4.12.2010
Tweet | |||||
தமிழிசை! நான் உன்னைப் பார்க்க விரும்பவில்லை....
அவளை நான் முதன்முதலில் பார்த்தபோது, நான்கு வயதைத் தொட அவளுக்கு இரண்டு மாதங்களிருந்தன.அடர்ந்த தலைமயிர் சுருள்சுருளாக முகம்மறைத்துத் தொங்கிக்கொண்டிருக்க, இருபது வயது மதிக்கத்தக்க இயக்கப் பெடியனொருவனின் கைகளில் பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தாள். தன்னைக் கீழே இறக்கிவிடச்சொல்லி கைகால்களை ஒருகணமேனும் நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டிருந்தாள்.
"இந்தப் பிள்ளையைச் சமாளிக்கிறதெப்பிடி எண்டு எனக்குத் தெரியேல்லை அக்கா..."என்று சிரித்தபடி தன் தாய் புதியவளான என்னிடத்தில் முறையிடுவதை வெட்கம் பரவிய கண்களுடன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொள்ளவும் அவள் தவறவில்லை.ஆனாலும், தன்னை இறக்கிவிடச்சொல்லி அடம்பிடிப்பதை நிறுத்தினாளில்லை.
அவள் ஒரு பட்டுப்பந்து அல்லது பிறந்து சில நாட்களே ஆன ஆட்டுக்குட்டி என்று சொல்லலாம். அப்படியொரு துள்ளும் சொல்லால் அவளைக் குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். அந்த இளம் கால்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் களைத்துப்போய் இடுப்பில் கைகளை வைத்தபடி பிரமித்தாற்போல நிலா நிற்பது இப்போதும் எனக்கு நினைவிலிருக்கிறது.
"நானும் எத்தினையோ பிள்ளையளுக்குப் பயிற்சி குடுத்திருக்கிறன். இவளொருத்தியை என்னாலை சமாளிக்க முடியாமல் இருக்குப் பாருங்கோ..."
அந்த இளம்தாயின் மஞ்சள் முகத்தில் அந்நாட்களில் பொலிந்த தாய்மையின் கனிவும் செல்லக்கண்டிப்பும் மறக்கக்கூடியனவல்ல. அதுவொரு மகிழ்ச்சியும் பெருமையும் சின்னதாய் கோபமும் கலந்த அழகான சலிப்பு.
வெயில் கொழுத்தும் இதேபோன்றதொரு பின்மதியநேரத்தில் எனக்குப் பக்கத்தில் படுத்திருந்து என்மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டபடி தமிழிசை எனக்கொரு கதை சொன்னாள்.
நரியைக் காகம் ஏமாற்றிய கதை!
"காகம்தானே ஏமாந்தது தமிழிசை... நரி ஏமாந்ததெண்டு நீங்கள் சொல்லுறீங்கள்... அதெப்பிடி?"கேட்டு வைத்தேன்.
"இது நான் எழுதின கதை அன்ரி" அவள் நான் நம்பவில்லையோ என்ற யோசனையோடு என் கண்களைப் பார்த்தாள்.
"ஓ அப்பிடியா... அப்பிடியெண்டால் சரி"
குதூகலம் அவளது பட்டுக்கன்னங்களில் பரவுவதை நான் பார்த்தேன்.
பத்துக்கும் மேற்பட்ட கதைகளை அவள் தன்வசம் வைத்திருந்தாள். எல்லாம் முடிவு மாற்றப்பட்ட கதைகள். அவளுக்கு செம்மையாக, கோர்வையாகக் கதைசொல்லத் தெரிந்திருந்தது. கேட்டுக்கொண்டிருக்கிற ஆள் அடிக்கடி 'ம்'கொட்டவேண்டும்.
"பிள்ளைக்கு ஆர் இப்பிடிக் கதையெல்லாம் சொல்லித் தாறது?" கொஞ்சம் நெருங்கிவிட்டேனென்று தோன்றிய ஒருநாளில் இரகசியமாகக் கேட்டேன்.
அவளது முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்புப் படர்ந்தது. பெரிய வட்டக் கண்களில் குழந்தைகளால் மட்டுமே காணக்கூடிய உலகம் விரிந்தது. சின்னஞ்சிறிய உலகுக்கே உரித்தான இரகசியம்... அவள் பதில் சொல்லவில்லை.
