12.16.2009

உடல்


ஏழு மணிக்கே தெரு ஓய்ந்துவிட்டிருந்தது. திறந்திருந்த பல்கனிக் கதவின் வழியாக குளிர்காற்று சிலுசிலுவென்று உள்ளே வந்தது. மரங்களில் மிச்சமிருந்த மழை தெருவிளக்கின் ஒளியில் வெள்ளிமணிகளாக மினுங்கியது. அவ்வப்போது கிளர்ந்து அடங்கும் காற்றில் சிணுங்கி உதிரும் மழைத்துளிகளைப் பார்த்தபடியிருந்தாள். மாலையானதும் கவியும் தனிமைமூட்டம் அவளை மிகமெதுவாய் மூடவாரம்பித்தது.
உறவுக்காரக் கல்யாணம் ஒன்றுக்கு அவளைத்தவிர எல்லோரும் திருப்பதிக்குக் கிளம்பிப் போயிருந்தார்கள்.

“நீயும் வாயேன்”

அவள் மறுத்துவிட்டாள். அம்மா அழைத்ததும்கூட ஒப்புக்குத்தான். விசேட நிகழ்வுகளில் இயல்பாக உலவ அவளால் முடிவதில்லை. எதிர்பாராத தருணத்தில் யாருடையவோ வார்த்தை முள் நெருக்கென்று மனசில் ஏறிவிடும். முதுகில் கண்கள் தைப்பதாய் உணர்வாள். போகும் இடங்களில் எல்லாம் பதில் தெரிந்த கேள்விகளாய்த்தான் கேட்கிறார்கள்.

“கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கலாமில்ல?”

“போன்லயாவது பேசுறாரா?”

“பிரிஞ்சு ரெண்டு வருசத்துக்கு அதிகமாயிருக்கும் போலிருக்கே?”

அவள் மௌனமாகப் புன்னகைப்பாள். உள்ளுக்குள் நெருப்பின் தழல் அசையும். கன்னம் காதெல்லாம் சுடும். கேள்வி கேட்டுக்கொண்டிருப்பவரைத் தாண்டி கூட்டத்தினுள் புகுந்து செருகிக்கொண்டுவிடும் கண்கள். உதட்டுக்குள் சொற்கள் துடிதுடிக்கும். ‘உங்க வீட்டுக்காரர் கூட அன்னிக்கு ஆட்டோவில யாரோ ஒரு பொண்ணோட நெருக்கமா உட்கார்ந்து போனாரே’என்று ஒரு தடவை உறவுக்காரப் பெண்ணொருத்தியைப் பட்டென்று கன்னத்திலடித்தாற்போலக் கேட்டுத் திணறடித்திருக்கிறாள். கூட்டத்தில் எங்கிருந்தாலும் அம்மாவின் கண்கள் அவள்மீதே பதிந்திருக்கும். அதில் கொஞ்சம் பதட்டத்தின்; சாயல் கலந்திருக்கும். பெரும்பாலும் அவள்தான் வந்து மதுவை மீட்டுக்கொண்டு போவாள்.
“இனிமே என்னை எங்கயும் கூப்பிட வேணாம். நான் வரலைன்னா வரலை” வீட்டுக்கு வந்ததும் கத்துவாள்.

அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொள்வாள்। அறை என்பது அவளளவில் மிகப்பெரிய விடுதலை. அதனுள் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றினுள் கேள்வி கேட்காத மனிதர்கள் இருக்கிறார்கள். அவனைப் பிரிந்துவந்ததற்காக அவள் என்றுமே வருந்தியதில்லை. நிதானமாக எடுத்த முடிவுதான் அது. விழுந்துவிடாமல், தட்டுப்படும் யாவற்றின்மீதும் நெருடிக்கொண்டிருந்த தோலை வெட்டியகற்றிய நிம்மதி. சிதைந்து இரத்தமும் சதையுமாய்த் தொங்கும் காலை முழங்காலோடு அளவாகத் துணித்துக் கட்டுப்போட்ட ஆசுவாசம். காலின் கீழ் கொஞ்சநாள் காற்றுலவும். மருகி மருகி கைதடவும். பிறகு பழகிவிடும். அம்மாவின் கண்ணீர், அவளை மீள வரவழைக்கும் அவனுடைய தந்திரங்கள், தம்பியின் முகத்தொங்கல் எதுவும் அவளை அசைக்கவில்லை. ஒன்றும் கேட்காமலே அப்பா புரிந்துகொண்டார். அவருக்கு அவளைத் தெரியும்.

“நான் சம்பாதிக்கிறேன். சாப்பிடுறேன். நான் இங்க தங்கிக்கிறது உங்களுக்குக் கஷ்டமாயிருந்தா சொல்லுங்க. ஹாஸ்டல் பார்த்துப் போயிடுறேன்”

விளக்கு அணைத்ததும் அப்பிக்கொள்ளும் இருள் போன்றதே தனிமை. பழக்கப்படுத்திக்கொண்டால் பயமில்லை என்பதை அவள் நாளாக நாளாக உணர்ந்தாள். காலையில் எழுந்திருந்து காப்பியோடு சேர்த்து வேம்பின் பசுமையையும் பருகும் சுவையை புகுந்த வீடு அவளுக்குத் தந்ததேயில்லை. கிச்கிச்சென்று பறவைகள் சப்திக்கும் ஓசையைக் கேட்டபடி விடிகாலையில் படுத்திருக்க முடிந்ததில்லை. ஐந்து மணிக்கெல்லாம் மாமனார் சுப்ரபாதத்தை அலறவிட்டுவிடுவார். அவருக்கு விழிப்பு வந்துவிட்டால் வீடு மொத்தமும் விழித்துக்கொண்டுவிடவேண்டும். அப்படியொரு ஆங்காரம். மதுமிதா அங்கு வாசுதேவனின் மனைவி. அறைக்குள் இருக்கும்வரைதான் வாசுதேவன் மதுமிதாவின் கணவன். அறையை விட்டு வெளியில் வரும்போது புதிதாக ஒரு முகமூடி முளைத்திருக்கும். ஒருவேளை அதுவே சொந்த முகமாக இருக்கலாம்.

யாராவது வந்தால் பேசிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. கீழ்வீட்டில் குடியிருக்கும் பாரதி… அவளின் குழந்தை மிருதுளா… ஷாம்சன்....

அப்பா-அம்மா தம்பியுடன் திருப்பதி போயிருப்பது ஷாம்சனுக்குத் தெரிந்திருக்கும். ஷாம்சன் தம்பி நரேனின் சிநேகிதன். தம்பியைவிட இரண்டு வயது பெரியவன்.

“ஏண்டா வயசுப் பசங்களையெல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வர்ரே?”ஷாம்சனைக் கூட்டிவந்த அன்று சமையலறைக்குள் வைத்து அம்மா கிசுகிசுத்து முறைத்தாள்.

“அவன் நல்ல பையன். அவனுக்கே மூணு அக்கா இருக்கு”தம்பியின் குரலில் எரிச்சல் வெடித்தது. ‘அவங்க வீட்டுக் கொல்லையிலேயே மூணு பசு இருக்கு’என்ற தொனி அதில் இருந்ததாக நினைத்துச் சிரித்துக்கொண்டாள். அம்மாவிடம் சொன்னால் முறைப்பாள். ‘எடுத்ததற்கெல்லாம் குதர்க்கம்’என்பாள்.

