3.08.2007

தமிழக சகோதரர்களுக்கு…

“நாங்களும் மனுசங்கதான்! நாங்களும் மனுசங்கதான்!”

முற்குறிப்பு: நட்சத்திர வாரத்துக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பில்லை.

பொதுவில் சொந்தக் கதை… சோகக்கதை சொல்லி ‘ஜல்லியடிப்பதென்பதில்’எனக்கு உடன்பாடில்லை. அது ஒரு பயண அனுபவமாக இருப்பின், சமூக அக்கறை குறித்ததான பகிர்தலாக இருப்பின் எமது ‘வீட்டு’க் கதைகளைச் சொல்லலாம். மற்றபடி எழுத்தில் நாங்கள் வரலாமேயன்றி எழுத்தே நாங்களாயிருப்பது குறித்து எனக்குத் தயக்கங்கள் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை இன்று கொஞ்சம் மீறிப்பார்க்கலாமென்றிருக்கிறேன். எழுத்து ஒன்றுதான் என்னைப்போன்றவர்களுக்கு வடிகால். சாய்ந்து அழும் தாய்மடி என்ற வகையில் எனது கோபத்தை,வருத்தத்தை இங்கே வெளிப்படுத்தலாமென்றிருக்கிறேன். எனக்கான ஆறுதலை இதன்மூலம் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல இந்தப் பதிவின் நோக்கம். உயிருக்கு அஞ்சி ஓடோடி வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் சகமனிதர்களாகப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்காகவும் இதனைப் பதிகிறேன்.

‘அவனது கேள்வியும் அவளது ஆண்டுக்குறிப்பும்’ என்ற அனுபவப் பகிர்வுக்கு அனுதாபம்,ஆதங்கம்,கோபம்,துக்கம் எல்லாம் பொங்க பின்னூட்டமிட்டிருந்தீர்கள். அதைப் பார்த்தபோது இனத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்ட எமது சகோதரர்களுக்கு எங்கள் மீது இத்தனை அக்கறை இருக்கிறதே என்று பூரித்தது உண்மை. ஆனால், உள்ளுக்குள் ஒரு கவலை அலைந்துகொண்டிருந்தது. அதாவது வீடு தேடுவது பற்றிய கவலை. எனது நட்சத்திர வாரம் அந்தக் கவலையுடனேயே ஆரம்பித்தது. அதைக் காட்டிக்கொள்ளக்கூடாதென்றிருந்தேன். ஆனால், தொடர்ச்சியான நிராகரிப்பு தந்த கோபம் என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

நாங்கள் இப்போது இருக்கும் வீட்டில் கடந்த ஓராண்டாகக் குடியிருக்கிறோம். இது சகல வசதிகளையும் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு. பாவனைக்கு வேண்டிய தளபாடங்கள் அத்தனையையும் உள்ளடக்கிய இதன் மாத வாடகை 22ஆயிரம் இந்திய ரூபாய்கள். இதைத் தவிர கட்டிட பராமரிப்புச் செலவுக்கென மாதாந்தம் 1075ரூபாய்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வாடகைக்கு வீட்டை விட்டிருப்பவர் இந்த மாத ஆரம்பத்தில் வந்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “நீங்கள் மிக நல்ல குடியிருப்பாளர். உங்களை நான் இழக்க விரும்பவில்லை. ஆனால், இப்போதிருக்கும் சூழ்நிலையில் ஈழத்தமிழர்களை வாடகைக்கு வைத்திருப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் வரும் மாதம் வீட்டை விட்டுவிடுங்கள்”என்றார்.

கனடிய அரசாங்கம் எங்களை அந்த நாட்டுப் பிரஜையாக அங்கீகரித்து கனடிய கடவுச்சீட்டை வழங்கியிருந்தாலும் மனதளவில் நான் முற்றுமுழுதாக ஈழத்தைச் சேர்ந்தவளே. எனது கடவுச்சீட்டின் மூலம் உலகத்தின் எந்த நாட்டிற்கும் போகலாம் வரலாம். ஆனால், இந்தியாவுக்கு விசா எடுத்தே வரல் வேண்டும். எனது தாயாருடையதும் கனேடிய கடவுச்சீட்டே. இருவரிடமும் இந்திய விசா இருக்கிறது.

அக்காவின் பிள்ளைகள் மூவரும்(அக்கா ஒரு ஆணாதிக்கவாதியின் வதைகளைத் தாங்கவொண்ணாமல் தற்கொலை செய்து பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனார்.) அண்ணாவின் பிள்ளைகள் இருவருமாக ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். ஐவரும் பதினேழு வயதிலிருந்து இருபத்திரண்டு வயதிற்குட்பட்டவர்கள். எங்களுக்கெல்லாம் செல்லமான அண்ணாவின் பெண் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தவள். போர் அவளைப் படிப்பிலிருந்து துரத்தியது. ஏனைய நால்வரில் மூத்தவர் படிப்பை ஏற்கெனவே விட்டுவிட்டார். மற்றைய மூவரில் இரு பையன்களும் க.பொ.த. உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தவர்கள். கடைசிப்பையன் திருகோணமலையில் பெயர்பெற்ற பாடசாலையான சென்ற்.ஜோசப் கல்லூரியில் பத்தாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தவன். உயிரோடு காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அவர்களையும் படிப்பிலிருந்து பிடுங்கியெடுத்துக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். முறையான கடவுச்சீட்டில் வந்து விசா முடிந்ததும் மற்றெல்லா ஈழத்தமிழர்களையும் போல போலிசில் பதிந்துவிட்டு பிள்ளைகள் ஐவரும் இங்கு என்னோடு இருக்கிறார்கள். அவர்களுக்காகவே நான் இங்கு இருக்கவேண்டியுள்ளது. எல்லோரும் கணனி,ஆங்கிலம்,பாடசாலை என்று எங்கோ படித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

எங்களுக்கு வாடகைக்கு வீட்டைத் தந்திருப்பவர் சொல்லும் காரணம் என்னவென்றால் ‘விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு –பிள்ளைகளுக்கு- வீட்டை வாடகைக்குக் கொடுக்கமுடியாது’என்பதே. சரி அவரின் புரிதல் அவ்வளவுதான் என்ற வேதனையோடு வேறு வீடு பார்க்கத் தொடங்கினோம். எல்லாம் சரியென வந்து கைகூடும் தருணத்தில் ‘ஈழத்தமிழர்களா… அப்படியானால் வீடு இல்லை’என்று சொல்வதைப் பல தடவை கேட்டுவிட்டோம். ஒவ்வொரு நாளும் வீடு பார்க்கப் போவதும், அவர்கள் சரியென்பதும் பிறகு வீடு பார்க்கும் இடைத்தரகர் வாயிலாக நாங்கள் ஈழத்தமிழர்கள் என்று அறிந்ததும் ‘இல்லை’என மறுப்பதும் சில நாட்களாகவே நடந்துகொண்டிருக்கிறது.

நாங்கள் செய்த தவறுதான் என்ன? ஈழத்தமிழர்களாகப் பிறந்தது நான் வளர்க்கும் பிள்ளைகளின் குற்றமா? சொந்த மண்ணில் வாழ முடியவில்லை. வந்த இடத்திலும் வாழ இடமில்லை. நான் பன்னிரண்டு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தேன். அங்கு மிக மதிப்பிற்குரிய மனிதர்கள் என்று கருதப்படுபவர்களின் அறிமுகத்தையும் நட்பையும் கொண்டவள். எனது பிள்ளைகளும் என்னைப்போல மரியாதையான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களே. அவ்விதமிருக்க, முகமறியாத ஒன்றினால் தொடர்ந்தும் நாங்கள் துரத்தப்பட்டுக்கொண்டிருப்பது ஏன்?

