4.11.2007

அழகின் அழகு!

இதன் பெயர் 'புதினம்'

அழகு உங்களை உறுத்தியதுண்டா…? அழகைப் பற்றி எழுதச்சொல்லி அய்யனார் கேட்ட நாளிலிருந்து உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது. யாரோ விருப்பப்பட்டுக் கேட்ட பொருளைக் கொடுக்காமல் என்னுடன் வைத்துக்கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு தொடர்ந்துகொண்டே இருந்தது.

கடல்
சிறுவயதிலிருந்தே வியப்பின் விழிகளால் பார்த்த அழகுகளில் கடலும் ஒன்று. அலையும் நீலமும் பரந்த நீர்ப்பரப்புமன்றி கடலிடம் என்னதான் இருக்கிறதென்று ஓரிரு சமயங்களில் தோன்றியிருக்கிறது. ஞானிகளின் மௌனம் எப்படி மதிப்பை ஊட்டுகிறதோ அப்படித்தான் கடலின் விரிவும் ஆழமும் உள்ளார்ந்த அமைதியும் பார்க்கப் பார்க்கச் சலிக்காத அதிசயமான அழகு. கடலின் முன் அமர்ந்திருக்கும்போது கர்வம் அழிந்து நாமொரு துளியாகச் சுருங்கிவிடுகிறோம். தனித்தன்மை என்பது எம்மிடம் இருக்கிறதோ இல்லையோ, ஏனையோருள் எம்மை அடையாளப்படுத்த, ‘உன்னைப் போலில்லை நான்’என்று காட்ட எத்தனை பிரயத்தனங்களைச் செய்கிறோம். ஆனால் வானத்தின் நிறத்தையே தன்னிறமாக்கியபடி எத்தனை அடக்கமாக இருக்கிறது இந்தக் கடல். கடலினுள் எத்தனை இரகசியங்கள் கொட்டிக்கிடக்கும்! எத்தனை உயிரினங்கள் வாழ்க்கை நடத்தும்! அதன் காலடியில் அமர்ந்து எத்தனை கனவுகள் பேசப்பட்டிருக்கும்! எவ்வளவு காதலை,கண்ணீரை,பிரிவை,மரணத்தை கடல்மடியும் கரையும் கண்டிருக்கும். கடலின் மீதான வியப்பு, கரை மீதான கடலின் தீராத காதலைப்போல உள்ளுக்குள் எப்போதும் அலையடித்துக்கொண்டேயிருக்கிறது.


பூனைக்குட்டிகள்

மூன்றாண்டுகளின் முன் பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகள் என்றால் வளர்ப்புப் பிராணிகள் என்பதன்றி வேறெதுவும் மனதில் எழுந்ததில்லை. வாழ்வெனும் பயணத்தில் சகபயணிகளை முன்னேறவிட்டு மனோரீதியாகப் பின்தங்கியபோது ஊற்றெடுத்ததுதான் பிராணிகள் மீதான நேசம். அதிலும் பூனைக்குட்டிகள் என்றால்…. அவற்றின் அழகைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால்… ஆயாசத்துடன் இந்தப் பதிவின் வலப் பக்க மேல் மூலையில் ஒரு அழுத்து அழுத்திப் போயே போய்விடுவீர்கள். ஊரில் எங்கள் வீட்டில் மூன்று பூனைக்குட்டிகள் வளர்கின்றன. அதிலொன்றுக்கு மனிதர்களைப் போல பேச மட்டுந்தான் தெரியாது. அது எதைப் பார்த்தாலும் ஆச்சரியத்தோடுதான் பார்க்கும். அதனால் அதற்கு ‘புதினம்’என்று பெயர் வைத்திருக்கிறோம்.(பைத்தியக்காரத்தனமான பெயர்தான்) அதன் கண்களைச் சுற்றி கண்மை தடவி இருகரையிலும் இழுத்துவிட்டாற்போலிருக்கும். உடலோ பனிவெண்மை. சோபாவில் வெகு சுவாதீனமாக கைகளையும் கால்களையும் :-) முன்னும் பின்னுமாக வீசியெறிந்து விட்டுப் படுத்திருக்கும். பஞ்சு போன்றிருக்கும் அதன் அடிவயிற்றில் கைவைத்துத் தடவி கதை சொன்னால் தன் மொழியில் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கும். அந்த மூன்று பூனைகளும் சமையலறையில் பொரித்துவைக்கப்பட்டிருக்கும் மீன்துண்டுகள் தங்களை வளர்ப்பவர்களுக்கானவை என்பதை அடிக்கடி மறந்துபோய்விடும். விளைவு, ஒரு நீண்ட பிரசங்கத்திற்கு நான் செவிகளைத் தாரைவார்த்துவிட்டு அவற்றோடு விளையாடிக்கொண்டிருக்கத் தள்ளப்படுவேன். எனது அண்ணாவின் மகளும் நானும் அலுக்காமல் சலிக்காமல் பேசுபொருட்களாகக் கொள்பவை செல்லப்பிராணிகளின் அழகும் நடத்தையுமே.



