8.04.2009

அந்தரத்தில் இருக்கிறது வீடு


‘எல்லாப் பாதைகளும் உன் வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கும்’என்ற வரிகளை அதில் தொனிக்கும் காதலுக்காக அன்றி வேறேதோ காரணத்திற்காகப் பிடிக்கும். பெரும்பாலும் வீடு பற்றிய கவிதைகள் ஈர்ப்பனவாக இருக்கின்றன. சுற்றியலைவதை வேண்டுமென்றே தேர்பவர்களுக்குள்ளும் வீடு உயிர்ப்போடு துடித்துக்கொண்டுதானிருக்கிறது. அதன் வழிகளில் மானசீகமாக நடந்து நடந்து வீடு நோக்கிப் போய்க்கொண்டுதானிருக்கிறோம் எல்லோரும். பிறகொருநாள் உண்மையாகவே போகும்போது ஒன்றும் புதிதாய் தோன்றாமலிருப்பதற்கு அந்த மானசீகத் திரும்புதல்கள்தான் காரணம்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பதன் பொருள் பல்பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த புகலிடங்களில் தங்களைச் சிக்கென்று பொருத்திக்கொண்டவர்களுக்கு அத்தகைய சிக்கல்கள் இல்லை. அத்தகையோர் இலகுவாக தத்தம் ‘வீடு’களுக்குத் திரும்பிவிடுகிறார்கள். ‘எனது வீடு எங்கோ தொலைவில் திரும்பவியலாத தேசத்தில் இருக்கிறது’என்ற அகதி அந்தரிப்பில் இருப்பவர்களின் வீடு தரையில் இல்லை. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அது தரையிறங்கும் சாத்தியங்களும் அறுந்துபோய்விட்டன. ஈழத்திற்குள்ளேயே புலம்பெயர்க்கப்பட்டு அலைக்கழிபவர்களின், முகாம்களில் இருப்பவர்களின் வீடுகளோ கல்லறைகளாகவோ அன்றேல் இராணுவ முகாம்களாகவோ மாற்றப்பட்டுவிட்டன. கூரை, நாற்புறம் சுவர்கள், வாசல், முற்றத்து நிலவு, பூச்செடி, கிணறு, நாய்க்குட்டி இன்னபிற இனிக் கனவுகளில் வந்தால்தான் உண்டு.

வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்குப் புறப்படும்போது இருக்கும் குறுகுறுப்பு ஒரு வாரத்திலேயே தீர்ந்துபோய்விடுகிறது. வந்து சேர்ந்த இடம் சொர்க்கமாகவே இருந்தாலும், சொந்தங்கள் அன்பைச் சொட்டினாலும் தனக்குள் ஒடுங்க ஆரம்பித்துவிடுகிறது உள்ளம். பழகிய படுக்கை கூப்பிட ஆரம்பித்துவிடுகிறது. புத்தகங்கள் மாயக் கரங்களைக் காற்றில் அசைக்கின்றன. வேம்பின் பச்சையை உள்ளிழுத்தபடி பருகும் தேநீர் ஏடு படர்த்தி நமக்காகக் காத்திருப்பதுபோல தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அதுவரை இரைச்சலிட்டுக் கொண்டிருந்த மனமும் உதடுகளும் மௌனத்தில் விழுந்துவிடுகின்றன.

மேலைத்தேயம் எத்தனை அழகோடிருக்கிறது! எவ்வளவு மரங்கள்! எத்தகைய நேர்த்தியான சாலைகள்! குறைசொல்லவியலாத போக்குவரத்து வசதிகள்! பிரமாண்டமான பேரங்காடிகள்! நடக்கத் தோதான பூங்காக்கள், இடிபடாத-இடிக்காத நாசூக்கான மனிதர்கள், சுத்தம் வாழும் இடங்கள் இவை. ஆனால், திப்புசுல்தானைப் போல எத்தனை தடவை படையெடுத்தாலும் வெளிநாடுகள் மனதில் விழுத்தும் அந்நியத்தன்மையை அகற்றமுடிவதில்லை. யாரும் யாரோடும் ஒட்டாததுபோன்ற விலகல். மேலும்,தாழ்வுணர்ச்சிக்குத் தள்ளும் மிகைமனிதர்கள் நடுவில் நம்மியல்போடு இருக்கமுடிவதில்லை.

யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது?

உணர்ந்திருக்கிறீர்களா நீண்ட இன்மையின்பின் உங்கள் வீட்டுக்குத் திரும்பும் சாலை வளைவில் நெஞ்சுக்குள் நிறைந்து வழியும் உவகையை? ‘இல்லை’எனக் கருதிய எல்லாம் இருப்பதை? முகர்ந்ததுண்டா நீண்ட நாட்களுக்குப் பின் திரும்பும் உங்களை அணைத்துக்கொள்ளும் பிள்ளைகளின் மென்வாசனையை?
திரும்பவியலாத வீட்டைக் கொண்டவளை, அவள் வீடென வரித்துக்கொண்ட ஒன்று கூப்பிடுகிறது தன் ஈரக்கண்களால். தெருக்களெங்கும் நெருநெருக்கும் மனிதர்களை, தூசியை, ‘ங்கோத்தா’என்றாலும் இனிக்கும் மொழியை, பிள்ளைகளை, அரிய சில நண்பர்களை அவள் ‘மிஸ்’பண்ணுகிறாள். (மிஸ் பண்ணுவதை எந்தத் தமிழ்ச்சொல்லால் இட்டு நிரப்பலாம்?)
அந்தரத்தில் இருக்கிறது வீடு. அது தரையிறங்கும்வரை அந்தரத்தில் அலைகின்றன கால்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று சொன்ன கணியன் பூங்குன்றா! நாடிழந்து அலையும் துயரின்முன் யாதோ ஊர்? எவரோ கேளிர்?

19 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது?

இல்லை’எனக் கருதிய எல்லாம் இருப்பதை?

கணியன் பூங்குன்றா! நாடிழந்து அலையும் துயரின்முன் யாதோ ஊர்? எவரோ கேளிர்

:((

வனம் said...

வணக்கம் தமிழ்நதி

ரோம்ப அழகாக இருக்கின்றது பதிவு.

ஒரு ஏதிலியாகவோ இல்லை ஒடுங்கிய மனத்துடன் நண்பர் வீட்டிலோ தங்கியிருப்பின் இதன் வலி உணரமுடியும்

\\யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது? \\

ஆம்
உணர்வுகளை சரியாக வார்தைகளில் கொண்டு வந்திருக்கின்றீர்கள்

இராஜராஜன்

தமிழ்நதி said...

இராஜராஜன்

நான் இருக்கும் வீடு கிட்டத்தட்ட என்னுடையதே போல உரிமை எடுத்துக்கொண்டு பழகக்கூடியது. துளியும் மனச்சுணுக்கம் வராது தாங்குபவர்கள் என் தோழியும் கணவரும். இது நாடோடி மனம்... ஓரிடத்தில் நில்லாமல் அலைகிறது. அது என் தவறல்லவா? இந்தப் பதிவைப் பார்த்துவிட்டே கேட்டாள்... ‘அப்படி என்னதான் கவலை?’என்று. விளக்கமுடியாத சிக்கல் நூல்கண்டு இந்த மனம் என்பதை அவளுக்கு நான் எப்படி விளக்குவேன்?

நன்றி அமிர்தவர்சினி அம்மா,
ஒரு இடைவெளி விழுந்துவிட்டது எழுத்தில். ஒரு வாரத்தில் கனடா செல்கிறேன்.இனி தொடர்ந்து எழுதுவேன்; நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில்;)

KarthigaVasudevan said...

