இடத்தை மாற்றிக்கொண்டால் துக்கமும் ஆறக்கூடும் என்ற நப்பாசையே, மது தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்தபோது அவளது வேண்டுகோளை ஏற்கச்செய்தது. ஆனால், எங்குபோனாலும் காயம்பட்ட மனத்தையும் கூட்டிக்கொண்டுதான் போகமுடிகிறது. புதிய இடத்தில் சற்று தணிந்தாற்போலிருந்த ஞாபகங்கள் ஓரிரு நாட்களிலேயே உள்ளுக்குள் குமுழியிடத் தொடங்கிவிட்டன. வாழ்வதான பாவனையை மற்றவர்களின் கண்களுக்கு அளிக்க முயன்று களைத்துப்போனதொரு நாளில் வெளியில் சென்றுவரலாமென்று என்னை வற்புறுத்தி அழைத்துப்போனாள் அவள்.
தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கியதுமே இனம்புரியாத அந்தரவுணர்வினால் மறுபடியும் வீட்டுக்குத் திரும்பிவிட என் மனம் அவாவியது. அவ்வூரின் குச்சொழுங்கைகள் கூட வழக்கமான வீதிகளை விட அகலமாக இருந்ததை அச்சோர்வினுக்கிடையிலும் கவனித்தேன். சில நூற்றாண்டுகளுக்கு முன் எவனோ ஒரு குறுநில மன்னனின் காதலி அங்கு வாழ்ந்ததாக மது சொன்னாள்.
குடிமனைகளுக்குச் சற்று தொலைவில் எந்தக் காலத்திலோ ஆறு ஓடிய தடம் வெள்ளைவெளேரென மணல்வெளியாய் நீண்டு கிடந்தது. வழியில் இருந்த கோவிலில் நித்திய பூசை நடப்பதன் சாயல்கள் இல்லை. கருங்கற் சுவர்களில் வெளவால்கள் முட்டிமோதித் திரிந்தன. கோபுரக்கூண்டுக்குள்ளிருந்த புறாக்கள் உக்கும் உக்கும் என்றன. ஆங்காங்கே நீளமும் அகலமுமான திண்ணைகளுடன்கூடிய, கூரை தாழ்ந்த வீடுகள் இடிந்து கிடந்தன. வயதானவர்களில் சிலர் கோடையின் வெம்மைக்கஞ்சி திண்ணைகளில் அமர்ந்திருந்தார்கள். இளைஞர்கள் அவ்வூரில் வாழ்வதற்கான அடையாளங்களே இல்லை. இறந்தகாலத்தின் கண்களால் உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறிய ஊர், புழுங்கிக்கொண்டிருந்த மனதின் வெறுமையை இன்னுமின்னும் விசிறியது. அந்த அனுபவத்திற்குப் பிறகு வெளியில் செல்ல மது என்னை அழைத்தபோதெல்லாம் மறுத்துவந்தேன்.
தனித்து விடப்பட்ட பொழுதுகளில் ‘நான் ஒரு முட்டாள்’என்ற நினைவு அடியாழத்தில் இருந்து மேலெழுந்து வந்து வதைத்தது. கடந்த நாற்பத்தெட்டு நாட்களில் பல நூறு தடவைகள் அப்படி நினைத்தாயிற்று. அவனுடைய நினைவு வந்தபோதெல்லாம் கண்களில் நீர் தளம்பிற்று. நாட்பட்டானபிறகு அந்தக் கண்ணீரின் ஊற்று, துயரமாக இருக்கவில்லை; அவமானமாக இருந்தது. ‘இப்படிப் போய் ஏமாறுவாயா…?’என்று கண்ணாடியைப் பார்த்துக் கேட்டேன். ஒரு தடவை கண்ணாடியை கைகளால் குத்தவும் செய்தேன்.
மது வெளியே போயிருந்தாள். தனது தோழியொருத்தியின் வீட்டிற்குச் சென்று வரலாமென்று என்னை அவள் அழைத்தபோது மறுத்துவிட்டேன். தனித்திருப்பதற்கான விருப்பமும் தனிமை அளிக்கும் நிராதரவான மனநிலையும் எனக்குள் ஒருசேர இயங்கின. முன்பெனில் தனிமையென்பது அவனது ஞாபகங்களை மீட்டுவதாக இருந்தது. பைத்தியக்காரத்தனமான சுகம். அல்லது, காதலிக்கும் பெண்களாலும் ஆண்களாலும் சுகமென்று நம்பப்படுவது. முன்பே சொன்னதுபோல, அவனுக்கும் எனக்குமான உறவு அறுந்துபோய் நாற்பத்தெட்டு நாட்களாகிவிட்டன. தனது அழைப்புகள் துண்டிக்கப்படுமென்று தெரிந்தே தொலைபேசியில் கூப்பிட்டான். அதையொரு சடங்குபோல வெகு கிரமமாகவும் நேர்த்தியாகவும் முன்பே திட்டமிட்டிருந்ததுபோலவும் செய்தான். அவனுடைய குற்றவுணர்வுக்குப் போடும் தீனியே அதுவென அறிந்திருந்தேன். தொலைபேசி அழைப்புகளால் என்னுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவரமுடியாத நிலையில் களைத்துப்போனவனாக நேரில் வந்தான். துயரப்படுவதான பாவனையோடு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான். ஏமாற்றத் துணிபவர்களுக்கு துயரப்படத் தெரியாதென்று சொல்லி அனுப்பிவிட்டேன். நூலிலிருந்து விடுபட்ட பட்டம்போல அவன் அன்று தன்னை உணர்ந்திருக்கலாம்.
