3.09.2007
Tweet | |||||
சுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்
இந்தச் சுடர் சுற்றிச் சுற்றி வரும்போதே அது போகுமிடமெல்லாம் பயம் கலந்த கண்களால் தொடர்ந்துகொண்டிருந்தேன். ‘எங்கே என்னிடம் தந்துவிடுவார்களோ…’என்று உள்ளுக்குள் பதட்டமாகவே இருந்தது. கடைசியில் பயந்தபடி நிகழ்ந்துவிட்டது. ‘பாசத்திற்குரிய சகோதரி’என்று விளித்தபடி சுடரை பொன்ஸ் என்னிடம் நீட்டியபோது, இடமும் வலதுமாகத் தலையாட்டவே விரும்பினேன். பொன்ஸ் ‘சகோதரி’என்று சொல்லிய சொல்லின் ரீங்காரம் பின்னணியில் ஒலிக்க என்னையறியாமலே மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிவிட்டேன். என்னாலான வரை ஒப்பேற்றியிருக்கிறேன். வெறுப்பேற்றியிருக்கிறேனா என்று நீங்கள்தான் பார்த்துச் சொல்லவேண்டும்.
1. நீங்கள் வந்த புதிதில் சென்னையை எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். இன்றைக்கு சென்னையில் முக்கியமான தேவையாக, அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டுக்கான பணியாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?
வேறொரு நாட்டிலிருந்து வந்தவள் என்பதன் அடிப்படையில் எனது பார்வை வித்தியாசமாக இருக்கும் என்பதனாலேயே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். (இல்லாவிட்டால் நானென்ன பொதுப்பணித் துறை அமைச்சரா?) பொன்ஸ்! சுடரைத் தந்த உங்கள் அனுமதியுடன் ‘அடுத்து செய்யவேண்டிய’என்ற வார்த்தையைக் கொஞ்சம் மறந்துவிட்டு இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கலாமென எண்ணுகிறேன். ‘அடுத்து’என்று வரும்போது ‘உடனடி’என்று பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது. உடனடி மாற்றம் என்பது வளர்முக நாடொன்றில் அமையப்பெற்ற நகரமொன்றில் சாத்தியப்படுமென்பது கண்விழித்தபடி காணும் கனவுதான். அதனால், ஒரு தொலைநோக்கில் சீரமைக்கப்பட வேண்டிய, விழிகளை உறுத்திய சில விஷயங்களைத் தொட்டுச் செ(சொ)ல்லலாமென்றிருக்கிறேன்.
-மக்களிடையிலான ஏற்றத்தாழ்வுகள்:இது எங்கேயும் உள்ளதுதான் என்றபோதிலும், சென்னையில் இந்தச் சமத்துவமின்மை என்பது மனம் கனக்க வைப்பதாக இருக்கிறது. இன்னும் விரித்துக் கூறினால், ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மலைக்க வைப்பதாக இருக்கிறது. ஒரு நேர உணவுக்கே வழியில்லாமல் விழிகளில் பசி மிதக்க அலையும் நடைபாதைவாசிகளை,பிச்சைக்காரர்களை,குழந்தைகளைப் பார்க்கும்போது-நான் மிகைப்படுத்திக் கூறவில்லை-நியாயமற்ற இந்த உலகத்தைக் கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருப்பதை விட செத்துப் போய்விடலாம் போல தோன்றியிருக்கிறது. இது ஒரு உணர்ச்சியின்பாற்பட்ட மனோநிலை என்றெனக்குத் தெரிகிறது. ஆனால், ‘ச்சே!என்ன உலகமிது!’என்ற கசப்புணர்வு ஒவ்வொரு தடவையும் வீதியால் போய்வரும்போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தனியொரு மனிதரால் இந்த சமத்துவமற்ற சமூகக் கட்டமைப்பை மாற்றியமைத்துவிட இயலாது. அடிப்படையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களாலேயே அது சாத்தியப்படும். இப்போது சென்னைக்கு வேண்டியது, அமெரிக்காவுக்கு மென்பொருள் தயாரித்துக்கொடுப்பதல்ல - அடித்தட்டு மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழிசெய்வதுதான். இந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் ‘பசி… பசி’என்று வீதிகளில் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கையில், ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து பேசி கோடியைப் பல்கோடிகளாகப் பெருக்க வழிசமைத்துவிட்ட திருப்தியுடன், ஐந்து நட்சத்திர வகையறா உணவுகளை மிகச் சிரமப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு, மேலதிகமாக நெய்யொழுகும் பண்டங்களை ஒரு கடி கடித்தபின் குப்பைத் தொட்டிகளில் எறிந்துகொண்டிருக்கிறது தொந்தி பெருத்தவர்களின் வர்க்கம் ஒன்று.
