உயிரோடு ஒருநாளும் பார்த்ததில்லை-உங்கள்
பெயர்கூட ஒலிக்க நாம் கேட்டதில்லை
இருபத்தி ஒரு பேரும் விதையாகினீர்-எங்கள்
இதயத்தில் கண்ணீரின் துளியாகினீர்
(உயிரோடு ஒருநாளும்)
வானத்தைப் பகைசூழ்ந்து கறுப்பாக்கும்
வாழும் இடம் எல்லாம் நெருப்பாக்கும்
ஆலயம் பள்ளியும் தவறாது-அந்த
ஆணவம் தீர்த்த(உ)தும் வரலாறு
(உயிரோடு ஒருநாளும்)
நவாலியில் பலிகொள்ள நாமழுதோம்
செஞ்சோலைப் பிஞ்சுகள் சிதறக்கண்டோம்
அல்லைப்பிட்டியிலும் அள்ளிப்போட்டோம்-இன்று
அனுராதபுரத்திற்குக் கொள்ளிவைத்தீர்
(உயிரோடு ஒருநாளும்)
ஆடைகள் அகற்றிய நிர்வாணம்
ஆனாலும் எவர்க்கின்று அவமானம்
மூடிமறைத்தாலும் தெரியாதோ- ஊர்தி
மூண்ட கதை உலகறியாதோ
(உயிரோடு ஒருநாளும்)
தற்கொடையாளரே போய் வருக-எங்கள்
தளிர்களே! உயிர்களே! போய் வருக
பொற்காலம் எமதாக்கப் போனவரே!
எக்காலம் எமைக் காண மீள் வருவீர்?
(உயிரோடு ஒருநாளும்)
28 comments:
அழுகை தரும் வரிகள், நாம் அனுபவித்த வரிகள்.
நன்றி
உங்கள் வலி உணர்கிறேன்.
பாடலை பற்றி விமர்சிக்க தெரியவில்லை..கவிதையில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்நதி.
லஷ்மணராஜா!என்ன சொல்ல.... வருகைக்கு நன்றி... சில உணர்வுகளை விமர்சிக்கவும் முடிவதில்லை.
"அழுகை தரும் வரிகள்... நாம் அனுபவித்த வலிகள்"
இந்தப் பாடலின்(?) வரிகளை வலி ததும்பப் பாடிப் பதிவிட்டிருக்கிறார் நண்பர் மலைநாடான்... கேட்க விரும்புபவர்கள் இங்கு செல்லவும்.
http://www.esnips.com/doc/433b2cfb-14d4-4033-b510-0b3e8f821b28/Uyirodu
நன்றி மலைநாடன்! எழுதும்போது உணர்ந்ததை விடவும் பாடக் கேட்க... என்ன சொல்ல... அழுதேன் என்பதைத் தவிர.
கேட்டேன்..அந்த குரலின் வலி யுணர்தேன்..
//நன்றி மலைநாடன்! எழுதும்போது உணர்ந்ததை விடவும் பாடக் கேட்க... என்ன சொல்ல... அழுதேன் என்பதைத் தவிர.//
மிக சத்தியம்.நானும் உணர்கிறேன் அவ்வண்ணமே...
///பொற்காலம் எமதாக்கப் போனவரே!
எக்காலம் எமைக் காண மீள் வருவீர்? ///
:((
அருமையான பாடல்.
மலை நாடனுக்கும் நன்றி.
இந்தப் பாடலை வேறுவிதமாக இசையமத்து எனது நாடகமொன்றில் பயன்படுத்தலாமென்றிருக்கிறேன்.
தங்களுக்கு அனுப்பிவைப்பேன்.
வருகைக்கும் வாசித்துக் கடந்து செல்லாமல் சொல்லிப் போன வார்த்தைக்கும் நன்றி செல்வநாயகி.
சூரியா!அந்தப் பாடலில் எங்கோ தளை தட்டுவதாக நண்பர் ஒருவர் சொன்னார். சரிபார்த்து, முடிந்தால் மாற்றிவிட்டுத் தருகிறேன். உபயோகித்துக்கொள்ளுங்கள். இப்படியே உபயோகிப்பதானாலும் சரியே. கருத்துக்கு நன்றி.
கீழ்க்காணும் பின்னூட்டத்தை வியாபகன் இந்தப் பதிவுக்கு இட்டிருந்தார். பிறகு போடவேண்டாம் என்றதனால் அழித்தேன். பிறகு போடுங்கள் என்றார். போட்டிருக்கிறேன்.
//இன்னும் எத்தனை நாட்களுக்கு மனித மரணங்களை romanticize செய்துகொண்டும் glorify செய்துகொண்டும் இறப்பின் வலியை மறந்துபோம்படி செய்யப் பிராயத்தனப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்..? மன்னியுங்கள் தமிழ்நதி இப்படிச் சொல்வதற்கு... இந்தப் பாடலில் வலி எங்கே பேசப்பட்டிருக்கிறது? பழிவாங்கி விட்டதன் மிதப்பு, அதில் மறைக்கப்பட்டுவிடும் மரணத்தின் வலி... இவைதவிர இந்தப் பாடல் எதைச் சொல்கிறது?//
வியாபகன்!எங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் தேர்வுகள் குறைவு. உங்கள் பின்னூட்டத்தின் சாயலையொத்த பல கேள்விகளை எனது நண்பர்களிற் சிலர் என்னிடம் கேட்டதுண்டு. "ஏன் அநியாயமாக உயிர்களைப் பலியிடுகிறார்கள்? மக்களுக்காகத்தானே போராட்டம்... மக்களே அழிந்தபின்னால் போராட்டம் யாருக்காக?"என்றெல்லாம் கேட்பார்கள். (ஏதோ நானே களத்தில் நின்றுகொண்டிருப்பதைப் போலிருக்கும் அவர்களது கேள்வி. ஓடிவந்துவிட்டாலும், குற்றவுணர்வோடு இருந்தாலும், 'எனது மக்கள்'என்ற உணர்வு இன்னமும் எஞ்சியிருப்பதனால் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்டதாகவே உணர்கிறேன்)
உண்மைதான்! யாருடைய மரணமும் கொண்டாடத்தக்கதல்லத்தான். தன்னைத் தற்கொடை செய்யும் போராளியும் ஒரு தாய்க்கு மகன்தான். மரணங்களை எங்களால் தவிர்க்கவியலாது. ஏனென்றால் எங்களைத் தற்காத்துக்கொள்ள அதுதான் ஒரே வழியாக இருக்கிறது. பேச்சுவார்த்தை என்ற வார்த்தையின் 'பம்மாத்தை'ப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. பலியிடுதல் ஒன்றே உயிர்த்திருக்கும் வழியாகிப் போன நிலையில், நாங்கள் இழப்பின் கணப்பை ஊதிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. புனிதப்படுத்த வேண்டியிருக்கிறது. 'எனது இனம்'என்ற உணர்வை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் அந்த நெருப்பு அணைந்துவிடும். மரணங்களை விரும்பிக் கொண்டாடுவதில்லை... வேறு வழியற்றுக் கொண்டாடுகிறோம் என்பது உங்களுக்கும் தெரியும். பழைய கேள்விகளுக்கு, சலித்துப்போன பதில்களுக்கு நாம் திரும்பிப்போக வேண்டியிருக்கும்.
