வழிகள் தொலைந்துபோவதில்லை. அவை அங்கேதான் இருக்கின்றன. மனிதர்கள்தான் தொலைந்துபோகிறார்கள். அதுபோலவே வார்த்தைகளும் எடுத்துக் கோர்க்கப்படக் காத்திருக்கின்றன. நமக்குத்தான் அவற்றைச் சரிவரத் தேர்ந்தெடுக்கவும் கையாளவும் தெரிவதில்லை. மனஅவசம் புழுங்கும் இந்நாளில், தலைவர் பிரபாகரனைப் பற்றி ஏதாவது கதைக்கவேண்டுமென நினைக்கிறேன். உள்ளுக்குள் துயரப்பந்து ஒன்று உருண்டுகொண்டேயிருக்கிறது. ஏற்கவும் மறுக்கவும் முடியாத செய்தியொன்றைக் காவியபடி மனம் அந்தரித்து அலைகிறது. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து இறக்கிவைத்துவிட நினைக்கிறேன். கண்ணீரைச் சொற்களுக்குக் கடத்துவது அசாத்தியமாக இருக்கிறது. தொடர்ச்சியான வெறுமையின் அதலபாதாளத்துள் வார்த்தைகள் சரிந்துவிழுந்துவிட்டாற்போலிருக்கிறது.
அவர் வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் பேசப்படத் தகுதிவாய்ந்த மனிதரே। எனினும், இன்று அவருடைய பிறந்தநாள் என்பதனால் நான் இன்னும் அதிகமாக உந்தப்பட்டிருக்கலாம். இப்படியொன்றை எழுதுவதன் வழியாக, நான் அவரை மறந்துபோகவில்லை என்று எனக்கே நிரூபித்து எனது குற்றவுணர்விலிருந்து தப்பிக்கப் பார்க்கிறேனோ என்றுகூட எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. உண்மை யாதெனில், இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற எல்லோரைக் காட்டிலும் அவரை, நானும் என் போன்றவர்களும் நேசிக்கிறோம் என்பதுதான். ஆனால், அந்த நேசம் என் உயிரைக் காட்டிலும் சற்று குறைந்ததாக இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், மரங்களைக் காற்று மலர்த்திக்கொண்டிருக்கும் ஆட்களற்ற வெளியொன்றில் மண்ணிலிருந்து நிமிர்ந்த (இப்போது சிதைக்கப்பட்டிருக்கும்) கல்லறைகளின் அடியில் இப்போது நான் உறங்கிக்கொண்டிருந்திருக்க மாட்டேனா?
அழிவெல்லாம் அறியப்பட்டவையே. எழுதியும் பேசியும் விவாதித்தும் தேய்ந்தவையே. தமிழர்களின் வாழ்விடங்களைப் போலவே நம்பிக்கைகள் மண்ணோடு மண்ணாகச் சரிந்துவிட்டன. முட்கம்பி வேலிக்குள் விடுதலை முடக்கப்பட்டுவிட்டது. பெரும்பான்மை அதிகாரங்களிடம் சிறுபான்மைச் சமூகம் பிச்சையெடுக்கத் தள்ளப்பட்டுவிட்டது. வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் தொங்கிக்கொண்டிருக்கிறது ஏதிலிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை. எல்லாம் தெரிந்தும், ஈழத்தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கின்றனர் சில சூதாடிகள். தலைவரின் மரணச்செய்தி உறுதிப்படுத்தப்படுவதன் முன்னதாகவே ‘பிரபாகரனின் வாழ்வும் மரணமும்’என்று புத்தகம் வெளியிட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது ஒரு பதிப்பகம். ஈழத்தமிழர்களின் கண்ணீரையும் குருதியையும் தங்கள் தங்கள் வீட்டுச் சோற்றில் இரசமாக்கி ஊற்றிவிடுவதில் அத்தனை அவசரம்! (டிசம்பர் கடைசியில் ஆரம்பமாகவிருக்கும் புத்தகத் திருவிழாவில் இன்னும் எத்தனை பேர் அவரது ‘மரணத்தை’க் கூவிக் கூவி விற்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்துவிடும்) ‘இதோ பிரபாகரனின் இரத்தம்… இதை வாங்கி அருந்துங்கள்; இதோ பிரபாகரனின் சரீரம் இதை வாங்கி உண்ணுங்கள்’என்ற அழைப்புகளுக்குக் காதைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ‘மௌனத்தின் வலி’என்ற பெயரில் மாபெரும் கூத்தொன்று நடந்தேறியதாக இணையச்சந்தியில் ஒரு விவகாரம் இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கொன்றுவிட்டு அழும் ‘கொற்றவன்’களுக்கும், தன் பிழை மறைக்க, தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தித் திசைதிருப்பி வார்த்தையாடும் தில்லாலங்கடி வேலைகளுக்கும் குறைவில்லை.
