முன்னெப்போதிலும் முகம் பார்த்திராத, ஆனால் ஒத்த குணங்களால், ரசனைகளால் நெருக்கமான ஒரு நண்பரைப் பார்ப்பதற்கான நாளைக் குறித்து வைத்துவிட்டு அதனை எதிர்நோக்கிக் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? காதலன் அல்லது காதலி வருவதற்கு அரை மணிநேரம் முன்னதாகவே சந்திக்கும் இடத்திற்குப் போய், வீதியால் போகும் வரும் ஆட்களையெல்லாம் கண்களால் தொடர்ந்துகொண்டிருந்த நாட்கள் உங்களுக்கு வாய்த்திருக்கின்றனவா? நெடிய கோடையின் பின் வானம் இருட்டி இலைகள் அசைவற்றிருக்க முதல் மழைத்துளி மண்ணில் விழும்போது எழும் பரவசத்திற்கு இணையான இன்பத்தை அனுபவித்திருக்கிறீர்களா? தன் தாமரைக் கால்களை அசைத்து மல்லிகைக் கண்களை மலர்த்தி ரோஜா இதழ்களை அவிழ்த்துச் சொரியும் மழலையின் சிரிப்பை அள்ளிக் கண்களில் ஒற்றிக்கொண்டு நெகிழ்ந்திருக்கிறீர்களா? புத்தகக் கண்காட்சி நடக்கும் ஜனவரி மாதத்திற்கான காத்திருப்பும், அந்த ஜோதியில் இறங்கிக் கலக்கும் முதல்நாளும் மேற்குறிப்பிட்டவற்றுக்கு நிகரான பேரின்பத்தை எனக்கு அளிப்பவை.
நீட்டி வளர்த்துவானேன்…... கண்காட்சி தொடங்கிய முதல்நாள் அங்கு போயிருந்தேன். வீட்டிலிருந்து மூன்று பேர், மேலுமிரண்டு நண்பர்கள் சகிதம் புத்தகத் திருவிழாவில் தொலைந்தேன். சென்னையின் வாகன நெரிசலில் சிக்கி சிடுசிடுத்து போய்ச் சேரும்போது ஏழு மணியாகிவிட்டது. போகும் வழி நீள சனங்கள் நெரிபட, பெரிய பெரிய முகங்களைத் தாங்கிய பதாகைகள் பயமுறுத்த உள்ளே போன நாட்கள் போலில்லைத்தான். ஆரவாரங்கள் ஆரம்பித்திருக்கவில்லை. அரங்கின் முன்னதாக வெளியீட்டுவிழா, கலை நிகழ்ச்சிகள், பிரபலங்கள் பேச என்று போடப்பட்டிருந்த மேடையின் முன் பரவியிருந்த நாற்காலிகளில் அமர்ந்து சிலபேர் ‘கடலை’ போட்டுக்கொண்டிருந்தார்கள். ஓரத்தில் வித்தியாசமாய் மஞ்சள் நிறத்தில் முகம் தூக்கிக்கொண்டு அசப்பில் சொகுசுப் பேரூந்தின் சாயலில் இரத்த தான வண்டி நின்றிருந்தது. முதல் நாளுக்கேயுரிய நிதானத்துடன் இருந்தது புத்தகக் கண்காட்சி. அதுவே எங்களுக்கு வசதியாகவும் அமைந்தது. அவரசமில்லாமல் இடிபடாமல் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கவும் வாங்கவும் முடிந்தது. ஒரு வருட தூக்கம் முறித்து அப்போதுதான் எழுந்திருந்தது போலிருந்தன stallகள். சிலவற்றில் அப்போதுதான் அட்டைப் பெட்டிகளைப் பிரித்து, புத்தகங்களைச் சுற்றியிருந்த வெள்ளைக் காகிதங்கள் பரவியிருக்க நடுவே அமர்ந்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பதிப்பக நிலையங்களிலும் இரண்டு மூன்று பேர்களுக்கு மேல் இருக்கவில்லை.
