7.01.2009

தோழர் காமராஜுக்கு ஒரு கடிதம்

அன்புத் தோழர் காமராஜூக்கு,

முதலில் உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்தப் பதிலை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் நான் ஒன்று சொல்லிவிடுகிறேன். "ஈழத்தமிழருக்காக நீங்கள் ஏன் பேசவில்லை, எழுதவில்லை?" என்று இனி இந்தத் தமிழகத்தில் பறக்கும் ஒரு குருவியிடம் கூட கேட்கமாட்டேன். ஏதோவொரு ஆதங்கம், பதைப்பு, நப்பாசை. கண்ணீர் விட்டுக் கதறிக் கேட்டும் கண்திறக்காமல் இருந்தன மத்திய, மாநில அரசாங்கங்கள். மக்களாவது எங்களோடு இருக்கிறார்கள் என்று நம்பியிருந்தோம். தேர்தல் முடிவு வெளியான அன்று அதுவும் பொய்த்தது. (அதிமுக வந்தால் ஒரு தேறுதல் என்று எதிர்பார்த்தோமேயன்றி பெரிய மாறுதல்களையல்ல என்பதை இங்கே சொல்லவிரும்புகிறேன்.) ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் உழைத்த உண்மையான உணர்வாளர்களை நான் இங்கு மறந்துவிட்டுப் பேசவில்லை. அவர்கள் எங்களுக்காகத் துடித்ததை நாங்கள் அறிவோம். சீமான், நெடுமாறன் ஐயா இன்னபிறர் மற்றும் குறிப்பிட்டளவான மக்களின் இதயம் எங்களுக்காகத் துடித்தது. அந்த நன்றி உணர்ச்சி எங்களிடம் இருக்கிறது. தொடர்ந்தும் இருக்கும்.

நான் அரசியல்வாதி அல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் புத்தகங்களும் எழுத்தாளர்களுந்தான். அவர்களை எனது நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் முன்னோடிகளாகவும் ஆதர்சங்களாகவும் நம்பியிருந்தேன். இந்த அந்நிய நிலத்தில் அவர்களை எனது உறவினர்களாகக்கூட உள்ளுக்குள் கருதினேன் என்பதுதான் உண்மை. எழுத்து சார்ந்த நெகிழ்வு அது. அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. சாதாரணர்களிலும் ஒருபடி மேலானவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று நான் பேராசைப்பட்டேன்.

அன்று கடவு கூட்டத்தில் அந்தக் கேள்வியை முன்வைத்தது ஒரு ஆதங்கத்தினால். அங்கே எல்லாம் எரிந்து கரிந்து முடிந்தது. எங்கள் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடிமைகளாய், விலங்குகளாய் அடைபட்டுவிட்டார்கள். வாழ்விடங்கள் சிதிலமாகி விட்டன. இனி எழுதி ஒன்றும் செய்வதற்கில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. இருந்தும், 'எம்மவர்கள் நீங்கள் ஏன் மௌனிகளாய் வாய்மூடி இருந்தீர்கள்?'என்று எனக்குக் கேட்கத் தோன்றியது. ஏனென்றால், அப்படிக் கேட்பதற்கான சந்தர்ப்பம் அன்றைக்கு எனக்குக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர்கள் எழுதி ஈழப்பிரச்சனை தீராது என்பது எனக்குத் தெரியாதா என்ன? ஆனால், உலகில் நடந்த பல தேசிய விடுதலைப் போராட்டங்களில் எழுத்தாளர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. மக்களை அவர்கள் தங்கள் வார்த்தைகளால் வழிநடத்தினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை. மக்களுக்குள் இருக்கும் சுதந்திர வேட்கையை எழுத்துக்கள் தூண்டவல்லன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

வலையிலும் வெளியிலும் ஈழப்பிரச்சனை பற்றிய பல பதிவுகள் வந்துகொண்டிருப்பதாகக் கூறினீர்கள். ஒப்பீட்டளவில் நான் சில என்றே சொல்வேன். நமது மக்களின் மனமானது 'செலிபிரிட்டீஸ்' என்று சொல்லப்படுகிற பிரபலங்களால் உதிர்க்கப்படும் கருத்துக்களைக் கையேந்திப் பெற்று நெஞ்சுக்குள் இறக்கிவிடக்கூடியது. காமராஜ் ஆகிய நீங்கள் சொல்வதற்கும் ரஜனிகாந்த் ஒரு கருத்தைச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா? அதேபோல இணையத்தில் அறியப்படாத ஒருவர் எழுதுவதற்கும் அதையே எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலம் எழுதுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். "எஸ்.ரா. இப்படிச் சொன்னாராம்..." என்று பரவலாகப் பேசவே செய்வர். அதனால்தான், "அந்த வரலாற்றுத் தவற்றை நீங்கள் ஏன் செய்தீர்கள்?" என்று அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த பிரபல எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்டேன்.

