பூக்கள் இறைந்த கனவின் வழியில்
இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி
இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்
அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி
மறந்துபோகிறான் துணையை
அவன் தேர் நகர்ந்த வீதியும்
நெகிழ்ந்ததோ…! நனைந்ததோ…!
சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள்
திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாயினான்
அவள் பிச்சியாகினாள்
“அன்பே! என்னோடிரு... என்னோடிரு…!”
கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்!!!
சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.
29 comments:
Dear Tamilnathy,
your poetry got some historical and factual errors, places which you mentioned has need some verification.Kindly see to it.How is mother? When are you Coming back?Take care of yourself.Very happy that your tring other areas also. Your peotry recollects Yasodhara's pain ful moments .
poopathy
:(
யசோதரையின் சோகம் பதிவு செய்யப் படாத வரலாறு என்று சொல்லவருகிறீகள்!
உண்மைதான்!
இனிமே எல்லாம் உங்க கவிதையை நல்லா இருக்குதுன்னு சொல்லி டை வேஸ்ட் பண்ணிட்டிருக்க மாட்டேன்.
ஏறக்குறைய இதே போன்ற ஒரு சிறு கவிதை.வரிகள் சரியாக நினைவில்லை.
"போதி மரத்தின் கீழமர்ந்த
சித்தார்த்தன் புத்தரானான்.
நம்பி வந்த யசோதை
என்ன ஆனாள்?"
ஏறக்குறைய இது போன்றுதான் இருக்கும். யார் எழுதினதுன்னு தெரியலை.
//ஒளிவட்டங்களின் பின்னால்தானிருக்கிறதுகவனிக்கப்படாதஇருட்டும்.//
உங்களால மட்டும் எப்படி இப்படி எல்லாம் வடிக்க முடியுது.....
//சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.//
அருமை!
விழிகள் காணவிரும்புவதெல்லாம்
வெளிச்சம் மட்டுமே!
அழகான படைப்பு. பேசப்படாதவள்கள் நம் வரலாறுகளில் அதிகம் பேர் உள்ளனர்.
தீபா
அருமையான சிந்தனை தமிழ்நதி. புராணங்களிலும் வரலாற்றிலும் இதுபோல் பேசப்படாதவர்கள் ஏராளம். தசரதனின் அறுபதாயிரம் மனைவிகளில் எத்தனை பேரின் பெயர்களை அவன் அறிந்திருப்பான்? ஊர்மிளையின் சுமந்த துக்கம் எதன் பொருட்டு? மனைவியை சிவனடியாருக்கு தானமளித்தாராமே அறுபத்து மூவரில் ஒருவர் - அவர் மனைவியின் பெயராவது இன்று யாருக்கேனும் தெரியுமா? அடுக்கிக்கொண்டே போகலாம் இந்த வரிசையில். இதயம் கனக்கிறது இது போல் காற்றில் கரைந்தவர்களின் துயரங்களை நினைக்கையில்....
Perfect score, Tamilnathy. Simple, yet strong.
மதிப்பிற்குரிய பூபதி!நான் கவிதை எழுதுவதே வரலாற்றுத் தவறுதான்.:) இந்தக் கவிதையில் என்ன வரலாற்றில் தவறிழைத்திருக்கிறேன் என்பதைத் தயவுசெய்து சுட்டவேண்டுகிறேன். தெளிவுபடுத்தினால் தெரிந்துகொள்கிறேன். நான் எப்போதோ ஊரிலிருந்து திரும்பிவிட்டேன். அம்மா குணமடைந்து வருகிறா.
அடையும்வரை அலைந்து அடைந்தபிறகு மறக்கப்படும் எல்லாப் பெண்களும் யசோதரைகளே. தாம் தேர்ந்த துறைகளில் தங்களைப் பொருத்திக்கொண்டுவிட்ட ஆண்களுக்கு வீடும் மனைவியும் இரண்டாம்பட்சமாகிவிடும் 'மறதி'யை மறக்க முடியவில்லை நண்பர்களே. கருத்துக்கு நன்றி சிபி,நந்தா,இப்னு ஹம்துன்,தீபா,லஷ்மி,கணேஷ். வாசிக்கும் உங்களை நம்பி புத்தகம் போடலாம் போலத்தானிருக்கிறது :)
நதி என் லெவலுக்கு ஒரு கவிதை எழுதினதுக்கு நன்றி..
