9.16.2009

திஸநாயகத்தின் தவறுகள்


தானியக் களஞ்சியங்களை
போர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்
சகோதரனே!
உண்பதற்கு மட்டுமே
நீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।

உனது எழுதுகோலுள்
குருதியையும் கண்ணீரையும்
ஊற்றியது யார் தவறு?

உடற்சாற்றில் வழுக்கி
ஊடகதர்மம்
அலமலந்து விழுந்துகிடக்கும் மண்ணில்
உண்மையன்று;
நமக்கெல்லாம்
உயிரே வெல்லம் என்பதறியாயோ?

'ஜனநாயகம்' என்ற சொல்
பைத்தியம் பிடித்து
மலங்க மலங்க விழித்தபடி
தன் கண்களை ஒளித்துக்கொள்ள
இடம்தேடியலையும் தெருவொன்றிலிருந்து
நீ உச்சரித்திருக்கக்கூடாது
அந்த இற்றுப்புழுத்த வார்த்தையை...

மனிதவுரிமையாளர்களின்
குறிப்புகளைப் பிடுங்கிக்கொண்டு
தரதரவென்று இழுத்துப்போய்
விமானமேற்றும் நாட்டிலிருந்தபடி
என்ன துணிச்சலில் நீ எழுதினாய்
எரிதழல் சொற்களை?

அகதிமுகாமொன்றின்
மலக்குழியின் பக்கப்பலகைகள் இற்றுவிழுந்து
புழுக்களுள் புதையுண்டு
செத்தொழிந்த சிறுவர்கள் கேட்டார்களா
நாற்றமடிக்கும் சமவுரிமையை
எழுதக்கூடாதா என்றுன்னை?

போர்க்குற்றங்களை எழுதுவது
மாபெரிய போர்க்குற்றம்!!!

எனினும்
எமதினிய சகோதரா!
'அவர்கள்’ விடுவிக்காதுபோனாலும்
வரலாறு உன்னை விடுவிக்கும்.

13 comments:

சாந்தி நேசக்கரம் said...

வரலாறு அவனை விடுதலை செய்யும் வரையில் அவனை உயிருடன் விடுவார்களா சிங்கள அரசு என்பது கேள்வியாயுள்ளது தோழி....?????

சாந்தி

soorya said...

ம் ......
இன்னுமொரு ஏக்கப் பெருமூச்சு தோழி.
வாழ்க அவன் நாமம்.
நன்றி.
(வீடுவந்து சேர்ந்து விட்டேன். அகதிக்கு ஏது வீடு..?)

SS JAYAMOHAN said...

ஒரு நேர்மையான பத்திரிகையாளரை
நன்றி உணர்வுடன் கவிதையாய்
பதிவு செய்துள்ளீர்கள்.

திச நாயகத்தின் மனித நேயமும்,
துணிச்சலும், அர்ப்பண உணர்வும்
நம் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு
பத்து விழுக்காடு இருந்திருந்தால்கூட
இவ்வளவுப் பெரியத் துயரங்கள்
நடந்து இருக்காது.


எஸ்.எஸ். ஜெயமோகன்

நேசமித்ரன் said...

பதைக்கும் சொற்களால் எழுதியிருக்கும் கவிதை உள் திரளும் வலி தொற்றிக் கொள்கிறது என்னையும்
என்று தூர்ந்து போகும் உதிரச் சுனைகள் ?

கவிஞர் இசை said...

ithaip pattri unkalal oru aaka sirantha katturai eluthi irukka mudiyum thozhi

South-Side said...

தானியக் களஞ்சியங்களை
போர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்
சகோதரனே!
உண்பதற்கு மட்டுமே
நீ வாயைத் திறந்திருக்க வேண்டும்।/

உண்மை.....

உங்களைப் போன்றே கண்ணீருடன் நாமும்.

