மனித இதயம் அனிச்ச மலரினும் மென்மை, மழையின் பெருங்கருணை, பறவையின் அடிவயிறு, குழந்தையின் முதற்சிரிப்பு, நிலத்தின் பொறுமை… ஹா…! இனியும் கதைகளை விடவேண்டாம். அவை மட்டுமன்று; அது காழ்ப்புணர்ச்சியின் கருவறை, துரோகமெனும் நஞ்சுறையும் புற்று, சுயநலத்தின் வாழ்விடம், ‘மற்றவர்’ மீதான வெறுப்பின் ஊற்றுக்கண்ணும்கூட.
மற்றவர்… நாமல்லாத மற்றவர்…. யூதர்கள்,
ஜிப்சிக்கள், ஓரினச் சேர்க்கையாளர், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள்,
ஏழைகள், கறுப்பர், மங்கோலியர், காக்கேசியர், நரிக்குறவர், கோவியர், முக்குவர், பறையர்,
பள்ளர்…. விலங்குகள், பறவைகள், ஊர்வன… மற்றவர்கள்… மற்றவைகள்… இனத்தால், மதத்தால்,
சாதியால், தேசத்தால், நிறத்தால், பண்பாடு, கலாச்சாரத்தால் நமக்குப் புறம்பானவர்கள்…
கொலைபடவும் சிறைப்படவும் வதையுறவும் விதிக்கப்பட்டவர்கள்…
கொலைபடவும் சிறைப்படவும் வதையுறவும் விதிக்கப்பட்டவர்கள்…
ரஃபேல் லெம்கின்! நீங்கள் உன்னதமான
மனிதராயிருத்தல் வேண்டும். நீங்கள் அந்தச் சொல்லை உருவாக்கினீர்கள். இல்லையெனில், எங்களுக்கும்
அவர்களுக்கும் என்ன நடந்ததென்று பற்பல சொற்களால் பன்னிப் பன்னி முயன்றிருக்க வேண்டும்.
உங்களுக்கு இனப்படுகொலையுண்டவர்களின் ஆன்மாக்கள் கடமைப்பட்டவை.
நீங்கள் அப்போது சிறுவனாக இருந்தீர்கள்…
பண்டைய ரோமானியப் பேரரசின் ‘புகழ்பூத்த’ நீரோ மன்னன், புதிய மதமொன்றைச் சகித்துக்கொள்ள
முடியாமல், சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டிற்குள் கிறிஸ்தவர்களை எறியக் கட்டளையிட்டான்
என்பதைப் பற்றிப் படித்தபோது, நீங்கள் கேள்விகளால் உங்கள் தாயைத் துளைத்தெடுக்கிறீர்கள்:
“அதெப்படி அப்படிச் செய்யமுடியும் அம்மா?
அதை எப்படி மக்கள் அனுமதித்தார்கள்? இத்தகையதொரு கொலைவெறியை எங்ஙனம் அவர்களால் பார்த்து
இரசிக்க முடிந்தது?”
நீங்கள் கேள்விகளாலானவர் ரஃபேல். சட்டக்
கல்லூரி மாணவனான பிற்பாடு நீங்கள் கீழ்க்காணும் கேள்வியை உங்கள் பேராசிரியரிடம் கேட்கிறீர்கள்:
“ஆர்மேனியர்களைப் படுகொலை செய்யக் கட்டளையிட்ட
மெஹ்மெற் ரலாத் தண்டிக்கப்படாதது ஏன்?”
“இதோ பார் ரஃபேல்… அதற்குச் சட்டத்தில்
இடமில்லை. உதாரணமாக, ஒரு பண்ணைக்குச் சொந்தக்காரனை
எடுத்துக்கொள்வோம். அவன் சில கோழிகளை வளர்க்கிறான். பிறகு அவற்றைக் கொல்கிறான். அது
அவனுடைய தொழில். அந்தக் கோழிகளை ஏன் கொன்றாய் என்று நீ அவனிடம் கேட்பாயானால், நீ உள்விவகாரத்தில்
தலையிடுகிறாய். எல்லை மீறுகிறாய் என்று பொருள்”
“ஆனால், ஆர்மேனியர்கள் கோழிகள் அல்லர்!”
அது அப்படித்தான் ரஃபேல்!
துருக்கியருக்கு, ஆர்மேனியர் - கால்நடைகள்
ஜெர்மனியருக்கு, யூதர்கள் - கீழ்மக்கள் (vermin)
ஹுட்டுக்களுக்கு, ருட்ஸிக்கள் – கரப்பான் பூச்சிகள்
சிங்களப் பேரினவாதிகளுக்கு, தமிழர்கள் - நாய்கள்
ரஃபேல்! அந்தக் கேள்வி உங்களைத் தொந்தரவு
செய்கிறது. உள் நின்று உறுத்துகிறது. உங்களுக்கு அது புரியவேயில்லை.
“ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொல்லும்போது
அவன் தண்டிக்கப்படுகிறான்; ஒரு மில்லியன் சனங்களை, ஒரு தேசத்தைக் கொலைசெய்தவன் சுதந்திரமாக
வெளியில் திரிகிறான். ஒரு மில்லியன் சனங்களைக் கொல்வதென்பது ஒரு தனிமனிதனைக் கொல்வதைக்
காட்டிலும் குறைவான குற்றச்செயலா?”
சட்டப்புத்தகங்களில் அப்போது அந்தக்
குற்றம் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. அதைக் குறிக்க ஒரு பெயர்தானும் இருக்கவில்லை.
சிறுபான்மையினர் யாவரும் நேரம் வந்தால் கழுத்து அறுபட்டுச் சாகவிருக்கும் கோழிகளே!
“அவர்கள்தாம் (ஆர்மேனியர்கள்) எவ்வளவு
அவலப்பட்டுச் செத்துப்போனார்கள்!”நீங்கள் பெருமூச்செறிகிறீர்கள்.
“அவர்கள் – துருக்கியர்- எங்களை இடம்மாற்றப் போவதாகச்
சேதி கிடைத்தது.” அப்போது பதினான்கு வயதுச் சிறுவனாயிருந்த ரகோச்சி லெவோனியன் நினைவுகூர்கிறார்:
“தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பி
வருவார்களென்று அயலவர்களில் பெரும்பாலானோர் நம்பினார்கள். நீண்ட பயணத்திற்குத் தயார்
செய்வதுபோன்று ரொட்டிகளையும் இன்னபிற உணவுகளையும் தயாரிக்கத்தொடங்கினார்கள். அவற்றைத்
தயாரிப்பதில் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று தந்தை எனது தாயாரிடம் சொன்னார். செல்லும்
வழியில் உறங்குவதற்குத் தேவையானதை மட்டும் கோவேறு கழுதையொன்றில் ஏற்றினார். என்ன நடக்கப்போகிறதென்பதை
அவர் ஊகித்திருந்தார்.”
அவருடைய ஊகம் மெத்தச்சரி! ஏப்ரல் 24,
1915அன்று சிறுபான்மையினராகிய ஆர்மேனியர்களின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
பின்பு அவர்கள் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்கள். வலுவுள்ள ஆர்மேனிய இளைஞர்கள் வலுக்கட்டாயமாக
இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. எஞ்சியோர்
சிறிய சிறிய குழுக்களாக அழைத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமிருப்பவர்கள்
பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் மட்டுமே.
அதோ!ஆர்மேனியப் பெண்களையும் குழந்தைகளையும்
முதியவர்களையும் துருக்கியர்கள் ஆடுமாடுகளைப் போலச் சாய்த்துக்கொண்டு போகிறார்கள்.
அந்த ஊர்வலம் மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கிறது. புல்பூண்டற்ற வனாந்தரங்களில்
வாரக் கணக்கில், மாதக்கணக்கில் கூரிய துப்பாக்கி முனைகளால் நடத்திச்செல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வழியில் கடந்து செல்லும் ஊர்களில் வாழும் துருக்கியர்கள் அந்தப் பாவப்பட்ட சனங்களின்
சொற்ப உடமைகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்களை இழுத்துச் சென்று வன்புணர்ச்சி செய்கிறார்கள்.
தங்கள் குழந்தைகளை வாங்கிக்கொள்ளும்படியாக, அவர்களேனும் உயிரோடு வாழட்டுமென்று வழியில்
எதிர்ப்படும் துருக்கிப் பெண்களிடம் மன்றாடுகிறார்கள் ஆர்மேனியப் பெண்கள். சிலர் பெற்றுக்கொள்கிறார்கள்.
அந்தக் குழந்தைகள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியர்களாக வளரவிருக்கிறார்கள்.
முடிவற்ற நடை. உணவும் தண்ணீரும் மறுக்கப்பட்டவர்களாய் அவர்கள்
போகிறார்கள். புல்பூண்டுகளைச் சாப்பிடுகிறார்கள். சில நாட்களிலேயே தூசிபடிந்த எலும்புக்கூடுகளின்
ஊர்வலம் போலாகிவிட்டார்கள் அவர்கள். காலணிகள் தேய்ந்துபோன குழந்தைகளின் பாதங்களிலிருந்து
குருதி சொட்டுகிறது. பசியினாலும் களைப்பினாலும் நோயினாலும் மயங்கிச் சரிகிறார்கள்.
கடைசி வாய்த் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் தம் பெற்றோரைக் கூவியழைத்தபின் பயனின்றி
மரித்துப் போகிறார்கள். செல்லும் வழியெங்கும் வயோதிபர்களின் உடல்கள் விழுந்து கிடக்கின்றன.