எனது பாடலில் 'பழிவாங்கிய மிதப்பு'இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். இருக்கட்டுமே...! இரத்தமும் சதையும் கூக்குரலும் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பலிக்களத்தில் நின்றுகொண்டு கீதை படிக்கவியலாது. நிறையப் படித்துவிட்டு நான் நாடு,மொழி,இனம் எல்லாம் துறந்தவள்-துறந்தவன் என்று சொல்லிக்கொள்வதிலெல்லாம் எனக்கு ஒப்புதல் இல்லை. 'எனது மக்கள்'என்ற உணர்வுக்கு நம்மில் பெரும்பாலானோர் ஆடித்தான் போகிறோம். 'ஆமிக்காரனுடையதும் உயிர்தானே...'என்ற 'மனிதம்'சார்ந்த விடயங்களை, இழப்பின் வலியோடு இருப்பவர்களிடம் பேசவியலாது.
எனது படைப்பில், பாடலில் தவறு இருக்கலாம். உணர்ந்ததைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாமற் போயிருக்கலாம். பாடலில் சந்தம் அது இதென்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், பழிவாங்கும் உணர்வு,மரணங்களைத் தூக்கிப்பிடித்தல்,புனிதப்படுத்தல் இந்தச் சொற்பதங்களெல்லாம் அவை பயன்படுத்தப்படும் இடங்களின் பாற்பட்டதேயன்றி, உண்மையான அர்த்தத்தில் அவை வரா. என்னதான் எழுதினாலும், எங்கேதான் இருந்தாலும், உலகமயமாக்கல் போன்ற சொற்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டாலும் நான் இன்னமும் 'அங்கு'தான் இருக்கிறேன். இது தவறெனில் ஒன்றும் செய்வதற்கில்லை.
பாடலின் அரசியல் குறித்து வியாபகனின் கருத்தோடு ஓரளவுக்கு ஒன்றிப்போகவேண்டியிருப்பதாலும், அது தோடர்பில் ஏராளம் குழப்பங்களோடு வாழ்தவாலும் அதனைத் தவிர்த்து,
தமிழில் பாடல்களும், ஓசை நயமும் தேவை கருதியும் வலிந்தும் மீறப்பட்டு கவிதை என்றாலே ஒரேமாதிரியான ஓசையுடைய மனப்படிமங்களின் குவியலாகக் காட்சியளிக்கும் இன்றைய கவித்தமிழ் சூழலில், மறுபடி ஓசைகளும் பாடல்களும் தமிழுக்குள் வருவதற்கு வழிவிடும் இத்தகைய முயற்சிகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பாடல் என்பதையும் தாண்டி,
ஆங்கில மொழிபெயர்ப்புக்களைப்போன்ற ஒரேமாதிரியான ஓசையுடைய கவிதைகளையே படிக்கக்கிடைக்கும் இடத்தில் வாய்விட்டுச் சொல்லி நுகரக்கூடிய நல்ல கவிதையை தந்திருக்கிறீர்கள்.
சில இடங்களில் தளை தட்டுவது தெரிகிறது. அசை பிரித்துப்பார்க்காமல் தான் சொல்கிறேன். சொல்லும்போதே தளைகள் இடிக்கிறது. சரிப்படுத்திவிடுங்கள்.
சொல்லும்போதும் பாடும்போதும் சீரான ஓட்டம் இருப்பதற்குத்தானே யாப்பு எல்லாம். அந்தச் சீரான ஓட்டம் இருக்குமிடத்து யாப்பைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை
மயூரன்! வந்து வாசித்துக் கடந்துபோகாமல் கருத்துச் சொல்லிவிட்டுப் போகிற பெருந்தன்மைக்கு நன்றி. எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.. அதாவது, என்னுடைய எழுத்து வடிவங்கள் எல்லாமே ஒன்றை நோக்கிய நகர்வு அன்றேல் முயற்சிதான்... ஒரு கொண்டாட்டத்திற்குச் செல்லும்போது அதையும் இதையும் முயற்சித்து கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்வதைப் போல எனக்கான மொழியைக் கண்டடையும் ஓட்டந்தான் மேற்கண்ட முயற்சிகளெல்லாம். அவற்றின் மீது எந்த வகையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக்கொள்வேன். நீங்கள் சொன்னபடி அந்தப் பாடலை தளை தட்டாமல் எழுத முயற்சிக்க வேண்டும். ஆனால் என்ன... ஒரு தடவை ஒன்றை எழுதிவிட்டால் என்னளவில் அது துப்பப்பட்ட எச்சிலாகிவிடுகிறது. (இது கொஞ்சம் அருவருக்கத்தக்க உதாரணம் எனினும்) பிறகு அதைக் கையில் எடுப்பதில்லை. அதே மாதிரியான வேறொன்றை எழுதி முயற்சி செய்யலாம். யார் கண்டது... ஒருநாள் நான் கூட பாடல்கள் எழுதலாம்.:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//மரணங்களை எங்களால் தவிர்க்கவியலாது. ஏனென்றால் எங்களைத் தற்காத்துக்கொள்ள அதுதான் ஒரே வழியாக இருக்கிறது.//
தமிழ்நதி, அதிகாரப் படிநிலையின் உச்ச பீடத்தில் உள்ளவர்களின் வாக்கியங்களாக இவற்றைப் பாவனை செய்து பாருங்கள். அதன் அர்த்தப் பரிமாணங்கள் விளங்கும்.
