இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன். சில நிமிடங்கள் தயங்கியபிறகு, குறிப்புப் புத்தகத்தைப் பயணப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியில் வைத்தேன். மொஹம்மூத் தார்வீஷ், அஸ்வகோஸ், சேரன் முதலானோரின் கவிதைத் தொகுப்புகளை எடுத்துச் செல்வதும் உகந்ததாகத் தோன்றவில்லை. கசப்போடு அவற்றைத் தூக்கிப் போட்டேன். மேற்குறித்த வேலைகளின் பின், இலங்கைக்குப் பயணப்பட ஓரளவு தகுதியுள்ளவளாக என்னை ஆக்கிக்கொண்டுவிட்டதாக உணர்ந்தேன். இலங்கை அரசினால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊடக சுதந்திரத்தில் அவ்வளவு நம்பிக்கை!
விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தபோது, என்றுமில்லாத பயமும் துயரமும் மனதைத் தின்னத்தொடங்கின. மூண்டெரியும் தீயிலிருந்து இலட்சக்கணக்கான குரல்கள் வெடித்துக் கிளம்பி வானத்தை நோக்கிப் பிரலாபிப்பதான கால மயக்கம் சூழ்ந்தது. ‘எங்களது… எங்களதும்…’என்ற உரிமை தளர்ந்து, இராணுவ ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் அந்நிய நாடொன்றினுள் பிரவேசிப்பதான கலக்கத்தோடு உள்நுழைந்தேன். விடுதலைப் புலிகள் அகற்றப்பட்ட (பேரினவாதத்தின் வார்த்தைகளின்படி) நிலத்தில் பிரவேசிக்கிறோம் என்பதானது, நிராதரவான தனிமையை மனதளவில் தோற்றுவித்திருந்தது. அகதி முகாம்களுள் அடைபட்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களது- பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் காணக்கிடைத்த- புகைப்படங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. முள்வேலிக்கு அப்பால், துயரம்-ஏக்கம்-கோபம்-பயத்தில் இறுகிய விழிகளுடன் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், இழப்புகளில் தரித்துவிட்டாற்போன்ற விழிகளுடன் முதியவர்கள் அக்கணத்தில் நினைவில் மின்னி மறைந்தார்கள். விமான நிலையத்தினுள் அடையாள அட்டைகளுடனும், சந்தேகக் கண்களுடனும் தங்களை இனங்காட்டிக்கொள்ளாமலே - இனங்காட்டிக் கொடுக்க அலைந்த சிலரைக் காணமுடிந்தது.
ஜேர்மனியில் எங்களோடு விமானமேறிய சுற்றுலாப் பயணிகளில் அநேகரை குடிவரவு-குடியகல்வு வரிசையில் காணவில்லை. இலங்கையின் ‘மயான அமைதி’யை அவர்கள் நம்பத் தயாராகவில்லை. இலங்கை விமான நிலையம் இடைமாறு தளமாக இயங்குவதைக் காணமுடிந்தது.
‘பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த’ மகோன்னதர்-மகாவீரர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ‘சல்யூட்’அடிக்கும் பென்னாம்பெரிய ‘கட்-அவுட்’கள் எங்களை வரவேற்க, நகரை நோக்கி விரைந்தோம். இராணுவப் படை-புடை சூழ அவர் பெருமிதம் வழிய நின்றிருந்தார். கோத்தபாய, பசில் சகோதரர்களும் அழிவில் பங்கெடுத்த மகிழ்வில் பேருருக்களாக நின்றிருந்தனர். சென்ற வழிகளில் எங்களை ‘புலிகளல்லாத தமிழர்’என்று, கடவுச்சீட்டைக் காட்டி நிரூபிக்க வேண்டியிருந்தது. நான் என்ன வேலை செய்கிறேன் என்பதில், எனது கணவர் எங்கிருக்கிறார் என்பதில், நான் எங்கே தங்கப் போகிறேன் என்பதில், எனக்கு எத்தனை குழந்தைகள் என்பதில் இராணுவத்தினர் அக்கறையோடிருந்தார்கள். “சிங்களம் தெரியுமா?”என்ற கேள்விக்கு, “தெரியும்” பதில் அவர்களுக்கு மிகத் திருப்திகரமாக இருந்திருக்கக்கூடும். “தெரியாது”என்ற பதிலை உள்ளடங்கிய மகிழ்ச்சியோடு சொன்னேன். ஆங்கிலம், அவர்களை அறியாமையின் பின்வாங்கலுள் தள்ளுவதை உணரமுடிந்தது. பிரயோகிக்கக்கூடாத இடத்தில் மந்திரத்தைப் பிரயோகித்து மாண்டவர்களைப்போல, கணப் பெருமைக்காகப் ‘படம் காட்டும்’ கடவுச்சீட்டுக்களே மரணத்திற்கான அழைப்பிதழாகவும் ஆகிவிடுவதுமுண்டு என்பதனால், எல்லா இடங்களிலும் கடவுச்சீட்டைப் பிரயோகிக்கவில்லை. இலங்கைக்குப் போகும்போது பழைய, ஓரம் நைந்துபோன தேசிய அடையாள அட்டைகளைத் தேடி எடுத்துவைத்துக்கொள்வது மிக நன்று। கொழும்பு போன்ற இடங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் அவர்களது கண்களில் கொஞ்சூண்டு போலி மரியாதையைக் கொணர, ‘ஒழி’என்ற பாவனையோடு அனுப்பிவைக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் வைத்திருந்தோரே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அசாத்திய சாத்தியங்கள் இலங்கையில் மிகச்சாதாரணம்.