அதற்கு ஆதவன் தீட்சண்யா ஆற்றிய எதிர்வினை நியாயமானதாக இருக்கவில்லை. மதிப்பிற்குரிய ஆளுமை என்று நான் கருதிக்கொண்டிருந்தவரிடமிருந்து அப்படியொரு பதில் வந்ததில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அதிர்ச்சியில் எழுதிய பதிவே அது. எனக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்குமிடையில் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஏன்... எனக்கும் ஷோபா சக்திக்குமிடையில் கூட தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்து எழுதியிருந்தார். கருத்தினால் அடிக்க முடியாதவன் காலால் அடித்தது மாதிரி இருந்தது. நான் இலக்கியக் கூட்டத்திற்குப் போய் அருவியை ரசிப்பது இவருக்கு என்ன முறையில் வலிக்கிறது என்று தெரியவில்லை. கருத்துக்களால் மோதுவதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும். அதுதான் நாகரிகமும்கூட.

தோழர், நான் தலித்தியத்தைக் கேலி செய்வதான பின்னூட்டங்களை ஆதரிக்கவில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். தனிப்பட்ட முறையில் ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து வந்த பின்னூட்டங்களை நான் பிரசுரிக்கவில்லை. எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு. யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்குள் அந்த நேர்மையை வைத்திருக்கிறேன். அது எனக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால், நானும் பாதிக்கப்பட்டவள். ஈழத்தமிழர்கள், தலித்துகள், அரவாணிகள் எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

உண்மையில் இவ்வாறான சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. தெருச்சண்டைகளில் ஈடுபடுவதில் எனக்கு நாட்டமுமில்லை. இயல்பில் அமைதியான ஆள்தான் நான். என் நண்பர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வீட்டிலும் வெளியிலும் நாட்டிலும் கூட எனக்கு நிறையப் பணிகள் இருக்கின்றன. இந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியதுபோல 'எங்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?' என்று இனி மறந்தும்கூட யாரிடமும் கேட்கமாட்டேன்.

அது எங்கள் கனவு. எங்கள் துயரம். எங்கள் அழிவு. எங்கள் அநாதரவு. எங்கள் பசி. எங்கள் பயம். எங்கள் இனம். எங்கள் கண்ணீர். எங்கள் இழப்பு. எங்கள் இருள். எங்கள் மண். அதற்கு ஏதாவது செய்யமுடிகிறதா என்று இனி நான் முயற்சி செய்கிறேன். என் எழுத்தால் துளியளவு வலி துடைக்க முடியுமெனில் அதற்காக எழுதுவேன்.

தயவுசெய்து எனக்குப் பதில் எழுதாதீர்கள் தோழர். நான் நொந்துபோயிருக்கிறேன். வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்திருக்கக்கூடாது.


வருத்தங்களுடன்

தமிழ்நதி

25 comments:

ஈரோடு கதிர் said...

வ‌ன்மையான‌ விவாத‌ங்களிலிருந்து வில‌க‌ அன்போடு வேண்டுகிறேன்.... உடனடித் தேவை ஈழத் த‌மிழ‌னின் க‌ன்னக் க‌துப்புகளில் வழிந்தோடும் கண்ணீரில் ஏதாவது ஒரு துளியை துடைப்பதுதான்...

அதற்காக தொடரட்டும் உங்கள் பணி...

தமிழ்நதி said...

உங்கள் வேண்டுகோள்படி நடப்பதாகத்தான் நானும் உத்தேசித்திருக்கிறேன்.

இந்த விவாதங்களில் ஈடுபடுவதால் என்னுடைய வேலைகள் உண்மையில் பாதிக்கப்படுகின்றன. இனி யார் எது சொன்னாலும், 'நான் அவள் இல்லை'என்று இருந்துவிடப் போகிறேன். அக்கறைக்கு நன்றி நண்பரே!

நிலாரசிகன் said...

//இந்த அந்நிய நிலத்தில் //

இதைவிட வேறென்ன வலி வேண்டும்?

கதிரின் கருத்துக்களை வழிமொழிகிறேன்.

Anonymous said...

ovuru eela tamillanukkum oru sila india tamilarkal erpadukira vali. muluvathum unara mudikirahtu. ungal valiyai. naanum anupavithulleen. vidungal. yaarumatta naathiyaakipoonom

Venkattan

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

ஆதவன் கட்டுரைக்கு ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன் அதை சரியாக நான் அனுப்பவில்லை என நினைக்கிறேன் அது உங்களை சென்றடையவில்லை.
தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் பலரிடம் ஏன் ஈழத்தமிழர் குறித்து எழுதவில்லை என கேள்வி கேட்கும் நிலை இருக்கும் சூழலைவிடவா கொடுமையான நிலைவந்துவிடபோகிறது.
பல எழுத்தாளர்களுக்கு தனது தீர்க்கதரிசன தத்துவ முத்து உதிர்க்கும் சிம்மாசனம் போய்விடும் எனும் அச்சத்தில்தான் ஈழம் குறித்து எழுதவில்லை உதாரணமாக ஆயுதப்போராட்டமே தவறு என மாபெரும் எழுத்தாளர் ஜெயமோகன் இப்போது சொன்னதை 3 மாதங்களுக்கு முன் சொல்லி ஒருவேளை புலிகள் போரில் ஜெயித்திருந்தால் ஜெ. யின் தீர்க்கத்தரிசன சிம்மாசனத்தில் விரிசல் விழுந்துவிடுமே..

