10.11.2009

ஒரு குடிமகனின் சரித்திரம்


நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில், ‘அவர் கனடாவிலை’, ‘அவ கலியாணம் கட்டி கொழும்பிலை’என்பதையொத்த பதில்கள் ஆசுவாசம் அளிப்பனவாக இருக்கின்றன. ஷெல்லடியில் சிதைந்துபோன, காணாமல் போன, அங்கவீனர்களாகிய, சிறைப்படுத்தப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, முகாமில் இருக்கிற வகையிலான பதில்கள் வரக்கூடாதென்பதே எங்களது பிரார்த்தனையாக இருக்கிறது. அண்மையில் குருட்டு யோசனையோடு ‘அஸ்பெஸ்டாஸ்’ கூரையில் பல்லி பார்த்துக்கொண்டு சோபாவில் படுத்திருந்தபோது, ‘மணியம் மாமா என்னவாகியிருப்பார்?’ என்ற கேள்வி திடுதிப்பென்று எழுந்தது.

மணியம் மாமா எங்களுர் விதானையார் இல்லை. தபாற்காரர் இல்லை. விரல்களில் மினுங்கும் மோதிரங்களைக் காட்டவென்றே கைகளை வீசிக் கதையளக்கிற பணக்காரரும் இல்லை. என்றாலும் குழந்தைகளுக்குக்கூட அவரைத் தெரிந்திருந்தது. சாப்பாடு தீத்தும்போது- நிலவுக்கும் பிள்ளைபிடிகாரனுக்கும் மசியாத குழந்தைகள்கூட மணியம் மாமாவின் பெயரைக் கேட்டால் பெரிய வட்டக் கண்களை இன்னும் பெரிதாக்கி முழுசியடித்துக்கொண்டு, அம்மாமார் உருட்டித் தீத்தும் உருண்டைகளை வேண்டாவெறுப்பாக விழுங்கித் தீர்க்கத் தலைப்படும் அளவுக்கு மணியம் மாமாவின் பெயர் அவர்களுக்கு அதிபயங்கரமூட்டுவது.

அவர் ஒரு அருமையான குடிகாரர். அப்படித்தான் அவரைச் சொல்லமுடியும். நான் அவரைக் கவனிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஊரை விட்டுப் பின்னங்கால் பிடரியில்பட ஓடிவரும்வரை, அவர் ஒரேமாதிரியான தோற்றத்தோடும் நடத்தைகளோடும்தானிருந்தார். சுகாதாரத் திணைக்களத்தில் வேலைபார்த்து ‘கட்டாய’ஓய்வு பெற்றிருந்த அவர், பகல் முழுவதும் தோட்டத்தில் எதையாவது கொத்திக்கொண்டும் கிளறிக்கொண்டும் குந்தியிருப்பார். இல்லையென்றால் அன்னபாக்கியம் மாமிக்குப் பக்கத்தில் அமர்ந்து ‘எணேய்… எணேய்…’என்று கூப்பிட்டு ஏதாவது கதைசொல்லிக்கொண்டோ கீரை ஆய்ந்து கொடுத்துக்கொண்டோ இருப்பார். அப்படியொரு புருசனை அயலுக்குள் காணமுடியாது. அவர் வைக்கும் பிலாக்காய்க்கறி அக்கம்பக்கத்தில் பிரசித்தம். குசினிக்குள் சர்வசதாகாலமும் எதையாவது அடுப்பில் வைத்துக் கிண்டிக்கொட்டிக்கொண்டிருக்கிற பெண்களது கைக்குக்கூட அந்த உருசியைக் கொணரத் தெரியாது. அவ்வளவு கைப்பக்குவம். மணியம் மாமா சமைக்கும் நாட்களில் ஏலமும் கராம்பும் வறுபடும் மணம் அயலெல்லாம் பரவும்.

