1.30.2010

பணம் பற்றிய சில குறிப்புகள்

பாண்டிபஜாரின் குறுகலும் நெரிசலுமான பாதையோரக் கடைகளிலே தொங்கிக்கொண்டிருந்த காதணிகளில் கண்களைக் கொழுவியபடி ஊர்ந்துசென்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் எட்வின் ‘பரமபிதாவே! இவள் தான் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறாள். இருந்தாலும் இவளை மன்னியும்’என்ற குறிப்புத் தொனிக்க நடந்துவந்துகொண்டிருந்தான். குழந்தையைத் தோளில் சாத்தியபடி எங்களருகில் வந்து கைநீட்டிய பெண், ‘குழந்தை இரண்டு நாட்களாகச் சாப்பிடாமலிருப்பதாக’ பழகிய பொய்யைச் சொல்லிக் கைநீட்டினாள். அன்று அது அவள் சொன்ன இருபத்தோராவது பொய்யாக இருந்திருக்கக்கூடும். இருந்தபோதிலும், பத்து ரூபாவை எடுத்துக் கொடுத்துவிட்டு மறுபடி காதணிகளில் தொங்கவாரம்பித்தேன்.

“பிச்சை போடுவதிலும் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது”என்றான் எட்வின். கையில் விசிறிவைத்து எந்நேரமும் ஆட்டியபடியிருக்கும் - பாண் (பிரெட்-கருமம்) இல்லையென்றால் கேக்கைச் சாப்பிடச் சொன்ன சீமாட்டியாக என்னையும், வஞ்சிக்கப்பட்ட பாட்டாளி மக்களின் (ராமதாசினுடையது அல்ல) ஏகத்துவ பிரதிநிதியாகத் தன்னையும் அவன் நினைத்துக்கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் எனக்குண்டு। “அந்தப் பிச்சைக்காரியை எனக்குத் தெரியாது. தவிரவும், பத்து ரூபாயில் எனது குடி மூழ்கிப்போகாது”என்றேன். காதணிகளிலிருந்து எனது கவனம் சறுகிவிட்டது. நான் கூறிய வார்த்தைகளுக்கு வலுச்சேர்த்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு ‘ஈகோ’நிர்ப்பந்தித்தது. “மதியம் இரண்டு மணியானால் எனது வீட்டை அண்ணாந்து பார்த்தபடி நிற்கும் ஐந்து தெருநாய்களும்கூட என்னை உயர்வாக நினைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் அவற்றுக்குச் சோறு வைக்கிறேன்”என்றேன் எட்வினிடம். எனக்குச் சுலபமாகக் கோபமூட்டிவிட்டதை நினைத்து, அவனது அகன்ற வட்டக் கண்களில் ஒரு சிரிப்பு மினுக்கிட்டு மறைந்ததைக் கவனித்தேன்.

ஆனலும், இந்த அன்பு, பாசம், காதல், கருணை, வாஞ்சை, பரிவு, ஒட்டுதல், பிரியம், நட்பு, நேசம், மனிதம், சகோதரத்துவம் எல்லாவற்றையும் அசைத்துப்பார்த்தால் ரூபா அல்லது டாலர் நோட்டுகளின் சரசரப்புச் சத்தம் கேட்குமோ என்று அண்மைக்காலங்களில் தோன்றவாரம்பித்திருக்கிறது। உங்களில் நல்லவர்கள், அன்பானவர்களாயிருக்கும் ஏமாளிகள் சொல்வது எனக்குக் கேட்கிறது… ஆம்…அப்படி நினைக்கக்கூடாதென்றே நானும் நினைக்கிறேன். அன்னை தெரேசா இப்பாழுலகில்தான் பிறந்து வாழ்ந்தார் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனாலும்…

சில்லறைகளைப் பதுக்கி நிமிர்பவளின்-னின் கைகளில் எப்போதாவது விழும் ரூபாய் நோட்டைப் பார்த்து அவள்-ன் கண்கள் சடக்கென்று மலர்ந்துவிடுகின்றனவே! நம்மைவிட வயதான பிச்சைக்காரிகளும்-பிச்சைக்காரர்களும் அவ்வேளைகளில் நன்றிசொல்லிக் கைகுவிக்கும்போது வலிக்கிறது। புன்னகையின் மில்லிமீட்டரை பணந்தான் நீட்டுகிறது. சுருக்குகிறது.