நீங்கள் கடந்த பதிவில் சொல்லியிருந்த எத்துவாளி நீதிபதிகள் இதற்கும் கூட குரல் கொடுக்கக் காணோமே என்ற கேள்வி நமக்குள் எழுந்தாலும் அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை என்பதால் எமக்குள்ளே முணகிக்கொள்கிறோம்.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்..

கவிதைக்கான நோக்கம் சரியாக நிறைவேறியிருக்கிறது.

நண்பன் இசை சொன்னதுபோல இந்த விஷ்யத்தை கட்டுரையாக்கியிருக்கும்பட்சத்தில் இன்னும் செறிவாக வந்திருக்குமோ என தோன்றுகிறது தமிழ்..

உன்னதம் செப் இதழில் வாசுதேவன் என நினைக்கிறேன் அவர் திஸ நாயகம் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் நல்ல பதிவு.

அதே இதழில் தீபச்செல்வன் முள்வேலி முகாம்களை நேரிடையாக பார்த்த பாதிப்பை கட்டுரையாக்கியுள்ளர்.

விஷ்ணுபுரம் சரவணன்

ஈரோடு கதிர் said...

வலியை மிகச்சரியாக பகிர்ந்துள்ளீர்கள் தமிழ்

கையறு நிலையில் படித்து வேதனைப்பட மட்டுமே முடிகிறது

வரலாறு விடுவிக்கட்டும் அவரை

தமிழ்நதி said...

சாந்தி,

திஸநாயகத்துக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பல்வேறு சர்வதேச அதிருப்திகள், அழுத்தங்கள் மிகுந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றே நினைக்கிறேன்.

சூரியா,

"அகதிக்கு ஏது வீடு?"ம்... கனடாவில் உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.

எஸ்.எஸ்.ஜெயமோகன்,

பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது சகல தரப்பினரும் கிளர்ந்தெழ வேண்டிய நேரம் இது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகத் திரள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகாரங்களின் மீதான அழுத்தம் கனமாகும். ஆனால், அதிகாரங்களிடம் சட்டமும் ஆயுதங்களும் இருக்கின்றன. எருமை மாட்டில் மழை பெய்தாற்போல அவர்கள் நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொள்வார்களாயிருக்கும்.

நேசமித்ரன்,

"என்று தூர்ந்துபோகும் உதிரச்சுனைகள்?"என்ற வரியை ரசித்தேன். அழிவிலும் எங்கிருந்தோ அழகியல் வந்துவிடுகிறது. நான் இப்படிச் சொல்வது எனக்கே குரூரமாகத் தோன்றுகிறது.

இசை (மகாகவி)

ஆகச் சிறந்த கட்டுரை என்ற ஒன்று இருக்கிறதா என்ன?:) ஆனால், எழுதவே நினைத்திருக்கிறேன். திஸநாயகத்தைப் பற்றி மட்டுமல்லாது அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கப்படும் வன்முறைகள் பற்றி... ஆலோசனைக்கு நன்றி. வாழ்க்கை எப்படிப் போகிறது? நரன் நலமா?

'ழ'கரம்,

'எத்துவாளி நீதிபதிகள்' என்றைக்கு வாய்திறந்திருக்கிறார்கள்? அரசின் அடக்குமுறைகள் குறித்து மெளனமாக இருப்பதே நன்றிக்கடன்:)

சரவணன்,

எங்கே 'பதிவெழுத வந்த கதை'? உன்னதம் நான் இன்னும் படிக்கவில்லை. தீபச்செல்வனின் கட்டுரை படித்துவிட்டேன். ஆம்... கட்டுரை கவிதையைக் காட்டிலும் பலரைச் சென்றடைகிறது. வாசிக்க இலகுவானதாக இருக்கிறதோ என்னவோ... தொடர்ந்து என் வலைப்பூ பக்கம் வந்து வாசித்துக் கருத்துச் சொல்வதற்கு நன்றிகள்.

நன்றி கதிர்,

திஸநாயகத்தை விடுதலை செய்வதை இலங்கை அரசு தனது சுயமதிப்புக்கு நேர்ந்த இழிவாகவே கருதும். அதனால், தண்டனையைக் குறைக்கலாம். குறைக்காது போனாலும் 'சண்டியர்களை'யார் என்ன சொல்வது?