நண்பர்களே! நாங்கள் குண்டு வைத்திருக்கவில்லை. சமூகவிரோதிகள் அல்ல. நாங்கள் சாதாரண நடத்தைகளையும் வாழ்வு குறித்த கனவுகளையும் கொண்ட சாதாரண மனிதர்கள். இன்னும் சொல்லப்போனால் போர் எங்களைப் புண்படுத்தியிருந்தாலும் அந்தத் துயரங்களால் நாங்கள் மேலும் பண்படுத்தப்பட்டவர்களாகவுமிருக்கிறோம் என்பதே உண்மை.

எனது கவலை என்னவென்றால், வெளிநாட்டிலிருந்து வந்து வாடகை கட்டக்கூடிய வசதியோடு இருக்கும் எங்களுக்கே இந்த நிலைமை என்றால், தமிழகம் எங்கள் தாய் அகம் என்று நம்பி வரும் ஏனைய, எங்களை விட வசதியில் குறைந்த ஈழத்தமிழர்கள் எங்கெங்கு எப்படியெப்படியெல்லாம் கிழிபடுவார்கள், அவர்கள் எத்தகைய துயரங்களை,அவமானங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே.

கனடாவில் வாழ்ந்த காலங்களில் உண்மையாக உழைப்பார்கள் என்ற காரணத்தினால் எங்களவர்களை விரும்பி வேலைக்குச் சேர்ப்பதும், சுத்தமாக வைத்திருப்பார்கள் என நம்பி வாடகைக்கு வீடு தருவதும்தான் நான் கண்டது. சிங்களவர்கள் பெருவாரியாக வாழும் கொழும்பில் கூட ‘தமிழர்கள் ஒழுங்காக வாடகை தருவார்கள்’என்ற காரணத்தினால் எந்தத் தயக்கமும் எவரிடமிருந்தும் எழுவதில்லை. அதிலும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மரியாதை வழங்குவார்கள். காரணம் எங்களை பணம் காய்க்கும் மரங்களாக(நாங்கள் குளிரில் விறைப்பதையும் வாழ்வை வெறுப்பதையும் எவரறிவார்)ப் பார்ப்பதே.

நான் இதை யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. கொல்லப்படுவதும் வன்புணர்வுக்காளாக்கப்படுவதும் சிறைகளில் வதைக்கப்படுவதும்தான் மட்டும்தான் வன்முறை அல்ல. மனங்களைச் சாகடிப்பதும் வன்முறை சார்ந்தது என்பதை இதை வாசிக்கும் ஒருவராவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே. எழுத்தினால் பூமிப்பந்து புரட்டப்பட்டுவிடும் என்ற பூச்சுற்றல்களையெல்லாம் நான் நம்பவில்லை.

‘ராஜீவ் காந்தியைக் கொல்வதன் முன் எல்லாம் ஒழுங்காகவே இருந்தது’என்று சிலர் சொல்கிறார்கள். நண்பர்களே!மகாத்மா காந்தியை கோட்சே கொன்றான். இந்திராகாந்தியை ஒரு சீக்கியன் கொலை செய்தான். சீக்கியரில் இன்னமும் வஞ்சம் பாராட்டிக்கொண்டிருக்கிறீர்களா? கோட்சேயின் தலைமுறை அந்தக் கொலையால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதா…? யாழ்ப்பாணத்தில் கொக்குவில் என்ற இடத்திலே பிரம்படி ஒழுங்கை என்ற வீதியில் வைத்து இந்தியப்படையினரால் கவசவாகனங்களை ஏற்றி உயிரோடு சிலர் நசித்துக்கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்தேன். அதற்காக நான் எவரையும் வெறுக்கவில்லை. வன்மம் பாராட்டவில்லை. போரின் விதிகள் நாமெல்லோரும் அறிந்தவை.

நீங்களே அறிவீர்கள்…உங்களில் எத்தனை பேர் எனக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள் என்பதை. கனடாவில் எனது கணவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களில் எழுபது வீதமானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்களே என்பதை ஒரு உபரித்தகவலாகச் சொல்ல விரும்புகிறேன். மேலும், தமிழகத்து சகோதரர்களின் ஆதரவில்லாமல் ஈழத்தமிழர் போராட்டம் வெற்றிபெற மாட்டாது என்றுதான் நாங்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

‘உலகத் தமிழர்களின் தலைவர்’என்று சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்தபிற்பாடு எங்களைக் கருணையோடும் அனுதாபத்தோடும் நடத்துவார்கள் என்று நம்பினோம். ஆனால், முன்னர் இருந்ததைக் காட்டிலும் குற்றவாளிகளாகத்தான் பார்க்கப்படுகிறோம். உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவரானவர் எங்களை மனிதர்களாகப் பார்க்க மறுப்பது ஏனென்பது துயர்தரும் புதிராயிருக்கிறது. நியாயமான ஒரு போராட்டத்தில் பங்கெடுக்காமல் ஓடி வந்ததற்குத் தண்டனையாகத்தான் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படுகிறோமோ என்ற குற்றவுணர்வு இப்போது கூடுதலாக உறுத்துகிறது. இப்படியெல்லாம் இருப்பதற்கு திரும்பிப் போய்விடலாம் என்றே தோன்றுகிறது. முன்பொரு கவிதையில் எழுதியதைப் போல ‘இறப்பதற்கல்ல நாங்கள் இழிவுசெய்யப்படுதலுக்கு அஞ்சியே’இங்குற்றோம்.

புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே! உங்களைப் போல இரத்தமும் சதையும் உணர்வுகளும் கனவுகளும் குடும்பத்தின் மீது நேசமும் காதலும் இழைத்த சாதாரண மனிதர்கள்தான் நாங்கள்.

அயர்ச்சி பொங்க மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம்:

“நாங்களும் மனுசங்கதான்! ஐயா! நாங்களும் மனுசங்கதான்!”

பிற்குறிப்பு: எனது சொந்த நலனைக் கருதி இதனைப் பதிவு செய்யவில்லை. எந்தவொரு வேண்டுகோள்களும் இதன் பின்னால் இல்லை. நாங்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள் போல. எங்கேயும் பிழைத்துக்கொண்டு விடுவோம். அதற்கான வசதியும் இருக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் அவமானத்தையும் நிராகரிப்பையும் எதிர்கொள்ளும் நாங்கள் உங்கள் சகோதரர்கள் என்பதை நினைவுபடுத்தவும் மனதளவிலேனும் ஒரு சிறு மாறுதலை வேண்டியுமே இந்தப் பதிவை இட்டேன். நானறியாமல் எவரையும் புண்படுத்தியிருப்பின் தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

41 comments:

Anonymous said...

enna solvathenre theriyavillai. ungal ullaththu unarvukalai kotti irrukireerkal. nallathe nadakkum nambikkai-udan irrungal. thodarnthu ungal pathivai padiththu varukiren. manam miga parama unarkiren. veettirku pona pinnum unga pathivai pattri pesi kondu irrupen. elangai thamilar pirachanaikku mudive illaiya?
nithamum makkal alivathu than mudiva?
eyarkkai oru puram makkalai vilungukirathu?
marupuram sandai - por
mudive illai ya?
yosikkavum athai patri pesavum varutha padavum mattume mudikirathu?
itharkku ellam mudivu?????
kelvikal mattume pathilkal?????

லக்கிலுக் said...

பதிவினைப் படித்து முடித்ததும் கண்களில் நீர் திரையிடுகிறது. இப்போது வெறெதுவும் சொல்லும் மனநிலையில் நான் இல்லை :-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவை பிரசுரித்த நிமிடமே பார்த்துவிட்டேன். பின்னூட்டமிட தயக்கம்.வெட்கம்.பின்னூட்டமிடாவிட்டாலும் உங்களுக்கு தெரியும் நான் படித்திருப்பேன் என்று.
மீண்டும் மீண்டும் வந்து ஒரேமாதிரி நான் புரிந்து கொண்டேன் ஆனால் இதற்கு வழி சொல்ல மட்டும் முடியாது என்று சொல்ல மானக்கேடாக இருக்கிறது. :-(

Anonymous said...

