அவிழ்க்க முடியாத புதிர்களுள் முக்கியமானது மனித மனம். இந்தப் புதிர்த்தன்மையில் சினிமாப் பாடல்களில் வருவதுபோல ஆண் மனம், பெண் மனம் என்ற பேதங்கள் குறைவு. பைத்தியம் என எம்மால் கோடு பிரித்து ஒதுக்கப்படுபவர்களுக்கும் நமக்கும் இடையில் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. காற்றில் ஆடும் மெல்லிய இழையினையொத்தது பைத்தியத்திற்கும் தெளிவுக்குமான இடைவெளி.
தொலைந்த ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருக்கும்போதே அது கிடைத்துவிடக்கூடாது என்று பிரார்த்திக்கும் ஒரு சிறிய பகுதி இயங்குவதை நான் அவதானித்திருக்கிறேன். வேண்டுமென்றே தடயங்களை விட்டுச்செல்லும் குற்றவாளிகளைப் பற்றி வாசித்திருக்கிறேன். மிக மிகப் பிடித்தமான ஒருவரைச் சந்திப்பதற்கு முன்னைய கணத்தில் அவரை நிராகரித்துச் சலிக்கும் மனதையும் உணரமுடிந்திருக்கிறது. அடைந்தே தீர்வதென்ற வெறி கையகப்படும் தருணத்தில் கண்ணெதிரில் கரைந்து ஒழுகுவதை நாம் யாவருமே கவனித்திருப்போம். நுட்பமான இழைகளாலான மனதில் உள்ளார்ந்து இயங்கும் வேட்கைகளில் ஒன்றாக தொலைந்துபோவதன்பாற்பட்ட ஈர்ப்பைச் சொல்லலாம்.
படிக்கும்போது கணக்குப் பாடத்தில் பல புதிர்களை நாம் விடுவித்திருப்போம். அதன் சூத்திரம் எளிதாகப் பிடிபடும்போது ஏற்படும் தெளிவினைக்காட்டிலும், தவறிழைத்துக் கணக்குக் காட்டினில் வழிதொலைத்துக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் தெளிவும் நிறைவும் மிகப்பெரிது. மேல்வகுப்புகளில் கணக்கியல் படித்தவர்களுக்கு இந்த உற்சாகப்புள்ளி புரியும். இருபக்கமும் சமனான தொகையை வந்தடையும்போது உற்சாகக்கூச்சலொன்று உள்ளுக்குள் கேட்கும்.
வாழ்க்கைக்கும் வழிகளுக்கும் மேற்சொன்ன ‘தவறின் வழி கற்றல்’பொருந்தும். தொலைந்து போவது குறித்து பாஸ்கர் சக்தி எழுதிய கட்டுரை ஒன்றை நேற்று முன்தினம் வாசிக்க நேர்ந்தது. நேற்று அடிக்கடி தொலைந்துகொண்டிருந்தபோது எனக்கு அந்தக் கட்டுரையின் ஞாபகம் வந்தது. சுமார் ஒன்பதாண்டுகளின் முன் சுற்றிய அதே இலண்டன் நகரம்தான். அதே நிலக்கீழ், மேல் புகையிரதப் பாதைகள்தாம். என்றாலும் எல்லாம் புதிதாகத் தெரிந்தன. ‘மாப்’வாங்கி வழிபார்க்காமல் சுற்றவேண்டுமென்ற பைத்தியக்காரத்தனம் இயங்கிய-இயக்கிய நாள் அது.
