2.18.2007

புராணப் புனைவுகளும்...புண்பட்ட பெண்ணிலையும்

கம்பர் இராமாயணத்தை எழுதினார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தமிழுக்குத் தந்தார். வியாசர் மகாபாரதத்தைத் வழங்கினார். மனுதர்ம சாத்திரத்தை மனுவேதான் படைத்தார். சந்தேகமேயில்லை! ஆனால்… யாரும் பெண்ணை எழுதவில்லை. உண்மையில் அவள் பேசிய வார்த்தையை எழுதவில்லை.

கம்பரின் ராமன்: சீதை! நீ இவ்வளவு நாளா ராவணனோடை இருந்தனியெல்லோ… நீ எப்பிடிக் கற்போடை இருந்திருக்க முடியுமெண்டு ஒரு வண்ணான் கேக்கிறான். நான் இந்தக் குடிமக்களுக்கெல்லாம் அரசன். நீ பத்தினிதான் எண்டு அவையளுக்கு நான் நிரூபிக்காட்டில் நாளைக்கு என்னை நாயெண்டும் மதிக்கமாட்டாங்கள். நீ குறைநினைக்காமல் கொஞ்ச நாளைக்குக் காட்டிலை போய் இரு.

கம்பரின் சீதை:நீங்கள் சொல்லி நான் எண்டைக்காவது மாட்டனெண்டு சொல்லியிருக்கிறனா… நீங்கள் கிணத்துக்கை விழு எண்டால் எந்தக் கிணத்துக்கை எண்டு கேக்கிறவளெல்லோ நான்… இப்பவே போறன்.

சீதையைக் கம்பர் பேசவிட்டிருந்தால்: நீங்கள் அயோத்திக்கு மகாராசாவாய் இருக்கிறதுக்கு முதல்லை ஒரு மனுசனாய் இருங்கோ. ஒரு வில்லை முறிச்சு சூரத்தனம் காட்டினவுடனை நீங்கள்தான் எனக்கு எல்லாம் எண்டு உங்களுக்குப் பின்னாலை நான் வரேல்லையே… உங்கடை சின்னம்மா கைகேயிக்கு வயசு போன காலத்திலை உங்கடை அப்பர் குடுத்த சத்தியத்தைக் காப்பாத்த வேணுமெண்டதுக்காக நீங்கள் எல்லாத்தையும் விட்டிட்டுக் காட்டுக்குப் போனீங்கள். நான் ஒரு வார்த்தை கேட்டனா… ஒண்டும் கதைக்காமல் அந்தக் கல்லிலையும் முள்ளிலையும் உங்களுக்குப் பின்னாலை இழுபட்டுக்கொண்டு வரேல்லையே…! ராவணன் என்னைப் பிடிச்சு வைச்சிருக்கேக்கை நீங்களும் தனியத்தானே இருந்தனீங்கள். சூர்ப்பனகை அவள் இவளெண்டு உங்களைப் பாத்து ஆசைப்படாதவை ஆர்…? நீங்கள் எல்லா நேரத்திலையும் சுத்தமாய் இருந்திருப்பீங்களெண்டு எனக்கெப்பிடித் தெரியும்…? நீங்கள் ஏகபத்தினி விரதனெண்டு நிரூபிக்க லட்சுமணனைச் சாட்சிக்குக் கூப்பிடாதையுங்கோ… நீங்கள் அனுமனுக்கு ரெண்டு வால் எண்டால்… ‘ஓமண்ணை ஒண்டு நீளம் மற்றது கட்டை’ எண்டு அவன் சொல்லுவான்.

இளங்கோவடிகளின் கோவலன்:கண்ணகி! நீ எனக்காக வாசல்லையே காத்துக்கொண்டிருந்தனியா… நீதானடி பத்தினி! நான் திரும்பி வந்திட்டன். திருந்தியும் வந்திட்டன். சாப்பாட்டைப் போடு. இனி அந்த மாதவியின்ரை வீட்டுப் பக்கம் தலையே வைச்சுப் படுக்கமாட்டன்.

இளங்கோவடிகளின் கண்ணகி: ஐயோ…! என்ரை ராசா…! நீங்கள் எப்பிடியும் திரும்பி வருவீங்களெண்டு எனக்குத் தெரியும். நான் ஊணுறக்கம் இல்லாமல் உங்களுக்காகத்தானே வாசல்லை நிண்டு பாத்துக்கொண்டு நிண்டனான். உங்களுக்குப் பிடிச்ச மீன்குழம்பு வைச்சிருக்கிறன். நீங்கள் வயிறாரச் சாப்பிடவேணும். நான் அதைப் பக்கத்திலை இருந்து பாக்கவேணும்.


கண்ணகியைப் பேச விட்டிருந்தால்:எங்கை வந்தனீங்கள்…? என்னிலை என்ன உரிமை இருக்கெண்டு வந்திருக்கிறீங்கள். நான் கறுப்பி. என்னைப் பிடிக்கேல்லை எண்டுதானே அந்த ஆட்டக்காறி மாதவி வீட்டிலை போய்ப் படுத்துக் கிடந்தனீங்கள். பாட்டும் ஆட்டமுமாய் பம்பல் அடிச்சுப்போட்டு இப்ப அவள் ஆரையோ நினைச்சு ஏதோ பாடினாளாம் எண்டு கோவிச்சுக்கொண்டு இங்கை ஓடிவந்திருக்கிறியள்… அங்கை இல்லையெண்டா இஞ்சை… இஞ்சை நான் மாட்டனெண்டா அங்கை… உங்களுக்கு வெக்கமில்லையே…!

வியாசரின் தருமன்: பாஞ்சாலி! நான் என்னை, சகோதரங்களை, நாட்டை, பொன்பொருளெல்லாம் இழந்த பிறகு உன்னையாவது வைச்சுக்கொண்டிருந்திருக்கலாம். உன்னையும் இழந்துபோனனடி! இனியென்ன செய்யிறது… மூட்டை முடிச்சு ஏதாவது இருந்தா எடுத்துக்கொண்டு வெளிக்கிடு. வனவாசம் போவோம்.

வியாசரின் பாஞ்சாலி:உங்களைச் சூதாட்டத்திலை இழந்தாப்பிறகு என்னை வைச்சு ஆடுறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. எண்டாலும் அதை யோசிக்காமல் நீங்கள் என்னைப் பணயம் வைச்சுப்போட்டியள். என்ரை தலைமயிரைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்து சபைக்கு முன்னாலை தள்ளினான் துச்சாதனன் எண்ட துலைஞ்சுபோவான். அது மட்டுமில்லாமல் அவ்வளவு பேருக்கு முன்னாலை என்ரை சீலையை உரியப் பாத்து பரிசுகெடுத்துப்போட்டான். துச்சாதனன், துரியோதனன் எண்ட ரெண்டு பேரின்ரை ரத்தத்தையும் எடுத்து எண்ணெயாய் வைச்சுத்தான் என்ரை தலைமயிரை முடிவன். அதுவரைக்கும் இது இப்பிடியே விரிச்சது விரிச்சபடி இருக்கட்டும்.

