4.07.2010

நளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....





கீற்று.காம் இனால் ஒழுங்கமைக்கப்பட்ட ‘நளினி விடுதலை :அரசியல் சிக்கலும் சட்டச் சிக்கலும்’ என்ற கூட்டத்திற்கு அண்மையில் போக வாய்த்தது. கவிஞர் தாமரை, பத்திரிகையாளர் அருள்எழிலன், எழுத்தாளர் பூங்குழலி, விடுதலை ராசேந்திரன்(பொதுச்செயலாளர், பெரியார் திராவிடக் கழகம்) தியாகு (பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆகியோர் உரையாற்றினார்கள். அன்று அவர்கள் ஆற்றிய உரைகள் கீற்று.காம் இல் வாசிக்கக்கிடைக்கின்றன. அதனால் அதைப் பிரதி பண்ணவேண்டியதில்லை.

அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது, அவர்களெல்லோரும் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, ‘சுதந்திரம்’என்ற சொல் அர்த்தமிழந்து வெற்றுச்சொல்லாக உலவிக்கொண்டிருப்பதை நிதர்சனமாக உணரமுடிந்தது. முடியாட்சி கலைக்கப்பட்டு ஜனநாயகம் நடைமுறையிலிருப்பதாக நாமனைவரும் நெஞ்சறியப் பொய்யுரைத்துக்கொண்டிருக்கிறோம். ‘சுதந்திரம்’ என்ற சொல்லைக் கூச்சமின்றிப் பிரயோகித்துக்கொண்டிருக்கிறோம். அதிகாரம் என்ற கத்தி நமது தலைக்குமேலே நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்க, புரட்சி பற்றிய கதைகளை சன்னமான குரலில் அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கிறோம்.

நாம் அரசுகளுக்கு அஞ்சுகிறோம். சிறையிருளை அஞ்சுகிறோம். அதனுள் நிகழும் சித்திரவதைகளுக்கு அஞ்சுகிறோம். சிறைக்கூட சித்திரவதைப் படல முன்னுதாரணங்கள் நமது நாக்குகளுக்கு விலங்கிட்டிருக்கின்றன. துப்பாக்கிகளும் காக்கிச் சட்டைகளும் என்றுமே எமது நேசத்திற்குரியதாக இருந்ததில்லை. ‘பாதுகாவலர்கள்’என்று சொல்லப்படுபவர்களைப் பார்க்குந்தோறும் நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது எதனால்? அவர்களைக் குறித்த அசூசையின் நதிமூலம் யாது? அரசியந்திரத்தின் அதிகாரிகள் என்பவர்கள் பெரும்பாலும் அரச விசுவாசிகளாக இருக்கிறார்களேயன்றி, மக்கள் நலனைக் குறித்து அக்கறை கொண்டுள்ளவர்களாகத் தோன்றுவதில்லை.
உண்மையில் அரசுகள் நமது பாதுகாவலர்களாகத் தொழிற்படுவதான பாவனையைக் காட்டிக்கொண்டே நம்மை நசுக்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு பூவைக் கொடுத்துவிட்டு பூந்தோட்டத்தையே உரிமைகொள்வதைப்போன்ற கவித்துவத்தோடு அந்தக் கவர்தல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

வாக்குரிமை என்பது அதிகாரங்களால் சாம,பேத,தான,தண்டங்களைப் பயன்படுத்தி வாங்கப்படக்கூடிய உரிமையாகிவிட்டது. ஒரு தனிப்பட்ட நபரின் விருப்புவெறுப்புகள் ஒரு கட்சியின் விருப்புவெறுப்புகளாக மாற்றப்பட்டு அது மக்களுள் பலவந்தமாகவோ பணத்தின் வழியாகவோ தேசியப் பாசாங்குகளாலோ திணிக்கப்படுகிறது. ஒரு கோசம் நமது கண்ணீரைக் கறந்துவிடுகிறது. ஒரு பெயரை விசுவசிக்க நாங்கள் தூண்டப்படுகிறோம். உரத்த உணர்ச்சிவசப்பட்ட குரலில் முழங்கப்படும் உரைகள் நம்மைத் தரையில் வீழ்த்திவிடுகின்றன. நாங்கள் உண்மையில் அரசாங்கத்தின் மூளையால் சிந்திக்கத் தூண்டப்படுகிறோம். ஊடகங்கள் அரசுகளின் கைகளில் இருக்கும்போது அது வெகுசுலபமாக நிறைவேறிவிடுகிறது. அரசுகள் மக்கள் சுயமாகச் சிந்திப்பதை விரும்புவதில்லை. அரச மூளையால் சிந்திக்க மறுப்பவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

தனிமனிதனொருவன் கொலையொன்றினைச் செய்வானாயின் அரசியந்திரத்தின் பல்வேறு கூறுகளும் இணைந்து அவனுக்கு ஆயுட்தண்டனையோ தூக்குத்தண்டனையோ வழங்கி,சட்டம்-ஒழுங்கினைக் காப்பாற்றுகின்றன. அதே வன்முறையை வலுக்குன்றிய சிறுபான்மை இனங்கள்மீது வலுவார்ந்த அரசுகள் கட்டவிழ்த்துவிடும்போது அது பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற புனிதத்தன்மையடைந்துவிடுகிறது. அத்தகைய கூட்டுப்படுகொலைகளுக்கோ பாலியல் வன்கொடுமைகளுக்கோ தண்டனையளிப்பார் யாருமில்லை. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஊக்குவித்தவர்களும்கூட ‘அரசதிகார அறங்களின்படி’ அதியுத்தமர்களாகவே அறிவிக்கப்படுகிறார்கள். சட்டம் - ஒழுங்கு என்ற வார்த்தைகள் ஆட்களுக்கேற்றபடி பச்சோந்தித்தனமாக நிறம்மாறுவது இப்படித்தான்.

ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’யில் அரச பயங்கரவாதத்தின் நிர்வாணம் கொடூரமாக வெளிப்பட்டிருக்கிறது. வன்னி முள்ளிவாய்க்காலிலிருந்து தப்பியோடி வந்த மக்களிடம் அதையொத்த ஆயிரமாயிரம் கதைகள் இருக்கும். விடுதலைப் புலிகளின் ‘வீழ்ச்சி’யின் பின்னால் சில எழுத்தாளர்கள் செய்துவருவதுபோல முதுகுசொறிவதற்காக மட்டும் எழுதுகோலைப் பயன்படுத்தாத உண்மையாளர்கள் சிலர் எஞ்சியிருந்து, அவர்களது உயிருக்கு உத்தரவாதம் எதிர்காலத்தில் வழங்கப்படுமாயின், அந்தக் கடைசி நாட்களில் அரசபயங்கரவாதப் பூதம் அந்த எளிய மக்களை எப்படிச் சாவை நோக்கி அழைத்துப்போனது என்ற விபரங்கள் வெளிவரக்கூடும்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினி கொடியதும் நெடியதுமான பத்தொன்பது ஆண்டுகளாகச் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய விடுதலைக்காக கவிஞர் தாமரை இரண்டாண்டுகளுக்கு முன் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி, அதைக் கலைஞர்வரை கொண்டு சென்றிருக்கிறார். ‘நளினியை விடுதலை செய்யவேண்டும்’என்று கையெழுத்திட்டவர்களில் கவிஞர்களான தமிழச்சி,சல்மா,கனிமொழி,வைரமுத்து,பா.விஜய் இவர்களும் உள்ளடக்கம். “கலைஞரை அணுகுவதைக்காட்டிலும் நீங்கள் இந்த விடயத்திற்காக மத்திய அரசை அணுகலாமே”என்று கனிமொழி அப்போது தாமரைக்குப் பரிந்துரைத்திருக்கிறார். விடுதலை இராசேந்திரன் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், தந்தை குறித்த கவிஞர் கனிமொழியின் முன்னனுமானத்தை புறந்தள்ளி, நன்மையே விளையுமென்ற எதிர்பார்ப்போடு கவிஞர் தாமரை, கலைஞரை அணுகியிருக்கிறார். அப்போது மதிப்பிற்குரிய தமிழினத்தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அளித்த வாக்குறுதியை கீற்று.காம் நடத்திய கூட்டத்திலே தாமரை நினைவுகூர்ந்தார்.