சரக் சரக்கென வந்து நிற்கும் புகையிரதங்களில் மாறி மாறி ஏறி (நிச்சயமாக அதற்கு இலகுவழி இருந்திருக்கும்) ‘வெஸ்ட் மினிஸ்டர் அபே’யை வந்தடைந்தேன். சுருக்கமாகச் சொன்னால் ‘இங்கிலாந்தை ஆண்ட அரசர்களின்-அரசிகளின்-பிரபுக்களின்-கவிஞர்களின் கவித்துவமான கல்லறை’என்று அதைச் சொல்லலாம். அவற்றிலொரு பணக்காரச் செருக்கும் படாடோபமும் இருந்ததாக உணர்ந்தேன். (அது நம் துன்பங்களுக்கு நதிமூலமாக இருந்தவர்கள் என்ற கசப்பினால் ஏற்பட்டதாக இருக்கலாம்) ஆனால், பழமைக்கேயுரிய- தொடவியலாத காலத்தை ஏதோவொரு வகையில் தொடும் பிரமிப்பு அந்த நினைவகத்தினுள் உலவிய எல்லோருடைய முகத்திலும் இருந்ததைப் படிக்கமுடிந்தது. நமக்கு எட்டாததை ஆராதிக்கும் ‘திவ்ய தரிசன’ பாவத்துடன் உலவிய பலரைப் பார்த்தேன். தரையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை மிதிக்கும்போது நூற்றாண்டுகளையே மிதிப்பதுபோல கூசியது. நீளநீளமாகப் படுத்தவாக்கில் கிடந்த சிலை மன்னர்களைத் தொடும்போது அமானுஷ்யமான ஒரு அதிர்வும் பயமும் உடலில் பரவியது. ஒவ்வொருவர் கையிலும் இருந்த இயந்திர வழிகாட்டியின் குரல்விளக்கம் (வார்த்தைகளை முடிக்காமல் இடையில் விழுங்கும் பிரிட்டனின் ஆங்கிலத்தில் எனினும்) உபயோகமாக இருந்தது. ‘கவிஞர்களின் மூலை’என்ற பகுதியில் சேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்கள் சிலையாக நின்றிருந்தார்கள். நாடக ஆசிரியர்களும் நாவலாசிரியர்களும்கூட ஞாபகம் கொள்ளப்பட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் பாரதி, வள்ளலார் தவிர யாராவது கவிஞர்களுக்குச் சிலை இருக்கிறதா என்று நினைத்துப் பார்த்தேன். ஞாபகத்தில் வரவில்லை. திரும்பும் திசையெல்லாம் அரசியல்வாதிகளின் கூப்பிய கைகளும் ‘கட் அவுட்’களில் கனிந்த புன்னகையும் ‘குடும்பத் தலைவனே’,(யாருக்கு யார் குடும்பத்தலைவன்?) ‘குத்துவிளக்கே’,(அது சரி) ‘பிடல் காஸ்ட்ரோவே’(இந்தத் திருவாசகத்தை எழுதியவரைப் பாராட்டியே ஆகவேண்டும்) என்று நெகிழ்ந்து வழிந்த வாசகங்களும்தான் நினைவிலிருக்கின்றன.
கால்கள் களைப்பிலும் பசியிலும் கெஞ்சியபோதிலும், கழிந்த காலம் இழுத்துக்கொண்டேயிருந்தது. ஒருவழியாக அதன் குரலைப் புறக்கணித்து வெளியில் வரும்போது நின்று கவனித்தேன். வெளியேறும் வாயில் நோக்கி வந்துகொண்டிருந்த ஒருவர் முகத்திலும் சிரிப்பில்லை. ஏதோவொரு நினைவு… ஏதோவொரு ஆழம்… சின்னதாய் ஒரு துயரம் தெரிந்தது. வெஸ்ட் மினிஸ்டர் அபேயின் உயர்ந்தோங்கிய கூம்புக் கோபுரங்களும் விதானங்களில் விரிந்திருந்த ஓவியங்களும் வர்ணக் கண்ணாடிகளும் ‘பிரமாண்டம் பிரமாண்டம்’என்றன. சில இடங்களில் கல்லறைகள்கூட கவித்துவத்தோடிருக்கின்றன. சில இடங்களிலோவெனில் கவிதைச்சாலைகள்கூட கல்லறைகளின் சூனியத்தோடிருக்கின்றன.
