4.22.2012

நாடு கடத்தப்பட்ட சொற்கள்



உளவுக் கண்கள் பொருத்தப்பட்ட கணனிகளோடு
கண்ணிவைத்துக் காத்திருக்கிறது
விமான நிலையம்.

மழை நிறைத்த கிணற்றில்
முகம் பார்த்துக் களிக்கும் மார்கழி
இம்முறையும் எனக்கில்லை.
செவ்விளநீர் மரம் சொட்டும்
“இரண்டாம் மழை“யுமில்லை.
இங்கு இலையுதிர்காலம்
மேப்பிள் மரங்களிலிருந்து
உதிர்ந்துகொண்டிருக்கின்றன பூவரசமிலைகள்.

நிலம் குறித்த கனவுகளில் மணக்கிறது…
வல்லரக்கர்களின் சிறுநீர்
வல்லரசுகளின் எச்சில்
எனது சனங்களின் குருதி.

திரும்பவியலாத உன் தெருக்களில்
எத்தனை காலந்தான்
சொற்களால் அலைந்துகொண்டிருப்பது
என்னருந் தாய்தேசமே…?


பொன்னெனச் சுடர்விடும் மணல்படர்ந்த கடற்கரைகள், கரையோரங்களில் சூரிய ஒளியில் மினுங்கும் உடல்களோடு சாய்ந்திருக்கும் உல்லாசப் பயணிகள், நட்சத்திர விடுதிகள், பணிவும் கனிவுமான புன்னகைகளுடன் விருந்தோம்பலை வாக்களிக்கும் அழகிய பெண்கள், தேயிலைத் தோட்டங்கள், பனிதுாங்கும் மலைச்சிகரங்கள், கண்சுருக்கிச் சிரிக்கும் கிராமத்துச் சிறுவர்-சிறுமியர், பளீரிடும் கீற்றுக்களை அசைத்து வா வாவென்றழைக்கும் தென்னைகள் என, இலங்கையை உல்லாசபுரியாகச் சித்தரிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் இறைந்துகிடக்கின்றன. வானத்தை வகிர்ந்து பறக்கும் விமானத்தின் படங்களோடு கூடிய விளம்பரங்கள் சலுகைக் கட்டணங்களை அறிவிக்கின்றன.

இலங்கை: இந்துமகா சமுத்திரத்தின் இரத்தினக் கல்!

ஈழத்தமிழர்களுக்கோ அது கடல் நடுவில் கெட்டித்துக் கிடக்கும் கண்ணீர்த்துளி! இலங்கை அரசால் உலகெங்கிலும் விளம்பரப்படுத்தப்படுவதைப்போல, அது ஒளிசிதறும் உப்பரிகையல்ல; கனவுகள் உதிர்ந்துபோனவர்களின் கல்லறை. ஒப்பனையில் பளபளக்கும் சருமத்தின் பின் ஒளிந்து கிடக்கிறது முதலைத்தோல். ‘வருக’என்றழைத்துக் குவிக்கும் கைகளின் உட்புறத்தில் படிந்திருக்கிறது குருதி.

வேற்றுநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் போல, புலம்பெயர்ந்த தமிழர்களால் அத்தனை எளிதாக அங்கு சென்றுவிட இயலாது. குறிப்பாக, இலங்கை அரசை விமர்சித்துப் பேசியவர்களால்(சிங்களவர்கள் உள்ளடங்கலாக) வெளிநாடுகளில் அதற்கெதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டவர்களால், அதன் இருண்ட பக்கங்கள் மீது ஊடக வெளிச்சம் பாய்ச்சியவர்களால், இனப்படுகொலை குறித்து எழுதியவர்களால் அங்கு செல்லமுடியாது. சென்றால் திரும்புதல் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

எவராலும் தமது வேர்களைப் பற்றிய ஞாபகத்தை அடியோடு அறுத்தெறிந்துவிட இயலாது. பிரிவு தற்காலிகமானதெனில், பொருளாதார நோக்கத்தின் பொருட்டெனில் அதைச் சகித்துக்கொள்ளவியலும். ஆனால், தாய்நிலத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லவியலாதபடி புறஅழுத்தங்கள் இருக்குமாயின் அது மரணத்திற்கு நிகரானது. திரும்பிச் செல்லக்கூடிய நிலத்திற்குத் திரும்ப விரும்பாமல் இருப்பதும்- நாடு திரும்பினால் கொல்லப்படுவோம், சிறைப்பிடிக்கப்படுவோம், வந்த சுவடுமின்றிக் காணாமலடிக்கப்படுவோம் என்று பயங்கொள்ளத் துாண்டும் பேரினவாத-எதேச்சாதிகார அரசுகளால் ஆளப்படும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் அந்நிய நிலங்களில் தாய்நாட்டின் நினைவுகளோடு அலைந்துழல்வதும் ஒன்றல்ல.

“எல்லோரும் போய்விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாகப் பறந்துசெல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை.”


(சேரன்- ‘நீ இப்பொழுது இறங்கும்’ ஆறு தொகுப்பு)

திரும்பி வருவோம் என்னும் நினைவோடுதான் எல்லோரும் போனார்கள்; போனோம். இன்று, “இது சிங்களவர்களின் நாடு; நீங்கள் இலங்கை அரசுக்கெதிராகப் பரப்புரை செய்தவர்கள்; தேசத்துரோகிகள்”என்கிறது பேரினவாதம். இரட்டைக் குடியுரிமை இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை வழக்கத்தில் இருந்துவந்த ‘உள்நுழைவு விசா’நடைமுறை மாற்றப்பட்டு, இணையத்தளம் மூலம் (கண்காணிக்க ஏதுவாக) விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமுலுக்கு வந்திருக்கிறது. விமான நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் உளவுக் கண்களால் கண்காணிக்கப்படுகிறார்கள். சந்தேகத்திற்குரியவர்கள் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்படுகிறார்கள்.