“கிறிஸ்டியனா?”
“ஆமாம்மா…எதுக்கு இவ்ளோ கேள்வி?”

ஷாம்சனுக்குப் புத்தகப் பைத்தியம்। மதுவிடம் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவன் கேட்கும் ஆங்கிலப் பாடல்களை அவளிடம் கொடுத்துக் கேட்கச்சொல்வான். முதலில் அந்த உச்சரிப்பு பிடிபடவில்லை. வாத்தியங்கள் அலற ஒரு குரலும் பல்குரலுமாய் கூடச்சேர்ந்து அலறுகிறாற் போலிருந்தது. அதன் பின்னிருந்த விம்மலுக்குப் பழகினாள். எப்படிப் பாடுகிறாள்கள்… ன்கள்… நரம்புகளுக்குள் இசை துடிதுடித்து நகர்வதுமாதிரி…

இசை. புறவுலகின் கயமைகளை அழித்துவிடுவதாக அவள் உணர்ந்தாள். அந்தக் குரல்களுக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து கரைந்துபோய்விட ஏங்கினாள். தேம்பியழத் தோன்றும் சிலசமயங்களில். உலகத்தையே விட்டெறிந்து வானத்தில் ஏறிக் கலந்துவிட வேண்டும் போலிருக்கும். ஒரு இசைக்குறிப்பாக, பறவையாக, மேகங்களுள் தேங்கியிருக்கும் மழையினுள் கண்ணீர்த்துளியாக…

“நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது மது?”ஷாம்சன் ஒருநாள் கேட்டான்.

“எனக்கு சுதந்திரமா இருக்கணும்”

“அப்படி ஒருத்தரைப் பண்ணிக்கிறது…”

“இழுக்கும்வரை காலறியாது புதைகுழி… கல்யாணமும் அப்பிடித்தான்”அவள் சிரித்தாள்.
அவள் சிரித்தால் பூ உதிர்வது மாதிரி இருப்பதாக நினைத்தான். மிக மென்மையாக அளவெடுத்துத் தொடுத்தாற்போல எப்போதும் சிரிப்பாள். குறைவதுமில்லை. கூடுவதுமில்லை. அவளை இழந்து வாழ முடியுமென்றால் அவன் மூடனாகத்தான் இருக்கவேண்டுமென்று தோன்றியிருக்கிறது. சிநேகிதனின் அக்கா என்பதைக் கண்களுக்குச் சொல்லிக்கொடுத்தும் அவை புரிந்துகொள்வதாக இல்லை. செழுமை பூசிய கன்னங்கள், உயிர்ப்பின் ஒளி சிந்தும் கண்கள், சற்றே பெரிதான, சுருக்கங்கள் நிறைந்த கீழுதடு, ஒரே சீராக இறங்கும் நைட்டியினுள் அனுமானிக்கத் தேவைகளற்ற வளைவுகள், இழுத்துக் கட்டியது போலிருந்த தோலின் இறுக்கத்தில் ஆரோக்கியம் பளபளத்தது.

ஆனால், ஷாம்சனுக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள்। அவனுடைய திருமணம் மூன்று உடன்பிறந்தாள்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாக மட்டுமே இருக்கமுடியும். நூறு பவுன் நகை ஐம்பது இலட்சம் ரூபா ரொக்கம் என்பது ஷாம்சனின் அம்மாவுடைய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு என்று அவளிடமே சொல்லியிருக்கிறான். அந்தச் சமயத்தில் அவன் முகத்தில் ஆற்றாமை பொங்குவதை அவதானித்திருக்கிறாள். நரேனுடன் வீட்டுக்குள் நுழைந்ததும் மேசையில் சாப்பாட்டைத்தான் தேடுவான். அம்மா கையில் வேலையாக இருந்தால் தானாகவே எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுவான். அவனுக்குச் சொந்த ஊர் பாலக்காட்டுக்கு அருகில் ஒரு கிராமம். வேலைக்காக சென்னையில் அலுவலக நண்பர்களோடு அறை எடுத்துத் தங்கியிருந்தான். நாளாக நாளாக ‘அப்பா அம்மாவை பிரிந்து வந்திருக்கிற பிள்ளை’என்பதில் அம்மாவுக்கும் வாஞ்சை பெருகத்தான் செய்தது. விசேடமாக என்ன செய்தாலும் அவனுக்கென்று தனிக் கிண்ணத்தில் எடுத்துவைப்பாள்.

மழை மீண்டும் பெய்யவாரம்பித்தத. கல்யாணத்துக்குப் போனவர்கள் எத்தனை மணிக்குத் திரும்பிவருவார்கள் என்று தெரியவில்லை. தெருவை அவள் வெற்றுப்பார்வையாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். இம்மாதிரி மழை மாலைகளில் ஏதோவொன்று குறைவதுபோல தோன்றும். தவறவிடப்பட்ட குழந்தைபோல மனம் அந்தரித்து அலையும். படுத்திருக்கும்போது கடைவிழியோரம் கண்ணீரின் சில்லிப்பை திடீரென உணர்ந்து திடுக்கிடுவாள். அம்மாதிரி சமயங்களில் புத்தகத்தைக் கையிலெடுத்துவைத்துக்கொண்டு அதனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருப்பாள்.

ஷாம்சனின் மோட்டார்சைக்கிள் படபடத்து வந்து கதவருகில் ஒதுங்குவது தெரிந்தது। ஹெல்மெட்டைக் கையில் எடுத்துச் சுழற்றியபடி படியேறி வந்தான். அவள் அலுவலகத்தில்கூட அநேக ஆண்கள் அப்படிச் செய்வதை அவள் பார்த்திருக்கிறாள். ஒன்றேபோல செயல்களையுடைய ஆண்கள்… ஏன் பெண்களுந்தான்.

அவளுக்குள் சின்னதாய் மகிழ்ச்சி போல ஒன்று எட்டிப்பார்த்தது. வயிற்றுக்குள் இருள் திரவம் சுரந்தாற்போலுமிருந்தது. ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள். அவன் வெகு சுவாதீனமாக உள்ளே வந்தான்.
“இன்னும் வரலையா?”கேட்டான்.
“இல்லைடா”
“சாப்பிட்டாச்சா?”
“ம்….”
அவன் சாப்பாட்டு மேசையை ஆராய்ந்துவிட்டு ஃபிரிட்ஜைத் திறந்துகொண்டிருந்தான்। பரந்த அவனது முதுகை முதன்முறையாகப் பார்ப்பதுபோல பார்த்தாள். பின்னாலிருந்து அணைத்துக்கொள்ள வேண்டும்போலிருந்தது. அவன் ஒரு பழத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கத்தியைத் தேடிச் சமையலறைக்குப் போனான்.

‘வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்டு வேண்டுமென்றே வந்திருக்கிறானா?’என்ற கேள்வி ஓடியது.

அவன் பழமும் கத்தியுமாக சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தான். அவள் யன்னல் வழியாக மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முன்வீட்டுக் குழந்தைகள் மழையில் நனைந்தபடி கப்பல் விட்டுக்கொண்டிருந்தார்கள். அது தள்ளாடித் தள்ளாடி நகர்ந்து படக்கென்று கவிழ்ந்தது. தாய் உள்ளேயிருந்து அழைத்தபடி இருந்தாள். இறங்கமுடியாத மழை அவள் கண்களில் மின்னியது.