அருகில் அமர்ந்து யாரும் அழுவதற்கில்லை.
ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது
குடிமக்களே! நடவுங்கள். பிரித்தெடுத்து அழைத்துச் செல்லப்பட்ட ஆண்கள் அப்போதே கொல்லப்பட்டுவிட்டார்கள்….
பெண்களே! நடவுங்கள். இன்னும் சில நாட்களில் பிணந்தின்னிப் பறவைகளுக்கு இரையாக மாறவிருப்பவர்களே!
ஏற்கெனவே விழுந்துவிட்டவர்களின் மேல் இடறிவிழுந்துவிடாமல் நடவுங்கள். இல்லையெனில் துப்பாக்கிகளின்
பயனெட்களால் கொல்லப்படுவீர்கள். அதோ! நடக்கமுடியாமல் சோர்ந்துபோன ஒரு பெண்ணின் கதையை
அவர்கள் முடித்துவிட்டார்கள். நல்லது. அவளது துயரம் அவ்வகையிலேனும் நிறைவுற்றது. துரதிர்ஷ்டத்தினால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! நீங்கள் பாலைவனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் மலைகளினோரங்களிலும்
சிதறி அலைந்து வெகு விரைவில் மடிந்தே போய்விடுவீர்கள்.
நல்லபடியாக முடிந்தது இருபதாம் நூற்றாண்டின்
முதல் இனப்படுகொலை! (அது அப்போது அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருக்கவில்லையாயினும்)
ஒரு மில்லியன் ஆர்மேனியர்களின் ஆன்மாக்கள் பசியில் கத்தியழும் குரல்கள் பாலைவனங்களில்
அலைந்துகொண்டிருக்கின்றன.
ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தின் அப்போதைய
அமெரிக்கத் தூதுவராயிருந்த ஹென்றி மோர்கன்தாவு எழுதுகிறார்:
“புதிய வகையிலான கூட்டுப் படுகொலைக்கு இது உதாரணமாயிற்று. துருக்கிய ஆட்சியாளர்கள் ஆர்மேனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேறும்படியாக இட்ட உத்தரவானது, அந்த மொத்த இனத்திற்குமான மரண சாசனம்; இதைத் துருக்கியர்கள் உணர்ந்தேயிருந்தார்கள். ஆனாலும், என்னோடு அதைக் குறித்து எந்தவொரு உரையாடலையும் நிகழ்த்தவோ உண்மையை வெளிப்படுத்தவோ முயற்சி எடுத்திருக்கவில்லை.”
தனியொரு மனிதனாகிய உங்களது குரல் மறுபடியும் மறுபடியும் ஒலிக்கிறது ரஃபேல் லெம்கின்:
“புதிய வகையிலான கூட்டுப் படுகொலைக்கு இது உதாரணமாயிற்று. துருக்கிய ஆட்சியாளர்கள் ஆர்மேனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேறும்படியாக இட்ட உத்தரவானது, அந்த மொத்த இனத்திற்குமான மரண சாசனம்; இதைத் துருக்கியர்கள் உணர்ந்தேயிருந்தார்கள். ஆனாலும், என்னோடு அதைக் குறித்து எந்தவொரு உரையாடலையும் நிகழ்த்தவோ உண்மையை வெளிப்படுத்தவோ முயற்சி எடுத்திருக்கவில்லை.”
தனியொரு மனிதனாகிய உங்களது குரல் மறுபடியும் மறுபடியும் ஒலிக்கிறது ரஃபேல் லெம்கின்:
“ஒரு தேசத்தை, இனத்தை, மதத்தை, கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களைக்
கூட்டாகப் படுகொலை செய்வதை எந்தப் பெயர்கொண்டு அழைப்பது? அந்தக் கொடிய செயலைத் தடுத்து
நிறுத்தும் சட்டங்கள் உண்டா?”
“இல்லை. ஆர்மேனியர்கள் எப்போதோ முடிந்துபோனார்கள்.
இப்போது அதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது?”முணுமுணுக்கிறார்கள்.
அச்சொல்லுக்கான நெருக்கடி ஜேர்மனியிலிருந்து
புறப்பட்டு உலகை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அந்த நெருக்கடியின் பெயர் ஹிட்லர்!
1931இல் செய்தித்தாளொன்றுக்கு அவனால் வழங்கப்பட்ட நேர்காணலொன்றில் ‘கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாகவும் அதன்போது மில்லியன் கணக்கிலான மக்கள் இடம்பெயர்க்கப்படவும் கொல்லப்படவும் கூடும்’என முன்மொழிந்திருந்தான்.
1931இல் செய்தித்தாளொன்றுக்கு அவனால் வழங்கப்பட்ட நேர்காணலொன்றில் ‘கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாகவும் அதன்போது மில்லியன் கணக்கிலான மக்கள் இடம்பெயர்க்கப்படவும் கொல்லப்படவும் கூடும்’என முன்மொழிந்திருந்தான்.
ஜெர்மனியின் அதிகாரத்தை ஹிட்லர் கையேற்ற
நூறாவது நாளிரவு (மே 10, 1933) நூல்களின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. பெர்லின் ஹம்போல்ட்
பல்கலைக்கழகத்திற்கு எதிரிலிருந்த திறந்தவெளியரங்கில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட
நூல்கள் – ஜெர்மானியர்கள் அல்லாதவர்களால் எழுதப்பட்டவை சாம்பலாக்கப்படுகின்றன. அன்றிரவு மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில்,
புத்தகக் கடைகளில், நூலகங்களில் ‘யூத அறிவுஜீவித்தனத்தின் மரண’த் திருவிழா கொண்டாடப்பட்டது.
அல்பேர்ட் ஐன்ஸ்டீன், சிக்மன்ட் பிராய்ட், ஹெய்ன்றிச் ஹெய்னெ ஆகியோரும் யூதர்களாயிருந்த
காரணத்தால் அவர்தம் நூல்களும் ஜெர்மானியர்களின் அன்றைய இரவினை வெளிச்சமாக்கின.
ஜ+ன் 01, 1981இல் யாழ்ப்பாண நூலகத்திலிருந்த
தொண்ணூற்றி ஏழாயிரம் நூல்களும் கிடைத்தற்கரிய பழஞ் சுவடிகளும் பேரினவாதிகளால் எரித்துச்
சாம்பலாக்கப்பட்டன. அன்று சிங்களப் பேரினவாதத்தின்
நாகரிகம் கொழுந்துவிட்டெரிந்ததை உலகம் கண்ணாரக் கண்டது.
“எங்கே புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ,
அங்கே ஈற்றில் மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்”என்று நீங்கள் சொன்னது சரியாயிற்று ஹெய்ன்றிச்
ஹெய்னெ.
நாஜிக்களின் வதைமுகாம்களில், J.A.TOPF
& SOHNE தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இராட்சத எரியடுப்புகளுள் அள்ளி அள்ளிக்
கொண்டுவந்து திணிக்கப்படுகின்றன பிணங்கள். அவை மகாராஜாக்களின் கோட்டை அடுப்புகளைப் போல இரவு
பகலாக எரிகின்றன. நிணமும் மயிரும் பொசுங்கும் நாற்றம் தாளமுடியவில்லை. தள்ளித் தள்ளி
கைசலித்துப் போகிறது நாஜிப்படை. மனிதத் தோலால் செய்யப்பட்ட விளக்கு மறைப்புகளின் அருகமர்ந்து
அதிகாரிகள் நாட்கணக்கில் திட்டமிட்டும் அத்தனை உடல்களை அழித்து முடிப்பதென்பது சிரமமான
காரியமாகத்தானிருக்கிறது.
ஆறு மில்லியன் உடல்கள்!
ஆனால், அந்தக் கொலைகள் இன்னமும் ‘கொலைகள்’என்றே
சுட்டப்படுகின்றன. நமது சின்னண்ணன்களில் ஒருவராகிய பிரிட்டிஷின் பிரதம மந்திரி வின்ஸ்டன்
சர்ச்சில் ‘பெயரற்ற குற்றம்’என்றே அதை விளித்திருக்கிறார். முள்ளிவாய்க்காலில் நடந்தது
சாட்சிகளற்ற போர் எனில், இஃது பெயரற்ற குற்றம்! கிழக்கு ஐரோப்பாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது
என்பதை அமெரிக்காவோ பிரிட்டனோ ரஷ்யாவோ ஆரம்பத்தில் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பெயரற்ற
குற்றமொன்றைப் புரிந்துகொள்வது எப்போதும் சிக்கலானதே! யூத இனத்தின் படுகொலையை ‘’ஹோலொகோஸ்ட்’என்று
அழைக்க பின்னரே பழகிக்கொண்டார்கள்.
மேலும், ஜெர்மனியில் இருந்து வரும்
செய்திகள் நம்பமுடியாத அளவிற்குக் கொடுமையானவையாக இருக்கின்றன. மனிதர்களாகிய புனிதர்களால்
அவற்றையெல்லாம் செய்யவே முடியாது; வதந்திகள் என்று ஒதுக்கப்படுகின்றன.