“நளினியை விடுதலை செய்வதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை. அவ்விடயம் சோனியா அவர்கள் (மத்திய அரசு) சம்பந்தப்பட்டது. அவர்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நளினியை விடுதலை செய்வதில் எனக்கும் ஆட்சேபணை இல்லை.”

தாமரையை அடுத்து கூட்டத்தில் பேசிய விடுதலை ராசேந்திரன் கலைஞரது வாசகங்களின் உள்ளர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு இப்படிச் சொல்கிறார்.

“கலைஞருடைய அறிவுரைக்கழகம் டெல்லியில்தான் இருக்கிறது என்பதை, கனிமொழி மிகச்சரியாக அறிந்துவைத்திருக்கிறார். அதை, கவிஞர் தாமரைதான் அறிந்துகொள்ளவில்லை.”

நளினி விடுதலை விவகாரத்தில் சுப்பிரமணியசுவாமியுடைய வார்த்தையான ‘தேசத்திற்கு எதிரான குற்றம்’என்ற வார்த்தையை தமிழக அரசு தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவதாக தாமரை குற்றஞ்சாட்டினார். நளினியை விடுதலை செய்யக்கூடாது என்பது தமிழக அரசின் முன்முடிவு என்கிறார்.

மத்திய அரசு நீதிபதியிடம் கேட்டால், “இது மாநில அரசால் கையாளப்படவேண்டியது”என்கிறாராம்.

ஆக, நளினியின் விடுதலை என்பது மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக இருந்தும் அவரை விடுதலை செய்ய தமிழக அரசால் ‘நியமிக்கப்பட்ட’ சிறைத்துறை ஆலோசனைக் குழு எட்டுக் காரணங்கள் சொல்லி அவரது விடுதலையைப் ‘பரிந்துரைக்கவில்லை’என்றிருக்கிறது. அந்தக் காரணங்களை தமிழக அரசம் ஏற்றிருக்கிறதாம்! ‘நீ ஆமாம் போட்டால் நான் இல்லையென்றா சொல்வேன்?’ அன்று கூட்டத்தில் பேசிய அனைவரும் அந்த எட்டுக் காரணங்களையும் ‘காமெடிக் காரணங்கள்’என்றே குறிப்பிட்டார்கள். அந்தக் காரணங்கள் கீழ்வருமாறு:

1.நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்யும் திட்டம் ஏற்கெனவே நளினிக்குத் தெரிந்திருக்கிறது.

(இவ்வழக்கில் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட நளினியின் சகோதரன் பாக்கியநாதன் தனது வாக்குமூலத்தில் ‘சிறீபெரும்புதூர் கூட்டத்திற்குச் செல்லும்வரை தனது சகோதரி நளினி ராஜீவ் கொலைமுயற்சி பற்றி அறிந்திருக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். )

2.நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.)

(தாமரை கேட்கிறார்: “இதை ஒரு காரணமாகக் கூறுகிறார்களே… அப்படியானால், குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டிருந்தால் விடுதலை செய்திருப்பார்களா?”)

3.நளினியின் தாய், சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்து தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே சிறையில் இருந்ததைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.

(சிறையில் இருந்தவர்கள் விடுதலையானபோதிலும் குற்றவாளிகளே என்று இதற்குப் பொருள்கொள்ளலாமா? அவர்கள் திருந்தி -குற்றம் இழைத்திருந்தால்- வாழ்வதற்கான வாய்ப்பு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுமொன்றில் வழங்கப்படலாகாதா?)

4.நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது வி.ஐ.பி.க்கள் வசிக்கும் இடம். அமெரிக்கத் தூதரகம் போன்ற முக்கியமான அலுவலகங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.

(இம்மாநகரத்தில், இம்மாநிலத்தில் கங்கை அம்மன் தெருவொன்றுதான் இருக்கிறதா? பத்தொன்பதாண்டுகள் சிறையில் இருந்து தனது வாழ்வைத் தனிமையிலும் வெறுமையிலும் கரைத்த ஒரு பெண்ணால், சிறையில் பிறந்த தனது ஒரே குழந்தைக்குத் தாயாக மட்டுமே இருக்கவிரும்புவதாக அரசிடம் இறைஞ்சும் ஒரு பெண்ணால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடுமாம். ஐயகோ! குற்றங்களேதுமற்ற புனித நகரமே!)

கூட்டத்தில் பேசிய அருள் எழிலன் கேட்கிறார்:

“நளினியை விடுதலை செய்தால் மவுண்ட் றோட் பற்றி எரிந்துவிடுமா என்ன?”

5.ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது.

(தாயாக இருப்பதற்கு பரிந்துரை தேவையில்லை. பரிவு மட்டுமே போதுமானது.)

6. 18 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பதற்காக முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்பதையும் ஏற்கமுடியாது.

(நளினியின் தண்டனைக்காலம் என்பது முடிவிலியாக நீண்டுகொண்டே இருக்கிறது. அது ஆட்சியாளர்களின் மனநிலைக்கேற்ப நீடிக்கும்.)

7.இதற்கு முன்னால் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால், முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது.

(??????)

8.அவரைப் பரிசோதித்த மனநல மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை.

(‘உறுதியாக’என்ற சொல்லை அவதானியுங்கள். மேலும், மனநல மருத்துவரும் இவ்வகையான வழக்குகளில் அரசின் விருப்புவெறுப்புகளுக்குக் கட்டுப்பட்டவரே.)

நாங்கள் வயிறுபுடைக்க நன்றாகச் சாப்பிடவேண்டும். கழிப்பறை உபாதைகளை நாங்கள் விரும்புவதில்லை. எங்கள் உறக்கத்திற்குப் பங்கம் நேர்வதையும் பொறுப்பதற்கில்லை. அரசாங்கம் வழங்கும் செய்திகளை, அரசாங்கம் வழங்கிய தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். அரசின் உதடுகளால் பேசுகிற ஊடக நிறுவனங்களால் எடுக்கப்படும் - அதிமானுடர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட திரைப்படங்களைப் பார்ப்பதனோடு நிறைவடைந்து படுக்கைக்குச் செல்கிறோம். எப்போதும் எவராவது ஆடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி ‘சானல்’கள் எங்கள் உயிர்நிலைகளோடு தொடர்புடையவை என்பதையும் மறப்பதற்கில்லை. அவற்றை எங்களிடமிருந்து பிடுங்கிவிட்டால் நாங்கள் பைத்தியங்களாக வீதிகளில் சுற்றியலையவும் சாத்தியங்களுண்டு.

நளினி என்பவர் பத்தொன்பது ஆண்டுகளாக சிறையிருப்பதைக் குறித்து நமக்கு யாதொன்றுமில்லை. அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது; சிறையில் பிறந்த அந்தக் குழந்தை இப்போது வெளிநாட்டில் வாழ்கிறது. அதற்குத் தன் தாயை வந்து பார்த்துச் செல்ல ‘விசா’அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்ற செய்திகளெல்லாம் நமது அன்றாட வாழ்வை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை.

ஏனெனில், நாங்கள் மாநகரில் கதவடைத்து வாழும் தனிமனிதப்புழுக்கள்!