நானோ உறங்கிக்கொண்டிருந்தபோதும் மனவலியோடு இருந்தேன் என்பதை கண்விழித்து எழுந்தபோதெல்லாம் உணர்ந்தேன். காலத்தை நகர்த்துவது ஒன்றே உடனே செய்யக்கூடியதாகத் தோன்றியது. வாகைப்பட்டியிலோ காலம் ஆமையென ஊர்ந்துகொண்டிருந்தது.
மதுவின் தாயார் உள்ளறையில் வெறுந்தரையில் சேலையை விரித்துப்போட்டு உறங்கிக்கொண்டிருந்தார். மதியத்தின் வெக்கை அவரை அசந்து தூங்கப் பண்ணியிருந்தது. வேம்புகளைச் சுற்றி கிளிகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. மற்றபடி அமைதி. முன் திண்ணையில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியொரு ஊரில் அப்படியொரு ஆளற்ற வேனல் தெருவை முன்னொருகாலம் பார்த்துக்கொண்டிருந்ததான ஞாபகம் ஓடியது. சில நாட்களாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துண்டு துண்டான எண்ணங்கள் மனதுள் சுழன்றுகொண்டிருந்தன. அப்படி நான் சிந்திக்கிறேன் என்று அறிந்திருந்தது மேலும் அச்சத்தை அளித்தது.
நீரடியில் கிடக்கும் பொருட்களாய் எண்ணற்ற பிம்பங்கள் உள்ளுக்குள் அசைந்தன. சோம்பிக் கிடந்த தெருவில் இறங்கினேன். காற்றில் அனல் இருந்தது. வெயில் மேகங்களுக்குள் மறைந்தும் தோன்றியும் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. கோடை மழையொன்று தரையிறங்குவதன் முன்னான சாயலைக் கொண்டிருந்தது தெரு. வழியில், தெற்கு நோக்கி உள்ளிறங்கிய கருங்கற்தளம் பாவிய சாலையைப் பார்த்தேன். இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தன. அதை நோக்கி ஈர்க்கப்படுவதை உணர்ந்தபோது அந்தச் சாலையில் நடந்துகொண்டிருந்தேன்.
ஒரே சாயலைக் கொண்ட நான்கைந்து சிறிய வீடுகளைத் தாண்டியதும் அந்த மதிற்சுவர் தொடங்கியது. வழக்கத்தைவிட உயரமான அந்த மதிலின் மேல் கூரிய முனையுடைய கம்பிகள் செருகப்பட்டிருந்தன. நடக்க நடக்க முடிவுறாமல் நீண்டுகொண்டிருந்த அந்தச் சுவர் பெரிய இரும்புக் கதவொன்றில் முடிந்து மறுபுறமாக நீண்டு சென்று எங்கோ கண்ணுக்கெட்டாத தொலைவில் முடிந்தது. கதவுக்குள் இரும்பினால் வனையப்பட்டிருந்தன யானைகள். அவற்றின் தும்பிக்கைகள் பல்திசைகளிலும் பரந்து இரும்புச் சதுரத்தை அடைத்துக்கொண்டிருந்தன. இரட்டைக் கதவுகள் பிணைக்கப்பட்டிருந்த தூண்கள் ஒவ்வொன்றும் மூன்றடிக்குக் குறையாத அகலம். இடதுபக்கத் தூணுக்கும் மதிற்சுவருக்குமிடையிலிருந்த வெடிப்பில் எந்தப் பறவையின் எச்சமோ செடியாகத் துளிர்விட்டிருந்தது. உயிர்ப்பின் மினுமினுப்போடு அசைந்துகொண்டிருந்த அந்தத் துளிருக்கும் மழைப்பாசி படிந்து காலத்திற்கு இரையாகிக்கொண்டிருந்த மதிலுக்கும் இடையில் முரணின் அழகு கூடியிருந்தது. இரட்டைக் கதவுகளை துருவேறிய பூட்டொன்று இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது. ஆனால், அது பூட்டப்பட்டிருக்கவில்லை. பேராவல் உந்த அதை விடுவித்தேன். மெல்லிய ஓசையெழ ஓராள் நுழையும்படியாக இரும்புக்கதவு திறந்துகொண்டது. அந்தச் சிறிய இடைவெளிக்குள் என்னை நுழைத்தபோது திரும்பிப் போய்விடும்படியாக மனக்குறளி எச்சரித்தது. நானோ மரணம் வந்து அழைத்தாலும் அதன் விரல்களைப் பிடித்துக்கொண்டு போய்விட ஆயத்தமாயிருந்தேன். அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருந்தேன். என் கசப்பே என்னைச் செலுத்தியது.