இதேபோல, முதியோர் இல்லங்களைக் கடக்கும்போது இருண்ட பின்னணியில் தெரியும், சுருக்கம் நிறைந்த, நம்பிக்கை இழந்த அந்த முகங்களைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. தம் குழந்தைகளை, இந்த நாட்டை வளர்த்தவர்கள் அவர்கள். மனிதம்,அன்பு,தாய்மை என்ற பதங்களெல்லாம் வெற்று வார்த்தைகள்தானா…? ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் கருணையுடையவனாக-கருணையுடையவளாக இருந்தால் வயோதிபர்களுக்கு ஏனிந்த நிலை?
தெருக்களில் துரத்தி வந்து கையேந்தும், பலநாட்கள் எண்ணெய் கண்டிராத தலையுடைய குழந்தைகள் இந்த நகரத்தில் குற்றவுணர்வைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.
ஒரு நகரத்தின் மாற்றமும் முன்னேற்றமும் அடித்தட்டு மக்களிலிருந்தே தொடங்கப்படல் வேண்டும். அதுதான் இப்போதைய மற்றும் எப்போதைய தேவையும்கூட.
கழிப்பறை வசதிகள்: ‘பல்கனி’யிலிருந்து வெளியில் பார்க்கும்போது கண்களை அடிக்கடி தாழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அருகிலிருக்கும் வெறும் நிலத்தின்(எசமாடனில் வந்த நிலம்) சுற்றுமதிலை எப்படியாவது சாய்த்துவிடக் கங்கணங் கட்டிக் கொண்டவர்களைப் போல இடைவிடாமல் ‘பெய்து’கொண்டிருக்கிறார்கள். வீதியோரங்களில் இருக்கும் அநேக சுவர்களுக்கு இதே நிலைதான். ஆங்காங்கே பொதுக் கழிப்பறைகளைக் காணமுடிகிறது. அவையெல்லாம் ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’என்ற கதைதான். சுற்றுச்சூழலின் சுத்தம்,சுகாதாரம் போன்றன எத்தகு முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஊட்டப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதைப் போல, வீடுகள் கட்டப்படும்போது அவை மக்கள் வாழத் தகுதியானவையா… எனப் பார்த்து அனுமதி வழங்கப்படுவதுபோல இங்கேயும் கொண்டுவரப்படல் வேண்டும்.(இங்கேயும் இருக்குமென்றுதான் நினைக்கிறேன்) ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை மட்டும் இருந்தால் போதாது… அந்தச் சமையலறையில் சமைத்துச் சாப்பிட்டதில் செரித்தது போக எஞ்சியவற்றை ‘வெளியனுப்பும்’கழிப்பறைகள் அவசியம்.
இத்தகைய சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாமல், ‘மந்திரவாதிகளும் பிச்சைக்காரர்களும் அசுத்தமும் நிறைந்த நகரம்தான் சென்னை’ என்று இங்கு வந்து போகும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகள் எழுதுகிறார்களே என்று சத்தமிடுவதில் அர்த்தமில்லை.