ஊடகங்களால் நஞ்சூட்டப்பட மறுக்கிறவர்களும் யாதொன்றும் செய்வதற்கில்லை. உயிர் அமிழ்து! அரசு பற்றிய தமது அதிருப்திகளை, கருத்துக்களை, விமர்சனங்களை வெளியில் கொட்டுவதற்கு வழியற்றவர்கள், அவற்றைத் தமது குடல்களில் அடக்கிவைத்து கழிப்பறைகளில் வெளியேற்றுவதே உயிர்த்திருக்கவும் வெளியுலாவவும் ஒரே வழி.

அதிகாரத்தின் ‘ஆக்டோபஸ்’கரங்கள் எமது அசிரத்தையான அன்றாட வாழ்வை நோக்கி நீளும்போது, எவ்வளவோ கவனமாக இருந்தும்கூட நம்மையறியாமல் சிந்திவிட்ட ஒரு கருத்துத் துளிக்காக நமது வீடு ஒருநாள் துப்பாக்கிகளால் சுற்றிவளைக்கப்படும்போது, சமூக அறிவும் அக்கறையுமற்ற மொண்ணையர்களாக நாம் ‘வாழும் வாழ்வை’ப் பார்த்து ஏனையோர் எள்ளிநகையாடும் நாள் வரும்போது, அதிகாரங்களை நோக்கி எறிந்திருக்கவேண்டிய கேள்விகளை நமதுடலுக்குள்ளேயே பதுக்கிவைத்த முடைநாற்றம் நமக்கே தாங்கமுடியாமல் போகும்போது… நாம் என்ன செய்யப் போகிறோம்?

அஃதொன்றும் அத்தனை சிரமமானதில்லை.

‘உலகத்தமிழ் செம்மொழி மாநாடு’ போன்ற அனஸ்தீஸியாக்கள் வழியாக மக்களை ‘நினைவிழக்க’ச் செய்வதெப்படி என்பதை அரசுகள் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கின்றன.

32 comments:

தமிழ்நதி said...

எனது இந்தப் பதிவு தெளிவாகத் தெரியவில்லையா என்பதைத் தயவுசெய்து யாராவது சொல்லுங்கள். எனது வலைப்பூவில் ஏதோ பிரச்சனை இருக்கிறது.

Anonymous said...

Hi Thamilnathy,

This character ">" appears through out your post.

Sorry to type in English.

- Kiri

கபீஷ் said...

> இந்த Symbol நிறைய இடத்தில் வருகிறது

நேசமித்ரன் said...

தெளிவாகத் தெரிகிறது பதிவும்
உலகத்தமிழர்களின் “இனமான(?)த் தலைவரின் கயமையும் அரசியல் சூதாட்டத்தில் ஆயுள்தண்டனையினை அனுபவித்த பின்னும் வருடங்கள் கூடும் என்பதும் மனித உரிமைக் கழகத்தின் ஏடுகளில் குழந்தைக்கு தாயாக இருப்பதன் சட்ட சிக்கல்கள் எல்லாமும்

தமிழ்நதி said...

இப்போது தெளிவாகத் தெரிகிறதென்று நினைக்கிறேன். எனது இந்தப் பின்னூட்டத்தின் பிறகு படிப்பவர்களுக்கும் தெளிவாகத் தெரியவில்லையென்றால் இனி இணைய ஆண்டவர் விட்ட வழி:)

இதைப் படிக்காமல் விடுவதனால் நீங்கள் ஒன்றும் இழக்கப்போவதில்லை நண்பர்களே:)

Bibiliobibuli said...

தமிழ்நதி,

உங்கள் பதிவும் தெளிவாகத் தெரிகிறது. நளினியின் விதியும் தெளிவாகவே புரிகிறது. எவ்வளவோ பேசுகிறோம், எழுதுகிறோம்.மொழி தான் தீர்ந்து போகிறது. ஈழத்தமிழனின் மனமும், வாழ்க்கையும், வலியும் தீராமலேயே செக்குமாட்டுத்தனமாய் ஒரே இடத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கிறது.

அண்மைக்காலங்களில் "சுதந்திரம்" என்ற வார்த்தையை கேட்டவுடன் எனக்கேனோ இந்த பாடல் நெஞ்சை அறுக்கிறது. நீங்களும் அனேகமாக கனடாவில் கேட்டிருப்பீர்கள்.

http://www.youtube.com/watch?v=KhXOKUBGSRw&feature=fvw

Knaan's Wavin' Flag. If you have time, please watch it.

Dr.Rudhran said...

all commas are showing as > but that does not alter the context nor interfere with the flow of expression

Bala said...

அக்கா உங்களின் இந்த பதிவு தெளிவாக இருக்கிறது.

Dhanaraj said...

"நாங்கள் மாநகரில் கதவடைத்து வாழும் தனிமனிதப்புழுக்கள்!"


Hard hitting words. BUT that is reality today. Reality is mostly awkward. We are really selfish worms. Who bothers whether Nalini is released or not.

Long live our mentality.
And let the degeneration be quick.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தமிழ்..

சக மனிதனின் வலியை ரசிக்க இச்சமுகம் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது. குடும்ப அமைப்பிலில் செலுத்திய எளியவர்கள் மீதான வன்முறை அல்லது வன்முறை செலுத்துவதற்காக எளிமையானவர்களை உருவாக்கிவிடுவதும் என்கிற வித்தையை இவ்வரச அதிகாரம் சமூக சூழலில் பரப்பிவிட்டிருக்கிறது.

ஒரு சிக்க‌லில் ம‌க்க‌ள் என்ன‌ நினைக்கின்ற‌ன‌ர் என்ப‌தை ப‌ற்றி இவ்வ‌ர‌சு இய‌ந்திர‌ம் க‌வ‌லை ப‌டுவ‌தற்கான‌ எந்த‌ அறிகுறியும் தென்ப‌டாத‌த‌ற்கு என்ன் கார‌ண‌மென்றால்..
அவர்களின் அதிகாரத்தை கேள்வி கேட்காத அடிமை மனநிலையை உருவாக்கிவிட்டது. இவர்கள் ஒரு சிக்கலில் அரசு என்ன முடிவெடுக்கிறது என தொலைக்காட்சியின் முன் இத்தமிழ் சமூகம் உட்கார்ந்து பார்த்து அறிந்துக்கொள்ளவே ஆசைப்படுகிறது.


இந்த‌ ம‌ன‌நிலையின் அடிப்ப‌டையை தொட‌ர்ந்து த‌க்க‌வைத்துக்கொள்வ‌த‌ற்கான‌ முய‌ற்சிக‌ளின் வெளிப்பாட்டில்தான் நிக‌ழ்கின்ற‌ன‌.. இல‌வ‌ச‌ங்க‌ளும், ப‌ட்ட‌ப‌க‌லில், பொதும‌க்க‌ள் கூடும் இட‌ங்க‌ளில் ப‌டுகொலைக‌ளும்...

இந்த‌ பின்புல‌த்தோடு ந‌ளினி விச‌ய‌த்தை பார்க்கும்போது ந‌ளினி விடுத‌லை குறித்து நாம் என்ன‌ நினைக்கிறோம் என‌ ம‌க்க‌ள் நினைக்க‌வில்லை,. த‌ன் க‌ட்சி த‌ன் அர‌சு த‌ன் த‌லை என்ன‌ முடிவெடுக்கிறார் என்றே பிரித்துப்பார்க்கும் ம‌ன‌நிலை வாய்க்க‌ப்ப‌ட்டு விட்டான். த‌னி ம‌னித‌ன் சிறையிருளை ப‌ற்றி க‌வ‌லை கொண்டிருக்கிறான் என‌ அவ‌ன் மீது ஆத‌ங்கம் ப‌டுவ‌தை விட‌வும் இன‌த்தின் விடுத‌லை பேரால் இய‌க்க‌ம் க‌ட்டி முழ‌ங்குப‌வ‌ர்க‌ளின் த‌டை விதிக்க‌ப்ப‌டுமோ எனும் பேர‌ச்ச‌ம் ந‌ம‌க்கு விள‌ங்கிக்கொள்ள‌வே முடிய‌வில்லை.

subagunarajan said...

your posting and position is clear but the "unfortunate"option is to be an indian tamil.Every moment of this oppurtunistic living is a humiliation and height of it is the response posted in Enlish.We can be comfortable with Subramaniyasamis not with the rest of the lot.Wanting to be a mother to her child is being denied by the MOTHER INCARNATE .The irony behind the episode is that her death sentence was reduced to LIFE only to enhance the severity by allowing her rot in that HELL clinging to a hope to get away oneday.

senthil said...