புலிகள் ஆதரவாக எழுதுபவர்கள் செயல்படுபவர்களுக்கு புலிகள் தரப்பிலிருந்து பணம் வருகிறது என வாய்கூசாமல் சொன்னவர்களிடம் நாம் திருப்பி கேட்டகேள்வி புலிகள் எதிர்ப்பாக பேச உங்களுக்கு யாரிடமிருந்து பணம் வருகிறது? இதை கேட்டவுடன் குய்யோ மய்யோ என கூச்சல்.
ஈழவிசயத்தில் சரியான அல்லது குறைந்த போராட்டம் செய்யவிரும்பாத கட்சிகளின் கைப்பாவையாக இங்குள்ள புலி ஆதரவு சிந்தனாவாதிகள் ஆகிபோயினர்.

இப்போது குளிரறையில் பிரேத பரிசோதனை நடத்துவதுபோல எழுதிகொண்டிருக்கின்றனர்.
இயக்கத்தில் இயங்கிகொண்டிருக்கும் எழுத்தாளர்கள் அதில் ஈடுபடாத எழுத்தாளர்களை அரசியல்,சமூக பொறுப்பற்றவர்கள் எனும் பார்வையோடுதான் பார்ப்பர். இப்பிரச்சினையில் அவ்வியக்கம் எடுத்த நடுநிலை[!] முடிவிற்கு கட்டுப்பட்டு இருந்த்ததை நாம் கண்டுகொண்டுதானே இருக்கிறோம் காங்கிரஸ், தி.க விலிருந்து கூட அந்த தலைமையின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிவே வந்தும் அவர்கள் ஈழவிசயத்தில் கற்பு காத்த படிதாண்ட நிலையை நீங்கள் கேள்வி கேட்டால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?

ஆயினும் ஒருவிசயத்தை சொல்லவிரும்புகிறேன் தமிழ்..

எனக்கு தெரிந்து பிரபலமாகாத சில படைப்பாளகள் ஈழவிசயத்தை தமிழக மக்களுக்கு கொண்டுச்செல்ல தெருக்களில் இறங்கினர். அரசுப்பணியில் இருக்கும் சிலர்கூட பேரணி தெருமுனைபரப்புரை என கலந்துகொண்டதை பதிவுசெய்யகிறேன்.

தனிமனித தாக்குதல் குறித்து நீங்கள் கவலை ஏதும் கொள்ளாதீர்கள் அது பதிலற்றவர்களின் ஆயுதம்

விஷ்ணுபுரம் சரவணன்

குப்பன்.யாஹூ said...

எனது பின்னூட்டங்கள் ஒரு வேலை தங்களுக்கு வருத்தத்தை அளித்து இருந்தால், மனம் நிறைந்து மன்னிப்பு கோருகிறேன்.

ஈழத்தில் உள்ள அப்பாவி தமிழர்களுக்கு என்றும் எனது ஆதரவு அக்கறை உண்டு.

kuppan_yahoo

jerry eshananda said...

worries are like birds,let them fly over you.but don't make them build a nest on your head.do not care about the intellectual corpses.keep on going....we are all with you.

மாதவராஜ் said...

உங்களின் பதிவுகளை மௌனமாக ரசித்து, மௌனமாக வலி உணர்ந்து, மௌனமாக துடித்து, மௌனமாகவே கருத்துக்கள் ப்கிர்ந்து போய்க் கொண்டு இருந்த என்னை இந்தப் பதிவு வாய்விட்டு அழ வைத்துவிட்டது.

பாண்டியன் said...