அறிவு

சிறுவயதிலிருந்து அநேகமாக எல்லோருக்குமே ஒரு குணம் இருக்கும். அதாவது, அழகானவர்களால் ஈர்க்கப்படுவதும் அவர்தம் அருகாமையை விரும்புவதும். பெரும்பாலானோரின் அழகு குறித்த பொதுவிதியான மெலிந்த, உயரமான, நிறமானவர்களே எனது தேவ தேவதைகள். பள்ளிக்கூடத்தில் அழகான அக்காக்களின் தங்கைகளின் இனிய தோழியாக இருந்தேன். எல்லோரும் ‘பொறாமை… பொறாமை’என்று சொல்கிறார்களே… அது மட்டும் இந்த அழகு விஷயத்தில் எனக்கு வந்ததேயில்லை. ‘உங்கள் கண் அழகு’ – ‘விரல் அழகு’ – ‘சிரிப்பழகு’ இப்படி ஏதாவது அறிக்கை விட்டு அவர்களை அழகாகச் சிரிக்கவைப்பேன். வளர்ந்தபிற்பாடு, புத்தகங்களுள் நீர்க்காகம் போல தலையை அமிழ்த்திக்கொள்ளத் தொடங்கிய பிற்பாடு அறிவுதான் அழகு என்ற ‘அழகான’உண்மை புலனாகியது. ஆணோ பெண்ணோ தேடலை நோக்கிச் செலுத்திச் செல்வோர் எவரோ அவரே-அவளே பேரழகன் மற்றும் பேரழகி. தாங்கள் படித்ததையெல்லாம் மழைக்காலத்தில் மதகு திறந்தாற்போல ஒரேநாளில் கொட்டித் தீர்த்துவிட்டு, மேற்கொண்டு பழகும் சுவாரஸ்யத்தைக் கரைத்து ஒன்றுமில்லாமற் போகிறவர்களையோ, தங்கள் மேதாவித்தனத்தை முரசுதட்டுவதற்கென்றே சொல்லாடுபவர்களையோ, சுயபுராணத்தில் கரைந்துபோகிறவர்களையோ அவர்கள் எத்தனை அழகென்றாலும் அழகுக் கணக்கில் சேர்ப்பதில்லை.(அதனால் அவர்களுக்கென்னவாம் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.)அறிவின் ஒளியே பேரழகு.



மரங்கள்

சென்னைக்கு வந்த புதிதில் வீடு தேடி அலைந்தபோது கூட அலைந்த நண்பர் கேட்டார் “எப்படியான வீடு வேண்டும் உங்களுக்கு…?”-“மரங்கள் அடர்ந்த சாலையில் மரங்களோடு கூடிய வீடு கிடைக்குமா?”என்றேன். “குரங்கா நீ…?”என்று உள்ளுக்குள் நினைத்திருப்பார் போல… வெளியில் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்தார் அவ்வளவே. அப்படியொரு வீடு சென்னை மாநகரத்தில் கிடைப்பதெனில் சொத்து (இருந்தால்)முழுவதையும் எழுதிவைக்கவேண்டும் என்பதே அந்தச் சிரிப்பின் பொருளென இங்கு நெடுநாட்கள் என் பங்கிற்குக் குப்பை கொட்டியபின்னரே அறிந்துகொண்டேன்.மரங்கள், மனதுள் குளிர்ச்சியை,மலர்ச்சியை,புத்துணர்ச்சியை,கவிதையை,காதலை அள்ளி எறிகின்றன. மரங்களின் பச்சை விழிகள் வழியாக மனதெல்லாம் படர்கிறது. கையில் தேநீர்க்கோப்பையுடன் இலைகளில் சூரிய ஒளி பட்டு மினுங்கும் அழகைப் பார்த்துக்கொண்டிருக்கும் காலை நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். அதிலும் இந்த மழைக்காலத்து மரங்களை, அவற்றின் சிலுசிலுவென்ற அழகை கண்களால் உள்ளிழுத்து மனசுக்குள் பூட்டிவைக்க முடிந்தால் எவ்வளவு நல்லது!