பாஞ்சாலியைப் பேச அனுமதித்திருந்தால்: நீயொரு மனுசனெண்டும் புருசனெண்டும் கதைக்காதை. ஒருத்தனில்லை… மல்லன் மாதிரி அஞ்சு பேரை நம்பி நான் வந்தன். அவங்கள் சீலையை உரியிறாங்கள். நீங்கள் கையைக் கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிக்கிறீங்கள். கோத்தை குந்திதேவி உப்புப்போட்டு உங்களுக்குச் சாப்பாடு தரேல்லையே…! துரியோதனன் எண்டவனைப் பாத்து நான் சிரிச்சனெண்ட ஒரே காரணத்துக்காக இண்டைக்குச் சபையிலை எல்லாரும் என்னைப் பாத்துச் சிரிக்கிற மாதிரிச் செய்துபோட்டான். நீங்கள் எல்லாரும் சேந்து அவங்களைக் கொல்ல வேணும். அதுக்குப் பிறகு சொல்லியனுப்புங்கோ… வனவாசமோ மாளிகை வாசமோ எங்கையெண்டாலும் வாறன்.

கம்பர்,இளங்கோ,வியாசர் கூட பரவாயில்லை. அங்கையிங்கை பொம்பிளைக்குச் சார்பாக் கதைச்சிருக்கினம். இவர் மனு என்ன சொல்லுறாரெண்டால்….

மனு 1:வீட்டுக்குத் தேவையான பாத்திரம் பண்டத்தை வாங்கிறதுக்காக பொம்பிளைக்குக் கொஞ்சக் காசைக் குடுத்து வைக்கலாம். அவள் அந்தக் காசை வைச்சு தேவையான நேரம் அதைச் சிக்கனமாச் செலவு செய்யலாம். மற்றது தட்டுமுட்டுச் சாமான்களையும் வீட்டையும் கழுவித் துடைச்சு வைச்சிருக்க வேணும். ஆம்பிளை பூசை செய்யிறதுக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்து வைக்கிறது, குசினிக்கை இருந்து சமையல் சாப்பாட்டைக் கவனிச்சுக் கொள்ளுறது, பாயை, மெத்தையைத் தட்டிப் போட்டு வெயில்லை காயவைக்கிறது இப்பிடியான வேலையளைக் குடுத்தால் அவளுக்கு வேறை ஒண்டிலையும் மனம் போகாது. ஒழுங்கா நல்லபிள்ளையாய் வீட்டுக்குள்ளையே இருப்பாள்.

மனு 2:புருசன்காரன் சூதாடுறவனாய் இருக்கட்டும். ஒவ்வொருநாளும் குடிச்சுப்போட்டு வீட்டை வாறவனாய், வருத்தக்காறனாய் எப்பிடியும் இருந்திட்டுப் போகட்டும். ஆனால் அவன்ரை மனுசிக்காறி திமிர்பிடிச்சவளாய் அவனுக்குச் செய்யவேண்டிய வேலையளைச் செய்து குடுக்காம இருந்தாளெண்டால்….. அவளை பூ வைக்கிறது, பொட்டு வைக்கிறது, பவுடர் போடுறது இதையெல்லாம் செய்யவிடக்கூடாது. நல்ல உடுப்புப் போட விடக்கூடாது. அதோடை இரவோ பகலோ அவவைக் கட்டில் பக்கமே எடுக்கக்கூடாது. மூண்டு மாசத்துக்கு இப்பிடியெல்லாம் செய்துகொண்டு வந்தியளெண்டால் அவள் தானாய் வழிக்கு வருவாள்.

மனு 3:ஒரு பொம்பிளையைக் கலியாணம் கட்டி அவளுக்கு எட்டு வருசத்துக்குள்ளை பிள்ளை பிறக்கேல்லை எண்டா, அவளை விட்டுப்போட்டு நீ ஆரையும் கலியாணம் கட்டலாம். வயித்திலை பிள்ளை தங்கி தங்கி அடிக்கடி அழியிற சாபிள்ளைக்காறியை பத்து வருசத்துக்கு மேலை நீ பொறுத்துக்கொண்டிருக்க வேணுமெண்டில்லை. அவளை விட்டுப்போட்டு வேறொருத்தியைக் கலியாணம் கட்டலாம். உன்ரை மனுசிக்காறிக்கு தொடர்ந்து பொம்பிளைப் பிள்ளையே பிறந்துகொண்டிருக்குதெண்டு வைச்சுக்கொள்… பதினொரு வருசத்துக்கு மேலையும் அவளைச் சகிச்சு வீட்டுக்குள்ளை வைச்சுக்கொண்டிருக்க வேணுமெண்டில்லை. கலைச்சு விடு. சும்மா சும்மா பெண்டுகளோடை இருந்து புறணி கதைச்சுக்கொண்டிருக்கிறவளை உடனடியா அடிச்சுக் கலைச்சுப்போட்டு நீ வேறை கலியாணம் கட்டு ராசா. மேலை சொன்ன குறைகளோடை இருந்து உன்னாலை கலைக்கப்பட்டவளவைக்கு இந்த ஜீவனாம்சம் அது இதெண்டு நீ ஒண்டும் குடுக்கத் தேவையில்லை. விளங்கிச்சுதோ…!


உங்களுக்கு விளங்கிச்சுதோ… இதை வாசிச்சு முடிச்சாப்பிறகு எனக்கொரு சிரிப்பு வந்துது. அதைத்தான் கோபச் சிரிப்பெண்டு சொல்லுறது எண்டு நினைக்கிறன்.

38 comments:

Pot"tea" kadai said...

இப்பிடி தர்மத்துக்கு அடிக்கிறியள்!

கௌசி said...

தமிழ்நதி உங்க அழகிய தமிழ் மிஸ்ஸிங்.இருந்தும் உங்க இந்தத் தமிழும் அருமை.படிக்கப்பவே எனக்கும் கோபச் சிரிப்பு வந்தது.இவர்களைப் போல கதை புனைய அற்றைக்கு ஔவ்வைக்கும்,காக்கைப் பாடினிக்கும் தெரிஞ்சிருந்தால் இம்மனுக்களின் சேதி நாறிப் போயிருக்கும்.இல்லையெனில் அகலிகை கல்லாக மாறியிருக்க மாட்டாள்.பரசுராமர் தாயின் தலை கொய்திருக்க மாட்டார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. என்ன சொல்றது :(( அப்போ எழுதனது தெரிஞ்ச கதை தானே.
இப்போவும் அப்படியே சிந்திக்கறாங்களே அத எப்போ மாத்திக்கப் போறாங்கன்னு தெரியல.

மலைநாடான் said...

யாழ்ப்பாணத்தமிழில் புராணநாயகிகள் பேசியிருப்பது வித்தியாசமான சுவையாகவிருக்கிறது. விசயமும் சூடாகத்தானுள்ளது.

மிதக்கும்வெளி said...