அக்கா! உங்கள் பூர்வீகம் தெரியாது! ஆனாலும் நீங்கள் வெள்ளாளச்சியாக இருக்குமோ என்ற காண்டு தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது! எங்களுக்கே இவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று கூறும் இவர்கள் நாளை சுதந்திர தமிழீழம் அமைந்து விட்டால் தலித்துகளுக்கு அங்கே பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ ஆனால் தலித் இலக்கியம் மாநாடு என்று தமிழின போர்வை அணிந்து கொண்டு முதல் ஆளாய் நிற்பார்கள்..ஈழ தமிழன் வேறு தமிழக தமிழன் வேறு என்ற நிலையை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.. இங்கு தமிழின உணர்வு குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் போதும்.. தலீத்துகளுக்கு பிரச்சனை என்றால் மாயாவதி முதல் மண்ணாங்கட்டி வரை போராடி இவர்களை வெளியில் எடுத்துவந்துவிடுவார்கள் ஆனால் ஈழ பிரச்சனையில் தலையிட்டால் பொடா தடா என்.எச்.ஏ. குறைந்தபட்சம் 1 வருடம் களிதான் .. அதற்கு இவர்களுக்கு விருப்பமில்லை.. அவ்வளவுதான்.. இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .. ஏன் அங்கே தலீத்துகளுக்கு பிரச்சனை இல்லையா? அவர்களும் தானே சிங்கள இனவாதத்தால் பாதிக்கபடுகிறார்கள்? எல்லாம் தெரியும்! என்னை கேட்டால் இவர்களும் கருணாகமும் ஒன்று கருநாகம் ஈழ தமிழர்களுக்காக இதையெல்லாம் செய்தேன் என்று பட்டியலிடுவார் இவர்கள் புலிகளுடைதை பட்டியலிடுகிறார்கள்

Anonymous said...

இப்பின்னூட்டம் உங்களுக்கான பின்னூட்டம் மட்டுமல்ல.

எழுத்தாளர்கள் அல்லது சிந்தனைவாதிகள் புரட்சியாளர்கள் என யாராயினும் அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது மக்களே. நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மனிதநேயம் இருந்தால் மட்டும் போதுமானது.

மேலும், கூடல், ஊடல், புண்ணாக்கு ஆமணக்கு என்ற இலக்கியக்கூட்டங்களில் நடக்கும் விவாதங்கள் கூட ஒரு சராசரி வாழ்க்கை வாழும் என்னைப்போன்ற வாசகனுக்கு திண்ணைப்பேச்சுதான். ஆனால், அதைமட்டும் தெருவில் கொண்டுவந்து கடைவிரிப்பார்கள் என்னைப்போன்ற சாதாரான வாசகன் கேட்கவேண்டும் கொள்ள வேண்டும். அப்படிக்கொள்ளாத பொழுதுகளில் ஆட்டுமந்தையென்ற பெயரையும் நான் சுமக்கவேண்டும்.

ஆனால், எனக்காக மனிதநேயத்தோடு குரல் எழுப்பத் தவறியது ஏன்? என்ற ஒரு கேள்வி சுடுகிறது. இக்கேள்வி தமிழகத்தில் தனது எழுத்துக்களையும் சிந்தனைகளையும் விற்றுக் கொண்டிருக்கும் எந்தவொரு எழுத்தானுக்கும் பொருந்துகிறகேள்விதான். உலகவரைபடத்திலுள்ள கோடுகள் உண்மையானவை என்று நம்பும் ஒரு எழுத்தாளன் நான், என்றால்.. மன்னிக்கனும், நீங்கள் எல்லாம் எழுதவே வேண்டாம், ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை தமிழுக்கும் தமிழினத்திற்கும்.

ஒரு இனத்தின் அழிவில் (அதுவும் ஒரே மொழிபேசும் தனது இனம்தான்) அதற்காகக் குரல் எழுப்பாத எழுத்தும் படைப்பும் எதற்காக? வெரும் வயிறு வளர்ப்பதர்க்கும் அறிவு ஜீவி என்ற பட்டம் சுமப்பதற்கும் மட்டுமா? சரியான நேரத்தில் எழுப்பப்படாத கேள்விகளின் விளைவுதான் 2000 ஆண்டுகள் கழித்தும் ஆதவனின் வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றியிருக்கிறது.

எனக்கு உண்மையான கரிசனம் உண்டு ஆனால் மனதினுள் புதைத்து வைத்திருக்கிறேன் என்பன போன்ற வார்த்தைகள் உண்மையாகயிருந்தாலும் ஏற்புடையன அல்ல. இன்றைய பசிக்கு இன்றைக்குத்தான் உணவு தேவை. ஆகச்சிறந்த அமிர்தமாயினும், மருந்தாயினும் உயிர் பிரிந்த பின்பு தேவயற்றதுதான்.

எழுத்தாளனுக்கு ஒரு இனம் எதற்காக அங்கீகாரம் தருகிறது? அதன் வாழ்வே கேள்விக்குள்ளாகும்போது அவன் நமக்காகக் குரல் எழுப்புவான் தமக்கான ஒரு பிரதிநிதியாக உழைப்பான் என்பதும்தான் ஒரு இனத்தின் எதிர்பார்ப்பும் அவ்வெழுத்தாளனின் கடமையும் கூட.

இதுவரை கொள்ளப்பட்ட தமிழக மீனவர்களுள் 400க்கும் மேற்பட்டோரில் தாழ்த்தப்பட்டோராக கட்டமைக்கப்பட்டோர் எத்தனை பேர் என்று எண்ணிப் பார்த்து அழுங்கள் என்று இவரது கருத்துக்கள் நீட்சியடையும் சாத்தியத்தைக் கொண்டிருப்பது அவரது எதிர்கேள்விகளில் தெரிகிறது.


