கடந்த ஒரு வார காலமாக நட்சத்திர வெளிச்சத்தில் அமர்ந்து எனது பிரியத்திற்குரிய நண்பர்களுடன் ஆசை தீரப் பலதும் பேசிவிட்டேன். நாளை இந்த ஒளியில் குளித்தபடி உங்களோடு உரையாட வேறொருவர் வருகிறார்.
எனக்கு வழங்கப்பட்ட ஒரு வாரத்தையும் நான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற அக்கறை எனக்கு இருந்தது. முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு எனக்குத் திருப்தியாகவே இந்த வாரம் அமைந்தது. ‘நாங்களும் மனுசங்கதான்’ என்ற பதிவின் வழியாக நான் பேசியதை விட, அதற்கு எதிர்வினையாக நீங்கள் வைத்த எதிர்க்கதையாடல்கள் ஆரோக்கியமான திசை நோக்கி நகர்ந்ததை நிறைவாக உணர்கிறேன். ஒரு மெழுகுவர்த்தியின் ஒற்றைச் சுடரிலிருந்து பல நூறு மெழுகுவர்த்திகளை ஏற்ற முடிவது, மிக இயல்பாக அமைந்துவிட்ட ஆச்சரியம். கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட எங்கள் மக்களின் வாழ்வு குறித்த பல்லாயிரம் பக்கங்களில் ஒரு பக்கத்தை ‘அவனது கேள்வியும் அவளது ஆண்டுக்குறிப்பும்’வாயிலாக தமிழகத்துச் சகோதரர்களில் ஒரு பத்துப் பேருக்கேனும் தெரியவைத்ததையிட்டும் மகிழ்வடைகிறேன்.
மற்றவர்களுடைய எழுத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்குக் கூட ஒரு நல்லிதயம் இருக்கவேண்டும். அப்படிப் பல நண்பர்களை காலம் எனக்குக் காட்டியிருக்கிறது. ஆனால்,‘நன்றாயிருக்கிறது’என்று மட்டும் சொல்லி என்னைத் தேங்கவைத்துவிடாதீர்கள். நான் ஓடிக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன். குறைகளைச் சுட்டிக்காட்டுவதால் ஒன்றும் குறைந்துபோய்விடாது.(அதற்காக சும்மா பூதக்கண்ணாடி வைத்தெல்லாம் பார்க்கக்கூடாது :))) உடனே என்ன தோன்றுகிறதோ அதுதான் உண்மையான விமர்சனம். உட்கார்ந்து யோசிப்பதெல்லாம் விஷமத்தனம்… அப்படித்தானே…?
எழுதுவது,வாசிப்பது,பின்னூட்டமிடுவது இவையெல்லாம் இந்த வாழ்வெனும் சமுத்திரத்தில் உள்ளங்கைக்குழிவு கொள்ளத்தக்க நீர் மட்டுமே. எமக்கு நாமே உண்மையாகவும் சகமனிதர்களைக் காயப்படுத்தாத மென்மனதுடையோராய் இருப்பதுமே எல்லாவற்றிலும் சிறப்பு.
இந்த வாரம் முழுவதும் எனது பக்கத்திற்கு வந்து வந்து பேசியும் மௌனமாகவும் சென்ற நண்பர்களுக்கும், இந்த ஒரு வாரமாக எனக்கு சிறப்பு வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்திற்கும் ‘நன்றி’ என்று சொல்லி இறுகப் பற்றியிருந்த விரல்களை நெகிழ்த்துகையில் இந்த மனமும் ஏனிப்படி நெகிழ்ந்துபோயிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. நன்றி.
நட்புடன் தமிழ்நதி
9 comments:
நிறைவாகச் செய்திருக்கிறீர்கள் நதியக்கா!
நான் உங்கள் நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் படிக்க விருப்பமிருந்தாலும் இந்த வாரம் வேலைப் பளு மற்றும் பயணங்கள் காரணமாக படிக்க இயலவில்லை. இருப்பினும் பொறுமையாகப் படிக்கிறேன்.
பின் குறிப்பு: உங்கள் பதிவுகளில் இதுதான் சிறிய பதிவு என்று நான் கருதுகிறேன். :))
முடிந்தவரை எமது பிரச்சினைகளை தமிழக நண்பர்களுக்கு சொல்லி இருக்கிறீர்கள். கிடைத்த சந்தர்ப்பத்தை அழகாக பயன் படுத்தி இருக்கிறீர்கள். முழுமையான நட்சத்திர வாரமாகவே இதை நான் கருதுகிறேன். இதுபோன்ற புரிதல்களினால் எமதும் தமிழக நண்பர்களதும் பிணைப்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே எமது அவா. விடபெறும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
எதுவொன்றைப் படித்தாலும் அதிலிருந்து ஒரு புதிய த்கவல் வாசிப்பவனுக்குக் கிடைக்க வேண்டும்.
இந்த ஒரு வாரத்தில், முகத்தில்
பொளேரென அறையும் தகவல்கள்
பலவற்றைக் கிடைக்கச் செய்தீர்கள்.
.............நன்றி
கல்விப்பளு காரணமாக இறுதியில் சில பதிவுகளை படிக்க முடியவில்லை..
ஏனைய அனைத்தும் மிக நன்றாக இருந்தது அக்கா,
உங்களுடைய குட்டி ரேவதியுடனான பேட்டியின் தொடர்ச்சி இன்றும் வீரகேசரியில் வெளிவந்தது..
தெரிஞ்ச ஆக்களிண்ட பெயர் பேப்பரில வரேக்க ஒரு சந்தோசம்தானே என்ன?
மீண்டும் வாழ்த்துக்கள்..
ரொம்ப நாளைக்குப் பிறகு நிறைவா ஒரு நட்சத்திரப் பதிவரின் வாரம். அனைத்து இடுகைகளும் நல்லா இருந்துச்சு. தொடர்ந்து வலைப்பதிய, சிறக்க வாழ்த்துக்கள்
நீங்கள் உதிரும் நட்சத்திரமா என்ன?
/எதிர்க்கதையாடல்கள்/
தோடா, பின்நவீனத்துவப் பேய் இந்த அம்மாவுக்கும் பிடிச்சிடுச்சுபோல.
போய்வாருங்கள் தோழி, காத்திருக்கிறோம், இன்னும்சில காத்திரமான படைப்புகளோடு நீங்கள் வருவீர்கள் என்று.
//உடனே என்ன தோன்றுகிறதோ அதுதான் உண்மையான விமர்சனம். //
இந்தப் பதிவில் பூனைப்படம் ரொம்ப நல்லா இருக்கு. மொதநாளே
சொல்ல விட்டுப்போனது உங்க அறிமுகப்பூனை படு ஜோர்.
அதுக்காக பதிவெல்லாம் நல்லா இல்லைன்னு அர்த்தம் இல்லை:-))))
நல்ல வாசிப்பனுபவம் கிடைச்சது. நன்றி.
இந்தவாரக்கடைசியில்தான் எல்லாம் வாசித்து முடித்தேன் தமிழ்நதி. திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பதும் உடன்பாடில்லை என்பதால் திவாகரின் இந்த வரியை மட்டும் வழிமொழிகிறேன்.
///நீங்கள் உதிரும் நட்சத்திரமா என்ன?///
அருமையான பதிவுகளுடன், திருப்தியான வாரம். நிச்சயமாக இது உதிரும் நட்சத்திரமல்ல.
Post a Comment