நாங்கள் இந்த பதிவை படிக்கும் போது நீதிமன்றமும் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது ,..
நம்மலால் என்ன செய்ய முடியும்
நம்மலால் என்ன செய்ய முடியும் என்றே
நாங்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டோம் என்பதே உண்மை ,..
எங்கள் அரசியல் வாதிகள் உலகிலே மிக சிறந்த அரசியல்வாதிகள் ,..

ஆதலால் தான் எதன் எதன் மூலமெல்லாம் மக்களை சிந்திக்க விடாமல்
செய்ய இயலுமோ அந்த அந்த வழிகளில் எல்லாம் மக்களை மழுங்கடித்து
கொண்டுள்ளனர் ,..

padmanabhan said...

ANANDA VIKATAN ALSO EXPRESSES ITS CONCERN LIKE THIS ARTICLE.

THEE PARAVATUM

தமிழ்நதி said...

நான் பதிவேற்றும்போதெல்லாம் ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்துவிடுகிறது. ஒருவேளை கூகுலாண்டவருக்கு நான் எழுதுவது பிடிக்காமலிருக்கலாம். அவரும் அரச அதிகாரங்களுக்கு உட்பட்டவரோ என்னமோ...:)

பதிவின் தெளிவின்மையைச் சுட்டிக்காட்டிய நண்பர்கள் கிரி, கபீஷ், டாக்டர் ருத்ரன், பாலா அனைவருக்கும் நன்றி.

நேசமித்ரன்,

சட்டம்-ஒழுங்கு ஆளாளுக்கு மாறுபடும் என்பதை நம்மிரு கண்களாலும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்... உலகம் முழுவதும் இதுவே வழமை:(

ரதி,

நீங்கள் குறிப்பிட்ட பாடலைக் கேட்டேன். மிக அற்புதமான வரிகள். நமக்கு மிகவும் பொருந்துவதாகவும் இருக்கிறது அந்தப் பாடல். நாங்கள் ஏறக்குறைய எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்ற நினைவு நெஞ்சைச் சுடுகிற துயர் தருவதாக இருக்கிறது. எப்போதாவது பழைய ஞாபகம் வரும்போது, Utube க்குப் போய் ஈழப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன். வளர்ச்சியும் வீழ்ச்சியும் கண்ணெதிரே நிகழ்ந்தன.

நன்றி தன்ராஜ்,

பாதாளத்தில் வீழ்ந்து வலியோடு வானம் பார்த்துக் கிடக்கிறவர்களுக்கு அதிர்ச்சி முடிந்துவிட்டிருக்கிறது.

வழுக்குப் பாறையின் நுனியில் நின்றபடி அதையறியாதிருப்பவர்கள்தான் இப்போது பரிதாபத்திற்குரியவர்கள்.

சரவணன்,

"இவர்கள் ஒரு சிக்கலில் அரசு என்ன முடிவெடுக்கிறது என தொலைக்காட்சியின் முன் இத்தமிழ் சமூகம் உட்கார்ந்து பார்த்து அறிந்துக்கொள்ளவே ஆசைப்படுகிறது."

துரதிர்ஷ்டம். நமக்காக நாம் சிந்திக்காமல் பிறர் சிந்தித்து முடிவெடுத்து அதைச் செயலாற்றவும் அனுமதிக்கிற சோம்பேறித்தனம் நம்மை நிரந்தர அடிமைகளாக்கிவிடப் போகிறது. மக்கள் வீதிக்கு வரவேண்டும். (இருக்கிறதையும் இழந்துவிட்டு வீதிக்கு வாங்கைய்யா என்று நான் அழைப்பதாக யாராவது வந்து பதில் சொல்ல வாய்ப்பிருக்கிறது.) அதிகாரங்களுக்கெதிராகப் குரலெழுப்பவேண்டுமென்ற பொருளிலேயே கூறுகிறேன்.

சுபகுணராஜன்,

தாய் என்பதன் பொருள் ஒரு தாயாக இருப்பவருக்கே புரியவில்லையென்றால் என்னென்பது? அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்'உள்ளத்தோடு இருப்பார்களா என்ன?

செந்தில்,

'சிந்திக்க விடுகிறார்களில்லை... சிந்திக்க விடுகிறார்களில்லை...'என்று சொல்பவர்கள் ஏன் சிந்திக்கத் தூண்டக்கூடாது? உங்கள் கையில் பொறுப்பும் உள்ளத்தில் பொறுப்புணர்வும் இருக்கிறதெனில் மக்களிடம் அதை எடுத்துச் செல்லவேண்டுமென்பதே பன்னிப் பன்னி நாங்கள் சொல்லவருவது.

பத்மநாபன்,

ஆனந்தவிகடன் நான் இன்னும் வாங்கவில்லை. பார்க்கிறேன். ஆனந்தவிகடன் ஈழ விடயத்தில் சரியான நிலைப்பாட்டோடு இயங்கிவருகிறது என்பதை கடந்த இனக்கபளீகர காலத்தில் உணர்ந்தோம். (இது சொறிதல் இல்லை. உண்மை)

சின்னப்பயல் said...

இவள் சிங் [சரப்ஜித் சிங் - பாகிஸ்தான் சிறையில்] இல்லை..அப்பாவி தமிழச்சி தானே..?

ந்மக்குள் புலம்பிக்கொள்வதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய இயலும்..?

கிருபாநந்தினி said...

அன்பான தமிழ்நதி! சண்டைக்காக இல்ல; நெஜம்மாவே தெரியாமதான் கேக்கறேன். இஷ்டமிருந்தா பதில் சொல்லுங்க. இல்லாட்டி இந்தப் பின்னூட்டத்தை ரிஜெக்ட் பண்ணுங்க. நளினியை விடுதலை செய்யணுமா, வேணாமாங்கிறது பத்தி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. (வேணாம்னு சொல்றவங்க வாதத்துல பலவீனம் இருக்கிறது மட்டும் தெரியுது.) ஆனா, எனக்கு ஒரு விஷயம்தான் புரியலை. தமிழகச் சிறைச்சாலைகள்ல எத்தனையோ அப்பாவிகள் வெறும் விசாரணைக் கைதிகளா, ஆயுள்தண்டனைக்கும் அதிகமான காலமா சிறையில இருக்கிறாங்க. அவங்களைப் பத்தியெல்லாம் நீங்களோ, தாமரையோ, ஞாநியோ அக்கறைப்படாம நளினியின் விடுதலைல மட்டுமே குறியா இருக்கீங்களே, அது ஏன்? சீரியஸா தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன். இதுல கிண்டலோ கேலியோ இருக்கிறதா நீங்க நெனைச்சா, இதை நீங்க வெளியிடவே வேணாம்.

தமிழ்நதி said...

வாங்க சின்னப்பயல்,

புலம்புறதொண்ணுதான் வழி. வேறென்னதாம் பண்ணித் தொலைக்கிறது?