சரி இப்போதுதான் சர்வாதிகார, பாசிஸ, சாதீய, புண்ணாக்கு, ஆமணக்கு என்ற கருத்தையுடைய புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனரே. இங்கே இருக்கும் எழுத்தாள, புரட்சியாள சிந்தனைவாந்திகள், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இன்றுவரை தமிழகத்தில் சிறுசு பெருசு என எல்லா பத்திரிக்கையிலும் எழுதித் தள்ளும் பல எழுத்தாளர்களை இவ்வொருவருடத்தில் இனங்கான முடிந்தது. இவ்வளவுதானா நீங்கள்.. என்றுதான் தோன்ற வைக்கிறது தமிழகத்தின் அடர் மொளனம்.

எனக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்று ஒரு சமூகத்தின் பிரஜை அந்த சமூகத்தின் அறிவுத்தளத்தில் இயங்கிக்கொண்டிருப்பவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பான்???? ஆட்சியாளனையும் அறிவுத்தளத்தையும் பிரித்துப் பார்ப்பவராயிருந்தால் இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


இப்பின்னூட்டத்தை இங்கே இடுவதற்கான காரணம், உங்களை மீண்டும் இவ்வுரையாடலுக்குள் இழுப்பதற்காகவல்ல. நான் ஒரு கடைக்கோடி வாசகன்.
தமிழகத்தின் அறிவுத்தளம், இலக்கியத்தளம் என இயங்கிக் கொண்டிருக்கும் எல்லோருக்குமான ஒரு செய்தி, நீங்கள் கறைபடிந்தவர்கள் என்று எனக்குள்ளும் எனது அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்சொல்வேன்.
இனியொருமுறை என்னிடம் விற்பனைக்கு வராதீர்கள், நாங்கள் ஆட்டுமந்தையாகவேயிருந்துவிட்டுப் போகிறேன்.

குறிப்பு:
ஆதவன் மீதிருக்கும் வேறுசில காழ்ப்புணர்ச்சிக்காக உடனே வந்து இங்கு பின்னூட்ட திசைதிருப்பலை மேற்கொள்ளும் ஒரு சிலரும் இருக்கின்றனர். எனது நோக்கம் அதுவல்ல. ஒடுக்கப்பட்டோருக்காக போராடவேண்டும் மாற்றுக்கருத்தில்லை ஆனால், காலத்தின் தேவையையும் சேர்த்து சிந்திக்கவேண்டியது அவர்களது கடமையும் கூட.

Anonymous said...

மரியாதைக்கு உள்ள தோழி அவர்களுக்கு,

உங்கள் வலைக்கு வருவது வழக்கம். நல்ல செய்திகளை என் நண்பர்களுக்கும் எடுத்து அனுப்புவேன். அதில் உங்கள் பெயரையும் பதிவு செய்வேன்.

தமிழ் இனத்துக்கு குரல் கொடுப்பவர்கள் மிக சில பேர். இந்த வலை உலகிலும் "இந்திய " ஆதிக்கம் செலுத்த முயலும் கூட்டங்கள் அதிகம். தமிழனின் குரலை எங்கு எல்லாம் அமுக்க, மறைக்க, செய்ய வேண்டுமோ அதை , ஒரு பெரிய பணியாக - இந்திய தேசியம் பேசும் , இந்திய " நாய்களும்" - தமிழன் என்று சொல்லி கொண்டு - தமிழ் மொழி பேசும், வந்தேறி கூட்டமும் (பிறப்பால் தெலுகு , கன்னட , மலையாள , மார்வாடி வந்தேறிகள்) செய்து வருகிறார்கள் .

உங்களின் தமிழ் அடியாளம் தான் அவர்களால் தாங்கி கொள்ள முடிய வில்லை . தமிழ் நாட்டில் - தெலுகு இனத்தை சார்ந்தே கருணாநிதி குடும்ப குணத்தை போல.

இது போல - தமிழ் நாட்டில் உள்ள எல்லா வந்தேரிகளுக்கும் - தமிழன், அதுவும் தமிழ் சாதிஎல் பிறந்த ஒருவம் - எந்த வடிவத்தில் புகழ பட்டால் இவர்களால் தாங்கி கொள்ள முடியாது.

ஆனால் இந்த வந்தேறிகள் - தமிழ் மொழியை பேசி கொண்டு - தமிழன் என்று சொல்லி கொண்டு - எல்லா இடத்திலும் இருப்பார்கள். இந்த தமிழ் நாட்டின் அவல நிலை தெரியாமல் நீங்கள் எங்கு சென்றாலும் - உங்களை ஒரு வெறுப்பு உணர்வோடு தான் பார்பார்கள்.

