11.22.2010

பூனையின் கனவு


எங்கிருந்து இதைத் தொடங்குவது என்று தெரியவில்லை.தொடங்கினால் வளரவும் தன்னைத்தான் முடித்துக்கொள்ளவும் அதற்குத் தெரியும்.நாற்காலியில் நம்மைக் கொண்டுவந்து இருத்துவதுதான் பாடு.பல நாட்களாக வலைப்பூவில் ஒன்றுமே எழுதவில்லை.“கீற்று.காம்“இன் யானை நீண்டநாட்களாக அமர்ந்திருக்கிறது.எழுந்திருக்க முடியாத ஆகிருதிபோலும்.கருத்தளவே ஆகும் கனம்.சம்பங்கி,உமா ஷக்தி, ஈரோடு கதிர், கே.பி.சுரேஷ்,செல்வகுமார்(மைசூர்)இன்னுஞ் சிலர் (மின்னஞ்சலில் தேடிப் படம்காட்டப் பஞ்சியாக இருக்கிறது)வலைப்பூவை ஏன் காற்றாட விட்டிருக்கிறீர்கள் என்று கடிந்தும் கனிந்தும் சொன்னார்கள்.ஒவ்வொருதடவையும் பாஞ்சாலி சபதம் நடக்கும்.பாண்டவர்கள் வென்றதுமில்லை.கூந்தலை முடிந்ததுமில்லை.

கனடாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. புதுவிளக்குமாறு அற்புதமாகக் கூட்டியது. நல்லவேளையாக இலையுதிர்காலத்தின் அழகு முற்றிலும் உதிர்ந்துவிடமுன்னதாக வந்து சேர்ந்தேன்.சிவப்பும் மஞ்சளும் பச்சையும் கபிலநிறமுமாக...இலையுதிர்காலத்தைக் காணாத கண்ணென்ன கண்?இசை செவிகளை நனைக்க நடப்பதாகச் சில நாட்கள் பேர்பண்ண முடிந்தது.நடக்கப்போகும் வழியில் வெளியில் கட்டிப்போட்டிருந்த பனிநாயின் கண்களைப் பார்த்து இரங்காமலிருக்க முடியவில்லை.ஏனைய நாய்களைவிட அதற்குக் குளிர் அதிகமாகத் தேவைப்படும்போல... என்று நினைத்தாலும் மனது சமாதானம் ஆகவில்லை.மனதிலிருந்து அந்த நாயை இறக்கிவிட முடியவில்லை.

அவ்வளவு சுத்தமான, அகலமான, அதியழகான நடைபாதையில் தனித்து நடந்துசென்றது சிலநாட்கள் விசித்திரமானதொரு உணர்வைத் தந்துகொண்டிருந்தது.ஒருவேளை மனிதசமுத்திரம் ததும்பிவழியும் சென்னைமாநகரத்திலிருந்து நேரடியாக வந்து இறங்கியது காரணமாக இருக்கலாம்.மெல்லிய குளிர் தோலுக்கு இதம்.நடந்த வழிகளில் நின்றிருந்த பெருமரங்களிலிருந்து இலைகளும் பூக்களும் காற்றில் ஒய்யாரமாக மிதந்து இறங்கி தரையில் சென்று படியும் நளினத்திற்கு ஏதும் ஈடில்லை.

வெளியில் குளிர் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டது.தேன்நிலவு முடிந்து எல்லோரும் அவரவர் வேலைக்குத் திரும்பிவிட்டார்கள்.மிகப்பெரிய சீனியாஸ்(இங்கு வேறு ஏதோ பெயர்)பூக்களைத் தாங்கிக்கொண்டிருந்த செடிகள் இரண்டும் தரையோடு படுத்துவிட்டன.மலர்கள் இருந்த இடத்தில் அடையாளத்திற்குக் குச்சிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன.சன்னல் சட்டகத்தினுாடாக அழகான ஓவியமெனத் தெரிந்துகொண்டிருந்த பெருமரம் தன் மஞ்சள் இலைகளை உதிர்த்துவிட்டு அதீத மௌனத்தோடு நின்றுகொண்டிருக்கிறது.நினையாப் பிரகாரம் புசுக்கென்று இலை துளிர்க்கும் காலத்திற்காக அது காத்துக்கொண்டிருக்கிறது.நீலத்தில் வெள்ளைத் தீற்றல்கள் கொண்டிருந்த வானம் துயரமுகம் கொண்டதாகிவிட்டது.