கொழும்பு மாநகரத்தில், பெரும்பாலான தமிழர்கள் வாழும் பகுதியான வெள்ளவத்தையில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் எந்நேரமும் காவலுக்கு இருக்கிறார்கள். எப்போதாவது இராணுவத்தினரையும் காணமுடிகிறது. அவர்களது கரும்பச்சை நிறச் சீருடையை, ஆட்கொல்லித் துப்பாக்கியை, கனத்த காலணிகளை, தொப்பிகளுக்கு அடியில் அச்சுறுத்தும் கண்களைக் கடந்து செல்கையில் ஒரு இருட்டுப் பந்து வயிற்றுக்குள் உருள்வதை உணரமுடிகிறது. அது காரணமற்ற அச்சம் போல மேலுக்குத் தோன்றினாலும், வன்னியின் குரூர நிகழ்வுகளுக்குப் பிறகு அதை காரணத்தோடு கூடிய அச்சமாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. வீதியில் செல்வோரைத் தடுத்து நிறுத்தி நெற்றிப்பொட்டை அன்றேல் இதயத்தைச் சிதறடிக்கக்கூடிய சர்வவல்லமை பொருந்திய எமதூதர்களாகவே அவர்கள் தோற்றமளித்தார்கள். அந்நிலத்தில் கொல்வதற்கான-கொன்றதற்கான காரணங்கள் வேண்டியிருக்கவில்லை. சிறு சலனத்திற்கும் விழித்துக்கொள்ளக்கூடிய மரணம், துப்பாக்கிகளின் நிழலில் அங்கே தூங்கிக்கொண்டிருக்கிறது.
இராணுவத்தினரைத் தவிர்த்து சாதாரண சிங்கள சனங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த நெகிழ்ச்சியை எப்படி விளக்குவதெனத் தெரியவில்லை. பல நாடுகளில் பல இனங்களுக்கிடையில் பல மொழி பேசும் மக்களுக்கிடையில் வாழ்ந்து நாடு திரும்புமொருவராலேயே அந்த உணர்வை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். நான் உண்மையில் அவர்களை எனது சகோதரர்களாகவே உணர்ந்தேன். அவர்களை நோக்கிப் புன்னகைக்கவும் உரையாடவும் விரும்பினேன். ‘எங்களுக்காக உங்கள் குரல்கள் ஏன் உயரவில்லை?’ என்ற கேள்வி உதடுகளில் துருத்திக்கொண்டிருந்தது. அதே சமயம், அவர்களின் கண்களில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாகத் தோன்றுகிறோமோ என்ற ஐயமும் மறுவளமாக எழவே செய்தது. ஒரு கவளம் சோற்றுக்குக் கையேந்தும் ஒரு இனமாக மாற்றப்பட்டுவிட்ட அவமானம் உள்ளுக்குள் சுட்டுக்கொண்டிருக்கவே இருக்கிறது.
