1.22.2011

புத்தகக் கண்காட்சி - திருவிழா முடிந்தது - ஞாபகங்கள் முடியவில்லை


கோயில் திருவிழாவும் அதையொட்டிய ஓட்டமும் தேரும் தீர்த்தமும் முடிந்தபிறகு, வெறுந்திண்ணையில் சாய்ந்து படுத்து அந்த “தெய்வீகத் தருணங்களை“ நிறைவோடு சில நாட்களுக்குப் பேசியபடி இருக்கும் அம்மாவின் களைத்த விழிகளை என் கண்ணாடியில் காண்கிறேன்.

புத்தகத் திருவிழா முடிந்து போயிற்று. அதையொட்டிய எதிர்பார்ப்புகள் தீர்ந்து தரிப்புக்குத் திரும்பியாயிற்று. மாயந்தான் என்றறிந்தும் மறுபடி மறுபடி காதலில் காலிடறி விழும் விடலைகளின் மனம்போலும் ஒரு பித்து.

துண்டு துண்டான ஞாபகங்கள்...

தேடி அலைந்த புத்தகங்கள், தேடாமல் கிட்டிய புதையல்கள், தொலைபேசியில் அழைத்துச் சந்தித்த நண்பர்கள், நேரெதிர்ப்பட்டு நெற்றி சுருக்கி அடையாளங் கண்டு புசுக்கென்று மலர்ந்த முகங்கள், சுய அறிமுகம் செய்து கைகுலுக்கி கூட்டத்துள் கலந்து மறைந்துபோனவர்கள், புத்தகங்களின் அழைப்பிற்கு செவிமடுத்தபடி-அவசரங் கலந்த நிதானத்துடன் கோப்பிக் குவளையைக் கையில் ஏந்தியபடி சில நிமிடங்கள் பேசிக் கலைந்த பிரியங்கள், மேடையில் ஒலித்த பொன்மொழிகள், கதைகள், மரக்கறியின் துணிக்கையே மிதக்காத “வெஜிடபில் சுப்“, வெளியில் மக்கள் கூட்டங்களின் பின்னால் திரிந்துகொண்டிருந்த துாசி, வி.ஐ.பி.க்களின் சிற்றுாந்துகள், திருவிழாக் குதுாகலத்துடன் ஓடிப் பிடித்து விளையாடிப் பெற்றோரைப் பாடாய்ப் படுத்திய குழந்தைகள், புத்தகங்களைப் பொருட்படுத்தி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஓரிரு குழந்தைகள்...

யார் யாரைச் சந்தித்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதிகமும் கூடித் திரிந்தது உமா ஷக்தியுடன். அங்கு ஆசுவாசமாக உரையாடியது குட்டி ரேவதியுடன். பரமேஸ்வரி, மணிகண்டன் இருவரும் இந்தப் புத்தகக் கண்காட்சியுடன் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். இருவருமே அரசியல் தெளிவு உள்ளவர்கள். அ.முத்துக்கிருஷ்ணன் சோஃபியாவுடன் வந்திருந்தார். பாலஸ்தீனப் பயணம் பற்றி எழுதுவதாகச் சொன்னார். ச.விஜயலட்சுமியின் சிரிப்பு நெஞ்சுக்குள் நிற்கிறது. பேச இலகுவான தோழி. ஈழவாணி அறிமுகம் ஆனார். சந்தித்துப் பேச நினைத்திருக்கிறேன். பெருந்தேவியின் “உலோக ருசி“யில் கையெழுத்து வாங்கினேன். அத்தொகுப்பில் “68வது பிரிவு“கவிதை பிடித்திருக்கிறது. மேலும், அவருடைய சிரிப்பு அழகாக இருந்தது. சந்திரா, கவின்மலரை கண்காட்சிக்குப் போன நாட்களெல்லாம் கண்டேன். அவசரத்தில் சில வார்த்தைகள் பேசிப் பிரிந்தோம். அஜயன் பாலாவை அடிக்கடி பார்க்க முடிந்தது. அவரைச் சுற்றி அவரது விசிறிகள் எப்போதும் இருந்தார்கள். நேசமித்ரன் வெளியில் கிளம்பிச் செல்லும்போது என்னைக் கண்டுபிடித்தார். அவரை அழைத்துப்போய் உயிர்மையில் அவருடைய கவிதைத் தொகுப்பை வாங்கி, கையெழுத்தும் வாங்கினேன். (கையெழுத்து இருக்கும் புத்தகங்களை யாரும் இரவல் கேட்பதில்லை) நேசமித்ரன் அவசரத்தில் இருந்தார். முகநுால் நண்பர்கள் பலரைச் சந்தித்தேன். பி.கு.சரவணனைப் பார்த்துப் பேசி, புத்தகங்கள் பரிமாறிக்கொண்டோம். அவருடைய தம்பி “கானல் வரி“பிடித்திருந்ததாகச் சொன்னார். பிரபஞ்சன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு காலச்சுவடு “ஸ்டால்“இல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை நான் பெற்றுக்கொள்ள, பழ.அதியமான் அதைப் பற்றிப் பேசினார். அன்று குவளைக் கண்ணனின் கவிதைத் தொகுப்பைக் குறித்து (மொழிபெயர்ப்பு)உரையாற்றிய சுகிர்தராணி ஈழச் சிக்கலைப் பற்றி மனங் கலங்கிப் பேசினார். கேட்டுக்கொண்டிருந்தவர்களும் மனங்கலங்கினார்கள்.

நரனின் “உப்பு நீர் முதலைகள்“கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு தாமதமாகவே செல்லமுடிந்தது. நரனைப் பார்க்கவில்லை. செல்லும் வழியில் மகாகவி இசை, இளங்கோ கிருஷ்ணன் இருவரையும் பார்க்க வாய்த்தது. வழக்கம்போல- நண்பர்களின் ஏறுவரிசை, இறங்குவரிசை தரத்திற்கிணங்க அவர் நடந்துகொள்வதாக நான் குற்றஞ்சாட்டினேன். வழக்கம்போல- நண்பர்களைப் பொறுத்தவரை தனக்கு பாரபட்சங்கள் கிடையாது என்று அவர் அழுத்தமாக காரணகாரியங்களை அடுக்கி மறுத்துரைத்தார். இளங்கோ வழக்கம்போல சம்பிரதாயமாகப் பேசினார். அவருக்குத் தொப்பை போட்டிருக்கிறது. ஆழி செந்தில்நாதனோடு கடந்த ஆண்டு ஒரு அட்டைப் பட விடயமாக கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்ட குற்றவுணர்வு எனக்குள் மீதம் இருந்தது. அவரோ, அதைப் பொருட்படுத்தாமல் மிகவும் பெருந்தன்மையோடு கைகளைக் குலுக்கினார். அவர் மனிதர்.

சாரு நிவேதிதாவைப் பார்த்தபோது (பார்த்தும் பார்க்காமல் போனது எனக்குத் தெரியாது) ”பெண் எழுத்தாளர்களைக் கண்டால் ஓடிவிடுவதாக உங்கள் வலைத்தளத்தில் எழுதியிருந்தீர்களே... அது ஏன்?”என்று கேட்டேன். ”எல்லோரையும் பார்த்து அல்ல”என்று பதிலளித்தார். அவருடைய குரல் மென்மையாக இருந்தது. “இந்த மனிதரைப் பற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்“ என்று நினைத்துக்கொண்டேன்.

ஜெயமோகன் “தமிழினி“யில் நாஞ்சில் நாடனோடும் பொ.கருணாகரமூர்த்தியோடும் அமர்ந்திருந்தார். நாஞ்சில் நாடனைப் பாராட்டி “விஷ்ணுபுரம்“நடத்திய கூட்டம் “நிறைவான கூட்டம்“என்றேன். காக்கா பிடிப்பதாக நினைத்துக்கொள்வாரோ என்று உள்ளுர யோசனை ஓடியது. (எப்படியெல்லாம் அஞ்சும் காலமாயிற்று இது) அவர் ஒரு ஞானியைப் போல சிரித்தார்.

கவிஞர் சுகுமாரனை மாமல்லனோடு பார்த்தேன். என்னைப் பார்த்ததும் கவிஞர் சுகுமாரன் கைகளை உயர்த்தி வணக்கம் சொன்னார். ”என்ன அரசியல்ல சேர்ந்துட்டீங்களா சார்?”என்றேன். ”இல்ல பெரிய எழுத்தாளர் நீங்க... இல்லைன்னா வருசத்துக்கொரு புத்தகம் எப்படிப் போடமுடியும்?”என்றார் புன்னகையுடன். பொருள் பொதிந்த புன்னகை அது. ”இப்போது இல்லை என்றாலும், உங்களைப்போல எப்போதாவது ஆகிவிட மாட்டோமா என்ற நப்பாசை உண்டு”என்று சொல்ல நினைத்தேன். நினைப்பதை எல்லாம் சொல்வதற்கா வார்த்தைகள் இருக்கின்றன? நெஞ்சுக்குள் கல்லெனவோ பூவெனவோ கிடக்கவுந்தானே...?

ஜேர்மனியிலிருந்து வந்திருந்த பொ.கருணாகரமூர்த்தியைப் பார்த்தேன். அருமையான மனிதர். அவருடைய அக்காவை அறிமுகம் செய்துவைத்தார். அவரும் “கானல் வரி“வாசித்திருப்பதாகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். கருணாகரமூர்த்தியை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அதற்குள் அவர் திரும்பிப் போய்விட்டிருந்தார். அடுத்த முறை... அடுத்த முறை... என்று ஒப்புக்காகச் சொல்லி மன்னிப்புக் கேட்க நினைத்திருக்கிறேன். அவர் நிச்சயம் மன்னிப்பார்.

பிரான்சிலிருந்து வந்திருந்த சிவராஜாவைச் சந்தித்தேன். அங்கு புத்தக நிலையம் வைத்திருப்பதாகச் சொன்னார். அவரையும் மீண்டும் சந்திப்பதாக ஒப்புக்கொண்டு.... வழக்கம்போல... என்னத்தைச் சொல்றது?