மனச்சாட்சி என்றொரு சொல் இருப்பது மறந்துபோய்க்கொண்டிருக்கிறது. அறம் என்பது அழிந்துகொண்டிருக்கிறது. தார்மீகம் என்பதெல்லாம் அகராதியோடு நின்றுவிட்டது. ஒரு பொய் நெஞ்சினுள்ளிருந்து அன்றேல் மூளையிலிருந்து புறப்பட்டு தொண்டைக்குழி வழியாகப் பயணிக்கும்போதே சுடவேண்டும். அப்படிப் பார்த்தால், குருதிச் சோறு தின்னும் அரசியல்வாதிகளும், சொந்த நலன்களுக்காக இனத்தைக் காட்டி-கூட்டிக் கொடுக்கிறவர்களும், புலிகளின் கல்லறைகள் மீது நின்றபடி, ‘புலிகளால்தான் இந்தக் கதி’எனப் புலம்பும்-புதிதாகப் பரிநிர்வாணம் அடைந்த சில ஈழத்து மகாத்துமாக்களும் எப்போதோ எரிந்து கரிந்து மண்ணோடு மண்ணாகியிருக்க வேண்டும்.
நான் அவரைப் பற்றித்தான் கதைக்க நினைக்கிறேன்.ஆனால், கோபம் ஏனையவர்களைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறது. எழுதி எழுதித் தேய்ந்த வார்த்தைகளால்தான் அவரைப் பற்றியும் சொல்லவேண்டியிருக்கிறது। “அவர் மகோன்னதர். மாமனிதர். மகாவீரன். சமரசங்களுக்கு விலைபோகாதவர். களத்தில் வீழ்ந்துபோனாலும் எங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவர்.”என்பவை சாதாரண வார்த்தைகள்தாம். ஆனால், அதனுள்ளிருக்கும் நெகிழ்ச்சியும் துயரமும் எழுத்தில் கொணர்ந்துவிட முடியாத அளவு அசாதாரணமானது.
மரணம் என்பது மறக்கப்படக்கூடியதே. துயரார்ந்த ஞாபகங்களிலிருந்து கண்ணீரைப் பிழிவதே. ஆனால், தேசியத்தலைவர் ‘இல்லாமல்போனதை’ நினைக்குந்தோறும் கண்ணீரைவிட அரசதிகாரங்களின் துரோகமே நினைவில் முந்தியெழுகிறது. அதிலிருந்து பிறந்த கோபத்தைக் காலம் ஒன்றும் செய்வதற்கில்லை. வரலாற்றை மாற்றி எழுதும் பொய்மை வாசகங்களினாலோ, கிளிசரின் கண்ணீரினாலோ, மினுங்கும் திரைகளை மக்களின் கண்களின் முன்னால் இறக்குவதனாலோ வரலாற்றின் வரிகளை அழித்து எழுதிவிடமுடியாது. அது காலக் கல்வெட்டு.
நத்திப் பிழைக்கும் நாய்களுக்கு வேண்டுமானால் நாளுக்கொரு தலைவர் மாறலாம். சலுகைகளுக்காக சாக்கடைகளை ‘சரித்திரமே’ என்று கொண்டாடலாம். வாய்ப்புகளுக்காக வஞ்சகர்களை ‘வரலாறே’என்று வாழ்த்துப் பாடலாம். பிழைப்புக்காக பிணந்தின்னிப் பேய்களை ‘பெருமகனே’என்று போற்றலாம். தமிழர்களாகிய எங்களளவில் ஒரே தலைவர்தான். அவர் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே.