உள்நுழைந்ததும் திகைத்துப் போய் நின்றுவிட்டேன். பெருமரங்கள் நிறைந்த காட்டினை ஒத்திருந்தது அந்த இடம். ஏதோவொரு பறவை விட்டுவிட்டு வினோதமான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தது. பிராணிகளின் மெல்லிய அரவங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. முன்பொருகாலம் இருபுறமும் மரங்களடர்ந்த பாதையொன்று நடுவில் இருந்திருக்கவேண்டும். பாதை சிறுத்து ஒற்றையடிப்பாதையாகி அதுவும் மெலிந்து புற்களால் மூடுண்டிருந்தது. அதன் முடிவில் காலம் விட்டுச் சென்ற ஞாபகமாய் அந்த அரண்மனை உயர்ந்து நின்றது. உயிர்ப்பின் அசைவுகள் அற்ற கற்கூடமாயிருந்த அதை நோக்கி யாராலோ செலுத்தப்படுபவள் போல போனேன். அரண்மனையை நெருங்கியதும் ஒருகாலத்தில் தோட்டமாயிருந்ததென ஊகிக்கும்படியான முற்பகுதி புதர்மண்டிக் கிடந்ததைக் கவனிக்க முடிந்தது. மேலும் முன்னோக்கி நகர்ந்தபோது நீண்டு பருத்த பாம்பொன்று அடர்ந்த புதர்களுக்குள் வழிந்தோடி மறைந்தது. அப்படியொன்றும் மரணத்தை நான் விளைந்திருக்கவில்லை என்பதை அந்தக் கணம் உணர்ந்தேன். அங்கு நிற்பதன் விபரீதம் உறைக்க, திரும்பிச் செல்லக் காலெடுத்தேன். அப்போது அந்தக் குரலைக் கேட்டேன். முதலில் மெல்லிய கமகமாகச் சுழன்று வந்தது. பிறகு வார்த்தைகள். அந்த மொழி புரியவில்லை. ஆனால்… அந்தக் குரல்.. உயிரைத் திருகித் திருகிப் பிடுங்குகிற குரல். விம்மி விம்மி அழத் தூண்டுகிற தாபம் பொருந்திய குரல். குரல் வந்த திசையில் திரும்பியபோது, செடிகொடிகளுக்கு நடுவில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.
முதலில், அந்தப் பெண்ணின் இடுப்பைத் தாண்டி நீண்டு அடர்ந்திருந்த கூந்தலில் இருந்த தாழம்பூக் காட்டைப் பார்த்தேன். அவ்வளவு மலர்களை அவள் அள்ளிச் சூடியிருந்தாள். என்னை நோக்கித் திரும்பியவளின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனேன். அப்படியொரு பெண்ணை என் வாழ்நாளில் சந்தித்திருக்கச் சாத்தியமேயில்லை. ஆனால், அவள் யாரையோ எனக்கு ஞாபகப்படுத்தினாள். மாநிறமாயிருந்தாள். ஒரு துளிச் சதை உபரி இல்லா தேகத்தில் சிலைகளில் மட்டும் பார்க்கக்கூடிய நேர்த்தி. எத்தனை முழச்சேலையோ அவளைச் சுற்றிச் சுற்றிப் படர்ந்திருந்தது. மார்க்கச்சை மேலுடலை இறுக்கிப்பிடித்திருந்தது. கண்கள் தெளிந்த வானத்தின் நிறம்… கருவிழிகளிலோ துயரம் படிந்திருந்தது. பார்க்கப் பார்க்கச் சலிக்காத பெண்ணாயிருந்தாள் அவள். அவள் கன்னங்களில் கண்ணீர்த்துளிகள்…பாறையிலிருந்
“ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?”
வழக்கமான பேச்சுவழக்கு எனக்கு மறந்துபோய்விட்டது. இன்றைக்கு எல்லாமே அதிசயமாக இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.
தாழம்பூவும் உழுந்தும் கலந்த மணம் அவளிலிருந்து கமழ்ந்துகொண்டிருந்தது. அந்தக் கணம் எனக்குள் ஒரு வினோதமான ஆசை கிளர்ந்தது. அவளைக் கட்டியணைத்து முத்தமிட விரும்பினேன். ஏதோவொரு ஜென்மத்தில் தீராத காதல் என்னை அங்கு அழைத்து வந்ததாக நான் நம்பத்தொடங்கினேன். ஆனால்… நான் ஒரு பெண்…
“உன்னைக் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள்”என்றாள் அவள்.
நல்லவேளையாக அவள் தமிழில் பேசினாள். ஆனால்… வேறொரு மொழியில் பாடிக்கொண்டிருந்தாளே…
ஆக, அவளுக்கு என் மனதில் ஓடும் எண்ணங்களைப் படிக்க முடிகிறது. இன்றைய நாளை அதிசயத்திடம் ஒப்படைத்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். சாதாரண வாழ்வின் ஏமாற்றத்திலிருந்து தப்பிக்க ஒரு கொலையை அல்லது தற்கொலையைச் செய்யும் நிலையில் இருந்த எனக்கு, இந்த அசாதாரணப் பெண் உதவக்கூடும்.
“நீ எப்படி உள்ளே வந்தாய்?”
“கதவு திறந்திருந்தது…”
அவள் சிரித்தாள். அவள் சிரித்தபோது செடிகொடிகள் மாயம்போல அசைந்தன. ஆனால், அந்தச் சிரிப்பின் பொருளை என்னால் உணரமுடிந்தது. ‘திறந்திருக்கும் வீடுகளினுள்ளெல்லாம் நுழைந்துவிடுவாயா?’என்பதன்றி அந்தச் சிரிப்புக்கு வேறென்ன பொருளிருக்க முடியும்?
“இது உன்னுடைய இருப்பிடமா? எவ்வளவு பெரிது!”என்றேன்.
“ஆம்…. இந்த அரண்மனையை நீ பார்க்க விரும்புகிறாயா?”என்று கேட்டாள் சிரித்தபடி. அவள் சிரிக்கும்போதெல்லாம் தாழம்பூ வாசனை எழுந்தடங்கியது. என் கண்களிலிருந்த வியப்பு அந்தக் கேள்விக்கு அவளைத் தூண்டியிருக்கவேண்டும்.
அந்தக் கணம் அவள் எங்கே அழைத்தாலும் போகத் தயாராக இருந்தேன். எனக்கு அவளது அருகாமையில் இருந்தாலே போதுமென்றிருந்தது. பதிலேதும் சொல்லாமல் அவளைப் பின்தொடர்ந்தேன். புதர்களுக்குள் சரசரவென்று ஊரும் சத்தம் கேட்டது. அங்கு பாம்புகளாலும் விஷஜந்துகளாலுமான ஓருலகம் இயங்கிக்கொண்டிருந்தது. ஒருகணம் என்னுடைய பைத்தியக்காரத்தனத்தைக் குறித்து அஞ்சினேன். விசித்திரங்களையும் மாயங்களையும் உள்ளடக்கிய நெடிய மதிற்சுவர்… அதனிலும் மாயவசீகரத்தோடு தோன்றுகிற இந்தப் பெண்… நான் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என் முட்டாள்த்தனத்தை மேலுமொரு முறை நிரூபித்துக்கொண்டிருக்கிறேனா…?