புத்தகம் வாங்கவரும் பெண்களின் கண்களை வாசிக்கவே வருவதாக (சைட் அடிக்க) என்னோடு வந்த பையன்களில் ஒருவர் அறிவித்தபடியிருந்தார். சனி, ஞாயிற்றுக் கிழமைகளே அதற்கு உகந்ததென அவருக்குப் பரிந்துரைத்தேன். புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் நேரத்திற்கு எங்ஙனமோ சிறகு முளைத்துவிடுகிறது. தென்திசையில் (கே.கே.புக்ஸ்) ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’கடல் நீலத்தில் கிடந்தது. இனம்புரிந்த வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தேன். இரண்டு வரிசைகளைக் கூடக் கடந்திருக்க மாட்டோம்.. மணி எட்டரையாகிவிட்டது.
மிகச் சரியாக எட்டரைக்கு சங்கூதியபடி… மன்னிக்கவும் விசிலூதியபடி காக்கி நிறத்தில் உடையணிந்தவர்கள் வந்தார்கள். நான் அப்போதுதான் உயிர்மையினுள் ஓடித் திரிந்துகொண்டிருந்தேன். நேரம் முடிவதற்கிடையில் காலச்சுவட்டுப் பக்கமும் கண்ணோட்டம் விட்டுவிடவேண்டுமென்ற திட்டத்தில் மண்விழுந்தது. (நீங்கள் நினைப்பது சரி. நான் பதிப்பக விடயத்தில்.........:).) தெய்வத் திருமுகங்களை மறைத்து மூடுவதுபோல ஸ்டால்களின் முன் மஞ்சள் திரைச்சீலைகளை இழுத்து இழுத்து மூடிக்கொண்டிருந்தார்கள். இனி வேலைக்காவாது என்று வெளியில் வந்தோம். கவிஞரும் தோழியுமானவர் க்ரியா ராமகிருஷ்ணனைப் பார்த்துப் பார்த்து வியந்துகொண்டிருந்தார். ‘எத்தனை வருஷமா இவரைப் பாக்கணும் பாக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்’என்றார் என்னைக் கண்டதும். க்ரியா ராமகிருஷ்ணனுக்கு அவரது புத்தகங்களைப் போலவே நேர்த்தியான வடிவம்.
புத்தகங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வந்த என்னை ‘பிறகு வரலாந்தானே’என்று கைப்பிடியாய் இழுத்துப் பிடித்தாள் அண்ணாவின் மகள். இழுத்த இழுப்பில் ‘விட்டால் திரும்பவும் ஓடிப்போய்விட்டால் என்ன செய்வது’ என்ற பயம் தொனித்தது. ஓடிப்போகக்கூடிய ஆளுந்தான்!
கோப்பி குடிக்கலாமென்று உணவுச்சாலைக்குப் போனோம். இல்லையென்று அவர்கள் கைவிரித்தது குடிக்காத கோப்பியை விடக் கசந்தது. ஜூஸ் குடிக்கும் மனோநிலையோ காலநிலையோ இருக்கவில்லை.
கையில் கனத்தன புத்தகங்கள். நாளையும் போகலாம் என்றது பேராசை. புத்தகங்களினுள்ளிருந்து அழைத்துக்கொண்டேயிருக்கும் வரிகளுக்கு மயங்காமலிருப்பதாவது!
வழக்கமாக எனது பதிவுகளால் அழவைப்பவள் என்று நண்பர்களில் சிலர் கேலிசெய்வதுண்டு. வித்தியாசமாக, கொஞ்சம் பொறாமைப்பட வைத்தால் நீங்கள் கோபித்துக்கொள்ளப் போகிறீர்களா என்ன?
