10.11.2007

அறியாமை எனும் அறிவு



அகாலத்தில் என்னை வந்தடையும் குறுஞ்செய்திகள்
இருளை மேலும் அடர்த்துகின்றன
தொலைபேசியின் கண்ணாடிச் சட்டத்துள்
துடிதுடித்து அழைக்கிறது உனது பெயர்
நாளொன்றுடன் வாதாடிக் களைத்து
வார்த்தைகள் தீர்ந்துபோன இவ்விரவில்
சுண்டியெறிகிறேன் உன் கண்ணீரையும்
அதுவொரு கடலென விரிந்து அலையெறிகிறது
என் கனவுகளில்.

நீ மரணத்தைப் பற்றிப் பேசினாய். இந்நேரம் தற்கொலை செய்துகொள்(ல்)வதற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டிருக்கவும் கூடும். உளைச்சல் மிகுந்த இரவுகளை ஒவ்வொருநாளும் போதையில் மூழ்கிக் கடந்துசெல்வதென்பது முட்டாள்தனம்; தற்காலிக தப்பித்தல். உன்னளவில் அறிவு என்பதே சாபந்தான். அது வானத்தின் கீழுள்ள யாவற்றையும் இவ்விதம் என அளவளவான சட்டகங்களுள் அடைத்துவிடவும், இவர்கள் இவ்விதம் என மனிதர்களை முத்திரை குத்தவும் பணிக்கிறது. மேலும், நீ புத்தகங்களாலானவன். உன் மூளையுள் காகிதங்கள் படபடக்கின்றன. சாமான்யர்களுக்குப் புரியாத வாசகங்களுடன் எவரெவரோ உன் மண்டைக்குள் குந்தியிருக்கிறார்கள். அந்தக் கனம் உன்னைப் பூமியோடு சேர்த்து அழுத்திக்கொண்டிருக்கிறது. தமக்கு முந்தைய மூளைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சாரத்தை மேலும் புளிக்கவைத்து காடியாக்கி அவர்கள் உனக்குள் ஊற்றினார்கள். ‘நான் அசாதாரணமானவன்’என்ற மிதப்பில் நீயொரு கண்ணாடிக் குவளையாகிவிட்டாய். உன்னைத் தாண்டிச் செல்லுமொருவருடைய ஆடையின் உரசலே போதும் உன்னைச் சிதறடிக்க. எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போன ஒரு கணத்தில் தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கும் உனது புத்தகங்களின் மீது எண்ணெயை ஊற்றிப் பற்றவைத்துவிட்டாலென்ன?

மெல்ல மெல்ல பிரசங்கத்துள் பிரவேசிக்கிறேன். உனது சகமனிதர்களின் கால்கள் பூமிக்கு இரண்டங்குல உயரத்தில் மிதந்துகொண்டிருக்கவில்லை என்பதை எப்போதாவது விழிகளை உயர்த்திப் பார்த்திருந்தால் தெரிந்துகொண்டிருப்பாய். நானும் நீயும்கூட நடப்பது தரையில்தான். எமது தோள்புறத்தில் சிறகுகள் முளைப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இந்தக் கணம்வரை இல்லை. நேற்று ஒரு பழக்கடைக்காரன் ஓட்டை நோட்டொன்றை என்னிடம் செலுத்திவிடப் பார்த்தான். ஆட்டோக்காரன் மிகுதி பத்துரூபாவை ஒரு மெல்லிய சிரிப்பில் அமத்திக்கொண்டான். சில நிமிடங்கள் முன்னதாகவே நான் போட்ட இருபது ரூபாவை ஒளித்துவைத்துவிட்டு சில சில்லறைகளோடு அந்த வயதான பிச்சைக்காரன் மிகப் பரிதாபமாக உட்கார்ந்திருந்தான். உதவியை நோக்கி நகர்ந்த உரையாடலை அவசர வேலையிருப்பதாகச் சொல்லி நான் துண்டித்தேன். குறிப்பிட்ட பெண்ணுடலை எப்படியாவது போகித்துவிட ஒருவன் ஆயிரம் தகிடுதத்தங்கள் செய்துகொண்டிருக்கிறான். நீகூட நியாயமான காரணம் சொல்லி கடந்த வாரம் யாரிடமோ வாங்கிய பணத்தில் ஒரு ‘குவார்ட்டர்’அடித்திருந்தாய். அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவனுடைய முகத்திரை பரிதாபமாகக் கிழிந்து தொங்கியது.

