Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

6.01.2009

பதிவினைப் ‘பின்தொடரும்’தெளிவு

வாழ்வில் எதிர்ப்படும் யாவற்றிலிருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். மனிதர்கள், புத்தகங்கள், அனுபவங்கள், கலைகள், ஊர்கள்… இவ்வாறாகப் பட்டியல் தொடரும். அண்மையில் என்னால் எழுதப்பட்ட ‘ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவும் ஜெயமோகனும்’என்ற பதிவின் வழியாக நிறைய அறிந்துகொள்ள வாய்த்தது. எந்தப் பதிவினைவிடவும் அதிகமான வாசகர்களையும் பின்னூட்டங்களையும் எதிர்வினையான பதிவுகளையும் விவாதங்களையும் இந்தக் கட்டுரை ஏற்படுத்தியது எப்படி என்று நினைத்துப் பார்த்தேன். ஈழமக்களின் அவலங்களைக் குறித்து இவர்கள் இருவரும் மௌனமாயிருந்தார்கள் என்பதைக் குறித்து பெரும்பாலானோர் உணர்ந்தே இருந்தார்கள். ஆனால், எவரும் அதைக் குறித்துக் கேள்வி எழுப்பிட முனையவில்லை. யாரோ ஒருவர் அதைப்பற்றிப் பேச முற்படும்போது தங்கள் ஆதரவை வழங்க முன்வருகிறார்கள். இந்த விட்டேத்தியான மனோபாவத்திற்குக் காரணந்தான் என்ன? சோம்பலா? ‘அவர்கள் பெரிய எழுத்தாளர்கள்… அவர்களை எதிர்ப்பதாவது’என்ற அச்சமா? நாம் ஏதாவது சொல்லப்போய் வாங்கிக்கட்டிக்கொள்வோம் என்பதனால் வாளாவிருந்தார்களா? அஞ்சி அஞ்சியே உண்மைகளை ஆழப் புதைத்துவிடுகிறோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது.

ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும் பதில் அளிக்கும்போது ‘ஆம் நீங்கள் சொன்னது சரிதான்… இல்லை.. அதில் கொஞ்சம் தவறு இருக்கிறது’என்று பதிலளிக்கும்போதே ஒரு படி மேலே நின்று பேசுவதான தொனி, சட்டாம்பிள்ளைத்தனம் வந்துவிடுகிறது. அதைத் தவிர்க்கும் ஒட்டுமொத்தமான பதிலாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

தற்காலிக பெருமிதங்களால் தூண்டப்பட்டு இதனை நான் எழுதவில்லை. பின்னூட்ட உடுக்கைகளால் உருவேறித் தலைவிரித்து ஆடவும் இல்லை. (அதற்கென்று பதிவுலகில் சில பேர் இருக்கிறார்கள்.) ஒருவனை அடித்தபிற்பாடு யாரைக் கண்டாலும் சட்டைக்கை உயர்த்தித் திரியும் விடலைத்தனமும் இல்லை இது. மனங்கள்… இந்த மனங்கள்… என்று நினைத்துக் கொண்டேன். ஒருவரைப் பற்றி, அதிலும் பிரபலமான ஒருவரைப் பற்றி எழுதியதும் இத்தனை பேர் வந்து வாசிக்கிறார்களே… அந்த ஆர்வத்தின் பின்னிருக்கும் அந்தரங்கச் சுவை ஆவலை நினைத்துப் பார்த்தேன். சுவாரசியமாக இருந்தது. எழுத்தாளர்கள் சினிமாக்காரர்கள் தரத்திற்கு ஆவலைத் தூண்டுபவர்களாக இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான விடயநதான்:)

பிரபலமான எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் இத்தனை வெறுப்பையும் வாசகர்களிடையில் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவ்வளவு பேர் இன்னவிதமாகப் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு சிலர் மட்டும் ‘எங்க அண்ணாச்சி வழக்கமாக கால்களால்தான் நடப்பார்; சில சமயம் கைகளால் நடக்கவேண்டியேற்பட்டுவிடுகிறது. அது அவரது பிழையன்று’என்று பேசக்கேட்பது வியப்பாக இருக்கிறது. அநியாயத்திற்கும் அறியாமைக்கும் பக்கப்பாட்டுப் பாடுபவர்கள் சமூக நீதிகளுக்கு முரணாக இயங்குகிறவர்கள். அறிவீனத்தைக் கொண்டாடுபவர்களும் அறிவிலிகளே!