பத்துமணிக்கு எழுந்திருந்தால் கூடத்தில் வெயில் பார்க்கலாம்।யன்னலினுாடாக ஒளிக்கற்றை இறங்கி சோபாவில் படுத்திருக்கும்.துாசிகள் சுழன்றாடும் வெயில்குழல்.அரிதிலும் அரிதான வெயிலைக் கொண்டாடும் கூதிர்காலத்திற்குள் ஏறத்தாழ நுழைந்தாயிற்று.

நாலரை மணிக்கெல்லாம் இருட்டிவிடுகிறது. இரவெல்லாம் இணையத்தினுள் தலையைக் கொடுத்துக்கொண்டிருந்துவிட்டு பின்னிரவில் உறங்கச் செல்பவர்களுக்கு காலை இல்லை. சிலருக்கோவெனில் மதியமும் இல்லை.இரவில் உறங்கப்போய் இரவிலேயே விழித்தெழுவதான காலமயக்கம்.பெரும்பாலான நாட்கள் ஞாபகத்தை உரசிப் பார்த்து இரவா பகலா என்று நிச்சயப்படுத்திக்கொண்டு எழுந்திருக்கவேண்டியதாயிருக்கிறது.

நிசப்தம்...அப்படியொரு நிசப்தம்!பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பேசும் ஒலிகூடக் கேட்பதில்லை.”த்தா... செவுட்டில ஒண்ணு வுட்டா மூஞ்சி பெயர்ந்து போகும்”-”வாயை மூடிக்கொண்டிரு... பல்லுக் கில்லெல்லாம் உடைச்சுப் போடுவன்”ம்கூம்...யாரும் சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை.தொலைக்காட்சியில் கொலை, தற்கொலை செய்திகளை நாளாந்தம் பார்க்கமுடிகிறது.இரகசியமாக சண்டைபோட்டு, இரகசியமாக அழுது, இரகசியமாகத் தற்கொலை செய்துகொள்வார்களாயிருக்கும்.எல்லோரும் கார்களில் விசுக்கென்று செல்கிறார்கள்.வீதிகளில் ஒரு குருவியையும் காணேன்.செவிகளுக்கு இதமான ஒரு விடயம்... அநாவசியமாக யாரும் “ஹாரன்“எனப்படும் காதுகிழிப்பானை உபயோகிப்பதில்லை.அப்படியொரு கருவி பொருத்தப்பட்டிருப்பதை மறந்துவிட்டாற்போலிருக்கிறார்கள்.

இப்படியொரு வீதி ஒழுங்குள்ள நாட்டில் வாகனச் சாரதிப் பத்திரம் எடுக்கப் பயந்து இருக்கும் என்போன்ற பயந்தாங்கொள்ளிகளுக்கு வெளி மறுக்கப்பட்டிருக்கிறது. கணவரைச் சார்ந்திருக்கும் மனைவியாய் காத்திருப்பு நீள்கிறது. பேருந்தில் திரியலாமென்றாலோ தோல் வலிக்கக் கிள்ளும் குளிர் அச்சுறுத்துகிறது.

சத்தம் இல்லாத தனிமை“வேண்டாம் அஜித்.ஹோ ஹோவென இரைந்தபடி விரையும் சனக்கூட்டத்துள் ஒரு கறுப்பு மனுஷியாய் கலந்துவிட விழைகிறது மனம்.சாக்குப்பைக்குள் கட்டி பனங்கூடலுக்குள் விட்டாலும் பிய்த்துக்கொண்டு ஊரைப் பார்க்க ஓடிவந்துவிடும் பூனைக்குட்டிகள் உதாரணம் பழசுதான்.எனினும், மீண்டும் மீண்டும் காலுரசும் வாஞ்சை அதைப் புதுப்பிக்கிறது.

பூனையொன்று தன் வட்டக் கண்களை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறது.பஞ்சுப்பொதி மேகங்களை என்னமாய் வகிர்ந்து பறக்கிறது விமானம்.மேகங்களுள் மிதந்து மழைக்காலம் மலர்த்தியிருக்கும் மரக்கூட்டம் நடுவினில் சென்று இறங்கும் கனவோடு அது இன்றைக்கும் உறங்கச் செல்கிறது.

17 comments:

Rathi said...

எத்தனை தடவை "Welcome Back" சொல்வது. :)

நிலமும் புலமும் ஒப்பீடா!! நான் சூரியனை சந்தித்து இன்றோடு மூன்று நாட்களாகிவிட்டது.

