காணக்கூடியதாக இருந்தது.
/
நன்றி தமிழ். ‘‘எனது பதிவைப் பாருங்கள்’’ என்று உங்களுக்குப் பின்னூட்டம் இட்டிருந்ததையே சுயதம்பட்டமாக ஒரு பார்ப்பன நண்பர் தனது நலனுக்கேற்ப திரித்திருந்தார். நீங்களும் அதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி, இனி நான் உங்களிடம் அப்படியான சுயத்ம்பட்டப் பின்னூட்டம் இட மாட்டேன் என உறுதியளிக்கிறேன்.

/ஆணாதிக்கம்: உமா ஷக்திக்கும் எனக்கும் நீங்கள் அளித்த பதிலில் நான் அதை அடையாளம் கண்டேன்./

நான் எந்தளவு ‘திமிர்’ பிடித்தவன், எவ்வளவு ‘திமிராக’ பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வேன் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதை. ‘‘போடா புண்ணாக்கு என்றுதான் மற்றவர்களைச் சொல்வேன்’ என்று சமீபத்தில்தான் சொல்லியிருந்தீர்கள். வந்த நூற்றுச்சொச்சப் பின்னூட்டங்களில் இந்துத்துவத்திற்கு நேரடியாக/மறைமுகமாக ஆதரவு அளிக்கிற பின்னூட்டங்களுக்கு அப்படித்தான் பதில் சொல்லியிருந்தேன். இதை என்னுடைய திமிராகத்தான் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர ஆணாதிக்கமாக அல்ல. நான் நடந்துகொண்டதற்குப் பெயர் ஆணாதிக்கம் என்றால் உமாஷக்தி தன் பதிவிற்கான பின்னூட்டங்களில் என்னையும் அஜயன்பாலாவையும் கையாண்ட விதத்திற்கு என்ன பெயரிடுவீர்கள்?

/ஆதிக்கமனப்பான்மை: 'காலச்சுவட்டில் நீங்கள் எழுதக்கூடாது; எழுதவே கூடாது'என்று என்னோடு தோழனாகப் பழகிய காலத்தில் என்னோடு சண்டை போட்டபோது என்னால் அதை உணரமுடிந்தது. எதில் எழுதுவது அன்றேல் எழுதாமலிருப்பது என்பது எனது தெரிவு என்று நான் உங்களுக்கு அப்போது பதிலளித்தேன்./

உங்களுக்கும் எனக்கும் இடையில் நடந்த தனிப்பட்ட விவகாரத்தைப் பொதுவெளியில் எழுதுவது என்ன நட்பறம் சார்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அப்பொழுது நன்றாக எழுதிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் எழுத்துகளில் அப்போது உயிர்ப்பு இருந்தது. காலச்சுவடு என்கிற மிக மோசமான பார்ப்பனீயப் பத்திரிகையில் நீங்கள் எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போதும் எனக்கு அதே நிலைப்பாடுதான். அப்போதிருந்த நட்பின் உரிமையால் நான் கூடுதல் அழுத்தம் கொடுத்துவிட்டேன். அது தவறுதான். காலச்சுவடு என்ன விஜயபாரதத்தில் கூட எழுதுவது உங்களுக்கான உரிமை.

/விவாதம் தரக்குறைவாக இருக்காதென நம்புகிறேன்./

நான் வாழ்க்கையில் நேசிக்கும் மிகச்சில நண்பர்களில் நீங்களும் ஒருவர். சுட்டுப்போட்டாலும் என்னால் உங்களைத் தரக்குறைவாக எழுதமுடியாது. ஆனால் எனக்கு உங்கள்மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் உள்ளன. இப்போது டெலிவரி டைம். விரிவாக எழுத முடியாது. ஆனால் கண்டிப்பாக எழுதுவேன்.

தமிழ்நதி said...