கிருபாநந்தினி,

உங்கள் வலைப்பூவில் உங்களால் எழுதப்பட்ட வாசகங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

"எங்கிருந்தோ வருவீங்க... எங்க பிரதமரை (அந்தச் சமயம் பிரதமராக இல்லாவிட்டாலும்) எங்கள் மண்ணிலேயே கொன்று குவிப்பீங்க. இந்தச் செயலுக்கு நீங்க கூசமாட்டீங்க. பின்னாடி ‘துன்பியல்’ ’துடைப்பைக்கட்டை இயல்’னு புதுசா ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சு நீலிக் கண்ணீர் வடிப்பீங்க. அதை நாங்க கண்டுக்காம சகிச்சுக்கிட்டிருக்கணுமா?"

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்மீது நீங்கள் எத்தனை கடுப்பாக இருக்கிறீர்கள் என்பதற்கு உங்கள் வார்த்தைகளே சாட்சி. அப்படியே கொதித்துக் குமுறியிருக்கிறீர்கள். ஒருவரை, ஒரேயொரு உயிரைக் கொன்றதற்கு இத்தனை ஆகாத்தியம் பண்ணுகிறீர்கள். ராஜீவ் காந்தி அவர்களால் ஈழத்துக்கு அனுப்பப்பட்ட படைகளால் எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள், எத்தனை பேர் அங்கவீனமாக்கப்பட்டார்கள், சித்தம் பேதலித்தார்கள், சிறையிலடைக்கப்பட்டார்கள் என்ற கேட்டுப் புளித்த பட்டியல் நினைவிலிருந்தும் நீங்கள் மேற்கண்ட கேள்வியை எங்களையொத்தவர்களை நோக்கிக் கேட்டீர்கள்.

ஏன் கேட்டீர்கள் கிருபாநந்தினி... அவர் 'உங்கள்' பிரதமரென்பதால். அதேபோல 'எங்கள்' போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்ற ஒரு குற்றச்சாட்டினால் பத்தொன்பது ஆண்டு காலம் சிறையிலிருந்து வாடும் ஒரு பெண்ணுக்காக நாங்கள் பேசுவது முறையானதே.

அத்தனை உயிர்கள் கொலைபடக் காரணமாயிருந்த ஒருவருக்காக நீங்கள் பேசும்போது, உங்கள் கருத்தின்படி ஒரு உயிர் (அதில் கொல்லப்பட்ட மற்றெல்லோரையும்தான் நீங்கள் மறந்துவிட்டீர்களே...)அவர் கொல்லப்படவிருப்பது தெரியாமல் அங்கு வந்து அந்த இடத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணுக்காக நாங்கள் பேசுவது தவறா?

ஆம்.. விசாரிக்கப்படாமலும் ஆயுள்தண்டனை பெற்றும் பலர் இருக்கிறார்கள்தான். அவர்களைப் பற்றி நாங்கள் பேசவில்லைத்தான்.

உலகாபிமானம் என்ற பெருந்தன்மைப் பேச்சுக்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. எங்கள் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஒரு பெண் சிறையிலிருக்கிறார். அவருக்காகப் பேசவேண்டும் என்றே நான் உந்தப்படுகிறேன். நளினி தமிழகத்தைச் சேர்ந்தவராயினும், அவர் என் இனத்தவர், என் மொழி பேசுகிறவர் என்பதற்குமப்பால், எங்களுக்காகப் போராடிய போராளிகள் நிமித்தம் (நீங்கள் மறுக்கலாம்)சிறையிருக்கிறவர்.(அப்படித்தான் சொல்லப்படுகிறது)ஆக, அவருக்காகப் பேசுவது எங்களது கடமை. ஆனாலும், நீங்கள் சொன்னதுபோல விசாரணைகள் ஏதுமின்றி நீண்ட காலமாக முறையற்றுச் சிறைவைக்கப்பட்டிருப்பவர்களுக்காகப் பேச முன்வருபவர்களோடு உடன்நிற்போம். நீங்கள் ஏன் அதற்காக ஒரு கூட்டத்தை ஒழுங்கமைக்கக்கூடாது கிருபாநந்தினி?

பக்கத்து வீட்டுக் குழந்தை விழுந்தால் வலிப்பதை விட உங்கள் குழந்தை விழுந்தால் வலிக்கிறதல்லவா? அது ஏன்? நளினி விடயத்தில் எங்களுக்கு அப்படித்தான் வலிக்கிறது. 'இல்லை.. முதலில் பக்கத்து வீட்டுக் குழந்தையைத்தான் தூக்கிவிடுவேன்'என்று நீங்கள் சொல்வீர்களானால் அதற்கொரு வார்த்தை இருக்கிறது. அந்தச் சொல் 'பம்மாத்து'

ராஜீவ் காந்திக்காக நீங்கள் கொதிக்கலாம்; நளினிக்காக நாங்கள் கொதிக்கக்கூடாதா?

கீழ்வரும் கேள்வி சினிமாத்தனமாகத் தோன்றினாலும், அதைக் கேட்காமல் ஆறாது.

'எங்கள் உடலில் ஓடுவது தமிழ்க்குருதி... உங்கள் உடலில்?'

Jerry Eshananda said...

/ நாங்கள் உண்மையில் அரசாங்கத்தின் மூளையால் சிந்திக்கத் தூண்டப்படுகிறோம். ஊடகங்கள் அரசுகளின் கைகளில் இருக்கும்போது அது வெகுசுலபமாக நிறைவேறிவிடுகிறது. அரசுகள் மக்கள் சுயமாகச் சிந்திப்பதை விரும்புவதில்லை. அரச மூளையால் சிந்திக்க மறுப்பவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.//
சத்தியத்தின் வரிகள்.
//நாங்கள் மாநகரில் கதவடைத்து வாழும் தனிமனிதப்புழுக்கள்!//
உண்மை.இந்த நூற்றாண்டில் சபிக்கப்பட்ட வார்த்தைகளுள் முதலிடம் வகிப்பது "இறையாண்மை",அது கக்கும் விஷம் தான் "அரசபயங்கரவாதம்"
எங்களின் கையறு நிலை ஒன்றே போதுமானதாக இருக்கிறது,இந்த போலியான ஜனநாயகத்தின் மௌன சாட்சிகள் "நாங்கள் என்று-சாட்சியம் பகிர."இப்போதெல்லாம் எனக்கு விடியலை குறித்தான கனவுகளே வருவதில்லை,ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால்...இன்னும் பிறக்காத தலைமுறைகளும் என்னை போல ஜனநாயக அடிமையாகத்தான் வாழுமோ".-அவைகளுக்காவது விடுதலை கிடைக்குமாவென்று.

VijayaRaj J.P said...

\\முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்மீது நீங்கள் எத்தனை கடுப்பாக இருக்கிறீர்கள் என்பதற்கு உங்கள் வார்த்தைகளே சாட்சி. அப்படியே கொதித்துக் குமுறியிருக்கிறீர்கள். ஒருவரை, ஒரேயொரு உயிரைக் கொன்றதற்கு இத்தனை ஆகாத்தியம் பண்ணுகிறீர்கள். ராஜீவ் காந்தி அவர்களால் ஈழத்துக்கு அனுப்பப்பட்ட படைகளால் எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள், எத்தனை பேர் அங்கவீனமாக்கப்பட்டார்கள், சித்தம் பேதலித்தார்கள், சிறையிலடைக்கப்பட்டார்கள் என்ற கேட்டுப் புளித்த பட்டியல் நினைவிலிருந்தும் நீங்கள் மேற்கண்ட கேள்வியை எங்களையொத்தவர்களை நோக்கிக் கேட்டீர்கள்.