புராணங்களை மறுவாசிப்பு செய்யும் மரபு நீண்டநெடிய மரபைக் கைக்கொண்டது. அந்த வகையில் உங்கள் ஆக்கமும் தொடர்கிறது என்றபோதும் ஒரு ஆழமான ஆய்வாயில்லை. ஏதேனும் ஒரு பிரதி எடுத்து உரையாடலைத் தொடங்கியிருக்கலாம். மேலும் ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றைப் பார்ப்பதுபோல மணிமேகலையைப் பார்த்துவிடமுடியாது. பவுத்த அறங்களைச் சாத்தியப்பட்டளவு முன்வைத்ததும் மணிமேகலை, காயசண்டிகை போன்ற பெண்தன்னிலைகளுக்கு முடிந்தவரை முக்கியத்துவம் கொடுத்ததும் மணிமேகலை. உங்களின் பதிவிலேயே மணிமேகலை குறித்து எந்த கேள்வியுமில்லை என்பதைக் கவனத்திற்கொணர விரும்புகிறேன். சிதையையும் கண்ணகியையும் தூக்கிப்பிடித்த பார்ப்பன மற்றும் திராவிட இயக்கத்தவரும் கூட மணிமேகலையைக் கைவிட்டது ஏன் என்ற கேள்வியை எழுப்பிப்பாருங்கள் புரியும்.

பங்காளி... said...

ஹைய்யோ...நான் லேட்டா....ரசிகர் மன்றத்துகாரவுக இல்லாம ஷோ போடக்கூடாது தெரியும்ல...ஹி..ஹி...

'சுருக்கெண்டு தக்கிற மாதிரி சொல்லிருக்கியள்....இருந்தாலும் இந்த ஆக்களுக்கு இதெல்லாம் வெளங்குமெண்டா நெனக்கிறியள்'......ஹி..ஹி...ஈழத்து மக்கள் யாராவது அடிக்க வர்றதுக்குள்ள நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்....

தமிழ்நதி said...

"இப்பிடி தர்மத்துக்கு அடிக்கிறியள்"

பொட் டீ கடை! தர்மத்துக்கு அடி வாங்கத்தான். மற்றது தர்மம் அடிச்சாலும் திருப்பி அடிக்கிறதுதானே தர்மம் இல்லையா...?

"உங்கள் அழகிய தமிழ் மிஸ்ஸிங்"
கெளசி! ஒவ்வொரு விதமாக எழுதிப் பார்க்கிறேன்.

"இப்போவும் அப்படியே சிந்திக்கறாங்களே...அத எப்போ மாத்திக்கப் போறாங்கன்னு தெரியல"
முத்துலட்சுமி!மாத்திப்பாங்கன்னு நம்புறீங்களா நீங்க? பார்க்கலாம் சூரியன் மேற்கிலே உதிக்கிறதாவென.

"வித்தியாசமான சுவையாக,சூடாகத்தானிருக்கிறது"
மலைநாடான்!நன்றி. சூடேற வேண்டியவர்கள் குளிர்மையோடிருக்கிறார்களே...!

மிதக்கும் வெளி!பெண்ணைப் பேசவிடாத புராணங்களைக் குறித்தே எழுதியிருக்கிறேன். மணிமேகலை தான் என்ன செய்யவேண்டுமெனத் தெரிந்தவள். தன் வழியைத் தானே தேர்ந்தவள். மக்கள் சேவைதான் இவர்கள் சொல்லும் மகேசன் சேவை என வாழ்ந்து காட்டியவள். அவளைக் குறித்தெமக்கொரு ஆதங்கமும் இல்லை. அவளே வணங்கத்தக்கவள். மணிமேகலையை இந்துத்துவவாதிகள் தூக்கிப் பிடிக்காமைக்கு அவள் பவுத்தத்தை முதன்னிலைப்படுத்தியதும்,சுயசிந்தனையுடையவளாக இருந்ததுமே காரணம். ஒத்தியைபுடையவளை நான் ஏன் கேள்வி கேட்கிறேன்? கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் மண்டியிடுபவர்களை விமர்சிப்பதற்காகவே இந்தப் பதிவு.

"ரசிகர் மன்றத்துக்காரவுக இல்லாம ஷோ போடக்கூடாது"
பங்காளி! வாங்க... அப்பலேர்ந்து தேடிப் பாக்கறேன். எங்கயும் காணம். அதான் நாமளே ஆரம்பிச்சுட வேண்டியதான்ட்டு திரைய இழுத்துட்டேன்.

தமிழ்நதி said...

மிதக்கும் வெளி! (எப்போதுமா?) இராமாயணம்,மகாபாரதம்,சிலப்பதிகாரம்இவற்றினுள் மணிமேகலையையும் (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு)நான் உள்ளடக்கியிருந்தபடியால் நீங்கள் அப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறீர்கள். மணிமேகலை வேறு வகை என்பதுணர்ந்து நீக்கியிருக்கிறேன். நன்றி.

பாரதி தம்பி said...

உங்களின் வழக்கமான மொழிநடையில் மற்றொரு பதிவு.ஈழத்தமிழ் பேசும் பாத்திரங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

//ஐயோ! என்ரை ராசா! நீங்கள் எப்பிடியும் திரும்பி வருவீங்களெண்டு எனக்குத் தெரியும். நான் ஊணுறக்கம் இல்லாமல் உங்களுக்காகத்தானே வாசல்லை நிண்டு பாத்துக்கொண்டு நிண்டனான். உங்களுக்குப் பிடிச்ச மீன்குழம்பு வைச்சிருக்கிறன். நீங்கள் வயிறாரச் சாப்பிடவேணும். நான் அதைப் பக்கத்திலை இருந்து பாக்கவேணும்.//

இதை கோவை சரளாவின் உச்சரிப்புடன் வாசித்துப் பார்த்ததில் சிரிப்பாணி அள்ளிக்கொண்டு போனது.

தருமி said...

அவர்கள் பேசாமல் விட்டது மட்டுமல்ல, நீங்கள் பேசாமல் விட்டதும் புரிகிறது.

தமிழ்நதி said...

"சிரிப்பாணி அள்ளிக்கொண்டு போனது"
பாருங்க ஆழியூரான், எம்பொழப்பு சிரிப்பா சிரிக்கறதை.

"அவர்கள் பேசாமல் விட்டது மட்டுமல்ல, நீங்கள் பேசாமல் விட்டதும் புரிகிறது."
தருமி,வரிகளுக்கிடையில் வாசித்துக்கொள்ளுங்கள் என்று விட்டிருக்கிறேனாயிருக்கும்.

இது தனிப்புலம்பல்

பேசிவிட்டுப் போனாலாவது பரவாயில்லை. பேசத் தகுதியில்லை என்று நினைத்துவிட்டுச் சிலர் போகிறார்களே அதை நினைத்தால் ஒருபோதும் பேசவே மனதில்லை.

Anonymous said...

அன்று பெண்ணை எழுதவுமில்லை. எழுதவிடவுமில்லை. மணிமேகலை தப்பிப் பிறந்தவள்.

என்ன எழுதியிருக்க வேண்டுமென்று பெண்மனப்பார்வையில் சொல்லியிருக்கீங்க...

புதுவிதமான முயற்சி. நல்லாருக்கு.