அம்மன்கள் என்ற அழகிகள்

“லா.ச.ரா.வின் புத்தகங்களில் வரும் வேலைக்காரி கூட சக்தி அம்சம்தான், அழகுதான்”என்று யாரோ ஒருவர் எழுதியிருந்ததை அண்மையில் வாசித்தேன். அந்த எள்ளலைக் குறித்து எனக்கொரு கருத்துமில்லை. லா.ச.ரா.வின் கதைகளைப் படிக்கும்போது எனக்கொரு முகம் நினைவில் வரும். அது மிக நேர்த்தியாக, கலையின் உச்ச அனுபவத்தில் தோய்த்த தூரிகை கொண்டு வரையப்பட்ட அம்மன் முகம். வளைந்த புருவமும் அமைதியில் கனிந்த விழிகளும் கன்னத்தில் சுடர்விடும் மூக்குத்தியும் நெளிந்திறங்கும் கூந்தலும் கைக்கரும்பும் மெலிந்த இடையும் தொட்டு வணங்கத் தூண்டும் பாதவடிவுமாக என்னிடம் ஒரு அம்மன் படம் இருக்கிறது. நாட்பட்டும் கைபட்டும் நைந்து கிழிந்துகொண்டிருக்கும் அந்தப் படத்திலிருப்பவள் மீது தீராத அன்பு. காதலென்றும் சொல்லலாம். அதைப் போன்ற முக அழகுடைய படங்களை எங்காவது கோயில்களில் காணநேரும்போது ஐந்து நிமிடங்களாவது நின்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். தவிர, எங்கு பயணம் போனாலும் அந்தத் தோழியும் கூடவே வருவாள். கவலை வந்தால் அவ்வப்போது அவள் முன் அழுவதும் நடக்கும். இதை ‘சென்டிமென்ட்’என்பவர்கள், இதை வாசித்துவிட்டு ‘அட நீ இம்புட்டுத்தானா…’எனச் சிரிக்கும் நாத்திகர்கள் எவர் குறித்தும் எனக்கொரு கவலையுமில்லை. (முன்ஜாமீன் போல ஒரு முற்பாதுகாப்பு அறிவித்தலாக்கும்)

அய்யனார் ஆறு அழகுகள் பற்றிக் கேட்டிருந்தார். அறுபது அழகுகள் பற்றிக் கூட எழுதலாம். ஆனால், பதிவின் நீளம் கருதி கடைசி அழகைச் சில வரிகளுள் அடக்குகிறேன். மழை அழகு, மழையில் நடக்கும் பாதங்கள் அழகு, குழந்தைகளின் விழிகளில் தெரியும் அறியாமை அழகு, நடக்கும் நதி அழகு, இருளில் துடிக்கும் சுடர் அழகு, மாதுளம்பூ அழகு, மங்குஸ்தான் பழத்தின் பின்புறமிருக்கும் ஐந்து இதழ் கொண்ட படம் அழகு, முதுயோரின் சிரிப்பழகு, மலை அழகு, மலையில் மழை விழும் அழகே அழகு, இளங்காலை வெயில் அழகு, எவருக்கும் தீங்கிழைக்கவொண்ணா மனம் அழகு, கவிதை அழகு, கண்ணீரும் சிலசமயம் அழகு.