பின்னேரம் ஐந்து மணியானதும் அவர் வேறொரு ஆளாகிவிடுவார். கண்கள் பரக்குப்பரக்கென்று விழிக்கவாரம்பித்துவிடும். மேளச்சத்தத்திற்கு உருவேறி ஆடுபவரின் முகபாவம் தொற்றிவிடும். அள்ளிக் குளித்துவிட்டு மொட்டைத் தலையுட்பட உடல் முழுவதும் பவுடரை அப்பிப் பூசியபடி சைக்கிளையும் எடுத்துக்கொண்டு கனசுதியாய் வெளிக்கிட்டாரென்றால், கவர்னரே வீட்டுக்கு வந்தாலும் கால்தரித்து நிற்கமாட்டார். அப்படியொரு வேகம். கேற்றுக்கு வெளியில் நின்று சிநேகிதப்பேய் கூப்பிடுமாப்போல ஒரே பார்வையோடு ஒரே இலக்கை நோக்கிப் போவார். போகும்போது அவர்தான் சைக்கிளைக் கொண்டுபோவார். திரும்பி வரும்போது சைக்கிள் அவரைக் கொண்டுவரும். ஆகிலும் கைவறண்டு போகிற நாட்களில் சைக்கிள் சாராயக்கடைக்காரரின் வீட்டில் சார்த்திவைக்கப்பட்டிருக்கும். சைக்கிள் அடைவில் இருக்கும் இரண்டு நாட்களும் அன்னபாக்கியம் மாமியின் முறைப்புக்குப் பயந்து தோட்டத்துக்குள்ளேயே நாள் முழுவதும் குந்திக்கொண்டிருப்பார். இரண்டொரு நாட்களில் மாமி கத்திக் குளறி சண்டை பிடித்து யாரிடமாவது காசு கொடுத்தனுப்பி சைக்கிளை மீட்டுவரச் செய்வா.

மணியம் மாமா குடிக்கப் போகும்போது அவரது வீட்டுப் பூனைகூட அவரைக் கவனியாது. குடித்துவிட்டுத் திரும்பிவரும்போது ஊரே அமர்க்களப்படும். தெரு நாய்களெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடும். இவர் ‘அடிக்… அடிக்…’என்று அடிக்கொரு தடவை நாய்களை வெருட்டியபடி தெருவெல்லாம் காறித்துப்பிக்கொண்டே வருவார். பத்தாததற்குப் பாட்டு வேறு. பெரும்பாலும் ‘பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக… நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக’என்ற பாட்டு கதறிக் கதறி ஓடக்கூடிய அளவுக்கு அதைக் ‘கதைத்துக் கதைத்து’தேய்த்துவிட்டார். வேலிகளும் அவரும் கடுஞ் சிநேகிதம். எங்கள் ஊர் ஒழுங்கைகள் அகலம் குறைந்தவை. இந்த வேலியில் முட்டி அந்த வேலியில் கொஞ்சி கனகுதூகலத்தோடு வெகுநேரமாக வீடுதிரும்பிக்கொண்டிருப்பார். தெருநாய்களுக்கு அவரது பாட்டுப் பிடிப்பதில்லை. அதனால், அவை குரோதத்தோடு எதிர்ப்பாட்டுப் பாடுவது வழக்கம். சிலவேளை அவர் தேய்ந்துபோன ‘ரெகார்ட்’ போல ஒரே பாட்டைத் திருப்பித் திருப்பிப் பாடியது பிடிக்காமலிருந்திருக்கும்.

மணியம் மாமா மிதமாகக் குடித்திருக்கும்போது ஒருமாதிரியும் அதிகமாகக் கவிழ்த்து ஊற்றியிருந்தால் வேறொரு மாதிரியும் நடந்துகொள்வார். அவரது உடலுக்குள் அன்றைக்கு எவ்வளவு சாராயம் ஊற்றப்பட்டிருக்கிறதென்பதைப் பொறுத்து அன்னபாக்கியம் மாமியின் இரவுகள் அமையும். நீங்கள் கனக்க கற்பனை செய்யக்கூடாது. அளவாகக் குடித்திருந்தால் அன்னபாக்கியம் மாமி தெய்வமாகிவிடுவா. ‘நீ என்ரை தெய்வம்’என்பார். ‘நீ இல்லாட்டி நான் எப்பவோ செத்துப்போயிருப்பன்’என்று வாய்கோணி அழுவார். குடிவெறியில் அழும்போது மூக்கு இன்னும் பெரிதாக விடைத்துவிடும். கடைவாயால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ‘சரியப்பா… சாப்பிட்டிட்டுப் படுங்கோ… படுங்கோ…’என்று மாமி எழுபத்தேழாவது தடவையாகச் சொல்வது அந்த இரவில் எங்கள் வீடுவரைக்கும் கேட்கும்.