‘ஓடிப் போனவர்களுக்கு தாய்நிலத்தை நினைத்து உருக என்ன தகுதி இருக்கிறது?’என்று பேசும் ஊதுகுழல்களை தமிழர்களுக்குள்ளேயே உருவாக்கி, உருவேற்றி உள்நாட்டிலும் உலகெங்கிலும் உலவ விட்டிருக்கிறது இலங்கை அரசு. அதிகாரம் நுாலிழுக்கும் திசையிலெல்லாம் வாயசைக்கக் கற்றிருக்கிறார்கள் அந்தப் பொம்மலாட்டச் சலனிகள். வல்லாதிக்கச் சக்திகளின் கூட்டுச்சதியால் ‘முடித்துவைக்கப்பட்ட’போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசும், எழுதும், போராடும் புலம்பெயர் தமிழர்களுக்கும், தமிழகத்திலும் உலகெங்கிலும் தமிழ்த்தேசியம் பேசுவோருக்கும் எதிரான குரலை- இணையப் பரப்புரைகளிலும், தமக்கு இசைவாகத் தாளம் போடும் ‘இள(க்)கிய’மட்டங்களிலும் இயன்றமட்டிலும் எழுப்புவதன் மூலமாகத் தமது ‘இருப்பை’த் தக்கவைத்துக்கொள்வது சிலரது அரசியலாகத் தொடர்ந்துவருகிறது. இலங்கையில் தொங்கவிடப்பட்டிருக்கும் இரும்புத் திரையை நியாயப்படுத்துவதன் வழி கிடைக்கப்பெறும் இலாபங்களுக்காக சொந்த இனத்தையே வஞ்சிக்கிறார்கள் அவர்கள். துணைக் குழுக்களின் துப்பாக்கிப் பின்பல உபயத்தில் தமது சொந்த மக்களையே பலியாடுகளாக நடத்துகிறார்கள்.

றஷீத் ஹூசைன் என்ற பாலஸ்தீனியக் கவிஞனின் வரிகள் மேற்குறிப்பிடப்பட்டவர்களுக்குச் சாலப் பொருந்தும்.

எங்கள் மத்தியில்
இன்னும் ஒரு கும்பல் எஞ்சியுள்ளது
அவமானத்தை அது சாப்பிடுகின்றது
தலைகுனிந்து நடந்து செல்கின்றது
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
நக்கும் ஒருவனை
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்?


(தொகுப்பு: மண்ணும் சொல்லும், மொழியாக்கம்: வ.கீதா-எஸ்.வி.ராஜதுரை)

“அவ்வளவு அக்கறை உடையவர்களாக இருந்தால், நீங்கள் ஏன் உள்நாட்டிலேயே சனங்களோடு சனங்களாக வாழ்ந்திருக்கக்கூடாது? எழுதக்கூடாது?”என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி எழுப்புகிறவர்களுக்குச் சொல்லவென ஒரேயொரு பதில்தான் உண்டு. “உயிராபத்துக்கு அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினோம். சித்திரவதைக்குள்ளாகி அநாதைப் பிணங்களாகத் தெருக்களில் துாக்கியெறியப்படுவதையும், கண்காணாத இடங்களில் புதைக்கப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை”. ஊடகவியலாளர்களுக்கெதிராக தாக்குதல்கள், கொலை, மிரட்டல், ஆட்கடத்தல், கடுமையான செய்தித் தணிக்கை என குரூரமான வன்முறையைப் பிரயோகிக்கும் நாடுகளுள், இலங்கை முதல் ஐந்திற்குள் இடம்பிடித்திருக்கிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து 13க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். நுாற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடியிருக்கிறார்கள். மயில்வாகனம் நிமலராஜன் (2000), ஐயாத்துரை நடேசன் (2004), தர்மரத்தினம் சிவராம் (தராக்கி-2005), “ஈற்றில் நான் கொல்லப்படுவேனாக இருந்தால், அந்தக் கொலை அரசாங்கத்தின் கைகளால் செய்யப்பட்டதாகவே இருக்கும்.” என்று, கொலையாளிகளைக் குறித்து இறப்பதற்கு முன்னம் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதிவைத்த ‘சன்டே லீடர்’ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க (2009, ஜனவரி), பிரகீத் எக்னெலிகொட (2009 ஜனவரியில் கடத்திச்செல்லப்பட்ட அரசியல் கார்ட்டூனிஸ்ட், ஊடகவியலாளர்) என நீளும் கொலையுண்டோர் பட்டியல், காலகாலமாக இலங்கையில் நிலைத்திருக்கும் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு. அரசாங்கங்கள் மாறியபோதிலும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் மட்டும் மாறுவதேயில்லை. இலங்கையை விட்டுத் தப்பியோடியவர்களும் (சிங்களவர்கள் உள்ளடங்கலாக), கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு சிறையுண்டிருப்போரும் காணாமல் போனோரும் கணக்கிலர். விடுதலைப் புலிகளின் அரசவைக் கவிஞர் என்று அறியப்பட்ட புதுவை இரத்தினதுரை அவர்கள், மே 2009 பேரனர்த்தத்தின் பிற்பாடு வவுனியா தடுப்புமுகாமொன்றிலிருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு அவரைக் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை. அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நாட்பட நாட்பட மிகுந்துவருகிறது.