எம்மிடம் கையளிக்கப்பட்ட ஒரு வேலையை முடித்தபிறகு ஒரு அமைதி,நிறைவு,பரவசம் பரவும். அந்த ‘அழகான’ உணர்வு இப்போது என்னுள் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், எனதினிய நண்பர்களே!இனிமேல் இப்படி யாராவது அழைத்தால் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். காரணம்,இந்தப் பொருளில் இந்தக் காலத்திற்குள் எழுது என அழைத்தால் கணனி எதிரியாகிவிடுகிறது. அய்யனார் அரிவாளோடு அழைத்ததால் ‘பயந்துபோய்’ சம்மதித்தேன்.:-)
என் பங்கிற்கு யாரையாவது எரிச்சலூட்ட வேண்டுமென்று எண்ணியபோது மனதில் வந்த பெயர்கள்:
'மிதக்கும் வெளி' -சுகுணா திவாகர்
'தத்தக்க பித்தக்க' -சிநேகிதி (பழி வாங்கிடாதையம்மா)
'வசந்தம்'-தென்றல்

18 comments:

Ayyanar Viswanath said...

தமிழ்நதி

அழகு எழுதியதற்க்கு நன்றி..
எப்பவும் மெல்லிசா சோகம் இழையுற இருக்கும் உங்க எழுத்தை கொஞ்சம் மலர்ச்சியா பாக்கனும்னு தோனுச்சு அதனாலதான் பெரிய ஆள் னு தெரிஞ்சும் கூப்டேன்..:)

நன்றிகள் பல

தமிழ்நதி said...

பெரிய ஆளா நானா...? அய்யனாரே!இறைச்சி,சாராயம் எல்லாம் படைக்கிறேன். இப்படி மட்டும் சொல்லாதீங்க:-)

நாமக்கல் சிபி said...

//எப்பவும் மெல்லிசா சோகம் இழையுற இருக்கும் உங்க எழுத்தை கொஞ்சம் மலர்ச்சியா பாக்கனும்னு தோனுச்சு //

நானும் ரொம்ப யோசிச்சிருக்கேன். இது பத்தி! ஏன் இப்படி எப்பவுமே சோகம் இழையோட எழுதறாங்களோன்னு!

//அய்யனாரே!இறைச்சி,சாராயம் எல்லாம் படைக்கிறேன். இப்படி மட்டும் சொல்லாதீங்க//

சுருட்டை விட்டுட்டீங்களே தமிழ்நதி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

‘உன்னைப் போலில்லை நான்’என்று காட்ட எத்தனை பிரயத்தனங்களைச் செய்கிறோம். ஆனால் வானத்தின் நிறத்தையே தன்னிறமாக்கியபடி எத்தனை அடக்கமாக இருக்கிறது இந்தக் கடல் //

:)

இலவசக்கொத்தனார் said...

நல்லா எழுதி இருக்கீங்க. அப்புறம் ஏன் எழுத மாட்டேன் என்று. வேண்டிய அளவு நேரமெடுத்து எழுதுங்கள் அவ்வளவுதானே. :)

மங்கை said...

கடல் அழகோ அழகு... நீங்கள் சொல்லிய விதமும்.. நல்லா இருக்கு தோழி..

வசந்தன்(Vasanthan) said...

/கடலின் முன் அமர்ந்திருக்கும்போது கர்வம் அழிந்து நாமொரு துளியாகச் சுருங்கிவிடுகிறோம்.//

பலநேரங்களில் பகுத்தறிவையே ஆட்டம்காண வைக்கும்.
கடலை ஓர் உயிருள்ள, சிந்திக்கத் தெரிந்த சக்தியாக பலநேரங்களில் உணரமுடியும்.
தன்னை மற்றவர்கள் அறியமுடியாத பூடகமான சக்தியாக தக்கவைத்திருப்பதில் கடல் இன்றுவரை வெற்றிபெற்றுள்ளது.

தென்றல் said...

/அது எதைப் பார்த்தாலும் ஆச்சரியத்தோடுதான் பார்க்கும். அதனால் அதற்கு ‘புதினம்’என்று பெயர் வைத்திருக்கிறோம்/
:)

/மழை அழகு, ....
இளங்காலை வெயில் அழகு, எவருக்கும் தீங்கிழைக்கவொண்ணா மனம் அழகு, கவிதை அழகு, கண்ணீரும் சிலசமயம் அழகு./

14தாங்க இருக்கு... மீதி(அறுபதை)யும் எழுதிங்களேன், தமிழ்நதி!

ஏங்க... இவ்வளவு அழகா எழுதிட்டு என்னலாம் கூப்படனும்-னு எப்படிங்க தோணிச்சி? ரெண்டு நாள் அவகாசம்தறிங்களா?

கதிர் said...

அழகுக்கே அழகு சேத்துட்டிங்க தமிழ்நதி!