போக்குவரத்து நெரிசல்: சென்னை போன்றதொரு மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கமுடியாததே. எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, சனத்தொகைப் பெருக்கத்திற்கமைய பிரதான வீதிகளை விசாலிப்பதற்கமைய சென்னை வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்றெனக்குத் தெரியவில்லை. மேலதிகமாக சில உப சாலைகளை இணைத்துக்கொள்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். பெரும்பாலும் வாகனப் பெருக்கத்திற்கேற்ப சாலைகளைப் பெருக்குவதென்பது சாத்தியமில்லை. ஏதோவொரு கட்டத்தில் அந்த நடவடிக்கையும் மேலே நகரமுடியாத தேக்கநிலைக்கே கொண்டுபோய்விடும். ஆனால்,மாநகரமொன்றை உயிர்பெற்றசைய வைக்க இரத்த நாளங்களான சாலை வசதிகள் கவனிக்கப்படுதல் முக்கியம் என்பதை நான் மட்டுமல்ல நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
பொழுதுபோக்கு வசதிகள்: ஒருநாள் காலையில் கண் விழித்து எழுந்து பார்க்கும்போது, திரையரங்குகளும், கடற்கரையும் மறைந்துவிட்டால் சென்னையின் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இவ்விரண்டையும் தவிர்த்துப் பார்த்தால் மத்தியதர வர்க்க, அடித்தட்டு மக்களுக்கு வேறென்ன பொழுதுபோக்கு வசதிகள் இருக்கின்றன? டிஸ்கோதே,ஆடம்பரமான கோப்பிக் கடைகள் இவையெல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினருக்குரியவை. ஒரு சராசரி சென்னைவாசியின் தொய்ந்த சட்டைப்பை, இந்த இடங்களை காலடி எடுத்துவைக்கவே அஞ்சும் புனித இடங்களாக்கிவிட்டிருக்கிறது. குழந்தைகள் வி.ஜி.பி.யையும் எம்.ஜி.எம். ஐயும் வள்ளுவர் கோட்டத்தையும் எத்தனை தடவைதான் பார்ப்பார்கள்?
இயந்திரமயமாகிக்கொண்டிருக்கும் இந்த உலகம் மனிதனின் மெல்லுணர்வுகளை நசுக்குகிறது. அவனது ஈரத்தன்மையை உறிஞ்சிவிடுகிறது. மனிதன் மனிதனாக இயங்கவேண்டுமெனில், பொழுதுபோக்கு வசதிகள் அவசியம். சென்னையில் அவற்றின் போதாமைதான் அதிகரித்துவரும் குற்றங்களுக்கு மறைமுகமானதொரு காரணமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால்,பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்த மேலைத்தேய நாடுகளிலும் குற்றச்செயல்கள் மலிந்து வருகின்றனவே அதற்கென்ன காரணம்… என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
2.தமிழக தொலைக்காட்சிகளில் நீங்கள் தொடர்ந்து பார்க்கும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?
ஒரு நிகழ்ச்சியையும் தொடர்ந்து பார்ப்பதில்லை. இரவு உணவின் பின், வரவேற்பறையில் சிறிது நேரத்தைக் கழிக்க நேரிடுகையில் ‘கோலங்களில்’எப்போதும் அடைமழையாய் அழுதுகொண்டிருக்கும் தேவயானியையும், அழுது எரிச்சலூட்டாத ‘கம்பீரமான’ அரசி ராதிகாவையும் எப்போதாவது பார்ப்பதுண்டு.
‘யாரு மனசுல யாரு… அவங்களுக்கு என்ன பேரு…’என மலையாள வாடையுடன் தமிழ் பேசும் ப்ரதீப் நடத்தும் ‘கிரான்ட் மாஸ்ரர்’ஐப் பார்க்கப் பிடிக்கும். அதேபோல ‘க்ரோர்பதி’பொது அறிவு நிகழ்ச்சியும் பிடிக்கும். ‘தங்க வேட்டை’என்றொரு நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் நடத்திக்கொண்டிருந்தவரை, அவருடைய வியப்புக் கலந்த அழகான புன்னகைக்காகவும், என்னிடம் கேட்கப்படாத கேள்விகளுக்கு விழுந்தடித்துக்கொண்டு பதிலளிப்பதற்காகவும்(தவறான விடை சொல்லி சக பார்வையாளர் மத்தியில் மூக்குடைபடவும் நேர்ந்திருக்கிறது)பிடித்திருந்தது. இப்போது ரம்யா கிருஷ்ணன் நடத்துவதில்லை. நானும் பார்ப்பதில்லை.