பு.கண்காட்சியில் முதல் நாளன்று (08-01-09) வாங்கிய புத்தகங்கள்
மீதமிருக்கும் சொற்கள் தொகுப்பு அ.வெண்ணிலா (பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)
'சே வாழ்வும் புரட்சியும்'- குறுந்தட்டு
'லெனின்' குறுந்தட்டு
இலக்கிய மொக்கைகள் -வினவு
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் -சசி வாரியர்
ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள் -5 புத்தகங்கள்
பாரதி -சரத் சந்திரர்
அக்னி மூலை -பா.செயப்பிரகாசம்
காளி நாடகம் -உண்ணி. ஆர் (தமிழில் சுகுமாரன்)
வார்ஸாவில் ஒரு கடவுள் -தமிழவன்
ஆஸாதி ஆஸாதி ஆஸாதி(கட்டுரைகள்) -சாரு நிவேதிதா
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது -சாரு நிவேதிதா
காத்திருந்த வேளையில்… - மனுஷ்ய புத்திரன்
அடியாள் -ஜோதி நரசிம்மன்
அழையா விருந்தாளி -ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
உடைந்துபோன ஒருவன் -ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி
கள்ளம் -தஞ்சை பிரகாஷ்
பிர்சா முண்டா -கே.எஸ்.சிங்
நாடு கடத்தப்பட்டவனின் வரலாறு -உபேந்திரநாத்பந்த்யோபாத்தியாய்
யாழ்ப்பாண வைபவ மாலை -குல.சபாநாதன்
சமஷ்டியா தனிநாடா -மு.திருநாவுக்கரசு
மீளாத காதல் - மாக்ஸிம் கார்க்கி
நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன் -மாக்ஸிம்கார்க்கி
குல்சாரி - சிங்கிஸ் ஐத்மாத்தவ
தாய் - மாக்ஸிம் கார்க்கி
மலைகளைத் தவிர எமக்கு நண்பர்கள் இல்லை- குர்திஸ் கவிதைகள் - யமுனா ராஜேந்திரன்
பிணம் செய்யும் தேசம் -இளைய அப்துல்லாஹ்
மண் பூதம் -வா.மு.கோமு
வாத்து -சோலைக்கிளி
ஒவ்வொரு புல்லையும் -இன்குலாப் கவிதைகள்
சிறைக் கடிதங்கள் -ரோசா லக்சம்பேர்க் (தமிழில் கி.அ.சச்சிதானந்தம்)
லைப் இஸ் பியூட்டிஃபுல் -ராபர்ட்டோ பெனினி,வின்சென்சோ செராமி – தமிழில் யுகன்
சமயம் தொ.பரமசிவன், சுந்தர்காளி
அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்-சங்கர ராம சுப்பிரமணியன்
என் நண்பர் ஆத்மாநாம்- ஸ்டெல்லா புரூஸ்
சொற்களைத் தவிர வேறில்லை -எம்.ஜி.சுரேஷ்
உரையாடல்கள் -அசோகமித்திரன்
க.நா.சு. கவிதைகள்
இரு நீண்ட கவிதைகள்- நகுலன்
விருட்சம் கவிதைகள் தொகுதி 1
விருட்சம் கவிதைகள் தொகுதி 2
அசடு -காசியபன்
இவை தவிர 3ஆம் திகதியன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வாங்கியது:
‘பேச்சரவம் கேட்டிலையோ'- தமிழச்சி தங்கபாண்டியன்(நேர்காணல் தொகுப்பு)
5ஆம் திகதியன்று இடம்பெற்ற வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வாங்கியவை:
உலக சினிமா -எஸ்.ராமகிருஷ்ணன்
உலக சினிமா -எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (2005 வரையிலானவை)
அதே இரவு அதே வரிகள் -எஸ்.ராமகிருஷ்ணன்
நம் காலத்து நாவல்கள் -எஸ்.ராமகிருஷ்ணன்
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை -எஸ்.ராமகிருஷ்ணன்
காற்றில் யாரோ நடக்கிறார்கள் -எஸ்.ராமகிருஷ்ணன்
கோடுகள் இல்லாத வரைபடம் -எஸ்.ராமகிருஷ்ணன்
சித்திரங்களின் விசித்திரங்கள் எஸ்.ராமகிருஷ்ணன்
பார்க்கக் கிடைத்த பிரபலங்கள்: ஆழியூரான், அழகிய சிங்கர், குட்டி ரேவதி, க்ரியா ராமகிருஷ்ணன், நா.கதிர்வேலன், செல்வி. வீட்டிற்கு வந்து கண்ணாடியில்: தமிழ்நதி:)
இன்றைய பிரார்த்தனை: இத்தனையையும் வாசித்து முடிக்கும்வரை மரணம் என்னை அணுகாதிருக்கட்டும்.