ஏன் கேட்டீர்கள் கிருபாநந்தினி... அவர் 'உங்கள்' பிரதமரென்பதால். அதேபோல 'எங்கள்' போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்ற ஒரு குற்றச்சாட்டினால் பத்தொன்பது ஆண்டு காலம் சிறையிலிருந்து வாடும் ஒரு பெண்ணுக்காக நாங்கள் பேசுவதுமுறையானதே.// தமிழ்நதி உங்கள் வாதம் நேர்மையானது.
நேரடியானது.

கிருபாநந்தினி said...

விரிவான பதிலுக்கு நன்றி தமிழ்நதி! மீண்டும் ஒரு வாக்குவாதத்துக்கு நான் தயாரா இல்லை. ஆனாலும், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்க விரும்பறேன். இதை நீங்க பதிவிடணும்கிற அவசியம் இல்லை. அது உங்க விருப்பம்.

\\"எங்கிருந்தோ வருவீங்க... சகிச்சுக்கிட்டிருக்கணுமா?// இந்த வரிகள்ல, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எதிரா நான் எதுவும் சொல்லலை. விடுதலைப்புலிகளின் நடவடிக்கை சரியில்லைன்னுதான் குறிப்பிட்டேன். கொலைத் தண்டனையே கூடாதுங்கிறார் ஞாநி. ஆனா, நீங்களோ ராஜீவ் அனுப்பின இந்தியப் படை அங்கே அட்டூழியம் பண்ணினதா சொல்லி, அதுக்காக ராஜீவைக் கொன்னது சரிதான்னு வாதிடுறீங்க. ராஜீவைக் கொன்னதால எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுச்சா என்ன? இல்லையே!

\\'எங்கள் உடலில் ஓடுவது தமிழ்க்குருதி... உங்கள் உடலில்?'//

எங்க உடம்பிலும் தமிழ் ரத்தம்தான் ஓடுது தமிழ்நதி. ஏன் இந்தச் சந்தேகம் உங்களுக்கு? ஒரே ஒரு விஷயம்... நீங்க விடுதலைப் புலிகளையும் அவங்களுக்கு ஆதரவா இருக்கிறவங்களையும் மட்டும்தான் தமிழர்களா நினைக்கிறீங்க. நான் அப்படி இல்லை. இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கம், (முன்பு) விடுதலைப் புலிகள் என்கிற மும்முனைத் தாக்குதலில் சிக்கிச் சீரழிஞ்ச பரிதாபத்துக்குரியவங்களும் ஈழத் தமிழர்கள்தான்னு நினைக்கிறேன்.

அகதிகளா வந்து இந்திய முகாம்கள்ல சரணடைஞ்சு, பிச்சைக்காரங்களைவிடக் கேவலமான வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கிறவங்களுக்காக நீங்க குரல் கொடுத்திருக்கீங்களா தமிழ்நதி?

தமிழ்நதி said...

நண்பர்கள் என்னை மன்னிக்கவும்.

கிருபாநந்தினிக்கு என்னோடு பேசுவதற்கு எதாவது இருந்துகொண்டே இருக்கிறது. முதலில் 'எனக்கு உண்மையிலேயே இது புரியலைங்க... நீங்க கொஞ்சம் சொன்னாத் தேவலை'என்று வெகு பவ்யமாக வந்து கேட்டார். அதற்குப் பதில்சொன்னதும் வேறு விதமான கேள்விகளோடு வருகிறார். தனக்கு எதிராகப் பேசுகிறவரை ஏதாவதொரு வகையில் மடக்கிவிட முடியாதா என்ற நப்பாசை அவருக்கு.

கிருபாநந்தினி,

அடிப்படையில் உங்கள் பிரச்சனை என்னவென்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன்; நீங்கள் அவர்களை எதிர்க்கிறீர்கள் என்பதுதான் அடிப்படைப் பிரச்சனையே. உங்களுக்கு ராஜீவ் காந்தியைக் கொன்றதாகச் சொல்லப்படும் விடுதலைப் புலிகளை மட்டும்தான் தெரியும். நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவள். அவர்கள் எப்படிப் போராடினார்கள்; மக்கள் அவர்களை எப்படி மதித்தார்கள் என்பதையெல்லாம் கண்ணெதிரே கண்டவள். ஏறத்தாழ 27,000 போராளிகள் தமது இன்னுயிரைத் தமது மக்களுக்காக உவந்தளித்தவர்கள். (பதவிக்காக என்றால்... இறந்தபிறகு என்ன பதவி என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.)

நீங்கள் உங்கள் கருத்தில் தீவிரமாகவும் தெளிவாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் காட்டும் 'ஒண்ணுந் தெரியாத'பாவனைகளை இனியும் நான் நம்புவதாக இல்லை.

இனவெறி பிடித்த இலங்கை அரசால் ஈழத்தமிழ் மக்கள் வகைதொகையின்றி அழிக்கப்பட்டபோது, அவர்களது கேடயமாக நின்றவர்கள் விடுதலைப் புலிகள்தான்.

"பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எதிரா நான் எதுவும் சொல்லலை. விடுதலைப்புலிகளின் நடவடிக்கை சரியில்லைன்னுதான் குறிப்பிட்டேன்."

இத்தனை ஆண்டுகாலமாக இலங்கை அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டி, தமிழ்மக்களின் பாதுகாவலர்களாக இருந்த விடுதலைப்புலிகளும் மக்களும் ஒன்றுதான். நீங்கள் சொல்வதுபோல விடுதலைப்புலிகள் வேறு மக்கள் வேறாக இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் ஈழத்தமிழ் மக்களிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் ஆகாயத்திலிருந்து குதித்து இறங்கி நேரடியாக சிறீபெரும்புதூர் போய் ராஜீவ் காந்தியைக் கொன்று போடவில்லை.

"இந்தியப் படை அங்கே அட்டூழியம் பண்ணினதா சொல்லி, அதுக்காக ராஜீவைக் கொன்னது சரிதான்னு வாதிடுறீங்க."

இதைத்தான் திரிப்பது என்பது. நான் எங்கேயும் அவர்கள் செய்தது சரிதான் என்று வாதிடவில்லை. 'ஒரு உயிருக்குப் பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுப்பது சரிதானா?'என்றுதான் கேட்டிருக்கிறேன். ஒரு உயிருக்குப் பதிலாக ஐம்பதினாயிரம் உயிர்களைப் பலியெடுப்பது சரிதானா என்பதே எனது கேள்வியாக இருக்கிறது.

ஞாநி சொல்வது அவரது கருத்து. அவரையேன் இங்கு இழுக்கிறீர்கள்? அவர் அவரது நிலைப்பாட்டிலிருந்து பேசுகிறார். நான் எனது நிலைப்பாட்டிலிருந்து பேசுகிறேன்.


"நீங்க விடுதலைப் புலிகளையும் அவங்களுக்கு ஆதரவா இருக்கிறவங்களையும் மட்டும்தான் தமிழர்களா நினைக்கிறீங்க."

எனக்காக நீங்களே சிந்திப்பீர்களோ... இப்படி அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகளை விடவேண்டாம்.

கடைசியாக நீங்கள் கேட்டிருக்கிற கேள்வி எப்படியிருக்கிறதென்றால், விளையாட்டில் தோற்றுப்போன பிள்ளைகள் 'வெவ்வெவ்வே'காட்டுவதைப் போல இருக்கிறது. நீங்கள் என் வலைப்பூவைச் சரியாகப் படித்துப் பாருங்கள். ஈழத்திலே இருக்கும் அகதிமுகாம்கள், இங்கே செங்கல்பட்டிலே சிறையிருப்போர் பற்றியும் நான் எழுதியிருக்கிறேன்.

எப்போதும் ஆட்களைப் பற்றியே அவதூறு எழுதிக்கொண்டிருப்பது உங்களுக்குச் சலிக்கவில்லையா கிருபாநந்தினி? அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள் இப்படி யாரையாவது போகிறபோக்கில் சாட நீங்கள் என்ன எல்லாந்தெரிந்த அண்ணாவியாரா?