நீங்கள் சொன்ன அத்தனை சமாதானங்களைக் கருத்தில் கொண்ட பிறகும் என்னுள் நெருடலாகத் தொடர்ந்தும் துருத்திக் கொண்டிருக்கும் வரிகள் இவைதாம்:
//ஆடைகள் அகற்றிய நிர்வாணம்
ஆனாலும் எவர்க்கின்று அவமானம்//
இன்று அரசியற் களத்தில் பகடைகளாக்கப்பட்டிருக்கிறது மனித உடல்களின்
வெளி. ஆடைகள் அகற்றப்பட்டு இறந்த போராளிகள் dehumanize செய்யப்பட்ட அவலத்தை சொல்லும் முதல் வரி, பிறகு அதன்மூலம் எதிரிக்கு நேர்ந்த அரசியல் இழப்பைச் சுட்டி உவகை கொள்கிறது; ஆசுவாசமடைகிறது. 'ஆனாலும்' என்ற பிரயோகத்தின் அழுத்தம் இரண்டும் சமன்பட்டதான (dehumanization = political advantage gained) வாசிப்பின் சாத்தியத்தை முன்வைக்கிறது. இது அதிகாரத்தின் சொல்லாடல். அறம்சார் மனித விடுதலையின் சொல்லாடலாக இருக்க முடியாது. பொற்காலம் எமதாக்கப் போனவரே!எக்காலம் எமைக் காண மீள் வருவீர்? என்று எமது இருப்புக்காக மற்றவரைப் பலிகொண்டதையிட்டுக் குற்றவுணர்வு கொள்ளாமல் அதைக் கொண்டாடுவது எவருடைய செயல்? நிச்சயமாக 'இ(ழ/ற)ப்பின் வலி'யோடு இருப்பவர்களது அல்ல. தமிழ்நதி, எனது இக் கேள்விகள் உண்மையில் உங்களை நோக்கியவை அல்ல. இவை தொடர்பில் உங்களைக் குற்றஞ்சாட்டுவதும் எனது நோக்கம் கிடையாது. அதிகார மையங்களுக்கிடையிலான மற்களத்தில் ஒன்றில் பார்வையாளராகி மௌனித்திருத்தல் அன்றேல் பலிக்கடாக்களாக்கி மரித்துவிடல் என்ற இரு தெரிவுகள் தாம் நம்முன் இருப்பதாகத் தோன்றுகிறது. இவையிரண்டும் தவிர்ந்த வேறொன்றினது தெரிவு, எப்போதும் ஏதோவொரு மையத்தோடு எம்மை அடையாளப்படுத்தி விடுகிற அபாயத்தைக் கொண்டிருக்கிறது. திரும்பத் திரும்பச் சொல்லப் படும் உண்மையின் ஒரு முகத்தின் முன் நாம் புலனறுத்துக் கிறங்கிக் கிடக்கிறோம். இழப்பின் வலி என்பது சிலவாயிரம் ரூபாய் வருவாய்க்காக தெற்கின் கிராமமொன்றில் தனது மகனை யுத்தமுனைக்கு அனுப்ப நிர்ப்பந்திக்கப்படும் ஒரு தாயினுடையதும் தான். எல்லாவித அடிநிலை மக்களதும் பிரச்சனைகளையும் விடுத்து தனித்து இனரீதியான நோக்கோடு மாத்திரம் எங்களது அவலத்தை விளங்கிக் கொள்ள முடியாது...
வியாபகன்!தம்மால் வரிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதென்பது, தம்மை இழப்பதற்கொப்பானதென்றுதான் நாம் அனைவரும் கருதிக்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். அதனால்தான் அவரவர் வார்த்தைகளிலிருந்து இறங்கிவரமுடிவதில்லை. நாம் என்னதான் விவாதித்தாலும் எனது சார்புநிலையை நீங்களோ உங்களது கருத்துநிலையை நானோ உடனடியாக மாற்றவியலாது. நாம் நேரடியாக, நம்மால் பேசப்பட்ட விடயங்களில் சம்பந்தப்படும்போது மட்டுமே அவற்றின் உண்மைத்தாக்கம் புரியும். 'தன்னை' விட்டொழிக்காத விவாதங்கள் இல்லாத ஊரில்தான் கொண்டுபோய்விடும்.
//ஆடைகள் அகற்றிய நிர்வாணம்
ஆனாலும் எவர்க்கின்று அவமானம்//
மன்னிக்கவும் வியாபகன்! இரண்டாவது வரிக்கு நான் கொண்ட அர்த்தம் வேறு. நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் வேறு. 'ஆனாலும் எவர்க்கின்று அவமானம்'என்பதன் பொருள் 'தாக்கியழிக்கப்பட்டுவிட்டீர்களல்லவா?'என்று கெக்கலி கொட்டுவதல்ல. 'மரணித்த போராளிகளுடைய ஆடைகளை அகற்றியதால் இழிவுசெய்யப்பட்டது அவர்களல்ல; நீங்கள்தான்.'என்ற பொருளிலேயே நான் எழுதினேன்.
"எப்போதும் ஏதோவொரு மையத்தோடு எம்மை அடையாளப்படுத்தி விடுகிற அபாயத்தை"
ஏதோவொன்றுடன் எம்மைப் பொருத்திக்கொள்ளாமல், வெறும் விமர்சகராக இருப்பது சாத்தியமென்கிறீர்களா...?