//‘உலகத் தமிழர்களின் தலைவர்’என்று சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி//
உந்த உழுத்துப்போன கதையை இன்னும் எவ்வளவு நாளைஇகு கதைக்கிறது??
ஏதாவது ஒண்டெண்டா உடன கவிதைத்தனமா ஒரு அறிக்கை விடுவார், கொஞ்ச நாளில தானே மறுத்தும் அடுத்த அறிக்கை விடுவார்,
தன்ர மக்கள் சாகேக்கையே ஒன்டும் செய்யேலாம இருக்கிறார், இவர் எங்களுக்கு என்ன செய்யப்போறார் எண்டு எதிர்பாக்கிறது?
நீங்கள் பேசாம கனடாவுக்கே திரும்பி போறது நல்லது அக்கா..
இவங்களைவிட வெள்ளைக்காரரை நம்பலாம்,

சின்னக்குட்டி said...

சகோதரங்கள் சத்தம் இல்லாத மெளனம் ஏனோ....

வரவனையான் said...

//சின்னக்குட்டி said...
சகோதரங்கள் சத்தம் இல்லாத மெளனம் ஏனோ.... //


நடுத்தெருவில் அம்மணமாய் நிற்பதுபோல் உணரவைக்கிறது பதிவு . இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை சின்னக்குட்டி

மணியன் said...

புண்பட்ட நெஞ்சை எப்படி ஆற்றுவிப்பதென்று தெரியவில்லை. உங்கள் உணர்வுகளும் நிகழ்வுகளும் புரிகிறது. சில காரணங்கள் சப்பைக் கட்டாக இருப்பினும் எங்கள் மீது எழுந்துள்ள நம்பிக்கையின்மையை நீக்கும் விதமாக ஓரிரு வார்த்தைகள் தயக்கத்துடன் சொல்ல விரும்புகிறேன்.
1. பொதுவாகவே வாடகைக்கு விடுவதில் பல prejudices உண்டு. திரு TBR பதிவில் அவருக்கேற்பட்ட நிகழ்வுகளைக் காணலாம்.
2. ஒரு விபத்து நிகழ்ந்த இடத்திலேயே காயமுற்றவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில், காவல்துறை விசாரணை வருமென்று, தயக்கப் படுவோர் நிரம்ப உண்டு. அதற்காக இரவு மனசாட்சியிடம் அழுவது சகஜம். அவ்வளவுதான் எங்கள் வீரம். அதனால் பின்னாளில் காவலர் வந்து தங்களை விசாரிக்கக் கூடும் என்பது பெரிய மனத்தடை.
3. கனாடியர்களுக்கு விசா தேவை இல்லை என்பது அறியாதிருப்பார்கள்.
4. உங்கள் தரகர் உங்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு எதையாவது மறைத்திருக்க நீங்கள் சொல்வது அவர்களுக்கு ஏதாவது ஐயமெழுப்பியிருக்கலாம்.

நிச்சயமாக நீங்கள் வரிவிளம்பரம் கொடுத்தால் ஆர்வமுள்ளவர்கள் நிறையபேர் வருவார்கள்.

உங்களுக்கு பெரிய பிரச்சினைகள் வந்ததால் சிறியவை துச்சமாகப் படுகின்றன. நாங்கள் இன்னும் காலனியாதிக்க hangoverஇலிருந்து இன்னும் விடுபடவில்லை.

இந்த விளக்கங்கள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருப்பின் தயவுசெய்து என்னை மன்னிக்கவும். எங்களது செய்கையை எண்ணி வெட்கப் படுகிறேன்.

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

யாருடைய குற்றவுணர்வையும் தூண்டுவதற்காக இதனை நான் எழுதவில்லை. புண்படுத்துவதும் எனது நோக்கமல்ல. 'இப்படி ஒரு விஷயம் இருக்கிறது. கவனியுங்கள்'என்று சொல்வதற்கே எழுதினேன். இதற்காக கவலைப்பட வேண்டியவர்கள் நீங்களல்ல. வெற்று வார்த்தைகளில் வீறு கொள்கிற, பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பாராமுகமாக இருக்கிற, ஈழப்பிரச்சனையைத் தங்கள் நலனுக்காக சொல்லளவில் தூக்கிப்பிடிக்கிற அரசியல்வாதிகளே குற்றவுணர்வு கொள்ளவேண்டும்.
இப்போது இறங்குமுகத்தில் இருந்தாலும் தன் பேச்சாற்றலால் ஈழத்தமிழர் பிரச்சனையை முரசறைந்து சொன்னவரான வை.கோ.,ஈழத்தவர்கள் எனது சகோதரர்கள் என்று செயலிலும் காட்டிய திரு.எம்.ஜி.இராமச்சந்திரன்,சுப.வீரபாண்டியன்,பழ.நெடுமாறன் ஐயா,கவிஞர் அறிவுமதி,எத்தனை உட்காரணங்கள் இருந்தபோதிலும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி 'இப்படி ஒரு மனுசங்க இருக்காங்க'என்று காட்டும் திருமாவளவன் இன்னும் எத்தனை எத்தனையோ அக்கறையுடைய மனிதர்களைக் கொண்டது இந்த மண். இதை நாங்கள் மறக்கவோ மறுதலிக்கவோ இயலாது.

இதுவொரு வருத்தம்.இதுவொரு கோபம். இதுவொரு ஆற்றாமை. இதுவொரு ஆதங்கம். இதுவொரு வகை வெளிப்பாடு. வடிகால். அவ்வளவுதான் சொல்லமுடியும்.

பங்காளி... said...

ம்ம்ம்ம்ம்.....

ரகுநந்தன் said...

//‘உலகத் தமிழர்களின் தலைவர்’என்று சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி//

எங்கட ஆக்கள் தமிழ்நாட்டில சேலை, நகை வாங்கி உறை பனியில் அகதியாய் அல்லலுற்ற காசை கரைக்க உப்பிடி பம்மாத்துக் காட்டுவாங்கள். என்னதான் போட்டு மிதிச்சாலும் எங்கட நாயள் சன் ரி.வி பாக்கிறத நிப்பாட்டாதுகள் எண்டு கருணாநிதிக்கு தெரியும். சரி நியாயமான போராட்டத்தை விட்டு ஓடித்தான் வந்து விட்டியள், சுரணை இருந்தா சன் ரி.வியை கட் பண்ணி விடட்டும் பாப்பம். இதுக்கு இன்னுமொரு நொண்டிச்சாட்டு வச்சிருக்கினம் "அம்மா தனிய வீட்டில இருக்கிறா பொழுது போகவேணும்" எண்டு.

டண்டணக்கா said...

அரசியல் சுழன்றடிக்கும் இவ்விசத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை, எங்கள் இயலாமையை...
/*நடுத்தெருவில் அம்மணமாய் நிற்பதுபோல் உணரவைக்கிறது பதிவு .*/
இதே உணர்வுதான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பணமென்றால் பிணமும் வாய்திறக்குமென்பாங்க ;அதுவும் பொய்திட்டுதா???

ஈழபாரதி said...

இந்தவீட்டுப்பிரசினை இன்னமும் தீராவில்லையா? மாறாதென்பது மாற்றங்கள் மட்டுமே என்பார்கள். அதை பொய்யாக்கிவிடும்போல் இருக்கிறதே இந்த வீட்டுப்பிரசினை.

ஜோ/Joe said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை .வருத்தமாக இருக்கிறது.

