4.07.2007

நோய்க்கூற்றின் கண்கள்


“இறப்பதற்குத் தனியாக காரணங்கள் தேவையா
இருப்பதற்குக் காரணங்கள்
இல்லையென்பதை விட?”

கனவுகள் சலித்துப்போன ஓரிரவில் இதனை எழுதத் தொடங்குகிறேன். அவரவர் கோப்பைகளில் அவரவருக்குப் பிடித்த மதுவை நிரப்பிக்கொண்டு ஏதாவதொரு போதையில் மூழ்கிக்கிடக்கிறோம். எதிலாவது கிறங்கிக் கிடப்பதுதான் பாதுகாப்பானது என்ற எண்ணத்தின் விதை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஊன்றப்பட்டிருக்கிறது. சித்தம் சிதைவதற்கு மிக முந்தைய கணத்தில் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தையைப் போன்ற, ஒத்த சாயலையுடைய இந்த நாட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதே காலையில் அதே சாலையில் அதே ஆறு மணிக்கு துணைக்கு சடைநாய்க்குட்டி சகிதம் அதே கிழவர் நடந்துபோகிறார். முன்பொருநாளில் “எத்தனை அழகியது இந்த வாழ்க்கை”என்று பல தடவை வியந்திருக்கிறேன். விநோதரசம் நிரம்பிய அண்மைய நாட்களின் நடப்புகள், அந்த வார்த்தைகளைப் பார்த்து ஓசையெழச் சிரிக்கின்றன. ‘வாழ்வொரு அபத்தம்’ என்ற கசப்புப் படிந்த வரி மண்டைக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

‘வேடிக்கை மனிதரைப்போல’அல்லாது வாழமுயன்று களைத்துப்போனவர்களின் உதடுகள் சலித்துத் துப்பிப்போட்ட வார்த்தைகளில் ஒன்றிரண்டைப் பொறுக்கிக்கொள்வதைத் தவிர புதிதாக ஒன்றுமில்லை.

‘நமக்குள் இருப்பதுதான் புத்தகத்தில் இருக்கிறது
அதைவிட ஒன்றுமில்லை’

என்று நகுலனும்,
‘இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறது’
என்று கல்யாண்ஜியும் சொன்னது ஞாபகத்தில் வருகிறது. அடுக்கி வைத்த சீட்டுக்கட்டை அவரவர்க்குப் பிடித்தபடி அடுக்கியும் கலைத்தும் விளையாடுகிறோம் என்பதுதானே உண்மை. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும், பேசுவதன் மீதான் விருப்பு வற்றிப்போய்விடவில்லை. தனது இருப்புக் குறித்த பிரக்ஞை மற்றவர்களிடம் இல்லாமற்போய்விட்டால் என்ன செய்வது என்ற பதைப்பே எழுதத்தூண்டுகிறதோ என்னவோ…!

வாழ்வோடு பிணைத்து வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கை என்பது, இப்போது காண்பதுபோல வித்தைக்காரனின் கூடாரமாக, சர்க்கஸ் காட்டுபவன் நடக்கும் கயிறாக, மகாநடிகர்களின் மேடையாகத்தான் எப்போதும் இருந்ததா…? இதுவரை வாழ்வை அழகிய பூவனமாகத் தோற்றப்படுத்திக்கொண்டிருந்த மாயக்கண்ணாடியைக் கழற்றி வைத்ததனால் வந்த மாற்றமா…? “ஆகா! அழகியது!”என்று கொண்டாடிய(உண்மையில் கொண்டாடினேன் சுகுணா) காலங்கள், இப்போது எல்லோரும் எழுதிவரும் கிறுக்குத்தனமானவைதான் என்று கண்டுகொண்டபின் யாவற்றையும் யாவரையும் பார்த்து நகைக்கவே தோன்றுகிறது.

இருப்பிற்காக, உயிர் தரித்திருத்தலுக்காக கொடுக்கும் விலை மிக அதிகமோ என்ற எண்ணம் வருகிறது. எழுத்து,உறவு,வாசிப்பு எல்லாமே அணைந்துபோய்க்கொண்டிருக்கிற வாழ்வின் மீதான விருப்பின் திரியைத் தூண்டிவிடுவதற்காக நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவையாகவே இருக்கின்றன. விளையாடும் குழந்தையைச் சுற்றி கார்,பிளாஸ்டிக்காலான கட்டிடப் பொருத்துகைகள், பொம்மைகள் இறைந்து கிடப்பதைப் போல, ‘நான் இன்ன இன்ன காரணங்களுக்காக வாழ்கிறேன்’ என்று எமக்கும் எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நிரூபிப்பதற்காகவே எம்மைச் சுற்றி பலவற்றையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறோம். உறவுகள் என்ற கசப்பு மருந்தின் மேல் அன்பு என்ற தேனைப் பூசி விழுங்க வேண்டியிருப்பதை அறியாத ‘அப்பாவி’கள் நாங்கள்.