தரையிலிருந்து சில அடிகள் உயரத்திலிருந்தது அந்த அரண்மனையின் நுழைவாயில். படிகளில் ஏறி அகல் விளக்கினைத் தாங்கிய பதுமைகள் செதுக்கப்பட்ட கனத்த கதவுகளினூடே என்னை அழைத்துச் சென்றாள். அங்கு மனிதர்கள் வசிப்பதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை. சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே செப்புப் பதுமைகள் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி நின்றிருந்தன. அவற்றில் காலம் பச்சைக் களிம்பை ஏற்றியிருந்தது. உத்தரத்திலும் சுவர்மூலைகளிலும் ஒட்டடை படிந்து போயிருந்தது. காலடி பட்டு தூசி கலைந்த இடங்களில், தரை செஞ்சாந்தால் மெழுகப்பட்டு வழுவழுவென்றிருந்ததைக் காணமுடிந்தது. கன்னத்தை தரையில் அழுத்தி வைத்துக்கொண்டு அங்கேயே படுத்துவிடத் தூண்டியது குளிர்ச்சி. வெளியில் அனலெறிந்துகொண்டிருக்கையில் இந்த இடம் மட்டும் நதியின் மேலிருப்பது போல குளிர்ந்தது. அந்த அரண்மனையின் மனிதர்களுக்கு வேட்டையின்பாலிருந்த காதலை வெளிப்படுத்தின சுவர்களில் அச்சுறுத்தியபடி தொங்கிய மிருகங்களின் தலைகள்.
“எத்தகைய வாழ்வு!!!”வியந்தபடி நடந்தேன்.
நடக்கும்போது ஒன்றைக் கவனித்தேன். அந்தப் பெண்ணின் நிழல் தரையில் விழவேயில்லை. என்னுருவம் மட்டும் தலைகீழாக நடந்துகொண்டிருந்தது. முதல்முறையாக அவளை அஞ்சினேன். ஒரேசமயத்தில் என்னை ஈர்க்கவும் அச்சுறுத்தவும் செய்பவளின் பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். கேட்கலாமென்றால், வழியிலிருந்த ஊஞ்சலில் தாவியேறிவிட்டிருந்தாள். தரையை உந்திப் பறந்தாள். நிமிர்ந்து பார்த்தபோது வெறும் ஊஞ்சல் அந்தரத்தில் நின்றது. அவளைக் காணவில்லை. பதறிப் போனேன். அங்கிருந்து வெளியேறினால் போதுமென்று தோன்ற, சுற்றுமுற்றும் பார்த்தேன். கதவு எங்கேயுமில்லை. அந்தக் கூடம் சுற்றவர சுவர்களால் மூடப்பட்டிருந்தது. மெதுவாக மிக மெதுவாக சுவர்கள் என்னை நெருங்கி வருவதை உணர்ந்து அலறினேன். சதைகள் நசுங்கி எலும்புகள் நொறுங்கி குருதி வெளியேறி மூச்சுத்திணறி இறந்துபோகவா இங்கு வந்தேன்… பிரார்த்தனையைப் பிதற்றத் தொடங்கியபோது அவள் மீண்டும் அங்கு தோன்றினாள்.
“நான் போக வேண்டும்”ஏறத்தாழ மன்றாடினேன்.
அவளோ சிரித்தாள். எனது இறைஞ்சுதல் அவளது செவிகளை அடையவேயில்லை. அந்த அரண்மனையின் அறைகள் சமதளத்தில் இருக்கவில்லை. எனது கைகளைப் பற்றி சற்றே உயரத்திலிருந்த கூடத்திற்கு அழைத்துப்போனாள். அந்தத் தொடுகையில் எனது பயம் அழிந்தது. அவளுடைய கைகள் மார்கழி விடிகாலையில் தண்ணீரைத் தொடுவதைப் போல குளிர்ந்திருந்தன. அவள் என்னை அழைத்துச் சென்ற திசையில் கதவு இருந்தது.
“உன் பெயர் என்ன…?”
“தாழம்பூ”
அந்தப் பெயரைக் கேட்டு வியப்படையவில்லை. ஏற்கெனவே அறிந்து, காலநீட்சியில் மறந்திருந்த பெயரை ஞாபகப்படுத்திக்கொள்வதுபோலவே தோன்றிற்று.
அவள் என்னைக் கூட்டிச் சென்ற கூடத்தின் சுவரில் மூன்று ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. முதலாவது ஓவியத்திலிருந்தவர் பெரிய மீசையும் உறுத்துப் பார்க்கும் விழிகளும் அரசர்களுக்கேயுரிய உடையலங்காரத்தோடும் இருந்தார். இடுப்பிலிருந்து தொங்கிய வாள் பாதம் வரை நீண்டிருந்தது. அவர் நின்றிருந்த தோரணையில் அச்சமின்மையும் அதிகாரமும் வெளிப்பட்டது. இரண்டாமவருக்கு பெண்மையின் சாயல் மிளிரும் முகம். மெல்லிய மீசை. உதடுகளும் மெல்லியவையே. அரச வஸ்திராபரணங்களைக் கழற்றிவிட்டால் அவர் அன்றாடம் தெருவில் காணும் மனிதர்களில் ஒருவராகிவிடுவார். ஆனாலும், அவரது விழிகளில் இறுமாப்பு குடிகொண்டிருந்தது. மூன்றாவது ஓவியத்தில் இருந்த இளைஞனின் விழிகளில் எவரையும் ஈர்க்கக்கூடிய சாந்தமும் தெளிவும் துலங்கின. அவன் தாத்தாவின் கம்பீரத்தையும் கூடுதல் வசீகரத்தையும் கொண்டிருந்தான். அவன் கண்கள் என்னைப் பார்த்தன. இமைத்து ஒரு கணம் புன்னகைத்தாற் போல தோன்றியது.