இப்படி தான் நிறைய தமிழ் இன உணர்வாளர்கள் - தவித்து கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களின் திட்டம் உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உங்கள் எழுத்துகளை சிதைப்பது தான் . பலி யாகி விடாதீர்கள். உங்களின் எழுத்தக்களில் கருணை , கோபம் இரண்டும் உள்ளது. எழுத்தாளன் - நிகழ கால வரலாறை பதிவு செய்ய கடைமை பட்டவன்.

அந்த கடமையை தொடர்ந்து செயுங்கள் . தமிழ் இன தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடம் இருந்து - எல்லா விதிகளையும் , வித்தைகளையும் - அவரின் செயல்களிடம் இருந்து கற்று கொள்ளுங்கள் . உங்கள் கடைமையை தொடர்ந்து செயுங்கள் .

உங்கள் எழுத்து பணி - தமிழ் இனத்துக்கு தேவை.
வாழ்த்துக்கள் .

தமிழன் .

குப்பன்.யாஹூ said...

என் பின்னூட்டம் ஒரு வேளை உங்கள் மனதை வருத்த படுத்தி இருந்தால், மனதார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

குப்பன்_யாஹூ

SS JAYAMOHAN said...

மக்களைப் பற்றி செந்திக்கும் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள்,கலைஞர்கள்
சமுக அறிவியல் ( SOCIAL SCIENTIST)
ஆளர்கள் ஆவர்கள்.

அவர்கள் பொக்கிஷமாக பாது காக்க வேண்டும்.

அவர்களை காயப்படுத்தினால், பாதிப்பது எழுத்தாளர்கள் அல்லர்,
இந்த சமுகமே என்பது எனது தாழ்மையான கருத்து.

எஸ். எஸ். ஜெயமோகன்

நேசமித்ரன் said...

அழ வைத்து விட்டது இப்பதிவு
"ராணி தொலைந்து
மலர் வைத்தாடும் சதுரங்கத்தில்
உறைந்த பிறையின் நிழல்
ஓதமென

அலகில் துள்ளும் மீனுக்கு ஒரு கண்ணில் ஆகாயம்

பிதுக்கி எடுத்த தோட்டா
நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது யுத்தத்தை "

நேசமித்ரன் said...

நீங்கள் மேலும் காயப்படுவதை தவிர்க்க இது போன்ற விவாதங்களில் இருந்து விலகி நிற்க முடிவு செய்திருப்பது நல்லதே !

நேசமித்ரன். said...

http://manushyaputhiran.uyirmmai.com/post/e0aea4e0aeaee0aebfe0aeb4e0ae95-e0ae8ee0aeb4e0af81e0aea4e0aea4e0aebee0aeb3e0aeb0e0ae95e0aeb3-e0ae88e0aeb4e0aea4e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae95e0aeb3e0af81e0ae95e0ae95e0af81-e0ae9ae0af86e0aeafe0aea4e0aea4e0af81-e0ae8ee0aea9e0aea9.aspx

காமராஜ் said...

நீங்கள் சொன்ன ரஜினிகாந்த் இன்ன பிற
பிறவி சூப்பர் ஸ்டார் போன்ற ஆள் இல்லை என்பதை
சந்தோசத்தோடும் பெருமையோடும் ஒத்துக்கொள்கிறேன்.

ராஜபக்சேயிடம் ஆதவன் பணம் பெற்றதாக
ஒரு அனானி கூறுவது, மார்க்சிஸ்ட்டுகளை
கக்கூஸ் மொழியில் விமர்சனம் செய்வது,
ஆதவனையும் அதுபோன்ற ஆட்களையும்
செருப்பால் அடிக்கத் துடிப்பது.

இதுபோன்ற விமர்சனம் வேண்டாம் என்றுதான்
சொன்னேன். கருத்துக்கள் மோதுவதில் எனக்கெந்த
முரணும் இல்லை தோழரே. இன்னொன்று உங்கள் அவலத்தின்
மீது இன்னொரு கருத்தே வேண்டாம் என்பதே மனிதாபிமான நிலைபாடு.
பதில் எழுத வேண்டாமென்று சொன்னீர்கள் அதை நான் ஏற்கிறேன்
இந்த ஒரு முறை அனுமதியுங்கள்.

உங்கள் வலி, உங்கள் ரணம், உங்கள் ஆதங்கம்,
உங்கள் எதிர்பார்ப்பு, உங்கள் கொந்தளிப்பு எல்லாவற்றுக்கும்
எங்கள் கண்ணீர் ஆதரவு இருக்கிறது. மின்விசிறியில் அடிபட்டுத்துடிக்கும்
சிட்டுக்குருவிக்கும் கவிதை எழுதுவதுதான் எழுத்து. அப்படி ரகம் நாங்கள்
வலியறியும் வலி. உங்கள் பதில் நிறய்ய கண்ணீர் வரவைத்துவிட்டது.
எனது பதிவில் ஒரு கமா ஒரு அல்லது இடைவெளி உங்களைக்
காயப்படுத்தியிருப்பதாக கருதவில்லை. அப்படி இருந்தால்
அது குறித்து நான் மனம் வருந்துகிறேன்.