சொந்த நிலத்தில் உயிர் வாழும் உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டவர்கள் வேறு வழியற்று நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். உலகெங்கிலும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்டங்களில், புலம்பெயர் எழுத்தாளர்களது பங்கை வரலாறு பதிந்துவைத்திருக்கிறது. ‘குளிரூட்டப்பட்ட அறைகளுள் சொகுசாக இருந்துகொண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்’என்று இணையத்தளங்களிலும் அரச சார்பு ஊடகங்களிலும் அவதுாறு செய்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறுகள் அவை.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கலிலீயிலிருந்த அல்-பேர்வா என்ற கிராமத்தை இஸ்ரேலியர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவ்வாறு விரட்டப்பட்டவர்களுள் தார்விஷ் என்ற ஆறு வயதுச் சிறுவனும் ஒருவன். தார்விஷின் குடும்பத்தினர் அகதிகளாக எங்கெங்கோ அலைந்துவிட்டு ஓராண்டின் பின் சொந்த மண்ணுக்குத் திரும்பியபோது, அவர்களது மண் இஸ்ரேலாக மாற்றப்பட்டிருந்ததைக் கண்டார்கள்.





“நாங்கள் மீண்டும் அகதிகளாக வாழத் தொடங்கினோம்; இம்முறை எங்களது சொந்த மண்ணிலேயே. அந்தக் காயத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.”

பின்னாளில், ‘பாலஸ்தீனத்தின் தேசிய கவி’என்று கொண்டாடப்பட்ட மஹ்மூத் தார்வீஷால் கூறப்பட்ட வார்த்தைகளே மேற்கண்டவை.

‘அரபுலகின் ஆன்மா’எனப் புகழப்பட்ட அவரது கவிதைத் தொகுப்புகள் பல இலட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன. அரங்கம் நிறைந்த (25,000 பேருக்கும் மேற்பட்டோர்) கவிதை ஆர்வலர்கள் அவரது கவிதைகளைக் கேட்கக் கூடினார்கள். அவர் போகுமிடமெல்லாம் விடுதலையின் அலை பரவியது. இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. எழுத்தில் எத்தனை உயரத்திற்குச் சென்றபோதிலும், சொந்தமண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தை அவரால் தன் வாழ்நாளில் மறக்கமுடியவில்லை.

“நாடு திரும்புதல் குறித்த காலவரையறையற்ற இழுத்தடிப்பை, இழப்பின் பாடல் வரிகளாக மாற்றியமைக்கும் காவிய முயற்சி” என்று, தார்வீஷின் கவிதைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் எட்வர்ட் செய்த்.

இஸ்ரேலின் ஒரு பகுதியாக மாறிவிட்ட தாய்மண்ணில் தார்விஷூக்கு மேற்படிப்பு மறுக்கப்பட்டது. (தரப்படுத்தல் ஞாபகம் வருகிறது) அதனால், மேற்படிப்பைத் தொடரும் நிமித்தம் 1970இல் மொஸ்கோவுக்குச் செல்லவேண்டியேற்பட்டது. 1973இல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்துகொண்ட பிற்பாடு, அவரது மண்ணில் காலடி எடுத்து வைக்கும் அனுமதி இஸ்ரேலிய அதிகாரத்தினால் முற்றிலும் தடைசெய்யப்பட்டது. 1973-1982 வரை பெய்ரூட்டில் நாடு துறந்த வாழ்வு, 1982 இல் லெபனானை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டபோது அங்கிருந்து தப்பியோட்டம் என அலைந்துலைய நேர்ந்தது. 26 ஆண்டுகள் சிரியா, சைப்ரஸ், கெய்ரோ, டூனிஸ், பாரிஸ் என நாடற்றவராக அலைந்து திரிந்த பிறகு, 1996ஆம் ஆண்டில் றமல்லாவுக்குத் (பாலஸ்தீன அதிகார மையம் இருக்குமிடம்)திரும்பி வாழத் தொடங்கினார். சொந்தமண் மீதான தீராத காதலை கீழ்க்காணும் வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார்...

“நாடு கடத்தப்படுவதென்பது புவியியல் எல்லைக்கோடுகளாலானதன்று. நான் போகுமிடமெல்லாம் அதை எடுத்துச் செல்கிறேன். எனது தாய்நாட்டை என்னோடு எடுத்துச் செல்வதைப் போல…”

‘பாலஸ்தீனத்தின் வழக்குரைஞர்’, ‘பயங்கரவாதத்தின் பேராசிரியர்’என்றெல்லாம் வலதுசாரிகளாலும் இஸ்ரேலிய ‘ஜியோனிஸ்ட்’டுகளாலும் அடைமொழிகளிட்டு அழைக்கப்பட்டவர் பேராசிரியர் எட்வர்ட் செய்த். ஜெருசலேமில் பிறந்து, பதினாறு வயதிலேயே அமெரிக்காவிற்கு வந்து வாழத் தொடங்கியவர். என்றாலும், பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரிப்பதைத் தனது வாழ்நாள் கடமையாகத் தொடர்ந்திருந்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையைச் சாடவும் தவறினாரில்லை. தனது சொந்த மண்ணின் மீதான ஆக்கிரமிப்பைச் சாட அந்த மண்ணிலேயே இருக்கவேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்பதற்கு அவரைக் காட்டிலும் ‘அறிவுபூர்வமான’ எடுத்துக்காட்டு தேவையில்லை. ‘பாலஸ்தீனத்தின் பக்கம் சாய்கிறார்’ என்று, செய்த் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது அவர் அதை உறுதியாக மறுத்துரைக்கிறார்.

“யூதர்களின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறையை ஒத்துக்கொள்வதற்கும், அதையொரு கவசமாகப் பிரயோகித்து அவர்கள் வேறொரு இனத்தை (பாலஸ்தீனியர்களை) அடக்குவதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.”