யாரைப் பற்றியாவது அக்கப்போர் பண்ணாவிட்டால் உங்களுக்குத் தூக்கம் வராதா? ஆக்க இலக்கியம், ஆக்க இலக்கியம் என்று ஒன்றிருக்கிறது. இப்படி ஆட்களைப் பற்றியே எழுதி வலைப்பூவில் வம்பு வளர்ப்பதைக் காட்டிலும் ஆக்கபூர்வமாக ஏதாவது போய் எழுதுங்கள். 'விகடனில் எழுதுகிறார்கள்.... குமுதத்தில் எழுதுகிறார்கள்'என்று வெந்து குமுறுவதிலிருந்து கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கலாம்.

Bibiliobibuli said...

தமிழ்நதி,

கிருபா நந்தினிக்கு எவ்வளவு தான் விளக்கிச் சொன்னாலும், அவர் மறுபடியும் அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு எதையாவது ஏறுக்கு மாறாய் கேட்டுக்கொண்டே தான் இருக்கப்போகிறார் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இதில் தான் கேட்ட கேள்வியை post பண்ணாமல் விடலாம் என்று பெருந்தன்மையோடு வேறு சொல்லிச் சொல்லி உங்கள் வாயை கிளறிக்கொண்டே இருக்கிறார். பதில் சொல்வதும் விடுவதும் உங்கள் தனிப்பட்ட முடிவு. ஆனால், அப்படி பதில் சொல்லிக்கொண்டே இருப்பது வேலை மினக்கெட்ட வேலை என்பது என் கருத்து.

கிருபாநந்தினி said...

விரிவான பதில் மூலம் என் அறிவுக் கண்ணைத் திறந்ததுக்கு நன்றி தமிழ்நதி! ஆனா, ஒரு வேண்டுகோள்!
\\நீங்கள் காட்டும் 'ஒண்ணுந் தெரியாத'பாவனைகளை இனியும் நான் நம்புவதாக இல்லை.//
\\நீங்கள் என்ன எல்லாந்தெரிந்த அண்ணாவியாரா?//
ஏதாவது ஒண்ணு சொல்லுங்க. இப்படி இரண்டையும் சொன்னா, நான் என்னைப் பத்தி என்னன்னு மதிப்பிட்டுக்கிறது? ஒண்ணுந் தெரியாதவள்னா? இல்லே, எல்லாந் தெரிந்த அண்ணாவின்னா?
\\வலைப்பூவில் வம்பு வளர்ப்பதைக் காட்டிலும் ஆக்கபூர்வமாக ஏதாவது போய் எழுதுங்கள்.//
ரதியக்கா! மேலே சொன்ன தமிழ்நதி விமர்சனத்துக்கு உங்க பதிலையே கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன். தேங்க்ஸ்!
\\அவர் ஒர் விடயத்தை அறியாமல்,ஆராயாமல் எழுதுகிறாரா இல்லையா என்பதை சொல்வதிலிருந்து விலகி, அவர் என்ன எழுதுவது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்?//

தமிழ்நதி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெரி ஈசானந்தன்.

சில 'மாநகரப் புழு'க்களுக்கு எத்தனை சொன்னாலும் சில விடயங்கள் புரிவதாக இல்லை. அடுத்த தலைமுறையைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது உண்மையிலேயே கவனத்திற்கெடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம். சோறு, தண்ணீர் மட்டும் போதுமென்றால், கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது. இல்லையா?

நன்றி விஜயராஜா. புதிதாக என் வலைப்பூவிற்கு வந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி.

கிருபாநந்தினி,

ஒருவரை வம்புக்கு இழுத்தே ஆவேன் என்ற உங்கள் அடம் எனக்குப் புரிகிறது. உங்களுக்கு நான் கூறும் கடைசிப் பதில் இதுவாகவே இருக்கும்.

உங்கள் பின்னூட்டங்களை பாருங்கள். முதலில் போட்ட பின்னூட்டத்தை ஒரு அப்பாவி முகமூடியைக் கொழுவிக்கொண்டு போட்டீர்கள். பிறகு 'எல்லாந் தெரிந்த அண்ணாவியார்'போல ஆஹா ஊகூ 'ஸ்டேட்மென்ட்'கள் விட்டீர்கள். அதேபோல உங்கள் வலைப்பூவில் நீங்கள் எழுதியுள்ள எழுத்துக்களைப் படிக்கும்போது, கையில் ஒரு பிரம்போடு மேசையிலே ஏறிநின்று 'நீ சரியில்லை... க்கும்.. நீயும் சரியில்லை... க்க்குக்கும்'என்ற என்ற தொனியை அவதானித்தேன். எனக்கு ஒன்று இப்போது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் பாம்பென்று தள்ளவோ பழுதையென்று மிதிக்கவோ முடியாத ஆள். இப்படியான வேறும் சில ஆட்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் விசயம் தெரிந்திருக்காது. ஆனால், தெரிந்தாற்போல காட்டிக்கொண்டு மற்றவர்களின் வாயைக் கிளறி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். இந்த திண்ணைப் பேச்சாளர்களைப் பற்றி ஊர் முழுவதும் தெரிந்திருக்கும். தெருவழியே யார் போனாலும், 'ம் போறான் பார் யோக்கியன்'என்பார்கள் வெற்றிலையை வாயில் போட்டுக் குதப்பிக்கொண்டு.

உங்கள் 'படைப்புரிமை'யை நானும் கேள்வி கேட்டிருக்கமாட்டேன். நீங்கள் 'படுத்தாதீங்க தமிழ்நதி'என்றொரு பதிவைப் போட்டு என்னை வம்புக்கு இழுத்திருக்காவிட்டால்.

உங்களுக்குப் பதில் சொல்வதொன்றே எனது வேலையல்ல.

உண்மைத்தமிழன் said...

பகிர்வுக்கு மிக்க நன்றிகள் மேடம்..!

உடனேயே பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். கொஞ்சம் தாமதமாகிவிட்டது..!

[[[மத்திய அரசு நீதிபதியிடம் கேட்டால்,]]]

"மத்திய அரசு வழக்கறிஞரிடம்" என்றிருக்க வேண்டும்..!

Sundararajan P said...

தமிழ்நதி,

ஆரோக்கியமான விவாதங்கள் தேவைதான். ஆனால் அவை நம் செயலை எவ்விதத்திலும் சீர்குலைப்பவையாக இருக்கக்கூடாது.

செயல்பாடுகளே இல்லாத சிலர் பொருளற்ற வெற்று விவாதங்களையே முழுநேர செயல்பாடாக கொண்டிருக்கலாம்.

அவை நிராகரிக்கப்பட வேண்டியவை. அதற்காகத்தான் மறுமொழி மட்டுறுத்தல் போன்ற கருவிகள் இருக்கின்றன.

தமிழ்நதி said...

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி உண்மைத்தமிழன். ஆனால், கூட்டத்தில் பேசியவர்கள் வழக்கறிஞர் என்ற பதத்தைப் பிரயோகித்ததாக எனக்கு நினைவில்லை. நீங்கள் சொல்வதுகூடச் சரியாக இருக்கலாம்.

மதிப்பிற்குரிய சுந்தரராஜன்,

எக்குத்தப்பாக வந்து கேள்விகேட்கிற, எழுந்தமானத்திற்குக் கருத்துச்சொல்கிற சிலரது பின்னூட்டங்களைப் பிரசுரிக்காமலோ பதில் சொல்லாமலோ விடும்போது, அவர்கள் சொல்வதே சரியென அவர்கள் நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவே அவர்களுக்குப் பதில்சொல்கிறேன்.