‘கோப்பி வித் அனு’என்றொரு நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பேன். பிரபலங்களை நேர்காணல் செய்யும்போது அவர்களின் ஆழத்திலிருந்து பதில்களை வெளிக்கொணரத்தகு புத்திசாலித்தனமான கேள்விகளும், ஏதோ நெடுநாள் பழகியதுபோன்றதொரு நட்பில் கனிந்த முகமும், பார்வையாளருக்கும் நிகழ்ச்சிக்கும் இடையில் சரியான முறையில் தொடர்பைப் பேணி தன்னோடு பிணைத்துவைத்திருக்கும் தன்மையும் மிகப் பிடிக்கும். ஆகவே அனுதான் பிடிக்கும்.
3.பெண்களுக்கான விழிப்புணர்வூட்ட சிறந்த ஊடகம் எது என்று நினைக்கிறீர்கள்?
வீட்டில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் பெண்களால் தொலைக்காட்சியை ஒரே இடத்தில் இருந்து பார்க்கவியலாது. அப்படி நேரம் ஒதுக்கிப் பார்த்தாலும் கண்ணீரும் கம்பலையுமான நாடகங்களைத் தாண்டிப் போக பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. பத்திரிகைகள் தமது தர்மத்தை மறந்து வணிகப்பாதையில் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றன. ‘காலையில் கன்னிப்பெண்ணைக் கட்டியணைத்து சரமாரியாக முத்தமிட்ட பால்காரன் கைது’ என்ற விதமான ‘திகில்’, ‘பணால்’, ‘திவால்’ செய்திகளைத் தாங்கியே அவை வெளிவருகின்றன. வானொலி என்றால் வேலை செய்தபடியே கேட்டுக்கொண்டிருக்கலாம். பெண்களால் இலகுவில் உள்வாங்கப்படக்கூடிய ஊடகம் வானொலிதான். ஆனால், ‘எனக்காக இந்தப் பாட்டைப் போடறேளா’என்ற ரீதியில்தான் அவையும் ‘தமில்’தொண்டாற்றிக்கொண்டிருக்கின்றன. புத்தகங்களை ஊடகக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தேர்ந்த நல்ல புத்தகங்களே பெண்களுக்கு விழிப்புணர்வூட்டக் கூடியன என்பது எனது கருத்தாகும்.
4.எங்களுக்காக ஒரு நகைச்சுவைத் துணுக்குச் சொல்லமுடியுமா?
இப்படியொரு கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் என்று எனது அண்ணாவின் மகனிடம் சொன்னபோது அவன் சொன்னான்: “இதுவே ஒரு நகைச்சுவைத் துணுக்குத்தானே…”என்று.
ஒரு ஆபிரிக்காக்காரனும் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொண்டார்களாம் (கதை சொந்தச் சரக்கல்ல என்பதனால் இந்த ‘ளாம்’) முதற் குழந்தை அப்பாவைப் போல கறுப்பாக சுருட்டை முடியோடு இருந்ததாம். அந்த வீட்டில் அம்மாவின் ஆட்சிதானாம். தனது மொழியில் அடிக்கடி வரும் ‘ங்’இல் அவளுக்கு அதீத பிரியமாம். அதனால் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது இரண்டு ‘ங்’குகளேனும் வரவேண்டுமென விரும்பி, தந்தையைப் போலிருந்த முதற் குழந்தைக்கு ‘சிங்காங் காங்’ என்று பெயர் வைத்தாளாம்.
இரண்டாவது குழந்தை அம்மா சாடையில் மஞ்சள் நிறத்தில் குச்சி குச்சியான தலைமயிருடன் பிறந்ததாம். சந்தோசப்பட்ட தாய் அக்குழந்தைக்கு ‘சாங் காங் கிங்’என்று பெயர் வைத்தாளாம்.