"இழப்பின் வலி என்பது சிலவாயிரம் ரூபாய் வருவாய்க்காக தெற்கின் கிராமமொன்றில் தனது மகனை யுத்தமுனைக்கு அனுப்ப நிர்ப்பந்திக்கப்படும் ஒரு தாயினுடையதும் தான்."
அது சரி!இலங்கையில் இராணுவத்தில் இணைந்து சக இனத்தவனைக் கொல்வதைத் தவிர ஊதியம் பெறத்தக்க வேறு தெரிவுகளே இல்லை அல்லவா!!!
என்னவோ... நானும் நீங்களும் பேசி என்ன ஆகப் போகிறது? பேச வேண்டியவர்கள் பேசட்டும்.
//'ஆனாலும் எவர்க்கின்று அவமானம்'என்பதன் பொருள் 'தாக்கியழிக்கப்பட்டுவிட்டீர்களல்லவா?'என்று கெக்கலி கொட்டுவதல்ல. 'மரணித்த போராளிகளுடைய ஆடைகளை அகற்றியதால் இழிவுசெய்யப்பட்டது அவர்களல்ல; நீங்கள்தான்.'என்ற பொருளிலேயே நான் எழுதினேன்.//
நீங்கள் கெக்கலி கொட்டுவதாக நான் சொல்லவில்லையே நதி?
"நான் போன கிழமை பூரா வேலைக்குப் போகேல்லத் தான்... ஆனாலும் வேறுபல விடயங்களைச் செய்ய முடிஞ்சுது" இங்க, 'ஆனாலும்' எண்டது எதைச் சொல்லுது? அவர்களின் அவமானத்தைச் சொல்லி ஆசுவாசிப்பதன் மூலம் மனித உடலங்கள் கோரமயப்படுத்தப்பட்ட அவலம் மறக்கப்படுகிறது... என்ன ஒன்று, குறித்த பதம் பாடலில் முதலெழுத்தோடு ஒன்றி ஓசைநயம் தரும் மோனையாகவும் வினை புரிகிறது.
//"எப்போதும் ஏதோவொரு மையத்தோடு எம்மை அடையாளப்படுத்தி விடுகிற அபாயத்தை"
ஏதோவொன்றுடன் எம்மைப் பொருத்திக்கொள்ளாமல், வெறும் விமர்சகராக இருப்பது சாத்தியமென்கிறீர்களா...? //
உங்கள் வரியில் மையம் என்ற வார்த்தையைத் தணிக்கை செய்து விட்டீர்கள் தமிழ்நதி! :-)) சார்புநிலை எல்லோருக்கும் உள்ள ஒன்று தான்... ஆனால் ஆதிக்க மையங்களைச் சார்ந்திருத்தல் என்பது அபாயகரமானது...
//அது சரி!இலங்கையில் இராணுவத்தில் இணைந்து சக இனத்தவனைக் கொல்வதைத் தவிர ஊதியம் பெறத்தக்க வேறு தெரிவுகளே இல்லை அல்லவா!!!//
இந்த வரிகளில் உள்ள எள்ளல், நீங்கள் நடப்பை உணராதிருப்பதையே காட்டுகிறது. வேறு தெரிவுகள் இல்லாத நிலையிலேயே வாழ்வைப் பணயம் வைத்து சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைகிறார்கள்... அன்றி 'தாய்மண்ணைக் காக்கும் தேச பக்தி' என்பதெல்லாம் தெற்கில் பெருங்கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் அக்கதிரைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டுக் கட்டமைக்கும் புனைவுகள்... ஆட்சியிலிருந்து வரும் சிங்கள அரச யந்திரம் தனது அதிகாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது தமிழர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களையும் கொன்று குவித்திருக்கிறது... கடந்த காலத்தில் நிகழ்ந்த ஜேவிபி கிளர்ச்சி முதலானவை எப்படி ஒடுக்கப்பட்டன/ எத்தனை ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் விபரமாகச் சொல்லக்கூடும்... பேரினவாதம், சிற்றினவாதம் எல்லாம் அதிகாரத்தை இலக்காகக் கொண்டவர்களாலேயே பொதுவெளியின் நினைவுகளாக நிலைநிறுத்தப் படுகின்றன... சக இனத்தவன்/ள் என்ற பதமே எனக்குப் புரிதலுக்கு அப்பால் பட்ட ஒன்றாகத்தான் தோன்றுகிறது. 'தமிழ்'த் தகப்பனுக்கும் 'சிங்கள'த் தாய்க்கும் பிறக்கக் கூடிய பிள்ளையை எந்த 'இன'மாக அடையாளப்படுத்துவது? உங்களோடு என்னால் சகோதரத்துவத்தை உணர முடியும் என்றால் அதே உணர்வை சிங்கள அடையாளத்தோடு உள்ள ஒருவரோடும் பகிர்ந்துகொள்ள இயலக்கூடியதாயிருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்...
//என்னவோ... நானும் நீங்களும் பேசி என்ன ஆகப் போகிறது? பேச வேண்டியவர்கள் பேசட்டும்.//
எங்கள் எல்லாவித குறைநிறைகளோடும் உரையோடிக் கொண்டிருப்போம் தமிழ்நதி... உலகின் எந்தவொரு சிற்றதிர்வுக்கும் அதற்கான பெறுமானம் என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்... நாம் இன்னமும் நண்பர்களாகத் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன்... ;-))
வியாபகன்!
"ஆதிக்க மையங்களைச் சார்ந்திருத்தல் என்பது அபாயகரமானது..."