முதல் முறையா படிச்ச உடன்.. கோனார் தமிழ் உரை இல்லாம புரிஞ்சிட்டேன்...:-)))
நான் இதே போல ஊர்மிளையை யோசித்திருக்கிறேன் தமிழ்.. வியப்பாயிருந்தது உங்கள் கவிதை.
//“அன்பே! என்னோடிரு... என்னோடிரு…!”
கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்!!!//
ம்ம்.. வேறென்ன சொல்ல? நல்லாயிருக்குங்கிறத தவிர..
http://nirmalaa.blogspot.com/2007/06/blog-post.html
ஒரு அழைப்பு விடுத்திருக்கிறேன் தமிழ்நதி. குறிப்பிட்டதில் ஆட்சேபனை இருக்காது என்று நம்புகிறேன். நன்றி.
"முதல் முறையா படிச்ச உடன்.. கோனார் தமிழ் உரை இல்லாம புரிஞ்சிட்டேன்...:-)))"
என்ன மங்கை... இவ்வளவு நாளா என் கவிதையோடு இத்தனை கஷ்டமா பட்டீர்கள்? கோனாரின் உதவியோடு படிக்கும்படியாகவா நான் எழுதிவந்திருகக்கிறேன்...ம்!
காயத்ரி!புகழ்ந்தே என்னை ஒரு வழி பண்ணுவதென்று நீங்கள் தீர்மானித்த பிற்பாடு நானென்ன செய்வதற்குண்டு..:)
நிர்மலா!'எட்டு'ஆட்டத்திற்கு அழைத்திருக்கிறீர்கள். முன்பு எழுத்தில் விளையாடியிருப்பவர்களை முதலில் படித்துவிட்டு வருகிறேன். எனக்கும் என்னைப் பற்றி ஏதாவது சொல்லும் ஆசை உள்ளுக்குள் இருக்குமோ என்னவோ (தன்னைத்தான் பீற்றிக்கொள்வதில் யாருக்குத்தான் ஆசையில்லை..:) எழுதலாம் என்றுதான் நானும் நம்புகிறேன்.
வணக்கம் தமிழ்,
கவிதை நன்றாக வந்திருக்கிறது. ஒளிவட்டத்தின் பின்னிருக்கும் இருளின் காரணம் ஒளிவட்டத்திற்கு உரியவர் மட்டுமல்ல... சமூகமும் தான்.
சித்தார்த்தன் நடந்தது கபிலவஸ்துவின் தெருக்களில்... பாடலிபுத்திரத்தில் அல்ல... அதை தான் தேவேன்ந்திரா குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.
அம்மா நலமாக உள்ளார்கள் அல்லவா தமிழ்?
இயன்றால் நாளை கதைக்கிறேன் ( ;-) )
அன்பு சித்தார்த்! புத்தர் வாழ்ந்தது பாடலிபுத்திரத்தில்தான் என எனது மூளையில் எங்கோ பதிந்துவிட்டிருந்தது. கவிஞர் தேவேந்திர பூபதி லும்பினி என்கிறார். இணையத்தில் தேடியபோது இந்த வலைப்பக்கத்தில் புத்தர் பிறந்த இடம் குறித்த ஐயத்தைப் பார்த்தேன்.
http://www.hinduonnet.com/fline/fl2204/stories/20050225001008800.htm
அந்தக் குறிப்பிட்ட வரியையே கவிதையிலிருந்து நீக்கிவிட்டேன். புத்தருக்கு ஞானம் பிறந்தது அரச மரத்தடியில்... ஆனால் அவர் பிறந்தது எங்கே... என்பது பற்றி வேறும் கருத்துக்கள் வரலாம்.
சிந்திக்க தூண்டிய வரிகள் புதிதான் கருத்தில்லை என்றாலும். இது போன்ற கேள்விகள் விடையில்லாதவை.
நல்லதொரு கவிதை. நல்லதொரு நாடகத்திற்கான கருவும் கூட. இது போன்று வாசித்து நாளாகிவிட்டது. "The darkest corner is always underneath the lamp" என்ற ஜென் பழமொழியை நினைவுக்கு கொண்டுவந்தது. கடைசி வரிகளை இன்னும் சற்று 'கவித்துவ' மொழிக்கு மாற்றமுடியுமா என்று யோசியுங்களேன். தலைப்பையும். நன்றி.