எவர்தான் அவற்றை நம்புதற்கியலும்? அது
இப்படித்தான் தொடங்கியது:
நீங்கள் ஒரு யூதர் என்று வைத்துக்கொள்வோம். நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக அங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
திடீரென்று ஒரு சட்டம் (நியூரம்பர்க் சட்டம்) அமுலுக்கு வருகிறது. அந்தச் சட்டம் உங்களது
குடியுரிமையைப் பறித்து ஜெர்மானியர்கள் இல்லை என்று அறிவிக்கிறது. (ஆம். உங்கள் மனதுள்ளிருந்து
குற்றவுணர்வொன்று அலையலையாக எழுந்து வருகிறதல்லவா? பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட
மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்தம் இருப்பினை இலங்கையும் இந்தியாவும் சுதேசித்
தமிழர்களும் பந்தாடியது போலவேதான் நடந்தது.) ஒரு குடிமகனுக்குரிய உரிமைகள் எவையும்
உங்களுக்கு இல்லை என்கிறது. ‘இந்த மண்ணைப் பொறுத்தளவில் நீங்கள் வெளிநாட்டவர்; வேண்டுமானால்
இங்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம்’ என்று சலுகை காட்டுகிறது.
யூதர்களும் ஜெர்மானியர்களும் திருமணம்
செய்துகொள்ளலாகாது; அவ்விதம் செய்துகொள்வதானது சட்டவிரோதம் என்று உங்களுக்குச் சொல்லப்படுகிறது.
மீறிச் செய்வீர்களாயின் புதிய சட்டத்தின் பிரகாரம் உங்களைச் சிறையிலடைக்கவியலும். நீங்கள்
உங்கள் இனத்தவரல்லாத மற்றவருடன் பாலியல் உறவுகொண்டால்… கதிமோட்சந்தான்! ஆகவே, நீங்கள்
யூதராக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் நாற்பத்தைந்து வயதுக்குக் குறைவான பிராயமுடைய
ஜெர்மானியப் பெண்ணை வேலைக்காரியாகக்கூட வைத்திருக்கவியலாது. இசகுபிசகாக ஏதாவது நடந்து
ஜெர்மானியர்களின் ஆரிய இரத்தம் மாசுபடுத்தப்பட்டுவிட்டால் தொலைந்தது. பத்தரை மாற்றுத்
தங்கம் போலும் தூய ஆரிய இரத்தத்தை, கீழ்மக்களாகிய யூதர்களின் இரத்தம் மாசுபடுத்தலாகாது.
அது நோய்க்கிருமி போன்றது. தேசத்தின் ஆரோக்கியத்திற்குக் கெடுதலானது. நீங்கள் பாதி
யூதரா? முழுமையான யூதரா என்ற கேள்வி இப்போது எழுகிறது. நீங்கள் மூன்று யூதப் பாட்டன்களைக்
கொண்டவராக இருந்தால் நீங்கள் முழு யூதராவீர்கள். யூதராகிய நீங்கள் பரிசோதனைக் கூடத்தின்
மேசையில் கிடத்தப்பட்டிருக்கும் எலியைப் போல அத்தனை சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவீர்கள்.
அளக்கப்படுகிறது மூக்கின் நீளம்; அதன்
அளவு உங்களைக் காப்பாற்றியிருக்கலாம். அல்லது கொன்றுபோட்டிருக்கலாம். மேலே உருச்சிறுத்து
கீழ்விரிந்த அளவையினால் உடலின் பாகங்கள் அளக்கப்படுகின்றன. அந்தோ! அவளது யூத இடுப்பு அவளைக் கொன்றது. குருதியில் ஆரியத்
துணிக்கைகள் இல்லாதவனும் தொலைந்தான். 20 நிறங்களால் மூடப்பட்ட கண்ணாடி உருண்டைகளைக்
கொண்ட உலோகச் சட்டம் அகன்றதொரு சதங்கை போலிருக்கிறது. அது அவர்களின் இனத்தைத் துப்பறிந்தது.
நீ ஒரு ஜிப்சியின் கண்களைக் கொண்டிருந்தாயானால், உனது உடலும் ஆன்மாவும் கிழிபட்டு அலையவே
விதிக்கப்பட்டிருக்கிறது. பரிதாபத்திற்குரியவனே! கண்களின் நிறமே உன்னைக் கொன்றது.
29 வகையிலான தலைமயிர் மாதிரிகளைக் கொண்ட அந்தக் கோர்வை ஒரு நிலச்சுவான்தாரின் மனைவியின்
இடுப்பில் தொங்கும் சாவிக் கொத்தினைப் போலவேயிருக்கிறது. ஜெர்மானியர்கள் அல்லாதவர்கள்
என்று சந்தேகிக்கப்பட்டவர்களின் உயிர்கள் மயிர்களின் நிறத்தில், தன்மையில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.
ஜெர்மானிய விஞ்ஞானிகள் ஒரு தவளையைப்
போல வரலாற்றைக் கவிழ்த்துப் போட்டு அறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவையெல்லாம் ஆரம்பக் கட்டக் கண்துடைப்புகள்தாம்.
பிறகு… பிறகென்ன…கொல்லுங்கள். யூதர்களை, ஓரினச் சேர்க்கையாளர்களை, மனநிலை பிறழ்ந்தவர்களை,
ஜிப்சிக்களை, ஆபிரிக்கர்களை, கம்யூனிஸ்டுக்களைக் கொல்லுங்கள் பெருமானே!
உங்கள் குறி தூய ஆரியக் குறிதானா அடோல்ப்
ஹிட்லர்? விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அளவைகளுள் கச்சிதமாகப் பொருந்தியதா தங்கள் ஆரியக்குறி?
அதிலிருந்து வெளிப்பட்டது ஆரிய விந்துதானா? ஈவா பிராவ்ன்! நீயாவது சொல்!
மரணவண்டிகளாகிய அந்தப் புகையிரதங்கள்
அலறிக்கொண்டு போகின்றன. இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படும் விலங்குகளைப் போல அவர்களைக்
கொண்டுபோகிறார்கள்.
நீண்ட பயணம். மரணமுகாமாகிய ஆஷ்விச்சுக்கு
வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அழுக்கு இன்னொரு ஆடையாகப் படிந்திருக்கிறது. கடூழியத்திற்குத்
தகுதியற்ற அனைவரும் கொல்லப்படத் தகுதியுடையவர்களே. ‘ஆடைகளைக் கழட்டிவிட்டு உள்ளே செல்லுங்கள்.
குளிக்கலாம்’நீங்கள் போகிறீர்கள். தண்ணீருக்குப் பதிலாக ஷவரிலிருந்து சைக்ளோன் பி பொழிகிறது.
தண்ணீர் ஒருபோதும் வஞ்சிப்பதில்லை; உங்கள்மீது பொழிந்தது விஷவாயு. சதை வற்றித் தோல்களாகச்
சுருங்கிப் போய்க் கிடக்கிறீர்கள்.
நம்பமுடியாமல் கண்கள் அகல விரித்தபடி
அந்தத் தாய் கேட்கிறாள்:
“இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள்… உண்மையாகவே இவர்களைக் கொல்லப்போகிறீர்களா?”
என்ன கேள்வி இது! கொன்றார்கள்.
உனது முகாம் பொறுப்பாளனிடம் நீ கேட்கிறாய்: “எனது முதிய தந்தையால் இனி வேலை செய்யவியலாது. அவரை இன்று கொல்லப்போகிறார்கள். அவரை ஒரு தடவை சமையலறைக்கு அழைத்துப் போய் ரொட்டி ஒன்றைக் கொடுக்க எனக்கு அனுமதியுண்டா?”
“இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள்… உண்மையாகவே இவர்களைக் கொல்லப்போகிறீர்களா?”
என்ன கேள்வி இது! கொன்றார்கள்.
உனது முகாம் பொறுப்பாளனிடம் நீ கேட்கிறாய்: “எனது முதிய தந்தையால் இனி வேலை செய்யவியலாது. அவரை இன்று கொல்லப்போகிறார்கள். அவரை ஒரு தடவை சமையலறைக்கு அழைத்துப் போய் ரொட்டி ஒன்றைக் கொடுக்க எனக்கு அனுமதியுண்டா?”
மனிதத் தோலில் தீட்டப்பட்ட ஓவியங்கள்
தொங்கும் அறைகளுள் ஓய்வொழிச்சலில்லாத திட்டமிடலில் நாஜி அதிகாரிகள். எத்தனை பேர்களையும்
கொல்லவியலும்; உடல்களை அழிப்பதுதான் அவர்களுக்குச் சிக்கலாயிருக்கிறது. மண்ணை ஒதுக்குவதுபோல
புல்டோசர்கள் உடல்களை ஒதுக்கிக்கொண்டு போகின்றன. மனிதப் புதைகுழிகள் எங்குதானில்லை!
பிணங்களின் வற்றியுலர்ந்த மார்புகள் சுரைக்காய்கள் போல தொங்குகின்றன. போலந்தில், டென்மார்க்கில்,
நெதர்லாந்தில், பெல்ஜியத்தில், பிரான்சில் ஹிட்லரின் மரணநிழல் படர்ந்துகொண்டே செல்கிறது.
அந்தப் பையன்- அவன் அங்குதான் வாழ்ந்தான்
– எலீ வீஸலிடம் அவன் கேட்டது நினைவிருக்கிறதா?
“இது உண்மையாக இருக்கக்கூடுமா? இது
இருபதாம் நூற்றாண்டு. மத்திய காலத்தில் நாம் வாழவில்லை. இப்படியொரு காலத்தில் இத்தகைய
குற்றங்கள் எங்ஙனம் இழைக்கப்படவியலும்? இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இந்த உலகத்தால்
மௌனமாயிருக்க முடிவது எப்படி?”