இந்த ஆட்டோக்காரர்கள்…. அவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்? தகிடுதத்தர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், காக்கிச் சட்டை போட்ட கயவாளிகள் என்றெல்லாம் உங்களிடம் நான் சொன்னால், ‘எல்லோரும் அப்படியல்ல; அபவாதம் சொல்லாதீர்கள்’என்று உதாரணங்களோடு பாய்ந்தடித்து வரக்கூடும்। என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தானே ‘கழிக்க’ முடியும்? ஒரே இடத்திற்குச் செல்ல நூற்றைம்பது ரூபாயிலிருந்து முந்நூறு ரூபாய்வரை கேட்க அவர்களால் மட்டுமே முடியும். நீங்கள் இறங்குமிடத்தை நெருங்கும்போது எப்படியான சுருதியில் அவர்கள் பேசவாரம்பிப்பார்கள் என்பதையும் சொல்லவேண்டியதில்லை. திடீரென்று விலைவாசி உயர்வு எங்களோடு ஆட்டோவில் பயணிக்கவாரம்பித்துவிடும். திடீரென்று நாங்கள் சென்று இறங்கவேண்டிய இடமானது பெயர்ந்து அதிக தொலைவிற்குச் சென்றுவிடும். ஆட்டோவில் ஏறும்போது ‘அம்பியாக’ இருந்த ஆட்டோரக்காரர், நாம் இறங்குகிற இடம் நெருங்குகிறபோது ‘றெமோ’வாக (அந்நியன்) மாறிவிடுவார். மேலதிக இருபது அல்லது முப்பது ரூபாவிற்காக இவ்வளவு கூவவேண்டியதில்லை என்று எரிச்சல்படத் தோன்றும். பணத்திற்காக அரசியல்வாதிகள் மேடை மேடையாகக் கூவுகிற கூவுக்கு, போடுகிற குட்டிக்கரணங்களுக்கு இவர்களொன்றும் பரவாயில்லை என்றும் சில சமயங்களில் தோன்றியிருக்கிறது.

பேரம் பேசாமல் அல்லது பேசத் தெரியாமல் சொல்கிற விலையைக் கொடுத்துப் பொருளை வாங்கிச் செல்கிற என்னைப் போன்ற சமூகப் பிறழ்நிலையாளர்களுக்கென்று சில கடைக்காரர்களிடம் பிரத்தியேகமான புன்னகை உண்டு। ஆம் அந்தப் புன்னகை நிச்சயமாக விலையுள்ளது. பேரங்காடிகளில் நாம் வாங்கும் பொருட்களைத் தூக்கிவந்து வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் கடைப்பையனின் புன்னகையின் நீளத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம். முதல் திகதியே வாடகையைக் கொடுத்துவிடும் நம்மைப் போன்ற தீங்கற்ற பிராணிகளிடம் உதிர்ப்பதற்கென்று வீட்டுச் சொந்தக்காரரிடம் கருணை வடியும் சில சொற்கள் இருக்கின்றன. நம்மைப் பாதுகாப்பாக வீட்டில் இறக்கிச் செல்லும் வாடகை வண்டிச் சாரதிகளுக்கு கட்டணத்தை விட அதிகமாக அறுபது ரூபாய்களைக் கொடுக்கும்போது மகிழ்ந்துபோய் நன்றிசொல்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் கொடுத்தாலும் சிரிக்காதவர்களாக வங்கியில் பணியாற்றுகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

அவனுக்கு இன்னுஞ் சில புத்தகங்களை நான் வாங்கிக்கொடுத்திருந்தால் இன்னமும் அதிகமாக என்னை நேசித்திருப்பானா? அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த காப்பைப் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்த கண்களில் மேலதிக பாசத்தைக் கண்டேனா? அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தபிறகு எந்தக் குற்றவுணர்வுமின்றி வேலைகளைச் சொல்ல முடிகிறதல்லவா? தகரத்தில் அடைக்கப்பட்ட பன்றி இறைச்சியை நான்தான் வாங்கிக்கொடுக்கிறேன் என்று, மிக்கி எப்படியோ தெரிந்துவைத்திருக்கிறது। என்னைக் கண்டதும் எனது மூக்குவரை தாவுகிறது. கொஞ்சி முடித்தபிறகும் சிறிதுநேரத்திற்கு எனது கால்களைத் தனது சொரசொரத்த நாக்கினால் நக்கிக்கொண்டேயிருக்கிறது. சிறுபிள்ளைகள் தூக்கப்போனால், வாலை உயர்த்தி உடலைச் சிலிர்த்துப் பயங்காட்டும் ‘புதினம்’ சாவதானமாக எனது கைகளில் தலைவைத்து உறங்குகிறது. அதனிடம் எனக்கென்று பிரத்தியேகமான மூன்றுகால் நடையுண்டு.