மாமல்லனை எங்கெங்கும் கண்டேன். நிறையப் புத்தகங்கள் வாங்கினார் என்று நினைக்கிறேன். film festival இல் மீசையோடு பார்த்தபோது அவர் இன்னும் நன்றாக இருந்ததாக நினைவு. புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது மீசையை எடுத்துவிட்டிருந்தார். I.T. க்கு நெருக்கமான முகம். அவருடைய சிறுகதைகள் உயிர்மையில் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. ந.முருகேசபாண்டியனை காலச்சுவடு பதிப்பகத்தில் பார்த்தேன். பேசவில்லை. அவருக்கு என்னைத் தெரிந்திருக்காது. பெருமாள் முருகனைப் பார்த்தேன். பேச உந்தியது மனம். வழக்கமான சங்கோஜம்... பார்க்காததுபோலவும் தெரியாததுபோலவும் கடந்துபோய்விட்டேன். அவருடைய “மாதொருபாகன்“சிறந்த நாவல் என்று முகநுாலில் கதைத்துக்கொள்கிறார்கள். அவசியம் வாசிக்க வேண்டும்.

கவிஞர்-பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்தான் சிரித்த முகத்தோடு நன்றாகவே பேசினார். ”அன்றைக்கு தமிழச்சியின் புத்தக வெளியீட்டு விழா நடக்காமல் இருந்திருந்தால் உங்களது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பேன்”என்று அவர் சொன்னதை நான் நம்பவில்லை. ஆனாலும், அதை அவரிடம் சொல்லவில்லை. நாகரிகம் முக்கியம் மக்களே. ஆரபி என்ற அழகான பெண்ணை அழைத்து, ”இவர்தான் தமிழ்நதி. கானல் வரி எழுதியவர்”என்று அறிமுகப்படுத்தினார். ஆரபி என்ன சொன்னார் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். நம் எழுத்தைப் பற்றி யாராவது நல்ல வார்த்தை சொல்லக் கேட்டால் ஏன் காதுமடல் சுடுகிறது என்று யாராவது சொல்லமுடியுமா?

விஜயமகேந்திரனையும் சங்கரராமசுப்பிரமணியனையும் பார்த்தேன். வணக்கம் வைத்தேன். நின்று பேசமுடியாமல் புத்தகங்கள் அழைத்துக்கொண்டிருந்தன.

அஜயன் பாலாவின் புத்தக வெளியீடு “ஆழி“பதிப்பக “ஸ்டால்“இல் நடைபெற்றது. தாமதமாகவே கலந்துகொள்ள முடிந்தது. அங்கு மீனா கந்தசாமியை அறிமுகம் செய்துகொள்ளக் கிடைத்தது. பிறகு, அவருடைய புகைப்படத்தை பெரிய அளவில் ஏதோவொரு “ஸ்டால்“இல் பார்த்த ஞாபகம். ஆழியில் கீரனுார் ராஜாவைச் சந்தித்தேன். அவருடைய “மீள்குகைவாசிகள்“ என்ற நுாலும், “காஃபிரர்களின் கதைகள்“என்ற தொகுப்பும் இம்முறை ஆழி வெளியீடாக வந்திருக்கின்றன. எளிமையான மனிதர். எனது கவிதைத் தொகுப்பான “இரவுகளில் பொழியும் துயரப்பனி“யை சிலாகித்துச் சொன்னார்.

நாஞ்சில் நாடன் அவர்கள்தான் இந்தப் புத்தகத் திருவிழாவின் மூலவர். இவ்வாண்டுக்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற அவருடைய “சூடிய பூ சூடற்க“ தமிழினியில் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்தது. அவரது முகம் நிறைவில் விகசித்துக்கொண்டிருந்ததுபோல தோன்றியது என் கற்பனையோ... வழக்கமாகவே அவர் அப்படித்தானே...? “கான் சாகிப்“மூன்றாவது முறையாக வாங்கினேன். இரண்டை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். “நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று“, “பச்சை நாயகி“இரண்டும் புதிதாக கண்ணில் பட்டன. ”சாகித்திய அகாடமி வழங்கப்பட்ட பிறகு ரொம்பவும் கவனிக்கப்படுகிறீர்கள் இல்லையா...?”என்று கேட்டேன். ”இந்தப் பரபரப்பு இன்னுஞ் சில நாள் ஓடும்“என்ற தொனியில் பதில் சொன்னார். உண்மையில் சாகித்திய அகாடமி பெருமைப்படவேண்டும்.

சுந்தரராஜன் என்னை நிறைய புகைப்படங்கள் எடுத்தார். அவர் அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கும் தொடர்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

இனிய நண்பர் பாஸ்கர் சக்தி படப்பிடிப்புக்காக தேனிக்குப் போய்விட்டார். அவரை நானும் உமா ஷக்தியும் “மிஸ்“பண்ணினோம். இந்த “மிஸ்“க்கு தமிழ் என்ன? ஒருவேளை அப்படி ஒன்று தமிழில் இல்லையா?

உயிரெழுத்து சுதிர் செந்தில் தன்னை கவிஞர் என்று நான் அறிந்துவைத்திருக்கவில்லையே என்று வருத்தப்பட்டார். அவருடைய கவிதைத் தொகுப்பாகிய “உயிரில் கசியும் மௌனம்“வாங்கினேன். ”இதன்பிறகும் என்னை உரைநடை எழுத்தாளராகவா நினைப்பீர்கள்?”என்று கேட்டார். வாசித்தால் தெரிந்துவிடும். தெரிந்துகொள்ள, எனக்கும் கவிதை தெரிந்திருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரிதான்.

பதிப்பகங்கள் என்று பார்த்தால், ஆனந்தவிகடனுக்குள்ளும் கிழக்கு பதிப்பக “ஸ்டால்“இலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. ஆனந்த விகடனுக்குள் நுழைய முயற்சித்து இடிபட விரும்பாமல் திரும்பினேன். கிழக்கில் ஜெயமோகனின் “உலோகம்“மட்டும் வாங்கினேன். முன்னட்டையில் ”ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!”என்று போட்டிருக்கிறார்கள். அந்த “திரில்“என்னவென்று அறியும் ஆவல் மண்டை முழுக்க நிறைந்திருக்கிறது. இன்னும், “நாய்க்கு நடக்க நேரமில்லாத“ நிலை தொடர்கிறது. விடியலில் மிக அருமையான புத்தகங்கள் கிடைத்தன. அவர்... (பெயர் தெரியவில்லை) ”இதை நாங்கள் ஒரு தொழிலாகச் செய்யவில்லை. ஆத்மார்த்தமாகச் செய்கிறோம்”என்றார். இப்படியும் சில ஆத்மாக்கள் இன்னமும் - அருகிப் போன உயிரினம் போல - எஞ்சியிருக்கின்றன.

காலச்சுவடு, உயிர்மையில் நிறையப் புத்தகங்கள் வாங்கினேன். காயத்ரி எவ்வளவு அழகாகச் சிரிக்கிறார்!!! மனதின் வெண்மை வெளியில் தெரிகிற சிரிப்பு. அவருக்காக இன்னொரு தடவை உயிர்மை போகலாமா என்றிருந்தது. காலச்சுவட்டில் எனது கட்டுரைத் தொகுப்பு “ஈழம்:தேவதைகளும் கைவிட்ட தேசம்“வெளிவந்திருக்கிறது. 1000 ரூபாய் கட்டி வாசகர் சந்தாத் திட்டத்தில் சேர்ந்தேன். 25வீத கழிவில் புத்தகங்கள் வாங்கலாம் என்றார்கள். தாமதமாகச் சேர்ந்ததில் உள்ளுக்குள் வருத்தம். அதை வெளிக்காட்டாமல் ”கழிவு விலையைப் பயன்படுத்தி என் தோழிகளுக்கு வாங்கிக் கொடுப்பேன்”என்றேன். ”ஆத்தா... அப்படிச் செய்யலாமா...?“என்பதுபோல பார்த்தார்கள். “தோழிகள் ஒன்றிரண்டு பேர்களே உண்டு”என்று சமாளித்தேன். கவிதா முரளிதரனால் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்று காலச்சுவட்டில் வெளிவந்திருக்கிறது. நிறைய புதிய தலைப்புகளில் போட்டிருக்கிறார்கள். எனது புத்தகத்தை வெளியிட்ட காரணத்தால் விளம்பரம் செய்கிறேனோ என்று இந்த வாக்கியத்தை எழுதும்போது ஏன் எனக்குத் தோன்றுகிறது. மனக்குரங்கே! அடங்கு.

தேடலின் பயணம் தொடர்கிறது. சில சமயங்களில் நகராமல் தரித்துவிடுகிறேன். சில சமயங்களில் நானே களைத்துச் சாய்ந்துவிடுகிறேன். சில சமயங்களில் சிலர் திட்டமிட்டுச் சாய்த்துவிடுகிறார்கள். ஆனாலும், சளைக்காமல் மறுபடியும் எழுந்து ஓடும் ஆன்மத்துணிவு உண்டு. அதுவரை எழுத்தும் ஓடும்.

கீழே, இம்முறை புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்... கண்ணைப் போட்டுடாதீங்கப்பா...!