அன்பு உலகை ஆள்வதென்பது, டைனசோர் போல அருகி அழிந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அன்புதான் உலகை ஆள்கிறதெனும் எனது அண்மைய தோழா! மாபெரிய அபத்தத்தைப் பேசுகிறாய். நீ சொல்வது சரியெனில், அன்னை தெரேசாவையும் மகாத்மா காந்தியையும்(விமர்சனங்களோடும்) ஒன்று…. இரண்டு… மூன்று என்று விரல்விட்டு எண்ணவேண்டிய துர்ப்பாக்கியம் ஏன்? எங்களில் எத்தனை பேர் மற்றவரின் துயரங்களுக்கு சகிப்புத்தன்மையோடு செவிமடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களில் எத்தனை பேர் எங்களால் இயலக்கூடிய உதவிகளைச் செய்வதற்கு சோம்பற்பட்டு விலகிக்கொண்டிருக்கிறோம். எமக்குப் பிடித்த திசை நோக்கி நகராத உரையாடல்களிலிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளும்போது தனிமைப்படும் இதயங்களைப் பற்றி எம்மில் எத்தனை பேர் சிந்திக்கிறோம்?

அதிகாரங்கள்தான் உலகை ஆள்கின்றனவேயன்றி அன்பு அல்ல. அதிகாரத்தைக் கையிலேந்திய பிதாமகர்கள் எம் மீது மேலாதிக்கம் செலுத்தும் பிறப்புரிமை பெற்றவர்களாக, எம்மை அலைக்கழிக்கத்தக்கவர்களாக இருக்கும் உலகத்தில் ஒரு பூச்சிகளாக வாழ விதிக்கப்பட்டிருப்பது கொடுமையிற் கொடுமை! தீயவர்களுக்கும் அவர்கள் சுமந்தலையும் துப்பாக்கிகளுக்கும் இன்னபிற ஆயுதங்களுக்கும் பயந்துகொண்டு இந்த உயிரை எத்தனைக்கென்று கக்கத்தில் இடுக்கிக்கொண்டலைவது? முன்னொருபோதும் அறியாதவர்களால் இரவோடிரவாக விரட்டப்படுகிறோம். கைது செய்யப்படுகிறோம். எவனோ வெட்டிய பள்ளத்தில் தெருநாயைப் போல இழுத்தெறியப்பட்டுப் புதைந்து கிடக்கிறோம். இழைத்து இழைத்துக் கட்டிய வீட்டில் நீ இருக்கமுடியாதென யாரோ ஒருவன் கட்டளையிடும் குரலுக்குப் பணிகிறோம். கனவுகளையும் கற்பனைகளையும் யாரோவுடைய துப்பாக்கியின் பெருவாய் தின்றுதீர்க்கிறது. எங்களது ஒட்சிசன் குழாயை எந்த நிமிடத்திலும் எவரும் பிடுங்கிவிடத்தகு நோய்ப்படுக்கையில் கையறு நிலையில்தான் இருக்கிறோம். முதலில் இந்த ஜனநாயகம்… சமத்துவம்… மனிதம்… தனிமனித உரிமை… மண்ணாங்கட்டி… இந்த வார்த்தைகளை அகராதியிலிருந்து அழித்துவிடவேண்டும்.

நிலவுக்கஞ்சிப் பரதேசம் போன பாவிகளானோம். எங்கில்லை இந்த நிலவு? எங்கில்லை மரண பயம்? ஓடிக் களைத்து மூச்சுவாங்குகிறது. இருந்தும் கையுயர்த்தி மண்டியிட்டு “தயவுசெய்து என்னைக் கொல்லுங்கள்”என்று சொல்ல முடியவில்லை. “வாழப் பிடிக்கவில்லை. செத்துப்போகிறேன்”என்று கண்ணீரில்லாமல் சொல்லி விடைபெற்றுப் போகிற மனத்திண்மை ஏனின்னும் வாய்க்கப்பெறவில்லை…? வாழ்வின் மீது அத்தனை வெறித்தனமான காதலா? நான் இல்லாவிட்டால் ஏனையோர் என்ன ஆவர் என்பதெல்லாம் எமது மரணபயத்தின் மீதான சப்பைக்கட்டுகள் அல்லவா?

பதின்மூன்று ஆண்டுகளின் முன் நீ தற்கொலை செய்துகொண்டபோது ‘அவளொரு கோழை’என்றார்கள். நீ வாழ்ந்திருக்கக்கூடிய காரணங்கள் எல்லோராலும் அடுக்கப்பட்டன. இல்லையடி!வாழ்வை எதிர்த்துக் கலகம் செய்து உயிர் எனக்கொரு மயிர் என்று பிடுங்கி அவன் முகத்தில் விட்டெறிந்து போன நீயொரு தீரி! உன் கவிதைகளை எரித்து உன்னையும் மாய்த்துப் போன சிவரமணி!நீயும் நின் கவிதையும் எங்களைவிட உயிர்ப்புடன் இருக்கின்றன. இரண்டு மாதங்களின் முன் ஒற்றைக் கயிற்றிலே தொங்கி உன்னை இறுக்கியிருந்த அத்தனை தளைகளையும் அறுத்தெறிந்துபோன சின்னப் பெண்ணே!நீ வணங்கத்தக்க துணிச்சல்காரி!

தற்கொலை என்பது, வாழ்வின் முகத்தில்-தெரிந்தே காயப்படுத்திய சகமனிதர்களின் முகத்தில் காறியுமிழும் எச்சில்தான். விநோதம் என்னவென்றால், மெல்லிய சங்கடத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு பறவையின் எச்சத்தைப் போல அதை வழித்தெறிந்துவிட்டுப்போய்க்கொண்டே இருக்கிறோம். தற்கொலை செய்பவர்கள் வாழ்வை வென்றாலும், தம் வலியை கன்னத்தில் அறைந்து உணர்த்துவதில் தோற்றுத்தான் விடுகிறார்கள்.