“அழகாயிருக்கிறார்”என்றேன்.
தாழம்பூ விருட்டென்று என்னை நோக்கித் திரும்பினாள். இருண்டிருந்த அந்தக் கூடத்தில் அவளுடைய கண்கள் நெருப்புத் தணலென ஒளிர்ந்தன. கோபமிகுதியால் அவை பச்சையாக மாறியிருந்தன. அக்கணம் நானொரு பாம்பின் அருகில் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். என் உடல் நடுங்கத் தொடங்கிவிட்டிருந்தது. அங்கிருந்து ஓடிவிடுவதே புத்திசாலித்தனம் என்று என் உள்ளுணர்வுக்குத் தோன்றியது. என் முகத்தைப் பார்த்ததும் அவள் கண்களிலிருந்த கனல் மறைந்தது. என் அச்சத்தைப் போக்கடித்து நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் மீண்டும் என் கைகளைப் பற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றாள். அந்த விரல்களில் மார்கழியின் குளிர்ச்சி அகன்றிருந்ததை உணர்ந்தேன். அரண்மனையெங்கும் புறாக்களின் அமுங்கிய குரல் கேட்டுக்கொண்டிருந்தது.
தாழிடப்பட்டிருந்த அறையொன்றின் கதவை அரையடிக்குக் குறையாத நீளமுடைய திறவுகோலால் திறந்தாள் தாழம்பூ. அதுவரை அவளிடம் இல்லாதிருந்த அந்தத் திறவுகோல் திடீரென எங்கிருந்து தோன்றியது என்ற கேள்வி எனக்குள் எழுந்து அடங்கிற்று. அகலமான பஞ்சணையுடன் கூடிய கட்டில் ஒன்று அந்த அறையினுள் கிடந்தது. விதிவிலக்காக அந்த அறை மட்டும் சிறுதூசியும் படியாமல் சுத்தமாக இருந்தது. படுக்கை விரிப்பிலிருந்து, அப்போதுதான் துவைக்கப்பட்டதான சுகந்தம் வீசிற்று. ஐந்தாறு பேர் சேர்ந்தாலும் நகர்த்த முடியாத கனமுடைய தேக்குமர எழுதுபலகையில் சுவடிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதில் சுவடியொன்று விரித்த நிலையில் கிடக்கக் கண்டேன். யாரோ ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தபோது அவசர வேலையாக பாதியில் விட்டுச் சென்றதுபோலிருந்தது அந்தக் காட்சி. ஆவல் தாளாமல் அருகில் சென்று வாசித்தேன்.
“கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதல ரகலக் கல்லென் றவ்வே”
“குறுந்தொகை”என்றாள் தாழம்பூ.
அவளை நிமிர்ந்து பார்த்தேன். நான் நினைத்துக்கொண்டிருந்த பெண்ணில்லை இவள் என்ற எண்ணம் உள்ளுக்குள் தோன்றி மறைந்தது.
“நிறையப் படிப்பாயா…?”
ஆமெனத் தலையசைத்து கூச்சத்துடன் புன்னகைத்தாள். எதிர்பாராத காட்சிகளால் எனக்குள் தணிந்திருந்த காய்ச்சல் அந்தத் தலையசைப்பிலும் புன்னகையிலும் மீண்டும் அனலெறியத் தொடங்கிற்று. அவளை நெருங்கி அணைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் முன்னிலும் அதிகமாய்க் கிளர்ந்தது. எனக்குள் புயலென அடித்துக்கொண்டிருக்கும் அந்த உணர்வின் பெயரறியாது அதில் சிக்குண்டு கிழிபடுபவளாக இருந்தேன்.
தாழம்பூ அந்தப் பஞ்சணையில் சென்று அமர்ந்தாள். அப்போது அவள் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. விசித்திரங்களுக்கு முடிவேயில்லை என்று நினைத்துக்கொண்டேன். படுக்கை விரிப்புகளை தன் நீண்ட விரல்களால் நீவியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தாள். அங்கிருந்த பாத்திரத்தில் தண்ணீர் நிறைந்திருக்கிறதா எனக் குலுக்கிப் பார்த்தாள். இருந்தது போலும். பிறகு அறையைப் பூட்டிவிட்டு என்னையும் தன்னையும் மறந்தவளாக அந்த அறையிலிருந்து வெளியேறி வேகவேகமாக நடந்துபோனாள். அவளுடைய மூச்சு பாம்பின் சீறலாக மாறியிருந்தது. அவளை நெருங்குவதற்கு நான் ஓடவேண்டியிருந்தது. எந்நேரமும் விபரீதத்திற்குக் காத்திருந்தாலும், ஏதோவொரு காரணத்தினால் அவள் எனக்குத் தீங்கிழைக்க மாட்டாள் என்று உள்ளுணர்வு நம்பியது. அந்த நம்பிக்கையில் தயங்கித் தயங்கி எனது கேள்விகளை உதிர்க்கவாரம்பித்தேன்.
“அந்த அறையில்தான் நீங்கள் உறங்குவீர்களா?”