1. ரெட் சன் -சுதீப் சக்ரவர்த்தி – எதிர் வெளியீடு
2. தீண்டப்படாத நூல்கள் - ஸ்டாலின் ராஜாங்கம் - ஆழி
3. எங்கே போகிறோம் நாம்?- தமிழருவி மணியன் -விகடன் பிரசுரம்
4. கல் தெப்பம் கலை இலக்கியம் அரசியல் - எஸ்.வி.ராஜதுரை அடையாளம்
5. ஓசை புதையும் வெளி – தி.பரமேசுவரி – வம்சி
6. காகங்கள் வந்த வெயில் - சங்கர ராமசுப்ரமணியன் - புதுமைப்பித்தன் பதிப்பகம்
7. ஈழம்: மக்களின் கனவு – தீபச்செல்வன் - தோழமை வெளியீடு
8. அருந்ததி ராய் - கரண்தபார் விவாதம் - கீழைக்காற்று
9. நிலம் புகும் சொற்கள் - உயிர் எழுத்து
10. புனைவும் வாசிப்பும் - வேதசகாய குமார் - யுனைற்றட் ரைட்டர்ஸ்
11. ராஜிவ் காந்தி கொலை வழக்கு – கே.ரகோத்தமன் - கிழக்கு
12. ஒலிக்காத இளவேனில் - தொகுப்பு தான்யா, பிரதீபா தில்லைநாதன் - வடலி
13. ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முஹம்மது மீரான் - அடையாளம்
14. அடுத்த வீடு ஐம்பது மைல் -தி.ஜானகிராமன் - ஐந்திணை
15. அபூர்வ மனிதர்கள் - தி.ஜானகிராமன் - ஐந்திணை
16. அடி – தி.ஜானகிராமன் - ஐந்திணை
17. அன்பே ஆரமுதே – தி.ஜானகிராமன் - ஐந்திணை
18. ஈழத்தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு – கு.பூபதி –
தோழமை வெளியீடு
19. குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு.ஐயர் - தையல் வெளியீடு
20. காஃப்கா: கதைகள், கட்டுரைகள், கடிதங்கள் - தமிழில்: சா.தேவதாஸ் - வ.உ.சி. நூலகம்
21. சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் - தமிழினி
22. கான் சாகிப் - நாஞ்சில் நாடன் - தமிழினி
23. புதுமைப் பித்தனும் கயிற்றரவும் - ராஜமார்த்தாண்டன் - தமிழினி
24. அய்யன் காளி – நிர்மால்யா – தமிழினி
25. கடைத்தெருவின் கலைஞன் (ஆ.மாதவனின் புனைவுலகம்) ஜெயமோகன் - தமிழினி
26. இரவு – ஜெயமோகன் - தமிழினி
27. சென்னையின் கதை – கிளின் பார்லோ – சந்தியா பதிப்பகம்
28. ஒளியிலே தெரிவது – வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம்
29. அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிலா – காலச்சுவடு
30. அக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ. கிருஷ்ணன்
31. சின்ன அரயத்தி – நாராயண்
32. உலோக ருசி – பெருந்தேவி
33. பஞ்சமர் - கே.டானியல் - அடையாளம்
34. தீண்டப்படாத முத்தம் - சுகிர்தராணி – காலச்சுவடு
35. ஒரு சூத்திரனின் கதை – ஏ.என். சட்டநாதன் - காலச்சுவடு
36. ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி – காலச்சுவடு
37. சப்தங்கள் - வைக்கம் முகம்மது பஷீர் - தமிழில்: குளச்சல் மு.யூசுப் - காலச்சுவடு
38. உப்புநீர் முதலை – நரன் - காலச்சுவடு
39. இரவுச் சுடர் - ஆர் சூடாமணி – காலச்சுவடு
40. புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - நேர்காணல்கள் (தொகுப்பு: கண்ணன்)
41. மாதொருபாகன் - பெருமாள் முருகன் - காலச்சுவடு
42. சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - சண்முகம் சிவலிங்கம் - காலச்சுவடு, தமிழியல்
43. பாழ் நகரத்தின் பொழுது – தீபச்செல்வன் - காலச்சுவடு

44. புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் - சுந்தர ராமசாமி –
காலச்சுவடு

45. பாம்படம் - தமிழச்சி தங்கபாண்டியன் - உயிர்மை
46. காற்று கொணர்ந்த கடிதங்கள் - தமிழச்சி தங்கபாண்டியன் - உயிர்மை
47. பற்றி எரியும் பாக்தாத் - ரிவர்பெண்ட் (தமிழில்.கவிதா முரளிதரன்) காலச்சுவடு
48. பாப் மார்லி இசைப்போராளி – ரவிக்குமார் - உயிர்மை
49. தேகம் - சாரு நிவேதிதா – உயிர்மை
50. இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் - மனுஷ்ய புத்திரன்
51. மழையா பெய்கிறது? சாரு நிவேதிதா
52. கலையும் காமமும் - சாரு நிவேதிதா
53. விமலாதித்த மாமல்லன் கதைகள் - உயிர்மை
54. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை – பொன். வாசுதேவன் - உயிர்மை
55. வேருலகு – மெலிஞ்சி முத்தன் - உயிர்மை
56. இருள் இனிது ஒளி இனிது – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
57. காண் என்றது இயற்கை – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை

58. அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது – எஸ்.ராமகிருஷ்ணன்
59. குறத்தி முடுக்கின் கனவுகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
60. துயில் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
61. செகாவின் மீது பனி பெய்கிறது – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
62. உலோகம் - ஜெயமோகன் - கிழக்கு
63. அமெரிக்க உளவாளி – அ.முத்துலிங்கம் - கிழக்கு
64. தனிக்குரல் - ஜெயமோகன் - உயிர்மை
65. வெயில் தின்ற மழை – நிலாரசிகன் -உயிர்மை
66. எனக்கு அரசியல் பிடிக்கும் - ச.தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்
67. மண் கட்டியை காற்று அடித்துப் போகாது- பாஸ{ அலீயெவா –தமிழில் பூ.சோமசுந்தரம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
68. போர்க் குதிரை – லாரி மேக்மர்த்ரி – தமிழில்: எஸ்.பாலச்சந்திரன் - விடியல்
69. வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்-விக்டர் பிராங்கல் -தமிழில்: ச.சரவணன் - சந்தியா பதிப்பகம்
70. தபால்காரன் - ரோஜர் மார்ட்டீன் தூ.கார்டு – தமிழில்: க.நா.சுப்பிரமணியன் - பானு பதிப்பகம்
71. அழகும் உண்மையும் - ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன் - தமிழில்: நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை
72. போர் தொடர்கிறது – அகஸ்டோ ருவா பஸ்டோஸ் - எஸ்.பாலச்சந்திரன் - விடியல்
73. ஆப்பிரிக்கக் கனவு – எர்னஸ்டோ சேகுவேரா – தமிழில்: எஸ்.பாலச்சந்திரன் - விடியல்
74. கண்ணாடிக் கிணறு – கடற்கரய் - காலச்சுவடு
75. வண்ணநிலவன் கவிதைகள் - மீனாள் பதிப்பகம்
76. நமக்கான சினிமா – மாரி மகேந்திரன் - வம்சி
77. நூறு சதவீத பொருத்தமான… ஹாருகி முரகாமி (ஜி.குப்புசாமி) – வம்சி
78. மூன்றாம் பிறை –மம்முட்டி – கே.வி.ஷைலஜா – வம்சி
79. தென்னிந்தியச் சிறுகதைகள் -கே.வி.ஷைலஜா – வம்சி
80. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி – காலச்சுவடு
81. எங்கே அந்தப் பாடல்கள்? – ஆபிரிக்கக் கவிதைகள்- மொழியாக்கம் - ரவி
82. முகில் பூக்கள் - பி.கு.சரவணன் - தகிதா பதிப்பகம்
83. குடியின்றி அமையா உலகு… - புலம்
84. அம்பர்தோ எகோ (நேர்காணல்கள்) – ரஃபேல் -அகம்புறம் பதிப்பகம்
85. எம்.கே.தியாகராஜ பாகவதர் - இரா.செழியன் - ஆழி
86. ஷோபியன் காஷ்மீரின் கண்ணீர்க் கதை – எஸ்.வி.ராஜதுரை – விடியல்
87. இந்தியா ஒரு வல்லரசு வேடிக்கையான கனவு – அருந்ததி ராய் - விடியல்
88. பெட்ரோ பராNமுh – யுவான் ருல்ஃபோ – எஸ்.பாலச்சந்திரன் - விடியல்
89. நந்திகிராமம்: நடந்தது என்ன?-மொழியாக்கம்: ஈஸ்வரன், அரவிந்தன் - விடியல்
90. சித்திர பாரதி – ரா.அ.பத்மநாபன் - காலச்சுவடு
91. வனம் எழுதும் வரலாறு – சத்நாம்- பிரசன்னா- விடியல்
92. சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்-ஈழம்: காலச்சுவடு பதிவுகள்
93. டால்ஸ்டாய் கதைகள் - வ.உ.சி.நூலகம்
94. டால்ஸ்டாய் கட்டுரைகள் - வ.உ.சி.நூலகம்
95. சித்தார்த்தா – ஹெர்மென் ஹெஸ்ஸே – திருலோக சீதாராம் - பானு பதிப்பகம்
96. உயிரில் கசியும் மௌனம் - சுதிர் செந்தில் - உயிர் எழுத்து
97. நிறுவனங்களின் கடவுள் - யவனிகா ஸ்ரீராம் - உயிர் எழுத்து பதிப்பகம்
98. நளபாகம் - தி.ஜானகிராமன் - ஐந்திணை
99. குள்ளன் - பேர் லாகர் குவிஸ்ட் - தி.ஜானகிராமன் - ஐந்திணை
100. அன்னை – கிரேசியா டெலடா – தி.ஜானகிராமன் - ஐந்திணை
101. சஹீர் - பாவ்லோ கொய்லோ – பி.எஸ்.வி.குமாரசாமி - காலச்சுவடு
102. நாவலும் வாசிப்பும் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
103. காரட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் - நேசமித்ரன் - உயிர்மை
104. மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் - சமயவேல் -ஆழி
105. த பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் - அஜயன் பாலா – ஆழி
106. முள்ளிவாய்க்காலுக்குப் பின் - தொகுப்பு: குட்டி ரேவதி – ஆழி
107. அனுபவ சித்தனின் குறிப்புகள் - ராஜா சந்திரசேகர் - நதி
108. ஏரிக்கரையில் வசிப்பவன் - ஸ்ரீநேசன் - ஆழி
109. மீள்குகைவாசிகள் - கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி
110. காஃபிரர்களின் கதைகள் - தொகுப்பு: ஜாகிர்ராஜா – ஆழி
111. சிறைப்பட்ட கற்பனை – வரவர ராவ்- க.பூரணச்சந்திரன் -எதிர்
112. குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
113. அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் - ஃபனான் - டேவிட் மாசி – விடியல்
114. ஹேம்ஸ் என்னும் காற்று – தேவதச்சன் - உயிர்மை
115. சிலுவையில் தொங்கும் சாத்தான் - கூகி வா தியாங்கோ – அமரந்த்தா, சிங்கராயர்
116. சென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான் - காலச்சுவடு
117. வெள்ளைப் பல்லி விவகாரம் - லஷ்மி மணிவண்ணன்
118. பொய் - அபத்தம் - உண்மை – ராஜ் கௌதமன் - விடியல்
119. க - ராபர்ட்டோ கலாஸ்ஸோ – ஆனந்த், ரவி – காலச்சுவடு
120. வர்ணங்கள் கரைந்த வெளி – தா.பாலகணேசன் - காலச்சுவடு, தமிழியல்
121. பச்சை நாயகி – நாஞ்சில் நாடன் - உயிர் எழுத்து
122. கடல் - ஜான் பான்வில் - ஜி.குப்புசாமி – காலச்சுவடு
123. இடையில் ஓடும் நதி – கூகி வா தியாங்கோ - இரா.நடராசன்- பாரதி புத்தகாலயம்
124. சாயாவனம் - சா.கந்தசாமி – காலச்சுவடு
125. கே அலைவரிசை – முகுந்த் நாகராஜன் - உயிர்மை
126. பதுங்குகுழி – பொ.கருணாகரமூர்ததி – உயிர்மை
127. ம.பொ.சி.யின் சிறுகதைகள் - தொகுப்பு: தி.பரமேசுவரி
128. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – நாஞ்சில் நாடன் - தமிழினி
129. என்ன நடக்குது இலங்கையில்? – அ.மார்க்ஸ் - பயணி
130. லா.ச.ராமாமிருதம் கதைகள் - இரண்டாம் தொகுதி – உயிர்மை
131. கலையும் மொழியும் - கான்ஸ்டான்டின் ஃபெடின் - தி.சு.நடராசன் - விடியல்
132. வன்மம் - பாமா – விடியல்
133. இரவு – தொகுப்பு: மதுமிதா – சந்தியா பதிப்பகம்
அகாந்தக் - சத்யஜித் ரே – செழியன் - ஆழி







42 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்ணைப்போடாமலே கண்ணால் லிஸ்டை வாசித்தேன் ..:)

மிஸ் செய்தேன் என்பதை தமிழில் நேரடியாக ஏன் சொல்லவேண்டும் ..? அதைத்தானே நாம் அந்நேரத்தில் அவரை நினைத்துக்கொண்டோம், என்று சொல்வது ..

Unknown said...

போதுமா இந்த புத்தகங்கள்... மூச்சு வாங்குகிறது.

Unknown said...

மிக்க மகிழ்ச்சி. பதிப்பகங்களுக்கு பணத்திலேதான் குறி. வியாபாரிகளுக்கு முப்பது/முப்பத்தந்து சதவிகிதம் தள்ளுபடி தருவோர் வாசகர்களுக்கு குறந்தபட்சம் இருபது சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை செய்தால் என்ன?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயோ, கலக்கலான போஸ்ட். தூள் கிளப்பியிருக்கீங்க!

ஆனா மாதொருபாகன் என்னைப் பொறுத்தவரையில் நாவலே இல்லை. ஒரு நீள்கதை, அவ்வளவுதான். (ஒற்றைச் சம்பவத்தை வைத்து நீட்டி எழுதினால் நாவலாகிவிடுமா என்ன!)

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் அக்கா

விமான நிறுவனங்கள் புத்தகங்களை கொண்டு செல்ல எடைச் சலுகை அளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
(baggage allowance for books)

எழுத்தாளர்களும், பதிபகத்தினரும், வாசகர்களும் விமான நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுப்போம்.

Unknown said...

தமிழ்நதியின் படிப்புத் தாகம் 'தீராநதி'....

Unknown said...

\\கோயில் திருவிழாவும் அதையொட்டிய ஓட்டமும் தேரும் தீர்த்தமும் முடிந்தபிறகு, வெறுந்திண்ணையில் சாய்ந்து படுத்து அந்த “தெய்வீகத் தருணங்களை“ நிறைவோடு சில நாட்களுக்குப் பேசியபடி இருக்கும் அம்மாவின் களைத்த விழிகளை என் கண்ணாடியில் காண்கிறேன்.//
ஈரமான பதிவு

ஈரோடு கதிர் said...

அழகா எழுதியிருக்கீங்க!

||அவர் சொன்னதை நான் நம்பவில்லை|| :)))))))))

பட்டியல்...
ம்ம்ம்ம்... நிஜமாவே கண்ணக் கட்டுதுங்க!

umavaratharajan said...

புத்தக சந்தைக்குள் போய் வந்த அனுபவத்தை இந்தப் பதிவு ஏற்படுத்தியது.அது சரி, காலச்சுவடு ஸ்டாலில் கண்ணன் இருக்கவில்லையா?

தமிழ்நதி said...

ஒரு குட்டி நித்திரை கொண்டுவிட்டுத் திரும்ப வருகிறேன் நண்பர்களே..

வரதன்,

காலச்சுவடு ஸ்டாலில் கண்ணன் இருந்தார். பரஸ்பர மரியாதையோடு பழகக்கூடிய நண்பர்.நான் வேண்டுமென்றே இந்தப் பதிவில் அவரைப் பற்றி எழுதுவதைத் தவிர்த்தேன். அண்மைய காலங்களில் ஆளுக்காள் துதிபாடுவதும், காக்கா பிடிப்பதும், அவதுாறுகளை அள்ளி வீசுவதுமான ஒரு சூழலை உணர்ந்து வருகிறேன். இந்நிலையில், எனது புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளரைப் பற்றிப் பேசுவது... இது சட்டென்று யாரும் யாரைக் குறித்தும் பழித்துவிடக்கூடிய காலமாய் இருக்கிறது. இப்படி நுட்பமாக கவனித்து அவதானமாக நடந்துகொள்ள வேண்டியிருப்பது துர்ப்பாக்கியமானதே. வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசவேண்டிய அவலச்சூழல் நீங்காதா?

R. Gopi said...

புத்தகத் திருவிழா பற்றி வந்த கட்டுரைகளிலேயே சுவையான கட்டுரை இதுதான்.

அந்தப் புத்தகப் பட்டியல்தான் கொஞ்சம் கண்ணைக் கட்டுகிறது:)

சின்னப்பயல் said...

///நம் எழுத்தைப் பற்றி யாராவது நல்ல வார்த்தை சொல்லக் கேட்டால் ஏன் காதுமடல் சுடுகிறது என்று யாராவது சொல்லமுடியுமா?///....:-)

ஈரோடு கதிர் said...

பலருக்கு நீங்கள் சொன்ன பிறகுதான், காலச்சுவடு சமீபத்தில் உங்கள் புத்தகத்தை பதிப்பித்தது தெரிய வந்திருக்கும்...

யாரோ ஒருவர் பழித்து விடுவார்கள் என்பதற்காக சொல்ல வேண்டிய சகஜமான விசயங்களைக்கூட பதியாமல் தவிர்ப்பது அவசியம் தானா?

காலச்சுவடு கண்ணனாக அவரைச் சந்தித்ததை உங்கள் கட்டுரையிலேயே பதிந்திருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து!

தமிழ்நதி said...

முத்துலெட்சுமி,

ஆமாம். அவரை நாங்கள் நினைத்துக்கொண்டோம். பாஸ்கர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்.. அதேசமயம், கவலைகளுக்கும் காதுகொடுப்பார். தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்வார்.

கிருஷ்ண பிரபு,

புத்தகப் பட்டியலை வாசிக்கவே மூச்சு வாங்குகிறதென்றால்... புத்தகங்களை வாசிப்பது...?

சீராசை சேதுபாலா,

பதிப்பகங்களுக்கும் (சிலவற்றைத் தவிர்த்து) பெரிய வருமானங்கள் உண்டு என்று நான் நினைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல், ஒரு திருப்திக்காக நடத்திக்கொண்டிருப்பார்களாயிருக்கும்.

ஜ்யோவ்ராம் சுந்தர்,

“மாதொருபாகன்“ஐ நான் இன்னும் வாசிக்கவில்லை. சிலசமயம் எனக்குப் பிடிக்கக்கூடும். நீங்கள்கூட எனது வலைத்தளத்திற்கு வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ராம்ஜி,

நீங்கள் எங்கே பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? அமெரிக்காவிலா? புத்தகங்கள் வாங்கிய விலையைக் காட்டிலும் பொதி அனுப்பும் செலவு அதிகமோ என்று எண்ணத் தோன்றியது. கனடாவுக்கு அனுப்ப பத்து கிலோ எடையுள்ள பெட்டிக்கு 4,000 இந்திய ரூபாய்கள். இலங்கைக்கு என்றால், 1500ரூபாய்கள். பயணங்களின்போது சுமந்து செல்வதைக் காட்டிலும் இப்படி அனுப்பிவிட்டுச் செல்வது வசதி. நாங்கள் போவதற்கு முன்பே புத்தகங்கள் போய்க் காத்திருக்கும்.

செந்தில்,

தீராநதியா...? என்னை நானல்லவோ அறிவேன். நான் “தேறா நதி“யாக்கும்:))

நன்றி சித்திரை, அப்படி ஒரு அயர்ச்சியாகத்தான் இருக்கிறது. திருவிழாவின் பின் வரும் அயர்ச்சி, கல்யாணம் செய்தவைத்த பிறகு ஏற்படும் அயர்ச்சி, வீடு கட்டி முடிந்த பிற்பாடு முற்றத்தில் அமர்ந்திருந்து பார்க்கும்போது நிறைவினால் வருமே ஒரு அயர்ச்சி... அப்படி...


நன்றி கோபி,

புத்தகப் பட்டியல் கண்ணைக் கட்டுகிறதா? பணத்தை புத்தகங்களில் கொட்டிவிட்டு வேறு செலவுகளுக்கு கையைக் கட்டி வைத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது பல சமயங்களில்:)))

சின்னப்பயல்,

உங்களுக்கு காதுமடல் சுட்ட அனுபவம் உண்டு போலிருக்கிறதே...

கருத்துக்கு நன்றி கதிர்.

வாழ்க்கையும் மனிதர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். என்ன செய்வது? சொல்லவேண்டியவற்றைக் கூட சொல்ல முடியாமல் போய்விடுகிறது. அதனால் சொல்லக் கூடாதவற்றை பல சமயங்களில் சொல்லியும் விடுகிறேன். வேறென்ன மௌனமாக்கப்பட்ட வார்த்தைகள் வேறெங்காவது வெடிக்கின்றன.

Perundevi said...

தெளிய ஒரு பறவைப்பார்வை தந்திருக்கிறீர்கள். தமிழ்நதி, உங்கள் தொலைபேசி எண்ணை வாங்கிவைத்துக்கொண்டு தொலைபேசாதது சரியில்லைதான். அதற்காக நாம் பேசவே பேசாத மாதிரி எழுதுவது நியாயமா? :) உமாஷக்தியை நான் விசாரித்ததாகச் சொல்லவும்.

தமிழ்நதி said...

பெருந்தேவி,

ஆமாம். நாம் பேசினோம்... எப்போதும் ஒரு அவசரகதியில் பேசிய காரணத்தால் பேசாததுபோல எனக்குத் தோன்றியிருக்குமோ...? பேசிவிட்டுப் பேசாததுபோல மறந்துபோன தமிழ்நதியை என்ன வார்த்தைகொண்டு பேசலாம் என்று நினைத்திருப்பீர்கள் இல்லையா:)))

தொலைபேசி உரையாடல்கள்... நான் அன்றைக்குச் சொன்னதுதான் பெருந்தேவி. பேசினாலும் பேசாவிட்டாலும் நண்பர்களைப் புரிந்துகொள்கிறோம். ஊர் போய்ச் சேர்ந்து வேலைக்குப் போக ஆரம்பித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

உமாவிடம் அவசியம் சொல்கிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

புத்தகக் கண்காட்சி நினைவுகளை சிறப்பாகப் பதிந்துள்ளீர்கள்.

வாங்கிய புத்தகங்களின் பட்டியல் தான் அசரடிக்கிறது. எவ்வளவு பரந்த வாசிப்பு..

நேசமித்ரன் said...

மிகுந்த துரிதத்தில் பனி தேசத்தின் பேச்சைப் போல் பெரு மூச்சுகளால் பேசிக் கடக்க வேண்டியிருந்தது .இத்துணை பெரிய பட்டியலில் நினைவிருத்தி எழுதியிருப்பது மகிழ்வு .நன்றி. உங்கள் பட்டியல் பலருக்கு உதவக் கூடும்

Unknown said...

அன்பின் தமிழுக்கு,

’நினைத்தாலே இனிக்கும்’ என்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் புத்தகக் கண்காட்சியில் பகிர்ந்து கொண்ட பேச்சுக்களும், அன்பும், புத்தகங்களும்தான். உனக்கென்ன சில நாட்கள் அளவலாவிவிட்டு விமானத்தில் ஏறி பறந்துவிடுவாய். உன் நினைவுகள் சுற்றியலைய நீ பிரியத்துடன் பரிசளித்த புத்தகங்களின் உன் முகம் தேடுவேன். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் எனது பட்டியலில் (விரைவில் வெளியிடப்படும் ;))) உள்ள புத்தகங்களை பாதிக்கு மேல் நீ (பரிசு)அளித்ததுதான். இப்படி யாரும் என்னைக் கொன்றதில்லை தமிழ் - அன்பால்!!! மிகவும் நெகிழச் செய்துவிட்டாய்.

ஆம் பாஸை மிக மிக மிஸ் செய்தோம். புத்தகக் கண்காட்சி என்பதுடன் நண்பர்களின் சந்திப்பும் சேர்ந்தே இருப்பதால் முக்கிய நண்பர்கள் குறையும் போது சில சமயம் வெறுமையாக இருந்தது.

அருமையான பகிர்வு தமிழ். இம்முறை நான் ஐந்து தினங்கள் மட்டுமே கண்காட்சிக்கு வந்திருந்தாலும் ஐந்து நாட்களும் உன்னுடன் சுற்றித் திரிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. (கூடவே வந்து இம்புட்டு புக்ஸ் வாங்கினியா?) உன் வாசிப்பு மலைக்கச் செய்கிறது, உன் எழுத்து வசீகரிக்கச் செய்கிறது. எல்லாமும் சேர்ந்து தமிழ், உன்னை நேசிக்கச் செய்கிறது. வாழ்த்துக்கள் தோழி! அடுத்தக் கண்காட்சியில் குறைந்தது நான்கு புத்தகங்களையாவது எதிர்ப்பார்ப்பேன். எனவே பதிவுகள் எழுதுவதை குறைத்துக் கொண்டு புத்தகங்கள் எழுது என்பதே எனது வேண்டுகோள். (வலைத்தள நண்பர்கள் கோவிக்க வேண்டாம்)

பெருந்தேவி, உங்கள் அழகான சிரிப்பை மறக்கவே முடியாது. உங்களால் மட்டும் அப்படியே புத்தம் புதியதாய் எப்படி உங்களால் இருக்க முடிகிறது என வியப்பேன். அத்துஅன் வருடத்துக்கு ஒரு முறை சந்தித்தாலும் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர உங்களால் மட்டுமே முடியும் பெருந்தேவி!!! தனிமடல் அனுப்புகிறேன். ;)))

-/பெயரிலி. said...

/கிழக்கில் ஜெயமோகனின் “உலோகம்“மட்டும் வாங்கினேன். முன்னட்டையில் ”ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!”என்று போட்டிருக்கிறார்கள். அந்த “திரில்“என்னவென்று அறியும் ஆவல் மண்டை முழுக்க நிறைந்திருக்கிறது.

அடடா! தமிழ்நாட்டிலே திறைகூடச்செலுத்துகின்றீர்கள்போலவிருக்கே?
ஸ்ரீலங்கா அரசுபாதுகாப்புநிதிக்கு இருபதாண்டுக்கு முன்னாலே என் சம்பளத்திலிருந்து கொடுத்ததுபோல...

தெரியாமற்றான் கேட்கிறேன்; பதிலை நேரடியாகச் சொல்லுங்கள். எதற்காக உலோகம் வாங்கினீர்கள்? என்ன இழவு த்ரிலை இங்கே பெற்றீர்கள்?

உங்களைப் போல விடுதலைப்புலிகள் அது விடுதலைப்புலிகள் இது என்று எழுதுகின்றவர்களே சனம் செத்ததை வைத்துப்பிழைக்கும் இவர்களுக்கு... எக்கேட்டாவது கெட்டுப்போங்கள்....

தவறாக எண்ணாதீர்கள்; இப்பதிவு வெறுமனே உங்களுக்குத் தெரிந்தவர்கள் இவர்கள் என்ற விளம்பரப்பட்டியற்கணக்காகத்தான் முடிந்திருக்கின்றது.
:-(

பா.ராஜாராம் said...

அதகளம் தமிழ்நதி!

புத்தகங்களை விடுங்கள் ( வயிறு எரிவதை இப்படி தப்பித்தால்தானே உண்டு)

புத்தக சந்தை குறித்தான பதிவுகளில் மிக நெருக்கமாக, ஜாலியாக, விஷயங்களும் கூடி, வந்த பதிவு இது!

மயூ மனோ (Mayoo Mano) said...

அக்கா, நான் கண் போட்டுவிட்டேன் உங்கள் புத்தகப் பட்டியல் மீது. :)) வாசிக்கவேண்டுமென்று உங்களால் எனக்கு சொல்லப்படும் பட்டியலாக வைத்துக் கொள்கிறேனே. பொறுத்தருள்க. :)

வந்தியத்தேவன் said...

அப்பாடா மூச்சு வாங்குது உவ்வளவையும் இந்த வருடத்திற்க்குள் வாசித்து முடிக்க உங்களுக்கு நேரமிருக்குமா?

பஞ்சமர் பலதடவை வாசித்த நாவல். அந்த நாவலில் வரும் சில பாத்திரங்கள் அந்த நாட்களில் வாழ்ந்த மனிதர்கள். அ,முத்துலிங்கத்தின் இன்னொரு புத்தகமும் பரவலாக விற்கப்பட்டிருந்தது எனக் கேள்விப்பட்டேன். அவரின் "அங்க இப்ப என்ன நேரம்? " என்ற புத்தகத்தை லண்டனில் உள்ள நூலகம் ஒன்றிலும் கண்டேன். புலம் பெயர் வாழ்க்கையை அழகாக எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே.

கவிஞர் இசை said...

. நினைப்பதை எல்லாம் சொல்வதற்கா வார்த்தைகள் இருக்கின்றன? நெஞ்சுக்குள் கல்லெனவோ பூவெனவோ கிடக்கவுந்தானே...?
இதையெல்லாம் ஒழுங்கா படிச்சிருக்கனும். அடுத்த தடவை பார்க்கும் போது எல்லா புத்தகத்திலிருந்தும் கேள்வி கேட்போம்..

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

தமிழ்நதி said...

நன்றி செந்தில்வேலன்,

இவ்வளவு புத்தகங்களையும் வாங்கும்போது இருந்த தீவிர மனநிலையில் அதைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. மேலும், ஒரேயடியாக வாங்காத காரணத்தால் எண்ணிக்கையும் புலனாகவில்லை. “அசர அடித்திருப்பதாக“ நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போது வாசித்து முடித்துவிடவேண்டும் என்று தோன்றுகிறது.

நேசமித்ரன்,

எனது பட்டியலை பதிப்பகத் தரவுகளுடன் கொடுத்திருப்பதன் காரணம் மற்றவர்களுக்கு உதவக்கூடும் என்பதனாலுந்தான்.அன்பிற்கு நன்றி.

உமா, சுற்றவர இருக்கும் மனிதர்கள் மீது இயலக்கூடிய அன்பைச் செலுத்தவேண்டும் என்பதை நீ மிகவும் மிகைப்படுத்திச் சொல்கிறாய். நான் அப்படித்தான் இருக்கிறேன். நீயும் நிறைய எழுதவேண்டும், நிறைவாக எழுதவேண்டும் என்று சொல்வதன்றி வேறென்ன சொல்ல...? நெகிழ்வதை நாம் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டுமோ...?

”அடுத்தக் கண்காட்சியில் குறைந்தது நான்கு புத்தகங்களையாவது எதிர்ப்பார்ப்பேன். எனவே பதிவுகள் எழுதுவதை குறைத்துக் கொண்டு புத்தகங்கள் எழுது என்பதே எனது வேண்டுகோள்.”

இல்லை உமா. அப்படி ஒரு எண்ணமே இல்லை. ஏனென்று நேரில் சொல்கிறேன்.

பெயரிலி,

”தெரியாமற்றான் கேட்கிறேன்; பதிலை நேரடியாகச் சொல்லுங்கள். எதற்காக உலோகம் வாங்கினீர்கள்? என்ன இழவு த்ரிலை இங்கே பெற்றீர்கள்?”

கோபமாகக் கேட்டிருக்கும் கேள்விக்கு நிதானமாகப் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். ஜெயமோகனின் புனைவுகள் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக காடு நாவல். மற்றபடி அவருடைய பிதாமகத் தன்மைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படைவாதக் கருத்துக்கள் (ஈழப்பிரச்சனையில் ஆயுதம் ஏந்தியதை வன்முறை என்ற கணக்கில் பேசியது, இந்திய தேசியத்தை, ஒருமைப்பாட்டை துாக்கிப் பிடிக்கும் அடிநாதம்) பிடிப்பதி்ல்லை. pocket novel வடிவிலான, “ஈழப்போர் பின்னணியில்“என்ற மலினமான வணிக உத்தியுடன் கூடிய வாசகத்தை முன்னட்டையில் கொண்ட நாவலை உள்ளுக்குள் எரிச்சலை உணர்ந்தபடி வாங்கினேன். கிழக்கைப் பற்றி உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. அதை வேறு எவராகிலும் எழுதியிருந்தால் வாங்கியிருக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறேன். கண்ணில் பட்டதும் பிடிக்காமல் போன அந்த நாவல் வடிவத்தை (ஆனால், விற்பனையில் அது முன்னணியில் நிற்கிறதாம்)வெளியில் நின்று விமர்சிப்பதைக் காட்டிலும், படித்துப் பார்த்து அதன் உள்ளடக்கத்தை, புனைவின் மூலமான அதிபுனைவுகளை அறிந்துகொள்வதில் ஒன்றும் நட்டமில்லையே... “ஈழப்பிரச்சனையை இவர் எப்படித் திரில்லாக்கினார்?”என்பதன் அடிப்படையில் எழுந்த திரில் அல்லது திகில் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் எழுதிய திரில் வேறு. நீங்கள் புரிந்துகொண்ட திரில் வேறு. சாவின் திகிலை திரில்லாக மாற்ற முடிந்தது எவ்விதம் என நான் அறிய விரும்பினேன். அவ்வளவுதான்.

உங்கள் கடைசி வாக்கியத்துடன் நான் உடன்படவில்லை. ஆனாலும், அதைச் சொல்வதற்குண்டான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. வலைத்தளத்தில் எழுதுபவற்றை நான் பதிவுகளாகவே பார்க்கிறேன். அரிதாக அவற்றுட் சில படைப்புகளாக அமைந்துவிடுகின்றன. சிக்கலான வாழ்விலிருந்து தப்பியோடும் ஒரு வழி அல்லது வடிகால், நாட்குறிப்பு (மடல், லெட்டர்... இல்லை கடிதம்னே வைச்சுக்கலாம் தொனியில்) இன்னபிறவற்றுள் ஒன்றாகவே பார்க்கிறேன். ஞாபகங்களின் சேமிப்பிடம் இந்த வலைத்தளம். புத்தகக் கண்காட்சிக்கு ஓடியோடிப் போய்க்கொண்டிருந்த அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது மேற்கண்டவைதாம் ஞாபகத்தில் வந்தன. அதை வெளியில் கொட்டி ஆசுவாசப்பட்டேன். இத்தனை காலமாக தமிழ்மணத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னை ஓரளவுக்கு நீங்கள் அறிவீர்கள். இருந்தும்... இப்படிச் சொல்லிவிட்டீர்கள். பரவாயில்லை. அப்படியொரு சித்திரம் உங்கள் மனதில் விழும்படியாக நடந்துகொண்டிருந்தால்.. வேறென்ன..மன்னிக்கவும்.

நன்றி ராஜாராம் அவர்களே,

நான் ஜாலியான விசயங்களே எழுதக்கூடாதோ என்று இப்போது தோன்றுகிறது. தீவிரமான விடயங்களிலிருந்து வெளிவந்து ஆசுவாசப்படுவதற்காகவே சில விசயங்களை எழுதுகிறோம். ஆனால், ஒரு சட்டகத்துள் அடைபட்டால் வெளியே வரமுடியாது போலிருக்கிறது.

வந்தியத்தேவன்,

ஒரு வருடத்துக்குள் இவ்வளவையும் வாசித்து முடித்துவிடுவேன். ஆனால், இந்த ஆண்டு வேறு மனச்சிக்கல்களுள் மாட்டிக் கொள்ளாமலிருந்தால்.

அ.முத்துலிங்கத்தின் மொழிநடை எனக்கு மிகவும் பிடிக்கும். அநேகமாக அவருடைய எல்லாப் புத்தகங்களும் படித்திருக்கிறேன்.

-/பெயரிலி. said...

சொன்னது எல்லைமீற்றியோ காட்டமாகவோ இருந்திருந்தால், மன்னிக்கவேண்டும் தமிழ்நதி. ஆனால், கருத்தேதோ அதே.

எவருமே எவரைப் பற்றியும் முழுதாக அறிந்துகொள்ளமுடியாது.. ஆனால், இணையத்திலே உங்களை வாசித்தை வைத்துப் பார்க்கும்போது புரிந்தகொண்ட அளவிலே, நீங்கள் உலோகம் புத்தகத்துக்குச் செலவு செய்திருப்பீர்கள் என்பதை நம்பமுடியவில்லை. அஃது அவ்வகையிலே மிகவும் ஏமாற்றமே. ஒவ்வொரு சதத்துளி அப்படியானவர்களுக்குக் கொடுக்கப்படுவதும் இந்தியாவின் மேலாண்மையைக் காவல்காக்க புண்ணுடம்புக்கு பொற்சட்டைபோடும் ஆட்களுக்கு நாம் அடிமைகளென்று காட்டுவதாகவே அமைந்துவிடும். எரியும்போது, கண்ணைமூடிக்கொண்டு இந்தியதேசியப்பஞ்சுமிட்டாய்மூட்டைக்குள்ளே பதுங்கிக்கொண்ட வியாபாரிகளுக்கும் மெய்ஞானக்குடிலுக்குள்ளே மகுடி ஊதிக்கொண்டிருந்த சொல்மூட்டைகளுக்கும் சுடலையிலே உருக்கொண்டு சாம்பல்பூசி விறுவிறுக்க ஆடும் உரிமை இருக்கிறதோ என்னமோ, அதை மறுதளிக்கும் தார்மீகக்கடமை எமக்குள்ளது... குறைந்தளவு எனக்குள்ளதெனக் கருதுகிறேன். அதனடிப்படையிலேயே சொன்னேன்.

உங்களின் விடுதலைப்புலிகள்.. ஷோபா சக்தி தொடர்பான பதிவிலே பெருமளவிலே ஒத்துக்கொள்ளமுடிந்தது. ஆனால், புத்தகக்கண்காட்சி தொடர்பான பதிவு, நீங்களே ஒருமுறை ஆற அமர இருந்து வாசித்தீர்களென்றால் புரியும்... பட்டியலாகவே முடிந்துவிட்டது. தவறாக எண்ணாதீர்கள்; உங்கள் கருத்து உங்கள் சுதந்திரம். ஆனால், தொடர்ந்து வாசிக்கின்றவனென்ற அளவிலும் எல்லையிலுமேதான் என் கருத்திருக்கின்றன; தொடர்ந்து வாழ்த்திக்கொண்டிருக்கும் & ஆமோதித்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் சில தருணங்களிலே படைப்பாளியின் வல்லமையை மழுங்கடித்துவிடுகின்றார்கள். தவறாக ஏதும் எல்லைமீறிச் சொல்லியிருந்தேனென்றால், மன்னிக்கவேண்டும். தமிழகத்தின் படைப்புலகத்தினை எட்டவிருந்து காணும் என்னைவிட அங்கு வசிக்கும் நீங்கள் மிகவும் அறிவீர்கள். படாபட்டோபமும் படைப்பியல்பிழந்த ஆளுமைப்புனைவுமே கொண்டதாகிப் பெருமளவு நிற்கின்றது. அவதானத்தோடில்லாவிடின் விழுங்கிவிடும். எனக்குப் பட்டது அவ்வளவே. இதளவிலேதான் என் கருத்தைச் சொன்னேன். தவறாக இருப்பின், மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் இவ்விதம் நிகழாது.

ராம்ஜி_யாஹூ said...

சனம் செத்ததை வைத்துப்பிழைக்கும் இவர்களுக்கு.

பெயரிலியின் இந்த கருத்தோடு நான் முற்றிலும் உடன் படுகிறேன்.

புலம் பெயர்ந்த/ ஈழத்தில் வாழும் தமிழர்கள், கண்டிப்பாக இந்த மாதிரி படைப்புக்களை/புத்தகங்களை ஊக்கு வித்தல் கூடாது.

ஜெயமோகனின் பிற புத்தகங்களை நீங்கள் வாங்கலாம் நான் குறை சொல்ல வில்லை.
ஆனால் நீங்களே (இதற்கு முன் விகடன், குமுதம் மீது குற்றச்சாட்டு கூறிய நீங்களே) இம்மாதிரி புத்தகங்களுக்கு ஆதரவு அளிப்பது, அறநெறி அல்ல.

தமிழ்நதி said...

நன்றி ராமலஷ்மி.

பெயரிலி,

உங்கள் கருத்தை, அது காட்டமானதாக இருந்தபோதிலும் கவனத்தில் கொள்கிறேன். “அவதானத்தோடு இல்லாவிடில் விழுங்கப்பட்டுவிடும்”சூழலை உணர்கிறேன். உலோகத்தை வாங்கியமைக்கான காரணத்தை விளக்கிச் சொல்லியிருந்தேன். புறக்கணிப்பதைக் காட்டிலும் உட்புகுந்து பகுத்தறிதல் நல்லதெனத் தோன்றியது. உங்களைப் போன்று நியாயம் சார்ந்து இயங்குபவர்களின் கருத்தில் நான் மரியாதை வைத்திருக்கிறேன். மன்னிப்பு என்பதெல்லாம்... பெரிய வார்த்தை. வழக்கம்போல நேரம் இருக்கும்போது வந்து வாசித்துப் போனால் மகிழ்வேன். கருத்துச் சொன்னால் அகமகிழ்வேன்; காட்டமோ அகாட்டமோ சொல்பவர்கள் சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உண்டு.

ராம்ஜி, மேற்சொன்ன பதிலை உங்களுக்கானதாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.

”நீங்களே (இதற்கு முன் விகடன், குமுதம் மீது குற்றச்சாட்டு கூறிய நீங்களே) இம்மாதிரி புத்தகங்களுக்கு ஆதரவு அளிப்பது, அறநெறி அல்ல.”

என்ற கூற்று தவறானது அல்லது மறதியின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது ராம்ஜி. நான் குற்றம் சாட்டியது ஆனந்தவிகடன், குமுதத்தை அல்ல. நீங்கள் ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது நேர்காணலை மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறீர்களானால், அதுவும் தவறு. ஆனந்த விகடனில் வெளியாகிய எனது நேர்காணல் அப்போது அங்கு பணியாற்றிய விஜயன் என்ற தனிநபரின் பரபரப்பு வேண்டிய ஒப்பனைப் பூச்சுத் திறனால் திரிக்கப்பட்டு வெளியாகியிருந்தது. அதற்கான எதிர்வினைகள் நான் எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் திடீர் திடீரென்று கிளம்பிவருகின்றன. அண்மையில் கணன் சுவாமி என்பவர் அதைப் பற்றிப் பிடித்து ஆரம்பித்து என்னைக் குறித்து அவதுாறாக வாரி இறைத்திருந்தார். விஜயன் எங்கிருந்தாலும் வாழ்க.

குமுதத்தில் வெளியாகிய ”ஈழம்:இங்கு விற்கப்படும்“பத்தியில் நான் குறிப்பிட்டது நக்கீரன் சஞ்சிகை, மற்றும் ஈழம்-உலகப் பிரச்சனைகள், அரசியல் ஆளுமைகள் தொடர்பில் ஆழமான புரிதலற்று எழுந்தமானத்தில் எழுதப்படும் புத்தகங்களைக் கூவிக் கூவி விற்கும் ஒரு சில பதிப்பகங்கள் குறித்தே. தேசியத்தலைவர் இறுதிப் போரில் மறைக்கப்பட்டுவிட்ட பின்பு, அவரைப் பற்றிய செய்தியைத் தாங்கிய பத்திரிகையை அவரே வாசித்துக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு புகைப்படத்தை அட்டையில் போட்டு விற்பனையில் சாதனை படைத்தது நக்கீரன்.

சாருவின் “தேகம்“கூட வாங்கியிருக்கிறேன். “சரோஜாதேவி எழுத்து“என்று மிஷ்கினால் தடாலடியாக ஒற்றைச் சொல்லில் நிராகரிக்கும்படியாக சாரு அப்படி என்னதான் எழுதியிருப்பார் என்று அறியும் ஆவலினால் வாங்கினேன். மேலும்,இணைய சர்ச்சைகள் அதற்குத் துாபமிட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை. கருத்துக்கு நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

தமிழ்நதி அக்கா

நான் விகடன், குமுதம் என்று குறிப்பிட்டது ஒரு உதாரணத்துக்குத்தான். கவலை kolla vendaam

உங்களின் ஒரு பதிவில் நீங்கள் ஊடகங்கள் ஈழத் தியாகத்தை வணிகத்திற்கு பயன் படுத்துகின்றன என்று எழுதியதும் , நான் பின்னூட்டத்தில் சிறிய நாடு எனவே மனம் சிறிதாக இருக்கிறது என்று எழுதியதும், பின்னர் உங்களிடம் மன்னிப்பும் கேட்டேன். அந்தப் பதிவின் சுட்டி தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்திய சுதந்திர வேள்வியின் போது ஒரு கொள்கை நிலவியதாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தை பகடி செய்யும், கிண்டல் செய்யும் எந்த ஒரு நிகழ்வையும்/படைப்பையும்/நாடகத்தையும் புறக்கணித்தல். (திலீபன், தனு போன்றோர் கடைபிடித்த கொள்கை அது)

ஆனால் அண்ணா (பேரறிஞர் அண்ணாதுரை) விடம் ஒரு கொள்கை உண்டு. மாற்றான் தொட்டது மல்லிகைக்கும் மனம் உண்டு என்று.

நீங்கள் அண்ணா வழி போல

உங்கள் மீது பாசமும், அன்பும், மதிப்பும் இருக்கும் உரிமையால் தான் இந்த அளவு விவாதம் செய்கிறேன். உங்கள் நேரத்தை வீண் அடிப்பதற்கு மன்னிக்கவும்.

தமிழ்நதி said...

ராம்ஜி,

நான் திலீபன் வழிதான். (ஆனால், அறியாமல் புறக்கணிப்பேன் என்று திலீபன் எங்கு சொன்னார்?) அண்ணா சொன்னதுபோல், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு“ என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அறியாமல் புறக்கணிப்பதை விட அறிந்து கடந்து செல்கிறேன். (உணர்ச்சிவசப்பட்டு இதை பட்டிமன்றத் தலைப்பாக்கிடாதீங்க மக்களே)

மேலும், ஜெயமோகனின் புத்திசாதுரியத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. இப்போது நிலவும் சூழலில் ஈழத்தைப் பின்புலமாக வைத்துக் கதை பின்னியிருப்பாரேயன்றி, அதைக் கீழிறக்கியிருக்க மாட்டார். எதிர்வினைகள் தந்த அனுபவத்தின் வழியில் சென்றிருப்பார் என அனுமானிக்கிறேன்.

வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பவர்களை எனக்குத் தெரியும். நீங்களும் மாறியிருக்கிறீர்கள் ராம்ஜி.:)))

கோநா said...

விரிவான, விளக்கமான பதிவு தமிழ்நதி. ஒரு வருடத்துக்கு இத்தனை புத்தகங்களா? இதற்கு பேசாமல் நீங்கள் IAS படித்து பாஸ் பண்ணிவிடலமே! இப்படியே நீங்கள் இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் தமிழ் நதியாக இருக்கமாட்டீர்கள் தமிழ் கடலாகிவிடுவீர்கள். வாழ்த்துக்கள்.
உலோகம் மற்றும் தேகம் இரண்டையும் தங்களைப் போல் எண்ணியே நானும் வாங்கியுள்ளேன்.
உலோகம் புத்தக வடிவமைப்பும், விலையும் மெல்லிய எரிச்சலைக் கொடுத்தாலும் உள்ளே பிரித்தால், பிதாமகரின் நாவலைப் பற்றிய அவரின் சுய விமர்சனம் இன்னும் கொஞ்சம் எரிச்சலையும், மெல்லிய கேலிச் சிரிப்பையும் கொடுத்தது, படிக்க ஆரம்பித்துள்ளேன்.

கவிஞர் இசை said...

தமிழ், இங்க வீட்ல டேபிள் ஒடைஞ்சிருச்சு.. சரவணன் கிட்ட் சொல்லி இரண்டு “ ஆத்மசித்தி” அனுப்ப சொல்லுங்கள்

தமிழ்நதி said...

கோநா,

”இப்படியே நீங்கள் இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் தமிழ் நதியாக இருக்கமாட்டீர்கள் தமிழ் கடலாகிவிடுவீர்கள்.”

அப்படியெல்லாம் ஆகமாட்டேன் என்று கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்து தருகிறேன். நிறையப் படித்தவர்கள் எல்லோரும் கடலாவதென்றால், நம்முன் இவ்வளவு தேக்கங்கள் இருப்பதெங்ஙனமோ:)))

“உலோகம்“தான் முதலில் படிக்க நினைத்திருக்கிறேன். முன்தீர்மானங்களையும் மண்டைக்குள் ஒலிக்கும் குரல்களையும் முனைந்து அகற்றிவிட்டு.

இசை,

அதை நானே அனுப்புவேனோ.. சரவணன் எதற்கு? உடைந்த மேசையை சரிபண்ண ஆத்மசுத்தியை உபயோகிப்பதென்றால்.... கொஞ்சம் சிந்தனையைக் கோரும் விடயந்தான். ஒரு கவிஞரின் வீட்டுத் தளபாடத்தைச் சரிபண்ணுவதற்கே ஆத்மசுத்தி தேவைப்படுகிறதெனில், அவரை சரிபண்ண... எதற்கும் கொஞ்சம் படித்துவிட்டு வருகிறேன். அப்படியும் புரியவில்லையெனில், இருக்கவே இருக்கிறார்கள் நமது இணைய அறிவுஜீவிகள். அறிவைக் கடன் கேட்டால் கொஞ்சூண்டு கொடுக்கமாட்டார்களா என்ன?

SS JAYAMOHAN said...

நீங்கள் வாங்கிய புத்தகப் பட்டியலைப் பார்க்கும்போது
மலைப்பாய் இருக்கிறது !
( இது கண் வைப்பது போன்று அல்ல )

படியுங்கள்... பிடித்ததை எழுதுங்கள் !

soorya said...

பொறாமையின் உச்சதிலும்..
இயலாமையின் ஓரத்திலும்..
என் தோழியரிருவரைப் பிடிச்சுத் தின்றாலென்ன?
ம்..ம்..
நடத்துங்க.
எனக்குமொரு காலம் வரும்.

கிருபாநந்தினி said...

அதென்னவோ தமிழ்நதியக்கா! உங்க வலைப்பூவைப் படிச்சாலே சந்தேகம் சந்தேகமா கேக்கத் தோணுது. அதுக்கு முன்னால, விரிவான புத்தகப் பட்டியல் தந்ததுக்கு, புத்தகப் பிரியர்கள் சார்பா ரொம்பத் தேங்க்ஸ். ஒரு ஐடியா கிடைக்குமே!

சந்தேகம் ஒண்ணு: நெஜம்மாவே இத்தனைப் புத்தகங்கள் வாங்கினீங்களா? இல்லை, டூப்பா?

சந்தேகம் ரெண்டு: நெஜம்மாவே அத்தனையும் படிச்சு முடிக்கிறதா உத்தேசமா, இல்லே லைப்ரரி அழகுக்கா?

சந்தேகம் மூணு: மொத்தத்தையும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள மூணு புத்தகத் திருவிழா போயிடும் போலிருக்கே? அப்ப, அடுத்தடுத்த புத்தகச் சந்தையில புத்தகங்கள் வாங்குவீங்களா, மாட்டீங்களா?

சந்தேகம் நாலு: நான் கேள்விப்பட்ட வரையில, சென்னையில நடந்த புத்தகச் சந்தையில அதிகம் வித்த புத்தகம் தினத்தந்தி வெளியிட்ட வரலாற்றுச் சுவடுகள். கிருபாவும் அதை மட்டும்தான் வாங்கிட்டு வந்தாரு. உங்க லிஸ்ட்டுல அது இல்லையே, ஏன்?

அ.வெற்றிவேல் said...

தமிழ்நதி!
அதிகம் புத்தகம் படிப்பவர்களையே நான் கண்ணு வைப்பேன்..அதிலும் கண்ணு படக்கூடாட்துன்னு சொல்லி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய லிஸ்ட் கொடுத்தா.. என்ன செய்ய.? வாழ்த்துகள்.. படிக்கும் பழக்கம் உள்ளவ்ர்களெல்லாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவ்ர்கள் என்று மதன் ஒரு முறை சொல்லி இருப்பார்.. அந்த வகையில் நீங்களும் ஆசிர்வதிக்கப்பட்டவர் தான்.

புனைஉலகில் காணும் ஜெயமோகன் தனி. கட்டுரைகளில் காணும் ஜெயமோகன் தனி..சு.ராவின் ஆவி புனை உலகிற்கும் சோவின் ஆவி கட்டுரைக்களுக்கும் அவருக்குள் வந்து விடுகிறதோ என பலமுறை நினைத்துள்ளேன்..அவரது நாவல் வாங்கியது சரிதான்.நானும் தான் வாங்கி இருப்பேன் முன்னரே தெரியும் என்ன சொல்வார் என்று. போராளிகள் மூளைச்சலவை செய்யப்பட்டவ்ர்கள் என்று சொல்வார். இருந்தாலும் படிக்கணும் என்று ஆசை..

எல்லோரையும் பார்த்து இருக்கிறீர்களே அதுவே பெரிய விசயம்

என் மீதே என்னை வெறுப்படையச்செய்யும் நேரம் எதுவென்றால் புத்தக சநதைக்கு போக முடியாத அயலக வாழ்க்கை தான்..

தோழர்களைப் பார்த்து தஙக்ளை யாரென்று அறிந்து கொள்வதைவிட தாங்கள் என்ன புத்த்கம் படிக்கிறீர்கள் என்பதில் இருந்து தஙக்ளை அறிந்து கொள்ள முடியும் என்பது தான் என்னைப் பொறுத்த வரையில் சரியாக இருக்கும்..

வாழ்த்துகள் எல்லாவற்றையும் படிக்க படித்துவிட்டு எழுதவும் எங்களுக்கு பரிந்துரைக்கவும்

நந்தா said...

@கிருபா நந்தினி

ஆக்ச்சுவலி உங்களுக்கு என்ன பிரச்சினை???

தமிழ்நதி said...

நன்றி எஸ்.எஸ்.ஜெயமோகன்,

உங்களை முதலெழுத்துக்களோடு விளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.:))) புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தோம். அதிகம் பேச இயலவில்லை. நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சூரியா, என்ன செய்வது? கொடுப்பினை என்று ஒன்று இருக்கிறதல்லவா? சும்மா பகிடிக்குச் சொன்னேன். பதிப்பகங்களுக்கு எழுதினால் நிச்சயமாக புத்தகங்களை அனுப்பிவைப்பார்கள். டென்மார்க்கில் தமிழ்ப் புத்தகங்கள் விற்கும் கடைகள் எதுவும் இல்லையா? (வார சஞ்சிகைகள் விற்பனையாகும் கடைகளைக் கேட்கவில்லை.) அடுத்த ஆண்டு வரக் கிடைக்குமோ தெரியாது... மேலும், நான் புத்தகங்களாலேயே வாழ்கிறேன் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

மற்றத் தோழி ஆர்...? உமா ஷக்தியா?

எங்கை போனீங்கள்? கன நாளாய் ஆளைக் காணேல்லை..

--

கிருபாநந்தினி,

உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன்னால் நந்தா கேட்டிருக்கும் கேள்வியை உங்களிடம் நானும் கேட்க நினைத்தேன். இந்தப் பின்னுாட்டத்தை நான் பிரசுரிக்கும்போது பக்கத்தில் இருந்த எனது நண்பர் கேட்டார் ”இந்தப் பொண்ணுக்கு என்னாச்சு?”என்று.

சந்தேகம் ஒண்ணுக்குப் பதில்-டூப் அடிப்பதில் என்ன இலாபம் இருக்கிறதென்று எனக்குச் சொல்லித் தாருங்கள். நானும் முயற்சிக்கிறேன். பிளஸ், இந்தக் கேள்வி கொஞ்சம் சின்னத்தனமாக அல்லது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.


சந்தேகம் இரண்டுக்குப் பதில்-முழுவதையும் படித்து முடிக்கவே திட்டமிட்டிருக்கிறேன். எனது வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழாமலிருந்தால். ”லைப்ரரி அழகுக்கா?”-நிச்சயமாக இல்லை.

சந்தேகம் மூணுக்குப் பதில்-அது அவரவரது வாசிப்பு வேகத்தைப் பொறுத்தது. என்னால் மூன்று மணி நேரத்தில் இருநுாறு பக்கங்கள் வாசிக்கமுடியும். அதுவும், நுனிப்புல் மேய்வது போலல்லாமல் ஆழ்ந்து படிக்க முடியும். ஆனால், இந்தமுறை வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிடுவேன் என்று சொல்வதற்கில்லை. ஏற்கெனவே கடந்த ஆண்டு வாங்கிய புத்தகங்களில் சிலவும் காத்திருக்கின்றன.

தேவையெனில், நான் என்னென்ன வாசித்து முடித்தேன் என்று அவ்வப்போது உங்களுக்கு தகவல் தந்துவிடுகிறேன்.

அடுத்த புத்தகக் கண்காட்சியிலும் புத்தகங்கள் வாங்குவேன். (சென்னைக்கு வரமுடிந்தால்)

சந்தேகம் நாலுக்குப் பதில்-தினத்தந்தியின் “வரலாற்றுச் சுவடுகள்“வாங்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. அதுவொரு முக்கியமான புத்தகமாக இருக்கலாம்.ஆனால்,மனக்குறளி வாங்கப் பணிக்கவில்லை. தினத்தந்தி என்ற பத்திரிகை ஆளுங்கட்சிக்குச் சார்பான செய்திகளையே வெளியிட்டு வருகிறது என எனது உள்மனதில் ஒரு செய்தி படிந்திருக்கிறது. அந்தச் செய்தியின் சொல்லைக் கேட்டு அந்தப் புத்தகத்தை நான் வாங்காமல் விட்டிருக்கலாம்.
--
வெற்றிவேல்,

இனி வேலைக்கு விடுப்பு எடுக்கும்போது ஜனவரியாகப் பார்த்து எடுங்கள். அப்படியானால் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ளலாம். மேலும், ஒரு பதிவாகப் பார்க்கும்போது சில பரவசங்கள் துாக்கலாகத் தெரியும். ஆனால், உண்மை அவ்விதமன்று. எழுதும்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறோம். ஆனால், புத்தகங்களைப் பார்க்கும்போது, தொடும்போது எழும் உணர்வே தனி என்பது உண்மையே. நண்பர்கள் மூலமாக, பதிப்பகங்கள் வாயிலாக அவற்றை வாங்கமுடியுமென்று நினைக்கிறேன்.

“உலோகம்“பற்றி... என்ன சொல்வது? நீங்கள்தான் படித்திருப்பீர்களே...

--
நந்தா,

”ஆக்ச்சுவலி உங்களுக்கு என்ன பிரச்சினை???”

எனக்கும் தெரியலையே... ஆனால், கிருபாநந்தினியின் முந்தைய பதிவுகளிலிருந்து அவரது பிரச்சனை என்னவென்று ஊகிக்க முடிகிறது. என்ன செய்வது? நான் அப்படித்தான் இருக்கிறேன்:)))

BASHA said...

அழ‌கான‌ நினைவுக‌ள். உங்க‌ள் ப‌திவு என‌க்கு இர‌ண்டு வ‌ழிக‌ளில் உப‌யோக‌மாக‌ உள்ளது

1) நான் வாங்காத‌ ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌திப்ப‌க‌ம் தேடி வாங்கி நெரிச‌லில் இருந்து த‌ப்பிப்ப‌து

2) புத்த‌க‌ திருவிழா ந‌ட‌க்கும் அனைத்து நாட்க‌ளிலும் ஆஜ‌ராகி குடும்ப‌ ப‌ட்ஜெட்டில் குழ‌ப்ப‌டி செய்யும் என்னை ஏதோ ம‌ன நிலை ச‌ரியில்லாத‌வ‌னாய் பாவிக்கும் என் குடும்ப‌த்தார்க்கு காட்ட‌ ஒரு supportive reference -:)

Marie Mahendran said...

அன்புள்ள இளவேனில் வணக்கம்
என் புத்தகத்தை வாங்கியமைக்கு நன்றி.
படித்திருந்தால் ஒரு குறிப்பு எழுதுங்கள்.