நாம் போனபின்னும் இவ்வுலகம் இருக்கும். நெருங்கியவர் அடித்துப் புரண்டழுவர் சிலநாட்கள். பிணந்தூக்கிப் போனபின்னால் வீடு கழுவிச் சமையல் நடக்கும். துக்கத்தில் இறுகிய மலம் இளகி வெளியேறி மறுநாள் வயிறு இலேசாகும். ஒரு பாடல், ஒரு வார்த்தை, ஒரு புகைப்படம், தெருவில் எதிர்ப்படுகிறவரில் ஒரு சாயல் எம்மை நினைவுறுத்தும். நீங்கள் தமிழ்மணத்தில் எழுதுகிறவராக இருந்தால், அஞ்சலிக்கவிதைகள் நான்கைந்தும் சில நினைவுக்குறிப்புகளும் பதிவிடப்பட்டு- வாசிக்கும் ஏனையோரை கண்கலங்கவோ ‘இதெல்லாம் கவிதையாக்கும்’என பல்கடிக்கவோ வைக்கலாம். வேறென்ன…பூவுதிரும் சாலை வழி மனிதர்கள் நடந்துபோக அன்றைக்கும் அதிகாலை அழகாக விடியும். அவ்வளவே!

28 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏற்கனவே சலிப்பும் வெறுப்பும் மனதை அழுத்திய மனநிலையில்
இதை படிக்க ஆரம்பித்தேன்.

படித்த பின் நிறைய எழுதி எழுதி அழித்துவிட்டேன்.
இது வெற்று பின்னூட்டம் .படித்தேன் என்பதற்காக.

பங்காளி... said...

படித்தேன்....ம்ம்ம்....இன்னொரு தடவை படிச்சிட்டு வர்றேன்...ம்ம்ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்றைய மனநிலையில் எத்தனை முறை படித்தாலும் உங்கள் எழுத்து
என் மனநிலைக்கு தகுந்த மாதிரியானபடியான,
வரிகளை எனக்கானதாகவே காட்டுகிறது.
\\எமக்குப் பிடித்த திசை நோக்கி நகராத உரையாடல்களிலிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளும்போது தனிமைப்படும் இதயங்களைப் பற்றி எம்மில் எத்தனை பேர் சிந்திக்கிறோம்?//
ம்...
காலையெல்லாம் எப்போதும்போல்
அழகாகவே விடிகிறது.
ஏதோ ஒரு சொல்
அல்லது ஒரு நிகழ்வு
அத்தனை அழகையும்
விழுங்கிவிட்டு சிரிக்கிறது.

இளகவைக்கும் சோகமான சங்கீதத்தைப்
போல இருக்கிறது பதிவு.

வி. ஜெ. சந்திரன் said...

வரிக்கு வரி பிரதி பண்ணி மேற்கோள் காட்டி இவை பற்றி எல்லாம் யோசித்து, வாழ்வதற்கான கற்பிதங்களை செய்திருக்கிறேன் என்பதையும், உறவேனும் மாய வலையுள் மூழ்கி வாழுவதற்கான காரணத்தை பல முறை எனக்கு நானே நியாய படுத்தி இருக்கிறேன் என்பதை சொல்லி கொள்ள முடியும்.

இப்படி சிந்தனைகள் ஓடும் நாளுக்கு மறு நாளே இதை இதை செய்தாக வேண்டும், இப்படி செய்தால் நன்றாக இருக்கும் , என்பதாக புது உருகொண்டு வேறு வகையான ஒரு சிந்தனை ஓட்டத்தோடு வாழ்கை போகும்.

Anonymous said...

தமிழ்நதி எதுவும் எழுதாமலுலிருக்கவும் முடியவில்லை என்ன எழுதவென்றும் தெரியவில்லை

பங்காளி... said...

என்ன ஆச்சு முத்துலட்சுமி....

ஒரேடியாக வயலின் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்....

தமிழ்நதி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துலட்சுமி,பங்காளி,வி.ஜே.சந்திரன் மற்றும் சந்திரா.

பங்காளி! வாசிக்கத் தெரிந்தவனின் கைகளில் இருந்தால் அது புல்லாங்குழல். இல்லையெனில் வெறும் மூங்கில்தான் என எங்கோ படித்திருக்கிறேன். அது எழுத்துக்கும் பொருந்துமோ என்னவோ... ஒரே மனநிலையில் இருப்பவர்கள் ஒரே சங்கீதத்தை விரும்புவது இயல்பே அல்லவா...? முத்துலட்சுமியும் நானும் ஒரே மனநிலையில் இருக்கக்கூடும். அதனால்தான் அந்த வயலின் இசை இழைகிறது போலும்.

நாமக்கல் சிபி said...

உங்கள் எழுத்துக்கள் படிக்க ஆர்வமூட்டுபவையாகவும் அதே நேரம் நிறைய நேரம் மனத்தில் நிறுத்தி சிந்திக்கத் தூண்டுபவையாகவும் இருக்கின்றன வழக்கம்போல்!