வாசிக்கும் போதே இதயம் நெகிழ்கிறது, வீடிழப்பதும் பழகிய தெருவுக்குள் நடமாட முடியாத தன்மையும் சொந்த நாட்டை விட்டு ஊர் ஊராய் அலைவதும் ...இது கூட ஒரு வகை சுதந்திரச் சிறை தான். மனசிலாக்கிய வீட்டில் கட்டுண்டு ஏங்கும் அவஸ்தை,இது தீராது அதுவே நிஜம். லகுவாய் இல்லை மனம் இப்பதிவை வாசிக்கையில் ,உங்கள் எழுத்துக்கள் வலிமை தமிழ்நதி

Unknown said...

தமிழ், மிகவும் சங்கடமாக இருக்கிறது. என்னைப் போல நீ இருப்பதால் உன் நிலையை exactly புரிந்து கொள்ள முடிகிறது. கவலை வேண்டாம் தோழி, நீ சீக்கிரம் வந்துவிடுவாய். உன் வீடும், பிள்ளைகளும், உன் சுற்றமும் உன் நட்பும் எல்லாரும் எல்லாமும் உனக்காக காத்துக் கிடக்கிறோம். மன உளைச்சல் வேண்டாம். அங்கிருக்கும் நாள்களை சந்தோஷமாக்கிக் கொள்ள உனக்குத் தெரியும் தானே. Miss you Ma

M.Rishan Shareef said...

//வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்குப் புறப்படும்போது இருக்கும் குறுகுறுப்பு ஒரு வாரத்திலேயே தீர்ந்துபோய்விடுகிறது. வந்து சேர்ந்த இடம் சொர்க்கமாகவே இருந்தாலும், சொந்தங்கள் அன்பைச் சொட்டினாலும் தனக்குள் ஒடுங்க ஆரம்பித்துவிடுகிறது உள்ளம். பழகிய படுக்கை கூப்பிட ஆரம்பித்துவிடுகிறது. புத்தகங்கள் மாயக் கரங்களைக் காற்றில் அசைக்கின்றன. வேம்பின் பச்சையை உள்ளிழுத்தபடி பருகும் தேநீர் ஏடு படர்த்தி நமக்காகக் காத்திருப்பதுபோல தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அதுவரை இரைச்சலிட்டுக் கொண்டிருந்த மனமும் உதடுகளும் மௌனத்தில் விழுந்துவிடுகின்றன.

மேலைத்தேயம் எத்தனை அழகோடிருக்கிறது! எவ்வளவு மரங்கள்! எத்தகைய நேர்த்தியான சாலைகள்! குறைசொல்லவியலாத போக்குவரத்து வசதிகள்! பிரமாண்டமான பேரங்காடிகள்! நடக்கத் தோதான பூங்காக்கள், இடிபடாத-இடிக்காத நாசூக்கான மனிதர்கள், சுத்தம் வாழும் இடங்கள் இவை. ஆனால், திப்புசுல்தானைப் போல எத்தனை தடவை படையெடுத்தாலும் வெளிநாடுகள் மனதில் விழுத்தும் அந்நியத்தன்மையை அகற்றமுடிவதில்லை. யாரும் யாரோடும் ஒட்டாததுபோன்ற விலகல். மேலும்,தாழ்வுணர்ச்சிக்குத் தள்ளும் மிகைமனிதர்கள் நடுவில் நம்மியல்போடு இருக்கமுடிவதில்லை.

யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது? //

மிக மிக மிகச் சரி சகோதரி !

பதி said...

//யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது?//

இந்த யாரோவாய் இருப்பது தரும் வலிகளை யாவரும் புரிந்து கொள்ள முடியாது.

K.P.Suresh said...

Sakothari Tamilnathy Avarkalukku,

Ungal vali purikirathu. Veedu mattuma, Aalukku oru Naadu vaasam, Saavukkum novukkum kooda anbai parimarikolla vazhi illatha verumai vazhkkai. Ninaithu paarkave kasdamaga irukkirathu..

Ungal Ezhuthukkalai padikka aarampithirukkiren. Kopam kalantha Yathartha Ezhuthukkal.