“இங்க வந்து உட்காரேன்”கூப்பிட்டான். அவன் அவ்வளவு சுவாதீனமாக ஒருமையில் அழைத்தது அவளுக்குச் சந்தோசமாக இருந்தது.
அருகில் அமர்ந்து பார்க்கும்போது அவன் இன்னும் பெரியவனாகத் தோற்றமளித்தான். நீண்ட கழுத்தில் தொண்டை முடிச்சு சின்னப் புடைப்பாய் தெரிந்தது. அவனது நீளமான விரல்களில் நகங்கள் அளவாகக் கத்தரிக்கப்பட்டிருந்தன. அவை இளஞ்சிவப்பு நிறத்தில் பளபளவென்றிருந்தன. கழுத்தை அடுத்து உரோமங்கள் சுருண்டிருந்த மார்பு தெரிந்தது. கண்கள்… அவன் ஏன் இப்படிக் கண்களுக்குள் பார்க்கிறான்?
அவன் தொண்டையைச் செருமிக்கொண்டான்.
“சளி பிடிச்சிருக்கா?”
ஆமாமென்பதாய் தலையசைத்து மெலிதாகப் புன்னகைத்தான். பெரிய உதடுகள். அவளுக்குள் மழை சூடாகப் பெய்துகொண்டிருந்தது. உடல் கொதித்தது. உடலில் தண்ணீர் மொத்தமும் வற்றிவிட்டாற்போல தொண்டை காய்ந்து கிடந்தது.
‘இவன் ஏன் இங்கு வந்தான்?’என்று எரிச்சலாகவும் இருந்தது.
அவன் தன்னை இழுத்துச் சுவரோடு சாய்த்து வைத்து முத்தமிடுவதாக ஒரு கற்பனை ஓடியது. முரட்டுத்தனமாக அவளது கழுத்தில் பதியும் ஷாம்சனின் பெரிய உதடுகள்… தலை கலைந்து கண்கிறங்கித் தவிக்கும் அவள்…
‘போயிடு! போயிடு!’உள்ளுக்குள் அவள் அலறினாள்.
மார்புகள் அழுத்தும் கைகளுக்கு யாசித்தன। தன்மேல் படர்ந்து பரவும் உடலின் மூர்க்கத்துக்குத் தவித்தாள். அழுத்தி அழுத்தி யாராவது தன்னைக் கரைத்துவிட மாட்டார்களா என்றிருந்தது. இந்த உடலே வேண்டாம். போதும். போதும். நினைவின் ஆழத்திலிருந்து உடல்கள் மிதந்து மேலேறி வந்தன. அம்மணமான உடல்கள்… மூச்சடைப்பது போலிருந்தது. உணர்வுகள் எல்லாம் கால்களுக்கு நடுவில் ஒருங்குவிந்து வருவதாய்…

ஷாம்சன் கைகளை அவளுடையதை நோக்கி நகர்த்தியிருந்தான். அவனது கண்கள் திறந்திருந்த அவளுடைய அறைக் கதவைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் மூச்சு விடும் ஒலி அவளுக்குக் கேட்டது. அவனது உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன. தாபம் சொட்டும் விழிகள்…
இப்போது அவன் அவளுடைய விரல்களைப் பற்றி நெரித்துக்கொண்டிருந்தான்.
“எவ்வளவு நாள் மது!”என்றான்.
“வேண்டாம் ஷாம்சன்… அவங்கல்லாம் வந்துடுவாங்க”
“இல்லை… இன்னும் அங்கேர்ந்து கிளம்பலை”
மது அவனது கண்களை நேரடியாகப் பார்த்தாள். தெருவிளக்கின் ஒளியில் பளபளத்தபடி இறங்கிக்கொண்டிருந்த மழையைப் பார்த்தாள். அவனது கைகளுக்குள் கதகதவென்று அடங்கியிருந்த தன் விரல்களைப் பார்த்தாள்.
அழவேண்டும் போலிருந்தது. உடம்பே இல்லாமல் அரூபமாகிவிட ஏங்கினாள்.
“போயிடு ஷாம்சன்”
அவன் அந்தத் தருணத்தைத் தவறவிட்டுவிடுவேனோ என்ற பதைப்போடு ஆவேசங்கொண்டவனாய் எழுந்திருந்து அவளை அணைத்தான். முகத்தை நிமிர்த்தி உதடுகளைத் தன் உதடுகளால் இறுக்கினான். அவளது மார்பில் அலைந்தது ஒரு கை.
மழை… மழை… மழை ஏன் இத்தனை சுடுகிறது?
எத்தனை கணங்கள்… யுகங்கள்… மைக்கேல் ஜோர்ஜின் ‘ஜீசஸ் ரூ எ சைல்ட்’பாடலை காதருகில் பாடுவது யார்?
“அம்மா என்ன நினைப்பாள்? தம்பி என்ன சொல்வான்? அப்பா…?”
‘தேவடியா… இதுக்குத்தானாடி?’மாமியார் கோபவெறியோடு காதருகில் கிசுகிசுத்தாள்.
மது ஷாம்சனை உதறி எறிந்தாள். அவன் அலமலந்து திகைத்தான். அவளைப் பற்ற மீண்டும் மீண்டும் நீட்டிய கைகளை அவள் தள்ளித்தள்ளி விட்டாள்.
“போயிடு”
“இது தப்பில்லை”
அவளுக்கு அழுகை வரும்போலிருந்தது.
“போயிடுங்கிறேன்ல…”அதட்டினாள்.
“இவ்வளவு படிக்கிற… இதெல்லாம் தப்பில்லை மது…”அவனது வார்த்தைகள் அந்தச் சந்தர்ப்பத்தோடு ஒட்டாமல் கேவலமாகத் தரையில் உதிர்ந்தன.
“அதனால என்னடா? நான் இங்கதான வாழ்ந்தாகணும்”
அவன் ஹெல்மெட்டைக் கையில் எடுத்தபடி கடைசி முறையாக இறைஞ்சும் பார்வையை எறிந்தான்.
“நான் கதவைப் பூட்டணும்”
“பூட்டிக்கோடி…”அவன் கதவை உதைத்து வெளியேறினான்। மழைத்துளிகளைக் கிழித்துக்கொண்டு சாலையில் சீறி மறைந்தான்.
அவள் தன்னறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.யாரையோ பழிவாங்குவதுபோல விரல்களுள் நினைவைச் செலுத்தி ஆவேசத்தோடு இயக்கவாரம்பித்தாள். மது அயர்ந்து உறங்க ஆரம்பித்தபோது மழை நின்றிருந்தது.


நன்றி:உயிரெழுத்து

31 comments:

chandru / RVC said...

ரொம்ப நல்லா இருக்குங்க. பென்ணின் உடல்,மொழி,அரசியல், தாபம்னு கலந்த உணர்வுகள், உரைநடை படிச்ச உணர்வு இல்ல, கவிதை படிச்ச மாதிரி இருக்கு..! தனித்துவாழும் பெண்கள் எல்லாரும் அது சரியான முடிவுதானானு யோசிக்கிறதில்லைன்றதுதான் நிஜம்.
:(

Baski.. said...