மணியம் மாமாவைச் சாராயம் குடித்திருக்கும் நாட்களில் அவர் கொம்பேறிமூர்க்கனாகிவிடுவார். வஞ்சகமில்லாமல் அன்னபாக்கியம் மாமியையும் பிசாசாக்கிவிடுவார். ‘எடியேய்….’என்று அழைத்து தூஷணங்களை ‘இந்தா பிடி’என்பதாய் அள்ளிச்சொரிவார்.

“நீ அண்டைக்கு என்ன சொன்னனீ…” திடீரென்று ஞாபகம் வந்தாற்போல கேட்பார்.

“என்ன சொன்னனான்?”-இது மாமி

“என்ன சொன்னனி எண்டதுகூட மறந்துபோச்சோ… அவ்வளவு கொழுப்பாடி உனக்கு”

கடைசிவரையில் மாமி என்ன சொன்னவா என்பதை அவருஞ் சொல்லமாட்டார். மாமியும் கேட்கமாட்டா.

‘இண்டைக்கு என்ன கிழமை?’என்று பதினைந்து தடவையாகிலும் கேட்பார். அப்படிக் கேட்பதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ‘இவர் நாளைக்கு விடிய வேலைக்கு எழும்ப வேண்டிய ஆள்’என்று நிச்சயம் நினைக்கத்தோன்றும். மாமி மூன்று தடவைக்கு மேல் பதில் சொல்ல மாட்டா. அவரது கேள்வி இடுப்பிலிருக்கும் சறத்தைப் போல அனாதையாகக் கிடக்கும். “பொக்கற்றுக்குள்ள அறுபத்தாறு ரூபா முப்பத்தைஞ்சு சதம் இருக்கு”என்பார் கவனமாக. எண்ணிப்பார்த்தால் சரியாகத்தானிருக்கும். அதிலெல்லாம் ஆள் வலுநிதானம்.

மாமா ஊருக்கு வெளியில் தீர்த்தமாடப் போகும் நாட்களில் பெரும்பாலும் அவர் குழந்தையாகிவிடுவார். யாராவது போய்த் தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும். தூக்கிக்கொண்டு வந்து விறாந்தையில் கிடத்தும்வரை கண்ணை மூடிக்கொண்டிருப்பார். தனது விறாந்தைச் சூடு தனியாக அவருக்குத் தெரியும் போலும். கிடத்தியவுடன் கண்ணைத் திறந்து மாமியைப் பார்த்து குழந்தைகளுக்கேயுரிய தெய்வீகப் புன்னகை ஒன்றை வழியவிடுவார். மாமி தனது தலையெழுத்தை நொந்து தலையிலடித்துக்கொள்வா.