Tamilil type seiya enna vazhi...

Anbudan
K.P.Suresh

வனம் said...

வணக்கம் தமிழ்நதி

நானும் வீடற்றோ அடைக்களமாகவோ எங்கும் இருந்ததில்லை எனினும்

சுற்றுச்சூழ மனிதர்கள் இல்லாமல் என் சொந்த இடமான சென்னையிலேயே நடைபாதையில் இரவை கழித்திருக்கின்றேன், இப்பொதும் எனது அறையில் வேறு யாறும் இல்லாமல் தனிமையில் வருடக்கனக்கில் இருக்கின்றேன், அலுவலகம் செல்லாத நாட்களில் ஒரு வார்த்தைகூட பேசாமல் (ம்ம்ம்ம் மவுனவிரதம் இல்லை) இருந்திருக்கின்றேன்

வீடு என்பதன் உணர்வுகளை மிகச்சரியாக நண்பர் அகிலன் இந்த பதிவில் கூறியிருப்பார் முடிந்தால் படித்துப்பாருங்கள்
http://www.agiilan.com/?p=189

இராஜராஜன்

Anonymous said...

சொல்லத் தயக்கமாகத்தான் இருக்கிறது ஆனாலும் உங்கள் புனைவை (புனைவுதானே?) படிக்கையில் ரொம்பவும் கபடத்தனமாகத் தான் பேசுகிறார் தமிழ்நதி என்ற ஷோபாஷக்தியின் சொல் விழுந்து உடைவதை தவிர்க்க முடியாதிருக்கிறது. யார் யாரோ லோல் பட்டார்கள் நீங்கள் கனடாவுக்கும் தமிழ்நாட்டுக்குமாய் வீடிழந்து அலைய. உங்கள் மாறுகின்ற அற்ப சுகத்துக்காய் எதற்கு அவ்வபோது துயருறும் மக்களை இழுக்கிறீர்கள் புரியவில்லை. நீங்கள் கனடா போங்கள் அலாஸ்காவோ இல்லை அந்தாட்டிக்காவோ போங்கள் அது உங்கள் சொந்த தனிப்பட்ட உரிமை விருப்பம் தேவை இன்னும் என்னவோ ஆனால் அதற்கு எதற்கு அகதி முகாம் கதை பேசுகிறீர்கள்? விட்டுத்தள்ளுங்கள் weather மாறமுன்பு இடம் மாறுங்கள் அல்லது ஒத்துக்கொள்ளாது.

//யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது// யாருடைய
நிலத்திலும் யாரோவும் யாரையும் இருக்கச் சொல்லவில்லையே. நாமாகத்தான் பெயர்ந்தோம் யாருடையதோ வலிகளை பேசினோம் எவருடையதோ மரணத்தை சொல்லி யாசித்தோம் பிற்பாடு PR என்றும் CITIZEN என்றும் இருந்தவரையும் ஊர் விட்டு கிளப்பினோம்.

இதை வெளியிடுவது உங்களின் தற்துணிவு சார்ந்த விடயம் ஆனால் மக்களை ரொம்ப காலம் எதன் பெயராலும் ஏமாற்ற முடியாது.

துபாய் ராஜா said...

//கூரை, நாற்புறம் சுவர்கள், வாசல், முற்றத்து நிலவு, பூச்செடி, கிணறு, நாய்க்குட்டி இன்னபிற இனிக் கனவுகளில் வந்தால்தான் உண்டு.//

கனவுகள் மெய்ப்பட கனவு காண்போம்.

//அந்தரத்தில் இருக்கிறது வீடு. அது தரையிறங்கும்வரை அந்தரத்தில் அலைகின்றன கால்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று சொன்ன கணியன் பூங்குன்றா! நாடிழந்து அலையும் துயரின்முன் யாதோ ஊர்? எவரோ கேளிர்?//

வலியை உணர்த்தும் வரிகள்.