Anonymous said...

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=5769

unarvukal said...

தமிழ்நாட்டில் பணமென்றால் பிணமும் வாய்திறக்கும், காசாலை அடியுங்கள் தமிழ்நதி. இப்ப ஒரு கனேடியன் டொலர் 41 இந்தியன் ரூபாய், உங்களிடம் காசில்லாது விட்டாலும், கனேடியன் வங்கியொன்றில் கடனை எடுத்து, சென்னையில் ஒரு FLAT ஐ வாங்குங்கோ. உங்களுக்குத் தான் VIPs தெரியும் என்கிறீர்களே உங்களுக்குத் தெரியாததா? உதவி வேண்டுமானால் உணர்வுகள் களத்தை தொடர்பு கொள்ளுங்கள், நல்ல Loan officer இன் பெயர் தருகிறோம்.

அல்லது அண்ணன் லக்கிலுக்கின் உதவியை நாடுங்கள், :)) அவரின் வீட்டுக்குக் கிட்ட எங்காவது வீடு தேடித்தருவார். ஆனால் அங்கெல்லாம் வெள்ளம் வீட்டுக்குள் வந்திடுமாம், உங்களின் கட்டிலில் உங்களுக்கு முதல் பாம்புக்குட்டிகள் போய்ப்படுத்து விடுமாம் என்று தொலைக்காட்சியில் காட்டினார்கள் :)) அதிலும் பார்க்க வன்னியில் போய் இருக்கலாம்.

எதற்கும் பொறுத்திருங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழீழத்துக்கு வேலை தேடி நிச்சயமாக வருவார்கள், அப்போது பார்த்துக் கொள்வோம்.

தமிழ்நதி said...

'உணர்வுகள்'என்ற மனிதாபிமான உணர்வற்றவருக்கு,

சகமனிதரின் வேதனையை நக்கலும் நையாண்டியும் செய்யும் உங்களைப் போன்ற அற்ப குணமுடையவரிடமிருந்து நான் எந்த ஆலோசனையையும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் loan ஒழுங்கு செய்து தந்து வீடு எடுத்துப் போகுமளவிற்கு நாங்கள் தரம்தாழ்ந்து போகவுமில்லை. உங்கள் காழ்ப்புணர்ச்சி,நக்கல், நையாண்டி,பரஸ்பரம் சண்டை மூட்டல்,உங்கள் பக்கத்திற்கு வரவேண்டுமெனச் செய்யும் மலினமான விளம்பர உத்திகள்,சாதித்திமிர்,அறியாமை என்ற இருளிலிருந்து நீங்கள் முன்வைக்கும் குருட்டாம்போக்கிலான கருத்துக்கள், உங்களுக்கு நீங்களே போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள் வழியாக உங்களைப் பலமானவராகக் காட்டிக்கொள்ள முயலும் சின்னத்தனங்கள் எல்லாவற்றையும் உங்களோடு வைத்துக்கொண்டு சந்தோசமாக இருங்கள். எங்கள் பக்கத்திற்கெல்லாம் வந்து நீங்கள் பின்னூட்டமிட வேண்டுமென்று யாரும் உங்களைக் கைநீட்டி அழைக்கவில்லை.

லக்கிலுக் வீடு எடுத்துத் தந்தால் நாங்கள் போவதன் முன் பாம்புக்குட்டிகள் கட்டிலுக்குக் கீழே போய்ப் படுத்துவிடுமா....? பரவாயில்லை. அந்தப் பாம்புக்குட்டிகள் உங்களை விட விஷத்தில் குறைந்தனவாகத்தான் இருக்கும்.

'தமிழகத்துத் தமிழர்கள் வேலை தேடி தமிழீழத்துக்கு வருவார்கள்'என்ற ஆரூரனின் ஆரூடம் எதை முன்னிறுத்திச் சொல்லப்பட்டது என்பதை என்னால் உணரமுடிகிறது. ஈழத்தமிழர்களுக்கும் எமது சகோதரர்களான இந்தியத் தமிழர்களுக்கும் இடையில் சண்டை மூட்டிவிடும் நாரதர் வேலையை இன்றுடன் விட்டுவிடுங்கள். உங்களுக்கு வேண்டுமானால் அதற்கெல்லாம் நேரமும் மனமும் இருக்கலாம். எங்களுக்கு அப்படியான குணங்கள் கிடையாது. நாங்கள் யாவருடனும் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகிறோம். அரசியல்வாதிகள் இழைக்கும் தவறுகளுக்கு தமிழக மக்கள் காரணமாக மாட்டார்கள் என்பதை உங்கள் சிற்றறிவுக்குச் சொல்லிவைக்க விரும்புகிறேன்.

உங்கள் பெயரைப் பார்த்ததும் பின்னூட்டத்தை நிராகரிக்கவே நினைத்தேன். ஆனால்,உங்கள் அற்ப குணத்தை வேறெப்படி வெளிப்படுத்துவதென எனக்குத் தெரியவில்லை. சும்மா இருப்பதே இனி உமக்குச் சுகமான வேலை. இனி அனானி பெயரிலெல்லாம் வந்து பின்னூட்டமிடுவீர்(இட்டீர்)கேவலமான வார்த்தைகளைக் கொண்ட அஞ்சல்கள் உம்மிடமிருந்து வரும். ஆனால், அவையெல்லாம் பிரசுரிக்கப்பட மாட்டா என்பதை பணிவன்போடு அல்ல உறுதியோடு சொல்லிவைக்கிறேன். நல்லாயிரும் போம்!

RBGR said...

தோழி!
உங்கள் வேதனையை நன்றாகவே புரிந்து கொள்ளமுடிகிறது.

இதைத் தான் கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பிலும் நான் எடுத்து வைத்தேன்.

என்னையும் சேர்த்து எங்கள் கையாலாகாத தனத்தினை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறேன்.

ஒரு குறைந்த பட்ச உதவி கூட செய்ய இயலாத அளவிற்கு எனது (எங்களது) நிலைமக்கு காரணம்..நீங்கள் தமிழர்கள் என்ற அடிப்படை பாசம் கூட இல்லாமல் போக காரணம் ராஜிவ்காந்தி கொலையைக் காரணம் கூறலாம் சிலர்.
உண்மை என்ன என்பது அவரவர் மனசிற்கு தெரியும்...

வேதனைப் படுகிறேன்.


அரசியல் தீர்வுகள் மட்டும் தான் உங்களுக்கு விடிவு என்று காத்தீராமல் என்னாலனதை நிச்சயம் என்றாவது ...!! செய்வேன் தோழி..
.!

மன்னித்துக்கொள்ளுங்கள்.!!

லக்கிலுக் said...

நண்பர் உணர்வுகளின் பதிவுகள் மட்டுமல்ல, பின்னூட்டங்களும் நகைச்சுவையாகவே இருக்கின்றன.

எனினும் இது நகைச்சுவைப் பதிவல்லவே? :-(

ஜோ/Joe said...

ஈழத்தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையே சிண்டு முடிவதற்காக கேவலமான நடையில் இங்கே விஷம் கக்கியிருக்கும் உணர்வுகள் என்னும் பதிவருக்கும் என் வன்மையான கண்டனங்கள்.

Darren said...

மாற்றுங்கள்..மாற்றத்திற்காக காத்திருக்காதீர்கள்.

http://manamay.blogspot.com/2006/08/blog-post.html#links

Anonymous said...

நம் இனம் அழிக்கப்பட்டு வருவதை கண்டும் காணமல் இருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு போர் என்ற ஒன்றின் வலி தெரிந்தால் தான் ஏதாவது செய்வார்களோ?