‘மடாம் துஸாட்’எனப்படும் மெழுகுச் சிலைகளாலான அருங்காட்சியகத்தை பல ஆண்டுகளுக்கு முன்னமே பார்த்திருக்கிறேன். உயிருள்ள மற்றும் இறந்த பிரபலங்களை உயிரோட்டத்துடன் சிலையாகச் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதன்றி பெரிதாக அங்கொரு சிறப்புமில்லை. ஆனால், அந்தச் சிலைகள் சத்தியத்திலும் சத்தியமான உயிர்ப்போடு இருந்தன. கண்ணில் ஒளிரும் புன்னகையும், கைகளில் ஓடும் நரம்பும், கன்னங்களில் அசையும் பூனை மயிரும் என மெழுகின் வார்ப்புக் கலை அதியற்புதமாயிருந்தது. பலரை ‘சிலையா?’என்று நிமிர்ந்து பார்த்தால் கை அசைந்தது. ‘உயிருள்ளவரா?’என்று குழம்பிக் கூர்ந்தால் சிரிப்பு உறைந்திருந்தது. வழியில் நின்ற ஒருவரிடம் ‘எக்ஸ்கியூஸ் மீ’என்றேன். அவர் அசையவேயில்லை. சிலைதான். நல்லவேளை அந்தச் சந்தடியில் யாரும் கவனிக்கவில்லை. சந்திக்க முடியாத, பழகமுடியாத, தொட்டுக்கொள்ள முடியாதவர்களோடு நிறையப் பேர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். இளைஞர்களும் குழந்தைகளும் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இளம்பெண்களோவெனில் சினிமாக் கதாநாயகர்களோடு. அரசியல் தலைவர்களை அணைத்தபடி நின்றவர்கள் நடுவயதைக் கடந்தவர்களாக இருந்தார்கள். இந்திரா காந்தியும் மகாத்மா காந்தியும் பக்கத்தில் பக்கத்தில் நின்றிருந்தார்கள். நிறைய இந்தியர்கள் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னை ஈர்த்தவர் ஃபிடல் காஸ்ட்ரோதான்.
அதுவொரு கிழமை நாளாக இருந்தபோதிலும் கூட்டம் நெருக்கித்தள்ளியது. நிறைய வல்லெழுத்து கலந்து பேசிய கூட்டமொன்றின் பின்னால் நடக்கையில் காது கிழிந்தது. உண்மையில் நான் வெளியில் வந்து விழுந்துவிட விரும்பினேன். ஆனால், இடையில் பிய்த்துக்கொண்டு வெளிவரும் வழிதான் தெரியவில்லை. கூட்டம் என்னை இருண்ட பயங்கரமான பாதாள உலகத்திற்குள் இழுத்துக்கொண்டு இறங்கியது. இருளென்றால் இருள்… அப்படியொரு கட்டி இருள். பன்னிரண்டு வயதிற்குக் குறைந்த பிள்ளைகள், கர்ப்பிணிகள், இதயநோய்-இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதற்குள் செல்லவேண்டாம் என எதிர்ப்பட்ட அறிவிப்பில் கேட்கப்பட்டிருந்தது. இருளான பகுதிக்குள் மிக இருளான இடத்திலிருந்து கோரமான ஒரு உருவம் எங்கள் முன் பாய்ந்து கத்தியது. அதை எனக்கு முன்னால் சென்ற வல்லெழுத்து மொழிக்காரர்கள் பயத்தில் பன்மடங்காக்கி எதிரொலித்தார்கள். திடீரெனக் காலடியில் ஒரு சிதைந்த முகக்காரனோ காரியோ தவழ்ந்து வந்து பயமுறுத்தினார்கள். இவர்கள் அலறியடித்துக்கொண்டு அரண்டோடினார்கள். ஆடைகளில் இரத்தம் பூசிய இன்னொருவன் நடந்துகொண்டிருந்தவர்கள் மீது எங்கிருந்தோ வந்து உலாஞ்சிப் போனான். ‘ஹ_ய் ஹ_ய்’ என்று ஒரே பயஇரைச்சல். பி.டி.சாமி கதையை எல்லாம் விஞ்சக்கூடிய பயங்கரமாயிருந்தது. கொஞ்சம் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். இருந்தபோதிலும், வெளியில் இதைவிட ஆனானப்பட்ட பேய்களை எல்லாம் பார்த்திருப்பதால் நான் பயந்துபோய்க் கத்தவில்லை. எங்கிருந்து எது வந்து மேலே விழுமோ என்ற பயத்தில் உறைந்தவாறு நடந்தோம். என்னென்ன விதங்களில் மனிதர்களைக் கொல்லலாம் என்பதைச் சிலைகளைக் கழுவிலேற்றியும், கத்தியால் தலைகளைத் துண்டாக்கியும் செய்முறையில் விளக்கியிருந்தார்கள். பிணக்குவியலினுள் யாரையோ தேடிக்கொண்டிருந்தாள் விளக்கேந்திய தாயொருத்தி. எல்லாவற்றையும் எதனோடோ பொருத்திப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன்.