ஒருவருக்கு 'ஆதிக்கம்'எனத் தோன்றுவது மற்றொருவருக்கு 'ஆதிக்கத்தின் மீதான எதிர்ப்பு'என ஆவதன் மூலம் ஆராதனை'க்குரியதாகிறது. அண்மைய காலங்களில் விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றையும் 'பயங்கரவாதம்'என முத்திரை குத்துவதனோடு ஒத்ததுதான் இதுவும். துப்பாக்கி ஏந்திய யாவரும் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, ஆதிக்கம் செலுத்துவதற்காக அதை ஏந்தியிருக்கவுமில்லை என்பதை இவ்வளவு விசயம் தெரிந்த உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
"வேறு தெரிவுகள் இல்லாத நிலையிலேயே வாழ்வைப் பணயம் வைத்து சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைகிறார்கள்..."
'வேறு தெரிவுகள் இல்லாத நிலையில்'என்பது எத்தனை பொருத்தப்பாடுடையது என்று யோசித்துப் பாருங்கள். இராணுவத்தில் சேர்வதொன்றே கடைசித்தெரிவா...? அவர்களிற் பெரும்பாலானோர் இராணுவத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதிகப்படியான ஊதியம். எட்டாம் வகுப்புவரை படித்தவன் ஒரு கடையில் வேலைக்குச் சேராமல் ஏன் இராணுவத்தில் சேர்கிறான்... மிக அதிகமான ஊதியத்தால் அவன் உந்தப்படுகிறானேயன்றி வேறு தெரிவுகள் இல்லாமலில்லை. சிறிலங்காவில் போர்முனையும் இராணுவ முகாம்களும் அன்றி வேறெந்தச் செயற்பாடுகளுமே இல்லை என்று சொல்வதைப் போலிருக்கிறது.
"சக இனத்தவன்/ள் என்ற பதமே எனக்குப் புரிதலுக்கு அப்பால் பட்ட ஒன்றாகத்தான் தோன்றுகிறது."
நான் இதைக் குறித்துக் கேள்விகள் எழுப்புவதில்லை. உணர்வின் வழியே செல்கிறேன். நீங்கள் அறிவைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். அறிவு எல்லா இடங்களிலும் ஏற்புடையதா என்றால்... இல்லை என்றே நான் சொல்வேன்.
"உங்களோடு என்னால் சகோதரத்துவத்தை உணர முடியும் என்றால் அதே உணர்வை சிங்கள அடையாளத்தோடு உள்ள ஒருவரோடும் பகிர்ந்துகொள்ள இயலக்கூடியதாயிருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்...""
'பகிர்ந்துகொள்ள இயலும்'என்று ஏன் உங்களால் அடித்துக்கூற இயலவில்லை வியாபகன்? நானும் 'விரும்புகிறேன்'தான். ஆனால், அது எத்தனை வீதம் சாத்தியப்பாடுடையது என்று எனக்குத் தெரியவில்லை.
"நாம் இன்னமும் நண்பர்களாகத் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன்... ;-))"
அதிலென்ன சந்தேகம்...? நிச்சயமாக நண்பர்கள்தான்!
//"உங்களோடு என்னால் சகோதரத்துவத்தை உணர முடியும் என்றால் அதே உணர்வை சிங்கள அடையாளத்தோடு உள்ள ஒருவரோடும் பகிர்ந்துகொள்ள இயலக்கூடியதாயிருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்...""
'பகிர்ந்துகொள்ள இயலும்'என்று ஏன் உங்களால் அடித்துக்கூற இயலவில்லை வியாபகன்? நானும் 'விரும்புகிறேன்'தான். ஆனால், அது எத்தனை வீதம் சாத்தியப்பாடுடையது என்று எனக்குத் தெரியவில்லை.//
தமிழ்நதி!, வியாபகன்!
ஆரோக்கியமான உங்கள் கருத்துப்பரிமாற்றங்களுக்கு நன்றி.
நீங்கள் பேசுகின்ற சாத்தியப்பாடுகளின் அசாத்தியங்கள் பலவற்றை களத்திலே கண்டவனெனும் வகையில் சொல்கின்றேன், இது குறித்து உரையாடல்களுக்கு மிக மிகத் தொலைவிலேயே யதார்த்தம் உள்ளது.
இது தொடர்பாக சிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான முரனைச்சுட்டுகின்ற நண்பர் தராகியின் கட்டுரை ஒன்று வீரகேசரியில் வந்தது. முடிந்தால் தேடி இணைக்க முயல்கின்றேன்.
நன்றி.
//ஒன்றில் பார்வையாளராகி மௌனித்திருத்தல் அன்றேல் பலிக்கடாக்களாக்கி மரித்துவிடல் //
இது டி.பி.எஸ் ஜெயராச்சின்ர கருத்தாயும் வெளிப்பட்ட ஞாபகம்.
அதுக்கு ஆரோ பின்னூட்டம் போட்டிருந்தாங்கள், 'அவங்கள் புலியாத்தான் வாழ்ந்தாங்கள்; புலியாத்தான் செத்தாங்கள்' எண்டு.
அவர்களைப் 'பலிக்கடா' என்பதன்மூலம் 'பார்வையாளரா'யிருக்கும் குற்றவுணர்வைக் குறைப்பது, வெளித்தெரியாத ஆழ்மன நோக்கமாக இருக்கலாம். எல்லோரிடமும் இருக்கிறதா தெரியவில்லை; ஆனால் பலரிடம் பார்த்துள்ளேன்.
சின்னக்கோடு சின்னதாகவே இருந்துகொண்டு பக்கத்திலிருக்கும் பெரியகோட்டைச் சிறிதாக்கி தனக்குச் சமப்படுத்துவதைப் போல.