எம்.ஜி.ஆரும், இந்திராகாந்தியும் இருந்திருக்கலாமோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு நிகழ்ச்சிகள் அரசியலில் நடைபெறுகின்றது. தமிழினத்தலைவர் தமிழ் இனத்திற்கு ஏதாவது செய்து தமிழினத்திற்கு தலைவராக இருப்பாரா? அல்லது ஜால்ராக்களின் வசனங்களில் மட்டும் தான் இருப்பாரா என்று தெரியவில்லை.

ஜோ/Joe said...

ஒரேயடியாக கருணாநிதியை குறை சொல்லும் கனவான்களே! நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ,மீண்டுமொருமுறை இலங்கைப் பிரச்சனையால் கருணாநிதி பதவியிழந்து ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்தால் நலமாக இருக்குமா உங்களுக்கு ?ஒரு புறம் கருணாநிதி ஈழத்தமிழரைப் பற்றி கவலைப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு .மறுபுறம் கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் குளிர்விட்டு போகும் ,வெளிப்படையான விடுதலைப்புலி ஆதரவு போராட்டங்களை கருணாநிதி கண்டுகொள்வதில்லை ,தமிழகத்தில் தீவிரவாதம் வளர விடுகிறார் என்ற குற்றச்சாட்டு .கருணாநிதி என்ன செய்ய வேண்டும் ? உங்களைப் போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டு ஜெயலலிதாவின் கையில் ஆட்சியை கொடுக்கும் நிலையை இங்குள்ள ஈழ எதிர்ப்பாளர்கள் கையில் தானாகவே கொடுக்க வேண்டும் என்பது தான் உங்கள் ஆசையா ஐயா! கருணாநிதி ஆட்சி போய் ஜெயலலிதா ஆட்சி வந்தால் உங்களுக்கு இனிக்குமா ?

Anonymous said...

ஜோ, நீங்கள் தவறாக எண்ணி விட்டீர்கள். கருணாநிதி கொடுக்கும் மறைமுக ஆதரவு சிங்கள தீவிரவாதிகளுக்கு தெரியாமல் இருப்பதால் ஒருவேளை அவர்கள் இவ்வளவு மூர்க்கமாக அழித்தல் தொழிலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புகள் உண்டே. நான் சமீபத்திய சென்னையில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு போராட்டத்தில் பங்கு கொண்டவன். 50பேர் தான் தேரினர். இதுவே அரசாங்க ஆதரவுடன் நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும். ராசபக்சே சற்று சிந்திப்பானல்லவா?

மறைமுக ஆதரவு சித்தாந்தம் உதவாது என்பதே என் கருத்து.

தமிழ்நதி said...

நண்பர்களே! இதை இத்துடன் விட்டுவிடுங்கள். பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற விரக்தியே மேலிடுகிறது. மூச்சுவிடுவதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன...சேடமிழுத்துக்கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் வாழ்வு. இனி ஓடுவதற்கோ ஒளிந்துகொள்வதற்கோ ஓரிடமும் இல்லாத ஏதிலிகள் ஆயினோம். ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்தாலொழிய எங்கள் நிலை மாறப்போவதில்லை.

வீணே அவர் பெரிதா...? இவர் மட்டும் என்ன கிழித்துவிட்டார் என்று பேசிக்கொண்டிருந்து என்ன செய்யப்போகிறோம். சொல்லவியலாத அயர்ச்சியே மேலிடுகிறது. எழுதக்கூட மனதில்லை.

கொழுவி said...

உணர்வுகள் களத்தில் விரைவில் உங்களைப் பத்தி வாந்தியெடுப்பார்கள். படித்துப் பயன் பெறுக. பெரும்பாலும் நதித் தமிழ் என்ற புனைபெயர் தான் உங்களுக்குப் பயன்படுத்துவார்கள்.

லக்கிலுக் said...

அக்கா!

யாரையாவது குற்றம் சொல்லக்கூடிய வகையில் கருத்து சொல்பவர்கள் தங்கள் சொந்த பெயரில் வந்தால் மட்டுமே வெளியிடுங்கள். அனானிமஸாக கருத்து சொல்பவர்களுக்கு சிண்டுமுடியும் நோக்கம் மட்டுமே இருக்க முடியுமே தவிர பிரச்சினையின் தீர்வில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கமுடியாது.

supersubra said...

இணையத்தில் சண்டை போடும் எந்த ஒரு கடவுளும் கடவுள் ஆதரிப்பாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஈழத்தின் நிலையை மாற்ற போவதில்லை. ஆனாலும் நான் இறை நம்பிக்கை உடையவன். அதனால் எந்த பெயரிட்டு அழைத்தாலும் அறியப்படுபவன் எவனோ அந்த ஒரு மாபெரும் சக்தியை என் மனதார இறைஞ்சுகிறேன். விரைவில் ஈழத்தில் அமைதி ஏற்படவேண்டும் என்று. என் வாழ் நாளில் ஈழத்தின் சுதந்திரத்தை கண்கொண்டு காணவேண்டும் (என் வயது 50) என் இனிய ஈழ சகோதரர்கள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளை விட ஒரு உன்னதமான சொர்க்கபுரியை உருவாக்குவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உண்டு. என் இளமைக்காலத்தில் ஈழத்திற்காக போராட தெரிந்தெடுக்கப்பட்டு பின் கடைசி நிமிடத்தில் பாதை மாறிப்போய் ஒரு சாதாரண தமிழனாய் வாழும் நிலை ஏற்பட்டது.

உங்கள் எதிர்காலம் கட்டாயம் பொற்காலமாய் விடியும்.

அற்புதன் said...

வணக்கம் தமிழ் நதி,

எனது பதிவில் பின்னூட்டமாக உங்கள் மின்னச்சல் முகவரியை இடுங்கள் , சென்னையில் எனக்குத் தெரிந்த சிலரின் தொலைபேசி இலக்கங்களை அனுப்புகிறேன், அவர்கள் நீங்கள் வீடு தேட உதவுவார்கள்.

ஜோவிற்கு,
விடுதலை புலிகளோ ஈழத் தமிழர்களோ இந்தியத் தேச நலங்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை ஏன் கலைஞ்சராலோ அல்லது உங்களாலோ சொல்ல முடியவில்லை.இந்திய இராணுவத் தலையீடு,ராஜீவ் காந்தி போன்ற சம்பவங்களின் பின் விடுதலைப் புலிகள் எந்த வகையிலாவது தமிழ் நாட்டில் எதாவது குழப்பங்களை விழைவித்திருக்கிறார்களா?
இந்திய தேசிய நலனுக்கு விடுதலைப் புலிகளால் எந்தக் குந்தகமும் வராத நிலையில் புலிகளை ஏன் பயங்கரவாதிகள் என்று இன்னும் தடை விதிருப்பான்.இதற்கு எதிராக அரசியல் நிலை எடுப்பதே கலஞர் தனது ஆட்ச்சியைத் தக்கவைப்பதற்கான நேர்மையான உண்மையான நிலைப்பாடாக இருக்க முடியும்.தமிழ் நாட்டு மக்கள் இந்தியர்கள்,அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எவ்வாறு இந்திய அரசோ ,கலஞ்சரோ முடிவுகளை எடுக்க முடியும்.

-/சுடலை மாடன்/- said...

பொதுவாக எந்த நாட்டிலும் நடுத்தர வர்க்கம் சுய வாழ்க்கையில் அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தினாலும், சமுதாய வாழ்க்கையில் வடிகட்டின முட்டாள்தனத்தையே பயன்படுத்தும். ஒரு சிறு சம்பவத்தை வைத்தோ அல்லது ஒரு பொய்யான வதந்தியை வைத்தோ அல்லது வெறும் மூடத்தனமான நம்பிக்கையின் அடிப்படையிலோ ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தையோ, மொழியினரையோ, சாதியினரையோ தங்களுடன் சேர்ந்து வாழ நிராகரிக்கும் இந்த நடுத்தர வர்க்கம். அதை எல்லா நாடுகளிலும் காண முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இத்தகைய எண்ணம் இருந்தாலும் அவற்றை தடுக்க சட்டங்கள் மூலம் வழி வகுக்கிறார்கள். இருப்பினும் வெள்ளையர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் கறுப்பர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுப்பதற்குச் சாக்குப் போக்குகள் அதிகம் சொல்வதுண்டு.

