33வது புத்தகக் கண்காட்சி ஆரவாரமாக நடந்தேறிக்கொண்டிருக்கிறது. புத்தகக் காதலர்களின் கிறங்கிய கண்களின் முன் புதுவாசனையுடன் கூடிய பக்கங்கள் புரண்டுகொண்டிருக்கின்றன. எப்போதுமில்லாதபடி அரசியல், போராட்டங்கள், புரட்சியாளர்கள், அறிவியல் தொடர்பான புத்தகங்கள் (குறிப்பாக மொழிபெயர்ப்புகள்) அதிகமும் வெளியாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
அந்தப் புத்தகக் காட்டினுள் திசைதொலைத்தவள்போல அலைந்த நாட்களிலெல்லாம் மனதில் பெருவலி எழுப்பிய ஒரு விடயத்தைக் குறித்துப் பேசாமலிருக்க முடியவில்லை. பல பதிப்பகங்கள் ஈழத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களை முன்னிலைப்படுத்தியிருந்தன. அது இனம்புரியாத கசப்புணர்வைத் தந்தது.
“ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையைப் பற்றி உங்களில் அநேகர் எழுதவில்லையே… இந்தச் சமூகத்தின் அறிவுஜீவிகளாகிய நீங்கள் கொடூரமான இனவழிப்பின்போது மௌனமாக இருந்தது ஏன்?”என்ற கேள்வியை, ஒரு இலக்கியக் கூட்டத்தில் வைத்து, ‘புதுவிசை’ சஞ்சிகையின் ஆசிரியரான ஆதவன் தீட்சண்யாவிடம் எழுப்பப்போய், இணையத்தளத்தில் பெரும்சர்ச்சைக்கும் மனவுளைச்சலுக்கும் ஆளானவள் நான். அப்படிப் பார்த்தால் ஈழப்பிரச்சனையைப் பற்றி வெளிவந்திருக்கும் புத்தகங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், என்ன மாதிரியான ஒரு காலத்தில் இந்தப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன? பேசவேண்டிய காலத்தில் மௌனித்திருந்துவிட்டு, ஈழப்போராட்டம் மௌனமாக்கப்பட்டபிற்பாடு பேசுவதன் பின்னுள்ள ‘அரசியல்’யாது? ஈழச்சிக்கலில் என்ன மாதிரியான ஒரு நிலைப்பாட்டை எடுத்த-எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், மேற்குறித்த புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன? இதை வெளியிட்டவர்களின் சமூக அக்கறை எந்த ரீதியிலானது? போன்ற கேள்விகள் எழுகின்றன.
சொல்லித் தேய்ந்த வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் அந்தக் கொடிய நாட்களை ஞாபகங்கொள்ள விரும்பவில்ல. எனினும், எங்கள் வாழ்நிலங்களின்மீது இரசாயனக் குண்டுகள் வீசப்பட்டன; எங்கள் வீடுகள் சரிந்தன; போரின் காரணங்களை அறியாத எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் கைகால்கள் சிதறி சதைக்கூழ்களாகி மடிந்துபோனார்கள்; கல்விக்கூடங்கள் கல்லறைகளாயின; எங்கள் வயல்கள் கருகிக் கட்டாந்தரைகளாயின; தலையறுந்த முண்டங்களாயின எங்கள் முற்றத்து மரங்கள்; பதுங்குகுழிகளே புதைகுழிகளாக கூண்டோடு செத்துமடிந்தார்கள் எங்கள் மக்கள்; கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வன்புணர்வுக்காளாக்கப்பட்டு வதையுண்டு புதையுண்டுபோனார்கள் எங்களது சகோதரிகள்; ஈற்றில் ஒரு இனத்தின் மிச்சசொச்சங்களாக எஞ்சியிருந்தவர்களை ஆடுமாடுகள்போல ஓட்டிச்சென்று அடிப்படை வசதிகளேதுமற்ற கொட்டடிகளில் அடைத்து இழிவுசெய்து மகிழ்ந்தது இனவாதம்.
இந்நிலையில், அரசியல் விவாதங்களை முன்னெடுத்துச்செல்லத்தக்க, ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதற்கான வழிகளை முன்வைக்கக்கூடிய, மீள்புனரமைப்புக் குறித்துப் பேசும் படைப்புகள் உண்மையாகவே வரவேற்கப்படவேண்டியவ. மறுவளமாக, காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத்தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன.
ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ ஏதுமற்றவர்களாக மாற்றப்பட்டு, சுயமதிப்பழிந்து இனவாதத்திடம் கையேந்தி வாழ்ந்திருக்கக்கூடியதொரு நிலையிலும் அவர்களது கண்ணீரை விற்பனைப்பொருளாக்குவது வேதனை தருகிறது. ‘பிரபாகரன்: வாழ்வும் மரணமும்’என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. உறுதிப்படுத்தப்படாத மரணங்களைக் கூவிக் கூவி விற்பதன் பின்னால் இயங்கும் மனம் எப்படிப்பட்டதாக இருக்கக்கூடும்? ‘மௌனமாக இருந்ததன் மூலம் ஒரு இனத்தைக் கருவறுக்க உடந்தையாக இருந்தோமே…’ என்ற குற்றவுணர்வின்றி ‘கதையெழுத’எப்படி முடிகிறது?
அவ்வகையான புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம், அவற்றிலிருந்து அழுகுரல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. அந்த இடங்களைப் பதைப்போடு கடந்துசெல்லும்போது, குருதியின் வாசனையை என்னால் நுகரமுடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த எனது நண்பர்களில் ஒருவர் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் நினைவில் வருகிறது. ‘இவர்கள் இரத்தச் சோறு தின்கிறார்கள்’என்பார் அவர். அவருக்கு நான் சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்:
சோறு கிடைத்தால் போதுமல்லவா நண்பரே! அடுத்தவர்களின் இரத்தமாவது! சதையாவது!