“ஆம்…”
“நீ அவரைக் காதலித்தாயா?”
அவள் நடப்பதை நிறுத்தி என்னைப் பார்த்துச் சிரித்தாள். உலகத்தின் கசப்பையெல்லாம் உருத்திரட்டி வழிந்த புன்னகை! ‘இவ்வளவும் பார்த்தபிற்பாடு இது என்ன கேள்வி’என்பதுபோல என்னை உறுத்து நோக்கினாள். பிறகு, அயர்ச்சியோடு ஆமென்பதாகத் தலையசைத்தாள்.
“அவருடைய குதிரையின் குழம்படி ஓசை கேட்டதுமே எனது இதயம் தரையில் விழுந்து துடிக்க ஆரம்பித்துவிடும்.”
“அவரும் உன்னை....?”
“ஆமாம். நேசிக்காமலா என்னை இப்படியொரு அரண்மனையில் கொண்டுவந்து சேர்த்தார்?”
இதைச் சொல்லிவிட்டு உரத்துச் சிரித்தாள். சிரிப்பொலியில் அதிர்ந்த புறாக்கள் சிறகடித்துப் பறந்தன. ஏதேதோ நினைவுகள் அலைபுரளும் முகத்தோடு சில நிமிடம் கழிந்தது.
பிற்பாடு அவள் என்னை அழைத்துச் சென்ற இடம் ஒரு கலைக்கூடம். அதன் மூலையில் யாழொன்று சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகில்போய் அதன் தந்திகளை வருடினாள். சாத்தப்பட்டிருந்த நிலையிலும் அதிலிருந்து எழுந்த சுநாதம் தாழம்பூவுக்கு அதிலிருந்த தேர்ச்சியை உணர்த்திற்று. விசாலமான அந்தக் கூடத்தை கலைஞர்களின் ஓவியங்களும் சிற்பங்களும் அலங்கரித்தன. அவள் அங்கிருந்த இருக்கையொன்றில் அமர்ந்தாள். அவளது தோரணை அந்த அரண்மனையின் மகாராணி தான்தான் என அறிவித்தது. அவளுடைய அழகே அந்தச் செருக்குத்தான் எனத் தோன்றியது. என் வயதொத்தவள்தான். ஆனால், முன்னர் பார்த்த, பழகிய எந்தவொரு மானுடத்தியின் சாயலோ நடத்தையோ அவளிடமிருக்கவில்லை.
இறந்தகாலத்துள் மூழ்கின அவள் விழிகள்.
“அந்நாட்களில் இந்த இடம் எப்படி இருந்ததென்கிறாய்… நீ வரும் வழியில் பார்த்தாயே சிறிய வீடுகள்… அவற்றிலும் இந்த அரண்மனையின் பின்புறத்திலுள்ள வீடுகளிலும் பணியாட்கள் தங்கியிருந்தார்கள். அவர் இங்கு வரும் நாட்களில் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு இந்த அரண்மனை ஒளிபொருந்தியதாக மாறிவிடும். பாடல்கள் ஒலிக்கும். சதங்கைகள் கலீர்கலீரென்கும். நான் பாடவாரம்பித்தால்… இதோ இந்த இருக்கையில் சாய்ந்து நீள்விழிகளை மூடிக்கொண்டுவிடுவார். என் பாடலே அவரை இங்கு அழைத்துவந்தது. ஈற்றில்…”
சில நிமிடங்கள் இறந்தகாலத்துள் முழுமையாக அமிழ்ந்துபோனாள்.
“நீ அழகாகப் பேசுகிறாய். ஈற்றில் என்னவாயிற்று?”
“எதிர்காலம் குறித்த எங்களுடைய கனவுகளைக் கேட்டிருந்த இந்த அரண்மனையின் சுவர்களில் செவிகளைப் பதித்துக் கேள். என்னைக் காட்டிலும் அவை அழகாகப் பேசக்கூடும்.”
மதியம் சரிந்து மாலையாகிவிட்டிருந்தது. மதுமிதா என்னைத் தேடிக்கொண்டிருப்பாள் என்ற எண்ணம் எழுந்தது.
“என்னைத் தேடுவார்கள். நான் போகவேண்டும்”என்றேன் மெதுவாக.
“போகத்தான் வேண்டுமா…?”அது தனிமையின் குரலாக ஒலித்தது. என்னால் அந்தக் குரலை மிதித்துவிட்டுச் செல்லமுடியவில்லை.
“உனக்கு ஒரு இடத்தைக் காட்டுகிறேன். என் பின்னே வா…”
அவள் துள்ளியெழுந்தாள். விரித்த கருங்கூந்தல் பின்புறங்களில் படிந்தசைய நடந்தவளைப் பின்தொடர்ந்தேன். அவளைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை என்னுள் மிகுந்து வந்தது. ஒரேயொரு தடவை அந்தத் தாழம்பூ வாசனையை நெருங்கி உள்ளிழுத்து எனக்குள் நிறைத்துக்கொள்ள வேண்டும். காலாகாலங்களுக்கும் நான் அதனுடன் வாழ்ந்துவிடுவேன். அந்த உதடுகளில் ஒரேயொரு முத்தம்… அதன் வெம்மை போதும் என் ஞாபகங்களைக் குளிர்த்த.