தமிழர்களுக்குள்ளே என்ன வேறுபாடு என்று கேட்கலாம்? அதைத்தான் பொய்யாகக் கட்டி எழுப்புவதற்கு சாத்திரங்களில் இருந்து சோ ராமசாமி போன்ற ஜந்துக்கள் வரை இருக்கின்றனவே.

உதாரணமாக 1984 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வீடு பார்க்கும் என் அனுபவத்தைச் சொல்கிறேன். தமிழக அரசு ஊழியருக்கான குடியிருப்பில் இருந்த எங்கள் குடும்பம், அப்பாவின் மறைவால் அதைக் காலி செய்ய வேண்டி வேறு வீடு பார்க்க நேர்ந்தது. தம்பி, தங்கையின் கல்லூரி, பள்ளிக்கு வசதியாக இருக்க வேண்டும் என்றெண்ணி தூத்துக்குடி புதுக்கிராமத்தில் வீடு தேட ஆரம்பித்தேன். அக்காலத்தில் பெரும்பாலும் பிராமணர்களும், சைவ வேளாளர்களுமே அங்கு வீடுகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர். அப்படியே வேறு சிலர் வீடுகளை வைத்திருந்தாலும், அவ்விரு சாதியினருக்கு மட்டுமே வாடகைக்கு விடுவர். முன்று மாதங்களாக எத்தனையோ வீடுகளைப் பார்த்தும் ஒன்று கூடக் கிட்டாமல் புதுக்கிராமத்தின் வெளிப் பகுதியான போல்டன் புரத்தில்தான் வீடு கிடைத்தது. என்ன சாதி, அசைவ உணவு உண்பீர்களா, அம்மா விதவையாகி ஓராண்டு கூட முடியவில்லையே என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. ஒரு நல்ல விசயம் - இப்படிப் பட்ட அனுபவங்கள் நல்ல பாடத்தைத் தந்தன - என்னுள் இருந்த சாதி, மூட நம்பிக்கை எல்லாவற்றையும் சிதறடித்தவை.

எனவே ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளேயே இப்படியொரு மூட நம்பிக்கையையும், சாதியையும் புகுத்தி உடன் வாழத்தகுதியில்லாதவர்களாக எண்ண வைக்கிறது. ஈழத்தமிழர்கள் விசயத்தில் இந்திய அரசின் கைக்கூலிகளாக இருந்த போக்கத்த சில போராளி இயக்கத்தினர் ஈடுபட்ட சமூகக் குற்றங்களை ஊதிப் பெருக்கின துக்ளக், தின மலர் போன்ற தமிழர் விரோத சாதிவெறிப் பத்திரிகைகள். அதன் மூலம் அவை கட்டமைக்க விரும்பியது ஈழத்தமிழர் வெறுப்புச் சூழல். நடுத்தர வர்க்கம் அதை நம்பி தங்கள் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

ஈழத்தமிழர் என்றில்லாமல் எந்த ஒரு பிரிவினருக்கும் வீடு வாடகை கொடுப்பதில் பாரபட்சம் கட்டுவதைத் தடுக்கச் சட்டம் கொண்டு வரலாம். அதையெல்லாம் செய்ய கலைஞர் அரசுக்கு ஏது நேரம்? வைக்கோ கட்சியை உடைத்து அவர் ஈழத்தமிழருக்கு ஏதுமே செய்து விடக் கூடாது என்று திட்டமிடுவதிலேயே அவர் சிந்தனை தேங்கிக் கிடக்கிறது.

உங்களுடைய வலியையும் வேதனையையும் பல ஆண்டுகளாக அறிந்து வந்துள்ள சில தமிழகத்துத் தமிழர்கள் இதற்காக வெட்கப் படுவதைத்தவிர வேறெதுவும் இன்றையச் சூழலில் செய்ய முடிவதில்லை. அப்படிப்பட்ட சூழலை உருவாக்குவதில் ஈழத்தமிழருக்கு எதிராகச் செயல்படும் ஆதிக்க வர்க்கத்தினர் வெற்றியடைந்து விட்டார்கள். அதற்குத் துணை போயினர் எங்களது அறிவு ஜீவிகளும், அரசியல்வாதிகளும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

இது தொடர்பான உங்கள் அக்கறைக்கும் ஈழத்தமிழர்கள்பால் நீங்கள் வெளிப்படுத்தும் அன்புக்கும் நன்றி.
கொழுவி,உணர்வுகள் எனது பெயரை வைத்து ஒரு பதிவு எழுதிக் கூட்டம் சேர்ப்பார் என்பதை நான் அறிவேன். சேற்றில் புரண்டுவிட்டு பன்றி எதிர்வருவோருடனெல்லாம் உரசித்தான் ஆவேன் என்று அழிச்சாட்டியம் பண்ணினால் எப்போதும் எல்லோரும் ஒதுங்கிப் போகவியலாது.அப்படி நாமெல்லோருமே ஒதுங்கி நடந்தால் தான் மட்டுமே பலவான் என்பதான மமதையுடன் அது இறுமாந்து திரியும். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை காப்பதென்பது எமது சுயமதிப்பை நாமே அழித்துக்கொள்வதிலேயே கொண்டுபோய்விடும்.

லக்கிலுக்,நீங்கள் சொல்வது சரி.இந்தப் பதிவிற்கு வரும் அனானிப் பின்னூட்டங்களை இனிப் போடுவதில்லை என்று நினைத்திருக்கிறேன்.

சுப்பர்சுப்ரா!உங்கள் கடவுள் நம்பிக்கையேனும் எங்களவரைக் காப்பாற்றட்டும்.

அற்புதன்! உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால்,இணையத்தின் மூலம் நான் பெற்ற நண்பர்களிடமிருந்து இந்த வீடு தொடர்பாக எந்த உதவியையும் ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். ஏனென்றால் எழுத்தை எனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துவதில்லை என்பதை ஓரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.(இவ பெரிய இவ என்றெல்லாம் நினைக்காதீர்கள்)எனது சிக்கலிலிருந்து நான் எப்படியும் மீண்டுவிடுவேன். அந்த தன்னம்பிக்கை என்னிடம் இருக்கிறது. எனது கணவரும் கனடாவில் இருந்தபடி முயற்சித்துக்கொண்டிருக்கிறார். மீண்டும் அக்கறைக்கு நன்றி.