பின்னூட்டங்களில் ஜெயமோகனைப் பற்றி இளக்காரமாகக் கதைத்தவர்கள் குறைவு. அவர் ஒரு இந்துத்துவவாதி, நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வுகளை முன்வைப்பவர் என்பதைத் தாண்டி அவர் மீது காட்டமான விமர்சனங்கள் இல்லை. ஆனால், சாரு நிவேதிதா மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. என் பதிவின் குறிக்கோளைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்குமளவுக்கு அவை அமைந்திருந்தன. சாரு ஓரினச்சேர்க்கையாளர், அறிவிலி, குடிகாரர், சுயவிளம்பரத்திற்காக எந்த எல்லைவரை வேண்டுமானாலும் செல்லக்கூடியவர் இன்னபிற விமர்சனங்கள் வந்தன. அவை உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனது பதிவின் நோக்கமே வேறாக இருந்தது. ‘நீங்கள் எங்கள் மக்கள் கொல்லப்படும்போது மௌனமாக இருந்தீர்கள். ஏறக்குறைய கொன்றுகுவித்தபின் தீர்வுகளைப் பற்றிப் பேச, உங்களுக்கு அருகதையில்லை’என்பதே நான் சொல்ல முற்பட்டது. அதனையொட்டிய விவாதங்களைத் தொடர்வதே நமக்கு இன்றைக்கு வேண்டியது. இலக்கியங்களைப் படைப்பது மட்டுமல்லாது, அநியாயங்களை எதிர்த்துக் குரலெழுப்புவதும் எழுத்தாளனின் கடமை என்பதற்கு, வரலாற்றிலிருந்து பல உதாரணங்களைக் காட்டமுடியும்.

தனது கவிதைகளால் சுதந்திரக்கனலை இந்தியர்களின் இதயங்களில் மூட்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதி, லத்தீன் அமெரிக்க விடுதலைக் கவிஞர் பாப்லோ நெரூடா, பாலஸ்தீனிய கவிஞர் மஹ்மூத் தார்வீஷ், ஈழத்துக் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன், சிவரமணி, மு.புஸ்பராஜா, ஊர்வசி, சு.வில்வரத்தினம், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஆதவன், பா.அகிலன் என இந்தப் பட்டியல் நீண்டது. (சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் இளைய கவிஞர்களின் பெயர்களை¸ விடுபடல்களை அஞ்சி எழுதவில்லை.)

அண்மையில் என்னோடு கதைத்த பிரபலமான கவிஞர்களில் ஒருவர் சொன்ன வாக்கியம் மனதுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. “உண்மையான எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக இயங்கவேண்டியவர்கள்”என்றார் அவர். ஆட்சியாளர்கள் தவறுகளுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். சுலபத்தில் தட்டிக் கேட்கப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதிகாரம் அவர்களை மண்ணிலிருந்து இரண்டடி உயரத்திற்குத் தூக்கிவிடுகிறது. எதிர்க்கட்சிகளோ தமது நலன்களின் வாயால் பேசத் தலைப்படுகின்றன. உதாரணமாக, ஜெயலலிதா வீட்டுக்கு முன்னால் ஒரு காகம் இறந்துகிடக்குமானால், ‘இது கருணாநிதியின் தி.மு.க. செய்த காரியம்’என்று கூசாமல் சொல்லக்கூடியவர்களாகவே எதிர்க்கட்சிகளின் நியாயப்பாடு இருக்கிறது. இது மாறி மாறி வரும் ஆட்சிகளுக்கெல்லாம் பொருந்தும். ஆக, உண்மையின் குரலால் பேசவேண்டியது அச்சமூகத்தில் வாழக்கூடிய அறிவுஜீவிகளின் கடமையாகிறது.