அம்மா! உங்களுக்குப் பிடித்த அடர்பச்சையில் விலையுயர்ந்த சேலையை இம்முறை நான் வாங்கிவந்தால், உங்கள் கண்களில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகப்படியான கண்ணீரைப் பார்ப்பேனோ என்னவோ…? உங்கள் மூக்குத்தி என் கன்னங்களில் குத்தும்படியாக இறுக்கி முத்தமிடுவீர்கள் என்று நினைக்கிறேன். பள்ளிக்கூடம் போவதை எப்போதோ நிறுத்திவிட்ட அப்பாவுக்கு இப்போதும் ‘ரீச்சர்’பிடிக்கும். அந்த மஞ்சள்நிறத் திரவத்தினுள் அமிழ்ந்தபிற்பாடு, எனது ‘பெருமைகளை’ச் சொல்லி அவர் அழவாரம்பிக்கலாம்.
அன்பே! இம்முறை தயவுசெய்து வழக்கத்தைவிட அதிகமாகப் பணம் அனுப்பு। நான் போகுமிடங்களுக்கு எல்லாம் உன் காதலை எடுத்துச்செல்வேன்.

உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.

14 comments:

மணிப்பக்கம் said...

வாவ் ... அருமை ... !

:)

அன்புடன் அருணா said...

பணம் தாண்டி மனிதர்களின் மனதில் ஏதாவது இருக்காதா என்ற எதிர்பார்ப்புதான் எப்போதும் ........

Unknown said...

தமிழ் நதி அவர்களுக்கு வணக்கம் ,
நான் தேவராஜ் விட்டலன்
உங்கள் எழுத்துக்கள் செரிவுமிக்கதாக உள்ளன . முதலில் உங்களை வாசித்தபோது எனக்கு பிடிபடவில்லை .
பின் ஒருநாள் முழுவதும் உங்கள் இடுக்கைகள் அனைத்தையும் வாசித்தேன்
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
நம்பிகையுடன்

http://vittalankavithaigal.blogspot.com

kailash,hyderabad said...

//உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.//
ரொம்ப அர்த்தமுள்ள கனமான வரிகள்.

Anonymous said...

நல்ல கருத்துக்கள்....பணம் என்பதை தாண்டி இப்போது எதையும் சிந்திக்கவும் முடியவில்லை

Sai Ram said...

உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.
:)

KarthigaVasudevan said...

//என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தானே ‘கழிக்க’ முடியும்?//

//பேரம் பேசாமல் அல்லது பேசத் தெரியாமல் சொல்கிற விலையைக் கொடுத்துப் பொருளை வாங்கிச் செல்கிற என்னைப் போன்ற சமூகப் பிறழ்நிலையாளர்களுக்கென்று சில கடைக்காரர்களிடம் பிரத்தியேகமான புன்னகை உண்டு। //

//எவ்வளவு அதிகமாகப் பணம் கொடுத்தாலும் சிரிக்காதவர்களாக வங்கியில் பணியாற்றுகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்//

//உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.//

இவற்றை வாசிக்கையில் ஒரு பக்கம் சிரிப்பாய் இருந்தாலும் உள்ளூர எதையும் எதிர்க்கும் திராணியற்ற நமது மனநிலையுடனான குற்ற உணர்வில் நமக்கு நாமே கொஞ்சம் கசந்து தான் போகிறோம்.

மொழி கூட நீங்கள் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி,பூனைக்குட்டி போல உங்கள் கைகளின் கீழ் கொஞ்சி விளையாடுகிறதோ என்று கேட்கத் தோன்றுகிறது.

நன்றாக இருக்கிறது தமிழ்நதி,உங்களது படைப்புகளைப் பார்த்து எழுதக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வருகிறது.புகழ்ச்சி இல்லை...நினைத்ததை சொன்னேன்.

தமிழ்நதி said...