மூன்றாவது குழந்தையும் பிறந்தது. அதைப் பார்த்த அப்பன்காரனுக்கு ஒரே திகைப்பு. அம்மாவின் சாடையிலும் இல்லாமல் அப்பாவின் சாடையையும் கொண்டிராமல் அது வெள்ளைக்காரச் சாயலில் இருந்ததாம். உடனே அப்பன்காரன் சொன்னானாம்: இந்தக் குழந்தைக்குப் பொருத்தமான பெயரை நான்தான் பெயர் வைப்பேன் என்று. ‘அப்படி என்ன பொருத்தமான பெயர்?’என்று தாய்க்காரி ஆச்சரியத்தோடு கேட்டாளாம்.
“சம்திங் ராங்”என்று கணவன் சொன்னானாம்.
5.வலைப்பதிவுகள் அளிக்கும் நண்பர் வட்டத்தைத் தாண்டி, பதிவுகள் மூலமாக வேறென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
சமூக சீர்திருத்தம்: சீரிய நோக்கம் கொண்ட பதிவுகள் மூலம் சமூகத்தில், அதன் பிற்போக்குத்தனமான கருத்தாக்கங்களில் ஓரளவேனும் மாறுதல்களை ஏற்படுத்த முடியும். சரியான கருத்துக்கள் ஒரு சரியான வாசகரிடம் போய்ச் சேரும்போது, ஒரு நூறு பேரிடமாவது அவர் அதனைக் காவிச் செல்கிறார். செவி வழியாக இடைவிடாமல் அது பயணம் செய்துகொண்டேயிருக்கிறது. ஒரு வீம்புக்காக உடனே மறுத்துரைக்கப்படும் நல்ல கருத்துக்கள் அப்படியே கைவிடப்படுவதில்லை. மனசின் ஆழத்தில் சென்று படிந்து சமயம் வரும்போதெல்லாம் பேசிக்கொண்டேயிருக்கும். உடனடியாக இல்லாவிட்டாலும் மிக மெதுவாகவேனும் பதிவுகள் வழியாக மனதளவில் மாற்றங்களை நிகழ்த்தலாம்.
சமூக அக்கறை: செந்தழல் ரவி வேலை வாய்ப்புக்களை அடையாளம் காட்டுகிறார். இந்தச் சுடரை என்னிடம் தந்த பொன்ஸ் வலைப்பூ தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களில் தன்னால் இயன்றவரை சகபதிவர்களுக்கு உதவுகிறார். ஒரு மாணவி தனது படிப்பை இடைநிறுத்தி வாழ்வே தேங்கிப் போய்விடும் நிலையில் இருந்தபோது, வலைப்பதிவர்கள் பலர் சேர்ந்து நிதி சேகரித்து அந்தப் பெண் தனது கல்வியைத் தொடர் வழி செய்தார்கள். இன்னுமின்னும் எத்தனையோ நற்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பதிவுகள் மூலமாக நாம் வாழும் சமூகம் குறித்த அக்கறை தூண்டப்பட்டு உருப்படியாக நிறையச் செய்யலாம்.
தொழில்நுட்ப அறிவு: வலைபதிய வரும்வரை தட்டச்ச மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.(இப்ப மட்டும் என்னவாம்) என்னைப் போலவே பலரும் கணனியை விசித்திரப் பிராணியைப் பார்ப்பதுபோல, பயங்கலந்த வியப்புடன் சற்றே தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால்,வாழ்வாகட்டும் அறிவாகட்டும் தவறுகளிலிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம் என்பது உண்மை. என்னைப் போல சோம்பற்படாமல் தேடல்,உற்சாகம்,ஆர்வம் உள்ளவர்கள் தமது பதிவுகளை இட முயலும்போது இத் தொழினுட்பம் தொடர்பாக நிறையவே கற்றுக்கொள்ள வலையிற் பதிதல் வகைசெய்கிறது.