வளர் மதி..
கவித்துவ மொழி என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்?!
அப்படி என்றால் என்ன?!
கவிதை என்றால் என்ன ?!
- எனது அறிவுக்கு எட்டியபடி சித்தார்த்தன் நடந்தது கபிலவஸ்துவின் தெருக்களில் என்றே அறிந்திருக்கிறேன்.
சிங்கள பெளத்த இலக்கியங்களின் ஊடாக.தோழி ஒருத்தியின் உதவியுடன்.முடிந்தால் அந்நூலின் பெயரை புதையுண்ட நினைவில் இருந்து கிளறி எடுத்து தர முயற்ச்சிக்கிறேன் :-)
பாராட்டுக்கள்.
நன்றி கீர்த்தனா.
எனது பகிர்வில் கடைசி மூன்று வரிகளை சற்றே 'கவித்துவம்' தொனிக்க மாற்றி எழுத முடியுமா என்று யோசியுங்களேன் என்று மட்டுமே எழுதியிருக்கிறேன். அது 'விமர்சனம்' அன்று எனது சிறு அக்கறையின், வெளிப்பாடு என்பதை தாங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்றே கருதுகிறேன். மற்றது, கவிதையில் தகவல்கள் சரியாக இருக்கவேண்டும் என்பது போன்ற வாதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கவிதைகள் தகவல்கள் குறித்தவை அல்ல என்ற காரணத்தினால்.
கவிதை, கவித்துவ மொழி என்பவற்றுக்கெல்லாம் ஒரு ஒற்றை வரையறையைத் தந்துவிட முடியுமா என்ன? காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம், இவற்றுக்குள்ளும்கூட, பலருக்கும் பல சாய்வுகள் இருந்திருக்கின்றன என்பதை தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.
உரைநடை என்பது ஒரு பக்கத்தின் இடது ஆரம்பத்தில் தொடங்கி வலது மூலை வரை சென்றுவிட்டுத் திரும்புவது, ஆனால் கவிதை இடையிலேயே முறித்துக் கொண்டு திரும்புவது என்று ஒரு வரையறையை பல வருடங்களுக்கு முன்பாக வாசித்த நினைவு. விளையாட்டுத்தனமாக அல்ல. ஒரு சீரியசான, பிரிட்டிஷ் மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில்.
கவிதை என்பது மானுட ஆன்மாவின் வெளிபாடு என்றும் ஒரு கருத்து உண்டு.
அறிவால் சொல்ல முடியாத அனுபவங்களை மிகச்செறிவாக வெளிப்படுத்தும் மொழியின் சாத்தியம் என்றும் ஒரு கருத்து உண்டு.
இன்னும் பலவும் இருக்கலாம்.
எனது சாய்வில், கவிதை என்பது சிந்தனையின் தெறிப்பு. தர்க்கச் சிந்தனைக்கு அகப்படாத pre - conceptual thought.
அதை மொழியில் வெளிப்படுத்த முயற்சிக்கும்போது சாதாரணமாக நாம் அன்றாட வாழ்வில் புழங்கும் மொழியும், தர்க்க சிந்தனையை வெளிப்படுத்த கைக்கொள்ளும் மொழியும் உதவா. திருகப்பட்ட ஒரு மொழிப் பிரயோகம் அப்போது 'தானாக' எழும். அதற்கு மொழியாளுகையில் ஒரு தீவிரப் பழக்கம் அல்லது 'பயிற்சி' அவசியம்.
கடைசி வரிகளைப் பற்றி யோசியுங்கள் என்றதன் மூலம் உணர்த்த விரும்பியது அதைத்தான். அவற்றுக்கு முன்னுள்ள மொழிப் பிரயோகத்திற்கும் அவற்றுக்கும் ஒரு இடைவெளி விழுந்திருப்பதாக உணர்கிறேன். கடைசி மூன்று வரிகளில் சிந்தனைத் தெறிப்பு உள்ளது. ஆனால் மொழி கைகூடவில்லை. ஒரு bland statement போல உள்ளது. இதுவே நான் குறிக்க விழைந்தது.