20 comments:
முன்னெப்போதிலும் முகம் பார்த்திராத, ஆனால் ஒத்த குணங்களால், ரசனைகளால் நெருக்கமான ஒரு நண்பரைப் பார்ப்பதற்கான நாளைக் குறித்து வைத்துவிட்டு அதனை எதிர்நோக்கிக் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? காதலன் அல்லது காதலி வருவதற்கு அரை மணிநேரம் முன்னதாகவே சந்திக்கும் இடத்திற்குப் போய், வீதியால் போகும் வரும் ஆட்களையெல்லாம் கண்களால் தொடர்ந்துகொண்டிருந்த நாட்கள் உங்களுக்கு வாய்த்திருக்கின்றனவா?
அருமை, இதே அனுபவம் வாய்க்கப்பெற்றவள் நான்,
இன்று செல்கிறேன் பு.காட்சிக்கு.
கொஞ்சம் பொறாமையாய்த்தான் இருக்கிறது. எமக்கும் ஒரு காலம் வரும். கண்ணாடியில் பார்க்காவிட்டாலும் நீங்கள் பிரபலந்தான். இனி அதை மாற்றேலாது.
"முன்னெப்போதிலும் முகம் பார்த்திராத, ஆனால் ஒத்த குணங்களால்............ புத்தகக் கண்காட்சி நடக்கும் ஜனவரி மாதத்திற்கான காத்திருப்பும், அந்த ஜோதியில் இறங்கிக் கலக்கும் முதல்நாளும் மேற்குறிப்பிட்டவற்றுக்கு நிகரான பேரின்பத்தை எனக்கு அளிப்பவை"
கொஞ்சமும் மாற்றமில்லை தோழி. ஆனாலும் நானெப்போதும் அந்த முதல்நாள் பரபரபிற்குள் போவதில்லை. நான்கு அல்லது 5அம் நாள் முக்கியமாய் ஒரு வேலைநாள் 4 மணிக்கெல்லாம் சென்று விடுவது வழக்கம் அதுவும் குடும்பத்தோடு சென்று அவரவர்க்கு உண்டான புத்தகத்தை வாங்கிக்கொண்டு மேலும் வாங்குவதற்கான குறிப்புக்களை எடுத்துக்கொண்டு நகர்வேன் பின்னொரு நாள் தனியாய் சென்று சுற்றியலைந்துவிட்டு வருவது வழக்கம். இந்தமுறை செவ்வாயை தேர்வு செய்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம் எப்படி போகிறதென்று. ஆனாலும் இப்படி பொறாமைப்பட வைக்கக்கூடாது பாருங்கள் என் வயிற்றுக்குள் ஒரு அமிலப்பட்டறையே கொதிக்கிறது.. வாழ்த்துக்கள். :)
அமிர்தவர்ஷினி அம்மா,
நேற்று வந்திருந்தீர்களா? நாங்களும் ஏழு மணிக்குப் பிறகு அங்கே சுற்றிக்கொண்டிருந்தோம். இழுத்துப் பூட்டியானபிறகும் வெளியில் மண்டபத்தினருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டிற்கு வர பதினொரு மணியாகிவிட்டது:)
சூரியா,
பொறாமைப்படுகிறீர்களா? அப்பாடா:) பதிவின் நோக்கம் நிறைவேறியது:) நேற்றும் நிறைய வாங்கி வந்தேன். இனியும் வயிற்றெரிச்சலைக் கொட்டினால் தாங்காது என்பதனால் அப்புத்தகங்களின் பெயர்களை எழுதவில்லை.