அற்புதன்,

"புலிகள் மக்களைச் சுட்டனர்"என்ற 'பெருங்கதையாடல்'(:) பற்றி உங்களுக்கிருக்கும் கருத்தே எனதும். அதாவது, நிரூபிக்கப்படும்வரையில் எதுவும் உண்மையல்ல. நாங்கள் 'இல்லை'என்றால், அவர்கள் 'ஆமாம்'என்பார்கள். 'இல்லை'என்று நிரூபிக்க எம்மிடம் எந்தச் சாட்சிகளுமில்லை. 'ஆமாம்'என்று கூவிக்கொண்டிருப்பவர்கள் தங்கள்வசம் சாட்சிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போதைக்கு அவர்களை வழிமொழிந்தே அத்தகையோருக்குப் பதிலளிக்கவேண்டியிருக்கிறது. அது குற்றவுணர்வைத் தருகிறது. எனினும், 'ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டியிருக்கிறது'. உருது மொழி மட்டும் தெரிந்தவனுக்குத் தமிழில் பதிலளித்துக்கொண்டிருந்தால் புரியாது.

செல்வேந்திரன்,

'சனிப்பெயர்ச்சி'படித்துவிட்டேன். சனியன் இப்போது என்மேல் பெயர்ந்திருக்கிறது. ஏழரைச் சனி முடிவில் வெள்ளிதிசை என்கிறார்கள். அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

அனானி,

"பைத்தியக்காரத்தனமான கதை"

நம் எல்லோருக்குள்ளும் பைத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். சதவீதத்தில் மட்டுமே வித்தியாசமாம். இந்தக் கதையை பிறழ்வு கூடிய மனநிலையில் எழுதியிருப்பேனாயிருக்கும். அது சரி... நீங்கள் ஏன் முகம் மறைத்துக்கொண்டுவருகிறீர்கள்? பைத்தியத்தை எதிர்கொள்ளப் பயந்தா?

சுகந்தன்,
"நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை"

என்ற வரிகள் எனக்குப் பிடித்திருந்தன. மஹ்மூத் தார்வீஷின் இன்னொரு கவிதை அற்புதமாக இருக்கும். 'வாக்குமூலம்'என்று நினைக்கிறேன். வீட்டில் புத்தகம் இருக்கிறது. நான் வழக்கம்போல தெருவில் நிற்கிறேன். அந்தக் கவிதையின் சாரம் இப்படியிருக்கும்:

'கொஞ்சம் மலம்... மூத்திரம்... இவையெல்லாம் புகட்டப்பட்டபின் வந்துவிழுந்தது ஒப்புதல் வாக்குமூலம்'இப்படித்தான் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன.

நன்றி எஸ்.எஸ். ஜெயமோகன். தொடர்பில் இருங்கள் தோழர்.

இந்த எஸ்.எஸ். ஐ மறக்காமல் போட்டுவிடவேண்டும்:)

சரவணன்,

நீங்கள் சொன்ன நிலவரங்களை இனங்காண முடிகிறது. இது அவர்களின் காலம். எங்களின் காலமொன்று வராமலா போகும்? பின்னடைவுகளின்போதும் சமரசங்களுக்கு ஆட்படாமல் இருப்பதுதான் அடிப்படை அறம். நிறையப் பேர் தளம்புகிறார்கள்; புலம்புகிறார்கள். பார்க்கலாம்.

இளங்கோ கிருஷ்ணன்,

இதுவொரு இலக்கியப் பிரதி என்று சொல்வதிலும் பார்க்க தன் நோக்கத்தை நிறைவுசெய்த பிரதி என்று சொல்லலாம். சிறையில் அடைபட்டிருக்கும் போராளிகள் பற்றிப் பேசப்படல் வேண்டுமென்று விரும்பினேன். அது நடக்கிறது. (பேசுவதைத் தவிர்த்து நாம் ஒன்றும் செய்யப்போவதில்லை என்பது நாடறிந்தது)குறைந்தது, அதைப்பற்றிய ஒரு உரையாடல் நிகழவேண்டும். அது முக்கியம் (பாருங்க ஒரு பின்னவீனத்துவப் பிரதி எழுதிப் பார்த்தேன். நானுங்கூட உரையாடல், பெருங்கதையாடல், பிரதி என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறேன்:) )

கருப்புப் பதிவரே,

நீங்கள் சொல்லும் 'செருப்புப் பதிவர்'யாரென்று எனக்குத் தெரியாது. சுகுணாவின் பதிவிலும் இந்த 'பத்தாம் நம்பர் செருப்பு'விவகாரம் பேசப்பட்டிருந்தது. ஆனால், இப்படி வளர்ந்தவர்கள் 'செருப்பு', 'பருப்பு, 'வெங்காயம்'என்றெல்லாம் பட்டப்பெயர் சூட்டுவது ரசிக்கும்படியாக இல்லை. மற்றவர்களை இழிவுசெய்யும்போது நம்மை நாமே இழிவுசெய்தவர்களாகிறோம். பள்ளிக்கூடப் புள்ளிங்க மாதிரி இருக்கு. நாமல்லாம் வளந்துட்டோம்னு நெனைக்கிறேன் கருப்புப் பதிவரே.