சிறுவர்கள் பெரும்பாலும் விடையிறுக்கவியலாத
கேள்விகளையே பெரியவர்களிடம் கேட்கிறார்கள்.
உலகம் என்பது எது? அதன் மனச்சாட்சியின்
நிறம் என்ன? இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் கழுத்தில் தொங்கும் சால்வையின் நிறமாகிய சிவப்பா?
ஹிட்லரின் ஸ்வஸ்திகாவின் நிறமா? போலந்தில் யூதர்களின் மத சாஸ்திர கலாசாலையில் இருந்த
நூல்கள் நாஜிக்களால் சந்தைத் திடலில் கொண்டுவந்து குவித்து தீமூட்டப்பட்டபோது எழுந்த
புகையின் நிறமா? முள்ளிவாய்க்காலில் கரிந்துபோய்க் கிடந்த உடல்களின் வெளித்தெரிந்த
வெந்த இறைச்சியின் நிறமா? ருவாண்டாவில், கிழங்குகளைப் பொதிவதுபோல பாய்களால் சுற்றிப்
பொதியப்பட்டிருந்த உடல்களிலிருந்து பாய்களை மீறிக் கசிந்துகொண்டிருந்த குருதியின் நிறமா?
இப்போது அந்தக் கூட்டுப் படுகொலைகளுக்குப்
பெயர் கிடைத்துவிட்டது. ரஃபேல் லெம்கின்! நீங்கள் ‘இனப்படுகொலை’(Genocide)என்ற சொல்லை
உருவாக்கிவிட்டீர்கள். பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சு+ட்டுவதைப் போல இறப்பின் வகைமாதிரிக்கேற்ப
பெயர் சு+ட்ட வேண்டிய அவசியத்திற்கு மனிதகுலம் தள்ளப்பட்டது என்னே முரண்! முரணேதான்;
முரண் நகையன்று.
பெயர் சு+ட்டப்பட்ட பிற்பாடும் அப்பெயர்
கொண்டு விளிக்கத் தயங்கிய உலகத்தின் யோக்கியதையை என்ன பெயர்கொண்டு அழைப்பதெனத் தெரியாமல்
பிற்பாடு குழம்புவார்கள் ருவாண்டாவின் ருட்ஸிகள்
1994 ஏப்ரலில்- இரண்டாம் உலக யுத்தத்தின்பிற்பாடு,
‘இனியொருபோதுமில்லை’என்றெழுந்த குரல்களைப் பழிக்கும்படியாய்- ருவாண்டாவில் வீழ்த்தப்பட்ட
இலட்சக்கணக்கான உடல்களின் மீது மரணப் பறவைகள் நிழல்விழுத்திப் பறந்துசெல்கின்றன. ருட்ஸிகள்
ஒளிந்திருந்த காடுகளின் மேல் இரத்தவாடையை முகர்ந்தபடி கழுகுகள் சுற்றியலைகின்றன. தஞ்சமடைந்திருந்த
தேவாலயங்களிலும் பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் ஒன்றன்மேலொன்றாய் விழுந்துகிடக்கின்றன
கறுத்த, உயர்ந்த, சுருட்டை முடியினைக் கொண்ட உடல்கள். தேடியழிக்கப்பட வேண்டிய ‘காக்ரோச்சு’க்களை
பெரும்பான்மையினராகிய ஹுட்டுக்கள் அழித்துவிட்டார்கள்.
ருட்ஸிக்களின் வீடுகளைத் தீ பெரும்பசியோடு தின்றுகொண்டிருக்கிறது.
ருட்ஸி இனத்தவர்கள் தஞ்சம் புகுந்திருந்த தேவாலயமொன்றின் மதகுருவானவர் ஹுட்டு மதகுருவொருவருக்குச் செய்தி அனுப்புகிறார்.
“நாளை நாங்கள் கொல்லப்படுவோம் என்று அறியத் தந்திருக்கிறார்கள். எங்களுடைய சார்பில் மேயருடன் பேசி எங்களைக் காப்பாற்ற முயற்சி எடுங்கள்” அந்தச் செய்தி கிடைக்கப் பெற்றவர் எதுவும் செய்தவற்கில்லை.
பதிலாக ஹுட்டுக்களின் தலைவனொருவன் பதில் அனுப்புகிறான்.
“நாளைக் காலை மிகச் சரியாக ஒன்பது மணிக்கு
நீங்கள் கொல்லப்படுவீர்கள்.”
கொலையாளிகள் தாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு
விசுவாசமானவர்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்! மிகச் சரியாக ஒன்பது மணிக்கு அவர்கள்
தஞ்சம் புகுந்திருந்த தேவாலயங்களுள் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. சிதறிக் கிடந்த உடல்களை
விலக்கி விலக்கி நடந்துசென்ற கொலைஞர்கள் எஞ்சிய உயிர்களை வாள்களாலும் கத்திகளாலும்
முடித்துவைத்தார்கள்.
தந்தை நோவாவின் நிர்வாணத்தைப் பார்த்த
காரணத்தால் சபிக்கப்பட்ட பிள்ளை ஹாமின் வழிவந்தோர், சாபத்தினால் கருநிறமாகியவர்களின்
வரலாறு செந்நிறக் குருதியினால் எழுதப்பட்டது. வாழைத் தோட்டத்தினுள் ஒளிந்திருந்தபோது
கொல்லப்பட்ட குழந்தையே! உனது பொம்மையை இறுக்கியபடி நீ உறைந்துபோயிருக்கிறாய். கொல்லப்படுவதற்கு
முன் உன் தந்தையின் முன் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணே!
உயிரின் ஒளி அணைந்துவிட்ட உன் முகத்தில் துயரத்தைக் காட்டிலும் அவமானமே மிஞ்சியிருக்கிறது.
காஹிரா ஆறு சடலங்களின் கனம் தாங்காமல் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஐ.நா. வாகனங்களை விரட்டியபடி ருட்ஸிக்கள்
ஓடிவருகிறார்கள். தங்களை அழைத்துச் செல்லுங்கள் என்று இறைஞ்சியோ, இனப்படுகொலையிலிருந்து
காப்பாற்ற வேண்டியோ அல்ல;
“கத்திகளாலும் ஆணிகள் பொருத்தப்பட்ட சட்டகங்களாலும் வெட்டப்பட்டும் குத்துப்பட்டும் நாங்கள் சாகவிரும்பவில்லை. அந்த மரணத்தின் வலியை எங்களால் தாங்கவியலாது. தயவுசெய்து துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றுவிடுங்கள்”என்று மன்றாடியபடி பின்னே ஓடிவருகிறார்கள். ஐ.நா. வாகனங்கள் அவர்களைப் பின்னிறுத்தி விரைந்து சென்றுவிடுகின்றன.
“கத்திகளாலும் ஆணிகள் பொருத்தப்பட்ட சட்டகங்களாலும் வெட்டப்பட்டும் குத்துப்பட்டும் நாங்கள் சாகவிரும்பவில்லை. அந்த மரணத்தின் வலியை எங்களால் தாங்கவியலாது. தயவுசெய்து துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றுவிடுங்கள்”என்று மன்றாடியபடி பின்னே ஓடிவருகிறார்கள். ஐ.நா. வாகனங்கள் அவர்களைப் பின்னிறுத்தி விரைந்து சென்றுவிடுகின்றன.
வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைக்
கொண்டிருக்கிறது என்று எத்தனை தடவைதாம் எழுதுவது? நினைவிருக்கிறதா….? வன்னியில், பூட்டப்பட்டிருந்த
உங்கள் இரும்புக் கதவினூடாக ‘எங்களை விட்டுவிட்டுப் போக வேண்டாம்… போக வேண்டாம்’என்று
அசைந்த கைகளை? “எங்களுக்கு உணவோ தண்ணீரோ நீங்கள் தரவேண்டியதில்லை. எங்கள் தேவைகளை நாங்களே
பார்த்துக்கொள்ளுவோம். நீங்கள் எங்களை விட்டுப் போனால் நாங்கள் கொல்லப்பட்டுவிடுவோம்”என்று
கெஞ்சிய அந்த முதியவரை நினைவிருக்கிறதா ஐ.நா.அதிகாரிகளே?
ருவாண்டாவில், எல்லாம் திட்டமிட்டபடி
நடந்தேறிய பிற்பாடு அந்தத் தேவாலயத்தினுள் நுழைந்த செய்தியாளர்களுக்குத் தெரியவில்லை
எந்தக் கை எந்த உடலுக்குரியதென்பது. எந்தத் தலையை எந்த உடலுடன் பொருத்துவதென்பது உண்மையில்
குழப்பமான காரியந்தான். வளர்ந்த பெண்ணொருத்தியின் உடலுடன் தவறுதலாகப் பொருந்திப் போய்விட்ட
குழந்தையொன்றின் தலை பரிகசித்துச் சிரிக்கிறது மண்டையோட்டினுள் எஞ்சியிருந்த சின்னஞ்சிறிய
பற்களால்.
யரூபுயே என்ற கிராமத்தின் தேவாலயத்திற்குள்
தன் சக செய்தியாளர்களுடன் நுழைந்த ஃபேர்கல் கீன் என்ற ஊடகவியலாளர் சொல்கிறார்:
“வெள்ளைப் பளிங்குக் கல்லாலான கிறிஸ்துவின்
சிலையருகில் அந்த மனிதன் விழுந்து கிடந்தான். அவனுடைய முழங்கால்கள் அவனது உடலின் பின்புறமாக
மடக்கிக் கட்டப்பட்டிருந்தன. அவனது கைகள் அவனது தலையினருகில் வெட்டிப் போடப்பட்டிருந்தன.