கண்ணாடியில் அவரவர்க்கு அவரவரே பிடித்த பிரபலம் பலம் இல்லையா? 'சுயமோகி'கள் பெருகித்தான் போனார்கள். நான் அப்படி இல்லையாக்கும்.
கிருத்திகா,
முதல்நாள் உண்மையில் சனநெரிசல் இல்லை. நேற்று இடிபட்டுக்கொண்டே நடந்துதிரிந்தோம். அப்படி இடிபடுவது பிடிக்கவில்லை. ஆனால், ஆறு மணிக்குப் பிறகுதான் வெளியில் செல்லும் மனோநிலை கூடுகிறது. என்ன செய்ய? நான் இன்றும் போகிறேன். செவ்வாய்க்கிழமையும் போகிறேன். அன்று மாலை ஒரு கவியரங்கம் இருக்கிறது.
முன்னெப்போதிலும் முகம் பார்த்திராத, ஆனால் ஒத்த குணங்களால், ரசனைகளால் நெருக்கமான ஒரு நண்பரைப் பார்ப்பதற்கான நாளைக் குறித்து வைத்துவிட்டு அதனை எதிர்நோக்கிக் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?//
அதற்கும் சேர்த்துதான் புத்தக கண்காட்சிக்கு வருவது...பெண்களின் கண்களை வாசிக்கும் நண்பர்களுடனே...
இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு போவதாயில்லை...கடந்த இரண்டு வருடங்களாய் வாங்கிய புத்தகஙகளில் பெரும்பாலானவை இன்னும் திறக்கப் படாமலிருப்பதால், இந்த வருடம் நான் புத்தகம் வாங்க தலைமை செயலகம்(!) தடை விதித்திருப்பதால்....ச்ச்ச்சீச்ச்சீ இந்த பழம் புளிக்குமாக்கும்
ஹி....ஹி...ஹி..ம்ம்ம்ம்ம்
இவ்வளவு புத்தகங்களா நிச்சயமாய் பொறாமையதான் எனக்கு...
நான் முன்னெப்பொழுதோ யாருக்கோ சொன்னது போல புத்தகங்கள் இல்லாத நகரமொன்றில் வாழந்து கொண்டிருப்பது மிகக்கொடுமையான விசயம்...தமிழ் மணம் இருப்பதில் கொஞ்சம் தெம்போடு இருக்க முடிகிறது...
எமது ஈழதேசத்தில் புத்தகக்கண்காட்சி எங்குநடை பெற்றாலும் ஆஜராகிவிடுவேன். ஆனாலும் என் ஆசை தமிழகத்தில் ஒரு தடவை ஏனும் பார்த்து நூல்களை அள்ளி வரவேண்டும் என. ஆனால் என்ன இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் தமிழ்நதி உங்கள் எழுத்துநடை எனக்கு வெறியை கூட்டி இருக்கிறது.
அருமையாக விமரிசித்துள்ளீர்கள். நன்றாக உள்ளது. "சமஷ்டியா? தனிநாடா?" இன்றும் கண்ணுள்ளே நிற்கிறது. இராணுவத்தினருக்கு பயந்து எரித்த பல புத்தகங்களுல் அதுவும் ஒன்று. அற்புதமான வாய்ப்பு உங்களுக்கு.
புத்தகங்களைத் தராமல் நேரில் சந்திக்காமல் ஓடிப்போயிட்டு இவ்வளவு புத்தகங்களை வாங்கிக் குவியுங்கோ ..நல்லாவேயில்லை.
ஏன் கோப்பி இல்லை என்று சொன்னவை?
மூன்று முறை சென்று சில பல புத்தங்களை வாங்கி விட்டேன்.
இன்னும் லிஸ்ட் பெரியதாய் உள்ளது..