//பின்னாலை நான் வரேல்லையே// இதப் படிச்சவுடன் முதல்ல நான் குழம்பித்தான் போனேன்.எழுத்துப் பிழையோ என்று. (தமிழகத் தமிழில் எதிர்மறைப் பொருள் தரும்) தொடர்ந்து படிக்க சரியென்று புரிந்தது.

மங்கை said...

அந்தக்காலத்தில் இருந்தே ஆண் என்பவன் அதிகாரம் செலுத்தக்கூடிய இராணுவத்தையும் அரசியலையும், நீதித்துறையையும் , கல்வித்துறையையும் முன்னரே தன் வசப்படித்திக்கொண்டு தன் வர்கத்திற்கு பலம் சேர்த்துக்கொண்டான்..
பெண்ணிற்கு இல்லம் என்பதை உடமையாக்கி அதன் உள்ளே அவளை சிறை வைத்து சமூகத்தில் நடமாட விடாமல் செய்து விட்டனர்..

தொல்காப்பியத்தில் கூறியுள்ளது போல்

‘அச்சமும் நாணமும் மடமும் முந்துறல்
நிச்சமும் பெண்பாற் குரிய’

என்பது பெண்களுக்கே உரிய தனிப்பண்புகளானாலும், அவை அவளை அடிமை படுத்தவே பயன் படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் நினைக்க தோன்றுகிறது...

நல்ல பதிவிற்கு நன்றி தமிழ்நதி

Floraipuyal said...

இதைத்தான் அன்றைக்கே ஒளவை சொன்னாரே
"விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று."

படியாதவன் said...

வித்தியாசமான நடையில் எழுதியிருக்கிறீர்கள்..
சிறிது நீண்ட இடைவெளியின் பின் ஈழத்தமிழில் எழுதியிருக்கிறீர்கள்.
நல்லா இருக்கக்கா..

யாரோ வந்து பவுத்தநெறி பற்றி புகழ்ந்து பேசீற்று போயிருக்கினை..
அதில நல்ல நெறியள் இருக்கோ இல்லையோ அந்தப் பெயரக்கேட்டாலே
பத்திக்கொண்டு வருகுது எனக்கு,,
நாங்கள் புத்தசிலைகளையும் பவுத்தத்தையும் ஆக்கிரமிப்பிண்ட சின்னமா பாக்கிறதாலயோ என்னவோ..

Thamizhan said...

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன்
ஆமாம் கள் குடித்துவிட்டு full லோடில் வந்தாலும் --கத்வைச் சாத்துங்கோ அல்லது மருத்துவரிடம் கொண்டு போங்கோ!
மணாளனே மங்கையின் பாக்கியம்...
ஆமாம் நல்ல நண்பனாக ஒழுங்கா கூடமாட உதவி செஞ்சு பாத்திரம் கழுவி,வேக்கும் எல்லாம் போட்டா சரி ..இல்லே போய்யா சரிதான்.
மனு சொன்னது..பெண் வளரும் வரை
அப்பா சொல்றதை,கல்யாணம் ஆனதும் புருசன் சொன்னதை,வயசானதும் பையன் சொல்றதைக் கேட்டு நடக்கோனும்..
இப்போ பெண்பிள்ளை சொல்றதை அப்பா அம்மா கேக்கணும்,மனைவி சொல்றதைக் கணவன் மாமியார் கேட்கணும்,மந்திரி சொல்றதை எல்லாம் கேக்கணும்.இல்லே செயில்லே கம்பி எண்ணத் தெரியனும்!

சின்னக்குட்டி said...

தமிழ் நதி கலக்கல் பதிவு இது .ஒவ்வொரு பதிவையும் வித்தியாசம் வித்தியாசமாய் யோசிச்சு செய்யுறியள் நல்லாயிருக்குது.

பொம்பிளையளை வைச்சு எப்படி நல்லாய் வர்ணிச்சிருக்கிற கம்பரசம் , கீமாயணம் கொஞ்சம் தெரியும். சொல்லாலமண்டால் இதுக்குளை கன பொம்பிளையள் நிக்கினம் அது தான் யோசிக்கிறன். ஆம்பிளையளுக்கு சொல்லலாமாம் நல்லாய் ரசிப்பினமாம்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழ்நதி!
அருமையான கற்பனை!
இப்படி பல அரசியல்வாதிகளின்; நாட்டுப்பற்றேன வெளிநாடுகலில் இருந்து வேதமோதுவோர்;உண்மையிலவர்கள் சிந்தனையில் என்ன? இருக்குமென்பதைக் கற்பனை செய்து சிரிப்பேன்.

கலை said...

தமிழ்நதி கலக்குறியள். ஈழத்தமிழில் புராண கதாபாத்திரங்களின் கதை நல்லத்தானிருக்கு.

உண்மையா அந்தப் பாத்திரங்கள் இப்படித்தான் சொல்லியிருக்குமா எண்டு கொஞ்சம் சிந்திச்சுப் பார்த்தன். இந்தக் காலத்திலயே அவையள் சொன்னது போல சிந்திக்கிற பெண்கள் இருக்கினம். :( அந்தக் காலத்துல சிந்திச்சிருப்பினமா தெரியேல்லை. :(. ஆனால் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறதும், தொடர்ந்து வர வேண்டியதும் அவசியம்தான். :)


எப்பிடி நீங்கள் இப்படி எல்லாம் சிந்திச்சு எழுதிறியள். எனக்கும் கொஞ்சம் சொல்லித் தாங்கோவன்.

வசந்தன்(Vasanthan) said...

உங்கள் பதிவுகளில் அதிகம் கவர்ந்த நடையாக இது இருக்கிறது.
(கெளசி உங்கட 'அழகிய தமிழ்' எண்டு எதைச்சொல்லிறா எண்டு கேட்டு வைச்சுக்கொள்ளுங்கோ.)
சிலர் கோவத்தில பேசிறதை சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருக்கலாம்.
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் எண்டது போல உப்பிடியான ஊர்ச்சண்டையள் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது சின்ன வயசில. இப்பவும் உப்பிடி வாய்பாத்து ரசிக்கிறதில பெரிய மாற்றம் இருக்குமெண்டு நினைக்கேல. சண்டையத்தான் கேக்கிற வாய்ப்புக்களில்லை. ;-(
கொப்பர், கோத்தை, கொம்மா, கொண்ணன், கொக்கா.... இதுகள்பற்றி நான் முதலொருக்கா எழுதின ஞாபகமிருக்கு.
___________________________________
சிந்தாநதி,
'வரலையே' என்று வந்திருந்தால் நீங்கள் சொல்லும் எதிர்மறைப்பொருள் கிடைத்திருக்கும்.
இது 'வரேலயே?'. உங்கட தமிழில் 'வரலையா?' என்பதை ஒத்தது.
________________________________
தமிழ்நதி,
உங்கட பதிவின்ர கருத்துத் தொடர்பா நான் கருத்துச்சொல்ல ஏதுமில்லை. ;-)
புராணங்களை வறுத்தெடுக்கிறதைவிட தற்போதைய (தமிழ்ச்)சினிமாப்படங்கள், இலக்கியப்படைப்புக்கள் (முக்கியமாக மிகப்பெரும் வாசகவட்டத்தைக் கொண்டிருக்கும் ரமணிச்சந்திரன், அனுராதா ரமணன் படைப்புக்கள்) மீது ஒரு பார்வை பார்ப்பது பயனளிக்குமென்று நினைக்கிறேன்.