உடல்களை விலக்கிக் கொண்டு நாங்கள் நடக்கவேண்டியிருந்தது. பெரும்பாலான உடல்களிலிருந்து
ஊன் வடிந்துபோயிருந்தது. மரணத்திற்கு எந்த மரியாதையும் இருக்கவில்லை. திருப்பீடத்தினருகில்
உடல்கள் விழுந்து கிடந்தன. கன்னி மரியாளின் காலடியில் எலும்புத்துண்டுகள் குவிந்துகிடந்தன.
ஒரு மனிதன் தனது கைகளால் தலையை மறைத்தபடி வீழ்ந்து கிடந்தான். வாளின் தாக்குதலிலிருந்து
தன்னைக் காத்துக்கொள்ள கைகளை உயர்த்தியபோது அவன் கொல்லப்பட்டிருக்கவேண்டும்.”
மனித வரலாற்றை வதைகளதும் படுகொலைகளதும்
பரீட்சார்த்தக் களமாக மாற்றியிருந்த ஹிட்லரின் வீழ்ச்சியுடன், ஆஷ்விச்சையும் இன்னபிற
வதைமுகாம்களையும் பார்த்த அதிர்ச்சியில் 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, ஜனவரி 12,
1951இல் அமுலுக்கு வந்த ‘இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் தண்டனையளிப்பதற்குமான சட்டம்’
கோப்புகளின் கல்லறையில் அந்தோ செத்துக்கிடக்கிறது.
‘இனப்படுகொலை’என்ற வார்த்தையை ஐ.நா.வும்
அமெரிக்காவும் உச்சரித்தால், இராணுவத் தலையீடு என்ற விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும்.
அத்தகைய தருணங்களில் உபயோகிப்பதற்கென்றே இருப்பவைதாம் ‘உள்நாட்டு யுத்தம்’, ‘இரு தரப்பினருக்கிடையேயான
மோதல்’, ‘ஆட்சியாளர்களின் சர்வாதிகாரம்’, ‘குருதியின் பயங்கரம்’, ‘கூட்டுப் படுகொலைகள்’
ஆகிய பிரயோகங்கள். அரசியல் என்ற சதுரங்கத்தில் மேலாண்மையுடைய நாடுகள் சிறு கீறலும்
படாமற் தப்பிக்க மேற்குறித்த வார்த்தைகளே உதவுகின்றன.
ஆக, உலக மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாகத்
தம்மைக் கருதிக்கொண்டிருப்பவர்கள், ருவாண்டாவில் நடந்தது இனப்படுகொலையே என உச்சரிக்கவோ
அறிக்கைகளில் குறிப்பிடவோ மறுத்தார்கள்.
அப்போது, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட உள்ளறிக்கையொன்றில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது: “எச்சரிக்கை! இனப்படுகொலை என அடையாளப்படுத்துவதானது நம்மை ‘எதையாவது’ செய்யவேண்டிய கட்டாயத்துள் தள்ளும்”
அப்போது, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட உள்ளறிக்கையொன்றில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது: “எச்சரிக்கை! இனப்படுகொலை என அடையாளப்படுத்துவதானது நம்மை ‘எதையாவது’ செய்யவேண்டிய கட்டாயத்துள் தள்ளும்”
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பேச்சாளர்
கிறிஸ்டின் ஷெல்லி செய்தியாளர் மாநாடொன்றில் ருவாண்டா பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ருவாண்டாவில் ‘இனப்படுகொலை நடவடிக்கைகள்’
(acts of genocide)நடப்பதாக அறிகிறோம்”
“இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கும் இனப்படுகொலைக்கும்
என்ன வித்தியாசம்?” செய்தியார்களுள் ஒருவர் கேட்கிறார்.
“அது வந்து…….. நான் நினைக்கிறேன்…
உங்களுக்குத் தெரியும்……… அதற்கென்றொரு வரைவிலக்கணம் இருக்கிறது….” என்று இழுத்து நீண்ட
விளக்கமொன்றைச் சொல்கிறார் ஷெல்லி.
“எத்தனை ‘இனப்படுகொலை நடவடிக்கை’கள் சேர்ந்தால் ஒரு இனப்படுகொலை ஆகும்?”
“எத்தனை ‘இனப்படுகொலை நடவடிக்கை’கள் சேர்ந்தால் ஒரு இனப்படுகொலை ஆகும்?”
“இதுவொரு கேள்வியேயல்ல; நான் இதற்குப்
பதிலளிக்க வேண்டியதில்லை”
ஆயிற்றா? எல்லாம் சட்டப்படி நடக்கவேண்டும்
என்று முடிந்தபோதெல்லாம் அறிவுறுத்தும் கனவான்களே!
அப்போதுதான் சோமாலியாவில் முப்பது அமெரிக்க
வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்; அமெரிக்கப் படைகளை உப்புப் பெறாத ருவாண்டா போன்ற
நாடுகளில் பலியிட முடியாது; செலவினங்களின் நெருக்கடி; அதிபர் பில் கிளின்டன் அவர்கள்
சிக்கல்களிலிருந்து விலகியிருக்க விரும்பினார்; மேலும், மிக முக்கியமாக ருவாண்டாவில்
நிலக்கரியோ எண்ணெயோ குறைந்தபட்சம் கப்பல்களை நிறுத்தக்கூடிய துறைமுகமோ இல்லை. பிறகெப்படித்
தலையிட முடியும்? நியாயமான கேள்விதான்! பெரியண்ணனும் உலகப் பொலிஸ்காரனுமாகிய அமெரிக்கா
பிற்பாடு மன்னிப்புக் கேட்டது. அமெரிக்காவின் மன்னிப்பு என்ற வார்த்தையானது, ஐந்து
இலட்சத்திற்கும் அதிகமான ருட்ஸிக்கள் மற்றும் அவர்களுக்குச் சார்பானவர்கள் என்று கருதிப்
படுகொலை செய்யப்பட்ட சில ஆயிரக்கணக்கான ஹுட்டுக்களின் உயிர்களுக்கு நிகரானது. நம்புங்கள்
நண்பர்களே!
பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம்
அமெரிக்க அதிபர் ருவாண்டாவின் மண்ணில் தன் பாதங்களைப் பதிக்கவியலாமற் போயிற்று. கிகாலியின்
விமானநிலையத்தில் ஒரு மண்டபத்தில் அந்த மன்னிப்புக் கோரும் நிகழ்வு நடந்தேறியது.
“ருவாண்டாவின் இனப்படுகொலையில் உயிரிழந்த,
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது தேசத்தின் மரியாதையைச் செலுத்தவே இன்று இங்கு வந்திருக்கிறேன்.
அனைத்துலக சமூகமும் ஆபிரிக்காவின் இதர நாடுகளும் ருவாண்டாவில் நிகழ்ந்தேறிய துயரமான
அழிப்பின் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளவே வேண்டும். படுகொலைகள் ஆரம்பித்தவுடன் அதைத்
தடுத்து நிறுத்த உடனடியாக ஒன்றும் செய்யவில்லை….. அந்தக் குற்றத்தை இனப்படுகொலை என்ற
பொருத்தமான சொல்லால் விளிக்கவும் நாங்கள் தவறியிருந்தோம்…”
என்று அந்நாள் அமெரிக்க அதிபர் கிளின்டன்
உரையாற்றியதாக அப்போது ருவாண்டாவின் நாடாளுமன்றப் பேச்சாளராயிருந்த ஜோசப் செபரென்சி
எழுதுகிறார். மேலும் அவர், ‘அப்போது கூட்டத்தினர் பலமாகக் கைதட்டினார்கள்’என்றெழுதுகிறார்.
ஈழத்தமிழர்களும் தட்டுவார்கள். தட்டுவோம்.
தோள்பட்டையோடு கைகள் துண்டிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிகளற்ற விழிகளால் வெறுமனே வெறித்துக்கொண்டிருக்க,
கூட்டத்தில் சாதாரணமாக எதிர்ப்படக்கூடிய, நம்பிக்கைக்குரிய ஒருவரின் முகத்தினைக் கொண்டிருக்கும்
இந்நாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது உறுதியான, கனத்த குரலில் ‘உயர்ந்ததோங்கிய பனைமரங்களோடும்
கடலோடும் கூடிய எழிலான இந்த நிலத்தில் நடந்த இறுதிப்போரின் சரியான தருணத்தில் நாங்கள்
தலையிட்டிருந்தால் சில ஆயிரக்கணக்கான உயிர்களையாகுதல் காப்பாற்றியிருக்கலாம். எனது
தேசத்தின் மக்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்”என்று வருத்தந்தோய்ந்த
குரலில் உரையாற்றும்போது… நாங்கள் கைகளைத் தட்டித்தானாக வேண்டும்.
எப்பேர்ப்பட்ட மனிதரால் கோரப்படும் எப்பேர்ப்பட்ட மன்னிப்பு அதுவாக இருக்கும். ஒன்றரை இலட்சம் ஆன்மாக்களின் சார்பில் அந்த மன்னிப்பை நாங்கள் கையேந்திப் பெற்றுக்கொள்வோம்.
எப்பேர்ப்பட்ட மனிதரால் கோரப்படும் எப்பேர்ப்பட்ட மன்னிப்பு அதுவாக இருக்கும். ஒன்றரை இலட்சம் ஆன்மாக்களின் சார்பில் அந்த மன்னிப்பை நாங்கள் கையேந்திப் பெற்றுக்கொள்வோம்.