எங்களது ஜெருசலேம் ஈழமே! நாங்கள் அங்குதான் பிறந்தோம். குடியேற்றத் திட்டங்கள் மூலமாக எந்த மண்ணைக் கபளீகரம் செய்ய பேரினவாதம் திட்டமிட்டுச் வஞ்சகமாகச் செயற்படுத்துகிறதோ அந்த மண்ணில்தான் எங்களுடைய பால்யம் கழிந்தது. இளமையின் இளவேனிலை நாங்கள் கடந்துவந்த மரத்தடிகளும் வயல்வெளிகளும் புழுதித் தெருக்களும் இன்னமும் அங்குதான் இருக்கின்றன. விதிவசத்தால் வேறு தேசங்களில் விழுதெறிய விதிக்கப்பட்டோமேயன்றி, எங்களது வேர்கள் அங்குதான் இருக்கின்றன. ஆகவே, எங்களது மக்களுக்காகக் குரல் கொடுக்கவும் எழுதவும் எங்களுக்கு உரிமை இல்லையென்று எவராலும் மறுக்கமுடியாது.



புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களது வாழ்க்கை சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதுபோல, இலையுதிர்கால மரங்களைப் போல வண்ணமயமானதன்று; சிலசமயங்களில் அது கண்ணீரைப் போல நிறமற்றதும்கூட. மே, 2009 இற்குப் பிறகு நடைபிணங்களாக அலையும் பலரை புலம்பெயர்ந்த தேசங்களில் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களளவில் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்டிருந்த பெருங்கனவு கலைந்துவிட்டது. பெருமிதம் மங்கிய விழிகளை விலக்கிக்கொண்டு, பழகிய எவரையும் சந்திக்க விரும்பாமல் விரைந்து செல்கிறார்கள். பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ஒரு நண்பர் சொன்னார்... “எனது உறவினர்களில் அறுபத்திரண்டு பேர் வன்னியில் படுகொலை செய்யப்பட்டார்கள்.”என்று. “அந்த மாதம் முழுவதும் செத்தவீடுகளுக்குப் போவதிலேயே கழிந்தது”என்றார். தனது இழப்பிற்காக அவர் யாரையும் பழித்துரைக்கவில்லை; “எங்கள் போராட்டத்தை அழித்தொழித்துவிட்டார்களே படுபாவிகள்!”என்பதே அவரது குமுறலாக இருந்தது.

கடந்த புத்தகக் கண்காட்சியில்,(2011 ஜனவரி) ‘ஈழப் போராட்டத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட த்ரில்லர்’என்ற பரபரப்பு அட்டைப்பட வாசகத்துடன் விற்பனைக்கு வந்தது ஜெயமோகனின் ‘உலோகம்’என்ற நாவல்(?). அதற்கு ஈழத்தவர்களால் எழுதப்பட்ட எதிர்வினைகளுக்கு தனது இணையத் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன்.

“பொதுவாக இந்நாவலுக்கு வந்த எதிர்வினைகளில் அதிக தீவிரத்துடன் எழுதியவர்கள் விடுதலை இயக்கங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். எண்பதுகளின் ஆரம்பத்திலேயே புலம்பெயர்ந்து வசதியாக வாழ ஆரம்பித்தவர்கள். அவர்கள் ஒரு குற்ற உணர்ச்சியாலோ ஒரு பிம்ப உற்பத்திக்காகவோ இன்று அதிதீவிர உணர்ச்சி நிலைப்பாடு எடுக்கிறார்கள்.”

எத்தகைய பொறுப்பற்ற, அசிரத்தையான, மேம்போக்கான வார்த்தைகள்!!! “வரலாற்றுப் புரட்டுப் புரட்சி“ செய்பவர்களுக்கு இருக்கும் உரிமைகூட புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு இல்லையென்கிறார் அவர். நன்று! ஈழப் போராட்டத்தைப் பற்றி தெளிவான விளக்கமின்றி எழுதப்பட்ட தனது படைப்பை நியாயப்படுத்துவதற்காக, இத்தகைய அபத்தாபத்தமான எதிர்வினையை, அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரால் ஆற்ற முடிவதும் இலக்கிய உலகின் துயரங்களில் ஒன்றே. விடுதலை இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே அந்நாவலுக்கு எதிர்வினையாற்றத் தகுதிவாய்ந்தவர்கள் என்பதையும், எண்பதுகளில் புலம்பெயர்ந்தவர்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற அதீத கற்பனையையும் என்னவென்பது? இது, “குரங்குகளுக்கு நீண்ட வாலுண்டு; ஆகவே நீளமான வாலுள்ள யாவும் குரங்குகளே”என்பதை இது நினைவுறுத்துகிறது. இரண்டு உலகங்களில் வாழ விதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள், தங்களது பொருளாதார நலன்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தல் இயலாது; அவர்களால் விட்டுவிட்டு (கைவிட்டு அல்ல) வரப்பட்ட நிலத்தின் அரசியல், சமூக, பொருளாதாரக் கடமைகளுக்குப் பொறுப்பானவர்களாகவும் அவர;கள் இருக்கவேண்டியிருக்கிறது.

மேலும், தமது தாய் மண்ணில் வாழ முடியாமல் அதை நீங்கிச்சென்றவர்கள் அல்லது மறைமுகமானதும் நேரடியானதுமான அச்சுறுத்தல்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஏன் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டும்? அவர்கள் பொருளாதார நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும்- அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ ஈழத்தைவிட்டு வெளியேறியிருந்தாலும்- அங்கே பிறக்காதவர்களானாலும் கூட தமது மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தகுதிவாய்ந்தவர;களே. இன்னுஞ் சொல்லப்போனால் உரிமைகள் மறுக்கப்பட்ட எந்தவொரு மனிதனுக்காகவும் இனத்துக்காகவும் குரல்கொடுக்கும் தார்மீகக் கடமையும் உரிமையும் இப்பூவுலகில் வாழும் யாவருக்கும் உள்ளது; விலங்குகள் உள்ளடங்கலாக எவ்வுயிர்க்கும் உரியது இவ்வுலகம். அறியாததை ‘அறியேன்’என்று ஏற்றுக்கொள்வதே அறிவுடமை; அஃதல்லாதது மடமை.