வெளியேறும் வழியில் மெழுகு நாய் ஒன்று, வரும் ஒவ்வொருவரையும் வியந்து பார்த்து தன்பாட்டில் தலையாட்டிக்கொண்டிருந்தது. அறிவாளி ஒருவர் (கையில் எழுதுகோல் இருந்ததால் அப்படியொரு ஊகம். ஊகங்கள் பிழைக்கும் காலமிது) எழுதுவதும் பிறகு தலையாட்டிச் சிந்தனையைத் தொடர்வதுமாயிருந்தார். தொடராய் வந்துகொண்டிருந்த ‘டாக்ஸி’களில் ஏறி பிறகொரு புராதன அதிசய உலகினுள் பயணித்தோம். பிய்த்தோடும் வழியற்ற நானும் அதிலொன்றில் ஏறிக்கொண்டேன். பண்டைய அரசர்கள், பிரபுக்கள், மகாராணிகள், பிச்சைக்காரர்கள், சாரட் வண்டிகள், வாள்கள், செங்கோல்கள், கோமாளிகள், அறிஞர்கள், வித்தைகள் எல்லாம் மெழுகுச்சிலைக் காட்சிகளாய் விரிந்தன அந்தப் பயணத்தில். “பயணத்தின் முடிவிலுள்ள புகைப்படக் கருவிக்குச் சிரியுங்கள்” என்ற ஆரம்ப வாசகத்தை ஞாபகத்தில் வைத்து பலர் சிரித்தார்கள். ‘உங்கள் புகைப்பட இலக்கத்தைக் குறித்துக்கொள்ளுங்கள்’என்ற அறிவிப்பை எனது டாக்ஸி தாண்டும்போது கவனித்தேன். 58இல் தொடங்கிய புகைப்படத்தில் என்னைப் பார்த்தேன். அப்புறாணியாகத் தோன்றினேன். நாம்தான் புகைப்படங்களில் எவ்வளவு பாவமாக இருக்கிறோம்!
தோழியின் குழந்தைகளுக்காக ‘பூமராங்’ஒன்றை வாங்கிக்கொண்டு புகையிரத நிலையத்தை நோக்கி நடந்தேன். உடல் இற்றுவிழுமளவு களைத்திருந்தது. இம்முறை திரும்பிச் செல்லும் வழி மிக எளிதாக இருந்தது. எங்கேயும் தொலையவில்லை. நின்று நிதானித்து வரைபடங்களை உற்றுநோக்கிக்கொண்டிருக்கவில்லை. சென்றடையும் வழிகள்தான் சிரமம். பயணங்களில் மட்டுமென்றில்லை… காதலில், காமத்தில், நட்பில், எழுத்தில் எல்லாவற்றிலும் திரும்பும் வழிகள் மிக எளிதானவை.
11 comments:
//சென்றடையும் வழிகள்தான் சிரமம். பயணங்களில் மட்டுமென்றில்லை… காதலில், காமத்தில், நட்பில், எழுத்தில் எல்லாவற்றிலும் திரும்பும் வழிகள் மிக எளிதானவை.//
அற்புதம்
நைஜீரியாவில் உட்கார்ந்து கொண்டு லண்டன் பயணப்பட வைக்கும் உங்களுக்கு நன்றி
Tamilnathy,
பிணக்குவியலினுள் யாரையோ தேடிக்கொண்டிருந்தாள் விளக்கேந்திய தாயொருத்தி. எல்லாவற்றையும் எதனோடோ பொருத்திப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன்.