ஐ.நா.வும் எப்பேர்ப்பட்ட சபை அது! குறையொன்றும்
சொல்வதற்கில்லை. ஐ.நா.வின் அப்போதைய செயலாளர் கோபி அனான் தன் பங்கிற்கு வருகை தந்து
ருவாண்டாவின் ருட்ஸிக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்.
“அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள்
சபையும் இணைந்து இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டன. இந்த உலகம் இந்தத் தவறுக்காக
வருத்தப்பட்டே ஆகவேண்டும். இனப்படுகொலையின் அடையாளங்களை இப்போது உணர்கிறோம். ஆனால்,
அதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.”
‘அப்போது அறிந்திருக்கவில்லை!’ எத்தகைய
தூய உண்மையொளி வீசும் ஒப்புதல் வாக்குமூலம்!
‘அறிந்தே பாவம் செய்தவர்கள்’ ருவாண்டாவிற்குப் போனார்கள். கரைகளில் கொல்லப்பட்டு தண்ணீருள் வீசியெறியப்பட்ட ருட்ஸிக்களது பிணங்களின் கனத்தினால் நகரமாட்டாமல் நகர்ந்த காஹிரா மற்றும் யாபொரொங்கோ ஆறுகளில் பாவங்களைக் கரைத்தபின் பரிசுத்தர்களாகத் திரும்பினார்கள்.
‘அறிந்தே பாவம் செய்தவர்கள்’ ருவாண்டாவிற்குப் போனார்கள். கரைகளில் கொல்லப்பட்டு தண்ணீருள் வீசியெறியப்பட்ட ருட்ஸிக்களது பிணங்களின் கனத்தினால் நகரமாட்டாமல் நகர்ந்த காஹிரா மற்றும் யாபொரொங்கோ ஆறுகளில் பாவங்களைக் கரைத்தபின் பரிசுத்தர்களாகத் திரும்பினார்கள்.
முள்ளிவாய்க்காலிலிருந்து ‘மீட்டெடுக்கப்பட்டு’செட்டிகுளத்திலுள்ள
மெனிக் பண்ணையில் (மாணிக்கம், மெனிக் ஆன கதை தனிக்கதை) கொண்டுவந்து கொட்டப்பட்ட அகதிகளைப்
பார்வையிட, தடுப்புமுகாம்கள் என்று வசதிக்காக விளிக்கப்பட்டுக்கொண்டிருந்த வதைமுகாம்களுக்குச்
சென்று திரும்பிய மதிப்பிற்குரிய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் என்ன சொன்னார்?
“அதுவொரு துன்பகரமான விஜயம். மெனிக்பாம் முகாமின் நிலை சூடானின் டாபர் மற்றும் கோமாவில் உள்ள முகாம்களிலும் பார்க்க அதிமோசமானது”
“அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா. பணியாளர்கள்
வெளியேறியது தவறு என்பதை இப்போது உணர்கிறோம்”என்கிறார் அப்போது ஐ.நா.வின் இலங்கைக்கான
செய்தித் தொடர்பாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய கார்டன் வைஸ்.
அண்மையில், ஐ. நா. மனிதவுரிமைகள் அமைப்பின்
ஆணையாளரும் ஒப்பீட்டளவில் நீதியும் நடுநிலையும் பேணக்கூடியவர் என்று அறியப்பட்ட
நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கைக்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டுச்
சென்றிருக்கிறார். ஈழத்தமிழர் விடயத்திலும் குற்றங்களையும் பிணங்களையும் எண்ணிக்
கணக்கெடுக்கும் கணக்காளர் பதவியிலேயே ஐக்கிய நாடுகள் சபை இத்தனைக்குப் பிறகும்
நீடித்திருக்கப் போகிறதா என்பதை இனிவரும் நாட்கள் எடுத்தியம்பும்.
ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கான
இனிப்புகளுடனும் புன்னகையுடனுமே உள்நுழைகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
வளாகத்தில் இந்திய அமைதிப் படை அதிகாரிகள் வந்திறங்கிய அன்று அவர்கள்தாம் எத்தனை
சிநேகபூர்வமாகக் கையசைத்தபடி உலங்கு வானூர்தியிலிருந்து இறங்கி வந்தார்கள்.
வானூர்தியின் தலைவிசிறி சுழன்ற வேகத்தில் மைதானத்தின் புற்கள் தலைசாய்ந்து
சிலிர்த்ததற்குக் குறைந்ததாயில்லை அங்கு கூடியிருந்த மக்களும் மாணவர்களும் விழிகள்
பனிக்கச் சிலிர்த்தது! பிறகு, தெருக்களெங்ஙணும் பிணங்களைப் பார்த்து அதிர்ந்தோம்.
பொஸ்னியாவின் செர்ப்ரெனிக்கா, நகரத்தினுள் நுழைந்த ஜெனரல் மிலாடிச்சும் அவரது
சேர்பியப் படைகளும் முஸ்லிம் குழந்தைகளுக்கு இனிப்புகளை விநியோகித்த
காட்சியுடன்தான் எல்லாம் ஆரம்பமாகின.
ஆக்கிரமிப்பு இராணுவத்தின் குழந்தைகள் மீதான கரிசனை
உலகறிந்தது. உனக்கு- பாலச்சந்திரனுக்கு பிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுத்தார்கள்.
உனது விழிகள் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தன.
அதிசயங்களின் காலம் முடிந்துவிட்டது செல்வமே! உடலில் அருகிருந்து சுட்ட ஐந்து குண்டுகள் தைத்த அடையாளங்களுடன் நீ விழுந்து கிடந்தாய். உனதருகில் கிடந்த பாதுகாவலர்கள் ஐந்துபேரின் ஆடைகளும் உயிர்களும் உருவப்பட்டிருந்தன. பேரினவாதிகள் நிர்வாணத்தையே நேசித்தார்கள்.
பொஸ்னிய, செர்ப்ரெனிக்காவினுள் நுழைந்த சேர்பியப் படைகளின் தளபதி ஜெனரல் மிலாடிச்தான் எத்தகு பெருந்தன்மையோடு நடந்துகொண்டார்:
“எங்களிடம் ஆயுதங்களைக் கையளிக்கிறவர்களை உயிரோடு விட்டுவிடுவோம் என உறுதியளிக்கிறோம்”
அதிசயங்களின் காலம் முடிந்துவிட்டது செல்வமே! உடலில் அருகிருந்து சுட்ட ஐந்து குண்டுகள் தைத்த அடையாளங்களுடன் நீ விழுந்து கிடந்தாய். உனதருகில் கிடந்த பாதுகாவலர்கள் ஐந்துபேரின் ஆடைகளும் உயிர்களும் உருவப்பட்டிருந்தன. பேரினவாதிகள் நிர்வாணத்தையே நேசித்தார்கள்.
பொஸ்னிய, செர்ப்ரெனிக்காவினுள் நுழைந்த சேர்பியப் படைகளின் தளபதி ஜெனரல் மிலாடிச்தான் எத்தகு பெருந்தன்மையோடு நடந்துகொண்டார்:
“எங்களிடம் ஆயுதங்களைக் கையளிக்கிறவர்களை உயிரோடு விட்டுவிடுவோம் என உறுதியளிக்கிறோம்”
ஆயுதங்கள் கையளிக்கப்பட்டபின் ஐம்பது பேருந்துகளில்
ஏற்றி நீங்கள் அனுப்பப்படுகிறீர்கள். இடையில் சேர்பியப் படைகள் அந்தப்
பேருந்துக்களை வழிமறித்தது உங்கள் தாகசாந்தியைத் தீர்த்துவைக்கவல்ல. பன்னிரண்டு
வயதிலிருந்து எழுபத்தேழு வயதுவரையிலான ஆண்கள் அந்தக் கூட்டத்திலிருந்து
பிரித்தெடுக்கப்பட்டு இறக்கிச் செல்லப்படுகிறீர்கள். அடுத்து வந்த சில நாட்களுக்கு
இயந்திரத் துப்பாக்கிகள் வெடி தீர்க்கும் ஓசையும் கையெறி குண்டுகள் வெடிக்கும்
ஓசையும் அந்தப் பிரதேசத்தை அதிரவைக்கின்றன.
“அது என்ன சத்தம்?” எஞ்சியிருந்த மக்களும் பேருந்துகளை எதிர்கொண்டிருந்த ஐ.நா. அதிகாரிகளும் கேட்கிறார்கள்.
“எங்கள் இராணுவம் வானத்தை நோக்கிச் சுட்டு வெற்றியைக் கொண்டாடுகிறது.”
“அது என்ன சத்தம்?” எஞ்சியிருந்த மக்களும் பேருந்துகளை எதிர்கொண்டிருந்த ஐ.நா. அதிகாரிகளும் கேட்கிறார்கள்.
“எங்கள் இராணுவம் வானத்தை நோக்கிச் சுட்டு வெற்றியைக் கொண்டாடுகிறது.”
வானம் என்பது எப்போதும் வானத்தைக் குறிப்பதன்று
என்பதை, “ருஷ்லாவை வந்தடைந்திருக்க வேண்டிய ஆண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்
குறைவாக இருந்தது”என்ற ஐ.நா.அதிகாரிகளின் அறிக்கையிலிருந்து அறிந்துகொள்ள
முடிகிறது.