கலை said...

பதிவை வாசித்துக் கொண்டிருக்கையில் நான் எழுத நினைத்தவற்றை, முத்துலெட்சுமி பின்னூட்டத்தில் ஏற்கனவே எழுதியிருப்பதைப் பார்த்தேன்.

எப்படி உங்களால் இப்படி அருமையாக எழுத்தில் எல்லாவற்றையும் வடிக்க முடிகின்றது என்ற ஆச்சரியம்தான் எனக்கு.

பலவற்றை எழுத்தில் கொண்டு வந்து வடிகால் தேடலாம் என்றால் அதுக்கும் முடிவதில்லை.

பங்காளி... said...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை....

எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இறுதி வரைக்கும் அமைதியிருக்கும்....

(இதை சொல்வது எளிது...தனக்கு வந்தால்தான் தலைவலியின் தீவிரம் புரியும்...ம்ம்ம்ம்ம்ம்)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காலையில் இசைந்த வயலின் போய் இப்போது டிரம்ஸ் அடிக்கிறது.

விஜே சொல்வது போல்\\சிந்தனைகள் ஓடும் நாளுக்கு மறு நாளே இதை இதை செய்தாக வேண்டும், இப்படி செய்தால் நன்றாக இருக்கும் , என்பதாக புது உருகொண்டு வேறு வகையான ஒரு சிந்தனை ஓட்டத்தோடு வாழ்கை போகும். //

தற்கொலை கூட பலசமயம் நினைவுக்கு வந்திருக்கிறது..நமக்குன்னு ஆசைப்படி ஒரு வீடு கட்டி அதில் இப்படி அப்படி எல்லாம் வாழணும்ங்கர கனவு அடுத்த அரைமணியிலேயே வரும்.

நதி, நீங்களும் கனவுகள் சலித்துப்போன இரவிலிருந்து இப்போது வெளியே வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்...இல்லையென்றால்
வெளியே வர என் வேண்டுதல் கள்.

கையைக்கட்டிவைக்கத்தான் வேண்டும்.உளறிக்கொண்டே இருக்கிறது.

சினேகிதி said...

ena ipidi elam eluthureengal neengal?

\\உறவுகள் என்ற கசப்பு மருந்தின் மேல் அன்பு என்ற தேனைப் பூசி விழுங்க வேண்டியிருப்பதை அறியாத ‘அப்பாவி’கள் நாங்கள\\

ithu enkau epavo theriyume:-)


\\நான் இல்லாவிட்டால் ஏனையோர் என்ன ஆவர் என்பதெல்லாம் எமது மரணபயத்தின் மீதான சப்பைக்கட்டுகள் அல்லவா?\\
konjam unmaithan.

2 maathathuku muthal thatkolai seithathu yaaru?

கார்திக்வேலு said...

//தனது இருப்புக் குறித்த பிரக்ஞை மற்றவர்களிடம் இல்லாமற்போய்விட்டால் என்ன செய்வது//
"நம்மிடம்" என்று கூட சேர்த்துக்கொள்ளலாம்
------------
reading_is_dangerous !
------------
//வேடிக்கை மனிதரைப்போல’அல்லாது வாழமுயன்று//
வேடிக்கை மனிதர் வாழ்க்கையும் வேடிக்கையற்ற மனிதர் வாழ்க்கையும்
அவரவர் அளவிலே ஏதோ விதத்தில் அர்த்தப்படுத்தப்பட்டு விடுகிறது.


வாழ்க்கை வினோதமானதோ / அழகானதோ
சலுப்பானதோ / அபத்தமானதோ
என்று உறுதியாக கட்டம் போட முடியாது
the only suitable adjective for life is life itself.

தோன்றத் தோன்றும் கண்ணாடி.
அனைத்திலும் பொதிந்திருக்கும் சதா ஒரு அலைச்சல்.
நதியடித்துப் போகும் நதி

நாமக்கல் சிபி said...

அதெல்லாம் சரி!

இந்த மாதிரி படமெல்லாம் எங்க இருந்து பிடிக்கிறீங்க?

தென்றல் said...

தமிழ்நதி,

உங்களின் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும் பொழுது மனது என்னமோ செய்கிறது ... இந்தப் பதிவும் அதற்கு விதி விலக்கல்ல...

வலிகள், காயங்கள், மரணங்கள் ...மனது ஏதாவது ஒரு புள்ளியில் அமைதியை தேடி அலைகிறது...

எண்ணங்களை மிக நேர்த்தியாக... ஆழமாக பதிவு செய்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. எனது வணக்கங்களும்!

மா சிவகுமார் said...

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் என்று தோன்றுகிறது தமிழ்நதி. அதை போர்க்களமாக மாற்றும் மூர்க்கர்களுக்கு மைதானத்தை விட்டு விட்டு, நாம் ஒதுங்கிக் கொண்டதுதான் நமது தவறு.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருப்பீர்கள்! தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் என்ற நூலில் நமது உலகை நாமே வரையறுக்கும் தன்னம்பிக்கை கிடைக்கலாம்.

எதிராளி வகுத்த விதிகளின்படி விளையாட்டில் ஈடுபட்டால் எப்போதுமே தோல்வியும் மனச் சோர்வும்தானே மிஞ்சும்.