தமிழ்நதி said...

'வரேல்லையே..'
சிந்தாநதி, நீங்களாக விளங்கிக்கொண்டதோடு வசந்தனும் மேலதிக விளக்கம் தந்திருக்கிறார்.
உண்மைதான் மங்கை! எமக்கு வழங்கப்பட்ட ஒரே வெளியாக சமையலறைதான் இருக்கிறது என்று அண்மையில் கவிஞர் குட்டி ரேவதியைச் செவ்வி கண்டபோது சொல்லியிருக்கிறா. ஏனைய இடங்களை ஆண்கள்தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

புளோரைப்புயல்! (எனக்கு உங்கள் பெயரின் பொருள் புரியவில்லை)
எனது எழுத்தை நஞ்சென்கிறீர்களா? வேம்பென்கிறீர்களா..? என்னைக் கேட்டால் இரண்டிலும் கொடிதென்பேன்.

படியாதவன்!எனக்கும் முன்பு அப்படித்தான் இருந்தது. பேரூந்தில் போகும்போது புத்தர் சிலையைக் கண்டால் மட்டும் நெஞ்சில் கைவைத்து வணங்கமாட்டேன். புத்தரென்ன செய்வார் பாவம்... அவர் போதித்ததற்கு முரணாக அவர்கள் நடந்துகொள்வதற்கு என்ற புரிதல் ஏற்பட்ட பிறகு பவுத்தம் பற்றியும் படிக்க ஆசை.
தமிழன்! என்ன வீட்டில் கடும்பிடியா...? புலம்பித் தள்ளியிருக்கிறீர்கள். விதிவிலக்குகள் எதிலும் உண்டாம்.
சின்னக்குட்டி,யோகன் பாரிஸ்,கலை! ஒரு விஷயம் சொல்லவேணும். உண்மையா இதை எழுதவேணும் எண்டெல்லாம் மினக்கெட்டு இருந்து எழுதேல்லை. மனசுக்கை போட்டுக்கொண்டு திரிஞ்சு எழுதவுமில்லை. இருந்தாப்போல ஒரு கோவம். அதோடை நான் 'இருக்கிறன்'எண்டு அடிக்கடி காட்டிக்கொள்ளவும் வேணுமெல்லே... அதுக்காகப் போட்ட பதிவுதான் இது. நல்லாயிருக்கு எண்டு நீங்கள் சொல்ல 'நான் ஏன் இப்பிடி அவசரப்பட்டு ஒண்டைத் தூக்கிப்போட்டன்'எண்டு எனக்கு உறுத்தலா இருக்குது. அடுத்த முறை கட்டாயம் நின்று நிதானமா யோசிச்சு ஒரு பதிவு போடுறன்.

வசந்தன்,சண்டை பாக்கிறதெண்டா எனக்கும் சரியான விருப்பம். ஆனா... ஷெல் தலைக்கு மேலாலை பறந்துபோக விழுந்து படுக்கிற சண்டை இல்லை. அதிலையும் ரெண்டு பேர் குடிச்சுப்போட்டுச் சண்டை பிடிச்சாப் பாக்கச் சரியான விருப்பம். சினிமாவைப் பற்றி நான் ஒரு வறை வறுத்து வைச்சிருக்கிறன். அதை வாற கிழமை போட எண்ணம்.

Anonymous said...

உங்கள் எழுத்துக்கள் செல்லும் வேகமும் தூரமும் என்னை மிகவும் கவர்கின்றன. அடிக்கடி வந்து பின்னூட்டம் இடவில்லையென்றாலும் வாசித்துக்கொண்டிருப்பேன். :)

உங்களை சந்தோஷப்படுத்த ஒரு சின்ன கருத்து பரிமாற்றம்.
தமிழர்கள் கிரேக்கர்களோடு வியாபராம் செய்யும் காலத்தில் கதைகளும் கை மாறின. கிரேக்கர்களின் "ட்ராய்" பற்றிய கதையில், உற்றுப் பார்த்து யோசித்தால், த்ரௌபதி, கிருஷ்ணனுடன் ஓடிப் போகிறாள். "அவர்கள் என் உடலைப் பார்த்தபோது, நீ என்னைப் பார்த்தாய், அதில் என் மானம், என் தன்மை (ஐடன்டிடி) முழுமையாய் இருப்பதை பார்த்தேன்" என்று காதல் பேசுகிறாள். அங்கு கிருஷ்ணன் மாயா ஜால சேலை தரவில்லை. கிருஷ்ணன் ராவணன் ஆகி, ராமன் தர்மனாகி, நடக்கும் போர் :) ...

இன்னும் உற்றுப் பார்த்தால் பல விந்தை வடிவங்களாக தோன்றும் ராமாயணமும் மகாபாரதமும் கிரேக்கத்தில். :)

பார்த்து ரசித்து மனமாற சுகம் கொள்ளுங்கள் என்பது என் விருப்பம்! அதில் ஆணாதிக்கம் இல்லை என்று சொல்லவில்லை. கலாச்சாரதிற்கேற்ப கதை எப்படி மாறியது என்று நம்மை பரவசப் படுத்தும்! :)

செல்வநாயகி said...

///சினிமாவைப் பற்றி நான் ஒரு வறை வறுத்து வைச்சிருக்கிறன். அதை வாற கிழமை போட எண்ணம்.///

please...

மாசிலா said...

நன்றாக எழுதியிருக்கிறீர். நான் இணையம் வரும் முன் நீங்கள் மேற்கூறி இருக்கும் புராணங்கள் கதைகள் எதுவும் அறிந்ததில்லை. யாரும் சொல்லி கொடுக்கவுமில்லை. அது எவ்வளவு நல்லதாய் போனது என்று இப்போதுதான் புரிகிறது. சரியான 'Adults only' அசிங்க கதையாகவே இருக்கிறது. இப்படியே நான் 'ஒரு படிக்காத மேதை'யாகவே இருந்துவிட்டு போகிறேன்.

தொடர்ந்து எழுதிவரவும்.

கொழுவி said...

//மாசிலா said...
நன்றாக எழுதியிருக்கிறீர். நான் இணையம் வரும் முன் நீங்கள் மேற்கூறி இருக்கும் புராணங்கள் கதைகள் எதுவும் அறிந்ததில்லை. யாரும் சொல்லி கொடுக்கவுமில்லை.
//

அட்றா சக்கையெண்டானாம்...

பொன்ஸ்~~Poorna said...

:) ஆதிரை இது போல் ஒன்று எழுதிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு புராணமாக எடுத்து மீள்வாசிப்பு செய்து கொண்டிருந்தார். தேடித் தான் பார்க்க வேண்டும்.. நேரடிச் சுட்டி இல்லை :(

கலை said...