பாரதி.சு said...

வணக்கம் தமிழ்நதி,
பயனற்ற விவாதங்கள்...தயவுசெய்து மறந்துவிடுங்கள்.
தங்கள் ஆளுமை கொண்டு ஈழத்தின் கோரமான அழிவை பதிவு செய்வார்கள் என இந்த "முகமூடி" மனிதர்களிடம் நானும் எதிபார்த்தேன். இப்போதல்ல...
கடைசியில் காட்டிய/ காட்டிக்கொண்டிருக்கும் பிலிம்....கோடம்பாக்கம் தோத்தது போங்கள்.
காம்பில் இருக்கும் எல்லோருடைய அடையாளமும் தற்போது "அகதி"...இங்கே தலித் யாரப்பா??
அடையாளப்படுத்த சோபாசக்தி வகையறாக்களைத்தான் கூப்பிட வேணும். எப்ப எங்க என்ன செய்யவேண்டும் என தெரியாத சுயவிளம்பர கூட்டங்கள்.
இதுகளை பார்த்தாலே "காந்தித்தாத்தா" சொன்னது போல (எனக்குத் தெரிந்து அவர் சொன்ன ஒரு உருப்படியான விடயமும் அது தான்) எல்லாப் புலன்களையும் பொத்திகொண்டு போறது தான் சரியானது.

கே.என்.சிவராமன் said...

தமிழ்நதி,

இந்தப் பின்னூட்டத்தை நீங்கள் தவறாக வாசிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

உங்கள் அறம் சார்ந்த கேள்வியும், ஆதங்கமும் நேர்மையானது மட்டுமல்ல; உண்மையானதும் கூட. அதை எதிர்கொண்டவர்களின் அப்போதைய மனநிலை, சூழலுக்கு ஏற்ப வார்த்தைகளும், எதிர்வினைகளும் வந்திருக்கின்றன.

சில உங்களை காயப்படுத்தியிருக்கலாம், நிலைகுலையச் செய்திருக்கலாம். ஆனால், இதனால் எல்லாம் உங்கள் அறம் சார்ந்த தார்மீக ஆதங்கம், வலுவிழந்து விடுமா? தயவுசெய்து உங்களை உசுப்பிவிடுவதாக நினைக்காதீர்கள்.

கோபமும், ஆதங்கமும் இல்லாவிட்டால் கலைஞனாக மட்டுமல்ல, மனிதர்களாகவும் இருக்கமுடியாது.

//'எங்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?' என்று இனி மறந்தும்கூட யாரிடமும் கேட்கமாட்டேன்.// எவ்வளவு வலியுடன் இதை நீங்கள் எழுதியிருப்பீர்கள் என உணர முடிகிறது. ஆனால், இந்த வலியை தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தியவர்களின் எண்ணமும், நோக்கமும், இனியான உங்கள் மவுனம்தான் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஆனால், அறம் சார்ந்த கோபமும், ஆதங்கமும் கொண்ட தமிழ்நதி, எதன் காரணமாகவும் மவுனமாகிவிடக் கூடாது என்ற பேராசை மட்டும் இருக்கிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மாதவராஜ் said...

காமராஜின் பின்னூட்டத்தை அப்படியே வழிமொழிகிறேன்.

Unknown said...

Tamilnathy, you may remember my talking t you after reading and left aghast by Aadhavan dheekshanya's response to your query .

Sorry for writin in english as i don have tamil typ in my comp.

Leave aadhav and peopl alike. There are peopl in tamilnadu who feel the holocaust is theirs and numbed w shock til dt. We are with you and we need to fight for justice w more vigour an enthusiam . There are peopl out there in concentr camps who cannot speak for themselves . We are atleast able to breathe a free air , talk a free talk , walk a free walk. It's our duty to march forward with our demands relentlessly.

Aadhavan & co, will be shed in the pages of history or marked black .

As i told u, actions are the need of the hour, not the superficial words. Let's work an coordinate like minded peopl. Let them cal us 'puli' vaalkal.. we will proudly recognise it and go ahead. Bec being a puli vaal is much bett than ' Maattu chaani' .

come on tamilnathy, cheer up. You have all the relatives here, and nobody has the right to ask you to go out. Be our guest ! we will prove who we are.

thamarai

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

உங்கள் ஆலோசனைப்படி இந்த விவாதங்களிலிருந்து (நியாயத்திலிருந்து அல்ல) விலகியிருக்கவே தீர்மானித்திருக்கிறேன். நாடு, மொழி, எல்லைகள் எல்லாம் 'மனிதர்களை'ப் பிரிப்பதில்லை என்பதை இந்த சில நாட்களுள் உங்களைப் போன்ற நண்பர்கள் வழியாக உணர்ந்தேன். நன்றி.