Idhayathai thotta varikal.
Anbudan
Suresh
\\ 58இல் தொடங்கிய புகைப்படத்தில் என்னைப் பார்த்தேன். அப்புறாணியாகத் தோன்றினேன். நாம்தான் புகைப்படங்களில் எவ்வளவு பாவமாக இருக்கிறோம்! \//
:)
தமிழ் நதி, வணக்கம் !
கண்டதை மட்டும் எழுவது கட்டுரை;
அனுபவித்து எழுதுவது கலை.
நிங்கள் கண்ட பிரமாண்ட கட்டிடங்கள், கோபுரங்கள்,
மெழுகு மனிதர்கள், ஆரவார அடாவடி ஆட்கள்…
அனைத்தையும் கண் முன் பார்க்க முடிகிறது
இது ஒரு கலை நயப் பதிவு.
தொடரட்டும் உங்கள் பயணம்…
வாழ்த்துக்கள்..
அன்புடன்
எஸ்.எஸ்.ஜெயமோகன்
தொலைந்த ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருக்கும்போதே அது கிடைத்துவிடக்கூடாது என்று பிரார்த்திக்கும் ஒரு சிறிய பகுதி இயங்குவதை நான் அவதானித்திருக்கிறேன். வேண்டுமென்றே தடயங்களை விட்டுச்செல்லும் குற்றவாளிகளைப் பற்றி வாசித்திருக்கிறேன். மிக மிகப் பிடித்தமான ஒருவரைச் சந்திப்பதற்கு முன்னைய கணத்தில் அவரை நிராகரித்துச் சலிக்கும் மனதையும் உணரமுடிந்திருக்கிறது //
இதனை நானும் உணர்ந்திருக்கிறேன்.
அழகாய் வார்த்தெடுத்திருக்கிறீர்கள்.
"நதியின் ஆழத்தில்"
அவள் விகடனில் படித்தேன் .மிகவும் அருமை
//சந்திக்க முடியாத, பழகமுடியாத, தொட்டுக்கொள்ள முடியாதவர்களோடு நிறையப் பேர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். //
// இருண்ட பயங்கரமான பாதாள உலகத்திற்குள் //
நியூயார்க்கில் எனக்கும் இதே அனுபவம்...
//மிக மிகப் பிடித்தமான ஒருவரைச் சந்திப்பதற்கு முன்னைய கணத்தில் அவரை நிராகரித்துச் சலிக்கும் மனதையும் உணரமுடிந்திருக்கிறது//
ரொம்ப சரி...
//எல்லாவற்றிலும் திரும்பும் வழிகள் மிக எளிதானவை//
எனக்கு உடன்பாடு இல்லை
மிக அழகான எழுத்து நடை.. கையைப் பற்றி அழைத்துச் சென்ற உணர்வு.
குடும்பத் தலைவனே’,(யாருக்கு யார் குடும்பத்தலைவன்?)
ethinai kudumbangaluku thalaivan?
அருமையான பயண கட்டுரை. நீளம் இடையே இரண்டு கொட்டாவிகளை வரவழைத்தது :)
நல்லா இருக்கு உங்கள் மனப்பதிவுகள் நானும் விசயம் தெரியாமல் அந்த டன்ஞன் அறைக்கு போய் அவஸ்த்தைப்பட்டேன்.
கடைசியில் சொன்னீர்களே அது மட்டும் உண்மை.
(சென்றடையும் வழிகள்தான் சிரமம். பயணங்களில் மட்டுமென்றில்லை… காதலில், காமத்தில், நட்பில், எழுத்தில் எல்லாவற்றிலும் திரும்பும் வழிகள் மிக எளிதானவை.)
உணர்வோடும் உயிர்ப்போடும் ஒரு பயணக் கட்டுரை. பல இடங்களில் உங்கள் எழுத்து அசரடித்தது. வாழ்த்துக்கள்.
Post a Comment