திறமை இனங்காணப்படல்: இணையத்தளங்களில் குறிப்பாக தமிழ்மணத்தில் எமது பதிவுகளை இடுவதன் முன், எங்களிற் பலர் எம்முடன் நாமே பேசிக்கொண்டிருந்தோம். (இப்பவும் அப்படித்தான் என்கிறீர்களா…?) எமக்கென ஒரு களம் கிடைத்ததும், மதகு திறக்கப்பட்ட குளங்களாகிவிட்டோம். உள்ளுக்குள் முட்டிமோதிக்கொண்டிருந்த துக்கங்கள்,மகிழ்ச்சிகள்,அனுபவங்கள் படைப்புகளாக வெளிப்படுத்தப்படுவது பெரியதொரு ஆசுவாசம். மேலும், எழுத்தாற்றல் மிக்கவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சரியாக அமையுமிடத்தில் எழுத்தே வாழ்வாகக்கூடிய தளங்களுக்கு இந்தப் பதிவுகள் எடுத்துச் செல்லக்கூடும்.
ம்… இப்போது யாரிடம் இந்தச் சுடரைக் கையளிப்பது என்று யோசித்தபோது நினைவில் வந்தவர் பொடிச்சி. என்னை பதிவுலகம் என்ற பெருங்கடலில் தள்ளித் தத்தளிக்க விட்டவர் அல்லவா அவர்…! பழிவாங்கும் நடவடிக்கையாக இதோ சில கேள்விகள்:
1. வாசிக்கும் புத்தகங்கள் ஒரு மனிதரை (ஆண்-பெண்) அவர்தம் உணர்வுகளை, நடத்தையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
2.தமிழ்மணத்தில் இப்போது அதிகமான பெண் பதிவர்கள் இணைந்திருக்கிறார்கள். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?
3.ஒரு படைப்பை அதை எழுதுபவரின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் மனோநிலையானது எழுதுபவரைக் களைத்துப் போகச் செய்கிறது அல்லது பின்னடையத் தூண்டுகிறது என்பதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
4.இணையத்தளங்களில் அண்மைய நாட்களில் விவாதங்கள் சூடுபிடித்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். விவாதங்கள் வழியாகச் சரியான திசையில் பயணித்து முடிந்த முடிபொன்றை அடையமுடியும் என்று கருதுகிறீர்களா? அல்லது எதிரெதிரான கருத்துக்கள் விவாதங்கள் வழியாக ஒரு புள்ளியில் சந்திப்பது சாத்தியமா?
5.ஒரு படைப்பு பரவலான வாசகர்களைச் சென்றடையாது போவதென்பது அப்படைப்பின் தோல்வியா?
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
தமிழ்நதி:
உங்கட பதில்களை இன்னும் வாசிக்கேல்ல. குறை நினைக்காதீங்க. இதைப்படிச்சதும்..
//ம்… இப்போது யாரிடம் இந்தச் சுடரைக் கையளிப்பது என்று யோசித்தபோது நினைவில் வந்தவர் பொடிச்சி. என்னை பதிவுலகம் என்ற பெருங்கடலில் தள்ளித் தத்தளிக்க விட்டவர் அல்லவா அவர்…! பழிவாங்கும் நடவடிக்கையாக இதோ சில கேள்விகள்://
புரண்டு புரண்டு சிரிச்சு, 'விதி வலியது' எண்டு சொல்லி ஆளை வரவேற்கிறேன். எனக்கும் வசேத்து நீங்க பேச்சு வாங்குங்க. ;)
-மதி
என் கருவறையில் இருக்க உனக்கு இடம் கொடுத்தேன், ஆனால் உன் வீட்டில் இருக்க எனக்கு ஒரு அறை இல்லையா, என்று கேட்டாளாம் ஒரு தாய்..ஹ்ம்ம்ம்..
அனுவின் நிகழ்ச்சி எனக்கும் பிடித்த நிகழ்ச்சி...
இன்று எல்லா அலுவலகத்திலும் வீடுகளிலும் கணினி /இணையம் என்பது 'தேவையாகி' விட்ட ஒன்றான படியால், இந்த ஊடகம் அதிகம் பேரை சென்றடைகிறது.. நீங்கள் சொல்வது போல் பல மாற்றங்களை செய்ய வாய்ப்புகள் உள்ளது..
நீங்கள் கேட்டு இருக்கும் கேள்விகள் அருமை நதி...இப்ப தான் சுடர் பிரகாசமடையுது..:-))..