பொன்னொளிரும் பூமியை யாரும் நமக்கு வாக்களித்திருக்கவில்லை. மத வியாபாரிகளால் விநியோகிக்கப்படும் பிரசுரங்களில் மட்டுமே நான் அதைக் கண்டிருக்கிறேன். ஏமாற்றப்படுவோம் என்ற மூன்றாவது கண்ணைத் திறந்திருப்பதொன்றே பிழைத்திருக்க வழி. அதற்கு உன்னிடம் போதிய சாமர்த்தியமில்லையெனில் அறியாமை பழகு. அறிவைப் பயிலும்படி எல்லோரும் சொல்லும்போது அறியாமை பழகச் சொல்வது உனக்கு வினோதமாக இருக்கும். நிஷ்களங்கமாக நான் இருப்பதாக அன்றொருநாள் சொன்னாய். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். எனக்கு எல்லா இருளும் எல்லா கசடும் தெரிந்துதானிருக்கிறது. பொறாமை,காழ்ப்புணர்ச்சி,தகாப்புணர்ச்சி (அப்படியொன்றிருக்கிறதா என்ன என்பாய்) சுயநலம், தந்திரம்,சூழ்ச்சி,சமயோசிதம்… எல்லாம் தெரியும். சில கண்களில் கறுப்பு வெள்ளை தவிர்த்து ஒன்றுமே இருக்காது. அவ்வளவு அப்பாவித்தனம் சொட்டிக்கொண்டிருக்கும். அப்போதுதான் பிறந்த குழந்தை மாதிரி ஒரு தூய்மை. சொட்டு நீல வெண்மை. அவன் மனைவியின் கண்ணெதிரில் வேறொருத்தியைக் கூடியவனாயிருப்பான். ஒரு ஏழையின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ‘ஐயோ’என்று அழவிட்டவனாயிருப்பான். பூச்சிகொல்லியை மிதமாக அடித்து பூச்சி துடிப்பதை ஆற அமர அமர்ந்து ரசிப்பவனாயிருப்பான். கண்களைப் பார்த்து தீர்மானங்களுக்கு வந்துவிடாதே. வார்த்தைகளோ சகலவிதமான புனுகுகளும் பூசப்பட்டவை. ஒன்றும் தெரியாதவளைப் போல நடக்கப் பழகி அதுவே இயல்பாயிற்று. இப்போது எந்தக் கசடும் தெரிவதில்லை. மனிதர்கள் கெட்டவர்கள் இல்லை என்று சொல்லிச் சொல்லியே அதை நம்பவாரம்பித்துவிட்டேன். இதை எழுதும் இக்கணம், ஒன்றை மற்றொன்றாக உருவகித்து அந்த மற்றொன்றாகவே ஆகிவிட்டதை உணர்கிறேன். எரிச்சலும் பொறாமையும் தந்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போய்க்கொண்டிருக்கின்றன.

நான் சொல்வது உனக்குப் புரியும். உலகம் நல்லதென்று நீ நம்ப ஆரம்பிக்கும்போது வாழ்வின் மீது காதல் பெருகுகிறது. “இது கற்பிதம்!கனவு! நீ ஏன் உன்னை ஏமாற்றிக்கொள்கிறாய்…?”என்று நீ கேட்கலாம். “நான் வாழவிரும்புகிறேன்”என்பதன்றி வேறென்ன பதில் இருக்கமுடியும்! கழுத்தை ஒரு கயிற்றுவளையத்திற்குள் கொடுத்து ஏறிநிற்கும் முக்காலியை உதைத்துத்தள்ளும் நொடியை எதிர்கொள்ள என்னால் இயலாது. தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவதை நினைத்துப் பார்! மூழ்கிக்கொண்டிருக்கும் கடலளவு வாழும் ஆசை அப்போதுதான் பெருகுமாயிருக்கும். உடம்பு பன்றிமாதிரி உப்பிப்பெருத்துவிடும். வாழும்போது நீ பூசிக்கொண்ட அரிதாரங்களெல்லாம் கலைந்துவிட்டிருக்கும். வாழ்வு மேடையாயிருக்கிறது. மரணமோ ஒப்பனை கலைக்கும் அறையாயிருக்கிறது.