நிலாவிடம் சொன்னபோது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
"அவள் அப்பிடித்தானக்கா... எல்லாக் கதையளையும் மாற்றி மாற்றிச் சொல்லுறாள். ஒருவேளை அவள் உங்களைப் போல எழுதக்கூடிய ஆளா வரக்கூடும்"பெருமிதத்தில் மேலும் அழகாகத் தெரிந்தாள் நிலா.
--- --- ---
சண்டை முற்றி மாத்தளன் பகுதியில் சனங்கள் ஒதுங்கியபோது, நிலாவோடு தொலைபேசியில் பேசக் கிடைத்தது. என்னையறியாமல் முதல் எழுந்த கேள்வி தமிழிசை பற்றியதாக இருந்தது.
"தமிழிசை எங்கை நிலா?"
"போன மார்கழி மாசமே அவளை அம்மா, தங்கச்சியோட அனுப்பிப்போட்டம் அக்கா"குரலில் கண்ணீர் வழிந்தது.
"நீங்கள்...?"
"தமிழை அனுப்பினதே இவருக்குப் பிடிக்கேல்லை... நான் போகமாட்டன்।என்ன நடந்தாலும் எங்கடை சனங்களோடைதான் வாழ்வோ... சாவோ..."
துப்பாக்கி வேட்டுச் சத்தம் அவளை வழிமொழிந்தது. குண்டுகள் நிலமதிர விழுந்து வெடிக்கும் ஓசை கேட்டது.
"அக்கா! பிறகு எடுங்கோ... நான் போறன்"
கடைசிக் கதை அதுதான்.மே மாதம் - வாளேந்திய சிங்கமும் தூணேந்திய சிங்கமும் ட்ராகனும் திட்டமிட்டு வன்னியைத் துடைத்தழித்தன. பிறகொருநாள் யாரோ சொன்னார்கள் அவள் 'போய்விட்டதாக'. அவரும் போனார். ஆறேகால் அடி உயரமான ஆகிருதி சீருடையில் சிதைந்துகிடந்ததை நான் இணையத்தளங்களில் பார்த்தேன்.
மனம் செத்துப்போவதென்றால் என்னவென்று எங்களுக்கு இப்போது நிதர்சனமாகத் தெரிகிறது.
எளிமையும் புத்திசாலித்தனமும் கனிவும் தீரமும் நிறைந்த என் தோழி இனி இல்லை என்கிறார்கள். அவளது விருந்தோம்பலை நான் இனிமேல் அனுபவிக்கமாட்டேன் என்றும் அதை நான் நம்பித்தானாக வேண்டுமென்றும் சொல்கிறார்கள். நான் மனம் பிறழ்ந்துபோவேனோ என்று அஞ்சுகிறேன். அவளும் நானும் தனித்திருந்து எங்கள் விடுதலையைப் பற்றி நம்பிக்கையோடு கதைத்த நிலாக்கால இரவுகளை நான் என்றென்றைக்குமாக இழந்துபோனேனா? தமிழிசை சொன்ன கதைகள் போல யாவும் தலைகீழாகிப் போனதா?
"நிலா! இனி உங்களை நான் பார்க்கமாட்டேன் என்று இவர்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. போர்க்களங்களில் அதிசயங்கள் நடக்கத்தான் நடக்கின்றன. நீங்கள் தப்பி எங்காவது உயிருடன் இருப்பீர்கள் என்பதை இப்போதும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். நான் உங்களைக கடைசியாகப் பார்த்த அன்று பச்சை நிறத்தில் 'பற்றிக்'சட்டை அணிந்து கண்களில் பிரிவுத்துயர் பெருக்கெடுக்க வாசற்கடப்படியில் நின்று கையசைத்தீர்கள். நீங்கள் எங்கோ உயிருடன் இருக்கிறீர்கள். வாஞ்சையால் மலர்ந்த முகத்துடன் 'என்ரை பிள்ளைகள்'என்று உங்கள் போராளிகளைப் பற்றி நீங்கள் என்னோடு கதைக்கும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்"
தமிழிசை! உன்னைப் பற்றிய நினைவுகளிலிருந்து நான் தப்பியோடிவிட நினைக்கிறேன். ஒரே ஆறுதல் நீ எங்கோ உயிரோடு இருக்கிறாய் என்ற உறுதியான தகவலே. ஆக்கிரமிப்பாளர்களால் குடல் கிழிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் இரவுகளில் என்னை உறங்க விடுவதில்லை. ஞாபகங்களால் மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டுத் துடிதுடிக்கிறது மனம்.