கனடா, இலண்டன், இந்தியா இங்கெல்லாம் ஈழத்திலிருந்து பெயர்ந்து வந்த உறவுகள், நண்பர்கள் வாழ்ந்தாலும், அவர்களோடு பேசிப் பழகிக்கொண்டிருந்தாலும்- பிறந்த மண்ணின் வீதிகளில் நானறியாத எனது தேசத்து மக்கள் ஈழத் தமிழ் பேசிக் கடந்து செல்கையில் அதைக் கேட்கப் பேரானந்தமாக இருந்தது. சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் நெகிழ்வது எனக்கே பிறழ்நடத்தையாகத் தோன்றினும், அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ள முடியவில்லை. இறுகினாற்போலும் துயருற்ற முகத்தோடு கடந்துசெல்வோருள் என்னென்ன கதைகள் புதைந்திருக்கக்கூடுமோ என அஞ்சினேன். அப்படிச் செல்லும் பெண்களின்-ஆண்களின் மகனோ மகளோ கணவனோ மனைவியோஅன்றேல் அனைவருமே போரில் இறந்திருக்கக்கூடுமென நானாகவே நினைத்துக்கொண்டேன்.
கொழும்பில் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடுகிறது। பெரும்பாலான கடைகள் எட்டு மணிக்கே அடைக்கப்பட்டுவிடுகின்றன. சில கடைகள் நிரந்தரமாகவே பூட்டப்பட்டு, நாட்டின் பொருளாதார நிலையைப் பறையறிவித்துக் கொண்டிருந்தன. இல்லாமற் போனவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மீது அரசாங்கத்துக்கு இருக்கின்ற அச்சமோ அளவிடற்கரியது.
எங்கோ தொலைவிலிருந்தபடி அழைத்துக்கொண்டிருந்த வீட்டின் குரலை மறுபடி மறுபடி மறுதலிக்க வேண்டியவளானேன்.வன்னியிலிருந்து தப்பி- அதிசயமாக வதைமுகாமிலிருந்து மீண்ட உறவினர்கள் வீட்டுக்கு வந்து போவதும், வாழைகள் குலைதள்ளியதும், தென்னைகள் காய்த்துத் தொங்குவதும், மல்லிகை பூத்துச் சொரிவதும், பூனை மூன்றாம் தடவை கருவுற்றிருப்பதும் எல்லாம் எல்லாம் தொலைபேசி சொன்னது.
கொழும்பில் விசாரணைச் சாவடிகள் நெருங்கும்போதெல்லாம் அச்சம் எனக்கு முன்னால் போனது. ஒரு கவிதையில் எழுதியிருப்பதுபோல அவர்கள்முன் ‘கேவலமாக’ப் புன்னகைக்க வேண்டியிருந்தது. கொழும்பிலிருந்து சென்னை செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்திற்குச் சென்ற வழியெங்கும் ஆசுவாசமாக உணர்ந்தேன். விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக அமைந்திருந்த விசாரணைச் சாவடியில் பயணப்பொதிகள் இறக்கப்பட்டு கிளறப்பட்டுவிடக்கூடாதே என்ற எனது பிரார்த்தனைக்கு, இல்லாத கடவுள் செவிமடுத்தார். பிறந்த நாட்டிலிருந்து ‘தப்பிச் செல்லும்’இழிவு, எங்கள் சகோதர்களாகிய சிங்களவர்களுக்கும் நேராதிருக்கட்டும்.
---
விசாரணைச் சாவடி
விசாரணைச் சாவடி
எப்போதும் நானெழுதும் கடல்போல
விரிந்த அதிகாரத்தின் பெயரால்
தெருவொன்றில் என்னை நிறுத்துகிறாய்
“உனது பெயர் என்ன…?”
எனது கடவுச்சீட்டு உனது கையிலிருக்கிறது
‘ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்’
நகுலனை நினைத்தபடி
உச்சரிக்கும் எனது பெயர்
யாருடையதோ போலிருக்கிறது
உன்னிடத்தில் துப்பாக்கி இருக்கிறது
“இங்கெதற்கு வந்தாய்?”
எனது பூர்வீகக் கிராமத்து வீட்டில்
பாக்கு மரங்கள் நிழல்விழுத்தி
குளிர்ச்சியுற்ற கிணறுளது
அதில் எனது பாட்டனின் காலடித் தடமுளதை
1914 எனும் ஆண்டுப் பதிவுளதை
பகிர்ந்துகொள்ள அஞ்சுகிறேன்
உன் சீருடை அச்சுறுத்துகிறது
கைவிரல் மடித்து எனது வயதெண்ணும்
உன்னைக் குறித்தெழும் வசவு
உதடுகளில் கத்தியெனத் துருத்துகிறது
நான் பணிவானவள்
நகங்களும் விழிகளும் பிடுங்கப்படுவதில்
எனக்கும் ஒப்புதலில்லை
“உனக்கு சிங்களம் தெரியுமா…?”‘
'சிங்களம் மட்டும்’தெரியாமற் போனதற்காக
வருத்தத்தில் தோய்த்தெடுத்த புன்னகையோடு
தாழும் தலையை இடம் வலதசைக்கிறேன்
மேலும் பெண்ணுக்குரிய நளினம் மிளிர
கேவலமாகப் புன்னகைக்கிறேன்
எனக்கு அவசரமாகப் போகவேண்டும்
நீ கேள்விகளாலானவன்
நான் இணக்கமான பதில்களாலானவள்
நன்றி சொல்லிப் பிரியும்போது
இருவருக்கும் மகிழ்ச்சியே!