எங்கள் கண்காண நீங்கள் ‘இல்லாமல்’போனாலும், இருந்துகொண்டுதானிருக்கிறீர்கள் என்றென்றைக்குமாக.
28 comments:
நல்ல வரிகள்
தங்கள் கருத்து நன்றாக உள்ளது
வாசித்தேன்...
வெறும் மௌனம் மட்டுமே மனதில் அடைத்து நிற்கிறது... பகிர என்னிடம் ஒன்றுமில்லை
i miss him as much as i miss my mother...
thamizhan
நானும் ஆறு மாதமாக நம்பிக்கை இழந்து நரகத்தின் வாயிலில் நிற்பது போல் உணர்ந்தேன் .ஆனாலும் கடந்த சில நாட்களாக இளைய சமுதாயத்தில் பலரோடும் பேசும்போது மனத்தில் ஒரு நம்பிக்கை ஒளி சுடரத் தொடங்கியுள்ளது .நாங்கள் வீழ்ந்திருக்கலாம் ,ஆனால் திரும்பவும் எழுவோம் , எந்த ஜனநாயகத்தின் பேரை சொல்லி எங்களை அடக்கினார்களோ அந்த ஜனநாயகத்தின் துணை கொண்டு மக்கள் போராட்டம் இன்னொரு வடிவத்தில் ஆரம்பமாகும்.
அடக்குமுறை காரணமாக, உயிர் அச்சம் காரணமாக ஈழத்தில் உள்ள தமிழர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கி மௌனம் சாதிக்கலாம் ,ஆனால் ஈழத்துக்கு வெளியே புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஈழமக்களின் மனச்சாட்சிகளாக அவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
வாய்களை கட்டி போடலாம் .ஊடகங்களை அடக்கலாம். ஆனால் எந்த தடை சட்டம் போட்டும் மக்களின் இதயத்தில் குடி கொண்டிருப்பவரை அகற்ற முடியாது.
'எங்கள் தாயகம் வரும்வரை தவித்திடும் தமிழரின் தாகங்கள் தீராது '
தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் .
--வானதி
கண்ணீருடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!
கத்தி கூச்சல் போட்டு சொல்லத்தோன்றுகிற வார்த்தைகளை வெறும் மௌனம் மொழிபெயர்த்துவிட்டுப்போகிறது :(
பதிவிட்டதற்கு நன்றி.
(நேற்று இரவு 12 மணி அளவில் ராயப்பேட்டையில் தலைவரின் பிறந்தநாளை அப்பகுதியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக சற்று நேரத்துக்கு முன் தான் அக்கா பெண் சொல்லி கேட்டேன்)
எங்கள் கண்காண நீங்கள் ‘இல்லாமல்’போனாலும், இருந்துகொண்டுதானிருக்கிறீர்கள் என்றென்றைக்குமாக.
சத்தியமான வார்த்தைகள் தமிழ்.
இதை வாசித்து முடிக்கும்போது எண்ணற்ற உணர்ச்சிகள் ...
/உள்ளுக்குள் துயரப்பந்து ஒன்று உருண்டுகொண்டேயிருக்கிறது/
அதேதான் தமிழ்நதி! :((
வழக்கம்போல அருமையான இடுகை! நானும் வழக்கம் போல பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டேன்..என் ஆயாவுக்கு வாசிக்கக் கொடுக்க!
மாவீரர் வாரம் தொடர்பாகவும், இன்றைய குழப்ப அரசியல் நிலை தொடர்பாகவும் அந்த குட்டையில் மீன் பிடிப்பவர்கள் பற்றியும் தமிழார்வமுள்ளவர்கள் பலர் மனதிலும் உள்ளவற்றை மிகச் சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் சுட்டுகின்றது இந்த இடுகை.