தமிழிசை! உன் தாயின் தாயிடமும் சித்தியிடமும் வளரும் உன்னை நான் அவளன்றித் தனியாகச் சந்திக்க விரும்பவில்லை. 'அம்மாவும் அப்பாவும் எங்கே?'என்ற உன் இடையறாத கேள்விகளால் அவர்கள் எந்நிலத்தில் துயருறுகிறார்களோ நானறியேன். கண்ணீர்தோய்ந்த பொய்களுடன் வளரும் பிள்ளையே! வெடித்தெழும் குமுறல்களை மறைவிடத்தில் கொட்டித்தீர்த்துவிட்டு உன்முன் நடிப்பதற்கு அவர்கள் ஒவ்வொருநாட்களும் தங்களைத் தயார்ப்படுத்தியாகவேண்டும். புதிது புதிதான பொய்களை அவர்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.
உனக்குள்ளிருந்த ஆட்டுக்குட்டி இப்போது வெளியேறிவிட்டிருக்கும்.நீயொரு இறப்பர் பந்தெனக் குதித்தோடுவதை நிறுத்திவிட்டிருப்பாய். சொல்லப்படாத உன் கதைகள் உனக்குள் இறுகியிருக்கவும் கூடும்.
குழந்தைகளால் போரைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தியாகமோ துரோகமோ தெரியாது. புலியெதிர்ப்பு - ஆதரவு, தனிநாடு, இறையாண்மை, ஐக்கியம், நல்லிணக்கம், இனவெறி எதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தாயின் மார்புக் கதகதப்பு. தந்தையின் தோள்க் கணப்பு.
குழந்தைகளின் கேள்விகளிலிருந்து பரவும் சாபம் காரணர்களைச் சூழட்டும்! சூழட்டும்!
தமிழிசை! என்னருமைக் கதைசொல்லியே! இனியொருபோதும் நான் உன்னைச் சந்திக்க விரும்பவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
நெஞ்சு கனக்கிறது சகோதரி.
மெல்ல மெல்லத் தேய்ந்து வரும் அவலம் சார்ந்த செய்திகள் அவர்களது நிலையினை எண்ணி எண்ணி கனத்துப்போகும் மனம். இனி என்ன ஆகும் என் இனம்.
சோர்ந்து போய் அமர்ந்திருப்பதால்லேயே யாரும் தாங்கிப்பிடிக்கப் போவதில்லை என்றாலும் தன்னிரக்கம் கொண்டு சோர்ந்திருக்கிறேன் எண்ணினத்தை எண்ணி ஒரு சாதரண தமிழக தமிழனாய்.
இரத்தம் வெளிப்பட்டாலும்
தன்னுடைய புண்ணை சுரண்டி அந்த அரிப்பில் மயங்கியிருக்கும் சுகம் இப்போது ஒரு ஆருதலாய்த்தான் இருக்கிறது.
மனம் செத்துப்போவதென்றால் என்னவென்று எங்களுக்கு இப்போது நிதர்சனமாகத் தெரிகிறது.
:((
தமிழிசைகள், சார்ல்ஸ் அன்ரனிகள்.... இவர்களின் வலியும், தியாகமும் ஈழத்தமிழர்களைத் தவிர வேறு யாராலும் புரிந்துகொள்ளப்படப்போவதில்லை என்பதை தவிர சொல்வதற்கேதுமில்லை. ஈழத்தமிழனின் இனப்படுகொலையும் ஓர் தலைவரின் மரணத்தையும் ஒரே தராசில் நிறுப்பவர்கள் நிறையப்பேர்கள் இருக்கிறார்கள். நாங்கள் "வாழ்ந்த" வலிகளை இவர்களுக்கு எவ்வளவு எழுதினாலும் புரியவைக்க முடியாது.
There is no word to express my reciprocation
"மனம் செத்துப்போவதென்றால் என்னவென்று எங்களுக்கு இப்போது நிதர்சனமாகத் தெரிகிறது."
The sorrow speaks. It's language is very painful. It tears the heart.