அருமையான கதை... பெண் உணர்வுகளை பெண்ணே எழுதும்போது இன்னும் வீரியமாக இருக்கிறது....

அன்புடன்,
பாஸ்கர்

தமிழ்நதி said...

நன்றி RVC (உங்கள் பெயர் என்ன?) மாற்றி மாற்றி முதுகுசொறிகிறார்கள் என்று யாரேனும் சொல்லக்கூடும் என்றாலும், உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

"தனித்துவாழும் பெண்கள் எல்லாரும் அது சரியான முடிவுதானானு யோசிக்கிறதில்லைன்றதுதான் நிஜம்"

அப்படியா? நானறிந்து நிறையப்பேர் அப்படித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் நண்பரே..! காமம் என்பது இயல்பானது. சமூகம் அதை எப்போதும் கையில் பிரம்போடு கண்காணித்துக்கொண்டேயிருக்கிறது.

chandru / RVC said...

இல்ல, நான் சொல்ல வர்றது - சகிச்சுக்கிட்டு வாழ்றது வேற, சரி பண்ணிக்கிட்டு வாழ்றது வேற. உடைந்து விட்டது ஒட்டாது என்றெண்ணி வாளாவிருக்காமல் அடுத்தகட்ட நகர்வை சரியான திசையில் மேற்கொள்ளவேண்டும் என்பதே என் அவா. மறுமணம், அல்லது பிரிந்த உறவை சரி செய்தல், இரண்டும் இல்லாதபட்சத்தில் யாருக்காகவும் தன் சுயத்தை இழக்காமல், தனக்குத்தானே அநீதி இழைக்காமல்,தன்னையும் தன் உடலையும் புரிந்துகொண்ட தனிப்பட்ட வாழ்க்கை..!

ஏதோ ஒரு அடிப்படையில் அவர்கள் எடுக்கும் முடிவு இந்திய சமூகச்சூழலில் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது. //அது சரியான முடிவுதானானு யோசிக்கிறதில்லைன்றதுதான் நிஜம்// என்று நான் கூறவிழைந்தது இதைத்தான்.

காமம்-உடலின் உணவு, நீர், காற்று போன்ற இன்னபிற தேவைகளைப் போலவே மற்றொரு தேவை, அது இயல்பானது அப்படின்றதுல மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. சமூகம், கலாச்சார பொலீசார்களுக்காகவெல்லாம் பார்த்தா மனிதனாகவே வாழ முடியாது.

பரஸ்பர சொறிதல் :)

with regards,
chandru

தமிழ்நதி said...

நன்றி பாஸ்கி:)

RVC,

நீங்கள் சொல்லியிருப்பதைப் புரிந்துகொள்கிறேன்.

"யாருக்காகவும் தன் சுயத்தை இழக்காமல், தனக்குத்தானே அநீதி இழைக்காமல்,தன்னையும் தன் உடலையும் புரிந்துகொண்ட தனிப்பட்ட வாழ்க்கை..!"

என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'தனிப்பட்ட வாழ்க்கை'நிறையப் பேருக்குச் சாத்தியமில்லை. அவள் சார்ந்திருக்கும் குடும்பமும் சமூகமும் 'தப்புப் பண்ணினே... கொன்னுடுவேன்'என்று மிரட்டிக்கொண்டேயிருக்கின்றன. தொடுகை என்பது வெறும் காமம் மட்டுமில்லை... சில நிமிடங்களில் முடிந்துவிடும் உணர்ச்சியுமல்ல.. அது அதற்குமப்பாலானது என்பதைப் புரிந்துகொள்ளாத, நீங்கள் குறிப்பிடும் கலாசாரப் பொலிஸ்காரர்கள் மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஏற்கெனவே திருமணமான பெண்ணை வைத்துக்கொள்வார்களேயன்றி, கட்டிக்கொள்ளமாட்டார்கள். பெரும்பாலான ஆண்களுக்குத் தேவை ஒரு புதிய உடல்.

சுயசொறிதல், முதுகுசொறிதல் இன்னபிற இல்லாமல் நிறைய உரையாடலாம்:)

பதி said...

நன்றாக வந்துள்ளது இந்தக் கதை...

:)

பின்னூட்ட உரையாடல்களை வாசிப்பதற்காக !!!!

கே.என்.சிவராமன் said...

புனைவு நல்லா இருக்கு.

நண்பர் ஆர்விசிக்கு நீங்க சொன்ன பதில்ல ஒரு கட்டுரைக்கான விஷயம் அடங்கியிருக்கு...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

chandru / RVC said...

தனிப்பட்ட வாழ்க்கை சாத்தியமில்லாதது மட்டுமில்லை, அவர்தம் குடும்பங்களும் 'நாலு பேர் என்ன சொல்லுவாங்க' பயத்தில், இவ்வகையிலான பெண்களின் உணர்வுகளைக் கொன்றுவிட்டு வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அல்லது சம்பந்தப்பட்ட அப்பெண்ணே எனக்கு அப்பா, அம்மா போதும் என இருந்துவிடுகிறாள்.//'தப்புப் பண்ணினே... கொன்னுடுவேன்'//என்று நீங்கள் சொல்லும் "தப்பு" எனும் பொதுப்புத்தி சார்ந்து கட்டமைக்கப்பட்டு இருப்பதுதான் இந்திய சமூகசூழல். ரூப் கன்வர் கதையை இன்றும் வெற்றிகரமாக படித்துக்கொண்டு மட்டுமே இருக்கும் செயல்வீரர்கள்தானே நாம்.
// பெரும்பாலான ஆண்களுக்குத் தேவை ஒரு புதிய உடல்.// இப்படி பொதுவாகக் கூறுவது சரியானதா? இதில் பெண்களின் பங்களிப்பு எதுவும் இல்லையா? இது மேற்கத்திய நாடுகளுக்கும் பொருந்துமா? அல்லது பெண்களின் மீதான வன்முறைக்கு நிலம் ஒரு தடையில்லையா?

KarthigaVasudevan said...

உடைக்கப்பட்ட இன்னொரு பூட்டு.போட்டு உடைக்கிறதுலயும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்யுது தமிழ்நதி ,ஆணென்ன ..பெண்ணென்ன நிதர்சனம் சொல்லும் இப்படிப் பட்ட கதைகள் வாசிப்பவரை மௌனியாக்கி விடுகின்றன. மதுவுக்காவது குடும்பம் இருக்கறாப்பல போகுது கதை,ம்..அதுவுமில்லாமல் தனித்து வாழ வேண்டிய நிர்பந்தம் அமைந்து விடும் பெண்கள் குறித்தும் எழுதுங்கள்.எழுதப் படாத கதைகள் இன்னும் இருக்கின்றன தான்.

Ken said...

திருமணமான பெண்ணை வைத்துக்கொள்வார்களேயன்றி, கட்டிக்கொள்ளமாட்டார்கள். பெரும்பாலான ஆண்களுக்குத் தேவை ஒரு புதிய உடல்.

முதலில் இந்த நல்ல கதைக்கு வாழ்த்துகள்.