உலகெங்கிலும் இருக்கும் வல்லரசுகளாலும், பேரினவாதிகளாலும், ஏகாதிபத்திய எதேச்சாதிகாரிகளாலும் எளிய-சிறுபான்மை-சுதேச மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்கள், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அஞ்சிப் புலம்பெயர்ந்து போன எல்லா மக்களும் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டியவர்கள்தானா? அப்படியானால், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவு வாழ்வு வாழ்ந்த பாரதிக்கும் இது பொருந்துமா? தனது பதினாறு வயதிலேயே நியூயோர்க் நகருக்கு வந்து சேர்ந்து தனது 37 ஆவது வயதில் பாலஸ்தீனத்திற்காகக் குரல்கொடுக்க ஆரம்பித்த எட்வேர்ட் செய்த்தும்- தனது 22ஆவது வயதிலேயே ‘குறித்துக்கொள் நான் ஒரு அராபியன்’எனும் புகழ்பெற்ற கவிதையை எழுதி அரபுலகில் விடுதலையுணர்வைத் துாண்டியவரும், இருபத்தாறு ஆண்டு காலமாக இஸ்ரேலுக்குத் (பாலஸ்தீனமே) திரும்பிவரத் தடை விதிக்கப்பட்டிருந்தவருமாகிய கவிஞர் மஹ்மூத் தார்விஷூம் குற்றவுணர்ச்சி கொண்டிருக்கவேண்டியவர்கள்தானா?

அவர்கள் உன்னதமான படைப்புகளைத் தந்த உலகறிந்த அறிவுஜீவிகள், கவிஞர்கள்தாம்! ஆயினும், ‘தன்னளவில் சிறுபுல்லும் முழுமை’யன்றோ?

உலகெங்கிலும் ஒடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினர் உயிருக்கும் சுயபங்க இழிவுக்கும் அஞ்சி வெளிநாடுகளில் புகலிடம் தேடுவதும், அங்கிருந்தபடி உள்நாட்டில் துயரைத் தின்று வாழும் தமது மக்களுக்காகக் குரல்கொடுப்பதும் காலாகாலமாக நடந்துவருவது. குர்திஷ்கள், காஷ்மீரிகள், திபெத்தியர்கள் இன்னபிறரை இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகக் காட்டவியலும்.

நாடற்று உலகெங்கிலும் அகதிகளாக பரந்துள்ளவர்களுள் குர்திஷ் இனத்தவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜேர்மனியில் மட்டும் ஏறத்தாழ எட்டு இலட்சம் குர்திஷ் இனத்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அதைவிடவும் அமெரிக்கா, கனடா, லெபனான், நெதர்லான்ட், பிரிட்டன், ஸ்வீடன், பின்லான்ட், அவுஸ்திரேலியா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த ஆர்மேனியா, உஸ்பெக்கிஸ்தான், அஸர்பைஜ்ஜான், கஸகஸ்தான் இங்கெல்லாம் அவர்கள் சிதறிப்போய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஈராக்-ஈரான்-துருக்கி-சிரியா என்ற நாற் கணங்களுக்கும் நடுவில் கிடந்து நசிபட்டுக் கொண்டிருக்கிறது ‘குர்திஷ்தான்’எனும் கனவு. ஆயினும், வன்முறையினாலோ அழுத்தங்களாலோ ஒரு இனத்தை அடக்கியொடுக்க முடியாது என்பதை, அண்மைக்காலத்தில் துருக்கிக்குக் கற்பித்திருக்கிறார்கள் உலகெங்கிலும் பரந்துவாழும் குர்திஷ்கள். ‘நாலு நிலங்களில் பரந்திருக்கும் ஒரே தேச’த்தின் தொழிலாளர் கட்சித் தலைவராகிய சுபையிர் அய்தர் (Zubeyir Aydar) நேர்காணல் ஒன்றில் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

“17 ஆண்டுகளாக நான் நாடற்றவனாக அலைந்துகொண்டிருக்கிறேன். தடைசெய்யப்பட்ட நாடொன்றைச் சேர்ந்த ஒருவனது விருப்பம் என்னவாக இருக்கமுடியும்? எனது ஒரே விருப்பம் சுதந்திர குர்திஷ்தானுக்கு கௌரவத்தோடு செல்வது மட்டுமே.”

சீனாவின் மேலாதிக்கப் பிடியிலிருந்து விடுபட்டு தனித்தன்மையுள்ள சுயாட்சி அமைப்பதற்காகப் போராடிவரும் திபெத்தியர்களின் குரலானது உள்நாட்டிலிருந்து மட்டும் ஒலிக்கவில்லை. சீனாவின் அடக்குமுறைக்கு அஞ்சி வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த கலைஞர்கள், ஆன்மீகத் தலைவர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் வெளிநாடுகளிலிருந்தபடி தமது அடிப்படை உரிமைகளுக்காகக் குரலெழுப்பி வருகிறார்கள். விடுதலைக்காகக் குரலெழுப்பும் தொண்டைகளில் அழுத்தப்படவென துப்பாக்கிக் குழல்களோடும், எழுதுபவர்களின் விரல்களை முறித்தெறிவதற்கான சிறைகளோடும் காத்திருக்கிறது சீன வல்லாதிக்கம். ஜமான் கீ, டொல்மா கியாப் போன்ற பல நுாறு எழுத்தாளர்கள் அங்கு சிறையிடப்பட்டிருக்கிறார்கள். திபெத்தியர்களின் அரசியல் மற்றும் ஆன்மீகக் குருவாகிய தலாய் லாமா உள்ளிட்டோரின் மீள்திரும்புதலுக்காக இரத்தப்பசியோடு காத்திருக்கின்றன சீனாவின் சிறையறைகள்.