தமிழ்நாட்டுக்கு வந்த பிற்பாடு, உறுத்தலான ஒரு விடயத்தைக் கண்ணுற்றேன். அது, ‘காலில் விழும் கலாச்சாரம்’. அந்தக் கலாச்சாரத்தின் முன் வயது, அறிவு எதுவும் பொருட்டல்ல. கவிஞர்களில் பலரே தன்மதிப்பைப் பின்தள்ளிவிட்டுக் காலில் விழுந்தெழும்புவதைக் கவனித்து மனம்வெதும்பியதுண்டு. சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்க் கவிஞர்களின் கூட்டமைப்பினரால், ஈழத்தில் நடக்கும் இனஅழிப்புக்கெதிரான கவிதை வாசிப்பொன்று மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு காலதாமதமாக கவிஞர் கனிமொழி வந்தார். அவரைக் கண்டதும் சில கவிஞர்கள் பறந்தோடிப் போய் அவரது பக்கத்தில் அமர்ந்துகொண்டார்கள். கனிமொழியின் கவனத்தைப் பெறுவதில் அவர்கள் காட்டிய அக்கறையைப் பார்த்தபோது… ம்… என்னத்தைச் சொல்ல…? முதலமைச்சரின் மகளாக இருக்கட்டும். அன்று அவர் ஒரு கவிஞராகத்தான் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இம்மாதிரியான கவன ஈர்ப்புகள் எரிச்சலூட்டுகின்றன. தனிப்பட்ட நலன்களுக்காகத் தன்மதிப்பழியும்படி நடந்துகொள்வது சகிக்கக்கூடியதாக இல்லை.

எல்லாப் புனிதங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்பதனால் மட்டுமே சமூக மாற்றங்களைக் கொண்டுவர முடியும். எழுத்தாளன் என்பவனை போப்பாண்டவர் தரத்தில் நடத்தவேண்டியதில்லை. அவன் என்ன சொன்னாலும், ‘தேவ ஆட்டுக்குட்டி வந்தேனே…’என்று பாடிக்கொண்டு பின்தொடர வேண்டிய அவசியமில்லை.

கேள்வி கேட்கப் பழகுவோம். அதிகாரங்களை, எல்லாத் துறைகளிலும் இருக்கும் ஒற்றை ஆதிக்கங்களை. இல்லையெனில், இப்படிப் பொத்திப் பொத்தி வைத்திருக்கிற நமது உயிரும் உடமைகளும் கேள்விக்குறியாகிவிடும் காலமொன்று வாசல் கதவை வந்து தட்டுவதை எதிர்கொள்ளத் தயாராகுவோம்.

குறிப்பு: ஒரு மனோநிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்துவதற்கான ஒரு பதிவாக, எனக்கே எழுதியதாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

5.27.2009

ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவுக்கும், ஜெயமோகனுக்கும்…


‘சுயமோகி’ என்று ஜெயமோகனை வர்ணித்த சாருவும், சாருவிடம் தொடர்ச்சியான ஒவ்வாமை கொண்டிருந்த ஜெயமோகனும் இணையும் புள்ளியாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்வி அமைந்துவிட்டிருப்பதில் ஈழத்துக்காரியும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கிறவர்களின் வாசகியுமாகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
முதலில் சாருவுக்கு,