//மிஸ் பண்ணுவதை எந்தத் தமிழ்ச்சொல்லால் இட்டு நிரப்பலாம்?//

இழப்பு என்ற வார்த்தை சரிதானே ?!

தெருக்களெங்கும் நெருநெருக்கும் மனிதர்களை,தூசியை, ‘ங்கோத்தா’ என்றாலும் இனிக்கும் மொழியை, பிள்ளைகளை, அரிய சில நண்பர்களை அவள் (‘மிஸ்’பண்ணுகிறாள்.) இழந்து நிற்கிறாள்.

சரியா சகோதரி ??!!

தமிழ்நதி said...

நன்றி மிஸஸ் தேவ்,

அவரவர் நிலைக்குத் திரும்பும்வரையில் இந்த வலி தொடரும். வீடு என்பது கல்லாலும் மண்ணாலும் ஆனதல்ல. அது உணர்வாலும் ஆனதென்பது பலருக்குப் புரிவதில்லை.

உமா,

எனக்கு உங்களைப் போன்ற நண்பர்கள் இருக்கும்வரை நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன். கவலை என்பது ஒரு கணம்தான். பிறகு அது மறைந்துவிடும். ஆனால், கவலையைத்தான் எழுதத் தோன்றுகிறது. மகிழ்வை அல்ல.

ரிசான், (இந்தக் கணனியில் அந்த எழுத்தைக் காணவில்லை)
இன்னமும் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவில்லையா? கட்டுரையிலிருந்தே எடுத்து பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் மினக்கெட்டால்தான் என்ன...:) நன்றி.

பதி,

யாரோவாக இருப்பது தரும் வலிகளை யாவரும் புரிந்துகொள்ள முடியாது
அந்த வலி மிக நுட்பமானது. ஒரு புகைவண்டியில் பயணம் செய்யும்போதோ, பேரங்காடிகளில் அலையும்போதோ அதை உங்களால் உணரமுடியும். அது சொற்களில் அகப்படாததும்கூட.

கே.பி.சுரேஸ்,

நீங்கள் சரியாகத்தான் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். என்னை வந்து சேர்ந்தது. பின்னூட்டங்கள் எங்கள் அஞ்சலுக்கு வரும். அதை வெளியிடத் தாமதமாகியது.

தமிழில் தட்டச்சுவதற்கு முதலில் தமிழ் தட்டச்சத் தெரிந்திருக்கவேண்டும். தெரியாமல் அடிப்பதாயின் அதற்கும் வழி இருக்கிறதென்று நினைக்கிறேன். http://www.thamizha.org/ekalappai-bamini இங்கு போய் எழுத்தைத் தரவிறக்கம் செய்துகொள்வதன் வழியாக இணையத்தில் எழுதுவது சுலபமாகும்.

‘கோபம் கலந்த யதார்த்த எழுத்துக்கள்’நன்றி நண்பரே! ‘கோபம் மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக்கொண்டு போய்விடும்’என்று சொல்வார்கள். அது எனக்கும் பொருந்தும்.:)


இராஜராஜன்,

அகிலனின் அந்தப் பதிவை நானும் வாசித்திருக்கிறேன். கீற்றில் வாசிக்கக் கிடைத்தது. வீடு என்பதன் பொருள் சொற்களுக்குள் அடங்காததே.

துபாய் ராஜா,

என் வலைப்பூவுக்குப் புதுவரவு என்று நினைக்கிறேன். ஆம்... இழப்பு என்ற சொல் சரியானதே. நன்றி. ஆனால், ஆங்கிலச் சொல் சிலவற்றைச் சொல்லிச் சொல்லிப் பழகி அதுவே சரியான பொருள் தருவது போலொரு மயக்கம்.

‘கனவுகள் மெய்ப்படக் கனவு காண்போம்’

நம்பிக்கை நீர்த்துப்போய்விட்டது.
------

தமிழ்நதி said...