1959ஆம் ஆண்டு, சீன மக்கள் குடியரசின் துன்புறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பெற்றோருக்கு, இந்தியாவின் வீதியோரக் கூடாரமொன்றில் பிறந்தவர்தான் டென்சின் ட்சூண்டு (Tenzin Tsundue).-பெயர்களைத் தமிழ்ப்படுத்தினால் விசித்திரமாக ஒலிக்கிறது. திபெத்திய விடுதலைக்காக ஒலிக்கும் குரல்களில் அவருடைய குரலும் குறிப்பிடத்தகுந்தது.) அவரது பெற்றோர் இந்தியாவில் வீதி செப்பனிடும் தொழிலாளர்களாக வேலை செய்யவேண்டியேற்பட்டது. ஒருபோதும் பார்த்தறியாத தன் தாய் தேசத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை கீழ்வருமாறு:

…………………………………

…………………………………


ஒவ்வொரு காவல் நிறுத்தங்களிலும் அலுவலகங்களிலும்,
நான் ஒரு ‘இந்தியன்-திபெத்தியன்.’
ஒவ்வொரு ஆண்டும், ஒரு சலாமுடன் புதுப்பிக்கப்படும்
எனது பதிவுப் பத்திரத்தின்படி
நான் இந்தியாவில் பிறந்துவிட்ட வெளிநாட்டவன்.

இந்தியனே போலிருப்பேன்
ஒடுங்கிய திபெத்திய முகம் தவிர்த்து,
“நேபாளி?” “தாய்? “யப்பானியன்?”
“சீனன்?” “நாகா?” “மணிப்புரி?”
ஆனால், ஒருபோதும் கேட்கப்பட்டதில்லை -“திபெத்தியன்?”

நான் ஒரு திபெத்தியன்.
ஆனால், அங்கிருந்து வரவில்லை
ஒருபோதும் அங்கு இருந்ததுமில்லை.
ஆயினும்
எனது கனவெல்லாம்
அங்கு மரணிப்பதே!



மலர்கள் பூத்துக் குலுங்கும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நீரேரிகளுமாக இயற்கை எழுதிய கவிதையென மலர்ந்திருக்கும் காஷ்மீருக்காக, பல்லாண்டுகளாக மோதிக்கொண்டிருக்கின்றன இந்தியாவும் பாகிஸ்தானும். இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஆதிக்கப் போட்டியில் அழிந்துகொண்டிருக்கிறது காஷ்மீரிகளின் அமைதி மற்றும் விடுதலை குறித்த கனவு. கீழைத்தேசங்களின் தலைவிதியை நிர்ணயிக்கிற மேலைத்தேசங்களோ, காஷ்மீரின் விசயத்திலும் சுயலாப நட்டக் கணக்குப் பார்ப்பதைத் தொடர்ந்து செய்கின்றன. இந்நிலையில், அந்த மண்ணின் இரத்தக் களரியிலிருந்து தமது மக்களை விடுவிப்பதற்காக புலம்பெயர்ந்த காஷ்மீர்கள் உலக அரங்கில் குரலெழுப்பிவருகிறார்கள்.

நியூயோர்க் மற்றும் மசாசுசெற்ஸ் பல்கலைக்கழகங்களின் முன்னாள் விரிவுரையாளரும், காஷ்மீரி-அமெரிக்கக் கவிஞருமான அஹா சாஹிட் அலியின் வார்த்தைகளில் விரியும் ஸ்ரீநகர் அச்சந்தருவது.

“மேலும், இரவுகளிலும் ஸ்ரீநகரில் சூரியன் ஒளிர்ந்துகொண்டிருக்கிறதா? வானத்திலுள்ள நட்சத்திரங்களைச் சுட்டுவீழ்த்துகின்றன துப்பாக்கிகள். விண்மீன் கூட்டங்களின் ஓயாத புயல்களால் கிழித்தெறியப்படுகின்றன இரவுகள். ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது ஸ்ரீநகரில்….அந்த சித்தம் கலங்கவைக்கும் ஓசைகளுள் உங்களது அடையாளப் பத்திரங்கள் உங்களுக்கு உதவியிருக்கக்கூடும் அல்லது, இல்லை. பிடித்துச் செல்லப்பட்ட எங்களது பிள்ளைகள் திரும்பியதேயில்லை சித்திரவதை இரவுகளுக்குத் தப்பி.”

புலம்பெயர்ந்த குர்திஷ்களுக்கும் காஷ்மீரிகளுக்கும் திபெத்தியர்களுக்கும் இருக்கும் அதே உரிமை ஈழத்தமிழர்களுக்கும் உண்டு. ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் மீது எதிரிகளின் குதர்க்க மூளைகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் வினோதமானவை. அள்ளி விசிறும் அவதுாறுகள் மனவுளைச்சல் தருபவை. ‘விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் விமர;சனத்திற்கு அப்பாற்பட்டவை’ என்ற வார்த்தைகளை ஆதரவு நிலைப்பாடுடையவர்களின் சார்பில் தாங்களாகவே உற்பத்தி செய்து உலவவிடுவதன் வழியாகத் தங்களது இருப்பினை உறுதிசெய்துகொள்கிறார்கள். போராட்டம் மீதான நியாயமான விமர்சனங்களுக்கும், திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்படும் அதிகார நலன்சார்ந்த பரப்புரைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை இனங்காண வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோளாகும். பாலஸ்தீனச் சிக்கலில் ஆழ்ந்த அவதானிப்புக் கொண்டவரும், புலம்பெயர்ந்து வாழும் அறிவுஜீவியுமாகிய காடா கர்மி(Ghada Karmi) அவர்களின் வார்த்தைகளை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தப்பாடுடையது.

