கைவிடப்பட்டதும் துரோகிக்கப்பட்டதுமான
கண்களோடிருந்த அந்தப்
பூஞ்ஞை உடம்புக்காரனுக்கு
அழுத்தித் தரைதுடைக்கக் கற்றுக்கொடுத்தேன்.
பீங்கான்கள் கழுவும் இயந்திரத்தருகில்
சொதசொதவென்றிருந்த ஈரத்தில்
கால் விறைத்திருந்த அவனுக்கு
எனது
பழைய ஈரமுறிஞ்சா சப்பாத்துக்களைத்
தந்துவிடுவதாகவும் வாக்களித்தேன்.
சிருங்காரப் பாடலொன்றை முணுமுணுத்தபடி
எங்களைக் கடந்துபோன
இடைமெலிந்த பரிசாரகப் பெண்ணின்
அதிரும் பிருஷ்டங்களில்
அலையும் மார்புகளில் கண்புதைத்தபடி
அவளிடம் அவதானமாயிருக்கும்படி
வினயத்தோடு வேண்டிக்கேட்டேன்.
சமையலறைப் பகுதிக்குள்
திடீரென உள்நுழையும் மேற்பார்வையாளனின்
ஏகாதிபத்தியக் கண்களின் முன்
குரங்கு நடனம் புரிவதன் வழியாக
வேலையில் நீடித்திருக்கலாம்
என்ற விசயத்தையும்
கொஞ்சம் உரைத்து வைத்தேன்.
மேலும்
கள்ள இலக்கத்தில்
வேலை செய்வதை
குடிமயக்கத்திலும் உளறிவிடாதிருக்க
எச்சரித்த பிற்பாடு
அந்தப் புதிய வேலையாளின்
பெயரைக் கேட்டேன்.
‘நாடு’என்றான்.
அதிர்ந்தேன்
அயராமல்
அவன் இருப்பிடம் விசாரித்தேன்
‘இங்கே’என்றான்
சுட்டுவிரலை திடுக்கென நீட்டி
என் இதயத்தில் குத்தி.
கள்ள இலக்கம்: வேலை அனுமதிப் பத்திரம் கிடைக்கப் பெற்றிராத அகதிகள் இன்னொருவரின் இலக்கத்தில் வேலை செய்வதை ‘கள்ள இலக்கம்’என்பார்கள்.
சப்பாத்து: 'ஷு' எனப்படும் காலணி (இந்தக் கேள்வி முன்பும் சிலரால் கேட்கப்பட்டதால் விளக்க வேண்டியதாயிற்று.)
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
arumai
தமிழ்நதியில் நாளும் நனைபவர்களுள் நானும் ஒருவன்.புலம்பெயர் வாழ்வின் வேதனை அத்தியாயத்தை உணர முடிந்தது. இன்னும் வேண்டும் இதுபோல் கவிதைகள்.
if u change the backgroud or color it will be easy to read
hmmmmmmm
நன்றி வெண்காட்டான், அனானி நண்பர், மயூரன், ஆல் இன் ஆல் அழகுராஜா.
மயூரன்,
10ஆம் திகதிதான் என் கூட்டுக்குத் திரும்புகிறேன். அங்கு நிதானமாக அமர்ந்து கவலையோடு பூனைக்குட்டியைத் தூக்கி மற்ற வலைப்பூவில் விட்டுவிட எண்ணம்.:((((
வலி நிரம்பிய சொற்கள்
தீரத் தீர குடிக்கும் வேதனை
//ஏகாதிபத்தியக் கண்களின் முன்
குரங்கு நடனம் புரிவதன் வழியாக
வேலையில் நீடித்திருக்கலாம்//
//கள்ள இலக்கத்தில்
வேலை செய்வதை
குடிமயக்கத்திலும் உளறிவிடாதிருக்க//
பால் கட்டிக் கொண்ட மார்பாய்
பசை தடவி போகிறது வார்த்தைகள் வரும் வழியை...
இக்கவிதை...!
மன்னிக்கவும் தமிழ்நதி அவசரகோலத்தில் கிளிக்கியதால் அனானி ஆகி விட்டேன் முகவரி இருந்தும் அகதிகளான என் தொப்புள் கோடி சொந்தங்களைபோல.என் கவிதைகளையும் நேரமிருந்தால் படிக்கவும் .அதெல்லாம் சரி,மூன்று நாட்கள் விடுமுறையெல்லாம் கொஞ்சம் ஓவர்.சட்டு புட்டுன்னு வேலைகளை முடிச்சிட்டு சீக்கிரம் வரவும்.நன்றி நதியே.
தமிழ் நதி அவர்களுக்கு,
உங்கள் கவிதையை பத்து முறை வாசித்திருப்பேன். ஓவ்வொரு முறையும்
புரிந்து கொண்ட விகிதாசாரம் அதிகரித்து வருகிறது.
இன்னும் வாசிக்கிறேன்.. உங்களின்
விளங்க முடியாத கவிதையை.
அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்
நேசமித்ரன்,
தொடர்ந்து எனது எழுத்துக்களை வாசிக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. ஆனால், நான் இன்னமும் கூடு திரும்பவில்லை. நான் தங்கியிருக்கும் இடங்களில் பல்லைக் கடித்துக்கொண்டு பதிவு போடுமளவிற்குரிய (அதுவும் மடிக்கணினியில் தட்டச்சி வருவது) வசதிகளைக்கொண்ட இணையத் தொடர்பு நிலையங்களே இருக்கின்றன. ஒரு பதிவைப் படித்து அதற்குப் பின்னூட்டுவதற்கிடையில்… அதை விளக்கி பிறகு எழுதுகிறேன்.
ஜெரி,
சட்டுப்புட்டுன்னு வேலையை முடிக்க முடியவில்லை. இழுபறியாக இருக்கிறது. பத்தாம் திகதிதான் வீடு திரும்புகிறேன். திரும்பிச் சில நாட்களிலேயே இந்த நாட்டைவிட்டும் கிளம்புகிறேன். ஆனால், எங்கிருந்தாலும் எழுதுவேன். உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே!
ஜெயமோகன்,
என் கவிதைகள் எளிமையாக இருப்பதாகவே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை பின்னணி புரிந்து வாசித்தால் இன்னும் புரியுமோ என்னவோ… எல்லாம் பயிற்சிதான். கவிதையும் கண்டனமும் எல்லாமும்… பழகினால் எல்லாம் சரியாகிவிடுகிறது.
Post a Comment