ஆனால் பர்ஸ் தாங்காது.. தங்கமணிக்கு தெரிந்தால் ... விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
நேற்று கண்காட்சியில்{11/01}
அக்சயா கேண்டினில் மிள்காய் பஜ்ஜி நாவிற்கும், அருவியென 6 மணி முதல் 9.30 வரை. "நெல்லை கண்ணனின் பேச்சும் செவிக்கும் விருந்து.
வாங்கிவிட்டேன் உங்களது ந.குமாரனுக்கு மா. எழுதுவது. இன்னும் வாசிப்பதற்கு நேரம் வாய்க்கவில்லை.
வாசித்துவிட்டு எழுதுகிறேன்.
உங்களைப் பார்த்தேனே ம்
பின்புற அட்டையில்.
ஆண்ட்ரு சுபாசு,
"அதற்கும் சேர்த்துதான் புத்தக கண்காட்சிக்கு வருவது...பெண்களின் கண்களை வாசிக்கும் நண்பர்களுடனே..."
என்ற உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் உங்கள் வலைப்பூ பக்கம் போய் வயதைப் பார்த்தேன். ம்... கண்களை வாசிக்கும் வயதுதான். 'எத்தனை வயதிலும் கண்களை வாசிக்கலாமே...வயதென்ன தடையா?'என்று யாரும் கொதித்தெழுந்துவிடாதீர்கள்:)
யட்சன்,
தலைமைச் செயலகத்திற்குத்தான் நிதிநிலைமைகள் தெரியும். கஜானா காலியானால் வயிற்றுப்பாட்டிற்கு என்ன செய்வது? மராமத்து வேலைகள்... இன்னபிற செலவுகள் பற்றி அவர்களே அறிவார்கள். அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்:)
தமிழன்-கறுப்பி,
புத்தகங்கள் இல்லாத நகரத்தில் இருப்பது ஒரு சிரமந்தான். ஆனால், புத்தகங்கள் இருக்கும் நகரத்தில் இருப்பது அதைக்காட்டிலும் சிரமம். அதை வாங்க வேண்டுமென்று மனம் அவாவும். நிதிநிலைமை இடங்கொடுக்காது. வாங்கினாலும் வாசிக்கவேண்டுமென்று மனம் அவாவும். ஆனால், நடைமுறை வாழ்வு இடங்கொடுக்காது. வாசித்தால் நிறைய எழுதவேண்டுமென்று ஆவல் எழும். எழுதினால் யாரும் வாசிக்கமாட்டார்கள். இப்படி நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் கவலைப்படாதீர்கள்:)புத்தகங்களுக்கு மிகுந்த வரட்சியான இடத்தில் இருக்கிறீர்களென்றால்... பார்க்கலாம் ஏதாவது செய்யமுடியுமா என்று... முகவரியுடன் தனிமடலிடுங்கள். முடிந்தவரை ஏதாவது செய்யப் பார்க்கிறேன்.
கதியால்,
வெறியைக் கூட்டி இருக்கிறதா? ம்... ஆம் ஒருவகையில் அந்தச் சொல்தான் பொருத்தமாக இருக்குமோ... நான் அதைக் காய்ச்சல் என்பேன். அந்தக் காய்ச்சல்தான் ஒவ்வொருநாட்களும் என்னை அங்கே போய் நிற்கவைக்கிறது. பார்த்துக்கொண்டிருந்தாலும் போதும் போல ஒரு பரவசநிலை.
--
தமிழ் விரும்பி,
ஆம். அது பெறுமதிவாய்ந்த ஒரு புத்தகந்தான். புத்தகங்கள் எரிக்கப்படும்போது மனம் எப்படி எரியும் என்பதை உணரமுடிகிறது. எத்தனை புகைப்படங்கள், புத்தகங்கள், நாட்குறிப்புகள்... போர் பெருநெருப்புத்தான் இல்லையா? எல்லாவற்றையும் தின்று தொலைக்கிறது. அந்தப் புத்தகத்தை எழுதிய திரு sir எனது அறைத்தோழியாக இருந்தவரின் கணவர் என்ற வகையில் தனிப்பட்ட முறையிலும் பரிச்சயமுண்டு. மிகச் சிறந்த அரசியல் ஆய்வாளரும் நல்ல மனிதரும்கூட.