“யாசர் அரபாத்தின் மீது எந்தத் தவறுமில்லை என்றோ அவர் குறித்த விமர்சனங்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட வேண்டியவை என்றோ நான் சொல்லவரவில்லை. மக்கள் தமது தலைமையை விமர்சித்து சீர்திருத்த வேண்டுமென்பது சரியே. ஆனால், அத்தகைய விமர்சனங்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை மூடிமறைப்பதற்கோ, பாலஸ்தீன வரலாற்றில் யாசர் அரபாத்தின் ஈடிணையற்றதும் நியாயமானதுமான இடத்தை மறுதலிப்பதற்கோ அனுமதிக்கக்கூடாது. வரலாற்றில் பின்னொதுக்கப்பட்டிருந்த நிலைமையில் இருந்த பாலஸ்தீனப் பிரச்சனையை உலக அரங்கின் முன் எடுத்துவந்தவர் அவரே. ஆங்காங்கு சிதறியிருந்த மக்களை ஒன்று திரட்டி - 60 வீதமானவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்- ஆக்கிரமிக்கப்பட்ட தாய்மண் அவர்களுடையது; அது மீட்கப்படவேண்டியது என்ற எண்ணத்தை வலுவடையச் செய்ததும் அரபாத்தே. பாலஸ்தீனப் பிரதேசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே போகும் இன்றைய ஆபத்தான நிலையில், இஸ்ரேலின் மிகப்பலம்வாய்ந்த கபளீகரத்தை எதிர்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த பாலஸ்தீன அடையாளமாக அவரே திகழ்கிறார்.”

(‘யாசர் அரபாத்தைக் கொன்றது யார்?’என்ற தலைப்பில், காடா கர்மி அவர்களால் 2004ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து…)

யாசர் அரபாத் கூட அழுத்தங்கள் காரணமாக சில சமரசங்களுக்கு உடன்பட்டார்; ஆனால், தலைவர் பிரபாகரனின் வரலாற்றில் மலினமான சமரசங்களுக்கு இடமிருக்கவில்லை. இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை அனைத்துலக அரங்கில் வெளிக்கொணர்ந்ததில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பங்கினை மறுதலிப்பவர்கள், கண்களை மூடிக்கொண்டு ‘இருட்டு’ என்று சொல்பவர்கள். அத்தகைய போராட்டத்தையும், தாங்கள் நேசித்த மக்களுக்காக, மண்ணுக்காகத் தம்முயிரை ஈந்த முப்பத்தாறாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களது அர்ப்பணிப்பையும் நாங்கள் மறந்துவிடவேண்டும் என்று பேராசை கொண்டலைகிறது பேரினவாதம். அதாவது, “முப்பதாண்டு கால வரலாறு உங்களுக்கு இல்லை; நீங்கள் நீளுறக்கம் கொண்டிருந்தீர்கள். உங்களை நாங்கள் ‘அடித்து’எழுப்பியிருக்கிறோம். உங்கள் முன் இருப்பது வேறு உலகம்”என்பதே அதன் சாரம். “ஆமாம்… நாங்கள் முப்பதாண்டு காலம் உயிரோடு இருந்திருக்கவில்லை”என்று ஆட்டாத தமிழரது தலைகள் கழுத்தில் இருக்காது என்பது இலங்கையின் அராஜக நியதி. அந்தக் கொலைபடுகளத்தில் உறவுகளையும் உடமைகளையும் பறிகொடுத்து, உணர்வுகள் சிதைக்கப்பட்ட மக்களே தங்களுக்காகப் பேசும் முன்னுரிமை கொண்டவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், பேரினவாதத்திற்கு எதிராக சிறு ஒலியையும் எழுப்ப முடியாத அளவிற்கு அராஜகம் அங்கு தலைவிரித்தாடும் நிலையில், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை புலம்பெயர் தமிழர்களுக்கும் (புலம்பெயர் தமிழர்களுக்கும் என்பதைக் கவனிக்க) உண்டு.

இராஜபக்சே அரசும் அதன் அதிகாரிகளும் போர்க்குற்றவாளிகளே என்று நிரூபிக்கும் பிரயத்தனம் தொடர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், ‘அந்த எத்தனத்தில் வெற்றி கொண்டுவிடுவார்களோ தமிழர்கள்’ என்ற அச்சம் பேரினவாதிகளுக்கு மட்டுமல்ல; சில அதமிழர்களுக்கும் உண்டு.

அத்தகைய அதிகாரச் சார்பு ஊதுகுழல்களுக்கும், அவர்களின் எசமானவர்களுக்கும் விடுதலைக் கவிஞன் மஹ்மூத் தார்விஷின் கீழ்க்காணும் வரிகளைச் சமர்ப்பித்து முடிக்கலாம்.

“அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதையும், எவரையும் ஆக்கிரமிக்கவும் கொலை செய்யவும் முடியும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், எனது வார்த்தைகளைச் சிதைக்கவோ அதனை ஆக்கிரமிக்கவோ அவர்களால் ஒருபோதும் முடியாது.”



-நன்றி - அம்ருதா நவம்பர் இதழ்



13 comments:

தமிழ்நதி said...

இந்தப் பதிவு தமிழ்மணத்தில் வருகிறதா என்று பார்க்க.....

ராம்ஜி_யாஹூ said...

சொற்களுக்கு மட்டும் அல்ல
உங்கள் வலைப் பதிவிற்கும் குடியுரிமை
மாற்றியாகி விட்டது போல
.ca

ராம்ஜி_யாஹூ said...