தமிழ்நதி said...

அன்பின் சுகுணா திவாகர்,

'முன்னாள் தோழமை' என்று உங்களை ஏன் விளிக்கவேண்டி ஏற்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். காரணங்களை அடுக்காமலே உங்களுக்கு அது புரியும். மேலும், நீங்கள் எனக்கு இட்ட பின்னூட்டத்திலே "கொலைகளை தியாகம் என்ற சொல்லின் வழியாக நியாயப்படுத்த உங்களுக்கு என்ன அரசியல் நேர்மை இருக்கிறது?" என்று கேட்டிருந்தீர்கள். அது என்னை வெகுவாகப் பாதித்தது. என்னுடைய அரசியல் நிலைப்பாடு எப்போதும் மாற்றமற்றது. புலிகளின் வீழ்ச்சியின் பிறகு தங்களது இருப்புக்காக நாக்குத் தடம் மாறி நிறையப் பேர் கதைத்துக்கொண்டிருக்கும்போது,எப்போதும் ஒரே நிலையில் இருந்துதான் நான் கதைத்துக்கொண்டிருக்கிறேன். புலிகள் என்ன தவறுகளை விட்டாலும், அவர்களது போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நியாயமும் அர்ப்பணிப்பும் இருந்ததை எவரும் மறுக்கமுடியாது. அதன் அடிப்படையில் நான் எப்போதும் அவர்களை வணங்குவேன். முழுமையானவர்களைத்தான் நாம் பின்தொடரவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்று இருக்கிறதா என்ன? யாரும் இங்கே அதிமானுடர்கள் அல்ல. எங்களிலிருந்து சென்ற புலிகளும் எங்களைப் போன்ற குறைநிறைகளை உடையவரே என்பதன் அடிப்படையில்தான் எனது அரசியல் நிலைப்பாடு இருந்துவருகிறது. அதில் நேர்மையின்மையை என்னால் எங்கும் காணமுடியவில்லை. அந்தச் சொல் என்னைக் குத்தியது. நான் திருப்பி உங்களைக் காயப்படுத்தினேன்.

உங்கள் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்துக்குப் பதிலளிக்கும்போது,

"இடையில் நீங்கள் வந்து 'நானும் ரவுடிதான்' என்று சண்டை போட்டீர்கள். இருந்தாலும் நாங்க போடற சண்டை அளவுக்குத் தூள் பறக்காது!"

என்பதில் இருக்கிற இளக்காரம் உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா? சரி. நானும் புரியவைக்க முயலவில்லை.

அதேபோலத்தான்,

"நான் அ.மார்க்ஸ் ரசிகன் அல்ல; குஷ்பு ரசிகன்"என்கிறீர்கள். அ.மார்க்ஸ்க்கும் குஷ்புவுக்கும் என்ன சம்பந்தம்? எதிரில் பேசிக்கொண்டிருப்பவரை முட்டாளாக அடிக்கிற கேலியல்லவா இது? நான் கொஞ்சம் நுட்பமான ஆள்தான். இவ்வளவு பழகியும் அது உங்களுக்குப் புரியாமல் இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. முதுகுக்குப் பின்னால் சிரிப்பது என்று இதைத்தான் சொல்வார்கள் சுகுணா.

உமா ஷக்தி உங்களுக்கும் அஜயன் பாலாவுக்கும் என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்பதை நான் இன்னமும் வாசிக்கவில்லை. 'அதை நீ கேட்க மாட்டியா?'என்று நீங்கள் கேட்டிருப்பது, 'அவனை முதலில் நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன்'என்ற தொனியில் இருக்கிறது. உங்கள் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பாக முடியும்.

தமிழ்நதி said...

பின்னூட்டத்தின் இரண்டாம் பகுதி

சுகுணா,

"புலிகள் கொலைகாரர்கள்; குற்றவாளிகள்; அவர்களது வீழ்ச்சி நியாயமானதே"என்று உங்கள் நண்பர்களில் பலரே பேசிக் கேட்டிருப்பீர்கள். இதில் யார் யார் என்று நான் பட்டியல் இடவேண்டுமா? என் காதுபடவே நிறையப்பேர் பேசியிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் மற்றும் எழுத்து வடிவங்களை நீங்கள் இணையத்திலேயே கண்டடையலாம்.