அன்றாடம் எத்தனை பொய்கள்! நட்பு கற்புக்குச் சமானம் என்கிறோம். கற்பே உண்மையல்லாதபோது நட்பை அதனோடு ஒப்பிடுவது வியர்த்தம். ஒரு பேச்சுக்கு கற்பு இருக்கிறதென்று வைத்துக்கொண்டாலும், கடன் கேட்டு மறுக்காதவரையில்தான் நட்பும் கற்போடிருக்கும். எழுத்தை அறம் என்கிறோம். புனிதம் புனிதம் என்று பூப்போடாததொன்றுதான் குறை. அதே எழுத்து நமக்குச் சோறு போடாதபோது அந்த அறத்தை மறுதலிக்கிறோம். நாம் காதலில் மிதக்கிறோம். அந்த அற்புத உணர்வில் தேனில் விழுந்த எறும்புகள் போல மயங்கிக் கிடக்கிறோம். காமமற்ற காதல் இருக்கிறதா என்ன? தெருவோரத்தில் அழுக்காய்,கறுப்பாய்,சிக்குத்தலையோடு இருக்கிற பெண்மீதில் - குச்சியால் குத்திக் காகிதம் பொறுக்கிப் போகிறவன் மீதில் ஏன் காதல் பொங்குவதில்லை என்பதை வசதியாக மறந்துபோகிறோம். ‘நான் இல்லாவிட்டால் இந்த வீடு என்னாகும்?’என்கிறோம். மண்ணாங்கட்டி! வீடும் அதன் மனிதரும் அதனதன் அவரவர் காலம் முடியும்வரை இருக்கவே இருக்கும்-இருப்பர். நீ கொண்டாடும் உணர்வுகளின் மீதெல்லாம் மலமள்ளிக்கொட்டுவதாக எண்ணுவாய்.

கற்பு,காதல்,எழுத்து துரோகம்,நேர்மை,புத்தகம் இவையெல்லாம் வாழ்வின் உப்புச்சுவையாக நாம் ஏற்றுக்கொண்டவை. இட்டுக்கட்டப்பட்ட கதைகளும்கூட. ‘நாங்க ஒண்ணும் சும்மா வாழ்ந்துகொண்டிருக்கவில்லையாக்கும்’ என்று பீற்றிக்கொள்ள நாம் சொல்லிக்கொண்டிருக்கும் பொய்கள்தான். மாயவீதிகள்தானென்றாலும் பயணத்தை நாம் நிறுத்தப்போவதில்லை. இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறபோது உலகத்தில் என்ன இருக்கிறது? ஆதலால், வாழ்வதற்காக நம்பவேண்டியிருக்கிறது. எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நம்புவதில் உனக்கென்ன சிரமம்? மனிதர்கள் நல்லவர்கள் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது நம்புவதாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைப்போல் அறியாமை பழகு. பேய்ப்பிள்ளையாகு. நீயே உன்னை நல்லவனென்று நம்பத் தொடங்குவது இயல்பாகிப் போகுமொரு நாளில் யாரேனும் வந்து உன்னிடத்தில் நொய்மையான குரலில் மரணத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். என்னைப் போல அவனுக்காக நீ மினக்கெட்டு உட்கார்ந்து ஒரு கட்டுரை எழுதாதே. காசு சம்பாதிப்பது எப்படி அல்லது ஒரு வேலையைத் தேடிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பேசு. இரண்டும் அவனால் சாத்தியமில்லாத பட்சத்தில் நல்ல ஊதியம் வாங்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேசலாம். யதார்த்தத்திற்கும் குரூரத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக நான் நினைக்கவில்லை.