Sai Ram said...

இலங்கையில் போர் ஓய்ந்து விட்டது, நடந்தது நடந்து விட்டது என்கிற போர்வையில் ஈழப்பிரச்சனையில் கவனம் திசை திரும்ப கூடாது, இன்னும் அதிக சிரத்தை வேண்டும் என்பதை உரத்து சொல்ல இது இன்னொரு சம்பவம். போரில் முதலில் கொல்லபடுவது உண்மை தான். அதனாலே உண்மையை எழுதுபவர்களை அவர்களுக்கு பிடிப்பதே இல்லை.

சுகுணாதிவாகர் said...

உங்கள் அபிமான நடிகரின் இந்துத்துவப் பாசிச முகம் இங்கே கிழிந்து தொங்குகிறது. உடனே வரவும்!

suguna2896.blogspot.com

பாண்டியன் said...

என்னை கேட்டால் ஈழ உறவுகள் .. இந்த தொலைதொடர்பு விசயத்தில் சரியாக இயங்கவில்லை என்றே தோன்றுகிறது.. சன் தொலைகாட்சிக்கும் கருநாகதிற்கும் சண்டை என தெரிந்த உடனே அடுத்த ஒரு மாதத்தில் கருநாகத்தின் தொல்லை காட்சியை தொடங்குகிறார்கள்.. ஈழ விடுதலை போர் ஆரம்பித்து இவ்வளவு நாள் ஆகியும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு சார்பாக ஒரு தொலைகாட்சியும் தொடங்கவில்லை..இத்தனைக்கும் தமிழ் சினிமாவின் அந்நிய வருவாயே ஈழதமிழர்களால் தான் வருகிறது.. இங்கே ஆளுக்கு ஒரு கட்சிக்கு தொல்லை காட்சிகளை வைத்து இருக்கிறார்கள்.. எவனும் ஈழதமிழன் அவதியை காட்ட வக்கில்லை..குறைந்த பட்சம் ஈழ விடுதலைக்காக போராடும் நெடுமாறன் வைகோ போன்றவர்களுக்காக தொலைகாட்சி தொடங்க ஈழ தமிழர்கள் நிதி உதவி செய்திருக்கலாம்..இங்கு திசநாயகத்தின் கைதுகாக இணையத்தில் கூடி கும்மியடித்து கொண்டிருந்தால் என்ன பயன்?இன்னும் பலர் இங்கே மெரினா கடற்கரையில் கருநாகத்தின் அற்புத சுகமளிக்கும் அதியுண்ணத நாடகத்தினை நம்பி ஈழத்தில் அனைவரும் நன்றாக வாழ்கிறார்கள் என நினைத்து கொண்டுள்ளார்கள்.. இவ்வறான ஊடக தெம்பில் தான்.. கோவையில் உலக தமிழ் மாநாட்டை கூட்டுகிறானாம் கபோதி..தமிழ் தமிழ் ஓலவாயால் ஒலமிட்டு தமிழினத்தை டில்லி காரனிடமும் சிங்களவனிடமும் கூட்டிகொடுக்கும் இந்த கபோதியின் மாநாட்டிற்கு யாரும் செல்ல கூடாது என அக்கா தமிழ்நதி முதற்கொண்டு அனைத்து நல்லுள்ளங்களையும் மண்டியிட்டு கேட்டு கொள்கிறேன்!

ஆரூரன் விசுவநாதன் said...

அழுதழுது வற்றிய கண்கள்,
வறட்டுச் சிரிப்பு,
வெளிரிய முகம்,
பயம் விலகா கண்கள்,
உயிருடன் இருப்பதை உணர்த்தும் சுவாசம்.....


இத்தனைக்கு மத்தியிலும்
எனையறியா பெருமூச்சு.....

வேறென்ன முடியுமென்னால்.....