//எட்டாம் வகுப்புவரை படித்தவன் ஒரு கடையில் வேலைக்குச் சேராமல் ஏன் இராணுவத்தில் சேர்கிறான்... மிக அதிகமான ஊதியத்தால் அவன் உந்தப்படுகிறானேயன்றி வேறு தெரிவுகள் இல்லாமலில்லை//
நாங்கள் இழப்பின் வலி பற்றி பேசத் தொடங்கினோம் என்று நினைக்கிறேன்... நீங்கள் சொல்வது போலவே இராணுவத்தில் சேருவது கடைசித் தேர்வு அல்ல என்றே எடுத்துக்கொண்டாலும், குறித்த ஒருவரின் வாழ்நிலை உருவாக்கும் நிர்ப்பந்தம் அதுவாக இருந்தால் என்ன செய்வது? கடை ஊதியத்தை விடவும் அதிகமான வருவாய் அவரது குடும்பத்தைக் காப்பாற்றத் தேவைப்பட்டால் அவர் எப்படி கடைசித் தெரிவைத் தேர்ந்து கொள்வது? 'இன்னொருவரைக் கொல்வது பாவம்' என்ற 'அறம்' சார்ந்த நிலைப்பாடுகளின் அடிப்படையிலா? அது பற்றி மத்தியதர வர்க்கத்தினரால் மட்டும் தான் யோசித்துக் கொண்டிருக்க முடியும். விளிம்பு நிலை மக்களின் முடிவுகள் பெரும்பாலும் வயிற்றைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவன்வே அன்றி மூளையைக் கொண்டு அல்ல... இராணுவத் தெரிவில் குறித்த நபருக்கு இருக்கும் உயிராபத்தை யோசிக்கவில்லையா நீங்கள்? இன்று domestic violence முதலான risk குகளோடும், தமது பிள்ளைகளையும் பிரிந்து இன்று பலபேர் வெளிநாட்டுப் பணிப்பெண்களாகச் மத்திய கிழக்குக்கு இலங்கையிலிருந்து செல்கிறார்கள்.. இலங்கையின் அதிகூடிய அந்நியச் செலாவணி வெளிநாட்டுப் பணிப்பெண்களாகச் செல்பவர்கள் மூலமே ஈட்டப்படுகிறது. அவர்களிடம் 'உனது கடைசித் தெரிவா இது?' என்றெல்லாம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க முடியுமா? அது ஒரு நிர்ப்பந்த்தமாகி விடுகிறது... அது போலத் தான் இதுவும்... ஆக, வருவாய்க்காக இராணுவத்தில் ஒருவர் இணைந்தார் என்பதற்காக அவரது இழப்பு துயர்ப்படத் தகுதி அற்ற ஒன்றாகி விடுமா?
//நான் இதைக் குறித்துக் கேள்விகள் எழுப்புவதில்லை. உணர்வின் வழியே செல்கிறேன். நீங்கள் அறிவைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். அறிவு எல்லா இடங்களிலும் ஏற்புடையதா என்றால்... இல்லை என்றே நான் சொல்வேன்.//
அறிவு எல்லா இடங்களிலும் ஏற்புக்குரியது அல்ல என்பது உண்மை தான். ஆனால், 'உணர்வின் வழி'யானதாக அடையாளப்படுத்திப் பேசும் விடயங்கள் மிகப்பல இடங்களில் (எனக்கு) ஏற்பற்றவையாக இருப்பது தான் பிரச்சனையே... உதாரணத்துக்கு 'ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் தவறென்ன?' என்பதை உணர்வு பூர்வமாகப் பார்ப்பதா? அறிவு பூர்வமாகப் பார்ப்பதா? ஆண்ட பரம்பரை என்பது அரசதிகார வர்க்கமல்லவா? அவையனைத்தையும் 'தமிழ்' என்ற அடையாளத்துக்குள் பொதுமைப்படுத்தி அடக்கி விடமுடியுமா? நாங்களும் தமிழர்கள் என்ற ரீதியில் அதற்காகப் பெருமை கொள்ள முடியுமா? அப்படிப்பார்த்தால் ஆட்சியில் மன்னர்களாக இருந்த்த சிலவாயிரம் 'தமிழர்கள்' எத்தனை கோடி விளிம்பு நிலைத் 'தமிழர்களை' தங்கள் பேர்சொல்லும் பிரம்மாண்டக் கோயிற் கட்டுமானங்களுக்காகவும் சக 'தமிழ்' மன்னர்களை போரிட்டு ஆக்கிரமிப்பதற்காகவும் அடிமைப்படுத்தி வைத்திருந்திருப்பார்கள்? அதையிட்டு நாம் வெட்கத் தானே வேண்டும்? தமிழன், தமிழச்சி என்ற சொல்லாடல்கள் எல்லாம் நவீன காலத்தில்(சாதிய அடக்குமுறையை உட்பிதுக்கிக்) கட்டமைக்கப் பட்ட அடையாளங்கள் என்பதை இன்று தலித்தியம் பேசுபவர்கள் வலியுறுத்திச் சொல்கிறார்கள்...
நான் சொல்ல வருவது இதைத் தான்... மரணிப்பின் மனக்குமைவு எல்லோருக்குமானதுதான்... அதை இன அடையாளங்களுக்குள் குறுக்குவது என்னளவில் சரியாகத் தோன்றவில்லை..
எது ஆதிக்க மையம் என்பது தொடர்பில்: எது தனது இருப்புக்காக மற்றவர்களை தின்று செரிக்கிறதோ, மக்கள் விரோதப் போக்கைக் கைக்கொள்கிறதோ அதனை ஆதிக்க மையம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்... ஆனால் அதையும் நமக்கு அறியக் கிடைக்கும் 'உண்மைக'ளின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது என்பது பெருங்கொடுமைதான்...
"உனக்கு நாடு இல்லை" என்றவனைவிட
"நமக்கு நாடே இல்லை"
என்று தூபமிட்டவனே
ஈழத்திலிருந்து விரட்டியடிக்க
முதற்காரணி என்பேன்.
- நன்றி : யுத்தத்தின் இரண்டாம் பாகம் (சக்கரவர்த்தி)
//"உங்களோடு என்னால் சகோதரத்துவத்தை உணர முடியும் என்றால் அதே உணர்வை சிங்கள அடையாளத்தோடு உள்ள ஒருவரோடும் பகிர்ந்துகொள்ள இயலக்கூடியதாயிருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்...""