அடுத்த உங்களது கேள்விக்கான பதிலை நான் அற்புதனுக்கு அளித்திருக்கும் பதிலில் படியுங்கள். எது உண்மை எது பொய் என்று தெரியாத நிலையில் 'புலிகள் கொன்றார்கள்'என்று அழுத்திச் சொல்கிறவர்களுக்கு அவர்களின் தடத்திலேயே போய்ப் பதில்சொல்லவேண்டியிருக்கிறது. 'கொல்லவில்லை என்று உனக்கெப்படித் தெரியும்?'என்ற கேள்விக்கு எங்களால் பதில்சொல்ல முடியாது. உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்வரை காத்திருக்கவேண்டியிருக்கிறது.

சுகுணா,

நீங்கள் பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறீர்களோ என்று நான் சந்தேகிக்கிறேன். பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை வந்து பதில் சொல்வது என்பது உங்களைக் கிண்டலடிக்க எழுதப்பட்டதில்லை. நான் வேறு சில பதிவுகளில் பார்த்தது. அது 'சின்னப்புள்ளைத்தனமாக'இருந்தது. என்ன சந்தர்ப்பத்தில் அதை எழுதியிருக்கிறேன் என்று பார்த்தால் தெரியும். நீளமான எனது பதிலிறுத்தலை வலைப்பூ ஏற்கமறுத்தபோது இரண்டு பின்னூட்டங்களின் வழி உங்களுக்குப் பதிலிறுக்க வேண்டியேற்பட்டது. அந்நிலையிலேயே.... ப்ச்.. சலிப்பாக இருக்கிறது.

"உங்களுக்கும் எனக்கும் இடையில் நடந்த தனிப்பட்ட விவகாரத்தைப் பொதுவெளியில் எழுதுவது என்ன நட்பறம் சார்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை."

நீங்கள் இப்படியொரு குற்றச்சாட்டோடு வருவீர்கள் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் எழுதினேன். காரணம் அது தனிப்பட்ட வாழ்வு சார்ந்ததல்ல... பொதுவான விடயம் சார்ந்தது. 'உங்களுக்கு என்ன அரசியல் நேர்மை இருக்கிறது?'என்ற கேள்வியின் விளைவாக எழுந்த சீற்றம் அது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். 'நீ ஒரு சாதித்திமிர் பிடித்தவன்'என்று உங்களைப் பற்றி முன்பு இணையத்தில் எழுதப்பட்டபோது நீங்கள் எவ்வளவு கொதிப்படைந்தீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். ஏனென்றால், நீங்கள் ஒரு சாதி மறுப்பாளன். உங்களுக்கு சாதி எப்படியோ அப்படித்தான் எனக்கு நான் சார்ந்திருக்கும் அரசியல்.

ஒருவருடைய எழுத்தில் உயிர்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதை ஒற்றை ஆள் தீர்மானிக்க முடியாது சுகுணா. அது ஆளுக்காள் வேறுபடும். மேலும், விமர்சனம் என்பது எழுதும் நபர் மீதான பெருந்தன்மையற்ற விருப்பு வெறுப்பு சார்ந்தும் எழுவது அன்றேல் எழுதப்படுவது. 'இல்லவே இல்லை'என்று உங்களால் அடித்துச் சொல்லமுடியாது. எல்லா இடங்களிலும் பக்கச்சார்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

நீங்கள் என்மீது விமர்சனத்தை முன்வைக்கலாம். அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். தரக்குறைவாகவும் தனிப்பட்ட முறையிலும் அவ்விமர்சனம் அமையாதவரையில் நன்று.

சுகுணா,

எனக்கும் யாரோடும் நட்பை முறித்துக்கொள்ளப் பிடிக்காது. நான் பொதுவாக அமைதியான ஆள் என்பதை நெருக்கமாகப் பழகியவர் என்ற வகையில் நீங்கள் அறிவீர்கள். எனது சண்டை எல்லாம் 'வேலிக்குள் ஆடு புகுந்துவிட்டது'என்பதற்காக அல்ல. நான் சார்ந்திருக்கும் அரசியலைக் கொச்சைப்படுத்துகிற ஆட்களோடு மட்டுந்தான் நான் சண்டை போடுகிறேன். சர்ச்சைகள் எவ்வளவு மனவுளைச்சலைத் தருவன என்பதை நான் உங்களுக்குச் சொல்லாமலே புரியும்.

உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. முகம்பாராமல் நீங்கள் வைக்கிற தடாலடிக் கருத்துக்களில்தான் உடன்பாடில்லை. அதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கிற சொற்கள் மிகக் கூர்மையானவை. திமிரோடு சேர்த்து கொஞ்சம் நிதானமும் பழகுங்கள். இப்போது தனியாள் இல்லை. குட்டி சுகுணா வேறு வரவிருக்கிறாள். கிறார்.

இந்நாளும் தோழியான (கேவலமா இருக்கு)

தமிழ்

ஈழமுத்துக்குமரன் said...

தோழர் தமிழ்நதி,

சுகுனாவுக்கான உங்கள் பதில் மிக அருமை, அது சுகுனாவுக்கான பதில் மட்டுமல்ல.. மனிதநேய முகமூடியோடு புலியெதிப்பு அரசியலில் ஈடுபடும் அத்தனை பேருக்குமான பதில்.. மேலும் புலிகள் வீழ்ந்துவிட்டார்களென்று(?) உறுதியாகிவிட்ட நிலையில் எத்தனையோ இளக்காரப் பதிவுகள், புலி அரசியலிடமிருந்து விடுதலையடையும்படி கோரிக்கை விடும் பதிவுகளும், பதிவுலகத்தை நிறைத்த கதை நாம் அறியாதது ஒன்றுமல்ல.. இன்றும் கூட தேசிய தலைவரை கடற்கரையில் நிர்வாணமாய் ஓடவிட்டு அடித்து கொன்றார்கள், ஆண்குறியை அறுத்தெறிந்தார்கள் என்று புலனாய்வு செய்து, பல 'புரட்சிகர' பதிவர்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் எழுதுபவர்களின் அருகில் இருந்துகொண்டுதான் சுகுனா சொல்கிறார், புலிகளை கொல்லும்படி கூறியது யார், புலிகளின் சாவில் மகிழ்ந்தது யார் என்று? 'பிரபாகரன் ஜீவிக்கிறார்' என்று தீராநதியில் சோபா சக்தி எழுதிய கட்டுரையில் 'செத்தான்டா பிரபாகரன்' என்பது மாதிரியான் குதூகலமாதான் கட்டுரை முழுக்க தெரிந்தது, பிரபாகரன் உயிரோடிருப்பதாக நம்புபவர்களையும் அக்கட்டுரை கேலி செய்திருந்து. இருக்கட்டும், காலம் பதில் சொல்லும்.

//புலிகளின் வீழ்ச்சியின் பிறகு தங்களது இருப்புக்காக நாக்குத் தடம் மாறி நிறையப் பேர் கதைத்துக்கொண்டிருக்கும்போது,எப்போதும் ஒரே நிலையில் இருந்துதான் நான் கதைத்துக்கொண்டிருக்கிறேன். புலிகள் என்ன தவறுகளை விட்டாலும், அவர்களது போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நியாயமும் அர்ப்பணிப்பும் இருந்ததை எவரும் மறுக்கமுடியாது. அதன் அடிப்படையில் நான் எப்போதும் அவர்களை வணங்குவேன். முழுமையானவர்களைத்தான் நாம் பின்தொடரவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்று இருக்கிறதா என்ன? யாரும் இங்கே அதிமானுடர்கள் அல்ல. எங்களிலிருந்து சென்ற புலிகளும் எங்களைப் போன்ற குறைநிறைகளை உடையவரே என்பதன் அடிப்படையில்தான் எனது அரசியல் நிலைப்பாடு இருந்துவருகிறது.//

நேர்மையான பதில், விளக்கம்.

வாழ்த்துக்கள் தோழர் தமிழ்நதி.

தோழமையுடன்,
ஈழமுத்துக்குமரன்

-/பெயரிலி. said...