நீண்ட தூரம் அவளோடு நடந்தபிறகு அரண்மனையின் பின்பகுதியை வந்தடைந்திருப்பதை உணர்ந்தேன். கீழிறங்கப் படிகள் இருந்தன. அவை பின்புறத்தில் அமைந்திருந்த தோட்டத்திற்கு இட்டுச்சென்றன. இருள் சூழவாரம்பித்திருந்தது. ‘எங்கே அழைத்துச் செல்கிறாள்?’என்ற கேள்வியுடன் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். அச்சம் அகன்றுவிட்டிருந்தது. அதனிடத்தில் வியப்பும் திகைப்பும் காதல் போல ஓருணர்வும் நிறைந்திருந்தன. வானத்து நிலவு, வெள்ளியிலிருந்து தங்கமாக உருமாறியிருந்தது. அந்த மெல்லிய இருளும் காற்றும் நிலவொளியும் அவளது அருகாமையும் என்னை வேறொருத்தியாக மாற்றியிருந்தன. அந்நேரம் யாராவது பாடிக் கேட்கவேண்டும் போலிருந்தது. புற்களால் மூடப்பட்டிருந்த பாதையில் அநாயாசமாக அவள் நடந்துபோனாள்.
செடிகொடிகள் மீது நிலவினொளி படர்ந்து இலைகள் பளீரிட்டுக்கொண்டிருந்தன. இயற்கையின் வாசனையை காற்று அள்ளிவந்தது.
தாழம்பூ ஓரிடத்தை அடைந்ததும் நின்றாள். அதுவொரு கேணி. குறுக்கு விட்டம் முப்பதடிக்குக் குறையாது. உள்ளிறங்க நாற்புறமும் படிகள் இருந்தன. கரைகளில் நீர்ப்பாசி பயிரெனப் படர்ந்திருந்தது. எட்டிப் பார்த்தேன். ஆழமறியாதபடிக்கு இருளின் கருமையில் உறங்கிக்கொண்டிருந்தது கேணி. நீரைக் குறுக்கறுத்து நீந்திய சிறுமீன் கூட்டங்கள் அவ்விரவில் நில வெள்ளிகளென மினுங்கின. அடங்கியிருந்த அச்சம் மேலெழ ஆரம்பித்தது. கடைசியில் இந்த மாயப்பெண்ணின் கைகளால் நீர்நிலையில் தள்ளப்பட்டு அநாதரவாக இறந்துபோவதுதான் என் விதியோ என்று துக்கித்தேன்.
“அன்று இறுதியாக நாங்கள் சந்தித்துக்கொண்டோம்”கேணியின் கரைக் கட்டில் அமர்ந்தபடி சொன்னாள்.
“இறுதியாகவா…?”
“ஆம்… இந்த உலகத்தைப் பொறுத்தளவில் இறுதி. எனக்கு முடிவற்றது.”சிரித்தாள். அது சிரிப்புப் போலவே இல்லை.
“அரயத்தி அம்மன் சந்நிதியில் பெண் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தார். என்னைப் போல சாதாரண பெண்ணில்லை அவள்… குறுநில மன்னனொருவனின் மகள்… அன்று அவர் குதிரைகூட பட்டுக் குஞ்சம் கட்டியிருந்தது.”
கசப்பும் ஏமாற்றமும் நிறைந்து வழிந்தன வார்த்தைகளில். நிலவை நிமிர்ந்து பார்த்துப் பெருமூச்செறிந்தாள். அந்தப் பெருமூச்சு என் நெஞ்சைச் சுட்டது.
இப்படி எத்தனை இரவுகளை நான் கழித்திருந்தேன்! தென்னோலைக் கீற்றுக்கள் அசைவதை விடிய விடியப் பார்த்துக்கொண்டிருந்து கழித்த அவ்விரவு… தூரத்தில் கடலலைகள் வாவாவென இரைந்து என்னை அழைத்தபடியிருக்க விடிகாலையில் கண்ணயர்ந்தது…
“என் விழிகளை எதிர்கொள்ளக் கூசினார். அடிக்கடி இமை தாழ்ந்த அவருடைய விழிகள் என்னிடம் மன்னிப்பை யாசித்தன. திரும்பிச் செல்வதற்கு அவசரப்பட்டார். அன்றிரவு மட்டும் அங்கு தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக் கேட்டுக்கொண்டேன்.”
“தங்கினாரா? நீ அவரை மன்னித்தாயா?”
“ஆம். அன்றிரவு பிறைநிலவு சுடர்ந்துகொண்டிருந்தது. அவர் தன் தந்தையைத் தன்னால் எதிர்க்க முடியாதென்றார். நான் அவருடைய காதலியாக நீடித்திருக்கலாம் என்றார். மன்னிப்புக் கேட்டு மன்றாடிய உதடுகளை என் உதடுகளால் மூடினேன். இனிமேல் தூலமாக அடையவே முடியாத அந்த உடலை நான் அடைந்தேன். எந்தக் கண்களைப் பார்க்கவியலாமல் பகலில் வெட்கம் பிடுங்கித் தின்றதோ அந்தக் கண்களை வெறியோடு முத்தமிட்டேன்.”
அந்த வார்த்தைகளை நான்தான் உச்சரித்துக்கொண்டிருந்தேன். அவனுடைய திருமணப் பத்திரிகையில் இருந்த பெண்ணின் பெயர் ஞாபகம் வந்தது.
இருள் முற்றாக மூடிவிட்டது. இருளில் தாழம்பூவின் கண்கள் மினுமினுத்துக்கொண்டிருந்தன. மது என்னைக் காணாமல் பதைத்துப்போயிருப்பாள் என்ற கவலை அடியாழத்திலிருந்து மிதந்து வந்தது.
“பிறகுகொருநாளும் நீ அவரைப் பார்க்கவேயில்லையா…?”
“பார்த்தேன். பார்த்துக்கொண்டிருக்கிறேன்..”
“ஓடிவிடு… ஓடிவிடு…”அந்தக் குரல் என் செவிகளில் நடுக்கத்தோடு கரகரத்தது.
