1.25.2007

அன்புள்ள அனானிக்கு…

நேற்றுனது வெறுப்பிழைத்த கடிதம்
என் இருப்பசைத்துப் பார்த்தது
அகதியென்றாய் உனக்கு அவதியென்றாய்
ஓடிப்போய் உன்நிலத்தில் வாடிக்கிட என்றாய்
‘காராக்கிரகத்தில் களிதின்ன ஆசையா
திரும்பிப் பாராமல் ஓடிப்போய் ஒழி’ என்றாய்.

முகம் காட்டாதொளிந்திருந்து
அகமெல்லாம் தீ வளர்த்தாய்
அழுதேன் ஒரு கணந்தான்
ஆராய்ந்தேன் சில பெயரை
தெளிந்தெழுந்தபோது வெறுப்பில்லை
என்னிடத்தில் சிரிப்புத்தான் பொங்கியது.

ஓடிக்களைத்து ஓரிடத்தில் ஒதுங்கி
வாழத்தான் இங்குற்றோம்.
வலிகளைத்தான் எழுதி வைத்தோம்
ஆழக்கடல்தாண்டி அலையொதுங்கிவந்த
ஈழத்தமிழர்கள் ஏதிலிகள்
நாங்கள் எல்லோரும் புலிகளல்ல!

உயிர்வெல்லம் உயிர்வெல்லம் என்றோடி
உயர்வெல்லாம் போயின காண்!
துயர்சொல்லித் துயர்சொல்லி
சொற்களே தேய்ந்தன காண்!
காரணங்கள் இன்றி கைதானோம் காற்றானோம்
கடல்மடியில் மடிந்து கனவானோம் கதையானோம்
வேரடிமண் துறந்து எங்கெங்கோ விழுந்தோம் நாம்-இன்று
நீயடித்தாய் நிறைவடைந்தாய் அதுவே போதும்!பிற்குறிப்பு: முகமற்ற, முகவரியற்ற அனானிக்கு எழுதியது. இது கவிதையல்ல… கவிதை போல ஒன்று. சந்தநயம் கிடையாது: சொந்தநயம் மட்டுந்தான்.

17 comments:

கானா பிரபா said...

வணக்கம் தமிழ் நதி,

ஒரு வேண்டுகோள், உங்கள் மனம் மட்டுமல்ல நம் எல்லோரது மனமுமே புண்படும் கருத்து என்றாலும் இயன்றவரை தனிநபர்களை முக்கியத்துவப்படுத்திப் பதிவு போடுவதைத் தவிருங்கள்.

நல்ல வாசிப்பனுபவமும் எழுத்தாற்றலும் உள்ள உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. நம் எழுத்துக்களை நல்ல சிந்தனைகளுக்குப் பயன்படுத்துவோம். உங்கள் மனம் மட்டுமல்ல ஏதிலிகளாக நாடுவிட்டு நாடு வந்த நம் எல்லோரது நிலையும் அதுதான்.


டொமினிக் ஜீவா சொல்வதை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அதையே உங்களுக்கும் சொல்கிறேன். "திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகிறேன்."

Anonymous said...

தோழி,

சிலருக்கு இப்படி மிரட்டல் விடும் மனநோய் இருக்கிறது தமிழ்நதி.

எனக்கும் இப்படி சில மிரட்டலும் பல தடவை நரகல் நடையில் பின்னுட்டங்களும் சில பதிவுகள் எழுதிய மறு நிமிடம் வந்தது.

புறங்கையால் 'இதுகளை' விலக்கிவிட்டு உங்கள் பாதையில் பயணியுங்கள். வழக்கமான பணிகளை தொடருங்கள்

நட்புடன்

திரு

செந்தழல் ரவி said...

திரு மற்றும் கானா.பிரபா சொல்வது போல் ஒதுக்கிவிட்டு மற்ற வேலைகளை பாருங்க...

இதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க...!!!

Anonymous said...

அக்கா...

அதுகளை பொருட்டாக மதிக்க வேண்டாம். முகம் காட்ட முடியாத கோழைகளால்.. ஒன்னும் ஆகிவிடாது. கவலையை விடுங்கள்.

கானாபிரபா, திரு அண்ணா.. சொல்லுவதையே நானும் சொல்ல வேண்டி இருக்காலாம்.