வேறென்னெ :)
மீண்டும் நன்றிகள்.
நன்றி வளர் மதி..
இன்றுதான் வலை உலாவ நேரம் கிடைத்தது…வருந்துகிறேன்.பிந்திய எனது பின்னூட்டத்திற்க்காய்.
வளர்மதி..
கவிதை பற்றிய புரிதல்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.
உங்களது கவிதை பற்றிய புரிதல்களை அறிந்து கொள்ளவே கவிதை என்றால் என்ன எனும் கேள்வியை எழுப்பியிருந்தேன்.
கவிதை பற்றிய எனது நோக்கு..
காரணம்1:-
‘‘கவிதை’’ என்பதற்க்கு மனதுக்குள் நாம் ஒவ்வொருவரும் போட்டு வைத்திருக்கும் எம்மை அறியாத ஒரு வடிவம் இருக்கிறதல்லவா….
அந்த வடிவத்துடன் பொருந்தி போகும் கவிதையை ..நாம் நம்மைஅறியாமல் நல்ல கவிதை என்று ஏற்று கொள்கிறோம்.
அதன் பாற்பட்டு .. வாதப்பிரதிவாதங்களை எடுத்து செல்கிறோம்.
காரணம் 2:-
எம்மால் உணரப்பட்டு ஆனால் வெளிப்படுத்தமுடியாது போன ,அல்லது வெளிப்படுத்த மறந்த ,வெளிப்படுத்த விரும்பாத.. உணர்வை கவிதைகள் மூலமாய் இன்னுமொருவர் உணர்த்தும் போது
உணர்ச்சிப்பெருக்கெடுத்து நல்ல கவிதை என்று .. சொல்கிறோம்.
காரணம் 3:-
இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முதல்... இருந்த கவிதையின் வடிவம் வேறு.
அன்று இருந்தவர்களால் கவிதை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களின் சேர்க்கை வேறு.
ஆக….
கவிதைகள் என்று நாம் முத்திரை குத்துபவையும்..நல்ல கவிதை என்று … சொல்லுபவையும்..
நமது..சுயம் சார்ந்தது தற்போதய எனது கவிதை பற்றிய புரிந்து கொள்ளல் இதுதான்.
//கவிதையில் தகவல்கள் சரியாக இருக்கவேண்டும் என்பது போன்ற வாதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கவிதைகள் தகவல்கள் குறித்தவை அல்ல என்ற காரணத்தினால்//
உங்கள் கருத்தில் இருந்து நான் முரண்படுகிறேன்.
கவிதை .. கட்டுரை ….சிறுகதை.. இதர இதர நாம் எழுத்தில் வடிக்கும் எல்லாமே…..
கற்பனைகளை தாண்டி வரலாற்று ..விடயங்கள் என்று வரும் போது…
தகவல்கள் மிக சரியாய் இருக்க வேண்டும்.
அது நாம் இன்னும் ஒரு சந்ததிக்கு விட்டு செல்லும் எச்சம் அல்லவா?!
தமிழ்நதி மீதான உங்கள் அக்கறையை .. பாராட்டுகிறேன்.
எனது கேள்விகளுக்கு மிக சரியான புரிதலுடனான உங்கள மிக நீண்ட பதிலுக்கு நன்றி.
//சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.//
ச்சான்ஸே இல்ல...பின்றீங்க...ம்ம்ம்ம்
(தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு முன் எச்சரிக்கை...நம்ம தமிழ்நதி தனது பதிவுகளின் மூலமாக ஒரு அரைவேக்காடை கவிதை எழுத அநியாயத்துக்கு தூண்டுகிறார்...ஹி..ஹி..விளைவுகளுக்கு நான் பொறுப்பே அல்ல...)
தமிழ்நதி,
நன்றாக வந்துள்ளது இந்தக் கவிதை.
"கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்" என்ற வரிகளிலே 'கண்ணீரில் நெய்த குரல்'அழகான கோர்வை.
ஆழியாள்
தமிழ்நதி,
பின்னூட்டத்தின் போது மகள் எதையோ தட்டிவிட்டாள். என்பெயர் சரியாக பின்னூட்டத்தில் வந்ததோ தெரியவில்லை.