ஈற்றில் எஞ்சியிருக்கின்றன
இறுகிவிட்ட சில வார்த்தைகள் என்னிடத்திலும்
வெடித்திருக்கக்கூடிய குண்டொன்று உன்னிடத்திலும்.
-தமிழ்நதி
நன்றி: அம்ருதா
12 comments:
//சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் நெகிழ்வது எனக்கே பிறழ்நடத்தையாகத் தோன்றினும், அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ள முடியவில்லை. //
நிஜமான வரிகள்
//இறுகினாற்போலும் துயருற்ற முகத்தோடு கடந்துசெல்வோருள் என்னென்ன கதைகள் புதைந்திருக்கக்கூடுமோ என அஞ்சினேன்.//
அந்தக் கதைகளுக்குள் இருக்கும் வலிகளை நினைக்கும் போதேல்லாம் மிகப்பெரியதொரு வலி மனதைக் கவ்விப் பிடிக்கிறது
:((
\\\இராணுவத்தினரைத் தவிர்த்து சாதாரண சிங்கள சனங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த நெகிழ்ச்சியை எப்படி விளக்குவதெனத் தெரியவில்லை.//
புரிகிறது நதி..
வாசிக்கையில் நீங்கள் பதித்து சென்ற வலி பொதிந்த தடங்களை காணமுடிந்தது.வலியை உணரவும் முடிகிறது.
தமிழகத் தமிழனுக்கு இதெல்லாம் புரியாது..இன்னமும் செய்திவழி மற்றும் பிறர் கூறக்கேட்கும் நிலையில தான் இருக்கிறான்..தாய் மண்ணிலும் சிறுது ஓடி இளைப்பாறிய நதியே..சிறு வடலி ஏதேனும் கண்டாயா ?
தோழமைமிக்க தமிழ்நதி..
தொலைப்பதற்கெனவும் ஏதுமற்ற ஈழத்தமிழர்களிடம் நிறைந்துக்கொண்டிருக்கும் கதைகளை கொண்டு இனிச்செய்வதற்கென்ன இருக்கிறது.
கதைகளை மட்டுமே உண்டு பசியாற இன்னும் பழகவில்லை மழலைகள். பழக்கமுடியுமா என இனிவரும் காலங்கள் தான் உணர்த்தவேண்டும்.
காலந்தோறும் மன்னர்களின் வரலாற்றை பதிவு செய்துவந்த வரலாற்று சூழலில் சாமானியர்களின் வாழ்க்கை பதியத்துவங்கும் காலத்திலேயே துக்கத்தை தவிர்த்த கதைகளை பதியமுடியாததற்கு வரலாற்றியலாளர்கள் வருந்தக்கூடும்.
உங்கள் கவிதைக்க்குறித்த ஒன்றை கேட்கவேண்டுமெனதான் எழுத தொடங்கினேன் அதை தவிர ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.
வாய்ப்பிருக்கும்பட்சத்தில் அதனை கேட்கிறேன்
விஷ்ணுபுரம் சரவணன்
அன்புள்ள நண்பர்களுக்கு,
கடந்த பதிவில் பின்னூட்டமிட்டவர்களுடன் உரையாட முடியவில்லை. இனித் தொடர்ந்து கதைப்பேன் என்று உறுதி கூறும்வேளையில், இப்படி எத்தனை உறுதிகளை எடுத்துக்கொண்டு கிடப்பில் போட்டிருப்போம் என்ற நினைவும் வந்துபோகாமலில்லை. வேலையற்ற வேலைகளில் ஓடிக்கொண்டிருக்கிறேன். நின்றால் ஏதாவது நினைவில் தடுக்கி விழுந்துவிடுவேனோ என்ற பயமோ என்னவோ...
நன்றி கதிர்,
முன்பெல்லாம் கதைகளைப் படித்தே அழுவேன். திரைப்படங்கள் என்றால் சொல்லவேண்டியதில்லை.நடைமுறை வாழ்வு அவற்றைக் காட்டிலும் வலிநிரம்பியதாக இருக்கையில்... என்ன சொல்வது?
