4.27.2007

மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு


வார்த்தைகளால் ஒரு கொலையை
நிகழ்த்தி முடித்தவளுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
சிரித்தபடி சிதைத்த நரம்புகளிலிருந்து
நகர்ந்து வருகிறது குருதி
மூலைகளெங்கும் பதுங்குபவள் முன்
செந்நிறத்துளிகள் பாம்பின் தலையென
நிலைகுத்தி நிமிர்கின்றன


நேற்றைய பகலில் சில நிமிடங்கள்
என்னுதடுகளை
சாத்தான் இரவல்கொண்டிருந்தான்
தொடர்ந்த கோடை இரவின் நீளத்தை
உயிர்நிலையில் ஊசி இறக்கிய
சொற்களை ஞாபகிப்பதன் வழி அளக்கிறேன்


தாம் செய்வது இன்னதென்று
அறிந்தே செய்பவர்களை
கர்த்தரே! தயைகூர்ந்து கைவிடும்.


ஒரு கணப் பிறழ்நிலையை
யாரும் புரிந்துகொள்ளக் கேட்கவில்லை.
கைத்தொலைபேசி வழி எறியப்பட்ட
வன்மத்தின் கற்களாலும்
குற்றவுணர்வாலும்
கட்டப்படுகிறது எனது கல்லறை


அநேக பயணப்பொதிகளில் இருக்கக்கூடும்
மன்னிக்கப்படாதவர்களின்
கண்ணீர் தெறித்து கலங்கிய
நாட்குறிப்பும் கவிதைகளும்.

11 comments:

கலை said...

கவிதை புரிகின்ற மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. :)

Anonymous said...

Hello Friend:

I felt the same when i bursted out few weeks back in phone. why did i do that, and why did you do that.

I still feel I cannot understand myself.
Friendly,

தமிழ்நதி said...

அனானி நண்பரே! நீங்கள் சொன்னது போல பேசிவிட்டு நானும் வருந்தியிருக்கிறேன். கோபம் நிலைப்பதில்லை. காலம் அதைக் கரைத்துவிடுகிறது.

கலை!புரியாததுதானே நல்ல கவிதையாம்:)

நான் ஒருவரிடம் விளையாட்டுத்தனமாகப் பேசப்போய் அவரைப் புண்படுத்திவிட்டேன். அந்தக் குற்றவுணர்வில் எழுதியது. அவர் இப்போது சமாதானமாகிவிட்டார். எனக்குத்தான் உறுத்தல் போகவில்லை. இப்போது புரிகிறதா :)

மிதக்கும்வெளி said...

/வார்த்தைகளால் ஒரு கொலையை
நிகழ்த்தி முடித்தவளுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்/

உண்மைதானா?

நளாயினி said...

இந்த கவிதை என்னை நிறைய வருத்துகிறது. கோபம் இருக்கும் இடத்தில் தான் அன்பு இருக்கும் என்பதை எப்போது உணர்வார்களோ. மற்றவர் மனதை புண்ணாக்கியே பளக்கப்பட்டர்களால் ஒருபோதும் நம்மை புரிந்து கொள்ளவே முடியாது.மன்னிப்போம் மறப்போம் அது தான் எனது கொள்கை.நான் நினைக்கிறேன்மீண்டும் பளையமாதிரி அவர்களால் நம்மை ஒருபோதும் நெருங்கவே முடியாது என . நாம் நெருங்குவோம் ஆனால் அவர்களால் முடியாது.அவர்களது வார்த்தைக்கொடுமையின் குற்ற உணர்வு நம்மிடம் அவர்களை நெருங்க விடாது. என்ன செய்வது.

இப்படிப்பட்டவர்கள் திருந்தவார்கள் என்பதும் கேள்விக்குறியே.

தமிழ்நதி said...

எல்லோருக்கும் சொல்வதற்கென தத்தம் பக்கத்து நியாயங்கள் இருக்கும். நமது நாக்கும் மிகச்சிலசமயங்களில் சொல்வழி கேட்காத ஊதாரிப் பிள்ளையாகிவிடுகிறது. உறவொன்றை இழந்த தண்டனையை அதற்காகப் பெற்றுக்கொண்டேன். ஆனால், இழந்துவிட்டதற்காக வருந்தவில்லை இப்போது.

நளாயினி!இப்போதெல்லாம் அடிக்கடி எனது வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமிடுகிறீர்கள். ஏற்கெனவே நான் வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் அறிந்த பெயர்தான் உங்களது. மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

லக்கிலுக் said...

//அவர் இப்போது சமாதானமாகிவிட்டார். //

அப்பன்னா தலைப்பை மாற்றிவிடுங்களேன்

"மன்னிக்கப்பட்டவளின் நாட்குறிப்பு" என்று :-)

தமிழ்நதி said...

லக்கிலுக்! குசும்பன் பெயரை நீங்க கொஞ்ச நாளைக்கு கடன் கேட்டுப் பாருங்க. கொடுத்தாலும் கொடுப்பார். அதான் பொருத்தமாக இருக்கும்.:)

அந்தக் கவிதையை எழுதும்போது நான் மன்னிக்கப்படவில்லை. எழுதியபிறகும் மன்னிக்கப்படவில்லை... ஆனால், சம்பந்தப்பட்டவர் சமாதானமாகிவிட்டார். சமாதானமாவது வேறு மன்னிக்கப்படுவது வேறு. அதனால அது 'மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு'த்தானாம்... விளக்கம் சரியா:)

நளாயினி said...

நானும் அப்படி எனது குடும்ப நண்பரை இழந்தேன். என்னில் தவறா அவர்களில் தவறா இன்னும் தான் எனக்கு புரியவே இல்லை.அது மனதை அலைக்கழிக்கிற ஒரு விடயமாகவே இன்றும் உள்ளது. நீங்கள் சொல்வதைப்போல் இந்த நாக்கையும் வாயையும் கொஞ்சம் கட்டிவைத்திருந்திருக்கலாம் தான். சிலசமயங்களில் அதிக உரிமை எடுத்து கதைத்துவிடுகிறது. இன்னொன்று அதிக அன்புள்ள இடத்தில் தான் அதிகம் நாம் செல்லமாக இருப்பதும் கோபப்படுவதும் அழுவதுமாக போகிறது காலம். அவர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என்பதாலே தெரியவில்லை. ஆனாலும் அது தவறு என உங்கள் கவிதையினூடாக இப்போது புரிகிறது. இப்போதாவது தெளிந்தேனே. நன்றி நதி.

ஜமாலன் said...

//வன்மத்தின் கற்களாலும்
குற்றவுணர்வாலும்
கட்டப்படுகிறது எனது கல்லறை//

குறிப்பான பிரச்சனையிலருந்து பொதுமையை நொக்கி நகரும் கவிதையின் இவ்வரிகள் அருமை. உங்கள் நுண்ணுணர்விற்கு பாராட்டுக்கள்.

தமிழ்நதி said...

நன்றி ஜமாலன்! நீங்களும் வந்து வாசித்தீர்கள் என்பதில் மகிழ்ந்தேன். தங்களது 'உடலின் அரசியல்'போன்ற கட்டுரைகளைப் படித்தபிறகு 'இவரெல்லாம் எனது வலைப்பக்கம் வருவதில்லையே'என்று யோசித்திருக்கிறேன். இன்று வந்திருக்கிறீர்கள். நன்றி.