'கண்ணீரில் நெய்த குரல்'பற்றி எழுதின பின்னூட்டம் என்னுடையது. ஏற்கெனவே போலிப்பின்னூட்டம் பற்றி பிரச்சனை இருக்கிறது. இதில் நான் வேறு குழப்பியடிக்காமல்....
ஆழியாள்
நன்றி ஆழியாள்! மகள் கைதவறித் தட்டிவிட்டது சரியான இடத்திலேயே வந்து விழுந்திருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் வந்து வாசிப்பது எனக்குப் பெருமையளிக்கிறது.
நன்றி கீர்த்தனா :)
கவிதை குறித்த உங்களுடைய பார்வையோடு பெரும்பகுதி நானும் உடன்படுகிறேன்.
ஆனால் 'தகவல்கள்' குறித்த தங்களுடைய பார்வையில் விலக வேண்டியிருக்கிறது. அது சிக்கலான ஒரு பிரச்சினை. விரிவாக பேசப்படவேண்டிய ஒன்று. தற்போதைக்கு எனக்கு அதிக நேரமில்லாத காரணத்தால் சுருக்கமாக ஒன்றிரண்டு விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தகவல்களை சரியாகக் குறிப்பிடுவதா இல்லையா என்பது பிரச்சினை அல்ல (அதிலும், மிகக் குறிப்பாக வரலாறு எழுதுதலில்). தகவல்களிலிருந்து என்ன விதமான கருத்துக்கள், மதிப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதே முக்கியமானது.
உதாரணத்திற்கு ஒன்று. இந்தியத் துணைக்கண்டத்தில் பெளத்தத்தை, பெளத்த மடங்களை அழித்தவர்கள் இஸ்லாமியர்கள் என்ற குற்றச்சாட்டை சமீப வருடங்களாக வலதுசாரி, இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் வைத்துவருகிறார்கள். அதற்கு அவர்கள் நிறைய ஆதாரங்களை (தகவல்களை) தரவும் செய்கிறார்கள். அந்த ஆதாரங்கள் பெரும்பான்மையும் சரியானவையே. இதன் வழியாக அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் பெளத்தத்தை அழித்தது பார்ப்பனீயமே என்று இதுநாள் வரையில் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் முன்வைத்து வந்த செல்வாக்கு மிகுந்த கருத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள்.
'சரியான தகவல்களின்' வழியாக ஒரு வரலாற்றுப் பழியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சிக்கு மிகப் பிரமாதமான எடுத்துக்காட்டு இது என்று சொல்லலாம்.
ஆனால், வரலாற்றை தகவல்களின் தொகுப்பாக மட்டுமே அல்லாமல், அவற்றிலிருந்து ஒரு 'கதை' யை உருவாக்கும் முயற்சியும்கூட என்று காணத்தொடங்கினால், அத்தகவல்களை அக்காலகட்டத்தின் குறிப்பான சூழல்களில் வைத்துப் பார்த்து சில 'கோட்பாட்டுக் கற்பனைகளுக்கும்' (theoretical fictons) இடம் கொடுக்கும் முயற்சியும், அதன் வழி இன்னும் சற்றுக்கூர்மையான விளக்கங்களுக்கும் உதவியாக இருக்கும்.
மேலே சொன்ன உதாரணத்தில், அவ்வாறு செய்து பார்க்கும்போது நமக்கு வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் சொல்வதற்கு மாறான வேறொரு கதை கிடைக்கிறது.
அதாகப்பட்டது ... இஸ்லாமியர்களின் வருகையின்போது அவர்கள் பௌத்தமடங்களை இடித்ததற்குக் காரணம் இரண்டு.
1) அவர்களுக்கு விக்கிரக வழிபாடு பிடித்தமானது அன்று. அக்காலப்பகுதியில் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் இருந்த பௌத்த மடங்கள் உருவ வழிபாட்டில் மூழ்கியிருந்தன.
2) பார்ப்பனர்களை உருவ வழிபாட்டை பின்பற்றுபவர்களாகவும், அதிகார மையங்களாகவும் இஸ்லாமியர்கள் இனங்கண்டுகொண்டனர். ஆனால், பௌத்தர்களை பார்ப்பனர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க அவர்களால் இயலவில்லை. அதற்கும் இரண்டு காரணங்கள்: i) அக்காலகட்டத்தில் வட மேற்கு இந்தியப் பகுதிகளில் இருந்த பௌத்த மடங்கள் பெரும்பான்மையும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு வந்துவிட்டிருந்தது. ii) அப்போது பௌத்த மடங்களின் துறவிகள் பார்ப்பனர்களைப் போன்றே குடுமியும் பூணூலுமாக காட்சியளித்தது.