அன்புடன்,

மா சிவகுமார்

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் நாமக்கல் சிபி,கலை,சிநேகிதி,கார்த்திக்வேலு,தென்றல்,மா.சிவகுமார் யாவருக்கும் நன்றி.

2 maathathuku muthal thatkolai seithathu yaaru?-சிநேகிதி

இதற்கு நான் தனிப்பட்ட முறையில் அல்லது தனிமடலில் பதில் சொல்கிறேனே...

"வாழ்க்கை வினோதமானதோ / அழகானதோ
சலுப்பானதோ / அபத்தமானதோ
என்று உறுதியாக கட்டம் போட முடியாது"-கார்த்திக்வேலு

வாழ்வு என்பது இவ்விதம்தான் என்று வரையறுக்க முடியாதுதான். ஆனாலும், அந்தந்த உணர்வு தோன்றும் அக்குறிப்பிட்ட கணத்தில் அல்லது காலத்தில் அதுவே அது மட்டுமே முழுவதுமாக வியாபிக்கிறது. காதல் வயப்பட்ட மனம் முழுக்க காதலே நிறைந்து வழிகிறாற்போலென்றும் சொல்லலாம். வாழ்வை அபத்தங்கள் சூழும்போதில் வாழ்வு அபத்தமாகத் தோன்றும். மறுநாளே மலர்ச்சி பரவும். அதற்காக நேற்று அபத்தமெனத் தோன்றியது பொய்யல்ல நண்பரே!

அதிகம் புகழாதீர்கள் கலை! பாருங்கள் என் தலையில் இரண்டு கொம்புகள் முளைத்திருப்பதை.

"இந்த மாதிரி படமெல்லாம் எங்க இருந்து பிடிக்கிறீங்க?" -நாமக்கல் சிபி

கூகுல்ல போய் 'இமேஜ்'ல உங்கள் பதிவு தொடர்பான சொல்லொன்றைக் கொடுத்து தேடப் பணித்தால் பூதம்போல கொண்டுவந்து கொடுக்கிறது.

வாருங்கள் தென்றல்... முதற்தடவையாக வந்திருக்கிறீர்கள். தென்றல் என்ற பெயரைப் பார்த்து பெண் என்று நினைத்தேன். பிறகு தெளிந்தேன்.

"வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் என்று தோன்றுகிறது தமிழ்நதி. அதை போர்க்களமாக மாற்றும் மூர்க்கர்களுக்கு மைதானத்தை விட்டு விட்டு, நாம் ஒதுங்கிக் கொண்டதுதான் நமது தவறு."-மா.சிவகுமார்
சிவகுமார்!வாழ்க்கையொரு கொண்டாட்டம் என்றுதான் ஓஷோவும் சொல்கிறார். ஆனால்,கொண்டாட முடியவில்லை. வலிமையுள்ளவர்களுக்கும் வலிமையற்றவர்களுக்கும் நடக்கும் போரில்(இது அந்தப் போரல்ல)வலிமையற்றவர்களால் ஒரு கட்டத்திற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை நீங்கள் அறியீர்களா? அப்படித் தனித்து நின்று பந்தாடுவதென்பது தமிழ்சினிமாவில் மட்டுந்தான் சாத்தியம். களத்தை விட்டு விலகி கைகட்டிப் பார்த்திருக்கவே இப்போது விதிக்கப்பட்டிருக்கிறோம்.

மா சிவகுமார் said...

அதற்குத்தான் காந்தியின் வாழ்க்கையை சுட்டிக் காட்டினேன் தமிழ்நதி. வலிமை என்பது நமது மனதில்தான் இருக்கிறது. தோல்வி என்பது நாம் வரையறுப்பதுதான்.

ஆட்ட விதிகளை மாற்றி விடுங்கள். எதிராளியை வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க விடாமல் களத்தை மாற்றி விடுங்கள்.

மனித முயற்சியால் முடியாதது எதுவுமே இல்லை. வழக்கமான வறட்டுத் தத்துவமாக ஒதுக்காமல் யோசித்து பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

கார்திக்வேலு said...

வாழ்க்கை எல்லோருக்கும் சரிவிகித அளவில் நன்மை தீமைகளை பகிர்ந்து அளிப்பதில்லை.அது ஒரு package deal which we can't negotiate.
There is no guaranteed fair-go.

வாழக்கையின் எதிர்பாராத குரூரங்களை நேர்கொள்ள நாம் வடிவமைக்கப் படவில்லை.காலம் தனது பெருஞ்சுமையை வெகு நறுவிசாக நம தோள்களில் ஏற்றிப் போகிறது.
அழகை ஏற்க அபத்தத்தையும் ஏற்க வேண்டியிருக்கிறது.
மிகக் கடினமான காரியம் என்னவென்றால் வாழ்க்கையின் ஒரு கணத்திலிருந்து
விடுவித்துக் கொண்டு இன்னொரு கணத்திற்கு நகர்வதாகும்.நமது சிந்தனை / உணர்வுகள் காலத்தாலும் ஞாபகங்களாலும் கட்டுண்டிருக்கின்றன.

அந்தக் கட்டுடைந்து கணங்களை ஒரு பட்டாம்பூச்சி போன்று தாவும் லாகவமும்
நூதனமுமே நாம் வேண்டுவது.ஒரு கண்ணாடியைப் போன்று, நிகழ்வை மட்டுமே
நிஜமாக்கும் நிலை அடைவது.