என்னவான போதும் நா(ங்கள்) இருக்கிறோம். விட்டுப்போட்டு.. அடுத்த கதைக்கு வாங்க!

:-)

Anonymous said...

தோழி
உங்கள் நதியோட்டம் போன்ற தமிழை இரசிப்பவள்நான்.பதிவுகள் நம் மனதின் ஆதங்கங்களின் வெளிப்பாடுதானே போர்க்களம் அல்லவே.இதற்கு ஏன் கவலை?அனானிகளை ஒதுக்குங்கள்.

tamilnathy said...

நண்பர்கள் கானா பிரபா,திரு,செந்தழல் ரவி,பாலபாரதி அனைவருக்கும் நன்றி.

எதையும் பெரிதுபடுத்த வேண்டுமென்றோ, கவனத்தைக் கவர்வதற்காகவோ இதனை எழுதவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் எங்களது வேதனையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். 'பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல'என்று சொல்வார்களே அப்படியொரு வேதனை ஏற்பட்டது. எதுவானாலும் முகத்திற்கெதிரில் பேசித் தீர்ப்பது வேறு... மறைந்திருந்து இப்படி எழுதுவது (அது சாதாரண பின்னூட்டமே ஆயினும்) நன்றன்று. முகம் காட்டாதவர்களிடம் பேசுவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. கானா பிரபா சொன்னதுபோல தனிநபர்களை முக்கியப்படுத்திப் பதிவுபோடுவது முறையன்று என முன்னரே உணர்ந்திருந்தபோதிலும் எந்த வம்புக்கும் போகாமல் எழுதிக்கொண்டிருக்கும் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டனரே... என்ற ஆற்றாமையில் பொங்கிவிட்டேன். அது ஒருவகையில் சிறுபிள்ளைத்தனமானதே. நான் எப்போதும் சொல்வதுபோல சிலசமயங்களில் சிறுபிள்ளைகளாகத்தான் ஆகிவிடுகிறோம். குறிப்பாக குற்றம் இழைக்காத போதிலும் எவருடைய சுட்டுவிரலாவது எம்மை நோக்கி நீளும்போது... மனிதர்கள் குறித்து துக்கம் பொங்குகிறது. பகிர்ந்துகொண்டேன். வருந்துகின்றேன்.

✪சிந்தாநதி said...

தலைப்பைப் பார்த்ததும் நீங்களும் உப்புமா போட்டு விட்டீர்களோ என்று தோன்றியது. ஆனால் சோகத்தையும் கோபத்தையும் கூட இலக்கியமாகவே வடித்திருக்கிறீர்கள்...

உணர்வுகளை சொற்களால் வெளிப்படுத்துவதொரு வகை. எழுதித் தீர்ப்பதும் இன்னொருவகை. ஆகவே எழுதியாகி விட்டது. மனப்பாரமும் இறங்கி விட்டிருக்கும்.

ஆனால் எழுதியதற்காக வருந்த வேண்டாம்.

Anonymous said...

உங்களின்
க(வ)லையை
பகிர்ந்ததற்கு....
நன்றி

நெருடல்களும் நிரவல்களும்தான்
வாழ்க்கை

மலைநாடான் said...

புதிதல்ல.:(

Anonymous said...

கவலைகள் வேண்டாம் சகோதரி!

இன்னல்களைப் பின்னால் தள்ளிவிட்டு தொடர்ந்து எழுதுங்கள்!

இன்னும் உற்சாகத்தோடு!

Anonymous said...

\\நான் எப்போதும் சொல்வதுபோல சிலசமயங்களில் சிறுபிள்ளைகளாகத்தான் ஆகிவிடுகிறோம். \\

உண்மை நதி.
கள்ளங்கபடமற்ற சிறுபிள்ளையாகவே மன்னித்து மறந்துவிடுங்கள்.வருத்ததைக்கூட அழகாக வெளிப்படுத்தும் பாங்கு
அயர வைக்கும் அவர்களை.

Anonymous said...