“சதாம் ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர். அந்தத் தேசத்தின் வலிமையான இராணுவமே அவர் கையில் இருந்தது. மக்கள் அவர் பக்கம். விதம் விதமான ஆயுதங்கள். இவ்வளவு இருந்தும் அமெரிக்காவை எதிர்க்க முடியவில்லை. ஒரு மண்குழிக்குள் பதுங்கி வாழ்ந்து, அமெரிக்கச் சிப்பாய்களிடம் சிக்கி, மரணதண்டனை விதிக்கப்பட்டுச் செத்தார். சதாம் உசேனுக்கு அந்த நிலை என்றால், ஒரு மிகச் சிறிய கெரில்லா இயக்கம் எப்படி சிறிலங்கா, இந்தியா, சீனா முதலிய பல நாடுகளின் இராணுவத்தைச் சமாளிக்க முடியும்? இப்படிப்பட்ட சூழலில் ஆயுதத்தைக் கையில் எடுப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?” என்று எழுதியிருக்கிறீர்கள்.

‘மிகச் சிறிய கெரில்லா இயக்கம்’என்று நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன். எண்ணிக்கையில் எதுவும் இல்லை என்பதை இவ்வளவு அறியப்பட்ட எழுத்தாளராகிய நீங்களும் அறிந்தே இருப்பீர்கள். மிகச் சிறிய கெரில்லா இயக்கத்தின் நெருக்குதல்கள் தாங்கமுடியாமல்தான் இந்திய இராணுவம் தோல்வியோடு திரும்பிவந்தது என்பதை நீங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வஞ்சத்தை, வன்மத்தை பதினெட்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் தீர்த்துக்கொண்டது வேறு விடயம்.
இத்தனை ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், இழப்புகளுக்குப் பிறகும் சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நீங்கள் செய்திகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அறிந்ததையே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்க இயலாது.

உரிமைகளை இழந்து, இருப்பொன்றே பொருட்டு என்று வாழ்ந்திருப்பதே சரி என ஒரு எழுத்தாளர் சொல்வது எனக்கு நகைப்பளிக்கிறது. சமரசங்கள் செய்துகொள்வதும் சகிப்புத்தன்மையோடிருப்பதும் விட்டுக்கொடுப்பதும் இலக்கிய அரசியலுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் ஒரு மண்ணிற்கு அது எவ்விதத்தில் பொருந்தும்? அமெரிக்காவின் வலிமை தெரிந்தே அதை வியட்நாம் எதிர்த்துப்போராடியது. தென்னாபிரிக்கா எதிரியின் வலிமையை அறியாமல் போராடியது என்று உங்களால் சொல்லமுடியுமா?
“யாழ்ப்பாணம் ஆப்கானிஸ்தானைப் போல காட்சியளிக்கிறது. அங்கே தமிழர்கள் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல அமைதியாக வாழ ராஜபக்சே வழிவகுத்துக் கொடுக்கவேண்டும். இதற்கும் அவரை உலகநாடுகள் நிர்ப்பந்திக்கவேண்டும்”

நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்று முடிந்த நாள் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியாகும். அந்த நிறைவையொட்டிய கொண்டாட்டங்களின்போது இனவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனத்தின்போது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒன்பது. அது நீங்கள் குறிப்பிடும் அதே யாழ்ப்பாணத்தில், அதே முப்பதாண்டுகளின் முன் நடந்த படுகொலைதான். நாடளாவிய ரீதியில் தமிழர்களுக்கெதிராக கலவரங்கள் வெடித்த ஆண்டுகளான 1956, 1958, 1971 இவைகூட முப்பதாண்டுகளுக்கு முற்பட்டவைதாம். 1981ஆம் ஆண்டு எங்களது உயிரினும் மேலாகப் போற்றப்பட்ட நூலகம் இனவாதிகளால் எரியூட்டப்பட்டு சாம்பரானது, நீங்கள் குறிப்பிடும் முப்பதாண்டுகளுக்கு ஈராண்டுகளே குறைவான காலகட்டத்தில்தான். ஆக, எங்களுக்கெதிரான இன அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் பொறுத்துக்கொண்டு வாழ நாங்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். பேரினவாத ஆண்டைகளின் கீழ் அடிமைகளாக வாழ மறுப்பதை நீங்கள் தவறென்கிறீர்கள்.