நன்றி: குமுதம்
9 comments:
என்னிடமும்..
ஒரு சவுக்கு இருக்கு
இந்த மிருகங்களை வெளுப்பதற்கு.
கடன் தருகிறேன்.
திருப்பித்தாருங்கள்.
இது என் தாத்தா தந்த சாட்டை.
அழுத்தமான பதிவு தமிழ் நதி ..
http://vittalankavithaigal.blogspot.com/
குமுதத்திலேயே வாசித்து விட்டேன்...
// ‘இவர்கள் இரத்தச் சோறு தின்கிறார்கள்’என்பார் அவர். அவருக்கு நான் சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்:
சோறு கிடைத்தால் போதுமல்லவா நண்பரே! அடுத்தவர்களின் இரத்தமாவது! சதையாவது!//
மீள் புனரமைப்பை பற்றி எழுதாமல் ரணத்தை குத்தி கிளறி எல்லோருக்கும் வேடிக்கைப் பொருளாக்கி வயிற்றுக்குச் சோறிடல் அநியாயம்.சோறே பிரதானம்.(!!!)
:(
The picture at the beginning of the article conveys a terrific message.
That makes the difference between the publication at Kumudham and the Net.
I felt your words as a whiplash on my back.
இதன் எதிர்வினை..!
http://padithurai.blogspot.com/2010/01/blog-post_21.html
you may know that today (01.02.2010)Mr.Suba.vee(Suba.veerapandian)persuaded your essay on "eelam virkappadum"at kalaingar TV.
well said.
சுனாமி பேரலை அடித்து சவமாய் கிடந்தவர்கள் மீதிருந்த நகைகளை கழற்றச்சென்று வளையல் வரவில்லை என்று கையையே ஒடுத்து விரல்களை கத்தியால் அறுத்து மோதிரத்தை எடுத்தவர்கள்..
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துகளில் நரப்பறுந்து குருதி பெருக்கடுக்க, குடல் சரிய விழிகள் குத்திட்டு இருக்கும் சூழலில் ஓடிவந்து கைபேசியையும் பணப்பைகளையும் நகைகளையும் திருடிச்செல்பவனின் மனநிலை ..
ஈழத்தை வியாபாரமாக்குபவர்கள்.
யாரேனும் ஒரேயொரு வித்தியாசம் சொல்லுங்களேன்..
அப்படி மட்டும் சொல்ல முடியாது தமிழ்நதி, சென்ற வாரம் நான் படித்து முடித்து என் நண்பனுக்கு கொடுத்தேன்,
இன்று அவன் கூப்பிட்டு கேட்கிறான், " இத்தனை விடயங்கள் எப்படி மறைக்க பட்டன ?
இவ்வளவு நாள் தமிழ்நாட்டு தமிழர்கள் எதுவும் தெரியாமல் மூடி மறைக்க பட்டது எப்படி ?
எனக்கு இதுநாள் வரை கொடுக்க பட்ட பிம்பம் இதை படித்ததும் மாறி போயிற்று,
உண்மையை இப்போது உணர முடிகிறது " என்கிறான்
அவன் இதுவரை ஈழ விடயங்களை பற்றி பேசுவதை தவிர்த்தவன், இப்போது மணி கணக்கில் பேசுகிறான்,
இந்த விடயங்களை பற்றி இதுவரை பெரிய அளவில் தமிழ் நாட்டில் யாரும் புத்தகங்கள் எழுதா வில்லை.
புத்தகங்கள் வந்த நேரம் தவறு என்று புரிகிற அதே நேரம் அதன் கருத்துக்கள் தொண்ணுறு சதவிதம் உண்மையே !
இப்போதுதான் புத்தகங்கள் சாமான்ய மக்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கின்றன. எல்லா கேடுதல்களிலும் ஒரு நிச்சயம் ஒரு நன்மை இருக்கும், எனக்கு புரிந்தவரை இது நன்மையே. இன்னும் போராட்டம் முடிந்துவிடவில்லை மனதில்வையுங்கள்
அன்பு தமிழ்,
படித்துறை இணையத் தளத்தில் உன் கட்டுரைக்கு எதிர்வினையாக கிருபாநந்தினி
எழுதியிருப்பதையும், அதற்கான எதிர்வினைகளையும் படித்தேன். ரதி மற்றும்
செல்வேந்திரன் ஆகியோர் விசயத்தை சரியாக எதிர்வினையில்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நந்தினிக்கு காழ்ப்புணர்ச்சி மட்டுமில்லாமல் தன்னைப் பற்றிய
(வார்த்தைகளுக்கு கீழே அதை பார்க்க முடியும்) அலட்டல் இருப்பதை கவனிக்க
முடிகிறது. அலட்டல் மூலம் தன் எழுத்தை அதிகபடியாக விற்றுகொள்ள
முயற்சிக்கும் மலிந்த அணுகுமுறையையும் கூட அப்பட்டமாக தெரிகிறது. கட்டுரை
ஒழுங்காக படித்தாலே எதன் மீது உன் கோபம் பாய்ந்திருக்கிறது என்பதை
தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
நீ எதிர்வினை இடுவதாக இருந்தால். அலட்டாமல் மீண்டும் கட்டுரையை
படியுங்கள் என்று மட்டும் கூறினால் போதுமென்று நினைக்கிறேன். எதிர்வினை
இடாமல் இருப்பது இன்னும் நல்லது.
friend of mine sent this letter.
sorry, still i am in a place from where i am not able to type in tamil.
Post a Comment