17 comments:

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

எந்த வார்த்தையால் விவரிப்பது இப்பதிவை ஒருமுறை வாசித்த பின் உண்டான பிறழ்வுக் கிளர்ச்சியை? துகள் துகளாக உதிர்கிறது இறுகி நகராதிருந்த சீமெந்துக் கோளம்...

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//உளைச்சல் மிகுந்த இரவுகளை ஒவ்வொருநாளும் போதையில் மூழ்கிக் கடந்துசெல்வதென்பது முட்டாள்தனம்; தற்காலிக தப்பித்தல்.//
அது 'தற்காலிகத் தப்பித்தல்' என்பதற்காகத்தான் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், -மரணம் தவிர்ந்த- நிரந்தரத் தப்பித்தல் எதையும் அறிந்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்?

தமிழ்நதி said...

வியாபகன்!பதிவிலேயே பதில் இருக்கிறது. இவ்வுலகம் நல்லது,வாழத்தக்கது என்று நம்புவதும் காதல்,எழுத்து இன்னபிற எம்மை ஈடேற்றுமென நம்பி அமிழ்ந்திருத்தலும் செய்யலாம். 'போறேன் போறேன்'என அவையும் கையசைத்தால் பதிலீடாக மற்றொன்றைப் பற்றிக்கொள்ளலாம். 'மனுசங்களை நம்பமாட்டேன் போ'என்றால் இருக்கவே இருக்கிறது பூனையும் நாயும் மரஞ்செடிகொடியும் :)

Ayyanar Viswanath said...

From Known to Unknown என்றோ அறிந்ததிலிருந்து விடுதலை என்றோ நமக்கான வாழ்வினை கோடிட்டு சென்ற பழைய தத்துவவாதிகளை ஞானி களை நினைவுபடுத்துகிறது இப்பதிவு..

எப்போதுமே குழந்தைகளாய் இருந்துவிடமாட்டோமா என ஏங்குவதெல்லாம் அறியாமையின் சாசுவதத்தில் புதைந்துகொள்ளத்தானே?

மிகச் சிறந்த பதிவு தமிழ்நதி...

த.அகிலன் said...

பற்றிக்கொள்ள ஏதாவது தேவையாகவே இருக்கிறது . ஒன்றின் பிரதியீடாக இன்னொன்று :)

எல்லாவற்றினின்றும் தப்பித்தலின் சாத்தியங்கள் எதுமின்றி

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

அத்தகைய 'வரித்துக்கொண்ட' முலாம் பூசப்பட்ட நம்பிக்கைகள் கூட நிரந்தரமானவை கிடையாது தானே? மதுவின் போதை உடலுக்குத் தீங்கு என்ற ஒன்றை விட்டுப்பார்த்தால் இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது தானே? தவிரவும், 'புத்தகங்களா'லான, 'காகிதங்கள் படபடக்கிற மூளை'யைச் சுமந்துகொண்டிருக்கிற, 'சாமான்யர்களுக்குப் புரியாத வாசகங்களோடு' வசிப்பவர்களை மண்டைக்குள் ஏந்திக்கொண்டிருக்கிற ஒருவனு/ளுக்கு இது தணிவு தரும் பரிந்துரையாக முடியுமா என்ற ரீதியில் யோசிக்கிறேன்... அப்படிப் பார்த்தாலும், 'இதை விட நீ அடம்புடிச்சா வேறு மார்க்கம் கிடையாது ' எண்டு தான் சொல்ல வேண்டிவரும் என்பதும் உண்மைதான்..

லக்கிலுக் said...

யாருக்கோ அறிவுரை சொல்வது போல இருக்கிறது. அந்த "யாரோ" ரொம்ப பாவம்! :-(

theevu said...

Ignorence is Bliss!!

எல்லோருக்கும் அந்த கொட்டுப்பினை இல்லை.

யதார்த்தம் வேறு முகத்தையே எப்போதும் காட்டுகிறது.

உங்கள் எழுத்து நடை நன்றாகவிருக்கிறது.

தமிழ்நதி said...

கருத்துக்கு நன்றி வியாபகன்,அய்யனார்,அகிலன்,லக்கிலுக்,தீவு...