--
சிநேகிதி,
கனடாவில் உங்களைச் சந்திக்கவே விரும்பினேன். ஆனால் சூழல் சரியாக அமையவில்லை. அங்கு வந்தாலே பதட்டம் தொற்றிக்கொண்டுவிடுகிறது. நேற்று ஒரு நண்பரிடம் சொல்லிக்கொண்டு வந்தேன் 'எனது மனம் கீழைத்தேய வாழ்விற்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது போலும்'என்று. அதுதான் ஓடிவந்துவிட்டேன்.
கோப்பி முடிஞ்சுபோச்சு சிநேகிதி.. பிந்திப்போய்ட்டு கோப்பி கிடைக்கேல்லை எண்டு ஒப்பாரி வைச்சா என்ன செய்யிறது:)
வண்ணத்துப்பூச்சியார்,
தங்கமணிக்குத் தெரியாமல் எத்தனை திருவிளையாடல்கள் நடந்திருக்கும்:) புத்தகம் வாங்குவதென்ன பெரிதா? மிளகாய் பஜ்ஜி நன்றாக இருந்ததா? (ரொம்ப முக்கியம் பாருங்க) இன்றைக்கு கவிதை வாசிப்பு இருக்கிறது. அதென்னமோ தெரீயவில்லை.... கவிதை வாசிப்பு என்றால் கூட்டத்தில் கல்லை விட்டெறிந்தாற்போல ஆகிவிடுகிறது:)
அமிர்தவர்ஷினி அம்மா,
பின்னூட்டங்களுக்கான பதில்களில் உங்களைத் தவறவிட்டுவிட்டேன்:) என்னைப் பார்த்தீர்கள் என்றதும் 'ஏன் வந்து பேசவில்லை?'என்று யோசித்தேன். (ஆனால் ஆட்களைக் கண்டால் ஓடிவிடுகிற குணம் எனக்கும் இருக்கிறது) பின்னூட்டத்தின் கீ.......... ழே பார்த்ததும்தான் புரிந்துகொண்டேன். வாசித்துவிட்டுக் கருத்துச் சொல்லுங்கள் தோழி.
//இத்தனையையும் வாசித்து முடிக்கும்வரை மரணம் என்னை அணுகாதிருக்கட்டும்.//
:-))
கல்கி,சாண்டில்யன் வகையறாக்களின் தலையணை புத்தகங்களையும் வாங்கியிருக்கலாமோ? இன்னும் ஆயுள் கூடியிருக்க வாய்ப்புண்டே.
புத்தகங்களின் நல்ல தேர்வு உங்களின் தரமான ரசனையைச் சுட்டுகிறது. சுகமான வாசிப்பனுபவம் அமைய வாழ்த்துகள். :-)
என் நண்பர் ஆத்மாநாம்- ஸ்டெல்லா புரூஸ் - இந்த புத்தகத்தின் எந்த பதிப்பகம் என்று சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்
திரு.கிருஷ்ணனின் கேள்விக்கான பதில்.
பதிப்பகம் நவீன விருட்சம். கடை எண் 147.
வாழ்த்துக்கள்.
எல்லாப் புத்தகங்கலையும் நீங்களே வாரி(ங்கி)க்கிட்டு வந்துட்டீங்கபோல!!!!
புத்தககண்காட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை. அதனால்...... பேசாம உங்க வீட்டுக்கு வந்து எடுக்கிட்டுப் போலாமுன்னு இருக்கேன்.
அருமையான தேர்வு.
'புத்தகங்களையும்' என்று திருத்தணும்.
பிரபலம் - நா.கதிர்வேல் ? அப்படியா?
Post a Comment