இதை அறிய நமக்குக் கிடைக்கும் 'தகவல்கள்' (ஆதாரங்கள்) அக்காலகட்ட சிற்பங்களே. அதாவது அக்கால கட்டத்தின் கலைகளிலிந்தே! கலைகள் அதிலும் நவீன காலத்திற்கு முந்தைய கலைகள் 'ரியலிசத்தை' அடிப்படையாகக் கொண்டவையல்ல. பெரும்பான்மையும் அதீதக் கற்பனை சார்ந்தவை. மேலும், கலைகளை பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் 'ஆதாரங்களாகக்' கொள்வதில்லை.
இவற்றை 'ஆதாரமாகக்' (தகவல்சாரா ஒன்றை) கொண்டு இப்போது முதலில் சொன்ன தகவல்களை அர்த்தப்படுத்தினால், நமக்கு கிடைக்கும் 'வரலாற்றுப் புனைவு': இஸ்லாமியர்கள் பௌத்த மடங்களை இடித்தது 'உண்மை'தான்; ஆனால் அதற்கான காரணம் ஒரு வரலாற்றுப் பிழை - அவர்கள் அவற்றை பார்ப்பன மடங்களாக நினைத்துக் கொண்டு இடித்து விட்டார்கள்.
ஆக, இப்போது மீண்டும் பார்ப்பனர்கள் தமது வரலாற்றுப் பழிக்குள் மாட்டிக்கொள்கிறார்கள் :)
இதற்கு உதவியாக இருந்தது 'சரியான தகவல்' அன்று :)
சற்றே கற்பனையை விரித்துப் பார்க்கும் ஒரு 'பக்குவம்'.
இன்னும் விரிவாக விளக்கிச் சொல்ல இருக்கிறது. ஆனால் இது தமிழ்நதியின் இடம். அவருக்கு சிரமம் தர விழையவில்லை :)
நேரம் வாய்க்கும்போது எனது பக்கத்தில் எழுதுகிறேன் :)
மற்றது, உங்களுடைய கவிதைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். சில நன்றாகவே வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.
வளர்மதி!
இது தமிழ்நதியின் இடம். அவருக்கு சிரமம் தர விழையவில்லை :)
நானொன்றும் கிரவுண்ட் 40 இலட்சத்திற்கு வாங்கிப் போட்டிருக்கவில்லை. இங்கே நீங்கள் தாராளமாகப் பேசிக்கொள்ளலாம்.
இரண்டு அறிவார்ந்தவர்கள் பேசுமிடத்தில் நான் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முந்தைய வரலாறு என்பது திரிபுகளுடையது. தத்தம் சார்புநிலைக்கேற்ப நமது முன்னோர் எழுதிவைத்ததையும் வாய்வழிச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டே நமது காலத்தில் நாம் அதைக் காண்கிறோம். புத்தர் பூவரசின் கீழ் அமர்ந்திருந்தாரா அன்றேல் அரசின் கீழ்தான் அமர்ந்திருந்தாரா என்பது சர்வநிச்சயமாக நமக்குத் தெரியாது. தனது விழிகளால் நேரில் பார்த்த காலமொன்றே மிகச்சரியான 'தகவல்'களை முன்வைக்க இயலும். இன்றைய நூற்றாண்டு குறித்து நாம் எழுதி அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லும் வரலாற்றுத் தகவல்களும் எமது சார்புநிலைகளைப் பிரதிபலிப்பனவே. அதில் நூறு வீத உண்மையை எப்படி எதிர்பார்க்கவியலும்? உதாரணத்திற்கு, உலகாளும் அதிகாரங்களால் 'பயங்கரவாதம்'என்று சொல்லப்படுவதை நாங்கள் 'விடுதலைப் போராட்டம்'என்கிறோம். எதிர்வரும் சந்ததியை இந்த வரலாறானது ஆவணங்கள், நூல்கள் வழியாகச் சென்றடையும்போது எத்தனை திரிபுகளை அடைந்திருக்கும்...? எனது சிற்றறிவுக்கு எட்டியது இவ்வளவே. நன்றி.