But when someone is heartless......
The language of sorrow is dumb.
மடியில் தவழ்ந்த என் மான் குட்டியை
நானும் பார்க்க விரும்பவில்லை.
...
விருப்பு வெறுப்பற்ற மனோநிலையில்
என்னவோ வாழ்ந்து தொலைக்கிறேன்.
....
தொடரட்டும்.
நின் எழுத்துப் பணியாவது.
..
கண்களில் நீர் மல்க..
இரு கைகளிலும் இதயமும் மனிதாபினமும் ஏந்தி..
மனிதப் பிச்சை எடுக்கிறேன்.
...
அகில உலகத்தோரே...
என் மழலைகளுக்கோர்
வாழ்வு தாருங்கள்.
ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........
//குழந்தைகளால் போரைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தியாகமோ துரோகமோ தெரியாது. புலியெதிர்ப்பு - ஆதரவு, தனிநாடு, இறையாண்மை, ஐக்கியம், நல்லிணக்கம், இனவெறி எதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தாயின் மார்புக் கதகதப்பு. தந்தையின் தோள்க் கணப்பு. //
கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
:( ஹ்ம்
யார் போரைப் புரிந்துகொள்ளாவிடிலும் வலியவன் நேர்மையற்று, தொடர்ந்து தொடர்ந்து திணித்துக்கொண்டேதான் இருக்கிறான்...
என்ன செய்ய...
எழுதி உழன்று வாசித்து கனந்து.. நாட்கள் செத்துக்கொண்டிருக்கின்றன
ம்
:-((
தமிழ்நதியின் கதைகளில்தான்
எத்தனை சோகம்...
ஆறுதல் சொல்ல முடியாத ரணம்..
காலம்தான் மாற்ற வேண்டும்
மனம் பிழிகிறது சகோதரி,
பட்டுப்போன சமூகத்தின்
இனம் காணா விசும்பல் சத்தம்
ஞாபகங்களால் மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டுத் துடிதுடிக்கிறது மனம்.
//////
தாங்க முடியா துயரம் :-(
எங்களுக்கு அணுகுண்டு எண்ணிக்கை
கணக்கு தீர்க்கவே நேரமில்லை...
மனித ரத்தம் குடித்தவன் பற்றி யோசிக்க
நேரம் வருவதற்குள் இன்னுமொரு
தேர்தல் வந்து விடும்.
அதற்குள் மறதிகள் இல்லாமலா போய்விடும் உங்களுக்கு.
உனக்குள்ளிருந்த ஆட்டுக்குட்டி இப்போது வெளியேறிவிட்டிருக்கும்.நீயொரு இறப்பர் பந்தெனக் குதித்தோடுவதை நிறுத்திவிட்டிருப்பாய். சொல்லப்படாத உன் கதைகள் உனக்குள் இறுகியிருக்கவும் கூடும்
"நெஞ்சு கனக்கிறது சகோதரி."
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம் இட்ட தாமரையின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது...தமிழ் கூறும் நல்லுலகம் யாவும் ஒரே போல் சிந்தித்தும் இன்னும் விடிவு வரவில்லையே நமக்கு..?
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம் இட்ட தாமரையின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது...தமிழ் கூறும் நல்லுலகம் யாவும் ஒரே போல் சிந்தித்தும் இன்னும் விடிவு வரவில்லையே நமக்கு..?
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம் இட்ட தாமரையின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது...தமிழ் கூறும் நல்லுலகம் யாவும் ஒரே போல் சிந்தித்தும் இன்னும் விடிவு வரவில்லையே நமக்கு..?
http://www.youtube.com/watch?v=_j6IBdHW_rY&feature=related
Watch this video by Declan Galbraith-Tell me why!
மழை நாளொன்றில் பக்கத்துவீட்டு சிறுமி நிவி, கப்பல் செய்துதரச்சொல்லி அடம்பிடித்தாள்..
ஒன்று..இரண்டு..மூன்று .. செய்ய செய்ய ஓடிச்சென்று பாவாடையை தூக்கிபிடித்துக்கொண்டி முற்றத்து நீரில் விட்டுக்கொண்டிருந்தாள். மழை இன்னும் வலுத்தது.