//சினிமாவைப் பற்றி நான் ஒரு வறை வறுத்து வைச்சிருக்கிறன்.//

வறை சுவைக்க ஆவலாய் இருக்கிறன். அப்படியே இந்த சின்னத்திரை பற்றியும் ஒரு வறையும் வறுத்து விடுங்கோ. :)

Anonymous said...

தேவையான கோபம். உங்கள் நடை வாசிக்க நன்றாக இருந்தாலும், நீங்கள் எடுத்த விடயத்தை கோபமாகவே எழுதியிருந்தால் இன்னமும் ஆழமாக எழுதியிருப்பீர்கள் போல படுகிறது.

Anonymous said...

பெண்கள் தான் சொத்து என்று எண்ணியவர் வாழ்ந்த காலம் அது.

இப்பொழுது சொத்து இருந்தால் தான் பெண்கள் பார்ப்பார்கள் என்பது தனிக்கதை...

//யாரும் பெண்ணை எழுதவில்லை//

அக்கால பெண்கள் மட்டும் அப்படி எழுதவில்லையா!!???

ஒளவை மூதாட்டியார் சொன்னவையில் சில..

ஆத்தி சூடி-63 :
தையல் சொல் கேளேல்!
வஞ்சகப்பெண் சொல்வதினைக் கேட்காதே..!!
(வஞ்சகப் பெண்= தையல்??? சரியா என்று தெரியவில்லை!!)

ஆத்தி சூடி-93 :
மெல்லி நல்லாள் தோள்சேர்!
-மெல்லிய குணங்களை உடையவள் பார்த்து திருமணம் செய்..!

மேலும், கொன்றை வேந்தன் எனும் நூலில்:


கற்பு எனப்படுவது சொற்திறம்பாம்மை!
-கணவன் சொல்படி நடப்பதென்பதே கற்பு..!!

துடியா பெண்டிர் மடியில் நெருப்பு !
-கணவனுக்கு செய்யவேண்டியவற்றைச் செய்யாதவள்,தன் மடியில் நெருப்பினைக் கட்டிக்கொண்டவளாவாள்..!!


எனவே, அக்காலத்தின் பெண் நிலைமை வேறு...இன்று வேறு..

இன்று இந்தியநாட்டை ஆள்வதும் பெண்தான்( சோனியா காந்தி அவர்கள் தாம்), மாநிலத்தை ஆண்டவரும் பெண்தான்...

ஆண்டவர் என்பதில் மட்டும் தான் இனி ஆண் இருக்கவேண்டும் போலிருக்கிறது.!!

பெரும்பாலான வீட்டை ஆண்டுகொண்டிருப்பதும் அவரே!!

ஆண் விடுதலை சங்கங்கள் அமைக்க நேரம் வந்து விட்டது என்றே நினைக்கிறேன்(றோம்)..!

நன்றி.!

எனினும், நல்ல கற்பனை மற்றும் சொல்லாடல்! வாழ்த்துகள்.

Anonymous said...

நான் முதன்முதலில் இச்சீமையில் (அமெரிக்கா) கால் பதித்த இடம் florida. இதைத் தமிழ்படுத்தி florai என வழங்குவோம். இம்மாநிலம் புயல்களுக்குப் பேர்பெற்றதென்பதால் floraipuyal.

நான் உங்கள் எழுத்துக்களைச் சொல்லவில்லை. அஃது ஒளவையார் கம்பரைப் பார்த்துக் கூறியது. கம்பராமாயணத்தை அரசர் புகழ இப்படிச் சாடியுள்ளார். கம்பரையே இப்படிக் கூறினால் மனுவை எல்லாம் என்னவென்று கூற? நல்லவற்றை ஏற்போம் அல்லவற்றை மறுப்போம்.

ஜடாயு said...

தமிழ்நதி தாறுமாறாக ஓடுவதைத் தான் இங்கே பார்க்கிறேன்.

கம்பரின் சீதை: தலைப்பே தவறு. இந்தப் பிரசங்கம் ராமாயணத்தில் உத்தரகாண்டத்தில் வருகிறது, அதைக் கம்பர் எழுதவில்லை, ஒட்டக் கூத்தர் தான் தமிழில் எழுதியிருக்கிறார். மூல ராமாயணத்திலேயே சில பழைய பதிப்புகளில் தான் இது கிடைத்துள்ளது. இந்த காண்டத்தில் வால்மீகியே ஒரு பாத்திரமாக வருவதால் இது அவர் எழுதியதே அல்ல என்றும் கருத்து உள்ளது. எப்படி இருந்தாலும், இந்தக் காண்டம் முழுவதுமே துன்பியல் நிகழ்வுகள் தான் உள்ளன, தர்மம் ஒரு அவல நோக்கில் தான் விளக்கப் படுகிறது (இது ராமாயண அறிஞர்களால் மிகவும் அலசப்பட்ட சமாசாரம்). இந்த உத்தர காண்டம் முழுதுமே ராமாயணத்தின் முக்கியக் கருவோடு இழைந்த ஜீவநாதம் அல்ல.

இளங்கோவின் கோவலன் உண்மையிலேயே திருந்தி வந்தவன் தான். "என்னொடு போந்தீங்கு என்துயர் களைந்த பொன்னே மணியே புனைபூங்கோதாய், நாணின் பாவாய் நீணில விளக்கே, கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி" என்று அவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவன் மனதின் அடியாழத்தில் இருந்து வந்தது தான் (அவனது "மாசறு பொன்னே" என்ற பழைய முகஸ்துது போன்று அன்றி).

வியாசரின் பாஞ்சாலி: "தன்னைத் தோற்றபின் என்மேல் என்ன உரிமை என் கணவருக்கு?" என்று கேட்ட இவள் குரல் தான் உலக இலக்கியத்தின் முதல் பெண்ணியக் குரலாக இருக்கும்! கொடுமையை எதிர்த்து எழுந்த இந்த வீரப் பெண்ணை திரௌபதி அம்மன் என்று தமிழ்நாடு முழுவதும் வழிபடுகின்றனர். இதற்கு மாற்றாக நீங்கள் கொடுத்திருக்கும் வசனம் உண்மையிலேயே கேனத் தனமாக இருக்கிறது.

பெண்ணடிமைத் தனத்தை மனுநீதி வற்புறுத்துகிறதா? - திண்ணை கட்டுரை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20702221&format=html

ஆக மொத்ததில் எந்த ஆழமான பார்வையும் இல்லாத ஒரு பரிதாபகரமான முயற்சி.

தமிழ்நதி said...

ஜடாயு,நான் நினைக்கிறேன் நீங்கள் புனிதமெனக் கருதும் புராணங்களில் கைவைத்துவிட்டது உங்களுக்குக் கோபத்தை வரவழைத்துவிட்டது என. 'கேனத்தனமான'என நீங்கள் பயன்படுத்தியிருக்கும் பதமே அதற்குச் சான்று.