/புலிகள் என்ன தவறுகளை விட்டாலும், அவர்களது போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நியாயமும் அர்ப்பணிப்பும் இருந்ததை எவரும் மறுக்கமுடியாது. அதன் அடிப்படையில் நான் எப்போதும் அவர்களை வணங்குவேன்./

பயன்பாட்டுத்தேய்வினால், வணக்கம் என்பது அடிப்படையிலே பிடிப்பதில்லை. அதனால், இங்கே மதிக்கிறேன் என்று போட்டு உங்கள் மேற்படிப்பின்னூட்டத்தினை என் நிலையிலிருந்தும் வழிமொழிகிறேன்.

தமிழிலே மக்கள் இலக்கியம், அடக்குமுறைக்கெதிரான புரட்சி, சனங்களின் கலை & கதை, மாற்றுத்திரைப்படம் பேசுகின்றவர்கள் எல்லாம் தத்தம் போஸ்ரருக்கு விளம்பரம் தேடும் உன்மத்தர்கள் என்ற கருத்து உள்ளூறி நெடுநாள். அதனால், எக்கருத்தும் சொல்வதற்கில்லை.

அரயன் said...

நண்பர்களே சுகுணாதிவாகருக்கு குழந்தை பிறந்து விட்டது. ஒரு குட்டி கத்தார் பிறந்து விட்டார். அவரை வாழ்த்துங்கள்.

Sanjai Gandhi said...

பதிவையும் பின்னூட்டயும் படித்து தாறுமாறா கண்ணக் கட்டுது..

//முழுமையானவர்களைத்தான் நாம் பின்தொடரவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்று இருக்கிறதா என்ன? யாரும் இங்கே அதிமானுடர்கள் அல்ல. //

ரொம்ப சரி.

நேசமித்ரன் said...

இந்தப் பதிவில் இருக்கும் பின் நவீனத்துவம் , பகடி , அங்கதம் எல்லாம் கடந்து உள்ளிருக்கும் வலி அதை வெளிப் படுத்தியிருக்கும் விதம் வெகு அருமை

//"நிச்சயமாக இது பின்னவீனத்துவம்தான்" அப்படியா சொல்கிறீர்கள்...? அப்படியானால் நான் மேலும் பிரதிகளைக் கட்டமைக்கலாம் என்கிறீர்கள்... //

கலாம்.....

:)

கவிஞர் இசை said...

என்னைக் குறிவைத்து அவனால் வீசியெறியப்பட்ட புத்தகம் குறிதவறி, வைன் குவளையைத் தள்ளிக்கொண்டுபோய் சுவரோடு சாத்திவைத்து நொருக்கியது.

Anonymous said...

கதை நன்றாக இருந்தது. பிரபாகரனின் வெற்றிகளும் தோல்விகளும் முடிவு செய்யப்படும் காலம் இன்னும் வரவில்லை என்று நம்புகிறேன்.

பிரபாகரனின் இருப்பு அல்லது மறைவு இங்கு பெரும் பாதிப்பை இனிமேல் ஏற்படுத்திவிடமுடியாது. ஏனென்றால் ஆதிக்க வர்க்கங்கள் இம்மாதிரி இருப்பைப் பற்றிய குழப்ப உணர்வுகளை மக்களிடம் வளரவிடுவதன் மூலம் இறந்து போயிருந்தால் ஏற்படும் பெரிய அளவிலான எழுச்சியைத் தடுத்து விட்டனர். பிரபாகரன் மே 18 ல் இறந்திருந்தால் இன்னும் புதிதாய் 10000 பேர் புதிதாய்ப் போராளிகளாயிருப்பர். இப்போதோ எல்லாரும் இடிந்துபோய்விட்டனர்; புலிகள் உட்பட.

என் நண்பன் சொன்னான். இப்போதைய அரசுகள் விடுதலைப் போராட்டங்களை எல்லா தளங்களிலும் அழித்து நசுக்கிக் கொல்ல அவர்களின் அடக்குமுறை வரலாறு அவர்களுக்கு உதவியிருக்கிறது. இந்தோனேசியா, சீனா, போஸ்னியா .. போன்ற இடங்களின் "படிப்பினைகள்' இப்போது இலங்கையில் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தடயம் இல்லாமல் எரிப்பது முதல், ஊடகங்களில் இரட்டைநாக்குப் பேச்சுக்கள் வரை எல்லாம் கனகச்சிதம்.

விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகள், போராடுபவர்களுக்கு என்ன பாடம் கற்றுத்தந்திருக்கிறது ? எனக்குப் புரியவில்லை.