நீங்கள் விரும்புவதே போல போராளிகள் இப்போது ஆயுதங்களை மௌனிக்கச் செய்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சாளர்கள் போர்க்களத்திலே ஆயுதங்களைக் கைவிட்டு வெள்ளைக்கொடியோடு சரணடையச் சென்றபோதுதான் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். சரணடையச் சென்ற சமாதானப் பேச்சாளர்களையே எவ்வித அறங்களுமின்றிச் சுட்டுக்கொன்ற அரசு இனியாகிலும் நீதியோடு நடந்துகொள்ளும் என்று நீங்கள் எவ்விதம் எதிர்பார்க்கிறீர்கள்? அப்படித் தமிழர்களோடு அவர்கள் அதிகாரத்தைப் பகிர மறுக்கிறபோது, ‘ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி வழியில் போராட வேண்டும்’என்ற உங்கள் வார்த்தைகளை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?

“எங்களைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பே இனி இல்லை”என்று வெற்றியின் மமதையில் கூறிவரும் கோத்தபாய ராஜபக்சே, யாரைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்? பேரினவாதத்திடம் விலைபோன கருணா, பிள்ளையான், டக்ளஸையா?
விடுதலைப் புலிகள் தோற்றபின், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டும் நீங்களும் ஜெயமோகனும் இதுநாள்வரை இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளைக் குறித்துப் பேசாதிருந்தது என்ன காரணத்தினால்? அதிகாரங்களுக்கு அஞ்சுகிறவர்கள், அதற்கு மறைமுகமாகத் துணைபோகிறவர்களுமாகிறார்கள். எனக்கும் இந்த விமர்சனம் பொருந்தும்.
‘காந்திய வழியைத் தேர்வதே நல்லது’என்று நீங்கள், ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தமது சகோதரர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்படுகிறார்களே என்று இங்கே காந்திய வழியில் நடத்தப்பட்ட ஊர்வலங்களுக்கும், உண்ணாவிரதங்களுக்கும் ஏதாவது பலன் இருந்ததா? காந்தியத்திற்குப் பதிலாக, பரிசாகக் கிடைத்தது காவலர்களின் தடியடிகள்தானே? இந்தியாவில் காந்தியம் விடுதலையைப் பெற்றுத் தந்தது என்றால், எல்லா நாடுகளுக்கும் அது பொருந்தும் என்று எந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? காந்தியத்தினால்தான் விடுதலை கிடைத்தது என்பதும் சர்ச்சைக்குரியதே.

“நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதுபோன்ற உள்நாட்டுப் போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என்று பேசுவதில்லை”
என்று எழுதியிருக்கிறீர்கள் ஜெயமோகன்.

ஈழத்தில் தமிழினம் அழியும்போது உங்கள் ஒரே வெளிப்பாடாகிய எழுத்தின் வழி நீங்கள் குமுறவில்லை என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டுதானிருந்தோம். சக மனிதன் மீதும் சமூகத்தின் மீதும் நீங்கள் கொண்டிருந்த அக்கறையைக் கண்டு வியந்துகொண்டுதானிருந்தோம். மேற்கண்ட வாசகங்களால் நீங்கள் உங்களைப் பற்றி எந்தவிதமான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறீர்கள்? ‘நாடு, மொழி, இனம், எல்லைகளைத் தாண்டிய மானுடநேயன் நான்’ என்று உங்களை நிறுவ நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? அப்படிப் பேசுவதென்பதில் இருக்கும் ஒரு சிறிய பம்மாத்தை எங்களைப்போன்ற அறிவிலிகளும் புரிந்துதானிருக்கிறோம். சொந்தக் குழந்தை இறப்பின்போதும் பக்கத்து வீட்டுக்காரனின் குழந்தையின் இறப்பின்போது சிந்தப்படும் கண்ணீரின் அளவை நாங்களும் அறிந்துதானிருக்கிறோம். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களாயும் வாசகர்களாயும் இருக்கக்கூடிய ஈழத்தமிழர்கள் அடிபடும்போதும் அழிவுறும்போதும் வாய்திறவாத நீங்களா உலகத்தின் ஏதோவொரு மூலையில் இருப்பவனுக்காகப் பேசப்போகிறீர்கள்? நடைமுறையைக் கணக்கிலெடுக்காத இந்தச் சித்தாந்தப் பூச்சாண்டிகளை, புத்தகம் படித்துக் கக்கும் விடயங்களில் இருக்கக்கூடிய பொய்மைகளை நாங்கள் வெறுக்கிறோம். இதே விடயங்களை சமூக அக்கறையுடைய எவராது சொல்லியிருந்தால் எனது வெளிப்பாடு வேறாகவே இருந்திருக்கும்.

ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக அதன் நோக்கமும் மூலமும் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நாவலை எழுதுகிறீர்கள்… உங்கள் மனதில் உள்ள ஒரு கருவைக் கதையாக விரிக்கிறீர்கள். அது ஒருவகையில் வாசகர்களை முன்னிறுத்தித்தான், அவர்களைச் சென்றடையும் என்ற எதிர்பார்ப்புடன்தான் (நீங்கள் மறுத்தாலும் சிறிய அளவில் எனினும் அதுவே உண்மை) எழுதப்படுகிறது. அது உங்களால் எதிர்பார்த்த அளவுக்கு வாசகர்களைச் சென்றடையவில்லை என்றால், அதை அந்தப் படைப்பின் தோல்வியாகக் கொள்வீர்களா? கலாபூர்வமான படைப்புகள் (நல்ல சினிமா, ஓவியம்) போன்றவை தோல்வியைத் தழுவுவது படைப்பின் தோல்வியா? பார்ப்பவரின் தோல்வியா?

தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது தீவிர மௌனத்தில் ஆழ்ந்திருந்த நீங்களெல்லாம் திடீரென்று இப்போது பேச முற்படுவதன் நோக்கம்தான் என்ன? வன்முறை தவறு என்று சொல்லும் நீங்களெல்லாம் இலங்கை அரசின் வன்முறையைப் பற்றி ஏன் பேசவில்லை? இப்போது வந்து 'ராஜபக்சே ஹிட்லர் என்பதை ஒப்புக்கொள்கிறோம்'என்றால் முடிந்துவிட்டதா? வன்முறையை எதிர்ப்பதென்பது அதைப் பிரயோகிப்பவர்களின் அதிகாரத்தைப் பொறுத்து வேறுபடுகிறதா? இந்த விடயத்தில் நீங்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்த சிலரும் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

விடுதலைப் புலிகள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் பலவற்றை நானும் ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து காலக்கெடு விதித்து விரட்டியது, அரசியல் தொலைநோக்கோடு செயற்படாதது, தங்களை விமர்சித்த அறிவுஜீவிகளைக் கொலைசெய்தது உட்பட. ஆனால், அவர்களது விடுதலைப் போராட்டமே ஒரு தவறு என்பதைச் சொல்வதற்கு, உங்களைப் போன்றவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும். சொற்களை வைத்து சித்துவிளையாட்டுக் காட்டுவது மட்டும் எழுத்தாளனின் கடமையன்று. சமூகத்தின்பால் அக்கறையுடையவனாக இருப்பதும், செயற்படுவதும் அவர்களது கடமையாகிறது. சமூகத்தால் மதிக்கப்படும் எழுத்தாளன் என்பவனும் ஊடகங்களைப் போலவே மக்களின் கருத்துகளைச் செதுக்குவதில் (அல்லது சிதைப்பதில்) முக்கிய பங்காற்றுகிறான் - ஆற்றுகிறாள் என்ற வகையில், நீங்கள் நச்சுவிதைகளைத் தூவாதீர்கள்.