என்ன தமிழ்நதி நீங்கள்....கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரி நானேதோ சொல்ல நீங்கள் ஏதோ சொல்லிப் பயமுறுத்துகிறீர்கள். மையப்படுத்தல்களிலும், புனிதப்படுத்தல்களிலும் அதிக நம்பிக்கை தேவையில்லை என்றே இதுவரை படுகிறது.
ஆழியாள்
வளர் மதி..
//இன்னும் விரிவாக விளக்கிச் சொல்ல இருக்கிறது//
உண்மைதான் வளர் மதி ..இது பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.
//நேரம் வாய்க்கும்போது எனது பக்கத்தில் எழுதுகிறேன் //
கட்டாயம் எழுதுங்கள்.. நிறைய பகிர்ந்து கொள்ள இருக்கிறது.:-)
//மற்றது, உங்களுடைய கவிதைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
சில நன்றாகவே வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்//
நன்றி :-)
ஓஷோவின் புத்தகங்களில் யசோதரையைப் பற்றி விடயங்கள் கிடைக்கின்றன.
புத்தன் ஞானம் பெற்றதும் முதலில் சந்திக்கச் செல்வது தன் மனைவியைத்தான். அவரிடம் ஞானம் பெற்று அவளும் சன்னியாசினி ஆனதாகப் படித்திருக்கிறேன்.
http://www.globalserve.net/~sarlo/Yhvl.htm
http://www.otantra.net/oTantra/VBTv2/chapter32.html
இருவருக்கிடையிலான உரையாடலை இடையில் வந்து குறுக்கிடுவதற்கு முதலில் மன்னிக்கவும்.
/எனது சாய்வில், கவிதை என்பது சிந்தனையின் தெறிப்பு. தர்க்கச் சிந்தனைக்கு அகப்படாத pre - conceptual thought./
வளர்.., இது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
/அதை மொழியில் வெளிப்படுத்த முயற்சிக்கும்போது சாதாரணமாக நாம் அன்றாட வாழ்வில் புழங்கும் மொழியும், தர்க்க சிந்தனையை வெளிப்படுத்த கைக்கொள்ளும் மொழியும் உதவா. திருகப்பட்ட ஒரு மொழிப் பிரயோகம் அப்போது 'தானாக' எழும். அதற்கு மொழியாளுகையில் ஒரு தீவிரப் பழக்கம் அல்லது 'பயிற்சி' அவசியம்./
ஆனால் பிறகு நீங்கள் குறிப்பிடும் ஒரு திருகலான மொழியைக் கைக்கொண்டு எழுதப்படுபவை மட்டுந்தான் கவிதை என்று கூறவருவதுதான் கொஞ்சம் இடறச் செய்கிறது. சாதாரணமாய் உபயோகிக்கின்ற வார்த்தைகளைக்கொண்டு அவை உபயோகப்படுத்தப்படும்/அர்த்தப்படுத்தப்படும் எல்லைகளுக்கு அப்பால் விரிக்கமுடியாதென நினைக்கின்றீர்களா? நகுலனின் கவிதைகள் பல சாதாரண-திருகலற்ற- மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அவை 'தர்க்கச் சிந்தனைக்கு அகப்படாத pre - conceptual thought' ஆக மாறத்தானே செய்கின்றன. பிரமிளின் கவிதைகளில் சிலதிலும் இதைக் காணலாம்.
/மொழியாளுகையில் ஒரு தீவிரப் பழக்கம் அல்லது 'பயிற்சி' அவசியம்./ எந்த வகையான மொழியைத் தேர்வு செய்தாலும் பயிற்சியும் பரவாலான் வாசிப்பும் நிச்சயம் தேவைதான். ஆனால் திருகலான மொழிமட்டுமே கவிதைக்கான தேர்வு என்பதை அவ்வளவாய் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. மிகுதியை நீங்கள் எழுதப்போகும் உங்கள் பதிவில் தொடர்ந்துகொள்கின்றேன்.
.....
நாற்பது இலட்சத்திற்கு வாங்கிய நிலத்தில் எனக்கும் ஒரு துண்டு நிலம் தந்த நதிக்கும் நன்றி :-).
Post a Comment