'பகிர்ந்துகொள்ள இயலும்'என்று ஏன் உங்களால் அடித்துக்கூற இயலவில்லை வியாபகன்?//
காரணம், அடையாளம் சார்ந்து பெருகிக் கிடக்கும் புனைவுகளின் சிக்கற்றன்மையும் அவை உண்டுபண்ணும் தயக்கமும் தான். சிங்களவன் சாவதும் துயரமென்கிறான்... தமிழினத் துரோகி என்று எவரோ கூவுவதை உங்களால் கேட்க முடியவில்லையா நதி?
//அவர்களைப் 'பலிக்கடா' என்பதன்மூலம் 'பார்வையாளரா'யிருக்கும் குற்றவுணர்வைக் குறைப்பது, வெளித்தெரியாத ஆழ்மன நோக்கமாக இருக்கலாம்//
கொண்டோடி, இங்கு களத்தில் இருப்பவர்கள் மாத்திரமல்ல,பார்வையாளர்களாக இருக்கத் தேர்ந்து கொண்டவர்களும் பலிகொள்ளப் படுகிறார்கள்.... ஆக, உண்மையில் பார்க்கப்போனால் நம்முன் இருக்கும் தெரிவுகள் மிகச்சொற்பம்... சக மனித உயிரியின் மடிவு குறித்த கழிவிரக்கம், அச்சம் இவை தவிர குற்றவுணர்வு எப்படி ஏற்படும், நடக்கும் யுத்தம் எந்தத் திசையில் நகர்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகு?
மலைநாடான்!தயவுசெய்து அந்தக் கட்டுரையைத் தேடி எடுத்து இணைப்புக் கொடுங்கள். இந்தப் பதிவு வழங்காத திருப்தியை அதன் மூலமாக உள்வரும் கட்டுரையேனும் கொடுக்கட்டும்.
கொண்டோடி!
"அவர்களைப் 'பலிக்கடா' என்பதன்மூலம் 'பார்வையாளரா'யிருக்கும் குற்றவுணர்வைக் குறைப்பது, வெளித்தெரியாத ஆழ்மன நோக்கமாக இருக்கலாம்."
என்ற கருத்தே எனக்கும். வராதவர்களெல்லாம் வருகிறீர்கள்:)
வியாபகன்!ஒன்றை இழப்பதன் மூலமாகவே இன்னொன்றைப் பெற்றுக்கொள்ளவியலும் என்பது உங்களுக்கும் தெரியும். அதிகபட்ச ஊதியத்தை முன்னிட்டு இராணுவத்தில் இணைபவனுக்குத் தெரியும், தான் தெரிவு செய்யும் தொழில் உயிராபத்துடையதென்று. 'நாங்கள் எல்லை காக்கப் போகவில்லை. சக இனத்தவனைக் கொல்லவே போகிறோம்'என்றுணர சிறப்பு மூளை தேவையில்லை. அடிநிலை மக்கள் என்று அல்லது படிப்பறிவு குறைந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் இந்த உண்மை தெரியும். அங்கு வயிறு மட்டுமல்ல மூளையும் தொழிற்படவே செய்கிறது.
இதனாலெல்லாம் இழப்புக் குறித்து துயர்கொள்ளும் தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்று நான் எங்குமே சொல்லவில்லையே வியாபகன்.
மத்தியகிழக்குக்குப் பணிப்பெண்களாகச் செல்வதையும் இராணுவத்தில் இணைவதையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறீர்கள். அதையும் எடுத்து விவாதம் பண்ணலாந்தான். விரிவு கருதி வேண்டாமென நினைக்கிறேன்.
"ஆண்ட பரம்பரை", "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி", "பொம்பளை சிரிச்சாப் போச்சு" இன்னோரன்ன சொல்லாடல்களில் எனக்கும் உள்ளுரச் சலிப்புத்தான். ஆனால், எம்மை ஆள்பவர்கள் நாமாகவே இருக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் யாரோ எங்களை ஆளத்தான் போகிறார்கள். முன்பு மன்னர்கள், இப்போது மந்திரிகள் அல்லது பாராளுமன்றம்... ஏதோவொரு கட்டளை மையம் இல்லாமலிருக்காது. ஒரு நாடு என்று பார்த்தாலும் இனக்குழுமம் என்று பார்த்தாலும் ஒரு 'தலைவன்'இருக்கத்தான் செய்வான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'என்பதெல்லாம் கோரஸாகப் பாடத்தான் சரி. சைபீரியாவுக்குப் போயும் கத்தரிக்காய்க் குழம்பு தேடுகிறவர்கள்தான் நாங்கள். வெளிநாடுகளில் 'குப்பை'கொட்டிவிட்டு கல்யாணம் கட்ட மட்டும் 'யாழ்ப்பாணப் பெட்டை'வேண்டும் என்று கேட்பதெல்லாம் இந்தத் 'தமிழ் மனோபாவத்தால்'தான். அந்தத் 'தமிழ்'மனோபாவத்தை நீங்கள் என்னதான் செய்தாலும் முற்றாகத் துடைத்துப் போட்டுவிட இயலாது. அதனடிப்படையில் 'எங்களை எங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஆள வேண்டும்'என்று நினைப்பதில் தவறென்ன இருக்கிறது? ஹெட்டியாராச்சி என்பவர் சுப்பிரமணியம் தனக்குக் கட்டளை இடுவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார் அல்லவா? என்னதான் பேசினாலும் 'தமிழ்த்துவம்'என்பது அழியுமென எனக்குத் தோன்றவில்லை.
"நான் சொல்ல வருவது இதைத் தான்... மரணிப்பின் மனக்குமைவு எல்லோருக்குமானதுதான்..."