பூனைக்குட்டிகளைப் பற்றி படித்ததுமே அதை தொடற மாதிரியும், சீண்டற மாதிரியும் ஒரு கற்பனை வருது.

அழகுக்கு அழகு சேர்த்துட்டிங்க!

சென்னைல அதே மாதிரி வீடு பாத்திங்களா?

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அய்யனார்,நாமக்கல் சிபி,முத்துலட்சுமி,இலவசக்கொத்தனார்,மங்கை,வசந்தன்,தென்றல்,தம்பி அனைவருக்கும் நன்றி.

\\சுருட்டை விட்டுட்டீங்களே தமிழ்நதி!\\-நாமக்கல் சிபி
பெரிய ஆள் என்று சொன்ன மயக்கத்தில் விட்டுப்போய்விட்டது சிபி. நினைவுபடுத்தியதற்கு நன்றி:-)

முத்துலட்சுமி!உங்களை நம்பியே பதிவு போடலாம் போலிருக்கிறது. எனது பதிவுகளில் எல்லாம் உங்கள் பெயரைப் பார்க்க முடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி!

\\வேண்டிய அளவு நேரமெடுத்து எழுதுங்கள் \\-இலவசக்கொத்தனார்

"அவசரப்பட்டு எழுதி எங்க கழுத்தை அறுக்கணுமா..."என்று கேட்பது போலிருக்கிறது:) நிச்சயமாக.

அழகுக்கு அன்புடன் பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றி மங்கை.

\\பலநேரங்களில் பகுத்தறிவையே ஆட்டம்காண வைக்கும்.
கடலை ஓர் உயிருள்ள, சிந்திக்கத் தெரிந்த சக்தியாக பலநேரங்களில் உணரமுடியும்.
தன்னை மற்றவர்கள் அறியமுடியாத பூடகமான சக்தியாக தக்கவைத்திருப்பதில் கடல் இன்றுவரை வெற்றிபெற்றுள்ளது.\\-வசந்தன்

கடற்கரையோர கிராமத்தில் அதிக நாட்கள் வாழ்ந்தவர் என்பதனால் கடலைப் பற்றி நீங்கள் நிறைய அறிந்திருப்பீர்கள். அந்த அனுபவத்தை ஒரு பதிவாகப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

\\ஏங்க... இவ்வளவு அழகா எழுதிட்டு என்னலாம் கூப்படனும்-னு எப்படிங்க தோணிச்சி? ரெண்டு நாள் அவகாசம்தறிங்களா?\\-தென்றல்

தென்றல்!நீங்கள் நன்றாகத்தானே எழுதுகிறீர்கள். அதனால்தான் கூப்பிட்டேன்.தவிர, வலைப்பதிவுக்குப் புதியவர் என்ற ஒரு வாஞ்சையும் காரணம். அவகாசம் எடுத்து 'அழகாக'எழுதுங்கள். மூணாப்பு படிக்கிற புள்ளை மாதிரி இப்பிடியா கேப்பாங்க:)

\\சென்னைல அதே மாதிரி வீடு பாத்திங்களா?\\-தம்பி
தம்பி!விற்பதற்கு இங்கு சொத்தில்லை. அதனால் மரங்களடர்ந்த முற்றமுள்ள வீடு எடுக்கமுடியவில்லை. ஆனால்,நாங்கள் இப்போது வீடு எடுத்து இருக்கும் சாலையோரம் முழுவதும் மரங்கள்தான். மஞ்சள் பூவுதிர்ந்து கிடக்கும் சாலையோரம் இளங்காலையில் நடப்பது அற்புதமான அனுபவம்.

இலவசக்கொத்தனார் said...

//"அவசரப்பட்டு எழுதி எங்க கழுத்தை அறுக்கணுமா..."என்று கேட்பது போலிருக்கிறது நிச்சயமாக.//

அப்படி எல்லாம் சொல்ல வரலை. நீங்க சமயத்திற்குள் எழுத வேண்டும் என்ற அழுத்தம் இருப்பதாகச் சொன்னதால்தான் இப்படிச் சொன்னேன். :)

தென்றல் said...

/மூணாப்பு படிக்கிற புள்ளை மாதிரி இப்பிடியா கேப்பாங்க
/

ஹி...ஹி...:)

இரண்டு வகுப்பை கூட சொல்லிட்டேங்களே, தமிழ்நதி!