எனக்கு தொலை பேசும் பழக்கமும் கிடையாது. நான்கு மணிக்கே இருட்டிப்போக தொலைக்காட்சி, புத்தகம் என்று ஏதோ பொழுதும் கரைகிறது.

தமிழ்நதி said...

ரதி,

நீங்களும் இங்குதான் என்று நினைக்கிறேன்.

”எத்தனை தடவை welcome back'சொல்வது...?

:)

இனி அப்படி நேராது என்று நினைக்கிறேன். ”பாஞ்சாலி... பாஞ்சாலி”என்று அங்கே கீச்சுக்குரலில் கத்துவது யார்?

இங்கு வாசிக்க முடிகிறது. எழுதவும் முடிகிறது. ஆனால், நினைத்தபோது வெளியில் செல்லமுடிவதில்லை என்ற விடயம் உறுத்துகிறது. வெளியில் செல்ல முடிந்த வெயில் நகரங்களிலும் பெரும்பாலும் வெளியில் செல்வதில்லை என்பது வேறு. மனம் ஒரு மாயக் குகை.

நேசமித்ரன் said...

அதற்குள் முடித்து விட்டீர்களே :)

//யன்னலினுாடாக ஒளிக்கற்றை இறங்கி சோபாவில் படுத்திருக்கும்.துாசிகள் சுழன்றாடும் வெயில்குழல்.அரிதிலும் அரிதான வெயிலைக் கொண்டாடும் கூதிர்காலத்திற்குள் ஏறத்தாழ நுழைந்தாயிற்று.//

சப்தத்தை யாசிப்பதும் வெயிலை யாசிப்பதுமான இலையுதிர்காலத்தின் எச்சங்கள் மீதமுள்ள வீடு

மொழியழகு பறவையின் ஆகாசக் கனவு

வந்தியத்தேவன் said...

இலையுதிர்காலம் அழகாகத் தான் இருந்தது ஆனாலும் அதனைத் தொடர்ந்துவருகின்ற குளிர் காலத்தை நினைக்கவே நடுங்குகின்றது. உண்மையில் மேல் நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்ம ஊர் சொர்க்கம் தான். உங்கள் வர்ணைனைகள் கலக்கல்.

தமிழ்நதி said...

”அதற்குள் முடித்துவிட்டீர்களே...”

நேசமித்ரன்,

நீண்டநாட்கள் கழித்து வந்திருக்கிறேன். வந்ததும் வராததுமா நீண்ட பதிவு எழுதி படுத்த வேண்டாமே என்று தோன்றியது.

பறவையின் ஆகாசக் கனவு எனக்கும்கூட... வானமே முடிவிலி.

வந்தியதேவன்,

காடாறு மாதம் நாடாறு மாதம் இருப்பதெனத் தீர்மானித்து உழைப்பதே நல்லது. இங்கு கனடாவில் இளவேனில் மிக அழகாக இருக்கும். ஈழம் மற்றும் சென்னையில் ஏப்ரல் மாதத்தில் இருக்கநேர்ந்தால்... அனல் பறந்து திரிவதைப் பார்க்கலாம். வெயிலுக்கு அஞ்சி நிழலும் காலடியில் ஒளியும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ தொடங்குங்க தொடங்குங்க.. :)
நடு நடுவில் நல்லா சிரிச்சேன்..

புதுவிளக்கமாறு .. இரகசியமாக சண்டைபோட்டு ஹ்ம்..

சின்னப்பயல் said...

பாதுகாப்பான சூழல்,அடுத்த வேளை உணவு பற்றிய கவலை இல்லாதிருத்தல்,
தேடி அலையாது தானாகக்கிடைக்கும் நிம்மதியான உறக்கம்,சிறிதும் திருப்பமின்றி தொடரும் தினங்கள் ,இவையெல்லாம் கலைஞனை
மரத்துப்போகச்செய்கின்றனவா ?! [ கொஞ்ச நாள் எந்த பிரச்னையுமின்றி "சும்மா" இருக்கலாம் என்ற சோம்பல் உணர்வு தான் மேலோங்கி நிற்கிறது கட்டுரை முழுதும் .]

ஈரோடு கதிர் said...

||।யன்னலினுாடாக ஒளிக்கற்றை இறங்கி சோபாவில் படுத்திருக்கும்||

மிக அழகாய்... மிக மிக அழகாய் இந்த வரி மனதிற்குள் சுருண்டு படுக்கிறது..