சமீபத்தில் அலுவல் நிமித்தமாய் பழைய செய்தித்தாள்களைப் புரட்ட வேண்டியிருந்தது. மே 18 தேதி மட்டும் மனதைக் கனக்கச் செய்தது. சிறுவயதிலிருந்தே பிரபாகரன் மீது அபிமானம் உண்டு, பின்னாளில் விமர்சனங்கள் உண்டு. என்றபோதும் பிரபாகரன் இறந்ததாய்ச் சொல்லப்பட்ட துயரத்தின் வலி சுமந்த நாட்களை மறக்கமுடியவில்லை. மாவீரர்களில் கடைசியாய்ச் செத்துப்போன போராளி பிரபாகரன். ஆனால் அவர் மாவீரன் என்று நிருபிக்க ஈழத்தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகம்தான். எவ்வாறாயினும் இன்னமும் பெரும்பாலான தமிழர்களுக்கு வீரத்திற்கும் சுயமரியாதைக்குமான குறியீடாக பிரபாகரன் திகழ்கிறார். பிரபாகரனுக்கு வீரவணக்கங்கள்!
வணக்கம் தமிழ்நதி,
விடுதலை நாயகன் பிரபாகரன்,
இந்த நூற்றாண்டின் மாபெரும் போராளி..
உங்களின் வீரியமான எழுத்துக்கள்அதை நினைவுப் படுத்துவதாகவேஅமைகிறது
அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்
அந்த ஆரியன் இறங்கி வந்தான்..சுந்தரரின் தமிழ் கேட்க..
இந்த திராவிடன் இறங்கி வருவான்...நதியின் தமிழ் கேட்க..!
காத்திருப்போம்..காலம் கனிய..!
தோழி,
புரிந்து கொள்ள முடிகிறது.
தலைவர் வருவார்...
தமிழ் மக்களின் அவலம் விரைவில் தீர்க்கப்படும்
நாளை ஆவலோடு எதிர்பார்த்து
அன்புடன்,
மறத்தமிழன்.
எங்கிருந்தாவது தலைவரின் குரல் தாங்கிய ஆடியோ கேசட் வந்துவிடாதா என்று ஏக்கம் இரண்டுநாட்களாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
//தமிழர்களாகிய எங்களளவில் ஒரே தலைவர்தான். அவர் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே.
எங்கள் கண்காண நீங்கள் ‘இல்லாமல்’போனாலும், இருந்துகொண்டுதானிருக்கிறீர்கள் என்றென்றைக்குமாக.//
இந்த வார்த்தைகளை திரும்ப் சொல்வதன்றி எங்கள் உணர்களை அழுத்தமாக வேறு வழியில் வெளியிட்டுவிட முடியாது.
ஆனால் எவ்வளவோ பேசவேண்டியிருக்கிறது, இடதுசாரிகள், வலதுசாரிகள், பின்நவீனத்துவவாதிகள், என்று எத்தனையோ போர்வையில் ஒளிந்து கொண்டு எம் தலைவனின் வீழ்ச்சியை(?) கொண்டாடிய நாய்களுடன் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதற்கான காலம் வரும் போது நிச்சயம் பேசுவோம், இப்போது எல்லா நிகழ்வுகளையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்வோம். விமர்சனமென்ற பெயரில் இந்த நாய்கள் செய்யும் விசமத்தனங்களையெல்லாம் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்வோம், காலம் வரும்போது முகத்திலறைந்து பதில் சொல்வோம்.