நான் எல்லாக் காலங்களிலும் பார்வையாளராகவே இருந்திருந்தால், ஈழத்தவள் என்றபோதிலும், உங்களைப் போலவே இதைப் பற்றி எழுதும் தகுதி எனக்கும் இருந்திருக்காது. ஆனால், சில வகைகளிலேனும் அதில் பங்கெடுத்துக்கொண்டவள், பாதிக்கப்பட்டவள் என்றவகையில் எனக்கு அந்த உரிமை இருப்பதாக நான் கருதுகிறேன்.

உங்கள் இருவரையும் குற்றஞ்சாட்டுவதற்காகவோ பரபரப்பைக் கிளர்த்துவதற்காகவோ எழுதவில்லை. (அதுதானே இங்கே நடக்கிறது) இழப்பை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் துக்கம் புரியாது. இழிவுபடுத்தல்கள் தெரியாது. மனித இனம் மட்டுமல்லாது மிருகங்களும்கூட அதனதன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்படாமல் வாழ்வதென்பது பிறப்புரிமை. ஏனைய நாடுகளோடு குறிப்பாக தென்னமெரிக்காவோடு ஒப்பிட்டு ‘அவர்கள் மட்டுமே அப்படிப் போராடுவதற்கான நிர்ப்பந்தத்தைக் கொண்டிருந்தார்கள்’என்பது நகைப்பிற்குரியது. எனது தெருவில் நான் சுதந்திரமாகத் திரிவதற்கும், எனது மார்புகளை மாற்றான் ஒருவன் என் மறுப்பையும் மீறித் தொடும் இழிநிலைக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பதென்பதும் சகித்துக்கொள்ளத்தக்கதுதானா? எனது அயலவரின் குழந்தையைக் கதறக் கதறத் தூக்கிச் சுவரில் மோதித் தலையைச் சிதறடிப்பதை நான் எப்படிச் சகித்துக்கொள்வேன்? தமிழினத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காக நான் யார் என்பதை ஒவ்வொரு விசாரணைச் சாவடியிலும் நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியந்தான் என்ன? நீங்கள் காற்றைப்போல திரிபவர்கள். எந்த மூச்சுத்திணறலுக்கும் பழக்கப்படாதவர்கள். உங்களுக்கு போராடப் புறப்பட்டதன் நியாயப்பாட்டைப் பற்றியெல்லாம் நான் விளக்கிக்கொண்டிருப்பது வியர்த்தம்.

பல்லாயிரம் உயிர்களை, வளங்களை இழந்தோம். மனச்சிதைவிற்கு ஆளானோம், தடுப்புமுகாம்களுக்குள் விலங்குகளிலும் கேவலமாக வாழ விதிக்கப்பட்டோம். உலகெங்கிலும் அகதிகளாக அலைவுறும் கேவலத்திற்கும் ஆளானோம் என்றவகையில் தோற்றுவிட்டோம்தான். ஆனால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பெரும்பான்மையினரால் இழிவுசெய்யப்பட்டோம், இரண்டாந்தரக் குடிமக்களாக பாரபட்சம் காட்டப்பட்டோம். எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடி இல்லை. ஆட்சி மொழி இல்லை. உயர்கல்வியிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அப்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லையே… ‘எங்களைக் கண்ணெடுத்துப் பாருங்கள்’என்று கதறிய கதறல் உலகத்திற்குக் கேட்காமல் போன காரணத்தினாலேயே தற்காப்புக்காக ஆயுதங்களைக் கையிலெடுக்கத் தள்ளப்பட்டோம். இந்த முப்பதாண்டு காலப்போராட்டத்தின் பின்பு, இவ்வளவு இழப்பின் பின்புதான் உலகம் எங்களைக் கண்ணெடுத்துப் பார்க்கிறது. (பார்த்துக்கொண்டேயிருப்பார்களா செயலாற்றுவார்களா என்பது அடுத்த கேள்வி) சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இப்போதிருக்கும் நிலையை நாங்கள் வந்தடைவதற்கு (உங்கள் வார்த்தைகளில் சொன்னால் அரசியல் நிலைப்பாட்டிற்கு) என்ன காரணம்? ஆயுதப் போராட்டம்தானே? இது வெற்றியல்லவா? இதை எப்படித் தோல்வியென்று சொல்லலாம்?