அவருக்கு எப்போதோ செத்துப்போன தனது தாயின் ஞாபகம் திடீரென வந்துவிடும். விம்மி விம்மி அழுவார். தங்கச்சிமார் ஞாபகம் பொங்கிப் பொங்கி வரும். ‘உன்னைப் போய்க் கட்டினன் நாயே…நாயே’என்று வீட்டுக்குள்ளேயே காறித்துப்புவார். வாசலில் படுத்திருக்கும் சீசர் நாய்க்குத் தெரியும்… அவர் தன்னைச் சொல்லவில்லையென்று. அதனால், அது மாமியை ஒரு கண்ணை உயர்த்திப் பார்த்துவிட்டுப் பேசாமல் (குரைக்காமல்) படுத்திருக்கும். முப்பது கிலோவுக்கு மேலிருக்கும் சீசரைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுவார். ‘என்னை யாராவது விடுவிக்கமாட்டீர்களா?’என்பதான பரிதாபப் பார்வையோடு சீசர் அவரது மடியில் பொதுக்கென்று அமர்ந்திருக்கும். மாமிக்குத் தன்னை அவர் ‘நாய்’என்று விளிப்பது பிடிக்காது. வாயை வைத்துக்கொண்டிராமல் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிடுவா. பிறகென்ன… மணியம் மாமா கெம்பிக் கிளம்பிவிடுவார். தும்புத்தடியை எடுத்துக்கொண்டு அடிக்க ஓடுவார். பிள்ளைகள் இப்போது அரங்கத்திற்கு வந்தாகவேண்டும். அவர் அடிக்கத் தூக்கிக்கொண்டு போகும் பொருட்களை அவர்கள் வாங்கி வாங்கி ஓரிடத்தில் வைப்பார்கள். இவரும் கொடுத்துக்கொண்டேயிருப்பார். செருப்பு, தும்புத்தடி, கதிரை, கோப்பை, ஈசிச்செயார் தடி இப்படிச் சில ஆயுதங்கள் விறாந்தையில் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும். பாசுபதாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் பிரயோகிக்க மாட்டேன் என்று யாருக்கோ யாரோ சத்தியம் செய்துகொடுத்ததுபோல இரண்டாந் தடவை அவர் அந்தப் பொருட்களை அடிப்பதற்காகப் பிரயோகிக்கமாட்டார். மணியம் மாமா வீட்டு அமளிகளை றேடியோவில் ‘இரவின் முடிவு’ பாடல்களைக் கேட்பதுபோல நாங்கள் கேட்டுக்கொண்டு படுத்திருப்போம். அவர் சன்னதம் முற்றி அந்த இரவில் வீட்டை விட்டு வெளிக்கிட்டு வீதிக்கு ஓடமுயலும் தருணங்களில் மட்டும் எங்களது வீட்டிலிருந்து யாராவது ஒரு ‘ஆம்பிளை’ மணியம் மாமாவைப் பிடித்துவரப் போகும் பிள்ளைகளுக்குத் துணையாக, ‘இந்தாளுக்கு வேறை வேலையில்லை’என்று புறுபுறுத்துக்கொண்டு வெளியே போவார்.

விடிந்ததும், ‘இந்த மனிதரா இரவு இப்படிச் சன்னதமாடியது?’என்று வியக்கும்படியாக முன் விறாந்தையில் அமர்ந்து ஆங்கிலப் புத்தகங்களிலொன்றை ஏந்திப் படித்துக்கொண்டிருப்பார். உண்மையிலேயே அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். ஊரிலுள்ளவர்களுக்கு காசு வாங்காத மொழிபெயர்ப்பாளராகவும் அவரே இருந்துவந்தார். அப்படியான நாட்களில் நாங்கள் பச்சை மிளகாய், வெங்காயம் கேட்டு வேண்டுமென்றே மணியம் மாமா வீட்டுக்குப் போவோம். போர்க்களம் முடிந்த அடுத்தநாள் மாமாவின் முகத்தைப் பார்க்காமல் தேத்தண்ணிக் கோப்பையைக் கொண்டுவந்து டங்கென்று ஓசையெழ வைத்துவிட்டு மாமி விறுக்கென்று போவா. மணியம் மாமா கண்சிமிட்டிக்கொண்டே எங்களிடம் கேட்பார்:

“தேத்தண்ணி ஏன் பிள்ளை இப்பிடிக் கொதிக்குது”

நாங்கள் மாமியைப் பார்த்துச் சிரிப்போம். அவவுக்கும் கொடுப்புக்குள் சிரிப்பு பொத்துக்கொண்டு வருவது தெரியும். எங்களுக்கு மட்டும் தெரியும்படியாக இரகசியமாக ஒரு புன்னகையை வீசுவா. மாமாவின் பக்கம் திரும்பும்போது மட்டும் கெருடன் பார்வையை எறிந்துவிட்டுப் போவா. மணியம் மாமா மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி உடையவர். அது அவ்வப்போது வெளிப்படும். அதிலும் மாமி கோபமாக இருக்கும்போது கிண்டுவதென்றால் அவருக்கு தொதல் சாப்பிடுவதுமாதிரி.