மணி,

என்னது... 'வாவ்'என்று சுருக்கமாக ஒரு பின்னூட்டம்:)

அருணா,

பணம் தாண்டி மனிதர்களின் மனதில் ஏதாவது இருக்காதா என்ற எதிர்பார்ப்பு உண்மையில் ஏக்கமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. சிலசமயம் சுயபரிசோதனையும் செய்துகொள்கிறேன். தெனாலியில் 'எல்லாம் பயமயம்'என்று கமலஹாசன் சொல்வார். 'எல்லாம் பணமயம்'என்பதே இன்றைய உலகுக்குப் பொருந்தும்.

விட்டலன்,

உங்களை மிகவும் சிரமப்படுத்தியிருக்கிறேன் போலிருக்கிறது:) இப்படி எத்தனைபேர் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. செறிவென்று சொல்வதற்கில்லை... இன்னமும் செறிவாக எழுதவேண்டுமென்பதே எனது அவா. அதற்கு நிறைய வாசிக்கவேண்டும். வழக்கம்போல அந்தக் காலம் பின்னோக்கி நகர்ந்துசென்றுகொண்டேயிருக்கிறது.

கைலாஷ்,

உண்மை உண்மையாகவே அருவருப்பைத் தருகிறது. நாம் இத்தனை கீழ்மை பொருந்தியவர்களா என்று சுயநிந்தனை செய்துகொள்ள வைக்கிறது. ஆனாலும்... நாய் வால் சுருண்டேதான் இருக்கும்:)

சதீஷ்குமார்,

எல்லாவற்றின் அடிநாதமாகப் பணந்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் அதுவே தீர்மானிக்கிறது. ஒழுங்கமைந்த வாழ்க்கை உட்பட. நேர்மையைக்கூட அதுதான் தீர்மானிக்கிறாற்போலிருக்கிறது.

சாய்ராம்,

'உண்மை'என்பதன் வரைவிலக்கணந்தான் என்ன? அப்படி ஒன்று உண்மையாகவே இருக்கிறதா? பணம் உள்ளவன், பணம் அற்றவன் என்ற இரண்டு பிரிவுகள்தாம். பணம் உள்ளவன் சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிறான். பணம் இல்லாதவன் தவறுகிறான். பணம் உள்ளவள் வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு எழுதமுடிகிறது. பணம் இல்லாதவள் அதைத் தேடி அலையவேண்டியதாக இருக்கிறது. வசதியும் வசதியின்மையுந்தான் அழகையும் அழுக்கையும் தீர்மானிக்கிறது. என்னமோ போங்கள்...:(

நன்றி கார்த்திகா,

நீங்கள் உண்மையாகவே புகழ்கிறீர்கள். அது பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். எனக்கும் புகழ்ச்சி பிடிக்கும். எனக்கு மட்டுமில்லை:) நிறைய வாசித்தால் எல்லோராலும் என்னைவிட நன்றாக எழுதமுடியும் என்பது எனது கருத்து.

சின்னப்பயல் said...

ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பது நதியின் இயல்பு...அதை விடாமல் வாசித்துக்கொண்டிருப்பது இந்தப் பயலின் இயல்பு..:-)

தமிழ்நதி said...

சின்னப்பயல்,

அண்மையில் யாருடைய புத்தகத்தை வாசித்துத் தொலைத்தீர்கள்:) ஒருமாதிரி எதுகைமோனையில் வறுத்தெடுக்கிறீர்கள். எதையாவது எழுதிக்கொண்டே இருக்காவிட்டால் எடுத்துப் புதைத்துவிடுவார்கள். என் எழுத்தை வாசித்துக்கொண்டேயிருந்தால் நீங்கள் அஞ்ஞானத்தில் புதைந்துவிடுவீர்கள்:) ம்... நானும் யாரையோ வாசித்துக்கொண்டிருக்கிறேன் போல...

Dhanaraj said...

"புன்னகையின் மில்லிமீட்டரை பணந்தான் நீட்டுகிறது. சுருக்குகிறது."
You have beautifully summarized a big thesis into an axiom.I salute your language.

"உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது."
Shakespeare said: "Truth is naked and painful." I forgot the play.

நான் said...

இந்த உலகில் வாழ நடிக்கவும் பொய் பேசவும் உண்மையாக வாழ(?)வும் தெரிந்து கொள்ளா விடில் சந்தோசம்....0

தான்

பதி said...

வாழ்வின் எதார்த்தம் ஒரு :) போட சொல்கின்றது !!!!!

Anonymous said...

உண்மை என்று ஏதுமில்லை என்பதுதான் உண்மை.