வியாபகனுக்கு, இது தணிவு தரும் பரிந்துரை இல்லைத்தான். ஆனால்... சில கேள்விகளுக்கு சரியாகவோ பிழையாகவோ பதிலளித்துத்தானாக வேண்டியிருக்கிறது. 'இதைவிட நீ அடம்புடிச்சா வேறு மார்க்கம் கிடையாது'என்ற பதில் என்னால் விளிக்கப்பட்டிருக்கிறவருக்கும் (கவனிக்க 'ம்') பொருந்தும்:)

வரவழைத்துக்கொண்ட அறியாமையும் சிலசமயங்களில் அலுத்துப்போய்விடுகிறது அய்யனார்.

அகிலன்! எல்லாவற்றினின்றும் தப்பிப்பதானால் மரணத்தை விட இன்னொன்றும் இருக்கிறது. பித்துப்பிடித்தால் தப்பிக்கலாம். ஆனால், நாம் தப்பித்துவிட்டோமென்பதை நாமே அறியாமற் போய்விடுவோம்:)

லக்கிலுக்! நீங்கள் நினைக்கிற "யாரோ"இல்லை இந்த "யாரோ"

தீவு!யதார்த்தம் முகம் காட்ட ஆரம்பித்தால் இந்த உலகம் வெறுக்கத்தக்கதாகிவிடும் அல்லவா?

லக்கிலுக் said...

//லக்கிலுக்! நீங்கள் நினைக்கிற "யாரோ"இல்லை இந்த "யாரோ"//

அக்கா என்ன கொடுமை இது?

நான் சொன்ன "யாரோ" எனக்கு தெரியாத "யாரோ"ன்னு தான் பொருள் :-(

த.அகிலன் said...

உண்மைதான்.

தமிழ்நதி said...
//லக்கிலுக்! நீங்கள் நினைக்கிற "யாரோ"இல்லை இந்த "யாரோ"//

யாரோ யாருக்குள் இங்கு யாரோ..

மலைநாடான் said...

தமிழ்நதி!

இவ்வகையில் தப்பிக்கத் தெரியாமல் மடிந்துபோன இரண்டொருவரை நினைத்துப்பார்க வைத்தது...

ஆழமான, அழகான, எழுத்துக்கள்.

பாராட்டு, நன்றி.

பாரதி தம்பி said...

தன்னைப்பற்றிய மிகை மதிப்பீடு கொண்டிருக்கும் ஒருவனுக்குதான், இந்த வாழ்வை சுவாரஸ்யப்படுத்த அல்லது அதன் குரூரங்களிலிருந்து தப்பித்துகொள்வதற்காக கற்பித காரணங்கள் தேவைப்படுகின்றன. வாழ்வை எல்லா அபத்தங்களோடும் ஏற்றுக்கொள்ள பழகிவிட்ட சாமான்யர்களுக்கு இப்படியான கற்பிதங்கள் தேவையில்லை. இந்த வார்த்தைகள் தரும் அர்த்தங்களின் தொடர்ச்சி, 'அறிவு என்பதே கற்பிதம்தான். அறிவுதான் இப்பிரச்னைகளுக்கான மூலம்' என்பதாக சென்று, 'அறியாமையே இயல்பு/நன்று' என்பதாக முடியலாம். அது சரியா என்று தெரியவில்லை.

என்றாலும், /‘மாயவீதிகள்தானென்றாலும் பயணத்தை நாம் நிறுத்தப்போவதில்லை. இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறபோது உலகத்தில் என்ன இருக்கிறது? ஆதலால், வாழ்வதற்காக நம்பவேண்டியிருக்கிறது/.

LakshmanaRaja said...

அந்த புகைப்படம்..அப்பப்பா..
காலமும் இருக்கையும் நிலையானது..
இருக்கையில் யாரையாவது காலத்தின் கட்டாயத்திற்கேற்ப உனக்கு பிடித்த யாரையாவது அமரவைத்துக்கொள்..
பிடிக்கவில்லை என்றால் அமர்த்தியவரை (ஆசையை )மாற்றிவிடு.ஆனால் காலமும் அந்த இருக்கையும் உனக்கு சொந்தம்..மனதில் கொள்..அது உன்னுடையது.