வாழ்க்கை இவ்வளவு கடினமானதாய் இருந்திருக்கத் தேவையில்லை தான்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

;(
:(
!!!

தமிழ்நதி said...

சிவகுமார்!சில ஆட்டங்களின் விதிகளை மாற்றி எழுதும் உரிமையோ சூத்திரக்கயிறுகளோ எம்மிடமில்லை. நீங்கள் சொன்னபடி களத்தை மாற்றித்தானிருக்கிறேன். ஆனால்,மனதில் இடையறாது போர் நடந்துகொண்டுதானிருக்கிறது. என்ன செய்ய?

கார்த்திக்வேலு! வாழ்க்கை, package deal which we can't negotiate என்பதனோடு உடன்படுகிறேன். முரண்களோடு சமரசம் செய்துகொண்டு வாழ்வதன்றி வேறென்ன தெரிவுண்டு?

மா சிவகுமார் said...

கடைசியில் போராட்டம் நம் மனதுக்குள்தான் மிஞ்சுகிறது. இல்லையா!

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

/வாருங்கள் தென்றல்... முதற்தடவையாக வந்திருக்கிறீர்கள். தென்றல் என்ற பெயரைப் பார்த்து பெண் என்று நினைத்தேன். பிறகு தெளிந்தேன்./

என் நண்பரின் மகள் பெயரும், தென்றல்!

/காலம் தனது பெருஞ்சுமையை வெகு நறுவிசாக நம தோள்களில் ஏற்றிப் போகிறது.
......நமது சிந்தனை / உணர்வுகள் காலத்தாலும் ஞாபகங்களாலும் கட்டுண்டிருக்கின்றன.
/
உண்மைதான், கார்த்திக்வேலு!
/மா சிவகுமார் said...
ஆட்ட விதிகளை மாற்றி விடுங்கள். எதிராளியை வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க விடாமல் களத்தை மாற்றி விடுங்கள்/
களத்தை மாற்றலாம். ஆட்ட விதிகளை மாற்றுவது அவ்வளவு எளிதானது தான, சிவகுமார் ?

/தமிழ்நதி said...
மனதில் இடையறாது போர் நடந்துகொண்டுதானிருக்கிறது. என்ன செய்ய?/
எனது எண்ணமும் இதுவே.

தென்றல் said...

/மா சிவகுமார் said...
கடைசியில் போராட்டம் நம் மனதுக்குள்தான் மிஞ்சுகிறது. இல்லையா!/

ஆம். போராட்டம் நம் மனதுக்குள்தான் ... அதை வெளிகொணர்ந்தால், அது வன்முறையாக மாறும் என்ற 'பயம்' எனக்குண்டு. அதையே களமாக மாற்றி, மனம் பக்குவம் படுவதற்கு மனத்திற்கு வலிமை தேவைபடுவதென்பதோ உண்மைதான். ... காலம்தான் பதில் சொல்லும்.

Anonymous said...

பதிவிற்கு பதிலாக
ந.ஜயபாஸ்கரனின் கவிதை வரிகள்
அதிகாலை நேர சிலிர்ப்பு
மலரின் நறுமணம்
குழந்தையின் புன்முறுவல்
நீ
ண்

பகல்
தா
ண்
டி
வருவதில்லை
உயிர்தெழுதல்
ஏசுவிற்கே
சாத்தியம்

பாரதி தம்பி said...

உணர்வுகள் என்னவாக இருந்தாலும் அப்படியே அதை வாசிப்பவரின் மனதுக்குக் கடத்திவிடுகின்றன உங்கள் எழுத்துக்கள்.

//தொலைகடலைக் காட்சிப்படுத்தும் ‘பல்கனி’யில் காற்று, காயப்போட்ட துணிகளுடன் செல்லங் கொண்டாடுகிறது. கன்னத்தை நிமிண்டுகிறது. மேசையிலிருக்கும் புத்தகங்களை இடையறாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காற்றில் ஊஞ்சலில் அமர்ந்து கண்மூடிக் காலுந்தினால் சொர்க்கத்திற்குப் போய்விடலாம் போலிருக்கிறது.//

என்று நீங்கள் முன்பொருமுறை எழுதியபோது பங்காளி சொன்னதுபோன்று உண்மையிலேயே சொர்க்கத்திற்கே போனதுபோன்றிருந்தது.

//பௌர்ணமி நெருங்கும் இரவுகளில் கடல் அழகிய கவிதையாகிவிடுகிறது. நிலவின் கீற்று கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அற்புதமாகப் படர்ந்திருக்க…. அலை திரண்டு குதித்துக் குதித்து ஓடிவந்து கரையில் பொங்கி உடைவதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எதுவோ பொங்கும். கரையும். உலகத்தின் அற்பத்தனங்களையெல்லாம் அந்தப் பேரனுபவம் சற்றைக்கு மறைத்துவிடுகிறது.//

என்ற வார்த்தைகள் மூலம் கடல் ரசிக்க இன்னொரு காரணம் தந்தீர்கள்.