இப்போ கண்டனம் பெரும்பாலான பெண்கள் சமூக பயத்திற்கு பொருளாதார , சாதிக்காக ஒருவனை கணவனாகவும் ,

காதல் அல்லது காமத்திற்காய் எவனாவது ஒரு அப்பாவியையும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இக்கரைக்கு அக்கரை பச்சை

ஆணோ பெண்ணோ எல்லாருக்குமே உடல் தாபம் , காதல் எல்லாமே சமூகம் சொல்கிற ஒழுக்க விதிகளுக்கு மாறாகத்தான் இருக்கு இதுல பெரும்பாலான ஆண்கள் என்கிற சொல்லாடல்

நீங்களுமா தமிழ்நதின்னு இருக்கு.

இது உங்களோட மிக முக்கியமான கதையா நான் நினைக்கிறேன். வாழ்த்துகள்

தமிழ்நதி said...

நண்பர்களுக்கு,

இந்தக் கதை குறித்தும் ஆண்,பெண்ணுக்குள்ள பாரபட்சங்கள், சந்தர்ப்பங்கள் குறித்தும் நாம் நிறையப் பேசலாம் போலிருக்கிறது. கென்னும் RVC யும் 'பெரும்பாலான ஆண்கள்'என்ற பதத்தினைப் பற்றிக் கதைத்திருக்கிறீர்கள். ஊருலாத்து முடிந்து இப்போதுதான் வீடு வந்துசேர்ந்தேன். நாளைக் காலை பேசுகிறேன்.

தமிழ்நதி said...

வருகைக்கு நன்றி பதி... சிலபேர் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.

பைத்தியக்காரன், (இப்படி அழைப்பதில் எனக்கு இப்போது உறுத்தல் இல்லை. அதுவும் ஒரு பெயர் என்பதற்கப்பால்... தமிழ்நதி என்றால்... தமிழ் நதியாகவா கொட்டுகிறது:) - இதையும் ஒரு உதாரணத்துக்காகவே கேட்டேன்...'அப்படி என்னைச் சொல்லுங்கப்பா'என்ற அர்த்தத்தில், ஆசையில் இல்லை:)

எழுதுங்கள் பைத்தியக்காரன். நானும் ஒரு கட்டுரை இதைப்பற்றி எழுத யோசித்திருக்கிறேன். காமமும் சமூக நியதிகளும் எதிரெதிராக இயங்குவதைப் பற்றி... அதற்கு சாத்தியத் தீர்வுகள் இல்லாதிருப்பதைப் பற்றி...

மிஸஸ் தேவ்,

நீங்கள் சொல்வதுபோல எழுதப்படாத கதைகள் நிறைய இருக்கின்றனதான். அதே சமயம், எழுதக்கூடாத கதைகள் என்றும் சில இருக்கின்றன. துரதிர்ஷ்டம் என்னவென்றால் எழுதக்கூடாதென சமூகத்தால் சொல்லப்படுகிற கதைகள் எழுதப்படாமலே விடுபட்டுவிடுகின்றன. அதைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கலாமென்று தோன்றுகிறது. உண்மைகள் நிர்வாணமானவைதாம். இல்லையா?

தனித்து வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி... கதை தன்னை எழுதிக்கொள்ளும்படி கேட்கும்போது நிச்சயம் எழுதுகிறேன் தோழி.

தமிழ்நதி said...

அன்புள்ள RVC,

// பெரும்பாலான ஆண்களுக்குத் தேவை ஒரு புதிய உடல்.// இப்படி பொதுவாகக் கூறுவது சரியானதா? இதில் பெண்களின் பங்களிப்பு எதுவும் இல்லையா? இது மேற்கத்திய நாடுகளுக்கும் பொருந்துமா? அல்லது பெண்களின் மீதான வன்முறைக்கு நிலம் ஒரு தடையில்லையா?

ஆம் நண்பரே... 'பெரும்பாலான ஆண்களுக்குத் தேவை ஒரு புதிய உடல்'என்பதன் பொருளை உணர்ந்துதான் எழுதினேன். 'புதிய'என்பதை 'இளைய'மற்றும் 'வேறொவராலும் தொடப்படாத'என்பதான அர்த்தத்திலேயே சொன்னேன். மணமுறிவின் பின் தாய்வீடு திரும்பி வந்த, விதவையான பெண்களை மணந்துகொள்ள பெரும்பாலான ஆண்கள் முன்வருவதில்லை. அவர்களின் முன் தெரிவுகள் ஏராளம் உண்டு. விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள், விதிவிலக்கானவர்கள், சமூகப்புரட்சிகளை நிகழ்த்தவேண்டும் என்று நினைக்கிறவர்கள் (இவர்களுள்ளும் சிலர் வாழ்வைப் பிச்சையிடும் மனநிலையோடு இதனை அணுகுவதுண்டு)மட்டுமே 'வாழ்விழந்த'(?)பெண்களை மணந்துகொள்ள முன்வருகிறார்கள். அதே சமயம் மணமுறிவான, விதவையான பெண்களைத் திருமணம் செய்துகொள்ள முன்வருபவர்கள் ஐம்பதைத் தாண்டியவர்களாக இருந்தாலும், இரண்டு மூன்று தடவைகள் திருமணம் ஆனவராக இருந்தாலும் அது கணக்கிலெடுக்கப்படுவதில்லை. ஆக, ஆண் என்ற தகுதி மட்டுமே அங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது.

"இதில் பெண்களின் பங்களிப்பு எதுவும் இல்லையா?"என்று கேட்டிருந்தீர்கள். நான் மேற்சொன்ன பதிலிலேயே இதற்கான பதிலும் அடங்கியிருக்கிறது. "இந்தச் சமூகத்தில் பெண்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்" என்ற சிமொன்தி பொவாரின் (அவர்தானே)கருத்தை முன்வைக்கிறேன்.

மேற்கத்தைய நாடுகளோடு ஒப்பிடுமிடத்து நமது கீழைத்தேய நாடுகளின் நிலவரம் மோசமாகவே இருக்கிறது. அங்கேயாவது சட்டத்தின் துணையை நாடலாம். இங்கே சமூகத்தைத் தாண்டி சட்டத்திடம் செல்லவியலாமல் தங்களுக்குள்ளேயே புழுங்குபவர்கள் ஏராளம். அதிகம் ஏன்.... நம் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை நாமே வெளியில் சொல்வதில்லை. அது குடும்ப கெளரவத்திற்கு இழுக்கு என்று கருதுகிறோம். நமது சுயத்திற்கு இழுக்கு என்று குடும்ப வன்முறையைக் கருதுவதில்லை.

ஒப்பீட்டளவில் குறைவேயன்றி மேலைத்தேயங்களும் ஒன்றும் 'புனித தேசங்கள்'அல்ல. பெண்மீதான வன்முறைக்கு நிலம் நிச்சயமாக ஒரு தடையில்லை.

---
வாழ்த்துக்கு நன்றி கென்,

'உடல்'இல் நான் விதிவிலக்குகளைப் பற்றிப் பேசவில்லை. இங்கு நிலவும் பாரபட்சமான 'விதி'களைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன்.

"பெரும்பாலான பெண்கள் சமூக பயத்திற்கு பொருளாதார , சாதிக்காக ஒருவனை கணவனாகவும் ,

காதல் அல்லது காமத்திற்காய் எவனாவது ஒரு அப்பாவியையும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்."