ராமாயணத்தின் முக்கிய கருவோடு இழைந்த ஜீவநாதம் அல்ல என்பதற்காக, அந்தப் பகுதி பிரதான தொனி அல்லது பேசுபொருள் அல்ல என்பதற்காக, ராமன் திருவாயால் வந்துவிட்டதே என்பதற்காக அபத்தங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை. அதை நீங்கள் சொல்வதுபோல ஒட்டகூத்தரே எழுதியிருந்தாலும்,கம்பரேயானாலும் அதுவொரு ஆணாதிக்க சிந்தனைதான் என்பதை மறுப்பதற்கில்லை.
மற்றவர்களைத் திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காக இன்பத்திலும் துன்பத்திலும் கூட நடந்தவளைச் சந்தேகிப்பது எப்படி முறையாகும்?

கோவலன் உண்மையிலேயே திருந்தி வந்தவன்தான் என்று வக்காலத்து வாங்குகிறீர்கள். மனைவியைத் தள்ளிவைத்து கூத்தடித்துவிட்டு, போன இடத்தில் சண்டை போட்டு திருந்தி வரும் (?)எல்லா ஆண்களையும் வீட்டிலே காத்திருக்கும் பெண்ணானவள் இருகரம் நீட்டி வரவேற்று அவன் இழைத்த துரோகத்தை மறந்துவிடவேண்டும் என்று சொல்கிறீர்களா...? கண்ணகி அவ்வாறு திருந்தி வருந்தி வந்திருந்தால் கோவலன் ஏற்றுக்கொண்டிருப்பானா... அன்றைக்கு இளங்கோ சொன்னதை நீங்கள் இன்றைக்குத் திருப்பிச் சொல்கிறீர்கள். வேறொன்றுமில்லை.

திரெளபதியின் முதற் பெண்ணியக் குரலை நாங்களும் புரிந்துகொண்டிருக்கிறோம். அவளை அம்மன் என்று வணங்குவதைக் குறித்து எங்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால்,சபை நடுவில் அவளுக்கு ஏற்படுத்தப்பட்ட மானபங்கத்திற்கு அவள் பாண்டவர்கள் மீது காட்டிய கோபம் போதாது. பாண்டவர்களும் கெளரவர்கள் மீது காட்டிய எதிர்வினை போதாது என்பதையே நான் சொல்ல விழைந்தேன்.

மனுநீதி பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தவில்லையா... ம்... நான் திண்ணைக்குப் போய் வாசித்துப் பார்ப்பதிருக்கட்டும். நீங்கள் மனுவை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்ப்பது நல்லதென நினைக்கிறேன். எந்த ஒரு புராணத்தையும் தமக்குச் சார்பான பார்வையில் பார்ப்பதும், தாம் பார்க்கும் விழிகளாலேயே மற்றவர்களுக்கு அதைக் காட்ட முயல்வதும் தமது கருத்துக்கு வலுச்சேர்ப்பதற்கு மேலும் சிலவற்றை அழைத்துவருவதும் ஒன்றும் புதிதல்லவே...!

இந்த ஆக்கம் ஆழமான பார்வையுடையது என்று நான் எங்கும் சொல்லியிருப்பதாக நினைவில்லை. ஆழமான பார்வை மட்டுந்தான் அவரவர் பக்கத்தில் இருக்கலாமென்றால் மெத்தப் படித்தவர்களும்,கேள்வி கேட்கவே முடியாதபடி ஞானம் பொருந்தியவர்களும்தான் (அப்படி இந்த உலகத்தில் எவரும் இருக்கிறார்களா என்ன) 'புளொக்'இற்கு எழுத வரவேண்டும். அவ்வாறான வலைப்பக்கங்கள் ஏதுமிருப்பின் தயவுசெய்து எனக்குப் பரிந்துரை செய்யுங்கள்.
மேலும் எதிர்வினைகளை நாகரிகமாக எடுத்துச் சொல்லலாம். அதுவொரு பண்பு. நீங்கள் ஒரு ஆணாக இருப்பதால் 'கேனத்தனம்'என்றெல்லாம்தாக்கி எழுதும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். எதுவானாலும் பேசலாம் கோபங்களற்று. கருத்துக்கள்தான் முக்கியமே தவிர,காழ்ப்புணர்வுகள் அல்ல.

ஜடாயு said...

// உங்களுக்குக் கோபத்தை வரவழைத்துவிட்டது என. 'கேனத்தனமான'என நீங்கள் பயன்படுத்தியிருக்கும் பதமே அதற்குச் சான்று. //

இல்லை. ஒரிஜினல் திரௌபதி கேட்ட கேள்வியில் இருந்த கூர்மையான பெண்ணியப் பார்வையை விட மிக மொண்ணையானதாக உங்கள் "மீள்-வாசிப்பு" இருந்தது. அதனாலேயே அந்தப் பதம்.

// அதை நீங்கள் சொல்வதுபோல ஒட்டகூத்தரே எழுதியிருந்தாலும்,கம்பரேயானாலும் அதுவொரு ஆணாதிக்க சிந்தனைதான் என்பதை மறுப்பதற்கில்லை. //

ஒத்துக் கொள்கிறேன். என்ன சொல்வது? உத்தர காண்டத்தில் வரும் எல்லா விஷயங்களுமே இப்படித் தான். ராமாயணத்தில் அதுவரை கட்டப் பட்ட எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கும் சம்பவங்கள் தான் அதில் உள்ளன. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் கடைசிப் பகுதி போன்று. மகா காவியத்தின் இறுதியில் பிரளயளம் போன்று தீமை மேலெழுந்து அழிந்து மறுபடி எல்லாம் புதிதாகத் தொடங்உம் என்ற "நியதி"யைக் கொண்டுவருவதற்காக ராமாயணத்தில் இந்தப் பகுதி வந்து சேர்ந்துவிட்டது என்றே எண்ணிக் கொள்கிறேன்.

// போன இடத்தில் சண்டை போட்டு திருந்தி வரும் (?)எல்லா ஆண்களையும் வீட்டிலே காத்திருக்கும் பெண்ணானவள் இருகரம் நீட்டி வரவேற்று அவன் இழைத்த துரோகத்தை மறந்துவிடவேண்டும் என்று சொல்கிறீர்களா...? //

கண்ணகியின் பலவீனத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே கோவலன் இப்படி செய்தான் என்று சிலம்பில் இல்லை. தவறிழைப்பது மனித இயல்பு, மன்னிப்பதும் மனித இயல்பே. அந்த மனிதத்தைத் தான் இந்தப் பெருங்காவியம் காட்டுவதாக நினைக்கிறேன். இங்கே ஒரு ஒப்பீடு.

ஓர் இரவு பரத்தையுடன் கூத்தடித்த திருநீலகண்டனை வாழ்நாள் முழுவதும் தண்டித்த மனைவியின் பாத்திரத்தையும் பெரியபுராணம் காட்டுகிறது. ஆனால், அதில் ரசம் என்னவென்றால் அது இதோடு நின்று விடுவதில்லை. இந்த ஊடலைத் தீர்க்க சிவனே இறங்கி வருகிறான், இந்தத் தம்பதியரை இணைக்கிறான். இந்திய இலக்கியத்தின் சாரத்தைக் காட்டும் விஷயம் இது.. இது பற்றிய எனது சமீபத்திய பதிவு -
http://jataayu.blogspot.com/2007/02/blog-post_23.html

இந்த அதி அற்புதமான புராணங்கள் ஒற்றைச் சார்பு உடையவை அல்ல என்றே கூற விழைகிறேன்.