இப்போது

//அவரவர் கோப்பைகளில் அவரவருக்குப் பிடித்த மதுவை நிரப்பிக்கொண்டு ஏதாவதொரு போதையில் மூழ்கிக்கிடக்கிறோம். எதிலாவது கிறங்கிக் கிடப்பதுதான் பாதுகாப்பானது என்ற எண்ணத்தின் விதை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஊன்றப்பட்டிருக்கிறது.// என்று படிக்கும்போது என் கோப்பையின் இருப்பையும், அதன் மதுவையும் அவசரமாக சரிபார்த்துக்கொள்கிறேன்.

//நிலவுக்கஞ்சிப் பரதேசம் போன பாவிகளானோம். எங்கில்லை இந்த நிலவு? எங்கில்லை மரண பயம்? ஓடிக் களைத்து மூச்சுவாங்குகிறது. இருந்தும் கையுயர்த்தி மண்டியிட்டு “தயவுசெய்து என்னைக் கொல்லுங்கள்”என்று சொல்ல முடியவில்லை. “வாழப் பிடிக்கவில்லை. செத்துப்போகிறேன்”என்று கண்ணீரில்லாமல் சொல்லி விடைபெற்றுப் போகிற மனத்திண்மை ஏனின்னும் வாய்க்கப்பெறவில்லை…? வாழ்வின் மீது அத்தனை வெறித்தனமான காதலா? நான் இல்லாவிட்டால் ஏனையோர் என்ன ஆவர் என்பதெல்லாம் எமது மரணபயத்தின் மீதான சப்பைக்கட்டுகள் அல்லவா?//
-பெருமூச்சு மட்டுமே....


//நாம் போனபின்னும் இவ்வுலகம் இருக்கும். நெருங்கியவர் அடித்துப் புரண்டழுவர் சிலநாட்கள். பிணந்தூக்கிப் போனபின்னால் வீடு கழுவிச் சமையல் நடக்கும். துக்கத்தில் இறுகிய மலம் இளகி வெளியேறி மறுநாள் வயிறு இலேசாகும். ஒரு பாடல், ஒரு வார்த்தை, ஒரு புகைப்படம், தெருவில் எதிர்ப்படுகிறவரில் ஒரு சாயல் எம்மை நினைவுறுத்தும்..... வேறென்ன…பூவுதிரும் சாலை வழி மனிதர்கள் நடந்துபோக அன்றைக்கும் அதிகாலை அழகாக விடியும். அவ்வளவே!//

படித்து முடிக்கும்போது ஒருவித விட்டேற்றியான மனநிலை வந்துவிடுகிறாது.

வாழ்வை ரசிக்கவும், வெறுக்கவும் ஒரு முகக்கண்ணாடியேப் போதும்..மாயக்கண்ணாடி தேவையில்லை என்பது என் கருத்து. 'இதே கண்கள்..இதே முடி...இதே எத்துப்பல்...இடமிருந்து வலம் மாற்றி வைக்க முடியாத கன்னத்து மச்சம்...சாகும் வரைக்கும் இதுதானா...?' என்ற ஒற்றைக் கேள்வியே வாழ்வை வெறுக்கப் போதுமானது.

'இந்த சின்னக்கண்ணின் வழிதான், அத்தனை ஆயிரம் நட்சத்திரங்களை பார்க்கிறேனா..? அந்தக் குழந்தையின் மழலை மொழி கேட்டு என்னை மகிழச் செய்தது இந்த செவிகள்தானா..? மீன் வாசத்தையும், அம்மாவின் சேலை வாசத்தையும் பிரித்தறியும் திறன் இந்த நாசிகளுக்கு எப்படி வந்தது...?' இந்த கேள்விகளே வாழ்வை ரசிக்கப் போதுமானது. ஒருவேளை இது என் கோப்பைக்கான மதுவாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். மதுவற்ற வாழ்க்கை யாரேனும் வாழ்கிறோமா என்ன...?

பாரதி தம்பி said...

உணர்வுகள் என்னவாக இருந்தாலும் அப்படியே அதை வாசிப்பவரின் மனதுக்குக் கடத்திவிடுகின்றன உங்கள் எழுத்துக்கள்.

//தொலைகடலைக் காட்சிப்படுத்தும் ‘பல்கனி’யில் காற்று, காயப்போட்ட துணிகளுடன் செல்லங் கொண்டாடுகிறது. கன்னத்தை நிமிண்டுகிறது. மேசையிலிருக்கும் புத்தகங்களை இடையறாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காற்றில் ஊஞ்சலில் அமர்ந்து கண்மூடிக் காலுந்தினால் சொர்க்கத்திற்குப் போய்விடலாம் போலிருக்கிறது.//

என்று நீங்கள் முன்பொருமுறை எழுதியபோது பங்காளி சொன்னதுபோன்று உண்மையிலேயே சொர்க்கத்திற்கே போனதுபோன்றிருந்தது.

//பௌர்ணமி நெருங்கும் இரவுகளில் கடல் அழகிய கவிதையாகிவிடுகிறது. நிலவின் கீற்று கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அற்புதமாகப் படர்ந்திருக்க…. அலை திரண்டு குதித்துக் குதித்து ஓடிவந்து கரையில் பொங்கி உடைவதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எதுவோ பொங்கும். கரையும். உலகத்தின் அற்பத்தனங்களையெல்லாம் அந்தப் பேரனுபவம் சற்றைக்கு மறைத்துவிடுகிறது.//

என்ற வார்த்தைகள் மூலம் கடல் ரசிக்க இன்னொரு காரணம் தந்தீர்கள்.