“இந்த மணிக்கூடு இண்டைக்கு ஒரே சத்தமாக் கிடக்கு. பற்றியைக் கழட்டி வைக்கவேணும்”

திருகோணமலையில் இருந்த தனது சொந்தக்காரர் ஒருவரைப் பார்க்கப் போன மாமா சில நாள் கழித்து அம்மன் கோயிலடிக் கிணற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட கதை ஊருக்குள் பிரசித்தம். இரவு நேரம் கிணற்றுக்குள் யாரோ விழுந்த சத்தம் கேட்டு வயலுக்குள் நின்ற சில பெடியள் ஓடிப்போய்ப் பார்த்தார்கள். யாரோ தண்ணீருக்குள் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தது தெரிய குதித்து மீட்டிருக்கிறார்கள். மேலே கொண்டு வந்து பார்த்தால்…. அது மணியம் மாமா.

“மணியத்தார் நீங்கள் திருகோணமலைக்கெல்லோ போனனீங்கள்… திடீரெண்டு கிணத்துக்குள்ளாலை இருந்து வாறியள்?”என்று தூக்கிய பெடியங்களில் ஒருவன் கேட்டிருக்கிறான்.

“திருகோணமலையிலை தொடங்கிற குறுக்கு வழி இஞ்சைதான் வந்து முடியுது”என்று அவர் ஈரம் சொட்டச் சொட்ட நின்ற நிலையில் சொல்லியிருக்கிறார். தூக்கிவிட்ட பெடியங்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டார்களாம்.

“என்ன நடந்தது மாமா?”நாங்கள் கேட்டோம்.

“லேற்றாத்தான் பஸ் கிடைச்சுது. வழியிலை இறங்கித் ‘தேத்தண்ணி’குடிச்சனான். சந்தியிலை இறங்கி குறுக்குவழியாலை வீட்டை போவமெண்டு வந்தால் இருந்தாப்போலை ‘பாக்’தோளிலை கொழுவினபடி இருக்க தண்ணிக்குள்ளை போய்க்கொண்டிருக்கிறன். இருட்டு.. வழியிலை கொஞ்சம் மாட்டி வேற போட்டன்… அறுவார் கிணத்துக்கு கட்டும் கட்டேல்லைப் பிள்ளை”

“மாமியைக் காதலிச்சா கலியாணம் கட்டினனீங்கள்?”ஒருநாள் கேட்டுவைத்தோம்.

“அதையேன் கேக்கிறாய் பிள்ளை…”என்று ஆரம்பித்து கதைகதையாகச் சொன்னார்.

“நான் ஒருநாள் இரவு இவையின்ரை வீட்டு ஓட்டைப் பிரிச்சு இவ படுத்திருந்த அறைக்குள்ளை இறங்கீட்டனெல்லோ…” சாகசம் செய்துவிட்ட பெருமிதம் விழிகளில் மிளிரச் சொன்னார்.

“மாமி பயந்துபோய்க் கத்தேல்லையா?”

“அவவேன் கத்திறா… சத்தம் போடப் போன தங்கச்சியாரையும் ‘அது கொத்தானடி’எண்டு சொல்லி அடக்கின ஆளெல்லோ”

மாமியின் சுருக்கம் விழுந்த முகத்தில் அப்படியொரு வெட்கம் வந்துவிடும். முகம் கனிந்த பழம் போலாகிவிடும். அத்தகைய பொன் பொழுதுகளில் மாமியைப் பார்க்கும் மாமாவின் கண்களில் காதலானது ‘பென்சன்’ நாளன்றைய சாராயம்போல பெருக்கெடுத்தோடும். அந்த வயதான காலத்திலும் அவர்கள் ஒருவர் மீதொருவர் அவ்வளவு காதலோடிருந்தார்கள். மாமா அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டுச் சாப்பிடாமல் படுக்கும் நாட்களில் மாமி அவருக்கு அருகில் அமர்ந்திருந்து பச்சை முட்டையை உடைத்து உடைத்து மாமாவின் வாயில் ஊற்றிக்கொண்டிருப்பாவாம்… கடைவாயால் முட்டை வழிய அவர் அடுத்த நாளுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பாராம் என்று அவர்களது பிள்ளைகள் சிரித்தபடி சொல்வார்கள்.