அதை நான் மறுக்கவில்லை வியாபகன்! நான் சொல்ல முனைவது எளிதானது. அதாவது, பக்கத்து வீட்டுப் பையன் கஞ்சா குடிப்பதனால் ஏற்படும் பதைப்புக்கும் எனது தம்பி கஞ்சா குடிப்பதனால் ஏற்படும் பதைப்புக்கும் வித்தியாசம் உண்டு என்கிறேன். கஞ்சா ஒன்றுதான். புகைக்கும் ஆட்களோடு எங்களுக்கு இருக்கிற நெருக்கத்தைப் பொறுத்ததே பதைப்பு. எதையெதையோ வாசித்துவிட்டு, 'இன அடையாளங்கள் அழிந்த ஒரே மானுட குலமாகிவிடலாம் வாருங்கள்' என்பது என்னளவில் ஒவ்வாத பேச்சாகவே இருக்கிறது. நடைமுறைச் சாத்தியத்தை இதில் காணமுடியவில்லை.
உங்கள் கடைசிப் பந்திக்கான பதிலாக இதைக் கொள்ளுங்கள்:
'உயிர்' 'உயிர்'என்று பேசிக்கொள்கிறோம். அந்த உயிரையே தான் கொண்ட கொள்கைக்காக விடத் துணிகிற ஒருத்தியை-ஒருவனை நான் மதிக்கிறேன். என்னால் செய்ய முடியாததை மற்றவர்கள் செய்யக் காண்கிற வியப்பு என்றும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அந்தத் தன்னலமற்ற அர்ப்பணிப்பை 'அதிகாரம்'அது இதென்ற நீங்கள் சுட்டுகிற காரணங்களுக்காக ஒதுக்கிக் கடந்து போய்விடாமல் அதைச் சார்ந்திருக்க விரும்புகிறேன். சார்புநிலை என்பது தனிப்பட்டவர்களின் தெரிவு அல்லவா?
மிதக்கும்வெளி! சக்கரவர்த்தியை வாசித்துக் கொண்டிருப்பதனால்தான் அத்தனை கேள்வி கேட்டீர்களா...? மிக நன்று. எப்படியோ 'உனக்கு நாடு இல்லை'என்பவனுக்கு பக்கப்பாட்டுப் பாட நிறையப் பேர் இருக்கிறீர்கள் அது போதும்:)
சிவராமின் பெரும்பாலான கட்டுரைகள் இந்தச்சுட்டியில் இருக்கின்றன. அதில் நீங்கள் சொல்லும் கட்டுரை இருந்தால் நல்லது.
தராக்கியின் கட்டுரைகள்
தமிழ்நதி!
கீழேயுள்ள சுட்டிகளில் உள்ள இரு கட்டுரைகளும் சிங்கள புத்திஜீவிகள் குறித்த சிவராமின் அனுபவப் பதிவுகள்.
சிவராம் புலியாதரவாளன் அதனால் இப்படிச் சொல்கின்றார் என்றோ அல்லது வேறேதும் சொல்லியோ இந்த யதார்த்ததை மறுதலிப்பின், மன்னிக்கவும் உங்களோடு இது குறித்துப் பேச முடியாது.
இலகுவில் இணைப்புக்களைக் கண்டுகொள்ள உதவிய மயூரனுக்கு நன்றி.
http://tamilnation.org/forum/sivaram/041010t.htm
http://tamilnation.org/forum/sivaram/041003.htm
சிவராமுடைய உட்பார்வை பொதிந்த கட்டுரைகளைப் பரிந்துரைத்தமைக்கும், தொடுப்புக்கும் முறையே மலைநாடன், மயூரன் இருவருக்கும் நன்றி... உதிரியாகக் கேள்விப்படும் விடயங்களுக்கு மேலதிகமாகப் பரந்த புரிதலை அடைவதற்கு அக்கட்டுரைகள் உதவின... வன்முறை மீதான நம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர்த்துப்பார்த்தால் அவரோடு ஒத்துப்போக முடிகிறது... சிவராமின் கட்டுரை சொல்வதைத் தான் நானும் வழிமொழிகிறேன்; வலியுறுத்துகிறேன்... அவரது கட்டுரைகள் இரண்டும் எவ்விதமான தலைமைகளாலும், கருத்தியலாலும் சிங்கள மக்கள் இதுவரை வழிநடத்தப் பட்டு வருகிறார்கள் என்பதைத் தெட்டத் தெளிவாகச் சொல்கின்றன... எய்த அவர்களை விட்டு ஏன் அம்புகளை நோவான்? தவிர, அக்கட்டுரை so called தமிழ்த்தலைமைகள் மீதான விமர்சனத்தை வைக்கத் தவறுகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய அம்சம்... தமிழ் அரசியல் தலைமைகள் வர்க்க நலன்களுக்காக எப்படியெல்லாம் கடந்த காலங்களில் மக்களைத் தவறாக வழி நடத்தினார்கள் என்பதை இமயவரம்பன் முதலான அறிவுசீவிகள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்...
இங்கு நடைபெறும் யுத்தத்தால் கொல்லப்படுவது என்னைப் போலவே இருக்கும் மக்கள் (அது தமிழராயிருக்கலாம், சிங்களவராயிருக்கலாம்), இதில் இலாபமீட்டுவது இங்குள்ள சில அரசியல் ஆதாயப் பேர்வழிகள் மற்றும் முக்கியமாக வெள்ளை ஏகாதிபத்ய ஆயுத வியாபாரிகள்... இதில் கொலையுண்டு போம் எவரையும் பதைப்புணர்வோடுதான் நோக்க வேண்டியிருக்கிறது
தொடர்ச்சியாக கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வியாபகன்! மேலும் உரையாட இன்றுள்ள மனோநிலை இடங்கொடுக்கவில்லை. தற்காலிகமான இந்தச் சோர்விலிருந்து மீண்டெழுந்து வந்து பேசுகிறேன்.
வியாபகன்,
நீங்கள் 'பலிக்கடாக்கள்' என்று அந்த 21 பேரையும் சொல்லவில்லையா?
அப்படியானால் சரி. தவறான புரிதலுக்கு வருந்துகிறேன்.
பாடல் இரங்கற்பாவாக எழுதப்பட்டு வலியுடன் பாடவும் பட்டிருக்கிறது. மலைநாடன் வலி ததும்பப் படியதைக் கேட்டேன். உணர்ந்தேன்.
அருமை - அருமை
பாராட்டுகள்
Post a Comment