'பெரும்பாலான பெண்கள்'என்று நீங்கள் சொல்லியிருப்பதை என்னால் ஒத்துக்கொள்ள இயலவில்லை. ஆண்கள் பெண்களை 'வைத்திருப்பது'அதிகமாகவும், பெண்கள் ஆண்களை 'வைத்திருப்பது'மிகக் குறைவாகவும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். பொருளாதார தேடலுக்காக, தன்னை சமூகத்தில் பெரிய ஆளாக நிரூபிக்க வேண்டிய அவசியத்தின் பொருட்டும் மனைவியை ஒரு ஆண் புறக்கணித்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் - சில வசதியான குடும்பங்களில் பெண்கள் வெளியில் துணை தேடுவது இயல்பே. அரதப் பழசான வார்த்தையில் சொன்னால் அவை வெளியில் தெரியவரும்போது 'சரித்திரமாகி'விடுகின்றன. அதிலிருந்தே தெரியவில்லையா... சம்பவத்திற்கும் சரித்திரத்திற்குமான இடைவெளி?

"காதல் அல்லது காமத்திற்காய் ஒரு அப்பாவியை வெளியில் வைத்துக்கொள்வது"

ஆஹா... கென் நீங்களுமா?

இன்னொருவனின் மனைவியை காதலிக்கும்-மோகிக்கும் துணிவும் வித்தையும் தெரிந்த ஒருவன் எப்படி 'அப்பாவி'யாக இருக்கமுடியும்? அவனும் சுகம் அனுபவிக்கும்போது 'அவன் பயன்படுத்தப்படுகிறான்' என்று எப்படிச் சொல்லமுடியும்? நீங்கள் குறிப்பிடும் அப்பாவிகள் 'பணக்கார மனைவிகளை'ப் பயன்படுத்திக்கொள்வதில்லையா?

ச்ச்சண்டை ஒண்ணுமில்லை... ச்ச்சும்மா பேசிப் பார்த்தேன்... ச்ச்சரியா?

Ken said...

இங்கே இன்னொருவன் மனைவி இன்னொருவளின் கணவன் என்கிற கூற்றுகள் அர்த்தமிழுந்து விடுகின்றன.

அப்பாவியா இல்லையான்னு அப்படியான ஆட்களை யோசிக்கையில் தெரியும்.

மற்றபடி உங்களின் பெரும்பாலான ஆண்கள் பதம் தவறு.

உங்களின் பார்வையில் பட்ட ஆண்கள் அல்லது நீங்க கேட்டறிந்த ஆண்கள்னு வேணா சொல்லிக்கலாம்.

நான் சராசரிக்கும் கீழங்க நீங்களுமா கென் என்னைக் கேட்க முடியாது :)

S.S. JAYAMOHAN said...

பருவ வயதில்- உணர்ச்சிப் பெருக்கில்
எழுந்த ஆசைகள், கற்பனைகள்
நிஜமாய் நிகழாமல் போனதற்கு
பக்குவப்பட்ட வயதில் இப்போது
மனதுக்குள் நன்றி சொல்கிறேன் !

கதை நாயகி மது உணர்ச்சிகளைக்
கையாளத் தெரிந்து இருக்கிறாள்.
மதிக்கிறேன்.

கதையீன் முடிவை நீங்கள் எழுதிய விதம் புருவத்தை உயர்த்த வைக்கிறது !

வெகுவாக ரசித்தேன்.

அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்

ஸ்டாலின் குரு said...

என்ன சொல்ல


பின்னூட்டம் போட
பயமா இருக்கு :)

சின்னப்பயல் said...

நதி கு.ப.ரா. ஸ்டைல்ல ஓட எத்தனித்து சிறிது வெற்றியும் கண்டிருக்கிறது..Taboo'ன்னு எதையும் ஒதுக்க வேண்டாம்.. :-)

Anonymous said...

தமிழ்நதி,
கதை முடிந்த பின்னும் நிறைய
எண்ணங்கள் அலை அலையாய்
எழுந்த வண்ணமிருந்தன...
சரி,தவறு என்று எதுமிருக்கிறதா என்ன!சமுகத்தின் மரபு/ஆகம விதிகளுக்குள் அடைப்படுகிறோமா என்பது மட்டும் தானே!

எல்லோரும் சூழ்நிலையின் வசம் தம்மை ஒப்புவித்தவர்கள் அல்லவா!
அதைக்கடந்து நிற்கும் சக்தி மிகச்சிலருக்கே உண்டு என்று நினைக்கிறேன்.
“தொடுகை என்பது வெறும் காமம் மட்டுமில்லை... சில நிமிடங்களில் முடிந்துவிடும் உணர்ச்சியுமல்ல.. அது அதற்குமப்பாலானது ”
”காமம்” வெறும் காமமாக.()
கையாளப்படின் அது தவறேன்றே படுகிறது.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

உயிரெழுத்துவில் படித்தபோதே பேசவேண்டும் என்றிருந்தேன்.

இன்னும் கொஞ்சம் விரிவாக இந்த கதைகருவோடு விரித்திருக்கலாம் எனத்தோன்றியது அதற்கு சாத்தியமான ஒன்றுதான்.

நேரிடையான சொல்முறை தவிர்த்தவடிவத்தில் எழுதியிருக்கலாம் எனக்கூட தோன்றியது.

பேசத்துவங்கி பாதியில் நிறுத்தியதை போன்றதொரு உணர்வு.

மதுவின் தனிமையை இன்னும் வேறுவிதமாக பேசியிருக்கலாம் அதற்கான வெளி கதையில் இருக்கவே செய்கிறது.

ஒருகதையை பிணக்கூறுபோல செய்யமுயலுவதற்கு மன்னிக்கவும்.

பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என தோன்றியது அவ்வளவே..

விஷ்ணுபுரம் சரவணன்

Anonymous said...

சிதைந்து இரத்தமும் சதையுமாய்த் தொங்கும் காலை முழங்காலோடு அளவாகத் துணித்துக் கட்டுப்போட்ட ஆசுவாசம். காலின் கீழ் கொஞ்சநாள் காற்றுலவும். மருகி மருகி கைதடவும். பிறகு பழகிவிடும்.

Anonymous said...

வாத்தியங்கள் அலற ஒரு குரலும் பல்குரலுமாய் கூடச்சேர்ந்து அலறுகிறாற் போலிருந்தது. அதன் பின்னிருந்த விம்மலுக்குப் பழகினாள். எப்படிப் பாடுகிறாள்கள்… ன்கள்… நரம்புகளுக்குள் இசை துடிதுடித்து நகர்வதுமாதிரி…

Anonymous said...

இசை. புறவுலகின் கயமைகளை அழித்துவிடுவதாக அவள் உணர்ந்தாள். அந்தக் குரல்களுக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து கரைந்துபோய்விட ஏங்கினாள். தேம்பியழத் தோன்றும் சிலசமயங்களில். உலகத்தையே விட்டெறிந்து வானத்தில் ஏறிக் கலந்துவிட வேண்டும் போலிருக்கும்.

Anonymous said...

அவன் ஏன் இப்படிக் கண்களுக்குள் பார்க்கிறான்?

soorya said...