இழந்துபோனோம். எல்லாவற்றையும்… எல்லோரையும்… ஞாபகங்கள் மட்டுந்தான் மிச்சம்.

பெயர்ந்து பெயர்ந்து பெயர்ந்து இடைத்தங்கிய ஊரொன்றின் வீட்டில், கண்ணிக்குத் தப்பி விதை பொறுக்கும் பறவையென இரகசியமாகப் போய் நிற்கும் நாட்களில் இரவுகளில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்கும். இராணுவம் ரோந்து போவது மனக்கண்ணில் தெரியும். மணியம் மாமா நினைவில் வருவார். இருளடர்ந்த வீதிகளில் அவரது சைக்கிள் அந்த வேலிக்கும் இந்த வேலிக்குமாக உலாஞ்சுகிற காட்சி விரியும். கதைப்பதுபோல கரகரத்த குரலில் அவர் பாடுவது கேட்கும்.

“பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக
பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக”

பல்லாக்குகளெல்லாம் பாடையில் போகுமென்று யார் கண்டது?


ஈழநேசனுக்காக எழுதியது…

நன்றி:eelanesan.com


22 comments:

இரவி சங்கர் said...

///“என்ன சொன்னனி எண்டதுகூட மறந்துபோச்சோ… அவ்வளவு கொழுப்பாடி உனக்கு”///

சரியான ஆள்! அருமையான பதிவு அவரைப் போலவே. பல நேரங்களில் குடித்தவர்கள் மிகவும் சரியாக இருப்பார்கள்.

மணியன் மாமா இப்போ எங்கே இருக்கார்?

vanathy said...

அருமை! பாராட்டுக்கள் ,தமிழ்நதி!

யாழ்ப்பாண மண்ணின் வாசனையை திரும்பவும் நுகர்ந்த மாதிரி இருக்கிறது உங்கள் நகைச்சுவை உணர்வையும் ரசித்தேன் அதே சமயம் படித்து முடிந்தவுடன் மனதில் ஒரு சோகம் இழையோடுகிறது .பல ஆயிரம் ஆண்டுகள் எமது மூதாதையர் வாழ்ந்த, எங்கள் ஆன்மாவில் பின்னிப் பிணைந்த அந்த மண்ணை இழந்துவிடுவோமோ என்ற பரிதவிப்பும் வேதனையும் எழுகிறது.

---வானதி

Sai Ram said...

உங்களது எழுத்தில் ஒளிந்திருக்கிறது ஒரு வித்தை. அது படிப்பவர்களை அதனோடு இழுத்து கொண்டு போகிறது. சுவாரஸ்யத்தினை தாண்டி சொல்ல வந்த உணர்வினை சரியாக 'பாஸ்' செய்யும் நேர்த்தி நன்று. வாழ்த்துகள்.

soorya said...

தோழிக்கு,
நான் முன்பு எழுதிய மண்மனம் என்கிற தொடர் நாவலில்(அது இன்னும் முடியவில்லை)ஒரு அத்தியாயம்..குடிகாரச் சோமண்ணையின் அத்தியாயம். மணியம் மாமா மாதிரியே அதுவும் இருக்கும். நான் எழுதிய இறுதி வரிகள்.
...இந்த மண்ணுக்கு ஒரு வாசம் இருக்குமென்றால், அதில் சோமண்ணை குடிச்சிட்டு எடுத்த சத்தியின் வாசமும் இருக்கும், ஏனெனில் அது சத்தியத்தின் வாசனை..!
நன்றி.
வாழ்த்துகள்.

Unknown said...

i feel this story.. super...

விஷ்ணுபுரம் சரவணன் said...

கண்ணகன் சொல்ல நான் தட்டச்சு செய்தது...

அலைந்துழலவின் நிமித்தம் எம் இனம் இழந்துபோன எத்தனையோ விழுமியங்களூடான வருத்தங்களின் பதிவாய் தமிழ்நதி உங்களின் புனைவை வாசித்தழ நேர்ந்தது. உங்களின் மொழிக்குள் கைகூடி இருக்கிற பகடியையும் மீறி ஏதோ ஓர் இனம் புரியாத துயரம் என் வாழ்வின் இருப்பை துயருக்குள்ளாக்குகிறது.