சொற்களுக்கு மட்டும் அல்ல
உங்கள் வலைப் பதிவிற்கும் குடியுரிமை
மாற்றியாகி விட்டது போல
.ca

தமிழ்நதி said...

ஆம் ராம்ஜி, அப்படித்தான் வருகிறது. வலைப்பூக்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். அதை பழையபடி .com க்குக் கொண்டு வரமுடியுமா என்று தெரியவில்லை. முகநுாலில் உங்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தேன். பதில் இல்லை.

ராம்ஜி_யாஹூ said...

(அக்கா/ தங்கை), பதில் அனுப்பி விட்டேன், தாமதத்திற்கு மன்னிக்கவும்.

புலம் பெயர்ந்து வாழ்வது கொடுமையான அனுபவமே
மன வலியை வார்த்தைகளில் எழுத முடியாது

சின்னப்பயல் said...

http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html

இந்தச்சுட்டியில் அதற்கான விட்ஜெட் உள்ளது தமிழ்,,இதைப்பயன்படுத்துங்க...உங்க வலைப்பூ மீண்டும் .com க்கே திரும்பிவந்துவிடும் ..:-)
நானும் அதேதான் செய்திருக்கேன்.. :-)

சின்னப்பயல் said...

வழக்கம்போல் மேலதிக தரவுகளுடன் எழுதப்பட்ட நல்ல கட்டுரை.

தமிழ்நதி said...

ராம்ஜி,

(அண்ணா/தம்பி:))))))

உழைப்பதற்காக வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் ஏனைய நாட்டவரும் இதில் ஓரளவு வலியையேனும் உணர்ந்திருப்பர் என்பது நிச்சயம். வேறு மண்ணிலிருந்து வந்தவர்களாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானவையாக இருக்கும். அண்மையில், ஆபிதீன் தன் மேல் முட்டை எறியப்பட்டதைக் குறித்து எழுதியிருந்தார். அவர் நகைச்சுவை இழையோட அதைப் பதிவு செய்திருந்தாலும், அதன் பின்னாலிருக்கும் வலி மிகப் பெரிது. ஜெயமோகனது அண்மைய பதிவில் துபாய் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து எழுதியிருந்தார்.

நன்றி சின்னப்பயல். மாற்றிவிடுகிறேன்.

”வழக்கம்போல மேலதிக தகவல்களுடன் எழுதப்பட்ட நல்ல கட்டுரை” -இவ்வளவு நீண்ட கட்டுரையை முழுவதுமாகப் படித்துக் கருத்துச் சொல்வது சிரமந்தான். எனக்கு மட்டும் சொல்லுங்க... எத்தனை பந்தி படிச்சீங்க சின்னப்பயல்....:)))

சின்னப்பயல் said...

இப்பல்லாம் நிறைய வாசிக்க நேரமும் கிடைக்குது..அதோட எழுத்து சுவாரசியமாக இருந்தா முழுசா வாசிக்கவும் தோணுது தமிழ்....அதனால எல்லாத்தையும் வாசிச்சிட்டேன்..! :-)

தமிழ்நதி said...

நல்லது சின்னப்பயல். முகநுால் பழக்கதோசத்தில் like ஐ அழுத்தத் தேடினால் காணோம். சஞ்சிகைகளுக்காக எழுதுவதனால் கட்டுரைகள் நீண்டுவிடுகின்றன. பிறகு அவற்றை வலைத்தளத்தில் சேமிக்கிறேன். இதுவொன்றே தொலையாத சேமிப்பு:))) வலைப்பூவில் எழுதவென்றே எத்தனையோ விசயங்கள்... சின்னச் சின்னதாக... மனதில்தான் சேகரமாகிக் கொண்டிருக்கின்றன.

நல்லதோர் வீணை.. said...

விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் விமரசனத்திற்கு அப்பாற்பட்டவை’-அப்படியே உரக்க சொல்லலாம் தமிழ் நதி ! தவறொன்றுமில்லை! போராட்டமும் இயக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல தான். ஆனால், இவர்களின் தரம் தாழ்ந்த உளறல்களுக்கும் அல்லது எஜமானர்களின் எலும்பு துண்டுகளுக்கான குறைதல்களுக்கும் அப்பாற்பட்டவையே! நல்லொதொரு படைப்பு!

நல்லதோர் வீணை.. said...

விடுதலை புலிகளும் ,போராட்டமும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை தான்! அப்படியே உரக்க சொல்லலாம் தமிழ் நதி ! தவறொன்றுமில்லை! போராட்டமும் இயக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல தான். ஆனால், இவர்களின் தரம் தாழ்ந்த உளறல்களுக்கும் அல்லது எஜமானர்களின் எலும்பு துண்டுகளுக்கான குறைதல்களுக்கும் அப்பாற்பட்டவையே!

நல்லொதொரு படைப்பு!

தமிழ்நதி said...

புரிதலுக்கு நன்றி 'நல்லதோர் வீணை'

நமது பக்கத் தவறுகளை ஒப்புக்கொண்டு பேசுகிறபோது, அந்த வாதம் வலுவாகவும் நியாயமாகவும் அமையும் என்பது எனது நம்பிக்கை.

வேண்டுமென்றே அள்ளிவீசப்படும் அவதூறுகளைப் ப◌ார்க்கும்போது..., 'இதுகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமா என்ன?'என்றும் சில சமயங்களில் தோன்றியிருக்கிறது. யார் எதைச் சொன்னாலும், விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பைக் குறை சொல்ல யாருக்குத் தகுதி இருக்கிறது? 'உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதற் கல்லை எறியட்டும்'என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் ஞாபகத்தில் வருகின்றன.