வசந்தன்(Vasanthan) said...

தமிழ்நதி,
சுவாரசியமான சம்பவங்கள் இருக்கின்றன. சொன்னால் பலர் நம்பப்போவதுமில்லை.
வெளியிலிருந்து யோசித்தால் பைத்தியக்காரத்தனமாகத் தெரியும்.
'அந்தக் கடல் ஆண்கடல், பொம்பிளையளைக் கண்டால் குணங்கொள்ளும்' என்று சொல்லிக் கேள்விப்படும்போது சிரிப்புத்தான் வரும். இன்றும்கூட அது பொய் என்று சொல்லமுடியும். ஆனால் குறிப்பிட்ட சில பொழுதுகளிலாவது அக்கூற்று உண்மை என்று என்னை நம்பவைத்திருக்கிறது கடல். இன்று அக்கூற்றை ஒருவர் சொன்னால், அதை ஆதரித்துச் சொல்லப்போவதில்லையாயினும், எதிர்த்து வாதாட முடியாதபடி என்னை மாற்றிவைத்திருக்கிறது கடல்.
உங்களுக்குக் கொடுப்புக்குள் சிரிப்பு வருகிறதல்லவா?

இதைக் கேளுங்கள்.
ஒருமுறை தாளையடிக் கடலில் நடந்தது இது. நாங்கள் கொஞ்சப்பெடியள் கடற்கரையில விளையாடிக்கொண்டிருந்தம். அந்தவழியால் வந்த ஒருவர், 'பெரிசாக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டாம், கடலுக்குக் கோபம் வந்திடும்' எண்டிட்டுப் போனார்.
நாங்கள் விட்டோமே?
காய் கூய் எண்டு கத்தினோம். கடலைப்பாத்துத்தான் கத்தினம். மண்ணெடுத்து கடலுக்கு எறிஞ்சு கத்தினம். ரெண்டு மூண்டுபேர் இன்னும் முத்திப்போய் காற்சட்டையை இறக்கி பின்பக்கத்தைக் கடலுக்குக் காட்டி ஏதோ சொல்லி ஆட்டினாங்கள். என்னடா செய்யிறியள் எண்டு கேட்டா அப்பதான் கடலுக்கு நல்லாக் கோபம் வருமெண்டாங்கள். ஆனா கடல் வழமைபோல பேசாமல் தான் இருந்தது. அலை மட்டுமட்டா வந்து நனைக்கக்கூடிய தூரத்தில நிண்டுதான் நாங்கள் இதெல்லாம் செய்தம். எங்கட சேட்டை முத்திப்போற நேரத்திலதான் அதுநடந்தது.
நல்லா ஏறிவந்த அலையொண்டு நாங்கள் நிண்ட இடத்தில பலமா அடிச்சு ரெண்டுமூண்டு பேரை விழுத்திப்போட்டுது. விழுந்த ஒருத்தன் அதிர்ச்சியில மூச்சை இழுத்திட்டான். மணல் கலந்த தண்ணி மூக்குக்கயும் வாயுக்கயும் போயிட்டுது. நிமிந்தவனால மூச்செடுக்க முடியேல. திணறத் தொடங்கீட்டான். மற்றவங்களும் அதிர்ச்சியிலயிருந்து மீண்டு கரைப்பிட்டி தாண்டீட்டாங்கள். அதுக்குள்ள அடுத்தடுத்ததா அலைகள் மூசியடிக்கத் தொடங்கீட்டுது. மூச்சுத்திணறினவன் இன்னும் மூச்சுவிடேல. கண்ணெல்லாம் சொருகிற மாதிரி வந்திட்டுது. பிறகொருமாதிரி எல்லாம் சரிவந்திட்டுது. தான் செத்துப்போறதாகவே முடிவெடுத்திட்டன் எண்டு அவன் பிறகு சொன்னான். அவன் பட்ட பாட்டைப் பார்த்த நானும் செத்துத்தான் மீண்டிருந்தேன்.
எல்லாரின்ர முகத்திலயும் அதிர்ச்சிதான். நான் வடிவாக் கவனிச்சன். நாங்கள் நிண்ட பகுதியில மட்டும்தான் அலைகள் மூசி அடித்தன. அந்தப்பகுதியில் மட்டும் மிக ஆழமாக அலைகள் வந்து கரைப்பிட்டியைத் தாண்டுமளவுக்கு அடித்தன.