ஈழத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் போர் நிமித்தம் தொலைந்துபோன வாழ்வின் அளவலாவிய துயரங்களின் வெறும் பிம்பமாக மாத்திரமே பங்கு கொள்ள வாய்த்திருக்கிற என் போதாமையை எண்ணி வெட்கி குனிகிறேன். உங்களின் மொழிக்குள் தங்குதடையின்றி பிரவாகிக்கிற மண்மணத்தை உணரும் தருணம் தோறும் தமிழீழத்தின் நிலவெளியை முத்தமிடுகிற பேர்உவகையை கற்பிதமாகவேனும் எனக்குள் கனவு கண்டு கொள்கிறேன்.
தாயே... நிச்சயம் தமிழீழம் வெல்வோம் என்கிற நம்பிக்கையையும் மீறி உன் படைப்புகள் எம் விடுதலையை உலகுக்கு உரத்து அறிவித்துக்கொண்டே இருக்கட்டும்.

கண்ணகன்
குடந்தை.

selventhiran said...

தமிழ், வழியெங்கும் எனக்கான புன்னகையை வைத்திருந்தீர்கள். சிரித்துக்கொண்டே நாலு கால் பாய்ச்சலில் வாசித்து வந்தவனை கடைசி பத்தியில் திணற வைத்துவிட்டீர்கள்.

நகைச்சுவையில் இப்படி அடி பின்னுவீர்கள் என்பது இத்தனை நாள் தெரியாமல் போச்சே...

Anonymous said...

தமிழ்நதி,
மிகவும் அருமையான பதிவு.
மண்ணின் மணம் கமழ்கின்றது. பாராட்டுக்கள்.
தோழமையுடன்,
வண்ணையூரான்

SS JAYAMOHAN said...

வணக்கம் தமிழ்நதி,

உங்கள் எண்ணத்தில்
கலந்த மனித நேயமும்,
தாய் மண் பாசமும்
உங்களின் எழுத்துக்களில்
அழகாய் பிரதிபலிக்கிறது.

எஸ். எஸ். ஜெயமோகன்

தமிழ் அஞ்சல் said...

வட்டார வழக்கு நடை , நெடி கூட்டுகிறது...பாராட்டுக்கள்!

prasanna said...

என்ன சொல்ல... மீண்டும் ஒரு பெருமூச்சு...

மண்ணின் மணம் கமழ்கின்றது வாழ்த்துகள்...

Anonymous said...

naan paditha varai pen kavikalidam arithaka kaana padukira 'ankatham' unkaluku mika iyalpaaka varukirathu. ankatham mika kavanamaka kai aala pada vandiya ondru.athai thaankal perumpaalum sariyaaka payan
paduthukeerkal.patthyin mukkal pakuthi varai peruki varum ankathamea kadaiysi naanku variku avvalavu soka uruvai kodukkirathu.... mattra pen kaikaluku payantha oru peayar ili..

Unknown said...

///நகைச்சுவையில் இப்படி அடி பின்னுவீர்கள் என்பது இத்தனை நாள் தெரியாமல் போச்சே...//
செல்வேந்திரன். அந்த உணர்வுதான் சிலபல துயரங்களைக் கடந்து எங்களை இன்றுவரை வாழவைத்திருக்கிறது. எங்களவரிடம் இருக்கும் அபாரமான அந்த நகைச்சுவை உணர்வை எங்கள் மீது படர்ந்த துக்கத்தின் மேகம் மறைத்துவிட்டாலும், அடிக்கடி வெளிவரும் இப்படியாக..

அக்காவுக்கு... கதை நல்லாயிருக்கு. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மணியம் மாமா..ம்ம். (அது www.eelanation.com என்று நினைக்கிறேன். கொஞ்சம் சரிபாருங்கள்)

நேசமித்ரன் said...