நல்ல கதை தோழி.
இன்னும் ஆழமாகப் போயிருக்கலாம் என்றே எனக்கும் தோன்றுகிறது.
எனக்கு, மதுமிதாவில் ஏற்படுகிற உணர்வு (அனுதாபமோ..என்னவோ..)
சாம்சனிலும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவனது உணர்வுகளுக்குத் தூபமிட்டுவிட்டு துரத்தியடிப்பது நியாயம்போலப் படவில்லை. சாம்சனை துணைப் பாத்திரமாகக் கையாண்டிருப்பதோ என்னவோ..? கதை இன்னமும் ஆழமாகப் போயிருக்கலாமே என்று தோன்றுகிறது.
மற்றும்படி த்மிழ்நதியின் எழுத்துமொழி என்னைக் கவர்ந்தேயிருக்கிறது.
நன்றி.

தமிழ்நதி said...

சரி கென், அப்படியே ஆகட்டும். என் பார்வையில் பட்ட அல்லது நான் கேட்டறிந்த ஆண்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

நான் கேட்டறிந்த, என் பார்வையில் பட்ட ஆட்கள் கொஞ்சநஞ்சமில்லை:)

எஸ்.எஸ்.ஜெயமோகன்,

"கதையின் முடிவை நீங்கள் எழுதிய விதம் புருவத்தை உயர்த்த வைக்கிறது"

என்று சொல்லியிருந்தீர்கள். உண்மை எப்போதும் புருவமுயர்த்த வைப்பதே.இல்லையா?

ஸ்டாலின் குரு,

ஏன் பின்னூட்டம் போடப் பயமாயிருக்கு? பேசக்கூடாத விடயத்தையா நான் பேசியிருக்கிறேன்... எல்லாம் உள்ளதுதான். வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில்லை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

சின்னப்பயல்,

இது டிசம்பர் மாதம். நிறையப் புத்தக வெளியீட்டு விழாக்களுக்குப் போய்வருகிறேன். மேடைகளில் கூடை கூடையாக ஐஸ்ஸைக் குவிக்கிறார்கள். நீங்களும் கு.ப.ரா. அது இதென்று என்னைப் பப்பாசியில் ஏற்றாதீர்கள். முறிந்து விழுந்துவிடுவேன்:)

விமலா,

"சரி,தவறு என்று எதுமிருக்கிறதா என்ன!சமுகத்தின் மரபு/ஆகம விதிகளுக்குள் அடைப்படுகிறோமா என்பது மட்டும் தானே!"

ஆமாம். சரியும் தவறும் மனிதன் வகுத்ததே. தான் வகுத்ததே தனக்கு விலங்காவது இப்படித்தான். ஆனால், மறுவளமாக அவ்விதம் இல்லாவிடின் விலங்காகிவிடுவோமோ என்னவோ...

--
சரவணன்,

"இன்னும் கொஞ்சம் விரிவாக இந்த கதைகருவோடு விரித்திருக்கலாம் எனத்தோன்றியது."

ஆம்... எனக்கும் அப்படித்தான் பிறகு தோன்றியது. தொகுப்பாக வரும்போது எடிட் செய்துகொள்ளலாம் என்று விட்டுவைத்திருக்கிறேன். சில சிறுகதைகளை இப்போதே எடிட் பண்ண ஆரம்பித்திருக்கிறேன். நமது கதைக்குள்ளே நாமே நகர்வதென்பது வித்தியாசமான பயணந்தான்.

"பிணக்கூறுபோல..." இல்லவே இல்லை சரவணன். விமர்சனங்கள் என்னை வளர்க்கின்றன. மிதமிஞ்சிய புகழுரைகள் என்னைத் தேங்கவைக்கின்றன.

அனானி நண்பருக்கு,

இது வேறு வேறு ஆட்கள் என்று நினைத்து பின்னூட்டங்களை வெளியிட்டேன். பிறகு பார்த்தால் ஒரே ஆள் எனத் தோன்றியது. ஏதாவது சொந்தமாகச் சொல்லுங்களேன். எனது வரிகளையே பிரதி பண்ணிப் போட்டால் எப்படி? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ள வேண்டாமா?

கருத்துக்கு நன்றி சூரியா,

ஷாம்சனோ மதுவோ முழுமையானவர்கள் அல்ல. நம்மைப்போல சாதாரணர்கள். பரிபூரணம் என்பது தமிழ் சினிமாவுக்கோ சாத்தியம்:) இரண்டு பேருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், அவள் பின்வாங்கிவிடுகிறாள். காரணம் சமூகம் பெண்கள்மீது சுமத்திவைத்திருக்கும் புனிதச் சுமைகள். மேலும், தன்னைவிட இளையவன்-தம்பியின் நண்பன் என்ற தயக்கம்.

ஆம்.ஆழமாக எழுதியிருக்கலாம். முயற்சிக்கிறேன். உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றிகள். டென்மார்க்கில் இம்முறை குளிர் எப்படி? கனடாவுக்குப் போவதாகச் சொன்னீர்கள்.....

Anonymous said...

தமிழ்நதி, உங்கள் நடை அருமையாக இருந்தது. பின்னூட்டங்களையும் படித்தேன். அதில் கூறியிருப்பது போல் கதை இன்னும் விரிவாகக் கூறப்பட்டிருக்கலாம். கூறாமலிருப்பதும் கூட கதையின் பன்முகத்தன்மையை அழகாய் அதிகரித்தான் செய்கிறது.

கதையின் முடிவு இக்காலத்தில் மனிதர்களை சுயமோகிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் அடிப்படை உந்துதலைக் கொண்டிருக்கிறது. ஆண்களும், பெண்களும் எதிர்பாலினத் தேவையின்றி தங்களுக்குள்ளாகவே இன்பம் கண்டு கொள்ளும் இம்முடிவு 'நான் யாரையும் எதற்கும் சார்ந்தவளில்லை, சார்ந்தவனில்லை' என்ற கருத்தை வலியுறுத்த விரும்புகிறது.

பெண்ணியங்கள் குடும்பத்தை ஆண்களின் வன்முறைக் கருவியாக மட்டுமே அடையாளம் காண்பது இதில் வெளிப்படுகிறது. உண்மையில் குடும்பத்தில் ஆணின் நிச்சயமற்ற தன்மையே ஆண்கள் குடும்பத்தின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ள பிரயத்தனப்படுவதன் காரணமாயிருக்கிறது. பெண் இல்லாவிட்டால் குடும்பம் என்ற அமைப்பே இருக்க முடியாது என்பது தான் உண்மை. ஏனெனில் குடும்பத்தின் அடிப்படை விஷயமான குழந்தை உற்பத்தியைச் செய்வது பெண் மட்டுமே. எனவே ஆணின் சலுகைகள் பெண்ணிற்கு கிடைக்காமல் போனது. ஆண்கள் அதிகாரத்தை தக்கவைக்க விரும்பியதன் தொடர்ச்சியாக ஆண்வாரிசுரிமை, தந்தை மரபு என்று அதை தங்கள் பிடிக்குள் வைத்து பெண்களை அடிமைப்படுத்தினார்கள்.