அந்தச் சம்பவம் நிகழ்ந்தேறி ஓராண்டுகளுக்குப் பின், செர்ப்ரெனிக்காவை
வந்தடைந்த மனித உடற்கூற்று ஆராய்ச்சியாளர் குழுவொன்று, காணாமற் போன எட்டாயிரம் ஆண்களுக்கு
என்ன நடந்ததென்ற புதிரை நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகளிலிருந்து விடுவித்தது.
அந்தக் குழுவில் ஒருவராகிய லியா கோஃப் சொல்கிறார்:
“ருவாண்டாவில் புதைகுழிகளுள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கும் இவற்றுக்கும் பல ஒற்றுமைகள்… கொல்லப்பட்டவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன; அனைவரும் ஆண்கள்; சாதாரண பொதுமக்களின் உடைகளை அணிந்திருந்தார்கள்.”
“ருவாண்டாவில் புதைகுழிகளுள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கும் இவற்றுக்கும் பல ஒற்றுமைகள்… கொல்லப்பட்டவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன; அனைவரும் ஆண்கள்; சாதாரண பொதுமக்களின் உடைகளை அணிந்திருந்தார்கள்.”
இனப்படுகொலைகளின் பார்வையாளர்களாக இருந்த, இருக்கும்
சர்வதேசமும் ஐ.நா.வும் கடப்பாரைகளோடும், உடல்களைப் பொதியும் பொலித்தீன் பைகளோடும்
மனித உடற்கூற்றியல் ஆராய்ச்சியாளர்கள் சிலரை இலங்கைக்கு அனுப்பிவைக்கும்
நல்முகூர்த்தமொன்றினை எதிர்பார்த்து நாமும் காத்திருக்கலாம். முள்ளிவாய்க்காலின்
சதுப்பு நிலத்தடி, முல்லைத்தீவின் மணற்பாங்கான நிலத்தடியிலிருந்து ஆயிரக்கணக்கான
உடல்கள் கைகள் கட்டப்பட்டும் கைகளே இல்லாமலும் கண்டெடுக்கப்படலாம். நீதியை எலும்புகளும்
மயிர்களும் பற்களுமாக புதைகுழிகளினுள்ளிருந்து மீட்கும் காலத்தில் வாழ்கிறோம்.
புதைகுழிகள் தோண்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்
ஜெனரல் மிலாடிச்சின் புகைப்படங்களோடும் புகழ்பாடும் வாசகங்களோடும் கூடிய
சுவரொட்டிகள் செர்ப்ரெனிக்காவில்
முளைத்தன.
“மிலாடிச் கைது செய்யப்பட்டால்…. சமாதானத்திற்கு உத்தரவாதமில்லை”
“மிலாடிச் கைது செய்யப்பட்டால்…. சமாதானத்திற்கு உத்தரவாதமில்லை”
“அனைத்துலக விசாரணைகளுக்கு அவசியமில்லை”
“உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடுவதானது அந்த நாட்டின் இறைமைக்குப் பங்கம் விளைவிப்பதாகும்”
“உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடுவதானது அந்த நாட்டின் இறைமைக்குப் பங்கம் விளைவிப்பதாகும்”
“அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்
செய்யாததையா இலங்கை அரசு செய்துவிட்டது?”
வரலாற்றுச் சக்கரம் ஒரே திசையில்தான் சுழல்கிறது;
பொஸ்னியாவிலும், இலங்கையிலும்.
“காணாமற் போன ஆண்களைப் புதைகுழிகளில்
கண்டுபிடித்தோம்; அந்தப் பெண்கள் என்னவானார்கள்?”என்ற கேள்விக்கு ஆயிஷா உமர்
விடையளிக்கிறார்:
“சேர்பிய ஆக்கிரமிப்பின்போது எனது கணவரும்
மகனும் கொண்டுசெல்லப்பட்டார்கள். என்னை முகாமொன்றிலே சேர்த்தார்கள். சேர்பிய இராணுத்தினர்
என்னைத் ‘துருக்கிய வேசை’என்று அழைத்தார்கள். பிறகு என்னை வன்புணர்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.
ஒவ்வொரு தடவையும் அழுவேன்… ஆனால், ஒரு பயனுமில்லை. நான் சுயநினைவு இழக்கும்வரை அவர்கள்
விலகிச் செல்வதில்லை. விழித்தெழும் ஒவ்வொரு தடவையும் வேறொருவன் காத்திருப்பான். நான்
கர்ப்பம் தரித்துவிட்டேன் என்று அறிந்ததும் ஒரு வண்டியிலே ஏற்றி சரஜேவோவுக்கு அனுப்பிவைத்தார்கள். ஞாபகங்களின் பைசாசத்திலிருந்து விடுபட்டு
அமைதியடைவதற்காக மாத்திரைகளை விழுங்கினேன். அதனாற்றான் என்னுடைய மகன் பதட்டத்திற்கு
ஆளானவனாக இருப்பதும் சிகிச்சைக்கு உள்ளாகவேண்டியிருப்பதும் ஏற்பட்டது. நான் என்னுடைய
மகனை நேசிக்கிறேன். சிலவேளைகளில் அவனைப் பார்க்கும்போது என்னுள் கோபம் படர்வதை உணர்கிறேன்.
ஆனாலும், எனது குடும்பத்திற்கும் வாழ்வுக்கும் நடந்தேறிய அவலத்தின் அடையாளமாகவே அவனைக்
காண்கிறேன்.”
‘வல்லுறவு முகாம்’கள் என்றழைக்கப்பட்ட வதைமுகாம்களில்
பொஸ்னிய முஸ்லிம் பெண்களை அடைத்துவைத்திருந்து கர்ப்பந் தரிக்க வைத்ததன் மூலமாக
பொஸ்னிய இனத்தூய்மையை அழித்துவிட்டதாக சேர்பியர்கள் எக்காளமிட்டார்கள். கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டு கைகளும் கால்களும்
கட்டப்பட்டு, இலங்கை இராணுவத்தின் பாலியல் பசிக்குத் தீனியாக்கப்பட்ட அங்கங்களில் குருதி
வடிய நிர்வாணமாகக் கிடந்த இசைப்பிரியாவையும் அவரைப் போலவே பலியான இதர பெண்களையும் பார்த்து
கெக்கலி கொட்டி நகைத்த இலங்கை இராணுவத்தின் கண்களில் இருந்ததும் ‘தமிழர்களை இழிவு செய்துவிட்டோம்’என்ற
எக்காளமே! உயிரிழந்த பெண் போராளிகளின் பிறப்புறுப்புக்களுள் பென்சில்களைச் செலுத்தித்
தங்கள் அறிவின் முனையைக் கூர்தீட்டிக்கொண்டதும்கூட எதிரி இனத்தின் ஆண்களை இழிவுசெய்யும்முகமாகவே!
பாலியல் வன்புணர்ச்சி செய்தபின் கொல்லப்பட்டவர்களின் நிர்வாணமான உடல்களை சப்பாத்துக்
கால்களால் மிதித்ததும், கால்களில் பற்றி ட்ரக் வண்டிகளுள் தூக்கியெறிந்ததும் இழிவுபடுத்தலின்
வகைமாதிரிகளுள் ஒன்றே!
பெண்களின் உடல்களில் தங்கள் மானத்தின்
கனத்தை ஏற்றியிருக்கும் ஆண்மைய சமூகத்தைக் குறித்து பிறிதொரு சமயம் நகைக்கலாம்.
ஜெனிவா உடன்படிக்கையின் நான்காவது ஷரத்தில்
என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், “பெண்களின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும்
எந்தவொரு தாக்குதல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும், குறிப்பாக பாலியல்
வன்புணர்ச்சி, வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுதல், எந்த வடிவத்திலேனும்
அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இழிவுபடுத்தல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படல்
வேண்டும்.”
சட்டங்கள் எல்லாம் செயல்வடிவம் பெறவேண்டிய
அவசியமில்லை!
பொஸ்னிய முஸ்லிம்கள் சேர்பியப் படைகளால்
இனப்படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து அப்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமாக இருந்த
கோபி அனான் பாவமன்னிப்பொன்றைக் கோரவேண்டியிருக்கிறது.
“செர்ப்ரெனிக்காவின்
துயரம் எங்கள் வரலாற்றை என்றென்றைக்குமாக அலைக்கழித்துக்கொண்டிருக்கும்”
2009இல் முள்ளிவாய்க்காலில்
நடந்தேறிய இனக்கபளீகரத்தின்போது இலங்கைக்கான ஐ.நா.வின் பேச்சாளராகவிருந்த கார்டன் வைஸ்,
முள்ளிவாய்க்காலை, ‘இலங்கையின் செர்ப்ரெனிக்கா’
என்கிறார். ஒப்பீடுகளுக்கொன்றும்
பஞ்சமில்லை!
படுகொலைகளின் ஈற்றில் சொல்லப்படுவதற்கென்றே
சில வாசகங்களை முன்தயாரித்து வைத்துக் காத்திருக்கிறார்கள் ஐ.நா.,, அமெரிக்கா, ஐரோப்பிய
யூனியன் ஆகிய, உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் நீதிமான்கள்.