“ஆழத்தை நோக்கிச் சரிந்துசெல்வது இனிய அனுபவம்”என்றாள். நான் அச்சத்தோடு அவள் கண்களை நோக்கினேன். அவளுடைய கண்களிலிருந்த துயரம் கரைந்திருந்தது. அவள் பின்னாலிருந்த செவ்வரளியைப் பார்த்தேன். அவளுடைய உடலினூடாக செந்நிற அரவத்தின் தலையென அம்மலர் அசைந்துகொண்டிருந்தது.
“எத்தனை தடவைதான் என்னை நீ கொல்வாய்?”என்றேன்.
அந்தக் கேள்வி என்னிலிருந்து புறப்பட்டதை உணர்ந்தபோது திடுக்கிட்டேன். என்ன அதிசயம்! அந்தக் கேள்வியை உதிர்த்தது என் உதடுகள்தாம்!
தாழம்பூ விசும்பி விசும்பி அழுதாள். அந்த இரவுக்கு மட்டும் இதயம் இருந்திருந்தால் அது கிழிந்து குருதி கொட்டியிருக்கும்.
நான் வெளிவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என்னை அவள் தடுத்து நிறுத்தவில்லை. தாளவியலாத வேதனையொன்று திடீரெனக் கிளம்பி என்னை வாட்டியது. அங்கே அவளைத் தனியாக விட்டுவிட்டுப் போக என்னால் முடியவில்லை. சில நிமிடங்கள் முன்னகர்வதும் பின்னோக்கிச் செல்வதுமாகக் கழிந்தன. ஈற்றில் நான் ஆற்றாமையின் கண்ணீரோடு அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினேன். இருளில் அவள் ஒரு சிலையென நின்றிருந்தாள்.
வெளிவாயிற் கதவைக் கண்டுபிடித்து வெளியேறியபோது மதுவைப் போலொரு பெண் வந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். மதுவேதான்! எனது உடல் நடுங்கிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது.
“உன்னைத் தேடியே வந்தேன்”என்றாள்.
“என்ன இது? இவளும் இன்று இயல்பில் இல்லை”என்று நினைத்தேன்.
பிறகு, அரண்மனையை நோக்கித் தயங்கியபடியே ‘தாழம்பூ’ என்றேன். கண்களிலிருந்து உதிர்ந்த நீர்த்துளிகள் அக்கருங்கற் தளத்தில் விழுந்து சிதறின.
“நான்தான் அவள்”என்றாள் மது.
நான் அவநம்பிக்கையோடு மதுவைப் பார்த்தேன். அவள் எனது கையைப் பற்றி என்னை இறுக்கிக்கொண்டபோது அவள் மீது தாழம்பூ வாசனையடித்தது.
நாங்கள் அவ்விடத்திலிருந்து வேகவேகமாக அகன்றோம். சற்று தொலைவில் போனதும் மெல்லத் திரும்பிப் பார்த்தேன். சிறிய படைவீடுகளும் அரண்மனை மதிலும் சுவடில்லாமல் மறைந்திருந்தன. பெருங்காடொன்று கருங்கற் சாலையை மூடியபடி சரசரவென நகர்ந்துவந்துகொண்டிருந்தது.
நன்றி: காலம் (கனடாவில் வெளிவரும் இலக்கிய சஞ்சிகை)
5 comments:
அருமையான காதல் கதை. விகடனிலோ குமுதத்திலோ வரவேண்டிய கதை. முடிவைப் படிக்கையில் மனம் கனக்கிறது. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.
நண்பர் செல்லப்பா,
'காலம்'சஞ்சிகையானது விகடன், குமுதத்தைவிட இலக்கியத்தரம் வாய்ந்தது. கனடாவிலிருந்து வரும் நண்பர்களிடம் சொல்லி எடுப்பித்து நீங்கள் அந்த சஞ்சிகையை அவசியம் படிக்கவேண்டும்.
நன்றி தனபாலன். வலைச்சரம் பார்த்தேன்.
சந்திரமுகி படம் பார்ப்பது போல இதயம் பக் பக் என அடிக்க வாசித்து முடித்தேன்.
எழுதியவருக்கு ஏதேனுமாகிவிடுமோ என்ற பதட்டம் கடைசி வரைக்கும் குறையவே இல்லை.
அழகழகான ஏராளம் கவித்துவம் மிக்க வரிகளில் நின்று ரசிக்க முடியாமல் தாழம்பூ துரத்திக் கொண்டே வந்தாள் வாசக மனதையும்.
நல்ல காலம் பகற்பொழுதில் வாசித்து முடித்தேன்.இல்லை இன்னும் இதயத் துடிப்பு எகிறியிருக்கும்.
பெண் என்றால் என்ன? பேய் என்றால் என்ன? தாழம்பூவுக்காக மனது அனுதாபப்பட்டுக் கொண்டே வந்தது.
கடைசி முடிவு எதிர்பாராதது. நல்ல முடிவு.
இனிமேல் தாழம்பூ என்னும் போதெல்லாம் வேறெதுவும் ஞாபகம் வராது உங்கள் கதை நாயகியை தவிர.
பாராட்டுக்கள்.
-தீபிகா-
நல்லதொரு சிறுகதை. ஏன் த்ரில்லராக இது எழுதப்பட்டது என்பது எனக்கு மனதில் எழுந்த கேள்வி.
நண்பரே! வெகுஜனப் பத்திரிகைகளில் வந்து அதிகம் பேரைச் சென்று சேரவேண்டிய கதை என்ற பொருளில் சொன்னேன். ‘காலம்’ பற்றி எந்தவகையிலும் நான் தாழ்வாகச் சொல்லிவிடவில்லை என்பதை அறியுங்கள்.
Post a Comment