அனானிக்கு,

அடையாளத்தை மறைத்து அனானியாக வந்து பின்னூட்டமிட்ட உங்கள் ‘தற்துணிவை’ப் பார்த்து மிகுந்த புளகாங்கிதமடைந்தேன். மெய்ச்சிலிர்த்துப்போனேன். உங்களவர்களில் சோபா சக்தியும் மேலும் ஓரிருவரும்தான் நேரடியாக ‘குத்தி’ எழுதும் ‘தற்துணிவு’ வாய்க்கப்பெற்றவர்கள் போலிருக்கிறது. உங்கள் கோழைத்தனத்தைப் பார்த்தால் ‘ஐயோ பாவம்’என்றிருக்கிறது.

‘சொல்லத் தயக்கமாக இருக்கிறது’என்று சொல்லிச் சொல்லியே சேற்றை வாரியிறைக்கத் தயங்கவில்லை நீங்கள். அதிலிருந்து தெரிகிறது நீங்கள் ஒன்றும் தயங்கவில்லை அது ஒப்புக்காக எழுதிய சப்பை என்பதும் உங்கள் நோக்கமும். சோபா சக்தியின்; வார்த்தைகளை நீங்கள் வேதமாகவே எடுத்துக்கொண்டு வீட்டுச் சுவரில் சட்டம் போட்டு மாட்டினாலும் எனக்கொன்றும் பிரச்சனையில்லை.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் அகதிமுகாம்களில் இருப்பவர்களைப் பற்றிக் கதைக்கக்கூடாதென்பது விசித்திரமாகவும் விசர்த்தனமாகவும் இருக்கிறது. பேரினவாதத்தால் வன்னியில் இனச்சுத்திகரிப்பு நிகழ்த்தப்பட்டபோது வெளிநாடுவாழ் தமிழர்கள்தான் குரல்கொடுத்தார்கள். வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். ஈழத்தைக் கண்ணாலேயே பார்த்திராத பிள்ளைகள் தம்மை வருத்தி உண்ணாவிரதம் இருந்ததெல்லாம் நீங்கள் அறியாததா? (விளம்பரத்திற்காக அவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று உங்களைப் போன்ற குதர்க்கவாதிகள் சொல்லவும்கூடும்)
நான் அவர்களைப் பற்றிக் கதைக்கத்தான் கதைப்பேன். ஏனென்றால் அவர்கள் நான் பிறந்த மண்ணின் மக்கள். நீங்கள் குறிப்பிடும் அலாஸ்காவிலோ அந்தாட்டிக்காவிலோ நான் பிறக்கவில்லை. நீங்கள் அவர்களைக் குறித்து மௌனமாக இருங்கள். அதற்காக மற்றவர்களை மௌனமாக இருக்கச் சொல்ல உரிமையில்லை. தவிர, என் வலைப்பூவில் என்ன எழுதுவதென்பது எனது தெரிவு. உங்களுடையதல்ல.

‘யாருடைய நிலத்திலும் யாரோவும் யாரையும் இருக்கச் சொல்லவில்லையே... நாமாகத்தான் பெயர்ந்தோம்’

என்ற உங்கள் வரிகளை வாசித்ததும் உங்கள் அறியாமையை எண்ணிச் சிரித்துவைத்தேன். பொருளாதார அகதிகளாகப் போனவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினர். குடும்ப மீளிணைவுக்காகப் போனவர்கள் கொஞ்சப் பேர். மிகுதிப்பேர் வாழமுடியாத நிலத்திலிருந்து வருத்தத்தோடு போனவர்கள். அரச பயங்கரவாதத்தினால் அந்நிய நிலங்களுக்குத் தூக்கியெறிப்பட்டவர்கள். ஒருவரை மறுக்கவேண்டுமென்பதற்காக, தூற்ற வேண்டுமென்பதற்காக பொதுவான உண்மையை மறைத்து அபத்தமாகக் கதைக்க முனையாதீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் அந்நிய நிலம் இனித்துக் கிடக்கலாம். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்கு சொந்தமண்தான் சொர்க்கம்.