//சமீபத்தில் அலுவல் நிமித்தமாய் பழைய செய்தித்தாள்களைப் புரட்ட வேண்டியிருந்தது. மே 18 தேதி மட்டும் மனதைக் கனக்கச் செய்தது. சிறுவயதிலிருந்தே பிரபாகரன் மீது அபிமானம் உண்டு, பின்னாளில் விமர்சனங்கள் உண்டு. என்றபோதும் பிரபாகரன் இறந்ததாய்ச் சொல்லப்பட்ட துயரத்தின் வலி சுமந்த நாட்களை மறக்கமுடியவில்லை. மாவீரர்களில் கடைசியாய்ச் செத்துப்போன போராளி பிரபாகரன். ஆனால் அவர் மாவீரன் என்று நிருபிக்க ஈழத்தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகம்தான். எவ்வாறாயினும் இன்னமும் பெரும்பாலான தமிழர்களுக்கு வீரத்திற்கும் சுயமரியாதைக்குமான குறியீடாக பிரபாகரன் திகழ்கிறார். பிரபாகரனுக்கு வீரவணக்கங்கள்!//
நண்பர்களே, திரு. சுகுணாதிவாகர் அவர்களின் மிகச் சாதுர்யமான இந்த பின்னூட்டத்தை பாருங்கள், இதைவிட சாதுர்யமாக பேசும் ம.க.இ.க போன்ற போன்ற பலர் பல்வேறு முனைகளில் தமிழகத்தில் இயங்கி வருகிறார்கள், இவர்களுடைய எழுத்துக்களையெல்லாம், கவனமாக படியுங்கள்... இது போல் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள், எனக்கு அம்பேத்கர் சொன்னது நினைவுக்கு வருகிறது, "மிகவும் நயவஞ்சகமான எதிரியை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்கள், உதட்டில் சிரிப்பையும், கக்கத்தில் கத்தியையும் மறைத்து வைத்திருங்கள்."
தோழமையுடன்
ஈழமுத்துக்குமரன்
First Of all, Sorry to post the comments in tamil But any how i need to post.
I am siva from Chennai, one of the millions of Impotent tamils in tamilnadu who is failed to react in anymanner to the genocide of our fellow beings, But now i am very much deprssed to hear, see and understand the things happenings in india.
First and foremost reason for todays position is Srilankan Govenment and the second one is Indian Govenment.
My wish is we don't need any peace or Agreement from any country. We need to raise again and clain our nation in the way Our one and only leader of tamil, the Great ever living Prabhakaran showned to us.
Vaazhga Thamizh Ezham. vaazhga Em thalaivar
Meaningful golden words u have written ! I am a simple tamilian living in a village in tamilnadu who can able to show only feelings about eelam ! By god grace if I become wealth I will make my all sarrows into happy roses for eelam!
MANITHARKALUKKU
ALIVU NIRANTHARAM
THALAIVA UNAKKU
ANDRUM ALIVILLAI
NILAIYANAVAN NEE
KANNERUDAN
JOTHI
NIRANTHARAMANAVANE THALAIVA
KANNERUDAN
JOTHI
கீற்று இணையத்தில் நிலாந்தனின் கட்டுரை குறித்தும் என் வலைப்பக்கத்தில் ஈழம் குறித்து உள்ள கட்டுரை குறித்தும் உங்கள் எண்ணமறிய விரும்புகிறேன்.
தோழமைமிக்க தமிழ்நதி..
நேர்மையும் சுயவிமர்சனமற்ற உலகில் எப்போதேனும் தென்படுகிறது இம்மாதிரியான பதிவுகள்.
ஆம். ஈழவிடுதலை குறித்தே பேசுவோம் என்றால் அதில் தனது தவறுகளையும், தனது மெளனத்தையும், தனது துரோகத்தையும், தனது சுயநலப்பார்வையையும், எவ்வித முகாமின்றி ஆரவார விவாதவிரும்பித்தனத்தையும்... சூழல் எந்தளவு கனிந்தும், விகாரமாகியும் இருப்பதை பொருட்படுத்தாது தனது நிலைப்பாட்டினை நியாயப்படுத்தி வருகிற கேவலத்தை நாம் கண்முன்னே கண்டுவருகிறோம். இது அறிவுஜீவிகளிலிருந்து அரசாளுவோர்கள் வரை மாற்றமில்லை.
சிலர் தனது மெளனத்தையே ஈழமக்களுக்கான செயலாக 'கருதி' மற்றவரையும் அவ்விதமே இருக்கச்சொல்லும் அதிமேதாவி கருத்தாக்கங்களும் நடந்துவருவதுமாக இருக்கும் சூழலில் எழுதப்பட்டிருக்கும் இப்பதிவு கவனிக்கத்தக்கது.