சொ.சங்கரபாண்டி, ஈழத்தமிழர்களது இந்த நிராதரவான நிலைக்கு நீங்கள் சொன்ன காரணங்களே அடிப்படை. நல்ல விரிவான தெளிவான சிந்தனைகளை முன்வைத்திருக்கிறீர்கள். நாடு,இனம்,மொழி என்பதன் அடிப்படையில் எல்லாம் மனிதர்களைத் தரம் பிரித்துவிடமுடியாது. எல்லா இனங்களிலும் மதங்களிலும் எல்லாவிதமான குணங்களையும் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது இந்தப் பக்கத்திற்கு வந்த பிற்பாடு ஒன்றைக் கவனித்திருப்பீர்கள். என்மீதுள்ள தனது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் எனக்கும் தமிழக நண்பர்களுக்கும் இடையில் சிண்டு முடிந்துவிட உணர்வுகள் என்ற பதிவாளர் மும்முரமாக இறங்கிவிட்டிருப்பதை. அவர் ஒரு ஈழத்தமிழரே. ஒரு இனத்துக்கே பொதுவான பிரச்சனையொன்றை இந்தப் பதிவின் மூலம் நான் இட, இதை தனது நையாண்டிக் களமாக அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

நான் மதிக்கும் நண்பர்களில் ஒருவர் அவருடைய பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்: "நீங்கள் இத்தகையோருடன் தான் கவனமாக இருக்கவேண்டும். இவர்கள்தான் முக்கியமான இனவிரோதிகள். நேரடியான எதிரியைக் குறித்துக்கூட நீங்கள் இந்தளவிற்கு அஞ்சவேண்டியதில்லை. தமிழகத்துத் தமிழர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அனுதாபத்தையும் துடைத்தெறிந்து 'ஈழத்தமிழர்கள் என்றால் வெறுக்கப்பட வேண்டியவர்கள்'என்ற எண்ணத்தை இருசாராருக்கும் இடையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல மறைமுகமாக ஊட்டுவதன் மூலம் எமக்குச் சாதகமற்ற ஒரு சூழலைத் தமிழகத்தில் இத்தகையோரால் ஏற்படுத்த முடியும்."என்றார். அவர் நல்லதொரு சிந்தனையாளர். எனது நெடுநாள் நண்பர். நான் அவர் சொல்வதை முழுமையாக நம்புகிறேன்.

ஏனைய நண்பர்களோடும் பேசவேண்டும். ஆனால், பின்னூட்டமே ஒரு பதிவாகிவிடும் என்பதால் கடைசியாக வந்து பேசியவர்களுக்குப் பதிலளித்திருக்கிறேன்.

Unknown said...

துன்பப் படுபடுவதைப் போலவே அந்த துன்பத்தை நீக்க எதுவும் செய்ய முடியாத இயலாமையும் மிகத் துயரமானது…
நமது துயரங்கள் விரைவில் நீங்கட்டும் என்று வேண்டுவதைத் தவிர வேறெதுவும் எனக்கு சொல்லத் தெரியவில்லை :-(

பங்காளி... said...

இந்த பதிவில் பின்னூட்டமிட வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தேன்....ம்ம்ம்ம்ம்

பின்னூட்டங்களில் உங்கள் மனோதிடத்தினை பார்த்தபின் சொல்கிறேன்....தமிழ்நதி...என் பார்வையில் நீங்கள் இப்போது இன்னும் கம்பீரமான உயரத்தில் இருக்கிறீர்கள்.

எனக்கு ஈழப்பிரச்சினைகளில் தமிழர்தரப்பு பிரதிநிதிகளின் செயல்திறம் மீது சலிப்பும் அவநம்பிக்கையும் இருந்த போதிலும்....உங்களையொத்தவர்களின் இழப்புகளுக்கும், ஏக்கங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் வகையில் அந்த மண்ணில் புதுவிடியல் பிறக்க எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருளட்டும்...ம்ம்ம்ம்ம்

வாழ்த்துக்கள் தோழி...

ஜோ/Joe said...

அற்புதன்,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என சத்தியமாக எனக்கு புரியவில்லை .ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் .ஈழத்தமிழர் மேல் பரிவும் பாசமும் கொண்டு ,எம் சகோதரர்களுக்கு விடிவு காலம் வந்து விடாதா என ஏங்கும் கோடிக்கணக்கான தமிழக மானமுள்ள தமிழர்களில் நானும் ஒருவன்.

Anonymous said...

தமிழக மக்கள் இனிமையானவர்கள். பி.பி.சி தமிழோசை, துக்ளக் போன்ற சில ஊடகங்கள்‌ ஈழத்தமிழருக்கு எதிராக பரப்புரை செய்கின்றன. ராஜிவ் காந்தியின் மரணம் பெரிதளவில் பாதித்ததை புரிந்துகொள்ளவேண்டும்.
இந்திரா காந்தி, மஹாத்மா காந்தி ஆகியோரை இந்தியர்கள்தான் சுட்டார்கள்.குற்றவாளிகள் மரண தண்டனை மூலம் தண்டிக்கப்பட்டார்கள்.
உங்க‌ள் வீட்டுப் பிள்ளை பெரிய த‌வ‌று செய்தால் த‌ண்டிப்பீர்க‌ள். விர‌ட்ட‌ முடியுமா?
ஆனால் அதே த‌வ‌றை வேறு ஒரு வீட்டுப் பிள்ளை செய்தால் .......
இதுதான் வேறுபாடு.
இதுவரை ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கூட மரணதண்டனை
அளிக்கப்படவில்லை.

தமிழக மக்கள் ஈழத்தமிழர்களை வெறுக்கவில்லை. ஆனால் நெருங்கி உறவாட அஞ்சுகின்றார்கள் என்பது உண்மைதான்.
அதற்கு காவற்துறையின் கெடுபிடி ஒரு காரணமாக இருக்கலாம். வீடு மாத்திரமல்ல, ஹோட்டல் நிர்வாகம் கூட ஈழத்தமிழருக்கு றூம் தர மறுப்பதை
அறிகின்றோம். இது கொடுமைதான்.

கலைஞரைக் குறைகூறுவது தவறு. ஈழத்தமிழருக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர். இத்தனைக்கும் எம்.ஜீ.ஆர் அவர்களை நம்பி
கலைஞர் முன்வந்து செய்த உதவிகளை புலிகள் நிராகரித்தார்கள்.


முடியுமான‌வ‌ரை ஈழ‌‍‍ ‍ த‌மிழ‌க‌ உற‌வு வ‌ள‌ர‌ அனைவ‌ரும் பாடுப‌டுவோம்.

சோமி said...

.............................ம்

எங்களுகென்று ஒரு குடிசையாவது சொந்தமாக வேண்டுமென்று என் அம்மா அடிக்கடி சொல்வார்......என்கள் உறவுக்காரர்கள் முதல் நான் வரை பலமுறை அழைத்தும் தன் சொந்த மண்னை விட்டு வரமாட்டேன் என்னும் அம்மாவின் பதில் உங்கள் பதிவைப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது. அரை 150 ரூபாய்க்கு வங்கினாலும் களத்தின்ன் மண் அவ்ருக்கான நிறைவைத் தருகிறது என இன்றிரவு தொலபேசி வழியே அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்....சாவுக்கும் வாழ்வுக்கும் மிடையிலான எமது போராட்டத்தில் சிலர் வெளிவிடும் ஏப்பன்ம்க்களுக்கு பதில் சொல்லி வேதனையை இன்னும் தீவிரப் படுத்தாதீர்கள்.

தமிழகச் சகோதரங்கள் எப்போதும் எங்களைக் கைவிட்டு விடமாட்டார்கள்.ஏனெனில் அவர்கள் எங்களின் உணர்வுள்ள இரத்தம்.

அற்புதன் said...

ஜோ அவசரத்தில் அலுவலகத்தில் இருந்து எழுதியதால் விளக்கம் குறைவாக இருக்கலாம். நான் சொல்ல வந்தது, விடுதலைப் புலிகள் ஈழத்தில் விடுதலை வேண்டியே போராடுகிறார்கள்,அவர்கள் தமிழ் நாட்டில் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதில்லை.அவர்கள் இந்திய நலன்ங்களுக்கு எதிராகவும் செயற்படுவதும் இல்லை.அப்படி இருக்க ஏன் அவர்கள் இன்னும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்க வேண்டும்?
இன்னலுறும் மக்களுக்காகப் போராடும் ஒரு இயக்கத்தை ஏன் பயங்கரவாத இயக்கமாக இன்னும் தடை செய்து வைத்திருப்பான்? இன்னும் ஏன் விடுதலைப் புலிகள் என்று பூச்சாண்டி காட்டி தங்கள் சொந்த அரசியலை தமிழ் நாட்டின் அரசியற் தலைவர்கள் நாடத்திக் கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் எல்லோரும் சொல்வதைப்போல் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் எப்படி உங்கள் கட்சிகளும் பத்திரிகைகளும் அரசும் இயங்க முடியும்?