அடேயப்பா என்ன ஒரு அங்கதம் வெகு இயல்பாக துருத்தல் இல்லாத வர்ணிப்பு
அதில் இழைகிற காதல் அந்த மனிதன் மீதான நேசம் அந்த பருவத்திற்கே உரிய குறுகுறுப்பு .இறுதியாய் இழப்பின் சுவடு வேலிகள் மீது கானல் நீரில் குழைத்த வர்ணம் பூசிய சைக்கிளை நினைவில் மட்டும்

ஒரு மொழியை காதலிப்பவர்களால் மட்டுமே இவ்வளவு அழகாய் எழுத முடியும் என்றுத் தோன்றுகிறது

கவிதைத் தொகுப்பு எப்போது வெளி வருகிறது சகோதரி ?

தமிழன்-கறுப்பி... said...

நெருக்கமான நினைவுகள்...

தமிழன்-கறுப்பி... said...

ஒவ்வொரு ஊரின் மணியம் மாமாக்களை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்த பகிர்வு ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் மணியன் மாமா என் மாமாவையும் நினைவுக்கு கொண்டு வரச் செய்தார்.

நிறைய இடங்கள் நிகழ்வையும் மறந்து சிரிக்க செய்தன

எள்ளல் நடை. முடிவு வழமை போலவே வலி. ம்ஹூம்

Ayyanar Viswanath said...

தமிழ்

ஒரே மூச்சில் வாசிக்க வைத்தது. குடிகாரர்கள் மிகவும் அன்பானவர்கள் :)

அகநாழிகை said...

தமிழ்நதி,
நகைச்சுவையாக எழுதுவது சற்றே பிறழ்ந்தாலும் வெற்றெழுத்தாகி விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த பதிவின் ஆரம்பம் முதல் எழுத்து நடையின் சுவாரசியம் அருமையாக உள்ளது. அங்கத நடையில் பிரவாகமாக எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன். வாழ்த்துக்கள்.

- பொன்.வாசுதேவன்

Anonymous said...

கவிதையால் மட்டுமே தங்களை அதிகம் அறிந்திருந்தவனுக்கு .. என்ன சொல்ல .. அருமை!

ஓசை செல்லா

Aba said...

அண்ணே... உங்க எழுத்து நடை பிராமாதமா இருக்குது... நல்ல பதிவு.. கீப் இட் அப்!

//“தேத்தண்ணி ஏன் பிள்ளை இப்பிடிக் கொதிக்குது”//

//காதலானது ‘பென்சன்’ நாளன்றைய சாராயம்போல பெருக்கெடுத்தோடும்.//

//சத்தம் போடப் போன தங்கச்சியாரையும் ‘அது கொத்தானடி’எண்டு சொல்லி அடக்கின ஆளெல்லோ”//

//வேலிகளும் அவரும் கடுஞ் சிநேகிதம்.//

//தெய்வீகப் புன்னகை ஒன்றை வழியவிடுவார். மாமி தனது தலையெழுத்தை நொந்து தலையிலடித்துக்கொள்வா.//

// சீசர் நாய்க்குத் தெரியும்… அவர் தன்னைச் சொல்லவில்லையென்று.//

//அவர்கள் வாங்கி வாங்கி ஓரிடத்தில் வைப்பார்கள். இவரும் கொடுத்துக்கொண்டேயிருப்பார்.//

//இரண்டாந் தடவை அவர் அந்தப் பொருட்களை அடிப்பதற்காகப் பிரயோகிக்கமாட்டார்.//

ரசித்தேன்! சிரித்தேன்... முடியலப்பா...

தமிழ்நதி said...

நான் இவ்வளவு நாட்களும் பல நண்பர்களுக்குப் பதிலளிக்காமல் இருந்திருக்கிறேன் போல... மன்னிக்கவும்.

நன்றி கரிகாலன்.

"அண்ணே... உங்க எழுத்து நடை பிராமாதமா இருக்குது... நல்ல பதிவு.. கீப் இட் அப்!"

நான் 'அண்ணே'இல்லைங்க. 'அக்கா':) அரசியல், நகைச்சுவை எல்லாம் அண்ணேங்கதான் எழுதுவாங்களாக்கும்.