மேலும், 'போகட்டும் விடு'என்று விட்டுவிட உள்ளேயிருக்கும் கலகக்குரல் அனுமதிப்பதில்லை. அது திருப்பியடித்தால் மட்டுமே சமாதானமடைகிறது.

ஆனால், நீங்கள் சொல்வதுபோல அவற்றை நிராகரிப்பதே சரியென உணர்கிறேன். நடைமுறைப்படுத்தும் நிதானம் கைகூடவில்லை இன்னும். நாளாக நாளாக பக்குவப்படலாமென நம்புகிறேன். நன்றி.

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா !
அருமையான பதிவு !!

K P Suresh said...

தமிழ்நதி,

நேதாஜி, பகத் singh, வாஞ்சி நாதன் எல்லாம் சுதந்திர போராட்ட வீரர்களா? இல்லை குற்றவாளிகளா?
இது போலி காந்திகளுக்குத்தான் தெரியாது! கிருபா நந்தினிகளுக்குமா புரியவில்லை?

இவர்களின் ரத்த தாகம், வெறி எப்பொழுது அடங்கும்.
இழவு வீட்டில் ஒப்பாரி வைக்க வரவிட்டாலும் பரவாஇல்லை! கைதட்டி சந்தோசபடுகிரவர்களை பற்றி என்ன சொல்ல!
வாதம் மட்டுமே குறிக்கோள், இவர்களுக்கு பதில் சொல்வதை நிறுத்துங்கள்!

தமிழ்நாட்டை கரையான் பிடித்திருக்கிறது! 200 ரூபாவுக்கு ஒட்டு, 1 ரூபாய் அரிசி, இலவச டிவி க்கு அவர்களை விற்று நிறைய நாட்களாகிவிட்டது. அதிலும் சென்னை தமிழன் அக்மார்க் சுயநலவாதிகள். இங்கே நீதி, மனிதாபிமானம், பாசம் எல்லாம் மரணித்து நெடுநாளாகிவிட்டது!

வேதனையுடன்
தமிழ்நாட்டு தமிழன் (சென்னை'ல் வசிப்பவன்)
K P சுரேஷ்

Anonymous said...

நாதுராம் கோட்சேயின் த‌ம்பி கோபால் கோட்சேவுக்கு ம‌ஹாத்மா காந்தியின் கொலையில் பங்கு உண்டு என்ப‌து ச‌ந்தேக‌த்திற்கு இட‌மின்றி நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், இந்திய‌ நீதிம‌ன்ற‌ங்க‌ள் அவ‌ருக்கு ஆயுள் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கின‌. ப‌தினான்கு ஆண்டுக‌ள் சிறையில் இருந்த‌ பின்னால் த‌ன்னை விடுவிக்க‌ நீதிம‌ன்ற‌ங்க‌ளை அணுகினார், கோபால் கோட்சே. உய‌ர் ம‌ற்றும் உச்ச‌ நீதிம‌ன்ற‌ங்க‌ள் அவ‌ரை விடுவிக்க‌ ம‌றுத்து விட்ட‌ன‌. இன்னும் சொல்ல‌ப் போனால், ஆயுள் த‌ண்ட‌னை என்ப‌து 14 ஆண்டுக‌ள் அல்ல‌, அது எத்துனை ஆண்டுக‌ளாக‌ வேண்டுமான‌லும் இருக்க‌லாம் என்று உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் தீர்ப்ப‌ளித்த‌து இந்த‌ வ‌ழ‌க்கில் தான். ஆனால், ம‌ஹாராஷ்டிர‌ அர‌சு அவ‌ரை விடுத‌லை செய்த‌து (விடுவித்த‌து ம‌ராத்திய‌ காங்கிர‌ஸ் அர‌சு! இது தான் இன‌ உண‌ர்வு என்ப‌துவோ?). வெளியில் வ‌ந்த‌ பின்னும், 2005ம் ஆண்டு, புனே ந‌க‌ரில் இற‌க்கும் வ‌ரை காந்தி கொலையை ஆத‌ரித்து பேசினார், கோட்சே. ராஜிவ் காந்திக்காக‌ ஒப்பாரி வைக்கும் கிருபான‌ந்தினி போன்ற‌வ‌ர்கள், ம‌ஹாத்மா காந்திக்கு ஒப்பாரி வைக்காத‌து ஏனோ? த‌ன் வாழ்நாள் முழுவ‌தையும் இந்த‌ தேச‌ விடுத‌லைக்கு அற்ப‌ணித்த‌ ம‌ஹாத்மாவை விட‌, ராஜீவ் ம‌ஹா மஹாத்மாவா என்ப‌தை கிருப‌ன‌ந்தினி தான் விள‌க்க‌ வேண்டும்.

ஓரு நாளில் 10 ம‌ணி நேர‌ம் ஏற்ப‌டும் மின்த‌டையால், த‌ன் குழந்தையின் ப‌டிப்பு கெடுவ‌தையோ, த‌ன் தொழில் பாதிக்க‌ப்ப‌டுவ‌தையோ ப‌ற்றிக் க‌வ‌லைப்படாத‌ என் த‌மிழ‌க‌ த‌மிழ‌ன், ந‌ளினி விடுத‌லை ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டுவான் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கில்லை.

ச‌கோத‌ர‌ச்ச‌ண்டை முற்றி, இந்த‌ த‌மிழ‌க‌ம் விடுத‌லை அடையும் என்று ந‌ம்புவோமாக‌!

ஒரு விஞ்ஞானியாக‌, ந‌ம்பிக்கையாக‌ எதையும் எதிகொள்ளும் என‌க்கு, ச‌மீப‌த்திய‌ தமிழ‌க‌ நிக‌ழ்வுக‌ள் ஒரு அவ‌ந‌ம்பிக்கையை ஏற்ப‌டுத்துவ‌தை த‌விர்க்க‌ இய‌ல‌வில்லை.

- கிருஷ்ண‌மூர்த்தி

blackkalai said...

உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் ராஜிவ் கொலை வழக்கில் தடா சட்டம் பொருந்தாது, ஏனெனில் கொலை என்பது பழிவாங்குவதற்காக செய்யப்பட்டது. நாட்டிற்கு எதிராக கொலையாளிகள் எதுவும் செய்யவில்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

ராஜ நடராஜன் said...

உண்மைகள் எழுத்தில் தன்முகத்தைக் காட்டினாலும் அரசு யந்திரங்களின் காலணிகளால் நசுக்கப்படுகின்றன.வலைத்தளம் சுற்றுகின்ற நேரத்திலும்,உங்கள் எழுத்தில் நியாயங்களுக்கு குரல்கொடுக்கும் மனிதர்கள் பலரும் இருந்தும் இவைகளையெல்லாம் அப்புறப்படுத்தும் சக்தி கொண்ட தமிழகத்தின் ஒரு தனிமனிதனின் பலம் மட்டுமே முடிவுகளை தீர்மானிக்கிறது என்பது எவ்வளவு வேதனைக்குரிய விசயம்.இடுகையில் சொன்னபடி மக்களை சிந்திக்க வைக்கவே நேரமில்லாதபடி ஊடக நிகழ்வுகள்.சுயநலங்களும்,தனிமனித பெருமிதங்களும்,தனக்கு மட்டுமே பெயர் தேடும்,தேடியும் தனி ஆளுமையில்லாத நேதாக்கள் ஒரு பக்கம்.நீதியினை சூது கவ்வும் அரசாட்சி ஒரு பக்கம் என போகும் வழி மட்டும் தெளிவில்லாமல் நகர்கிறது.மலை சாயும் ஒரு காலத்து சிறு புயலோ,மண்புழுதியோ மெல்லப் பரவி அது தாண்டி பயணிக்கும் பாதைக்கு மட்டுமே காத்திருக்கிறேன்.நன்றி.