கலைஞ்சரின் அண்மைய அறிக்கை, நான் மேற்குறிப்பிட்ட உண்மைகளைப் பிரதிபலிக்காமல், பல உண்மைக்குப் புறம்பான விடயங்க்களை கூறி இருந்தது.ஏன் கலைஞரால் புலிகள் இந்திய நலனுக்கு எதிரானவர்கள் இல்லை, அவர்கள் இன்னலுறும் தமிழ் மக்களை ஈழத்தில் காப்பதற்காகவே போராடுகிறார்கள் என்று கூற முடியாது இருக்கிறது.எங்கோ இருக்கும் ஜேர்மனியும், நோர்வேயும் தமிழ் மக்களுகாகக் குரல் எழுப்பும் போது,அக்கரையில் இருக்கும் உங்களால் மனிதர்கள் எங்கிற அடிப்படையில் கூட குரல் எழுப்ப முடியாது இருப்பது எதனால்?

கிந்து ராமும்,சோவும் அவ்வளவு பலமானவார்களா என்ன?உண்மையாகவே மனித நேயம் அங்குள்ள தலைவர்களிடமும்,பத்திரிகைகளிடமும் இருக்கிறதா?

யாழினி அத்தன் said...

தமிழ்நதி அவர்களே,

உங்கள் பதிவைப் முழுவதுமாகப் படித்தேன். இங்கே நான் பதிக்கும் கருத்துக்கள் என் சொந்தக் கருத்துகள் மட்டுமே. சில ஆண்டுகள் ஜெர்மனியில் ஒரு விஞ்ஞானியாக பணியாற்றிய போது நிறைய ஈழத் தமிழர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. எல்லா சாரர் மனிதர்களுடனும் பழகியிருக்கும் வாய்ப்பும் கிட்டியது. சில அன்பான மனிதர்களைப் பார்த்த போதெல்லாம் என் கண்கள் கலங்கியதுண்டு. என் சக நண்பர் ஒருவர் (ஈரோட்டைச் சேர்ந்தவர்) புதிதாக ஜெர்மனியினுள் நுழையும் அகதிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்ற, எதிர்கொண்ட நிகழ்ச்சிகளை என்னிடம் விவரிக்கும் போது மனது சற்றே கணமான உணர்வுகள் பல முறை ஏற்பட்டதுண்டு. தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த கொடுமை நிலையை எண்ணி மிகவும் வேதனை அடைந்திருக்கிறேன்.அந்த வகையில் என்னால் இங்கே பிரதிபலிக்கும் உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

முதலில் உங்கள் வீட்டுப் பிரச்சினைக்கு சீக்கிரம் ஒரு solution கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கிறேன்.


பொதுவாகவே, 15 வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு தமிழுணர்வு எழுச்சி தமிழ்நாட்டிலே இப்போது குறைந்துவிட்டது என்பதே என் கருத்து. உதாரணமாக, கர்நாடகாவில் நடக்கும் காவேரி பிரச்சினைக்கு, தமிழகத்தில் இதுவரை என்ன பெரிய ஆர்ப்பாட்டத்தைக் கண்டோம். பெங்களூரில் நான் காலம் கொட்டிய நாட்களில் (1991 period), கர்நாடக தமிழர்கள் பட்ட கஷ்டங்களை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். உண்மையில் சொல்லப் போனால், இலங்கைத் தமிழர் பிர்ச்சினை அரசியல் தலைவர்களின் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இல்லாதது ஒரு unfortunate situation. வீட்டில் முதல் நாள் கணவர் பிரச்சினை செய்தால், அது serious ஆன பிரச்சினையாக இருக்கும். அதுவே தினமும் நடக்கும் போது, அந்த பிரச்சினையின் வலு குறைந்து அது ஒரு பிர்ச்சினை மாதிரியே தெரியாமல் போய்விடும். கிட்டத்தட்ட தமிழக மக்களுக்கு ஈழத்தமிழர்களின் மீதுள்ள ஈடுபாடு இது மாதிரிதான் ஆகிவிட்டது. போதாக்குறைக்கு, தமிழர்களின் உணர்வுகளை அன்றாடம் கொன்று தின்று கொண்ட்டிருக்கும் திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும். இதற்கு நடுவிலும் பல நல்ல, உணர்வுகளுள்ள தனி மனிதர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனக்கு இன்னும் காலத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஒரு நல்ல காலம் பிறக்கும் முன் transition period-ல் நிறைய பேர் சிக்கிக் கொண்டு, கவலைப்பட்டு, கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுவதை பல முறை வரலாற்றில் படித்திருக்கிறோம். இலங்கைப் பிர்ச்சினையும் அப்படி ஒரு கால கட்டத்தில் தான் இருக்கிறது என்பது என் கருத்து. உங்களைப் போன்ற பல நல்ல தமிழர்களின் suffering களுக்கு வரலாறு ஒரு நல்ல பதில் வைத்திருக்கும் என்பது என் அசையா நம்பிக்கை. நான் உங்களுக்கு ஆறுதல் கூறுவதை வீட, ஒரு சக தமிழனாக எல்லாம் வல்ல இறைவனிடம் உங்கள் நல்ல எதிர்காலத்துக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்.


ஈழத்தமிழர்களின் மீது இந்தியத் தமிழர்களின் பார்வை எப்படி?

யாழினி அத்தன் said...

"ஈழத்தமிழர்களின் மீது இந்தியத் தமிழர்களின் பார்வை எப்படி?"

மேற்கண்டது தவறுதலாக பதிவானது. பிழைக்கு மன்னிக்கவும்

thiagu1973 said...

அன்புள்ள கவிதாயினி தமிழ்நதிக்கு ,

உங்கள் அழகான கவிதைகளை வாசித்துகொண்டு இருக்கையில் இந்த பதிவை படித்தேன் .

மிகவும் வருத்தமா இருக்கு , உங்களுக்கு நாங்கள் இந்த உதவிகூட செய்யாம இருக்கிறோம் என்ற இயலாமை .

போலீஸ் விசாரணைக்கு பயப்படும் சுயநலம்வாதம்தான் .

வீடு விட்டு அப்படி எத்தனை பேர் போலீஸ் விசாரனைக்கு போனாங்கன்னு சொல்ல சொல்லுங்க
சொல்ல முடியாது .

இதான் இதான் (எங்கள் தமிழ்நாட்டின் ) வீரம்

Thamizhan said...

மிக்க வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.பெரும்பாலானத் தமிழர்கள் ஆதரவாளர்கள்தான்.ஆனால் அதை வெளியேக் காட்டிக் கொள்பவர்கள் குறைவு.அதிலேயும் பணக்காரர்களிடம் மிகக் குறைவு.தமிழகத்தில் நடந்த பெரும்பாலான திருட்டு,கொலை,குற்றங்களைப் புலிகளின் மீது பல காரணங்களுக்காகச் சாத்தி ஒரு அச்சத்தை உண்டாக்கிவிட்டனர்.(போலிசே செய்த திருட்டுக்களையும்).நமக்கு வம்பு வேண்டாம் என்பதே வாழ்க்கையாகிவிட்டது.
இருந்தாலும் இன்னும் பல தமிழர்கள் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.அவர்களைத் தொடர்பு கொண்டு இம்மாதிரி உள்ளவர்கட்கு உதவி செய்யும் அமைப்பை உண்டாக்க த் தமிழன்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.
காலத்தால் செய்த உதவியாக இதைச் செய்யும் வழி உள்ளவர்கள் செய்திட வேண்டுகிறேன்,தமிழகமெங்கும்.