காமராஜ்,மாதவராஜ்,பைத்தியக்காரன், பாரதி, கவிஞன், நிலாரசிகன், சரவணன், அனானி நண்பர்கள்,
குப்பன் யாகூ,ஜெறி ஈசானந்தா, பாண்டியன், ஜெயமோகன்,நேசமித்ரன் ஒரு ஆரோக்கியமான விவாதத்தில் கலந்துகொண்டமைக்கு நன்றி. இவ்விவாதம் வேறு திசைகளில், தளங்களில் புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி.
----
தாமரை,

Aadhavan & co, will be shed in the pages of history or marked black .

என்ற நம்பிக்கையோடு இந்த விவாதத்திலிருந்து வெளியேறுகிறேன். நீங்கள் சொன்னதுபோல இனி வேண்டியது சொல்லன்று செயலே. அன்பிற்கு நன்றி சொல்லல் தகாது. எனினும் நன்றி.

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

உங்கள் ஆலோசனைப்படி இந்த விவாதங்களிலிருந்து (நியாயத்திலிருந்து அல்ல) விலகியிருக்கவே தீர்மானித்திருக்கிறேன். நாடு, மொழி, எல்லைகள் எல்லாம் 'மனிதர்களை'ப் பிரிப்பதில்லை என்பதை இந்த சில நாட்களுள் உங்களைப் போன்ற நண்பர்கள் வழியாக உணர்ந்தேன். நன்றி.

காமராஜ்,மாதவராஜ்,பைத்தியக்காரன், பாரதி, கவிஞன், நிலாரசிகன், சரவணன், அனானி நண்பர்கள்,
குப்பன் யாகூ,ஜெறி ஈசானந்தா, பாண்டியன், ஜெயமோகன்,நேசமித்ரன் ஒரு ஆரோக்கியமான விவாதத்தில் கலந்துகொண்டமைக்கு நன்றி. இவ்விவாதம் வேறு திசைகளில், தளங்களில் புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி.
----
தாமரை,

Aadhavan & co, will be shed in the pages of history or marked black .

என்ற நம்பிக்கையோடு இந்த விவாதத்திலிருந்து வெளியேறுகிறேன். நீங்கள் சொன்னதுபோல இனி வேண்டியது சொல்லன்று செயலே. அன்பிற்கு நன்றி சொல்லல் தகாது. எனினும் நன்றி.

M.Rishan Shareef said...

எனது அன்பு தமிழ்நதி அக்கா,
(சகோதரி என உங்களை அழைப்பது வேற்று மனிதர் யாரையோ அழைப்பது போல இருக்கிறது)

இந்தப்பதிவுக்குத் தாமதமாக வந்துவிட்டேன். ஒரு பிரச்சினை புகைந்தது தெரியும். இப்பொழுது முற்றாகத் தணிந்திருக்குமென நினைக்கிறேன்.

நீங்கள் இந்த மாநாட்டுக்காகப் போகும்போது எவ்வளவு மகிழ்வோடு என்னிடம் சொல்லிச் சென்றீர்கள் என்பதனை அறிவேன். அந்த நிகழ்வுகளைப் பற்றி விரிவாக எழுதுங்களெனக் கேட்டும் கொண்டேன்.

//நான் நொந்துபோயிருக்கிறேன். வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்திருக்கக்கூடாது.//

இந்த வரிகளைப் பார்த்தபிறகு ஏனடா அனுப்பிவைத்தாயென என்னையே நொந்து கொள்கிறேன். அன்று நான் உங்களைப் போகக் கூடாதென்று சொல்லிச் சண்டை பிடித்டு நிறுத்தியிருக்கவேண்டும்.

நீங்கள் அங்கு இந்தக் கேள்வியைக் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை அக்கா..நான் 'ஏன் எங்கள் அப்பாவி மக்களைக் கைவிட்டீர்கள்?' என இந்திய நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையிலும்,(இம் மாத யுகமாயினியில்) மறைமுகமாகவும் கேட்பதை நீங்கள் அன்று பகிரங்கமாகவும் நேரடியாகவும் கேட்டீர்கள். உண்மை சுடும் என்பது தெரியும். அது அன்று சம்பந்தப்பட்டவர்களைச் சுட்டிருக்கும். ஏதேதோ சப்பைக் காரணங்களால் குளிர்விக்கப் பார்த்திருக்கிறார்கள்.

வருந்தாதீர்கள் அக்கா. தம்பி உங்களுடன் இருக்கிறேன்.

தமிழ்நதி said...

ரிஷான்,

இது சொல்லிக் கேட்கும் ஜென்மமில்லை.. பட்டால்தான் புத்தி வரும் விட்டுவிடுங்கள்:(

என்றாலும் வேறு சில விடயங்களில் ஆரோக்கியமான விவாதங்களின் தொடக்கப்புள்ளியாக இந்த முரண்பாடு அமைந்ததில் திருப்தி.