// நான் திண்ணைக்குப் போய் வாசித்துப் பார்ப்பதிருக்கட்டும். நீங்கள் மனுவை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்ப்பது நல்லதென நினைக்கிறேன். //

வாசித்திருக்கிறேன். அந்தத் திண்ணைக் கட்டுரை கூறும் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். மனு இங்கு அளவுக்கு மீறி அரக்கனாக்கப் பட்டுள்ளார்.

// ஆழமான பார்வை மட்டுந்தான் அவரவர் பக்கத்தில் இருக்கலாமென்றால் மெத்தப் படித்தவர்களும்,கேள்வி கேட்கவே முடியாதபடி ஞானம் பொருந்தியவர்களும்தான் (அப்படி இந்த உலகத்தில் எவரும் இருக்கிறார்களா என்ன) 'புளொக்'இற்கு எழுத வரவேண்டும். //

அப்படி சொன்னது பிழை தான். மன்னியுங்கள். இன்னும் கொஞ்சம் "ஹோம்வொர்க்" செய்துவிட்டு நீங்கள் எழுதியிருக்கலாம் என்பதே சொல்ல விழைந்தது.

தமிழ்நதி said...

ஜடாயு,

பிழை செய்தவர்களை மன்னிப்பதும் மறுபடி ஏற்றுக்கொள்வதும் தவறென நான் சொல்லவில்லை. ஆனால்,எம்மால் மதிப்புக்குரியனவாக உயர்த்திப் பிடிக்கப்படும் புராணங்கள் தவறாக வழிநடத்தக்கூடாது என்பதையே நான் சொல்லவந்தேன். 'கோவலனான கோவலனே அப்படிச் செய்யவில்லையா...?'என்று கேட்டுத் தமது பிழைகளை நியாயப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமே என்பதனால்தான் அதை அப்படி விமர்சித்தேன்.(நல்லவற்றை விட்டுவிட்டுத் தீமையை எடுத்துக்கொள்பவர்களே அதிகமாக இருப்பதனால்)
"மனு அளவுக்கதிகமாக அரக்கனாக்கப்பட்டுள்ளார்"என்று வருத்தப்படுகிறீர்கள். எனது பார்வையில் மனு பாரபட்சங்கள் நிறைந்தவரே.
நான் 'ஹோம் வொர்க்'செய்துவிட்டு எழுதவில்லை என்பது உண்மையே.

மேலும்,மாறி மாறி எமது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், அவரவர்க்கு அவரவர் 'சுயம்'பெரிது. அதற்காக வரிந்துகட்டிக்கொண்டு தமது கருத்துக்களைச் சரியென்று நிரூபிக்க சண்டை பிடிப்பவர்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோமல்லவா...? பிழையைப் பிழை எனவும் சரியைச் சரி எனவும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எமக்குக் கைவரவில்லை. எதிர் வாதங்கள் எமது கருத்துக்களை அசைத்துப் பார்க்கலாம், நெகிழ்வினைக் கொடுக்கலாம்... ஆனால், ஒரு புள்ளியில் இணைவதென்பது சாத்தியமல்ல. காரணம் 'நான்'என்பதை நாம் எல்லோரும் நேசிக்கிறோம். அதனால் வாதங்களால் பயனில்லை நண்பரே. நான் உங்கள் பதிவை இன்று போய் வாசிக்கிறேன்.

நளாயினி said...

ஐயோ நதி சிரிசிரியெண்டு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சு. நளாயினிக்கு என்ன நடந்ததெண்டு என்ரை ஆளும் அம்மாக்கு என்ன நடந்ததெண்டு பிள்ளையளும் பெரியம்மாக்கு என்ன நடந்ததெண்டு தங்கையின் பிள்ளைகளும் தங்கையும் கணவருமாய்... என்ன என்ரை சிரிப்பை பாத்து அவை சிரிச்சிச்சினம் .அது தான் இதை விட பெரிய பகிடி.பிறகு எல்லாருக்கும் பெரிசா வாசிச்சு காட்டினன்.ஒரே சிரிப்பொலிதான். ஆனா கடைசியா இந்த இரண்டு மல்லனுகளுக்கும் கடுப்பாப்போச்சு. "அது சரி சிரிச்சுப்போட்டு பிறகெதுக்கு கடுப்பு கதை. ஆஆஆ ஒரு உறுமல் விட்டன்.. ;."( நானும் மனசுக்கை ம்.. அப்பப்ப எங்களுக்கை இருக்கிற காட்டேரி யாரைத்தான் விட்டுது.)அனேகமா இண்டைக்கு சாமம் சாமமாய் பயங்கர பட்டிமன்றம் சூடுபறக்குமெண்டு நினைக்கிறன்.

தமிழ்நதி said...

நளாயினி! இன்று காலை மின்னஞ்சலைத் திறந்தால் நிறைய பின்னூட்டங்கள்... 'நான் பதிவொன்றும் போடவில்லையே'என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு பார்த்தால் நீங்கள் வந்து போயிருக்கிறீர்கள். உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அட!என்னுடைய பதிவுகளைப் படித்தும் சிரிக்கச் சிலர் இருக்கிறார்களே... ஏனென்றால் எனது நண்பர்களில் ஒருவர் அடிக்கடி சொல்வார்.. 'வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் தமிழ்... ஏன் கண்ணீரையே எழுதுகிறீர்கள்?'என்று.

உங்கள் வீட்டில் எல்லோருக்கும் வாசித்துக் காட்டியது சந்தோசம். எங்கள் வீட்டில் மிகவும் சிலாகித்த கதை என்றால் 'சென்னைத் தமிழில்'எழுதிய 'அந்த எசமாடன் கேட்கட்டும்'என்ற கதைதான்.

நளாயினி said...

இப்போதான் மெதுமெதுவாக ஆனா பலதடவை அதிக உள்வாங்கல்களோடு வாசிக்கிறேன் உங்கள் பக்கத்தை. உங்கள் உணர்வுகளின் மொழி எனக்கு நன்கு பிடித்திருப்பதோடு ஆச்சரியத்தையும் தருகிறது. 'அந்த எசமாடன் கேட்கட்டும்'என்ற கதை இன்னமும் எனது கண்களுக்கு எட்டவில்லை. தற்கொலை வாசிக்கவே பயமா இருக்கு. முதல் வரி மட்டும் வாசித்ததோடு வாசிக்கிற எண்ணத்தை கைவிட்டாச்சு. பிறகு பயந்து பயந்து பேப்படம் பாக்கிற மாதிரி கண்ணை கொஞ்சம் மூடி கொஞ்சம் திறந்து இரண்டாவது வரியும் வாசிச்சன். பிறகு நோ. வாசிக்கிறதுக்கு இன்னும் தைரியம் வரேலை.ஆனா கட்டாயம் வாசிப்பன்.

Unknown said...

வேறு எதையோ தேட இது கிடைத்தது.
நல்ல வாசிப்பனுபவம். நன்றி