‘மறக்கப்பட்ட
இனப்படுகொலை’என்று அழைக்கப்படும், ஆர்மேனியர்களது படுகொலை நடந்தேறி, ஏறத்தாழ ஒரு
நூற்றாண்டு காலமாகியும் துருக்கியர்கள் அதற்குப் பொறுப்புக்கூற மறுத்தே
வருகிறார்கள். அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக ஆர்மேனியப் பல்கலைக்கழகங்களின்
பேராசிரியர்கள் சிலருக்கு துருக்கி அரசு கையூட்டுக் கொடுத்து, ‘அப்படியொன்று
நடக்கவேயில்லை’என, வரலாற்றை மாற்றி எழுதும்படியாகப் பணிக்கிறார்கள் என்று விமர்சகர்கள்
குற்றஞ்சாட்டுகிறார்கள். நியுரம்பர்க் வழக்குகள் வழியாகத் குற்றவாளிகள் என
இனங்காணப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்ட இருபத்திரண்டு பேர்களுள் பன்னிரண்டு பேருக்கு
மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோருக்கு வழங்கப்பட்ட சிறைவாசகாலம் முடிவுறும்
முன்னமே அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடுகளுக்கிடையிலான இணக்க அரசியல்
அவர்களின் குற்றத்தின் கனத்தைக் குறைக்கப் பணித்தது. பொஸ்னியாவிலும் ருவாண்டாவிலும்
கூட ஒப்பீட்டளவில், பலியுயிர்களைக் காட்டிலும் குற்றவாளிகளுக்கே நியாயம்
செய்யப்பட்டிருக்கிறது.
உயிரிழந்த உறவுகளின் உடல்களை எடுத்துப்
புதைக்கவோ எரியூட்டவோ முடியாமல் தெருவோரங்களில் விட்டுவந்த உறவுகள் ஆற்றாமையால் குரலெழுத்து
அழுத குரல்கள் முள்ளிவாய்க்காலின் கரையோரத்தில் இன்னமும் அலைந்துகொண்டேயிருக்கின்றன.
மயக்கமருந்து கொடுக்கப்படாமல் (இல்லாத காரணத்தால்)கசாப்புக் கடையில் பாவிக்கும் கத்தி
போன்ற ஒன்றினால் கால்வெட்டப்பட்ட ஆறு வயதுச் சிறுவனின் ஞாபகம் வாணி குமாரின் (முள்ளிவாய்க்கால்
பேரழிவின்போது அங்கு தங்கியிருந்த, பிரிட்டனை வாழ்விடமாகக் கொண்ட வைத்தியர்) ஞாபகத்திலிருந்து
என்றென்றைக்கும் அகலப்போவதில்லை.
“ஆஸ்பத்திரியிலை கூட குண்டுபோடுறாங்களே காளியாச்சீ!”என்று கதறிய முதிய பெண்ணின் குரலை, ஓடைபோல நிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த குருதியை மரணபரியந்தம் மறத்தல் கூடுமா? ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய மனிதாபிமானம் மிக்க வைத்தியர் ஒருவரது வாழ்நாளானது ‘மருந்துகளோ இரத்தமோ இல்லை’என்று மனம்வெதும்பி, இறுதிநாளில் கைவிட்டு வந்த நூற்றுக்கணக்கான காயக்காரர்களின் ஞாபகத் தீயில் கருகிக்கொண்டேயிருக்கும். காயப்பட்டு நகரமுடியாமற் கிடந்து, ‘எங்களையும் கூட்டிக்கொண்டு போங்கோ’என்று கதறிய குரல்களால் உலுக்கப்பட்டு நடு இரவுகளில் இன்னமும் எழுந்திருக்கிறார்கள் தப்பித்து வந்தவர்கள்.
“ஆஸ்பத்திரியிலை கூட குண்டுபோடுறாங்களே காளியாச்சீ!”என்று கதறிய முதிய பெண்ணின் குரலை, ஓடைபோல நிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த குருதியை மரணபரியந்தம் மறத்தல் கூடுமா? ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய மனிதாபிமானம் மிக்க வைத்தியர் ஒருவரது வாழ்நாளானது ‘மருந்துகளோ இரத்தமோ இல்லை’என்று மனம்வெதும்பி, இறுதிநாளில் கைவிட்டு வந்த நூற்றுக்கணக்கான காயக்காரர்களின் ஞாபகத் தீயில் கருகிக்கொண்டேயிருக்கும். காயப்பட்டு நகரமுடியாமற் கிடந்து, ‘எங்களையும் கூட்டிக்கொண்டு போங்கோ’என்று கதறிய குரல்களால் உலுக்கப்பட்டு நடு இரவுகளில் இன்னமும் எழுந்திருக்கிறார்கள் தப்பித்து வந்தவர்கள்.
இவற்றுக்கெல்லாம் பதிலிறுக்க வேண்டிய இலங்கை அரசோ, இன்றளவும்
தன்னால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கும் மனிதவிரோத செயற்பாடுகளுக்கும்
பொறுப்பேற்காததோடல்லாமல், அனைத்துலகம் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின்
வேண்டுகோள்களுக்குச் சவால் விடுக்கும் நாடாகவே இருந்துவருகிறது. இலங்கை அரசானது,
தனது அமைவிடம் என்ற துருப்புச் சீட்டின் மூலமாக, பிராந்திய, உலக வல்லாதிக்கப்
போட்டியாளர்களைச் சாதுரியமாகக் கையாண்டு வருகிறது.
மேலும், ‘ஒரு துளி இரத்தத்தைத்தானும் எனது கைகளில் காட்டமுடியுமா?’என்று துணிந்து அறைகூவல் விடுக்கிறார் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ. இத்தனைக்கும் டப்ளின் தீர்ப்பாயம் இலங்கைப் படைகள் இறுதிப் போரின்போது மனிதகுலத்திற்கு விரோதமான குற்றங்களை இழைத்தது என்று தனது அறிக்கையின் மூலமாகத் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தனது பங்கிற்கு ‘இரண்டு தரப்பினரும் போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறார்கள்’என்று, கணக்கெடுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் (2013) ஜெனிவாவில் நடந்தேறிய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும், ‘ஒரு துளி இரத்தத்தைத்தானும் எனது கைகளில் காட்டமுடியுமா?’என்று துணிந்து அறைகூவல் விடுக்கிறார் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ. இத்தனைக்கும் டப்ளின் தீர்ப்பாயம் இலங்கைப் படைகள் இறுதிப் போரின்போது மனிதகுலத்திற்கு விரோதமான குற்றங்களை இழைத்தது என்று தனது அறிக்கையின் மூலமாகத் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தனது பங்கிற்கு ‘இரண்டு தரப்பினரும் போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறார்கள்’என்று, கணக்கெடுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் (2013) ஜெனிவாவில் நடந்தேறிய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இருந்தும் என்ன? ‘உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ
அவன் இவள் மீது முதற் கல்லை எறியட்டும்’என்ற இயேசு கிறிஸ்துவின் வாசகத்தோடு தன்னை
எதிர்ப்பவர்களை எதிர்கொள்கிறது இலங்கை. இத்தனை உரத்த, உறுதியான, தெளிந்த குரலைக்
கேட்கையில், நாம் கண்ணால் பார்த்த காணொளிகளும், காதால் கேட்ட போரின்
சாட்சியங்களும், விம்மி வெடித்து மனதை அசைத்த அழுகுரல்களும் வதைமுகாம்களின்
கதைகளும் போரின் எச்சங்களாகிவிட்ட புதைகுழிகளும் சிதைந்த கட்டிடங்களும்
அங்கவீனர்களும் பேதலிப்பிலிருந்து மீளமுடியாது திகைப்பிருளினுள் வீழ்ந்து
கிடக்கும் மனிதர்களும் சிறைப்பட்டிருப்போரும் காணாமற் போனோரும் இன்னபிறவும்,
பிறரும் மனப்பிரமையின் பைசாச சலனங்கள்தாமோ? என்று ஐயுறுகிறோம்.
ஆக, “இனி ஒருபோதுமில்லை” என்று கண்ணீரோடும்
குற்றவுணர்வோடும் கொதிப்போடும் துயரத்தோடும் ஆற்றாமையோடும் உலகெங்கிலும் ஒலித்த குரல்கள்
மங்கிவிட்டன. இனப்படுகொலைக்கெதிரான சட்டங்களோ கோப்புகளுள் நித்திய உறக்கத்தில்.
“இனி ஒருபோதுமில்லை”என்றார்கள்.
“ஒரு தடவை நடந்தாகிவிட்டதெனில், அவையனைத்தும்
மீண்டும் நடக்கும் என்பதே எளிய உண்மையாகும்.”என்கிறார் 1945இல் இரண்டாம் உலகப் போர்
முடிவிற்கு வந்ததுடன் நேசப்படைகளால் ஆஷ்விச்சின் மரணமுகாமிலிருந்து மீட்கப்பட்டு, வதைமுகாமின்
குரூரங்களை தன் எழுத்தின் மூலம் உலகறியச் செய்தவராகிய பேராசிரியர் எலீ வீஸல்.
உசாத்துணை நூல்கள்:
THE
HOLOCAUST CHRONICLE (பலரால் இணைந்து தொகுக்கப்பட்ட நூல்)
RWANDA
AND GENOCIDE IN THE TWENTIETH CENTURY: by ALAIN DESTEXHE
GENOCIDE:
modern crimes against humanity by Brendan January
CARAVANS
TO OBLIVION: by G.S. Graber
GOD
SLEEPS IN RWANDA by JOSEPH SEBARENZI with LAURA ANN MULLANE
நன்றி- வலசை, மார்ச் இதழ்
நன்றி- வலசை, மார்ச் இதழ்
1 comment:
எழுத்துக்கள் மட்டும் சிவப்பல்ல.,
எண்ணங்களும் சிவப்பு தான்...
Post a Comment