அடுத்த கப்பலுக்காக திரும்பி வந்தவளை," போதும் வா.. கப்பல் போறதை பாப்போம்" என அழைத்து வந்தேன். முற்றத்து நீரோடு கலக்க இடையில் நின்ற கப்பல்களை முதலில் நனைத்தும் பின் கவிழ்த்தும் பின் மூழ்க்கடிக்கவும் செய்திருந்தது மழை.
அவள் மூழ்கும் மூழ்கிய மூழ்கப்போகும் கப்பல்களை வெறித்துப்பார்த்துக்கொண்டே கேட்டாள். ஏன் .. மாமா இந்த தண்ணீயெல்லாம் சேமியா ஐஸ் மாதிரியாயிட்டா எப்படி இருக்கும்..
எப்போதும்போல பதிலற்று நான். வழக்கம்போல எதிர்கேள்வியொன்றை வைத்தேன்..
ஐஸ் கட்டியாயிட்டால் மூழ்கிய கப்பல் எல்லாம் என்ன செய்யும் நிவி...
விசித்திர பிராணியை பார்ப்பதுபோல ஒரே நிமிடம் என்னை பார்த்துவிட்டு மீண்டும் மழையை பார்த்துக்கொண்டே சொன்னாள்
""கப்பல்ன்னா எல்லாம் போய்கிட்டேதான் இருக்கும்..""
:( nothing to say :(
இந்தப் பதிவை ஒரு கதையாகவே பல நண்பர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். கதைபோன்ற தோற்றம் வரும்படி நான் எழுதியிருக்கிறேனோ என்னவோ... ஆனால், அந்த தமிழிசை... அவள் எங்கோ இருக்கிறாள். அவளுடைய தாய் என் தோழி. தந்தை என் கணவருக்கு நெருங்கிய சிநேகிதர். இருவரும் முள்ளிவாய்க்காலில் வீரச்சாவெய்தி விட்டதாகச் செய்தி கிடைத்தது. ஆனால், அது உண்மையாக இருக்கக்கூடாதென்பதே எங்களது பிரார்த்தனை.
ஒன்றும் சொல்வதற்கில்லை நண்பர்களே...:(
தமிழ்...
உங்களின் சிறுகதை தொகுப்பிலுள்ள நிலா கதையை படித்தவர்களுக்கு இதை கதை என்று நினைக்கத்தோன்றாது.
நான் உங்களிடம் பலமுறை கேட்க நினைத்து தவிர்த்த கேள்வி.. நிலா வின் இருப்பு குறித்தே..
உங்களிடமிருந்து எதிர்மறையான பதிலொன்றை ஒருவேளை நான் கேட்க நேரிடகூடுமோ என்கிற பேரச்சத்தாலே அதை தவிர்த்தேன்.
சிதைந்த புறச்சூழலும், உருவாகவேயில்லாத அகச்சூழலோடும் தமிழிசை வளரவேண்டும் எனில் அந்த வாழ்க்கைக்கு நெருக்கமான பெயர் மரணம்.
நிலா என்பது நிலா மாத்திரமா என்ன..
தமிழிசை என்பது தமிழிசை மாத்திரமா என்ன?
உங்கள் பதிவை கதையாக எண்ணவில்லை.
அப்படிநினைத்து இருந்தால்"ஆறுதல்
சொல்ல முடியாத ரணம்.காலம்தான்
மாற்ற வேண்டும்"என்று எனது
பின்னூட்டத்தில் குறிப்பிட வேண்டிய
அவசியமில்லை.
நீங்கள் எழுதிய விதத்திலும் கதை
போன்ற தோற்றம் இல்லை.
அக்கா,
எதேச்சையாக வளம்வருகையில் உங்கள் இணையமும் மாட்டிக்கொண்டது... தமிழிசைக்காக என் கண்களில் இருந்தும் நீர் வடிகிறது. எத்தனை எத்தனையோ தமிழிசைகள் (நளினியின் மகளையும் சேர்த்துத்தான்) இரத்தநெடிகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.... வேறு யாரோ உறவுகளிடம் வளர்க்கப்படுகிறார்கள்... ஈழ மக்களின் கொடுமை இது.... கணத்த நெஞ்ஞங்களுடன்....
-விமலன்
தயவு செய்து இது போன்று எழுதாதீர்கள். படிக்க முடியவில்லை, கண்ணை முட்டும் நீரால்.
Post a Comment