ஜெயமோகன்,

உங்கள் வலைத்தளத்தை நானும் படித்துவருகிறேன். எங்கள் ஜனங்கள் கொல்லப்படும்போது நீங்கள் ஆன்மீகம் பேசிக்கொண்டிருந்தீர்கள். எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதைக்கப்பட்டபோது நீங்கள் சகிப்புத்தன்மையைப் போதித்துக்கொண்டிருந்தீர்கள். பசியால் விழுந்து இறந்தபோது, பௌத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்கள். இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து தமிழர்களைக் கொன்றுகுவிக்கப் பணித்தபோது, அதைக் கேள்வி கேட்காமல் இந்திய இறையாண்மையை உயர்த்திப் பிடிக்கும் இழிவேலையைச் செய்துகொண்டிருந்தீர்கள். தமிழர்களிடம் இலக்கியம் வளர்த்துவரும் நீங்கள், தமிழையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்துவரும் நீங்கள், தமிழர்களுக்கெதிராகவே இயங்கிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் சொற்களின் சித்துவிளையாட்டில் நானும் மயங்கித்தானிருந்தேன். உங்கள் எழுத்தை வியந்து போற்றி மின்னஞ்சல் கூட அனுப்பியிருக்கிறேன். உரத்த குரலில் பொய் சொல்வதனால் உண்மையைக் கொன்றுவிட முடியாது என்பதை, சாதாரணளாகிய நானும் அறிவேன். உண்மையின் வேர்கள் மண்ணுக்குள்தான் இருக்கின்றன. இந்த வரட்சி நீங்கும் ஒரு காலத்தில் இலையும் தளிருமாய் அது மண்ணைத் துளைத்து வெளிவரும் என்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள். காத்திருங்கள் ஜெயமோகன். பலரும் பாராட்டும் ஒரு விடயம் அடிப்படையில் சரியாக இருக்கவேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது?

இங்கே ‘ஆயுதப் போராட்டம்தான் அமைதி திரும்ப ஒரே வழி’என்று நான் சொல்லவரவில்லை. அதற்குரிய அசாத்தியங்களை, கசப்பான முன்னனுபவங்களை சொல்லவந்தேன். மேலும், அப்படிச் சொல்லக்கூடிய அருகதை, சமூகப் பொறுப்புணர்வு உங்கள் இருவரிடத்திலும் இல்லை என்பது, உங்களை அவதானித்ததிலிருந்து பிறந்த, தனிப்பட்ட என்னொருத்தியின் கருத்தாக இருக்கிறது. அதுவே இந்தப் பதிவெழுதக் காரணமும் ஆகியது.

இனிவரும் காலங்களில் நான் உங்கள் இருவராலும் கடுமையாக விமர்சிக்கப்படுவேன் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. இலக்கிய அரசியலின் அடிப்படைத் தன்மைகளான பழிவாங்கல்கள், தூக்கிப்பிடித்தல்கள், தூற்றுதல்கள், துதிபாடல்கள் எல்லாவற்றையும் உணர்ந்தவளாகவே இருக்கிறேன். என்னைக் காட்டிலும், எழுத்தில் நான் வளர்வதைக் காட்டிலும், எங்கள் போராட்டத்தின் நியாயமும், தியாகமும் உங்களைப் போன்றவர்களால் தூர்க்கப்படுவதை, திசைதிருப்பப்படுவதை எதிர்ப்பது எனக்கு முக்கியமாகப்படுகிறது.

தேவதைகள் மௌனமாகிவிட்டால், பேய்கள் உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்துவிடுகின்றன. இது பேய்களின் காலமும் களமுமாயிருக்கிறது. என்ன செய்வது?