வந்துபோய்க்கொண்டிருங்கள் செல்வநாயகி... அந்தப் பழைய நாட்கள் போலில்லை எதுவும். இருக்கிறோம் என்பதன்றி என்ன சொல்ல இருக்கிறது...:(
முத்துலெட்சுமி,
டெல்லிக் குளிர் எப்படி இருக்கிறது? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வீட்டின் பின்புறம் இப்போதும் மயில்கள் வருகின்றனவா?
வணக்கம் ஜெரி,
அந்த வலி அந்த நேரம்... பிறகு அது மனதின் ஆழத்தில் சென்று படிந்துவிடுகிறது. எழுத்தின் வழியாக நான் எல்லாவற்றையும் கடந்துவிடுகிறேன். ஆம்.. எல்லாவற்றையும்.
சின்னப்பயல்,
சிறுவடலியா...? ம்... இல்லை... காணவில்லை... கொழும்போடு திரும்பிவிட்டேன். வீட்டிற்குக் கூடப் போகவில்லை:(
சரவணன்,
எனது கவிதை குறித்து என்ன கேட்க நினைத்தீர்கள்? ஞாபகம் வந்துவிட்டதா? வந்தால் எழுதுங்கள். அது சரி.. நான் எப்போது கவிதை எழுதினேன்:) 'அதானே'என்று அங்கே வழிமொழிவது யார்?
தமிழ்..
கைவிரல் மடித்து எனது வயதெண்ணும் //
கைவிரல் எப்படி வயதெண்ணுவார்கள்?
உங்கள் தொகுப்பு குறித்து பேசிய அக்கூட்டம் முடிந்ததும் உங்களிடம் கேட்க நினைத்தேன் அப்போது உங்கள் தொலைபேசி எண் என்னிடமில்லை.
இங்கு யாரும் வழிமொழியவில்லை.
தீபச்செல்வன் தொகுபிற்கான உங்களின் விமர்சனம் ஈர்க்கும்படியாக இருந்தது.
நண்பர் தீபச்செல்வனின் தொகுப்பை விரைவில் வாசிக்கனும்.
அம்மா தாயி..
தப்பி ஒருவாறு தங்கள் இருப்பிடம் வந்தாயிற்றா..?
வேண்டாத தெய்வம் இல்லை. ஏனெனில்..உன்னைவிட்டால் யாரிதையெல்லாம் எழுதுதல் கூடும்..?!
தொடர்ந்து எழுதுக தோழியே..பக்கத்துணையிருப்பேன்.
நன்றி.
தாய் நாட்டிலிருந்து தப்பி வருவது..தலைப்பிலிருந்து கவிதை வரை வலி சுமந்த வார்த்தைகள். உன் புன்னகைக்கு அடியில் எப்போதும் உறைந்திருக்கும் வலியை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன் தோழி.//சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் நெகிழ்வது எனக்கே பிறழ்நடத்தையாகத் தோன்றினும், அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ள முடியவில்லை. // இப்படி இருப்பதால் தான் மற்றவர் பார்வையில் எப்போதும் பித்தாகத் தெரிகிறோம். பரவாயில்லை தமிழ், அது தான் நம்மை சிந்திக்கவும், சக மனிதருக்காக இரக்கப்படவும், படைக்கவும், உயிர்ப்புடன் இருக்கவும் செய்கிறது. நீ அப்படித்தான் தமிழ், எதற்கு விலக்கிக் கொள்ள வேண்டும்?
//இல்லாமற் போனவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மீது அரசாங்கத்துக்கு இருக்கின்ற அச்சமோ அளவிடற்கரியது//
சத்தியமான வரிகள். வலிகள் சுமந்த பதிவு. வழக்கம்போல மனதைத் தேற்றிக்கொள்ளும்படி நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம் :(
இந்த வருடத்தில் தமிழர்கள் அனுபவித்த தாங்க இயலாத வலியை புத்தக வடிவில் உங்களைப் போல் நிறையப் பேர், நிறைய விஷயங்களை பதிவு செய்ய வேண்டும். பத்து வருடம் கழித்து கூட புத்தகம் வெளிவரட்டும்; பரவாயில்லை. எதிர்காலத் தமிழ்த் தலைமுறைக்கு அவை தான் வரலாற்றை கண்டுபிடிக்கும் அகழ்வாராய்ச்சி எலும்புக்கூடுகள்.
Post a Comment