12.20.2009

போதிமரம்




என்னை விறுக்கென்று கடந்த
உன் விழிகளில்
முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது
உன் உதட்டினுள்
துருதுருக்கும் கத்திமுனை
என் தொண்டைக்குழியை வேட்கிறது.

மாறிவிட்டன நமதிடங்கள்
துடிப்படங்கும் மீனாக நான் தரையில்
துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில்.
துரோகி-தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ
சற்றுமுன்பேஅம்மணமானோம்.
இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில்
எரிகிறது எரிகிறது தேகம்

நம் அட்டைக்கத்திகளில்
எவரெவரின் குருதியோ வழிகிறது
நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன்
ஒழுகிற்று
ஊரும் உயிரும் இழந்த
பல்லாயிரவரின் ஒப்பாரிகள்

வன்மம் உதிர்த்து
வந்தொருக்கால் அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன்
மரணம் என்ற போதிமரத்தின் கீழ்
நிழலில்லை நீயுமில்லை நானுமில்லை
வதைமுகாம் மனிதர்களின்
கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது

தோற்றவரின் வேதம் என்பாய்
சரணாகதி என்பாய்
போடீ போ!
இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை!


நன்றி: காலம் (கனடா)

9 comments:

பூங்குன்றன்.வே said...

//இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில்
எரிகிறது எரிகிறது தேகம்//

//போடீ போ!
இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை!//

வரிகளில் தெறிக்கிறது உணர்வுகளின் பிம்பம், போதிமரம் இன்னும் நூறு வேணும்.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

எல்லாமரங்களும் நிழல்களை தந்துவிடுவதில்லை. சில நிழல்களை நாமே ஏற்றுக்கொள்வதுமில்லை. தியாகத்தின் மறுமுனை துரோகம் என்பார்கள் அத்தொடரை இப்போது மீளாய்விற்கு உட்படுத்தவேண்டியதாயுள்ளது.

ஆனாலும் எந்த துரோகத்தின் மறுமுனையும் தியாகமாக இருந்ததில்லை.

விஷ்ணுபுரம் சரவணன்.

soorya said...

தோழி..
..என் தொண்டைக்குழியை வேட்கிறது....

இதற்கான பொழிப்புரை என்ன?

தெரிந்த பின்னர் கவிதை பற்றிச் சொல்கிறேன்.

தமிழ்நதி said...

நன்றி பூங்குன்றன்,

பூங்குன்றன் என்பது உங்கள் இயற்பெயரா? நல்ல தமிழ்ப்பெயர்.

சரவணன்,

தியாகம் எனப்பட்டது சில பிழைப்புவாதிகளால் துரோகம் எனப் பேசப்படும் காலமிது. நீங்கள் சொல்வதுபோல துரோகம் எனப்பட்டது எக்காலத்திலும் தியாகம் எனப் பேசப்பட வாய்ப்பில்லை. 'தியாகம்', 'துரோகம்'ஆகியவற்றின் வரைவிலக்கணங்களைத் தீர்மானிக்கும் தகுதி எனக்கு இல்லை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

சூரியா,

"உன் உதட்டினுள்
துருதுருக்கும் கத்திமுனை
என் தொண்டைக்குழியை வேட்கிறது"

என்றால் "நீ கத்திபோன்ற கூரிய வார்த்தைகளைக் கொண்டு எனது தொண்டைக்குழியை இரத்தம் வழியக் கீறிக்கிழிக்கும் வேட்கையோடிருக்கிறாய். ஆனால், அதனை உன்னால் (நாகரிகம் கருதி)என் முகத்திற்கெதிரில் சொல்லமுடியவில்லை. சொல்லப்படாத அந்த வார்த்தைகள் உன் தொண்டைக்குழிக்குள் துருதுருத்துக்கொண்டிருக்கின்றன"என்பது பொருள்.:)

இப்போது சொல்லுங்கள்.

பூங்குன்றன்.வே said...

//நன்றி பூங்குன்றன்,

பூங்குன்றன் என்பது உங்கள் இயற்பெயரா? நல்ல தமிழ்ப்பெயர்.//

அப்பா தமிழாசிரியர்.அதனால் தேடி தேடி இந்த பெயரை வைத்தார். இயற்பெயரே தான்.மிக்க நன்றிங்க !!!

soorya said...

நன்கு தமிழறிந்த என் மனைவியிடம் கேட்டேன் பொழிப்புரை என்னவென,
ஏதும் எழுத்துப்பிழை இருக்கலாம் என்றாள் அவள்.

வாயடைத்த புத்தனின் போதிமர உண்மையும்..
நதிக்கரையோரத் தமிழுமாய்..
ஞானியாய் ஆனேன் போ.

நன்றி.

நேசமித்ரன் said...

இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை!

வேறு எந்த சொல் சொல்ல முடியும் இந்த வேதனையை

ஆனால் ஞானம் பெற வேண்டியவர்கள் புத்தர்களா ?

Jerry Eshananda said...

மரணம் என்ற போதிமரத்தின் கீழ்//உண்மை,தமிழ்.உங்கள் வார்த்தைக்கு சக்தி இருக்கிறது,உங்களால் தான் நான் தமிழ் எழத வந்துள்ளேன்,உங்கள் எழுத்துகளில் "கூட்டு மன அதிர்வை உண்டு பண்ணகூடிய சக்தி இருக்கு.வெல்வோம் ஒருநாள்,இந்த இயற்கை அதன் வேலையை செய்யும்."

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது..