10.03.2011

சாதலின் அழகியல்






“மிதமிஞ்சிய பித்துநிலையே தெய்வீகமான அறிவு”
-எமிலி டிக்கின்சன்

பெப்ரவரி 11, 1963. இலண்டனில் அது கடுங்குளிர் காலம். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய கொடிய பனிக்காலம் வந்து சேர்ந்திருந்தது. அதிகாலையில் இரு குழந்தைகளும் உறக்கத்தில் தேவதைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கனவு கலைந்துவிடாதபடி மென்மையாக முத்தமிட்டாள் சில்வியா. காலை உணவாக ரொட்டியும் பாலும் எடுத்துவைத்தாள். சமையலறைக்குச் சென்று அதன் கதவிடுக்கின் வழியாகவோ யன்னல்கள் வழியாகவோ மரணம் வெளியில் கசிந்துவிடாதபடி ஈரத்துணிகளால் இறுக அடைத்தாள். அடுப்பைத் திறந்து அதனுள் ஒரு துவாலையை மடித்துவைத்தபின் எரிவாயுவைத் திறந்துவிட்டாள். துவாலையில் தலைசாய்த்து நிதானமாக சாவைச் சுவாசிக்க ஆரம்பித்தாள். குறிப்பிட்ட நேரத்தில் தாதி வந்துவிடுவாள் என்ற நினைவு, மயங்கத் தொடங்கியவளுள் நிழலாடி மறைந்தது.

தனது முப்பதாவது வயதில் சொற்களிடமிருந்தும் துயரங்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டாள் சில்வியா பிளாத்… வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல் சில்வியாவை ஒரு நிழலெனத் தொடர்ந்துகொண்டிருந்தது. அது, அவளை வீழ்த்துவதும் - அவள் அதனைத் தற்காலிகமாக முறியடித்து விரட்டுவதுமான இடையறாத போராட்டம். சிறுவயதில், சில்வியாவின் தாயார் அவளது கால்களில் காயத் தழும்புகளைக் கண்ணுற்று என்ன நடந்ததென்று வினவியபோது, ஏதேதோ சொல்லி மழுப்பினாள். வற்புறுத்திக் கேட்டபோது, “நான் சாக விரும்பினேன்”என்று பதிலளித்தாள். அதனையடுத்து- மனவழுத்தத்திலிருந்து மீள்வதற்காக உளவியல் ஆலோசனை சிகிச்சை, விரைவில் குணப்படுத்துமென நம்பப்பட்ட மின்னதிர்ச்சி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாள். அவளது இருபதாவது வயதில், மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்தாள். நடக்கப் போவதாக குறிப்பொன்றை எழுதிவைத்தபின் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு நிலவறையிலுள்ள புழங்காத பகுதியொன்றில் மறைந்துகிடந்தாள். அந்தச் செய்தி பத்திரிகைகளில் முதற்பக்கத்தில் பிரசுரமாயிற்று. ஊரே திரண்டு தேடியது. நாற்பது மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாந்தியால் ஈரமாகி நாற்றமெடுத்த ஆடைகளோடு அரைமயக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள். ‘லேடி லாசரஸ்’என்ற கவிதையில் அந்தக் காட்சியை இவ்விதம் சித்தரித்திருக்கிறாள்.

இரண்டாம் முறை,

இதுவே கடைசி

இனித் திரும்பேன் எனும் முத்தாய்ப்போடு

இறுக்கி மூடினேன்
என்னையொரு சிப்பியென.
மீண்டும் மீண்டும் கூவியழைத்து மீட்டபின்

பிரித்தகற்றினர்

முத்துக்களைப் போல
ஒட்டியிருந்த புழுக்களை.

சாதலும்

ஏனைய கலைகளைப் போலொன்றே

அபூர்வ அழகோடு

அதனை நான் நிகழ்த்துகிறேன்.


தற்கொலைக்கு முயன்று தப்பிப் பிழைத்த பிற்பாடு எதிர்கொள்ளவேண்டியிருந்த வாதைகளை ‘செய்யுந்தோறும் நரகம்’என மேற்குறித்த கவிதையில் குறிப்பிட்டிருக்கிறாள். பிறகொரு தடவை கார் விபத்தில் சிக்கினாள். அது விபத்தன்று- தற்கொலை முயற்சி என்று, பிறகு அவளாகவே ஒப்புக்கொண்டாள். நீண்ட நாட்களுக்கு – வாரங்களுக்குக் கூட உறங்காமல் ‘இன்சோம்னியா’வினால் தொடர்ந்து அவதிப்பட்டுவந்தாள்.


“ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்”

எட்டு வயதில் முதல் கவிதை பிரசுரமாகும் உவகையை அனுபவித்த சிறுமி, படித்த பள்ளிக்கூடங்களில் படிப்பு-படைப்பாற்றலால் புகழ்பெற்ற மாணவி, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசல் பெற்றுப் படிக்கக்கூடிய திறன்வாய்ந்தவள், உரைநடை, கவிதை எனப் பன்முக ஆற்றல் மிக்கவளாக அறியப்பட்டு பிரபலமான சஞ்சிகைகளில் படைப்புகள் வெளிவரப் பெற்றவள், சமூகத்தில் மதிப்புக்குரியவர்கள் எனப் போற்றப்பட்டவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர் - மீண்டும் மீண்டும் மரணத்தை நேசித்தது ஏன்? தனது குறிப்பொன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறாள்:


“தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.”

சிறு வயதில் தந்தையை இழந்ததானது சில்வியாவின் இறுதி நாட்கள் வரை அவளைப் பாதித்தது என்கிறார்கள். தந்தையின் மரணச்செய்தியை அவளிடம் தெரிவித்தபோது
“இனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன்”என்றாளாம். சில்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பு எழுதிய‘டாடி’ என்ற கவிதையில் அந்த இழப்பானது கோபம், வெறுப்பு, துயரம் கலந்து வெளிப்பட்டிருக்கிறது.

அவர்கள் உங்களைப் புதைத்தபோது

எனக்கு வயது பத்து

இருபது வயதில்
மரணத்தை விழைந்தேன்
மீண்டும் மீண்டும் மீண்டும்
...
உங்களை வந்தடைய

எலும்புகள் கூட விழைந்தன
Electra on Azalea Path என்ற கவிதையில்…

எவரதும் போலவே

உங்களது மரணமும்
இயல்பென்றாள் என் தாய்
அம்மனநிலையை உள்வாங்கும்
வயதேறுதல்
சடுதியில்
எங்ஙனம் நிகழும்?
தற்கொலையின் அபகீர்த்தியைச் சுமந்தலையும்
ஆவி நானே… எனதே எனதான
நீலநிற கூரிய கத்தியொன்று

என் தொண்டைக்குள்ளே

துருவேறிக்கொண்டிருக்கிறது.

‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ (ஆசிரியை இறக்கமாட்டாளா?) என்பதற்கு அமைவுற, சில்வியாவின் கவிதைகளை வாசித்தவர்கள் அவற்றைத் தமதெனக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். அவளுடைய படைப்புகளிலும் தற்கொலையிலும் தங்களைப் பொருத்திப் பார்த்தார்கள். அவளுடைய கண்களால் பார்க்கவும், காலணிகளில் புகுந்துகொள்ளவும் விழைந்தார்கள். கணவன்மாரால் துரோகிக்கப்பட்டவர்கள் அந்தக் கவிதைகளைத் தங்களுக்கானவையாகச் சுவீகரித்துக்கொண்டார்கள். குளிரிலும் தனிமையிலும் வறுமையிலும்-இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் சித்திரம் சமூகத்தின் கோபத்தைத் தூண்டப் போதுமானதே. சில்வியா பிளாத்தின் கணவர், கவிஞர் ரெட் ஹியூஸின் பெயரை சில்வியாவின் கல்லறையிலிருந்து அழித்துவிடும்படி தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதும் அதன் பொருட்டே. ‘கொலைகாரன்’என்ற சாபங்கலந்த தூற்றுதல்கள், குற்றச்சாட்டுகள், துரத்தும் கேள்விகள், கொலை மிரட்டல்களுக்கு தனது வாழ்நாள் முழுவதும் முகங்கொடுக்கவேண்டியவராக ஹியூஸ் இருந்தார். சில்வியா பிளாத்தின் தற்கொலைக்குப் பிற்பாடு சில்வியாவின் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் “என்னுடைய வாழ்வு முடிந்துபோயிற்று”என்று துக்கித்திருக்கிறார். சில்வியாவின் அனுதாபிகள், ஆதரவாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் உண்மைகளல்ல- சில்வியா மீது புனையப்பட்ட மாயைகளே”என்றிருக்கிறார்.

அவர் தன்னுடைய கருத்தை மகளுக்கும் தரத் தவறவில்லை.
சில்வியா பிளாத்தின் இறுதி நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் 2004ஆம் ஆண்டில், அவரது மகளான பிரீடா ஹியூஸினால் ‘ஏரியல்’என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. (சர்ச்சைக்குள்ளான முதல் தொகுப்பு கணவரால் வெளியிடப்பட்டது.) அதன் முன்னுரையில், “என்னுடைய தந்தையால் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’தொகுப்பை, என் தாயின் தற்கொலையால் கட்டமைக்கப்பட்ட புனிதத்தன்மையோடு சேர்த்துப் பார்க்கிறார்கள்.”என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரீடா. மேலும், “எனது தாய் எத்தனைக்கெத்தனை மகத்தான கவிஞராக இருந்தாரோ, அத்தனைக்கத்தனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகவும் இருந்திருக்கிறார் என்பதை நான் பின்னாட்களில் உணர்ந்துகொண்டேன். என் தந்தையின் பொறுமையோடும் நன்மை விழையும் தன்மையோடும் ஒப்பிடுமிடத்து என் தாய் பொறாமையும் மிகுந்த கோபமும் உடையவராக இருந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்துகொண்டேன். எனது தந்தையின் கவிதைகளை ஒரு சமயம் கிழித்தும் மற்றோர் சமயம் எரித்தும் அழித்ததை அறிந்து நான் திகைப்புற்றேன்”என்கிறார். அஸ்ஸியா வேவெல் (டேவிட் வேவெல் என்ற கவிஞனின் மனைவி)என்ற பெண்ணுடன் கணவருக்கு ஏற்பட்டிருந்த உறவை அறிந்த சில நாட்களில், பெருங்கோபமுற்ற சில்வியா ‘பெல் ஜார்’நாவல் எழுதுவதற்கான குறிப்புகள் சிலவற்றையும், தனது தாயாரால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான கடிதங்களையும், ஒரு பெட்டி நிறையக் குவிந்திருந்த ரெட் ஹியூசின் கடிதங்களையும், அவரது சில கவிதைகளின் ஆரம்ப வரிகளையும் தீயிலிட்டு எரித்திருந்தாள்.

பிரீடா தன் தந்தையை நியாயப்படுத்துவதில் நியாயமேயில்லை. ரெட் ஹியூஸ் ஒரு தண்மையான மனிதராகவே இருந்திருக்கலாம். சில்வியா பிளாத் இறந்தபிறகு அவளுடைய கவிதைகளில் தற்கொலை ஏற்றிவைத்துப் பேசப்பட்டதானது, ஊடகங்களின் உருப்பெருக்கிக் காட்டும் முயற்சி என்பதையும் ஓரளவு ஒத்துக்கொள்ளவே வேண்டும். சில்வியாவின் வாழ்வையும் தற்கொலையையும் மறந்துவிட்டு ஒரு கவிதையைத்தானும் வாசிக்கமுடியாது என்பதும் உண்மையே. ஆனால், சிறுவயதிலிருந்தே மனவழுத்தத்தால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலையிலிருந்த (சில்வியாவின் மனநல மருத்துவர் அவளை வைத்தியசாலையில் அனுமதிக்க இடம் தேடிக்கொண்டிருந்தார்) தன் மனைவியை, (காதல் மனைவி என்று சேர்த்துச் சொல்லவேண்டும்) தற்கொலையின்பால் தீரா வேட்கை கொண்டிருந்தவளை, பொருளாதார நெருக்கடியில் அவதியுற்றுக் கொண்டிருந்தவளை, படைப்பெழுச்சிக்கும் - பெண்ணாக இருந்த காரணத்தால் குழந்தை வளர்ப்பு இன்னபிற பாடுகளுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தவளை, நோய்வாய்ப்பட்டிருந்த இரு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் அந்தக் கடுங் குளிர்காலத்தில் (கோடையில் நீங்கியிருக்கலாம் என்று சொல்லவில்லை) வேறொருத்தியின் பொருட்டு, அதிலும் குறிப்பிடத்தக்க அழகி என்று கருதப்பட்ட ஒருத்தியோடு நீங்கிச் சென்றதன் அடித்தளத்தில் இயங்கிய சுயநலமானது எவ்வகையிலும் எவராலும் நியாயப்படுத்தப்பட முடியாதது; கூடாதது.

சில்வியா பிளாத்தைப் பொறுத்தமட்டில், உளவியல் சிக்கல்கள் காரணமாக அவள் தற்கொலையை நோக்கி இலகுவில் தூண்டப்படக்கூடியவராக இருந்தாள். ஒரு கைவிரல் சொடுக்குக்குக் காத்திருக்கும் விசைபோல மரணம் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையை இழந்து, தந்தையின் இடத்தை நிறைத்ததாக எண்ணியிருந்த கணவனும் நீங்கிச்சென்ற அந்தக் குளிர்காலத்தில் ‘டாடி’யை எழுதினாள். தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பாக எழுதப்பட்ட பல கவிதைகளில் ‘டாடி’யும் ஒன்று.

நான் ஒருவனைக் கொன்றிருந்தால்
இருவர் அழிந்திருப்பர்.

அந்தக் காட்டேரி

தானே நீங்களென விளம்பிற்று.

அது எனது குருதியை
ஓராண்டு…
ஏழாண்டுகளாகக் குடித்திருந்தது

…………………………… ……………………………..

எந்தப் பெண்ணின் பொருட்டு சில்வியா பிளாத்தை அவரது கணவர் நீங்கிச் சென்று தீராப் பழிக்கு ஆளானாரோ, அந்தப் பெண்ணும், ஆறு ஆண்டுகளின் பின் (25 மார்ச், 1969) சில்வியாவைப் பின்பற்றி அதே பாணியில் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு மூச்சுத்திணறி இறந்துபோனாள், தனியாகவல்ல; தனது நான்கு வயது மகள் சுராவையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாள். இறந்தவளின் நிழல் போகுமிடமெல்லாம் தொடர்வதை எவரோ சகித்திருப்பர்? இதனையடுத்து ரெட் ஹியூஸ் தன்னை நியாயப்படுத்துவதற்கான தகுதியை முற்றிலும் இழந்தவரானார். ‘அவர் ஒரு வன்முறையாளன்’என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். சில்வியா பிளாத்தின் மகன் நிக்கலஸ் மார்ச் 16, 1989இல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனார். அந்தச் செய்தியை “சில்வியா பிளாத்தும் அவரால் கொல்லப்பட்ட அவரது மகனும்”என்று, பத்திரிகா தர்மம் மீறாமல் எழுதியது ஒரு சஞ்சிகை. தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு சொந்தமாக மனவழுத்தங்கள் இருக்கக்கூடாதென்பது அத்தகையோரின் விதியாக இருக்கலாம். தனது சகோதரர் நீண்ட காலம் மனவுளைச்சலில் இருந்தபின் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய சகோதரி பிரீடா தெரிவித்தாள். சில்வியா பிளாத் தற்கொலைக் குறிப்பு எதனையும் எழுதிவைத்திருக்கவில்லை. ஆகவே, அவளால் கடைசியாக எழுதப்பட்ட கவிதைகளை வெளியிடும் பொறுப்பை கணவர் தன்னுடையதென எடுத்துக்கொண்டார். அப்படி ‘எடுத்துக்கொள்ளப்பட்ட உரிமை’யானது சில்வியா பிளாத்தின் ஆதரவாளர்கள், அனுதாபிகள், பெண்ணியவாதிகளிடையே பெருங்கோபத்தைக் கிளப்பியது. தற்கொலைக்குத் தூண்டிய ஒருவருக்கு அந்த உரிமை கிடையாது என்று பொங்கியெழுந்தார்கள். ‘ஏரியல்’தொகுப்பில், கவிதைகளை சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அல்லாமல் மாற்றி வெளியிட்டதும், சில கவிதைகள் வெளியிடத் தகுதியற்றவையென நீக்கப்பட்டிருந்ததும் அவர்களது கோபம் அதிகரிக்கக் காரணமாயிற்று. ஆனால், சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அவற்றை உள்ளபடியே வெளியிட்டிருந்தால், ‘குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் சில அயலவர்களுக்கும்கூட அபகீர்த்தி விளைவிப்பனவாகவும், மனம் புண்படுத்தும்படியாகவும் அவை அமைந்திருக்கும்’என்று, பிரீடா தனது தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார். சில்வியாவின் கணவரால், அவளது மரணத்தின் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’ தொகுப்பு பற்றி கருத்துத் தெரிவித்த அல்வாரஸ், ‘இவ்வகையில் கவிதைகளை வரிசைப்படுத்தியிருப்பது கொலையின் அழகியலைக் கொண்டிருக்கிறது’என்கிறார்.

உண்மையில் சில்வியா பிளாத் அன்று மரணத்தை விரும்பினாளா? மனப்பூர்வமாக விரும்பியிருந்தாளெனில், தனது மனநல மருத்துவரை அழைக்கும்படியாக தாதிக்கு குறிப்பொன்றை எழுதிவைத்திருந்தது ஏன்? சிலர் சொல்வதுபோல, அந்தத் தற்கொலை (முயற்சி) வெறுமனே ‘உதவி வேண்டிய அழுகுரலாய்’ ஆரம்பித்து துன்பியலாய் முடிவடைந்ததா? அன்று காலை தாதி குறித்த நேரத்திற்கு வந்திருந்தால், ‘முப்பதாவது வயதில் மீண்டும் உங்களை வந்தடைய முயன்று தோற்றேன் தந்தையே….’என்றொரு கவிதை எழுதப்பட்டிருக்குமோ? சாவிலும் கொடியது, துயருள் தள்ளியவர்களைப் பழிவாங்குவதற்காக அல்லது பயமுறுத்துவதற்காக அப்படியொரு முயற்சியைச் செய்து சாக விரும்பாமலே செத்துப் போவதாகும்.


“மனநோய் என்பது, குடும்பம் மற்றும் அதனையொத்த அமைப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சுயத்தை நோக்கி வெளியேறத் துடிப்பதாகும்”என்கிறார் ‘மனநோயின் மொழி’யில் டேவிட் கூப்பர்.

சமூகம், குடும்பம், மதம், கல்வி இன்னபிற அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்படுவதற்கு முன் குழந்தையின் படைப்பாற்றல் கட்டற்றதாக அமைந்திருக்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் விதிமுறைகள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் மூளைக்குள் உருவேற்றப்பட்டு சமூகப் பிராணியாக மாற்றப்படுகிறாள்-ன். இயந்திரமயமான அந்த ஓட்டத்தில் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் இணைந்துகொள்ள மறுப்பவர்கள், ஓடிக்களைத்துப் பின்தங்கியவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகத்தின் பொத்தாம்பொதுவான அளவுகோல்களின்படி அவர்களால் இயங்கமுடிவதில்லை. அவர்கள் இப்போது வலிந்து எழுதப்பட்ட எல்லா நியதிகளுக்கும் எதிரான புரட்சியாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களளவில் சமூகம் என்பது ஒரு நாகரிக பாவனைக் கூடம். அந்த இருண்ட கூடத்திலிருந்து கலையின் உன்னத வெளிச்சத்தின் உதவியால் தப்பிக்க எத்தனிக்கிறார்கள். புறவுலகிலிருந்து அந்நியமாதல், உள்ளொடுங்கிப் போயிருந்த படைப்பாற்றலை நோக்கி மீண்டும் அவர்களைத் தள்ளுகிறது. படைப்பெழுச்சியானது, இலகுவில் மனப்பிறழ்வு முத்திரை குத்தப்பட்டுவிடக்கூடிய நடத்தைகளைக் கொண்டவர்களாக மாற்றிவிடுகிறது. (அதைச் சாக்காக வைத்து ‘போலச் செய்பவர்’களுக்கு இது பொருந்தாது.)

சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன் இன்னபிற கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் ஏதோவொரு வகையில் பயிற்றப்பட்ட சமூகத்தை மறுத்தோடியவர்களே. எந்த மனவுளைச்சல் அவர்களைத் தனிமைப்படுத்தியதோ, அதுவே உன்னத கலை வெளிப்பாட்டுக்கும் அவர்களை இட்டுச் சென்றது. உளவியல் சிக்கல்களால் பீடிக்கப்பட்டவர்களை மின்னதிர்ச்சி சிகிச்சை முறை மூலம் குணப்படுத்த முயற்சிப்பது என்பதே அடிப்படை மனிதாபிமானமற்றது. அப்படிச் செய்வதன் வழியாக மூளையின் பேராற்றல் வலுவிழக்கச் செய்யப்பட்டு தனிமனித ஆளுமை சிதைக்கப்படுகிறது. அச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் ஒருவர் தளர்ச்சியடைந்து கீழ்ப்படிவுள்ள நாய்க்குட்டி போலாகிவிடுவார். ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம் என்ற கற்பிதத்திற்கு அத்தகைய கீழ்ப்படிதலே வேண்டியிருக்கிறது. அண்மைக்காலமாக அத்தகைய சிகிச்சை முறைக்கெதிராக மனிதாபிமானத்தோடு சிலர் குரலெழுப்பி வருகிறார்கள். மேலும், உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பதைக் காட்டிலும், அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஊடாட விடுவதே விரைவில் குணப்படுத்தும் என்கிறார்கள் மரபார்ந்த அல்லது வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளுக்கெதிரான மனிதவுரிமையாளர்கள். சில்வியா பிளாத்தும் மின்னதிர்ச்சி உள்ளடங்கலான சிகிச்சைக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டவளே. ஆனால், அவளது ஆளுமையின் வீச்சு மின்னதிர்ச்சியையும் மீறியதாக இருந்ததால் தப்பித்தாள். சில்வியா பிளாத்திற்கு ரெட் ஹியூஸ்ஸிடமிருந்து கிடைத்திருக்க வேண்டிய பரிவும் பராமரிப்பும் கிடைத்திருந்தால் அவள் இன்றும் இருந்திருக்கக்கூடும். படைப்பாளியின் இருப்பும் எழுத்தும் பிரித்துப் பார்க்கக்கூடியனவல்லவே…!

ஆன் செக்ஸ்டனுக்கும் சில்வியா பிளாத்துக்கும் குறிப்பிடத்தக்களவு ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் அமெரிக்காவின் மாசாசுசெட்ஸ் என்ற இடத்தில் பிறந்தவர்கள். இருவருமே தற்கொலையைப் பற்றி இடையறாது சிந்தித்தவர்கள். பேசியவர்கள். கடைசித் தடவை தவிர்த்து, தற்கொலையை முடிந்தபோதெல்லாம் முயன்றுபார்த்துத் தோற்றவர்கள். (இதுவொரு பைத்தியக்காரத்தனமான வாசகமே.)இருவருமே தமது வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல்களால் அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தோழிகள். இருவரும் றொபேர்ட் லோவல் என்ற பேராசிரியரிடம் கவிதை குறித்துத் தெரிந்துகொண்டவர்கள். இருவருடைய கவிதைகளும் தன்வரலாற்றுத் தன்மை கொண்டனவாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் கவிதைக்கான ‘புலிட்சர்’விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்கள். ஆனால், சில்வியா பிளாத்தை ஏதோவொரு வகையில் ஆன் பின்பற்றினாள் என்று சொல்வாருமுளர்; தற்கொலையின் வடிவத்தைத் தேர்ந்ததில்கூட.

“நானும் சில்வியாவும் எங்களது முதல் தற்கொலை முயற்சியைக் குறித்து நீண்ட நேரம் பேசுவதுண்டு.”என்கிறாள் ஆன் செக்ஸ்டன்.

எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் இருவர் பொழுது சாய்ந்து, இருள் வடிந்து விடிகாலையில் உறங்க விரும்பாமல் உறங்கச் செல்வதுபோல, சாவைக் குறித்து சில்வியா பிளாத்தும் ஆன் செக்ஸ்டனும் இதர கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் சலிக்காமல் பேசியிருக்கிறார்கள்.

சில்வியாவின் மறைவுக்குப் பின் ஆன் செக்ஸ்டன் தன் மனநல மருத்துவரிடம் சொன்னாள்.

“சில்வியாவின் மரணம் என்னை அலைக்கழிக்கிறது. என்னையும் அதுபோல செய்யத் தூண்டுகிறது. எனக்குரிய மரணத்தை அவள் தன்னுடையதாக்கிக் கொண்டாள்.”

இருபத்தாறாவது வயதில் (முதல் குழந்தையின் பிறப்பினை அடுத்து) கடுமையான மனவழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆன் செக்ஸ்டன், தொடர்ந்து வந்த காலங்களில் அடிக்கடி அங்கு நாட்களைக் கழிக்கவேண்டியவளானாள். தான் எழுத ஆரம்பித்ததைப் பற்றிச் சொல்லும்போது…


“எனது சிகிச்சைகளுக்கிடையில் நான் உணர்ந்ததையும் யோசித்ததையும் கண்ட கனவுகளையும் எழுதும்படி எனது மனநல மருத்துவர் என்னைப் பணித்ததற்கிணங்க நான் எழுதவாரம்பித்தேன்.”


ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது கைகளில் புகைந்தபடியிருக்கும் சிகரெட்டும், பேச்சில் மிளிர்ந்தபடியிருக்கும் அலட்சியபாவமும் கேலியும், பித்தின் ஆழங்களில் அவ்வப்போது போய் நிலைத்துவிடும் கண்களுமான ஆன் செக்ஸ்டன் என்னை ஆகர்சிக்கும் பெண்ணாயிருக்கிறாள். ‘அவையெல்லாம் வலிந்து பொருத்திக்கொள்ளப்பட்ட பாவனைகளோ..?’என்ற எண்ணம் உள்ளோடுகிறபோதிலும், அப்படியொருத்தியைப் பார்க்கும்போது ஏற்படும் நிறைவு, வாஞ்சை கலந்த புன்னகையாக வெளிப்படுகிறது. அந்த வாஞ்சையானது மறுக்கப்பட்டவற்றிலிருந்து மலர்கிறது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ‘தன்வரலாற்றுத் தன்மையுடைய கவிதை’ என்று கட்டம் கட்டி அடைக்கும் விமர்சனம் எரிக்கா யோங் போன்றவர்களை எரிச்சலடைய வைக்கிறது. ‘படைப்பாளியின் மனமே கவிதையில் இயங்குகிறது. சில விமர்சகர்கள் கவிதையைக் கவிதையாகப் பார்க்காமல், இத்தகைய சொற்களைக் கண்டுபிடித்துச் சொல்வதன் வழியாக அதை குறைமதிப்பீடு செய்கிறார்கள்’என்று சாடுகிறார் அவர். இரண்டு பெண்களுமே ரொமான்டிசத்திலிருந்த கவிதையை யதார்த்தத்தை பேசும் தளத்திற்கு எடுத்து வந்தவர்கள். இருவருமே, அதுவரையில் பெருமளவில் வெளிப்படையாகப் பேசப்பட்டிராத அன்றேல் பேசத் தயங்கிய பெண்களின் காமத்தைப் பற்றி, ஆசைகளைப் பற்றி, மாதவிடாய், கருக்கலைப்பு ஆகியவற்றைப் வெளிப்படையாக எழுதினர்.

சில்வியா பிளாத்தைப் போலவே ஆன் செக்ஸ்டனும் எப்போதும் சாவின் அருகாமையை உணர்ந்தபடியிருந்தாள். 27ஆவது வயதில் (இரண்டாவது மகள் பிறந்தபிற்பாடு) தனது பிறந்தநாளன்று தற்கொலைக்கு முயற்சித்தாள் ஆன்.

“மரணத்தின் நாற்றம் காற்றில் நிறைந்திருக்கிறது

அழுகிய உருளைக்கிழங்கைப் போல…”

சில்வியா தற்கொலை செய்துகொண்ட பிற்பாடு அவளை விளித்து எழுதிய கவிதையில்....
இரண்டுமுறை என்னைப் பிரகடனித்தேன்
எதிரியை வெற்றிகொண்டேன்

அவனை உண்டு மகிழ்ந்தேன்

அவனது கலைநேர்த்தியை
மாயத்தை எனதாக்கினேன்
.
……………… ………………

இன்னமும் எனக்கான அவளது காத்திருப்பு நீள்கிறது,

ஆண்டுகளாக

பழைய காயமொன்றின் கட்டினை நேர்த்தியோடு அவிழ்க்க,

மோசமான சிறைக்கூடத்திலிருந்து எனது மூச்சை விடுவிக்க.


முதலில் ‘எனக்குரிய மரணத்தை உனதாக்கினாய்’என்கிறாள். பிறகோவெனில், ‘உன்போலவே நானும் மரணத்தை அறிந்திருந்தேன். அதனை வெற்றியும் கொண்டேன்’என்று மரணத்திற்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை, பாத்தியதையை (சில்வியாவைக் காட்டிலும்)அழுத்திச் சொல்ல முனைவதைக் காணமுடிகிறது.
ஒப்பீட்டளவில் ஆன் செக்ஸ்டனின் தற்கொலை, சில்வியா அளவிற்கு மன அதிர்வைக் கொணரவில்லை என்பது வெளிப்படை. முன்பொரு தடவை நிகழ்ந்து பார்த்த காட்சியின் அசுவாரசியமாகவோ, ஆன் செக்ஸ்டனால் வரையப்பட்ட சுயசித்திரம் காரணமாகவோ அது கூடுதல் கவனம் பெறவில்லை.

வெளிப்படையான பாலியல் உறவுகள் அல்லது அவை குறித்த பிரகடனங்களை- ஒழுக்கத்தைப் பேணும் (முற்றிலும் அது உண்மையன்று; பல நேரங்களில் அவ்வாறான தோற்றமே காட்டப்படுகிறது.) சமூகத்தால் செரித்துக்கொள்ள முடிவதில்லை.
ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண், படைப்பாளியாக நிலைத்திருப்பது என்பது தொடர்போராட்டம். அதுபோலவே, உளவியல் சிக்கலும் கலையின்பால் செலுத்திச்செல்லும் பித்துநிலையும் சேர்ந்தியங்கும் ஒருவருடைய பிள்ளைகள், கணவர், உறவினர்களுக்கென்றொரு பக்கமும் உண்டு. அப்படியொரு பக்கத்தை முற்றிலுமாகப் புறமொதுக்கிச் சென்றுவிடல் பக்கச்சார்புடையதாகும். உளவியல் சிக்கலுக்கும் படைப்பாற்றலின் அழைப்புக்கும் இடையில் சிக்கித் திண்டாடிய தனது தாயின் ஞாபகங்களை Searching for Mercy Street, My Journey Back to Mother:Anne Sexton என்ற புத்தகமாக அவரது மகள் லின்டா கிரே செக்ஸ்டன் வெளியிட்டிருக்கிறாள். அதில் தாயின் அரவணைப்புக்காக ஏங்கிய குழந்தையின் குரலை இனங்காண முடிகிறது. மனவழுத்தத்தின் மிகுதியால் குழந்தைகளிடத்தில்கூட வன்முறையாக நடந்துகொண்டாள் என்ற குற்றச்சாட்டு ஆன் செக்ஸ்டன் மீது உண்டு. ‘தற்கொலை செய்துகொண்டு விடுவேன்’என்று குழந்தைகளை மிரட்டுபவளாக ஆன் செக்ஸ்டன் இருந்திருக்கிறாள். அதனால், கைவிடப்பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் தனதும் சகோதரியினதும் இளமைக்காலம் சூழப்பட்டிருந்ததாக லின்டா கிரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறாள். ஆக, படைப்பெழுச்சியின் உக்கிர ‘வீச்சு’ படைப்பாளிகளைச் சுற்றி இருப்பவர்களையும் விட்டுவைப்பதில்லை.

மனப்பிறழ்வின் அழுத்தம் தாளமுடியாமல் போன ஒருநாளில், சொன்னபடியே நடந்தது. அக்டோபர் 04, 1974 அன்று, மாக்ஸின் குமின் என்ற கவிஞருடன் (நீண்டகால நண்பர்) மதிய உணவருந்திவிட்டு வீடு திரும்பிய ஆன் செக்ஸ்டன் மதுவருந்தினாள். தன்மீதும் சிறிது ஊற்றிக்கொண்டாள். பிறகு, தாயின் கம்பளிக்கோட்டை அணிந்துகொண்டு மோட்டார் வண்டி நிறுத்தும் கொட்டகைக்குச் சென்றாள். கொட்டகையின் கதவுகளை இறுகச் சாத்தி மோட்டார் வண்டியின் இயந்திரத்தை இயங்கப் பண்ணினாள். இசையை உரத்து ஒலிக்கவிட்டாள். மோட்டார் வண்டி வெளித்தள்ளிய கார்பன் மோனோக்சைட்டைச் சுவாசித்துச் செத்துப்போனாள்.

தற்செயலாகத் திறக்கப்பட்டுவிட்ட பக்கம் திறந்தபடியிருக்க,

சொல்லப்படாதவை எஞ்சியிருக்க,

தொலைபேசி எடுத்தது எடுத்தபடியிருக்க,

மேலும், காதல்….
அது எதுவெனினும்,
ஒரு தொற்றுநோய்.


குணப்படுத்தமுடியாத அந்த நோயை, திறந்த புத்தகத்தை, சொல்லப்படாத வார்த்தைகளை விட்டுவிட்டுப் போனாள். அவளும் போனாள்.


மனவழுத்தத்தால், பிறழ்வால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு தன் கவிதைகள் மூலம் ஆறுதலளித்துவந்த, தங்களை அடையாளங் கண்டுகொள்ள வைத்த கவிதைகளை அளித்த துணிச்சல்மிகு பெண்ணின் மூச்சு நின்றுபோயிற்று. தனது காலணியையே சாம்பல் கிண்ணமாக உபயோகித்த- தொடர் புகைப்பிடிப்புப் பழக்கத்தைக் கொண்ட அந்த விசித்திரமான பெண் சாம்பலாகிக் காற்றில் கலந்தாள். ஆம்…. நீங்கள் மிகச் சரியானதை ஞாபகங்கொள்கிறீர்கள்: அழுகிய உருளைக்கிழங்கினையொத்த வாசனையுடன்கூடிய மரணங் கலந்திருந்த காற்றில்.


உலகிலுள்ள அனைத்துப் பெண்களினுள்ளும் ஏதோவொரு துயரத்தின் அழகியல் குடிகொண்டிருக்கிறது. அதைக் கலையாக வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள், வரலாற்றில் சில தசாப்தங்கள் நீடித்திருக்கிறார்கள். ஏனையோரைக் காலம் கனகதியில் கபளீகரம் செய்துவிடுகிறது.

மறந்ததாகவே இருக்கட்டும்

உதிர்ந்துவிட்ட ஒரு மலரைப்போல.

மறந்ததாகவே இருக்கட்டும்

முன்னொருகாலம்
பொன்னொளிர்ந்து
மறக்கப்பட்ட
தீயினைப் போல்
நினைவிலிருந்து உதிரட்டும்

என்றென்றைக்குமாய்,

காலம் ஒரு கனிவுமிகு நண்பன்

அவன் நமக்கு
அந்திமத்தை அருள்வான்.

எவராவது வினவுவாரெனில் சொல்…

மிக நீண்ட நாட்களுக்கு முன்னரே
மறந்தாயிற்று என
ஒரு மலரென, ஒரு தீயென
நீண்டநாட்களின் முன் பொழிந்த பனியில்
புதைந்து மறக்கப்பட்ட கால்பந்தென.


மேற்கண்ட கவிதையில் எழுதியிருப்பதைப்போல, உதிர்ந்த மலராகவோ, நடனம் ஒடுங்கி அவிந்த தீயாகவோ சாரா டீஸ்டேல் மறக்கப்படவில்லை. எழுத்தால் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இயற்கையின் காதலியும் அழகின் உபாசகியுமாகிய சாரா டீஸ்டேல், ஆகஸ்ட் 8, 1884ஆம் ஆண்டு, செயின்ற் லூயிஸ் மிசூரியில் பிறந்தவள். அங்குதான் கவிஞர் டி.எஸ்.எலியட்டும் மரியன் மூரும் பிறந்தார்கள். சாரா இலகுவில் நோய்வாய்ப்படக் கூடியவளாக, எப்போதும் பணிப்பெண்ணின் பராமரிப்பை வேண்டிய பூஞ்ஞை உடம்புக்காரியாக இருந்தாள். அவளது கவிதைகள் எளிமையானவை போன்று தோற்றமளிப்பினும், மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது ஆழ்ந்த பொருளுடையவையாகவும் உள்ளடங்கியிருக்கும் துயரைக் கிளர்த்துவனவாக அமைந்துள்ளன.

புகழ்பெற்ற கவிஞரும் ஓவியருமான வாசெல் லின்ட்சேயின் கனவு தேவதையாக இருந்தவள் சாரா டீஸ்டேல். கடிதங்களிலும், கவிதைகளிலும் தன் காதலை வெளிப்படுத்தினார் லின்ட்சே. சில கவிதைகளை தன் காதல் தேவதைக்கு சமர்ப்பணமும் செய்தார். சாராவும் அவரை விரும்பியபோதிலும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஏழைக் கவிஞனால் தான் எதிர்பார்க்கும் வாழ்வைத் தரமுடியாது என்றெண்ணியோ என்னவோ எர்ன்ஸ் பில்சிங்கர் என்ற தொழிலதிபரை மணந்தாள். சாராவின் கணவர் பணத்தின் பின்னாலும், அதனை ஈட்டுவதன் பொருட்டான பயணங்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தார். அந்நாட்களில் சாராவின் துணை தனிமை மட்டுமே. 1929 இல், மனமுறிவு மணமுறிவில் முடிந்தது; கணவரின் விருப்பத்திற்கு மாறாகவே. அன்றிலிருந்து கவிதையுடனேயே சாரா வாழ்ந்திருந்தாள். லின்ட்சே தன்னிலும் மிக இளைய வயதினளான பெண்ணொருத்தியை மணந்தார். பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு மத்தியில் சாரா டீஸ்டேலுக்கு அண்மையிலேயே அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருநாள் லின்ட்சேயும் தற்கொலை செய்துகொண்டார். இறுதிவரையில் சாராவும் அவரும் புரிந்துணர்வுள்ள நண்பர்களாகவே நீடித்திருந்தனர்.


சாராவின் கவிதைகள், கலையின் சிகரங்களில் பயணித்தன. மனமோ தனிமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது. ‘ஒரு குளிர்கால இரவு’என்ற கவிதையில் அத்தனிமையின் அழுகுரலைக் கேட்கமுடிகிறது.

எனது யன்னல் கண்ணாடி உறைபனியில் இறுகியிருக்க,

இன்றிரவு இவ்வுலகம் கொடிய குளிரில்

கருணையற்றுப் பொழிகிறது நிலவு,
காற்றோவெனில்

இருபுறமும் கூருடைய கொலைவாளினை ஒத்தது.


கடவுளே, வீடற்றவர்கள் மீதினில் இரக்கமாயிரும்

பிச்சைக்காரர்கள் அந்தரித்து அலையும் இக்கொடிய குளிர் இரவில்

விளக்குகள் ஏற்றப்பட்டதென பனியொளிரும் வீதிகளில்
நடந்து செல்லும் ஏழைகளில் கருணை காட்டும்.

எனதிந்த அறை ஜூன் மாதத்தின் சாயலொப்ப

இதந்தரும் வெம்மையானது,

ஒன்றின் மேலொன்றாய் படிந்த
திரைச்சீலைகளால் மூடப்பட்டது
இருந்தும் எதனாலோ,
வீடற்ற சிறுமியொருத்திபோல

என்னிதயமும் அழுதுகொண்டிருக்கிறது
இந்தக் குளிரில்.


1917இல் வெளியான, சாராவின் கவிதைத் தொகுப்பான ‘காதல் பாடல்கள்’ கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் கவிதைக்கான விருதுக்குத் (பின்னாளில் புலிட்சர் விருதாக மாற்றப்பட்டது) தேர்வாயிற்று. தொகுப்புகள் பல பதிப்புகள் கண்டன. ஜனவரி 29, 1933 அன்று, அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டபின் குளியலறைக்குள் சென்று தொட்டியினுள் தண்ணீரை நிறைத்து அதனுள் அமர்ந்துகொண்டாள் சாரா. அப்படியே உறங்கிப் போனாள். எப்போதும் எழுந்திருக்கவேயில்லை. உலகிலுள்ள பொருளிலெல்லாம் அழகினைத் தரிசித்த சாரா டீஸ்டேலின் உயிர் தண்ணீரில் நிறைந்தது.

படைப்பாளிகளாக இருந்து தற்கொலை செய்துகொண்டவர்கள், தங்கள் துயரத்தைக் காலத்திடம் கையளித்துவிட்டுப் போகிறார்கள். அத்துயரம், வழிவழியாய் ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அப்படி இன்னமும் வாசிக்கப்படும் கவிதைகளை எழுதியவள் அமி லெவி.
அவளது ‘கடைசி வார்த்தைகள்’என்ற கவிதை இப்படி ஆரம்பமாகிறது….

நான் கொண்டு வந்த மலர்ச்சி

நான் இசைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடல்

இப்போது சிந்தும் இந்தக் கண்ணீர்த்துளிகள்
எல்லாவற்றையும்

மரணத்திடம் கையளித்துவிடுகிறேன்
…….


‘த பெலிக்கன்’என்ற இதழில் அமி லெவியின் கவிதை வெளியாகியபோது அவளுக்கு வயது பதின்னான்கு. . Xantrippe and other verses என்ற முதல் தொகுப்பு 19 வயதிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. அமி லெவியின் படைப்புகளாக மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று குறுநாவல்கள், பல சிறுகதைகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. யூத இனத்தில் செல்வந்தக் குடும்பமொன்றில் பிறந்த அமி லெவி, சிறு வயதிலேயே கல்வி கற்றலின் பொருட்டு குடும்பத்திலிருந்து பிரித்து வேறிடத்திற்கு அனுப்பப்பட்டாள். அவளுடைய எழுத்துக்கள் யூத எழுத்தாளர் என்பதன் அடிப்படையிலேயே பல விமர்சகர்களால் பார்க்கப்பட்டன. அந்தக் கலாச்சாரத்திற்கு முரணான விடயங்களை எழுதுகிறாள் என்று சிலரால் குற்றஞ்சாட்டப்பட்டார். தனிமையை நேசித்தபோதிலும், தொடர்ந்து மனவுளைச்சலுக்கு ஆளானவராகக் காணப்பட்டாள். செவிப்புலன் படிப்படியாகக் குறைந்து சென்றதும் அவளது மனவழுத்தத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது. கார்ல் மார்க்ஸின் மகள் எலினோர் மார்க்ஸ் இவளது தோழி. அவரும் தனது 43ஆவது வயதில், மகிழ்ச்சியற்ற உறவு காரணமாக தற்கொலை செய்து இறந்தார்.

செப்டெம்பர் 10, 1889 அன்று தனது அறைக் கதவைச் சாத்திக்கொண்டு சார்க்கோலைக் கொழுத்தி அதிலிருந்து புகைந்த கார்பன் மோனொக்சைட்டைச் சுவாசித்து அமி லெவி தற்கொலை செய்துகொண்டாள். அவளது தாயும் சகோதரியும் அவள் இறந்து கிடந்ததை பிற்பாடு கண்டுபிடித்தனர். இறக்கும்போது அமி லெவிக்கு வயது 27. புகைப்படங்களில் பார்க்கக் கிடைத்த துயரம் கப்பிய விழிகள் மறக்க முடியாதன; அவளது கவிதைகளைப் போலவே.
சில்வியா பிளாத் The applicant என்ற கவிதையில் பெண்ணை ஒரு பொருளாகச் சித்தரித்திருப்பாள்:

“அதனால் தைக்க முடியும்
சமைக்க முடியும்

அதனால் பேச முடியும்”


அப்படியொன்றை பாலியல் பண்டமாகவும் பயன்படுத்தலாம்; அதை வைத்திருக்க முடியாத சூழலில் தூக்கியெறியவும் செய்யலாம் என்பதற்கு பல்லாயிரம் உதாரணங்களைக் காட்டமுடியும். அவற்றுள் ஒருத்தி அல்போன்சினா ஸ்ட்ரோனி.
அல்போன்சினா ஸ்ட்ரோனிக்கு இருபது வயதாக இருந்தபோது, புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியந்திரத்தில் உயர்பதவி வகித்தவருமான ஒருவரில் காதல் வயப்பட்டாள். அதன் விளைவாக கருத்தரித்தாள். அந்த மனிதருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது; அதனால் அல்போன்சினாவைத் திருமணம் செய்ய முடியாது என்று திடீரென்று தெரியவந்த ‘நியாயத்திற்கு’இணங்கவும், அந்தப் பெரிய மனிதரின் புகழுக்குக் களங்கம் நேராதிருக்கும்பொருட்டும் அந்த நகரத்தை நீங்கி வேறோரிடத்திற்குச் செல்லவேண்டியவளானாள். அங்கு அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.

ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், எதிர்கொள்ளநேரும் பாரபட்சங்களைப் பற்றியும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதிய பெண்களுள் மிக முக்கியமானவள் அல்போன்சினா. உறவுகளுக்குத் தமது தனித்தன்மையை விட்டுக்கொடுக்கும் பெண்களைப் பற்றியும், ஆண்-பெண் உறவு அறிவுத்தளம் சார்ந்து இயங்கவேண்டியிருப்பதன் அவசியத்தையும் எழுதினாள். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டினாள். நாளடைவில் கலைஞர்களிடையே அறியப்பட்ட எழுத்தாளரானார்.

ஆர்ஜென்ரினாவிலுள்ள ‘லா பீனா’ என்ற உணவகம் அந்நாட்களில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் கூடும் இடமாகத் திகழ்ந்திருந்தது. அத்தகைய கலைஞர்கள் மத்தியில் தனது கவிதைகளை வாசித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அல்போன்சினா.

வானம் ஒரு கறுப்புக் கோளம்

கடல் ஒரு கருந் தகடு

கலங்கரை விளக்கம்
கரை மீதினில்
சூரியக் காற்றாடியை
இடையறாது விசுக்கி
இரவுகளில்
யாரைத் தேடுகிறது?

1935ஆம் ஆண்டு, இளவேனில் மாதமொன்றில், மார்பகப் புற்றுநோயால் தாக்கப்பட்டிருப்பதை அல்போன்சினா ஸ்ட்ரோனி அறிய நேர்ந்தது. சத்திரச் சிகிச்சையின் பிறகும் புற்றுநோய் குணமாகவில்லை. தான் பீடித்தவர்களை விட்டகலா நோய் அது. நோயும் அதன் விளைவான மனவுளைச்சலும் நாளாக நாளாக மிகுந்து வந்தன. புற்றுநோய் பரவுவதிலிருந்து தடுக்க ஒரு மார்பகம் அகற்றப்படுவதை குறைப்பட்ட பெண்ணுடலாகவே அவள் உணர்ந்தாள். முழுமை குறித்த சமூகத்தின் கற்பிதங்கள் அவளையும் விட்டுவைத்திருக்கவில்லை. மனவுளைச்சல் மிகுந்த நாட்களில் கவிதைகளால் கடலோடு பேசவாரம்பித்தாள். கடலுக்கு அடியில் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்ட வீடொன்று தன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக எழுதினாள். தன் மகனை அழைத்து, புற்றுநோய் தொண்டை வரை பரவிவிட்டதையும் ஆனால் மற்றுமொரு சத்திரசிகிச்சைக்குத் தான் தயாராக இல்லை என்பதையும் சொன்னாள். அக்டோபர் 18ஆம் திகதியன்று வீட்டை விட்டுக் கிளம்பிய அல்போன்சினா ஸ்ட்ரோனி ‘மார் டெல் பிளாட்டா’ என்ற சிறிய விடுதியில் தங்கினாள். அங்கே தங்கியிருந்த நாட்களில் “நான் உறங்கப் போகிறேன்’என்ற தலைப்பிலான கவிதையை எழுதி பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினாள். பின் தனது ஒரே மகனுக்கு கடைசியாக கடிதமொன்றை எழுதியனுப்பினாள். அக்டோபர் 25, 1938 அன்று, தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேறிய அவள், கடலில் இறங்கி கரைந்துபோனாள். அந்நேரம், அவளுடைய கவிதையும் கடிதமும் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

அடுத்த நாள் காலையில் அவளது உடல் கரையொதுங்கியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அது கவிதை போன்றதொரு மரணம். மரணத்தைக் கவிதையில் எழுதுவது சாத்தியம். மரணத்தையே கவிதையாக எழுதமுடியும் என்றுரைக்கிறது அல்போன்சினாவின் தற்கொலை. கடைசியாக அவளால் எழுதப்பட்ட கவிதை இவ்விதம் ஆரம்பிக்கிறது.


நான் உறங்கப் போகிறேன் பணிப்பெண்ணே
என்னைப் படுக்கையில் இடு
என் தலைமாட்டினருகில்

ஒரு விளக்கினை ஏற்றிவை

ஒரு விண்மீன்கூட்டம்;
நீ விரும்பும் ஏதாவதொன்று

யாவும் சிறந்தனவே;
சிறிதாய் ஒளிரச்செய்.


ஆன் செக்ஸ்டனின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட அமெரிக்கக் கவிஞர் டெனிஸ் லெவெற்றோவ் சொல்கிறார்.


“சுய அழிவுக்கும் படைப்பாற்றலுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை ஆன் செக்ஸ்டனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. உயிரோடு இருக்கும் நாங்கள் அதில் தெளிவுடன் இருக்கவேண்டும்.”

தெளிவுக்கும் பித்துநிலைக்கும் ஒரு நூலிழையே இடைவெளியாம். சமூகத்தை மறுத்தோடுபவர்களுள், புறவுலகுக்கும் தங்களுக்கும் இடையில் ஓரளவேனும் சமன்பாட்டைப் பேண முடிந்தவர்கள் கலைஞர்களாகிறார்கள். அல்லது தனியன்களாகிறார்கள். முற்றிலும் முரண்படுகிறவர்கள் மனநோயாளிகளாகிறார்கள். சமூக நியதிகளுக்கியைபுற வாழமுடிந்தவர்கள் ‘சாதாரணர்’களாக இப்பூவுலகில் தொடர்ந்து உலவுகிறார்கள்.


தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி எழுதுவதும் தற்கொலைக்கு ஈடானதே. நம்மைப் பித்துநிலைக்கு இட்டுச் செல்வதே. இருண்ட குகையினின்று வெளியேறத் துடிக்கும் பதைப்புக்கும் அதன் அமானுஷ்ய ஈர்ப்புக்கும் இடையில் கிடந்து திண்டாடும் மனம்போல ஒரு மாயம்!

சில நாட்களுக்கு முன் சென்ற பயணத்தின்போது கல்லறைத்தோட்டமொன்றைக் கடந்து வந்தேன். மலர்களும், மரங்களும், மழையும், புகைத் திரையெனப் படர்ந்திருந்த புகாரும் அவ்விடத்தையொரு கனவுக் காட்சியாக்கியிருந்தன. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, அந்தக் காட்சியைக் கண்டதானது, அமானுஷ்யம் கலந்த உடனிகழ்வாய் தோன்றியது. ‘இதைப் போன்றதொரு கல்லறையில்தான் சில்வியா பிளாத்தும் உறங்கிக்கொண்டிருப்பாள்’என்று நினைத்துக்கொண்டேன். வார்த்தைகளில் விபரிக்க முடியாத நெருக்கமும் துயரமும் தனிமையும் கலந்த ஓருணர்வில் சிலிர்த்தது உடல்.

நன்றி: அம்ருதா (செப்டெம்பர் மாத இதழ்)

25 comments:

தமிழ்நதி said...

நண்பர்களுக்கு,

நீண்ட கட்டுரை என்பதனால் முதலில் பகுதி பகுதியாகப் பிரித்துப் போட நினைத்து பதிவு செய்தேன். பிறகு கவன ஒருங்குவிப்புச் சிதறல் நிகழலாகாது என்கிற காரணத்தினால் ஒரே கட்டுரையாகப் பதிந்திருக்கிறேன். முதலில் இட்ட பதிவினைத் தொடர்ந்து வந்து திரும்பிச் சென்ற நண்பர்கள் மன்னிக்கவும். நன்றி.

shammi's blog said...

Mostly, i could not say this in particular but possibly ,me..for instance , started writing to fight depression , loneliness and slowly i just use it as a shield to protect my "self"..and while reading this i feel that those words like dark , alone and aching for something which is not available just in case means that the person is drowning in some miseries and it is the most interesting article even though its heartening ...thanks for sharing akka ...
-shammi muthuvel

மயூ மனோ (Mayoo Mano) said...

கவனம் பிசகாது வாசித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் குறிப்பிட்ட வரிகளை மீள மீள சொல்லி, உருப் போட்டுக் கொண்டிருக்கிறது மனது..!!!! ஒரு விதமான கனதியைத் தருகிறது பதிவு..!!!

தமிழ்நதி said...

ஷம்மி, நானும் தனிமையைத் துரத்தவே எழுத்திற்குள் நுழைந்தேன். இத்தனை காலம் ஆகிவிட்டபோதிலும் அப்போது அனுபவித்த அந்தத் தனிமையின் இருள், அந்தப் பழைய இடங்களைப் பார்க்க நேரும்போது என்னைச் சூழ்ந்துகொள்வதை உணரமுடிகிறது. நாம் ஒரே சமயத்தில் நிகழ்காலத்திலும் இறந்தகாலத்திலும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக இருக்கிறோம்.

ஆறுதலாக வாசியுங்கள் மயூ, ஒன்றும் அவசரமில்லை. நீளமானதும் அதே சமயத்தில் மனதுள் கனம்சேர்ப்பதுமான விடயங்களை வாசிப்பதற்கு நாம் நேரம் எடுத்துக்கொள்வது இயல்பே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ சாவிலும் கொடியது, துயருள் தள்ளியவர்களைப் பழிவாங்குவதற்காக அல்லது பயமுறுத்துவதற்காக அப்படியொரு முயற்சியைச் செய்து சாக விரும்பாமலே செத்துப் போவதாகும்.//

நதி சமீபமாய் என் சகோதரி ஒருத்தி இப்படி இறந்துபோனாள். பலதும் எழுதிக்கொண்டிருந்தாள் போல இறந்தபின் தான் வாசிக்கப்பட்டது . அவள் கூட்டத்துக்கு நடுவில் தனிமையாய் இருந்தாள் என்பதை யாரும் அறியும் முன்னயே இறந்துபோனாள் :(

shammi's blog said...

"அவ்விரவு வேளைகள்
என்றும் போல
அன்றி அதிகமாய்
மருட்டுகின்றன ...
கொஞ்சமே ஆகினும்
தைரியம் உள்ளதை போல
நடித்து வந்ததை
அவை கண்டு கொண்டன ..
அறையின் தாழ்பாள்
வழி கொணரும் வெளிச்சம்
அவைகளை துரத்த போதுமானதாய் இல்லை ...
எங்காகிலும் ஓடி ஒளிய
இவ்வீட்டில் ஒரு இடமும் இல்லை
இருள் ஒன்று கூடி மிரட்ட
ஒரு நெடுங்கடல் மீதில்
பயணம் மேற்கொள்கிறேன் ...
துணையாயும்
அங்கு இருளே சூழ "....

தமிழ்நதி said...

முத்துலெட்சுமி,

எனது ஒரேயொரு சகோதரியும் (அக்கா) தற்கொலை செய்துகொண்டுதான் இறந்துபோனாள். அவளது தற்கொலை யாராலும் பேசப்படவில்லை. அவள் ஒரு கவிஞர் இல்லை. ஆனாலும், இந்தக் கட்டுரையை எழுதும்போது பல இடங்களில் அவளை நினைத்துக்கொண்டேன். குறிப்பாக சில்வியா பிளாத் தனது குழந்தைகளுக்காக பாலும் ரொட்டியும் எடுத்துவைத்துவிட்டு இறந்துபோன இடத்தில்....

அந்தப் பிள்ளைகள் இப்போது எனது பிள்ளைகள்.

“ஒரு வார்த்தை பரிவாகச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிற சமயத்தில் சொல்லிவிடுங்கள். கைகளைக் குலுக்க வேண்டும் என்று தோன்றும்போது குலுக்கிவிடுங்கள். தலையைத் தடவவேண்டும் என்று தோன்றினால் தயங்க வேண்டாம். யார் கண்டது... அவை மூலம் நீங்கள் ஒரு தற்கொலையைத் தடுக்கலாம்...” -எங்கோ எழுதிய ஞாபகம்.

ஷம்மி, நெடுங்கடல் ஒரு கவிதையைத் தந்திருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி. எனக்கு வியப்பாக இருக்கிறது... இந்தக் கட்டுரைக்கு பெண்களிடமிருந்து மட்டுமே பின்னுாட்டம் வந்திருப்பது:)))

ஸ்டாலின் குரு said...

ஆணாக முதலில் எனது பின்னூட்டம்

கட்டுரையை வாசித்தபோது எழுந்த உணர்வுகளை கோர்வையாக சொல்ல இயலவில்லை, நீண்ட மௌனம் கவிந்தபின் மெதுவாகத்தான் விடுபட்டேன் ..கழுத்தறுப்பது,முதுகில் குத்துவது, தீயவைகளை செய்யாமல் இருப்பதை விட செய்யவே முடியாமல் இருக்கும்போது பெண் என்பதாகவே உணர்கிறேன்..

அகநாழிகை said...

சொற்களிடமிருந்தும் துயரங்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டாள்//

வாசிக்கும்போதே நம்மையும் இனம்புரியா இறுக்கமும், துயரும் பற்றிக் கொள்கிறது. வாதையோடு தொடரும் வாழ்விலிருந்து எழுவதுதான் எழுத்து. அம்ருதாவிலேயே வாசித்தேன். இலகுவான நடை பெரிதும் ஈர்க்கிறது.

- பொன்.வாசுதேவன்

தமிழ்நதி said...

ஸ்டாலின் குரு,

இந்தப் பதிவு ஆண்களின் மனதை உறுத்துவதொன்றாக அமைந்துவிட்டதோ... குடும்பம், மதம், சாதி என்ற அனைத்து சமூகக் கட்டமைப்புகளும் பெண்களைச் சுற்றி இறுகியிருக்கின்றன. இந்நிலை ஆண்களுக்கும் தெரியும். இந்நிலையில், இலக்கியத்தில் இயங்கும் பெண்களின் மனவெளியைப் பற்றிய ஒரு துளியாகிய இந்தக் கட்டுரை ஆண்கள் மனதில் என்ன மாற்றங்களை நிகழ்த்தியது என்று அறிய விரும்பினேன். ஆனால்...வாசித்து மௌனமாகக் கடந்து போய்விட்டார்கள். நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான்... ”நீங்கள் நினைப்பதுபோல நாங்கள் இல்லை. எழுத்து எங்களுக்கு அடையாளம் அல்ல; தப்பிக்கும் வழி”இதைக் கழிவிரக்கம் இல்லாமல் வரண்ட குரலில் சொல்கிறேன்.

அன்பின் வாசுதேவன்,

அம்ருதாவில் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சி. இலக்கியத்தில் உள்ளவர்கள், எழுதும் மற்றவர்களின் மனவாதைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும். எழுத்து வழியாக சிலசமயங்களில் வலியைக் கடக்கிறோம். சில சமயங்களில் வலியுள் கிடக்கிறோம். நன்றி.

ஸ்டாலின் குரு said...

இந்தப் பதிவு ஆண்களின் மனதை உறுத்துவதொன்றாக அமைந்துவிட்டதோ... குடும்பம், மதம், சாதி என்ற அனைத்து சமூகக் கட்டமைப்புகளும் பெண்களைச் சுற்றி இறுகியிருக்கின்றன. இந்நிலை ஆண்களுக்கும் தெரியும். இந்நிலையில், இலக்கியத்தில் இயங்கும் பெண்களின் மனவெளியைப் பற்றிய ஒரு துளியாகிய இந்தக் கட்டுரை ஆண்கள் மனதில் என்ன மாற்றங்களை நிகழ்த்தியது என்று அறிய விரும்பினேன். ஆனால்...வாசித்து மௌனமாகக் கடந்து போய்விட்டார்கள். // எதிர்பார்க்கபட கூடிய ஒன்றுதான் என்று உங்களுக்கே தெரியும்...... உறுத்தல் இருக்கும் என்று நான் கருதவில்லை...

ஸ்டாலின் குரு said...

”நீங்கள் நினைப்பதுபோல நாங்கள் இல்லை. எழுத்து எங்களுக்கு அடையாளம் அல்ல; தப்பிக்கும் வழி”இதைக் கழிவிரக்கம் இல்லாமல் வரண்ட குரலில் சொல்கிறேன்.///

சில ஆண்களுக்கும் அப்படித்தான் என்று ஏற்றுகொள்வீர்களா?



தப்பிக்கும் வழியாக கூட அல்ல பல நேரங்களில் ஒருவிதமான வெளியேற்றம் என்றுதான் நினைக்கிறன்..

ஸ்டாலின் குரு said...

வேலிர்ரம் என்பதை எப்படி புரிந்துகொள்வார்களோ என்கிற சந்தேகம் நேற்றிலிருந்து இருக்கிறது.தப்பித்தல் செயல்பாடுகளில் மகிழ்ச்சிக்கான சாத்தியங்கள் இருக்கின்றன.வெளியேற்றத்தில் வெறுமை தாளாத உணர்வு என்கிற அர்த்தம் இருக்கிறது.வெறுமை வெளியேற்றமே படைபாவது அதிசயம்தான்....

தமிழ்நதி said...

ஸ்டாலின் குரு,

தப்பித்தலுக்கும் வெளியேற்றத்துக்கும் நுாலிழை வித்தியாசந்தான் இல்லையா? டால்ஸ்டாய் போன்றோரின் உன்னத உலக இலக்கியங்கள் வழியாக உலகின் கொடூர யதார்த்தங்களிலிருந்து தப்பித்துச் செல்கிறோம். ஆனாலும்,திரும்பி வந்ததும் அதே யதார்த்தத்திற்கு முகம் கொடுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். வெறுமை வெளியேற்றத்திற்கு தாவ்ஸ்தயேவ்ஸ்கியைச் சொல்லலாம். அவரைப் படித்தால் வந்து சூழும் இருட்டைச் சொல்லலாம். இல்லையா?

ஸ்டாலின் குரு said...

தப்பித்தலுக்கும் வெளியேற்றத்துக்கும் நுாலிழை வித்தியாசந்தான் இல்லையா? டால்ஸ்டாய் போன்றோரின் உன்னத உலக இலக்கியங்கள் வழியாக உலகின் கொடூர யதார்த்தங்களிலிருந்து தப்பித்துச் செல்கிறோம். ஆனாலும்,திரும்பி வந்ததும் அதே யதார்த்தத்திற்கு முகம் கொடுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். வெறுமை வெளியேற்றத்திற்கு தாவ்ஸ்தயேவ்ஸ்கியைச் சொல்லலாம். அவரைப் படித்தால் வந்து சூழும் இருட்டைச் சொல்லலாம். இல்லையா?///

ம்ம்

thamizharkal said...

மிகவும் நல்ல செய்தி

Unknown said...

நன்றி..
அப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com

அம்பேதன் said...

தமிழ்நதி,
உங்கள் கட்டுரை மிக ஆழமாகவும், மனவழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. ஆண் பெண் இடையிலான உளவியல் போர் என்பது குறித்த விஷயம் இது.

இவ்வெழுத்தாளர்களின் காலம் பெண் விடுதலை இல்லாத, அது கிளர்ந்தெழ ஆரம்பித்த காலங்கள். சமூகத்தில் தங்களது அறிவின் வீச்சை உணரவைக்க முடியாமல் அவர்கள் அடைந்த மன அழுத்தங்கள், ஆண்களின் பார்வையை கேள்விக்குள்ளாக்கிய அவர்களின் படைப்புகள் பெண்ணியம் மற்றும் பெண் விடுதலைக்கு உதவியாயி ருந்திருக்கின்றன.

இந்த 2000களுக்குப் பின் பெண் ஆணுடைய அடக்குமுறையிலிருந்து பெருமளவு விடுதலை ஆகிவிட்டதாக நாம் கூறிக் கொள்ளலாம் தான். ஆனால் பெண்ணியத்தின் இவ்விளைவுகள் ஆணை பெண்ணிடமிருந்து விலக்கி வைக்கவும் செய்யும் என்பதும் அதனுடன் சேர்ந்து நிகழ்ந்துள்ளது. ஏனெனில் விடுதலையடைந்த பெண் ஆணுக்கு உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறாள். இது தவிர்க்க இயலாதது.(உளவியல் ரீதியாக உடலுறவில் தன்னை விடப் ஆற்றல் மிக்கவளாகத் தோற்றமளிக்கும் பெண்ணிடமிருந்து ஆண் விலகியே ஆகவேண்டும். இல்லாவிடில் அதுவே அவனை ஆண்மையிழக்கச் செயதுவிடும். )

சமூகத்தில் இன்றைய ஆண்கள் 'விடுதலையடைந்த' பெண்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள விழைகிறார்கள். விடுதலையடைந்த பெண்களின் விருப்பப்படி ஆண்கள் சமூகத்தில் இருப்பதில்லை. எனவே பெண்கள் ஆண்களின் மேல் வெறுப்பு கொள்கிறார்கள். எனவே அவர்களும் எந்த ஆணுடனும் நீடித்த வாழ்நாள் முழுமைக்குமான பந்தம் உருவாக்க விருப்பம் குறைந்தவர்களாக ஆகிறார்கள்.

எனவே இன்றைய ஆண், பெண் இருவருக்குமே அன்பு, காதல் போன்ற உணர்வு விஷயங்கள் தேவையில்லாத 'உணர்ச்சி வயப்பட்ட' விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. உள்ளூர அவற்றை இருவருமே தேடினாலும், வெளியில் மற்றவரைச் சார்ந்து வாழ விரும்பாத தற்சார்பு மனோபாவம் ('self dependant') அவர்களை காதல், பாசம், அன்பு போன்ற கட்டுக்களின்றி வாழ்வது தான் ‘அறிவுள்ளவர்கள்’ செய்யும் செயல் என்று எண்ண வைத்திருக்கிறது. Sentimental fool என்கிற வாசகம் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது தற்செயலானது அல்ல.

அதே போல உணர்ச்சி வயப்படுத்தாத, ஒரு பந்தத்துக்குள் பிணைக்காத ‘casual sex’(பந்தப்படுத்தாத உடலுறவு), ‘free sex’(வரைமுறை இல்லாத உடலுறவு), ‘fun sex’ (கேளிக்கை உடலுறவு) என்கிற பதங்கள் இன்றைய இளைஞர்களிடம் அதிகம் புழக்கத்தில் உள்ளதன் காரணமும் இதுதான்.
இது எங்கே நம்மை கொண்டு செல்லும் ? எனக்குத் தெரியவில்லை.

அம்பேதன் said...

தமிழ்நதி,
உங்கள் கட்டுரை மிக ஆழமாகவும், மனவழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. ஆண் பெண் இடையிலான உளவியல் போர் என்பது குறித்த விஷயம் இது.

இவ்வெழுத்தாளர்களின் காலம் பெண் விடுதலை இல்லாத, அது கிளர்ந்தெழ ஆரம்பித்த காலங்கள். சமூகத்தில் தங்களது அறிவின் வீச்சை உணரவைக்க முடியாமல் அவர்கள் அடைந்த மன அழுத்தங்கள், ஆண்களின் பார்வையை கேள்விக்குள்ளாக்கிய அவர்களின் படைப்புகள் பெண்ணியம் மற்றும் பெண் விடுதலைக்கு உதவியாயி ருந்திருக்கின்றன.

இந்த 2000களுக்குப் பின் பெண் ஆணுடைய அடக்குமுறையிலிருந்து பெருமளவு விடுதலை ஆகிவிட்டதாக நாம் கூறிக் கொள்ளலாம் தான். ஆனால் பெண்ணியத்தின் இவ்விளைவுகள் ஆணை பெண்ணிடமிருந்து விலக்கி வைக்கவும் செய்யும் என்பதும் அதனுடன் சேர்ந்து நிகழ்ந்துள்ளது. ஏனெனில் விடுதலையடைந்த பெண் ஆணுக்கு உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறாள். இது தவிர்க்க இயலாதது.(உளவியல் ரீதியாக உடலுறவில் தன்னை விடப் ஆற்றல் மிக்கவளாகத் தோற்றமளிக்கும் பெண்ணிடமிருந்து ஆண் விலகியே ஆகவேண்டும். இல்லாவிடில் அதுவே அவனை ஆண்மையிழக்கச் செயதுவிடும். )

சமூகத்தில் இன்றைய ஆண்கள் 'விடுதலையடைந்த' பெண்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள விழைகிறார்கள். விடுதலையடைந்த பெண்களின் விருப்பப்படி ஆண்கள் சமூகத்தில் இருப்பதில்லை. எனவே பெண்கள் ஆண்களின் மேல் வெறுப்பு கொள்கிறார்கள். எனவே அவர்களும் எந்த ஆணுடனும் நீடித்த வாழ்நாள் முழுமைக்குமான பந்தம் உருவாக்க விருப்பம் குறைந்தவர்களாக ஆகிறார்கள்.

எனவே இன்றைய ஆண், பெண் இருவருக்குமே அன்பு, காதல் போன்ற உணர்வு விஷயங்கள் தேவையில்லாத 'உணர்ச்சி வயப்பட்ட' விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. உள்ளூர அவற்றை இருவருமே தேடினாலும், வெளியில் மற்றவரைச் சார்ந்து வாழ விரும்பாத தற்சார்பு மனோபாவம் ('self dependant') அவர்களை காதல், பாசம், அன்பு போன்ற கட்டுக்களின்றி வாழ்வது தான் ‘அறிவுள்ளவர்கள்’ செய்யும் செயல் என்று எண்ண வைத்திருக்கிறது. Sentimental fool என்கிற வாசகம் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது தற்செயலானது அல்ல.

அதே போல உணர்ச்சி வயப்படுத்தாத, ஒரு பந்தத்துக்குள் பிணைக்காத ‘casual sex’(பந்தப்படுத்தாத உடலுறவு), ‘free sex’(வரைமுறை இல்லாத உடலுறவு), ‘fun sex’ (கேளிக்கை உடலுறவு) என்கிற பதங்கள் இன்றைய இளைஞர்களிடம் அதிகம் புழக்கத்தில் உள்ளதன் காரணமும் இதுதான்.
இது எங்கே நம்மை கொண்டு செல்லும் ? எனக்குத் தெரியவில்லை.

தமிழ்நதி said...

ஆமாம் அம்பேதன். நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது. தோழிகளுடன் உரையாடும்போது நீங்கள் சொன்ன கருத்துக்களோடு உடன்படக்கூடிய விடயங்களை அடையாளங் காண்கிறேன். கவனம் குவித்து வாசித்துக் கருத்து இட்டமைக்கு நன்றி. களைத்துப் போய் இப்போதுதான் வீடு திரும்பினேன். மீண்டும் வந்து பதில் எழுதுகிறேன்.

Rathnavel Natarajan said...

அருமையான, நீண்ட பதிவு.
மனதை வேதனைப் படுத்துகிறது. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி அம்மா.

rishvan said...

மிகவும் நல்ல செய்தி..
அருமை...

வாழ்த்துக்கள்

தமிழ்நதி said...

அன்பிற்குரிய அம்பேதன்,

இன்று பழைய பதிவுகளைத் தட்டிப் பார்த்துக்கொண்டு வந்தபோது உங்களது பின்னூட்டத்தையும் அதற்கு நான் சரிவரப் பதிலிறுக்க◌ாமையையும் கண்டேன். நடைமுறை வாழ்க்கை நம்மை மறதிக்குள் தள்ளிவிடுகிறது. அசட்டையானவர்களாகச் செய்துவிடுகிறது நண்பரே...

ஆம்... நீங்கள் சொல்வது போல ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையறாத உளவியல் போர் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என்னதான் குடும்பம் என்ற பந்தத்திற்குள் இணைக்கப்பட்டு ஒன்றாக வாழத் தலைப்பட்டபோதிலும், இருவரும் தனித்தனி உயிர்கள் என்ற அடிப்படையான விடயம் உள்ளிருந்து ஆணையும் பெண்ணையும் இயக்குகிறது. அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் குடும்பங்கள் 'ஒற்றுமை'யாக இருக்கின்றன. ஏனையோர் பிரிந்துசெல்கிறார்கள்.

"விடுதலையடைந்த பெண் ஆணுக்கு உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறாள்"என்று சொல்லியிருந்தீர்கள். அது பெண்ணைச் சகவுயிரியாகக் கருதாத ஆண்மனத்திலிருந்தே உருவாகிறது.

பெண்ணியம் பேசும் சில பெண்களிடத்தில் ஆண் வெறுப்பு மனோபாவம் உருவாவதற்கு நீண்ட வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. ஒரு உளவியலின் தொடர்ச்சி அது. ஆனால், சகல ஆண்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதும் தவறே. அது மேலோட்டமான பெண்ணியமாகவே அமைந்துவிடுகிறது.

ஆண்-பெண் உறவுக் குழப்பங்கள் என்றைக்கும் தீராது என்றுதான் நினைக்கிறேன். இப்போது SUDHIR KAKAR எழுதிய Intimate Relations (exploring Indian Sexuality) வாசித்துக்கொண்டிருக்கிறேன். குடும்பத்தில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படும் பெண்ணானவள் (பணபலம், செல்வாக்கு பின்பலங்கள் அற்ற எளிய பெண்ணும்கூட) படுக்கையில் நுட்பமாக எப்படித் தனது துணையைப் பழிவாங்குகிறாள் என்பது பற்றியெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

பந்தத்திற்குள் பிணைக்காத, 'அறிவார்த்தமான'உறவு நிலை பற்றி அச்சம◌ாகத்தான் இருக்கிறது. ஆனால், உலகம் அதை நோக்கித்தான் நகர்கிறது. நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கவியலும். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

கருத்துக்கு நன்றி ரத்னவேல் ஐயா. நன்றி ரிஷான்.

சு.மு.அகமது said...

தோழமை,

முன்பே அம்ருதாவில் அறிமுகமாகியிருந்தாலும் தற்போது வாசிக்கும் போது மனதை கசக்கி பிழியும் பதிவாகிறது.

”சேவலென்று யார் சொன்னது
முட்டையிடாத கோழிகள் நாங்கள்”

நொடிகளின் வித்தியாசப்படுத்தலில் ஸ்தம்பித்து போகும் நினைவுகள்.மனப்பிறழ்வு என்றாலும் மனச்சிதைவு என்றாலும் வாழ்க்கையையும் மனவோட்டங்களையும் வித்தியாசப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் நாம்.

சு.மு.அகமது said...

தோழமை,

முன்பே அம்ருதாவில் அறிமுகமாகியிருந்தாலும் தற்போது வாசிக்கும் போது மனதை கசக்கி பிழியும் பதிவாகிறது.

”சேவலென்று யார் சொன்னது
முட்டையிடாத கோழிகள் நாங்கள்”

நொடிகளின் வித்தியாசப்படுத்தலில் ஸ்தம்பித்து போகும் நினைவுகள்.மனப்பிறழ்வு என்றாலும் மனச்சிதைவு என்றாலும் வாழ்க்கையையும் மனவோட்டங்களையும் வித்தியாசப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் நாம்.