இது தாய்க்குலங்களுக்கான சுடர் போலும்...நம்ம முத்துலக்ஷ்மில இருந்து படிச்சிட்டு வர்றேன்...நல்லாத்தான் இருக்கு.
ஆனா சொல்லி வச்ச மாதிரி அத்தனை பேரும் ஒரே மாதிரியான அலைவரிசைகளில்தான் எழுதறீங்க...இது தானாய் வருதா? அல்லது வலிந்து எழுதப்படுகிறதா? என்கிற கவலை எனக்கு உண்டு.
கடந்த ஒன்னரையாண்டுகளில் எனக்குத் தெரிந்து நட்சத்திரவாரத்தை நன்கு பயன்படுத்திய இரண்டாவது அல்லது மூன்றாவது பதிவராக நீங்கள் இருப்பீர்களென நினைக்கிறேன்.
வடிவான பதில்கள், விளக்கங்கள்.
உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது ஓடுவது
வரி அல்ல, மனதில் குத்தும் வலி.
அழகான சுடர்.
நன்றி நதி. நான் நினைத்ததை விட அருமையாக எழுதி இருக்கிறீர்கள் :)
உடனடித்தன்மையை வலியுறுத்தாமல் நீங்கள் எழுதியிருந்தாலும், சென்னையைப் பொறுத்தவரை நீங்கள் சொன்னவை அனைத்தும் அடுத்து செய்யவேண்டியவை தாம்.
தொலைக்காட்சியைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லி இருக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே நான் பார்ப்பவையும் கூட :)
விழிப்புணர்வூட்டும் புத்தகங்களைப் பற்றிப் பேசுகையில், இன்றும் எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டாலும், யாரும் வாங்கிப் படிக்கிற வழியாய்க் காணோமே என்பது என் கவலை. என்னென்ன படிக்க வேண்டும் என்பதில் கூட அடுத்தவரின் தலையீடு இருக்கும் காலம் வேற..
நகைச்சுவைத் துணுக்கும், வலைப்பதிவின் பயன்பாடுகளும், உண்மையிலேயே அருமையாக இருக்கின்றன :)
பொடிச்சிக்கு நீங்கள் கேட்ட கேள்விகளும் மிக நன்று.. பொடிச்சியின் வருகைக்குக் காத்திருக்கிறேன் :)
நன்றாக சுடரை நகர்த்தி இருக்கிறீர்கள்!
சென்னையின் உடனடித் தேவைகள் - உங்கள் பார்வையில் மிகவும் அருமையாக விரிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
மற்ற கேள்விகளுக்கும் டிபிக்கல் தமிழ்நதியைக் காண முடிகிறது!
அருமையான சுடர். ஏற்றிய சுடர்களிலேயே இதுதான் எனக்கு மிகவும் பிடித்த சுடர் என சொல்லலாம். அதற்காக 'என்னுது நல்லாலலையான்னு வேற யாரும் கேட்டுடாதீங்க', மற்றதெல்லாம் பிடிச்ச சுடரென்றால் இது 'மிகவும்' பிடித்த சுடர். நல்ல எழுத்து, நல்ல சிந்தனை, நல்ல கருத்து, நல்ல ஆலோசனைகள். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் நதி. வாழ்த்துக்கள்.
வீட்டில் விருந்தினர் வருகையால் இப்பதிவை மிகத்தாமதமாக படிக்கிறேன். நல்லா வந்திருக்கு சுடர்.
எல்லா பெண்களும் ஒரே போன்று சிந்திப்பதாக கருத்து எழுந்திருக்கிறது.
பெண்களுக்குள் அதிக சதவீதமாக் இருக்கும்இருக்கும் தாய்மையுணர்வு
காரணமாக இருக்கலாம்,நாட்டில் இருக்கும் ஏழ்மையைக் கண்டு வருந்துவதும் ஏதாவது செய்ய இயலாதா என்ற எண்ணமும்..
குழந்தைக்கு சதா நேரமும் எதயாவது கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்
குணமும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். சிறப்பானது ஒன்றை செய்யத்துடிக்கும் முயற்சி கற்பனையிலேனும் வெற்றிபெற ஆசையிருப்பதால் இருக்கலாம்.
Post a Comment