சரியா தமிழ்நதி.

இதையெல்லாம் நீ செய்யாதே என்று வருத்ததில் இருபவனிடம் சொல்வதை நேராக ஆனை இடுவதைவிட அது இப்படியெல்லாம் வலிகளை ஏற்படுத்தும் என்பதை மட்டும் சொல்லி சில (தான் பயன்படுத்தும்) வழியை கூறுதல் என்பது உண்மையில் மிக சரியான வழிமுறை மற்றும் தன்னை அவனின் இருக்கையில் வைத்து சொல்வதால் அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வராது தடுத்தலையும் செய்கிறது இந்த பதிவு.

வாழ்த்துக்கள்.வலி உணர்ந்து விடை சொல்லலுக்கு..

தமிழ்நதி said...

அப்படியானால் சரி லக்கிலுக்.

அகிலன் அந்த 'யாரோ' ஒரு 'யாரோ'அல்ல சில 'யாரோ'அதனுள் 'யார் யாரோ'இருப்பதால் 'யார்'என்று குறிப்பிட்டு ஒரு பெயரால் சொல்லவியலாது:)

மலைநாடான்!நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது வலைப்பூ பக்கம் வந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆழியூரான்!நீங்கள் சொன்னதுபோல சாமான்யர்கள் சிக்கலின் மூலம் குறித்தும் அதன் அந்தம் குறித்தும் அலட்டிக்கொள்வதில்லை. வாழ்வை முற்றுமுணர்ந்த ஞானிகளுக்கும் இல்லை.(அப்படி இருக்கிறார்களா என்ன) இடைநடுவில் நிற்கும் 'அறிவுஜீவி'கள்தான் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் கடந்து செல்லவும் இயலாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு திண்டாடுகிறவர்கள். நீங்கள் சொன்னதைத்தான் நானும் திருப்பிச் சொல்லியிருக்கிறேனோ... இப்படி ஏதாவது சொன்னால்தான் நான் பதில் சொல்லியிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீர்களாம் :))))கருத்துக்கு நன்றி ஆழியூரான்.

லக்ஷ்மணராஜா!என்ன சொல்வது? இந்தப் படத்திற்கு இப்படியெல்லாம் பொருள் இருப்பது எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது. காலம் நகர்கிறது. தனிமையின் வெறுமை மட்டும் அசையாமல் அமர்ந்திருக்கிறது என்று பொருள்படட்டும் என்றே அதைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து 'நீ நன்றாக எழுதுகிறாய்'என்று என்னைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கே அயர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்னமோ மறைந்துவிடுகிறார்கள். இப்போது உங்கள் முறை... நடத்துங்கள்:)

LakshmanaRaja said...

உங்கள் பதிலில் சொல்லியபடி அந்த படம் மிக சரியானது தான். என் வார்தைகளில் சில முரன் இருந்தாலும்
அர்த்தம் என்னவோ நீங்கள் சொல்லியது போல் தான்..

//ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து 'நீ நன்றாக எழுதுகிறாய்'என்று என்னைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கே அயர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்னமோ மறைந்துவிடுகிறார்கள். இப்போது உங்கள் முறை... நடத்துங்கள்:)//

காலம் எதையும் செய்யும்.ஆயினும்
உங்கள் வார்தைகளின் ஆழம் நன்றாக உணர்கிறேன் என்றே நம்புகிறேன்.அது நின்றால் நான் தொலைந்து போகலாம்.அறியாத பாதையின் நீளம் கால்கள் அறிவதில்லை.:-))

லக்கிலுக் said...

//அந்த 'யாரோ' ஒரு 'யாரோ'அல்ல சில 'யாரோ'அதனுள் 'யார் யாரோ'இருப்பதால் 'யார்'என்று குறிப்பிட்டு ஒரு பெயரால் சொல்லவியலாது//

இந்த வாக்கியத்தை வாசித்து பொருள் புரிது கொள்வதற்குள் "தாவூ தீருது, டவுசர் கிழியுது!" :-(((((