நன்றி

Anonymous said...

,பேச முடியாவிட்டாலும்,புரிந்து கொள்ள முடியாதா என்ன.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நதி.கால் நனைப்பதோ,பயணம் போவதோ,முங்கி குளிப்பதோ ,வேடிக்கை பார்ப்பதோ விதியின் வழி.

Dhanaraj said...

Good to see you writing after a long period of time.
"இங்கு வாசிக்க முடிகிறது. எழுதவும் முடிகிறது. ஆனால், நினைத்தபோது வெளியில் செல்லமுடிவதில்லை என்ற விடயம் உறுத்துகிறது. வெளியில் செல்ல முடிந்த வெயில் நகரங்களிலும் பெரும்பாலும் வெளியில் செல்வதில்லை என்பது வேறு. மனம் ஒரு மாயக் குகை."

Nice way to describe the changing mind.
Keep posting.

தமிழ்நதி said...

முத்துலெட்சுமி,

சிரிங்க... உடம்புக்கு நல்லதாம். “தொடங்கித் தொடங்கி“எனக்கே சலிப்பாக இருக்கிறது. ஒன்றில் முடித்துவிடுவது அல்லது அரங்கத்திலேயே இருப்பது. இரண்டில் ஒன்றைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஆமாம் சின்னப்பயல்,

இது “சும்மா“இருக்கும் காலந்தான். ஆனால், சோம்பி இருக்கும் காலம் அல்ல. ஏதாவது ஒரு சஞ்சிகைக்கு எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறேன். இனிச் சில நாட்களுக்கு வாசிக்கப் போகிறேன் என்று வழக்கம்போல அறிவித்துக் கொள்கிறேன். (வழக்கம்போல அது நடக்காது என்பதையும் இத்தால் அறிவித்துக்கொள்ள வேண்டியதுதான்.)

நன்றி கதிர்,

அரிமா கவிதை பார்த்தேன். “ஆவி“க் கவிதை வந்திருந்தது. ஆவிகள் எப்படித்தான் மீள உயிர்க்கின்றனவோ...:)

சௌகாந்திகம், (இந்தப் பெயரெல்லாம் எங்கே தேடிப் பிடிக்கிறீர்கள்?)

கல்யாண்ஜி ஞாபகம் வந்தது. பேசாவிட்டாலும் பேசிக்கொண்டிருப்பதுதானே உள்ளன்பு?

தன்ராஜ்,

மீள்வருகை வந்து வந்து சலிக்கிறது. தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். தொடர்ந்து வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு. நன்றி.

அன்பரசன் said...

Welcome Back..
Keep posting..

விந்தைமனிதன் said...

அமைதியா அசைஞ்சி நடக்குற தை மாசக் காவேரி மாதிரி... ம்ம்ம்! அழகு!

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கிறது... வாழ்த்துக்கள்...

umavaratharajan said...

தமிழ்நதி, எந்தவொரு சூழலுடனும் ஒன்றித்துப் போக இயலாத மனதின் வெறுமையைத்தான் உங்கள் எழுத்துகளில் நான் உணர்கின்றேன்.உங்கள் எழுத்துகளில் எனக்குப் பிடித்த கவர்ச்சிகரமான அம்சமும் அதுதான்.

KANA VARO said...

மீண்டும் வரவேற்கின்றோம்.

உமாஷக்தி said...

அன்பின் தமிழுக்கு,

ஆம் //தொடங்கினால் வளரவும் தன்னைத்தான் முடித்துக்கொள்ளவும் அதற்குத் தெரியும்.// நாம் தொடங்கி வைக்க நம் கையால் நாமே எழுதிய விதிகளை சுமந்தபடி தனியிரவில் மெளனமாய் கடந்து போனவற்றை காற்றில் தேடியலையும் சிறு பறவைகளாகிவிட்டோம் தமிழ். துயர் மிகுந்த சில வார்த்தைகளை பதிவின் ஊடே தன் இருப்பை மறைத்தும் வெளிக்காட்டியும் ஊடாடிக் கிடக்கின்றது. என்ன சொல்ல தோழி? சீக்கிரம் திரும்பி வாயேன்...பூனைக் குட்டியை அள்ளி அணைத்து ஆறுதல் அளிக்க ஆசையாய் இருக்கிறது. நந்திதா,நீ மற்றும் என் செல்ல பூனைக்குட்டி புத்தகக் கண்காட்சிக்குள் விடுங்கள். சரியா?