//த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற எல்லோரைக் காட்டிலும் அவரை, நானும் என் போன்றவர்களும் நேசிக்கிறோம் என்பதுதான். ஆனால், அந்த நேசம் என் உயிரைக் காட்டிலும் சற்று குறைந்ததாக இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், மரங்களைக் காற்று மலர்த்திக்கொண்டிருக்கும் ஆட்களற்ற வெளியொன்றில் மண்ணிலிருந்து நிமிர்ந்த (இப்போது சிதைக்கப்பட்டிருக்கும்) கல்லறைகளின் அடியில் இப்போது நான் உறங்கிக்கொண்டிருந்திருக்க மாட்டேனா? //
தன் நிலைபாட்டினை எவ்விதத்தில் நியாயப்படுத்தவோ, அந்நிலைப்பாட்டிற்கீடாக இதுவென எதையும் சுட்டாமல் தன் நிலைப்பாட்டின் மீதான தன்னின் அழுத்தமில்லாமல் அதே பொழுதில் தன்னின் நிழலோடு பதிவாகியுள்ளது.
இதை வேறு சொற்களில் எழுத நினைத்தேன் இப்போது வேறு சொற்களில் எழுதுகிறேன் நான் நினைத்ததை முழுதாக தந்ததா எனத்தெரியவில்லை.
விஷ்ணுபுரம் சரவணன்
எதை எடுத்தாலும் எனக்குப் பாரதிதான் வருவான்.
...நல்லதோர் வீணை செய்தே....!
மீதியை நான் சொல்ல, நா வெழவில்லையே..!
///தமிழர்களாகிய எங்களளவில் ஒரே தலைவர்தான். அவர் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே.///
சத்தியமான வார்த்தைகள். நல்ல பதிவு.
"எங்கள் தலைவன் பிரபாகரன்
அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்"
ஆம் தமிழ்...நீங்கள் சொல்கின்ற வார்த்தை ஒவ்வொன்றும் ஆணி அடித்தது போலுள்ளது, உன் மொழியின் கூர்மை விஷயத்தின் கனத்தை பன்மடங்காக்கி மனத்தை வலிக்கச் செய்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது தமிழ் அவரின் 56ம் வயது பிறந்த நாளில் அவரைக் காண்போம் இதே புன்னகை ததும்பும் அழகான புகைப்படம் போல நிஜத்தில்.. பகிர்விற்கு நன்றி தமிழ்..
தமிழ்நதி,வணக்கம்.தமிழின தேசிய தலைவன் பிரபாகரனுக்கு " வீர வணக்கத்தை "இங்கே பதிவு செய்வதில் ,நானும்,என் குடும்பத்தாரும் பெருமை கொள்கிறோம்..
அமெரிக்கா இலங்கைக்கு 135 மில்லியன் டாலர்கள் நிவாரணம் தரப்போவதாக நியூஸ் படித்தேன். அரசுகளும் பேரரசுகளும் அவற்றின் இதயத்துடிப்புகளான MNCக்களும் தங்கள் கீழுள்ள மக்களை ஆள்வதற்கு தாங்கள் விரும்பியபடி விடுதலைப் போராட்டங்களை 'தீவிரவாதம்' அல்லது 'விடுதலைக் குரல்' என அடையாளம் செய்துகொள்ளும் வல்லமையை அடைந்து விட்டன. பிரபாகரன் வெறியராகவும், இஸ்ரேலியபடை நாயகர்களாகவும் பிரதிபலிப்பதன் விந்தை இதுதான். விஜய்யின் வேட்டைக்காரனை பார்க்க கியூவில் கூடும் 'மரத்' தமிழர்கள் பிரபாகரனை மறந்துதான் போவார்கள்.
ராம் என்னும் தளபதி அளித்திருக்கும் மாவீரர் செய்தியில் பிரபாகரன் இறந்ததாக ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறாரே...
நம்பிக்கைகள் பொய்யானவையா?
இந்த இணைப்பைப் பார்த்தீர்களா?
அனானி நண்பருக்கு,
வாசித்தேன். தலைவர் இல்லை என்பதை நம்பமறுக்கிறது மனம். அவர் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறார் என தனிப்பட்ட முறையில் நான் இன்னமும் நம்புகிறேன். சில விடயங்களை ஏன் நம்புகிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரியும். ஆனால், அதை விளக்கிச் சொல்லமுடிவதில்லை.
Post a Comment