"வழமையான ஓட்டத்திற்கிடையில் கிடைத்த சிறு இடைவெளியில் என் ரசனையறிந்து உங்களி¢ன் இவ்விடுகையின் சுட்டியை அனுப்பிய நண்பனுக்கு நன்றி சொல்லிப் படித்து முடித்தேன். இனி நான் திரும்பிப்போகும் இடத்தில் என்னைச்சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் நான் உங்களின் இந்த எழுத்துக்களோடு மட்டும் இருப்பேனாயிருக்கும். இந்தமாதிரித் தருணங்களில் எதுவும் சொல்லமுடியாமல் நிறமிழந்து சோகையாகின்றன என்முன் உள்ள சொற்கள். வேறென்ன சொல்வது தமிழ்நதி?" இது நேற்று உங்களின் இடுகைக்கு நான் எழுதிப் பின் போடமுடியாத அவசரத்தில் சென்றுவிட்டேன். இன்று பார்த்தால் இது.

இங்கு சில நண்பர்கள் இதிலெல்லாம் உங்கள் சக்தியை வீணடிக்கவேண்டாம் என்று சொல்வதை அவர்கள் நம்மீது கொண்டிருக்கிற அக்கறையும் அன்பும் என்று எடுத்துக்கொள்ளமுடிகிறபோதும், சிலநேரங்களில் இதைச் செய்வது அவசியமாகவும் ஆகிறது.

tamilnathy said...

அன்பிற்குரிய நண்பர்கள் கெளசி,சிந்தாநதி,பங்காளி,மலைநாடான்,லட்சுமி,செல்வநாயகி அனைவருக்கும் நன்றி.
நேற்று அனானியின் மீது வருத்தமாக இருந்தேன். இன்று இத்தனை பேரை எழுத்தினால் இணையவைத்த,அன்பை வெளிப்படுத்தும் தருணத்தைக் கொடுத்த அவருக்கு நன்றி சொல்கிறேன்.
"இனி நான் திரும்பிப்போகும் இடத்தில் என்னைச்சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் நான் உங்களின் இந்த எழுத்துக்களோடு மட்டும் இருப்பேனாயிருக்கும். இந்தமாதிரித் தருணங்களில் எதுவும் சொல்லமுடியாமல் நிறமிழந்து சோகையாகின்றன என்முன் உள்ள சொற்கள்."
செல்வநாயகி,நெகிழ்ந்தேன் என்பதன்றி என்ன சொல்ல?

Anonymous said...

//நேற்று அனானியின் மீது வருத்தமாக இருந்தேன். இன்று இத்தனை பேரை எழுத்தினால் இணையவைத்த,அன்பை வெளிப்படுத்தும் தருணத்தைக் கொடுத்த அவருக்கு நன்றி சொல்கிறேன்.
//

நல்லது!

எந்த ஒரு நிகழ்வுமே அனுபவங்களையும், நண்பர்களையும், புரிதல்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்! என்று இப்படி நேர்மறையாக எடுத்துக் கொள்ள வெண்டும்!

Anonymous said...

///தலைப்பைப் பார்த்ததும் நீங்களும் உப்புமா போட்டு விட்டீர்களோ என்று தோன்றியது. ஆனால் சோகத்தையும் கோபத்தையும் கூட இலக்கியமாகவே வடித்திருக்கிறீர்கள்...

உணர்வுகளை சொற்களால் வெளிப்படுத்துவதொரு வகை. எழுதித் தீர்ப்பதும் இன்னொருவகை. ஆகவே எழுதியாகி விட்டது. மனப்பாரமும் இறங்கி விட்டிருக்கும்.

ஆனால் எழுதியதற்காக வருந்த வேண்டாம்

///
சிந்தாநிதி உடைய மேலுள்ள கரு்த்து தான் என்னுடையதும்

சீனு said...

:(
உங்கள் வலி புரிகிறது...
ப்ச்...என்ன செய்ய?
என்னை கேட்டால், கண்டுகொள்ளாமலிருப்பதே உத்தமம்.

Anonymous said...

விட்டுத்தள்ளுங்க அக்கா,
உப்பிடி வருகிறவன் போகிறவன் எல்லாருக்கும் பதில் சொல்லுறதெண்டா விடிஞ்சு போயிரும்.
அனானிகளுக்காக வருத்தப்படாதேங்கோ, நாங்கள் இருக்கிறம் உங்களோட!