‘வத்தி’வைப்பவர்கள் இருக்கும்வரை அங்கு நாங்கள் வாழமுடியாது என்பதே யதார்த்தம். முன்னாள் போராளிகளும் அந்த மண்ணில் சுதந்திரமாக, உயிர்ப்பயமற்று வாழமுடியுமென்ற சூழல் வரும்போதுதான் நாங்களெல்லாம் இனி ஊர்திரும்பலாம். இந்த வேதனையில் என்ன கபடத்தைக் கண்டீர்கள்? சோபா சக்தி சொல்வதைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆடுவதிலிருந்தே தெரிகிறது ஐயா உங்கள் நோக்கம்.

உங்கள் பின்னூட்டத்தைப் பிரசுரித்திருக்கிறேன். அனானியாக வந்து பின்னூட்டமிட்ட மகாவீரராகிய உங்களுக்கு, என் தற்துணிவைப் பற்றி இனிச் சந்தேகம் இருக்காதென்றே நினைக்கிறேன்.

Anonymous said...

தமிழ் நதி,

சென்னைத் தமிழ் உங்களை ரொம்பவும் பாதிக்க
வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
++
மனசு, மனசு, எல்லாமே மனசுதான் காரணம்.

மனதுக்குப் பிடித்து விட்டால்
கூவம் கூட தேம்ஸ் நதிக்கரை தான்.
++
தெரு விட்டு தெரு போனாலே கலக்கம் வரும்.
நீங்கள் கண்டம் விட்டு கண்டம் போய்
உள்ளீர்கள். உங்கள் உணர்வு அர்த்தமுள்ளது.

அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்.

பாண்டியன் said...

அக்கா!

தாங்கள் புலம்பி கொண்டு இருந்தால் ஆக போவது ஒன்றுமில்லை! தாங்கள் இங்கு செய்யவேண்டிய கடமைகள் நிறைய உள்ளன..பாரதியார் பாண்டிக்கு போய் புரட்சி கவிதைகளை புனைந்ததை உதாரணமாக கொள்ள முடியும்..

1) தமிழக,ஈழ துரோகிகளை அம்பலபடுத்துதல்
2)புரட்சி பாக்களை புனைவது
3)மர மண்டைகளுக்கு இன உணர்வினை ஊட்டுதல்
4)தங்கள் கருத்துகளை ஆக்கங்களாக புனைந்து ஊடகங்களுக்கு அனுப்புதல்
5)பொது மேடைகளில் உங்கள் தரப்பு நியாயங்களை முழங்குதல்
6)தொலைகாட்சிகளில் பேட்டி கொடுத்தல்(மக்கள் தொலைக்காட்சியை அணுகலாம்)

இதைவிட தங்கள் கருத்து/எண்ணங்கள் பிரபலமாக வேண்டும் என்றால் திரை உலகம்தான் சரி! நீங்கள் ஏன் தமிழ் சினிமாவிற்கு பாட்டு எழுத கூடாது? அடிக்குது குளிரு.. அவிழுது டவுசரு.. டண்டனக்கா.. டண்டனக்கா என பாடல்கள் வரும் காலத்தில் தங்களால் அழகிய பாடல்களை தமிழ்சினிமாவிற்கு தரமுடியும்..முயற்சி செய்யுங்கள் ..வாழ்த்துகள்..

prasanna said...

//யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது?//

mika chariyana varthai. ennal ithai unarthu kolla mudikirathu.
:((

Anonymous said...

I want to anser to annai. but u gave a real blast. did u see his mirattal. enna saivathu, poodura ellumbu thunnduku kulailthu than aaka vendum.
Venkattan

நளன் said...

//யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது?
//

வலி உணர்த்தும் வரிகள்.

தனிமரம் said...

இன்னும் அதே வலிகள் அருமையான பகிர்வு இன்றைய வலைச்சரத்தில் மகி அண்ணாச்சி அறிமுகம் செய்துஇருக்கின்றார்!