இப்போது

//அவரவர் கோப்பைகளில் அவரவருக்குப் பிடித்த மதுவை நிரப்பிக்கொண்டு ஏதாவதொரு போதையில் மூழ்கிக்கிடக்கிறோம். எதிலாவது கிறங்கிக் கிடப்பதுதான் பாதுகாப்பானது என்ற எண்ணத்தின் விதை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஊன்றப்பட்டிருக்கிறது.// என்று படிக்கும்போது என் கோப்பையின் இருப்பையும், அதன் மதுவையும் அவசரமாக சரிபார்த்துக்கொள்கிறேன்.

//நிலவுக்கஞ்சிப் பரதேசம் போன பாவிகளானோம். எங்கில்லை இந்த நிலவு? எங்கில்லை மரண பயம்? ஓடிக் களைத்து மூச்சுவாங்குகிறது. இருந்தும் கையுயர்த்தி மண்டியிட்டு “தயவுசெய்து என்னைக் கொல்லுங்கள்”என்று சொல்ல முடியவில்லை. “வாழப் பிடிக்கவில்லை. செத்துப்போகிறேன்”என்று கண்ணீரில்லாமல் சொல்லி விடைபெற்றுப் போகிற மனத்திண்மை ஏனின்னும் வாய்க்கப்பெறவில்லை…? வாழ்வின் மீது அத்தனை வெறித்தனமான காதலா? நான் இல்லாவிட்டால் ஏனையோர் என்ன ஆவர் என்பதெல்லாம் எமது மரணபயத்தின் மீதான சப்பைக்கட்டுகள் அல்லவா?//
-பெருமூச்சு மட்டுமே....


//நாம் போனபின்னும் இவ்வுலகம் இருக்கும். நெருங்கியவர் அடித்துப் புரண்டழுவர் சிலநாட்கள். பிணந்தூக்கிப் போனபின்னால் வீடு கழுவிச் சமையல் நடக்கும். துக்கத்தில் இறுகிய மலம் இளகி வெளியேறி மறுநாள் வயிறு இலேசாகும். ஒரு பாடல், ஒரு வார்த்தை, ஒரு புகைப்படம், தெருவில் எதிர்ப்படுகிறவரில் ஒரு சாயல் எம்மை நினைவுறுத்தும்..... வேறென்ன…பூவுதிரும் சாலை வழி மனிதர்கள் நடந்துபோக அன்றைக்கும் அதிகாலை அழகாக விடியும். அவ்வளவே!//

படித்து முடிக்கும்போது ஒருவித விட்டேற்றியான மனநிலை வந்துவிடுகிறாது.

வாழ்வை ரசிக்கவும், வெறுக்கவும் ஒரு முகக்கண்ணாடியேப் போதும்..மாயக்கண்ணாடி தேவையில்லை என்பது என் கருத்து. 'இதே கண்கள்..இதே முடி...இதே எத்துப்பல்...இடமிருந்து வலம் மாற்றி வைக்க முடியாத கன்னத்து மச்சம்...சாகும் வரைக்கும் இதுதானா...?' என்ற ஒற்றைக் கேள்வியே வாழ்வை வெறுக்கப் போதுமானது.

'இந்த சின்னக்கண்ணின் வழிதான், அத்தனை ஆயிரம் நட்சத்திரங்களை பார்க்கிறேனா..? அந்தக் குழந்தையின் மழலை மொழி கேட்டு என்னை மகிழச் செய்தது இந்த செவிகள்தானா..? மீன் வாசத்தையும், அம்மாவின் சேலை வாசத்தையும் பிரித்தறியும் திறன் இந்த நாசிகளுக்கு எப்படி வந்தது...?' இந்த கேள்விகளே வாழ்வை ரசிக்கப் போதுமானது. ஒருவேளை இது என் கோப்பைக்கான மதுவாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். மதுவற்ற வாழ்க்கை யாரேனும் வாழ்கிறோமா என்ன...?

தமிழ்நதி said...

ஆழியூரான்! ஓரிடம் போய்விட்டு நேற்றுத்தான் திரும்பிவந்தேன். உங்கள் நீண்ட பின்னூட்டம் பார்த்து மகிழ்வும் நெகிழ்வும் அடைந்தேன். எனது பதிவுகளின் ஊடே ஒரு பயணம் செய்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

\\இது என் கோப்பைக்கான மதுவாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். மதுவற்ற வாழ்க்கை யாரேனும் வாழ்கிறோமா என்ன...? \\

என்ற உங்கள் வார்த்தைகள்தான் நாம் வாழும் வாழ்வின் பொருள். ஏதோ ஒரு பிடிப்புத்தான் இன்னமும் வாழ்வோடு எம்மைப் பிணைத்து வைத்திருக்கிறது. அது அறுபடுவதுபோல தோன்றும் கணங்களைத்தான் எழுத்தின் வழியாக இப்படிப் பகிர்ந்துகொள்கிறோம். பகிர்ந்ததைப் புரிந்துகொள்ளும் இதயங்களுக்கு நன்றி. நீங்கள் இப்படி எல்லாப் பதிவுகளின் ஊடாகவும் சென்று பிடித்த பகுதிகளைக் கோடிட்டமை உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது ஆழியூரான். நன்றி.