குடும்பமும் மறுமணம், மறுதாரம், பலதாரம் என்று பல்வேறு வகைகளில் மனிதனின் அதிகப்படியான தேவைகளை பூர்த்தி செய்யும் வசதிகளையும் தற்போது உள்ளடக்கிவிட்டது. ஆண்களின் பிடியைத் தளர்த்த பெண்வாரிசுரிமை, பெண்களின் சமூக, பொருளாதார சுதந்திரம் என்று சமூக மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

கதையில் மதுவின் உடல் தேடல் ஒரு மறுமணத்தில், மறுதாரத்தில் நிறைவடையக் கூடியதே. ஆனால் அதை நோக்கி கதை நகராமல் சாம்சனின் 'வாய்ப்புத் தேடல்' மற்றும் குடும்பத்தின் பாரம் அவளது உடனடித் தேவையான உடல் ரீதியான தேடலை ஆண் போல எளிதில் நிறைவேற்ற முடியாமை என்பதை குவியமாக்கி நிற்கிறது. இந்த உடனடித் தேவைக்கு தற்போதைய சமூகத்தில் உள்ளார்ந்த தீர்வுகள் இருப்பதையும் நாம் அறிவோம். அக்கா மாதிரி, தம்பி மாதிரி பழகும் பெரும்பாலான உறவுகளில் உடல் ரீதியான தேவைகள் மறைமுகமாக தீர்க்கப் படுகின்றன. அவை சிலர் விஷயத்தில் உடலுறவுகளாகவும் இருக்கின்றன. இவ்வுறவுகளில் குற்றவுணர்வு உறவு கொள்வோரிடம் இல்லை. அது வெளிப்படும் போது அது சமூகத்தால் குற்றமாக்கப்படுகிறது. (தற்கால சமூகத்தில் இலக்கியங்களில் அது புரட்சி, விடுதலையாக சித்தரிக்கப்படுகிறது... ‘இவ்வளவு படிக்கிற... இதெல்லாம் தப்பில்ல மது’… என்ற வரிகள் ). மதுவும் வழக்கமாக புதிய சமூகத்தில் இருப்பவர்கள் போல் இருந்திருந்தால் இது 'கதை'யாகி இருக்காது. ஆனால் அவள் அதை மறுக்கிறாள். மறுத்ததன் காரணம் எதுவாக இருந்தாலும் அது குடும்பம் என்ற சமூக உறுப்பில் தான் இருப்பதை அவள் உணர்வதற்குக் காரணமாக இருக்கிறது.

பழைய படம் என்றாலும் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் போது என் போன்ற பழமைவாதிகள் மெய்சிலிர்த்து ரசிப்பது போல ‘விடுதலையிலிருந்து’ பின்வாங்கின மதுவையும் நான் ரசித்தேன்.

பெயர் மேரி ஆன் மோகன்ராஜ் என்று ஞாபகம். கனடா வாழ் இலங்கைத் தமிழ்ப் பெண். இவர் எழுதும் பாலியல் கதைகள் மிகப் பிரபலம். முழுக்க முழுக்க பாலியல் உயிர்மையில் முன்பு இவரைப் பேட்டி கண்டிருக்கிறார்கள். இணைய தளம் கூட வைத்துள்ளார். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

தமிழ்நதி said...

அன்புள்ள அம்பேதன்,

எனது கதையை முழுமையாகப் புரிந்துகொண்டு அல்லது ஆழ்ந்து வாசித்துப் பின்னூட்டமிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால் என் கதையை விட உங்கள் பின்னூட்டம் நிறைய விடயங்களைக் கொண்டிருந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. (எதைச் சொன்னாலும் முதுகுசொறிகிறார்கள் என்று நினைத்துக்கொள்வார்களோ என்ற உள்ளார்ந்த நினைப்பு தவிர்க்க முடியாமல் எழுகிறது)

"கதையில் மதுவின் உடல் தேடல் ஒரு மறுமணத்தில், மறுதாரத்தில் நிறைவடையக் கூடியதே. ஆனால் அதை நோக்கி கதை நகராமல் சாம்சனின் 'வாய்ப்புத் தேடல்' மற்றும் குடும்பத்தின் பாரம் அவளது உடனடித் தேவையான உடல் ரீதியான தேடலை ஆண் போல எளிதில் நிறைவேற்ற முடியாமை என்பதை குவியமாக்கி நிற்கிறது."

கதையின் மையப்புள்ளி அதுதான். இரண்டு உடல்களின் உணர்ச்சிகளுக்கு நடுவில் சமூகம் புகுந்துகொண்டிருப்பது அபத்தமாகத் தோன்றினும் அதுவே யதார்த்தம்.

மேரி ஆன் மோகன்ராஜின் வலைத்தளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். போய் வாசிக்கவேண்டுமென்று எண்ணம் தோன்றியதில்லை. சில விடயங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது, அதிலுள்ள புதிர்த்தன்மையுடன் கூடிய அழகியல் சிதைந்துபோகிறது. எதுவும் புனிதமில்லை; ஆனாலும்...:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

காம இச்சையை பெண்களுக்கு அடக்கப் பழகியும், ஆண்களுக்கு விலைமாதுக்களிடம் போய்ச்சேரவும் வழிவகுத்த சமூகத்தில்
மது போன்ற பெண்கள் இயற்கையாய் தோன்றும் இச்சையைக்கூட அடக்கி வைப்பதும் அதற்கு குடும்பத்தை காரணியாய் ஆக்குவது என்பதும் வியப்பில்லை என்றே தோன்றுகிறது.
ஆனால் எத்தனை காலம். இச்சைகள் கூட இருபாலருக்கும் பொதுதானே! பசித்தால் சாப்பிடத்தோன்றுவது இயற்கை, சாப்பிடத்தூண்டுவது ?

சாணக்கியன் said...

கதை அருமை. மது போல உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ள முடிவது ஒரு சாபமோ என்று தோன்றுகிறது. ஏனெனில் அப்படி அடக்கிக்கொள்ளாதவர்களும் நன்றாகவே வாழ்வதால் நாம் என்ன சாதித்தோம்? எதைக் கட்டிக் காக்கிறோம் என்றொரு கேள்வி பின்னாட்களில் வந்துகொண்டே இருக்கும்.

அப்புறம் அந்த மறுமணம் பற்றியது... இப்போ காலம் நிறைய மாறியிருக்கு தமிழ் நதி, விவாகரத்துகள் எந்தளவுக்கு அதிகமாயிருக்கின்றனவோ அதே அளவுக்கு மறுமணங்களும் நடக்கின்றன. பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் டிமாண்ட் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பெண்கள்தான் ஆண்களை தேர்வு செய்கிறார்கள். இந்த விசயத்தில் நீங்கள் நிகழ்கால அவதானிப்புகளை அதிகமாக்கவேண்டும் என்று நினைக்கிறேன் :-)

தமிழ்நதி said...

"பெண்கள்தான் ஆண்களை தேர்வு செய்கிறார்கள். இந்த விசயத்தில் நீங்கள் நிகழ்கால அவதானிப்புகளை அதிகமாக்கவேண்டும் என்று நினைக்கிறேன் :-)"

அப்படியா சாணக்கியன்:) எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. அவரவர் புறச்சூழலுக்கிணங்க நாம் பேசுகிறோம் என்று நினைக்கிறேன்.

விஜி said...

மிக மிக அருமையான கதையை இத்தனைநாள் நான் வாசிக்கவில்லையே என்ற வருத்தம் படித்து முடித்தபின் ஏற்பட்டது தமிழ்நதி! முடிவு நெற்றிப்பொட்டில் அடித்தரார் போலிருந்தது. வாழ்த்துக்கள். பின்னூட்டங்களிலிருந்தும் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.