ஒருவரும் ஒன்றும் கதைக்கவில்லை. பேசாமல் கலைந்துசென்றோம். அந்நிகழ்வு பற்றி எங்களுக்குள் கதைப்பதையே தவிர்த்தோம். அச்சம்பவத்தை எப்படிப் புரிந்துகொள்வதாக மற்றவர்களுக்குச் சொல்வது என்பதில்தான் எல்லோருக்கும் சிக்கலிருந்தது என்று நினைக்கிறேன். இதுவொரு சாதாரணமான, எதேச்சையான சம்பவம்தான் என்று பின்னாளில் முடிவெடுத்திருந்தேன். இன்றும் யாருக்கும் சொல்லவேண்டுமானாலும் அதைத்தான் சொல்வேன். ஆனாலும் இன்னொருமுறை அப்பிடியொரு பரிசோதனையைத் தலைமைதாங்கிச் செய்யவே போவதில்லை என்றளவுக்கு எனக்கோர் அனுபவத்தைத் தந்திருக்கிறது கடல்.

என்னைப்பொறுத்தவரை 'அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது' என்று கமல்காசன் சொன்ன வகைக்குள் வரும் சில அனுபவங்களில் இதுவுமொன்று.

கடற்கரையோடு தொடர்புடையவர்களிடம், கடற்றொழிலாளரிடம் இதுபற்றிக் கதைத்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கடலை உயிருள்ள, சிந்திக்கத் தெரிந்த ஒன்றாகவே பார்க்கிறார்கள்.
___________________________

இதுக்கு வரப்போகும் நக்கல்களைத் தாங்கத் தயாராகவே உள்ளேன்.

தமிழ்நதி said...

வசந்தன்,

நீங்கள் எழுதியதை வாசித்ததும் இனம்புரியாத பயம் ஏற்பட்டது. நாங்கள் பகுத்தறிவு என்கிறோம்... மேகத்தைக் கிழித்துப் பறக்கும் விமானம் விட்டோம் என்று பீற்றிக்கொள்கிறோம். ஆனால்,பல சமயங்களில் இயற்கையைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இழிவைத் தாங்கவியலாத மனமொன்று இயற்கைக்குள் இருக்கக்கூடும். அது தன் கண்களால் எங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதை நாங்கள் அறியாதிருக்கக்கூடும். யாருக்குத் தெரியும்...விடுபட முடியாத புதிர்களாலும் திருப்பங்களாலும் இரகசியங்களாலும்தான் இந்த உலகம் இன்னமும் சுவாரசியமுள்ளதாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.

சினேகிதி said...

Vasanthan anna....ipidi ellama seiveengal kadaluku?? paavam athu.

Kadaluku koovam varathendu engada ammammavum solrava anan naan koyil therthauku madumthan kadal pakkam porathe athvum thanila irangapayathila saamiku saathura selai ponra samankal irukira tractor la eari ninduthan puthinam parkirathu.

Period times la girls nerupuku pakatila poka koodathendum solravai ello.

மலைநாடான் said...

//இளங்காலை வெயில் அழகு, எவருக்கும் தீங்கிழைக்கவொண்ணா மனம் அழகு, கவிதை அழகு, கண்ணீரும் சிலசமயம் அழகு.//

அழகழகாச் சொல்லியிருக்கீங்க. இத நாங்க சொல்லலாம்.. தமிழ்நதியின் எழுத்தழகு.

நன்றி.

மலைநாடான் said...

//இதுக்கு வரப்போகும் நக்கல்களைத் தாங்கத் தயாராகவே உள்ளேன்.//

வசந்தன்!
என்னைப்பொறுத்தவரை ஏளனம் செய்ய இல்லை. நீங்கள் ஒரு தடவையோடு நிறுத்திக் கொண்டீர்கள். நான் மூன்று தடவைகள் பரீட்சித்துப்பார்த்திருக்கின்றேன். அந்த அனுபவம் சற்று நீளமாகவரும் ஆதலால் பதிவாகவே போட்டுவிடுகின்றேன்.
நன்றி.

கானா பிரபா said...

அழகை அனுபவிப்பதை அழகாகவும் சொல்ல வேண்டும் என்பதைக் காட்டியிருக்கிறியள். நல்லா இருக்கு.