1.19.2007

அஞ்ஞாதவாசம்

நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப் புன்னகையுமற்று
கடந்துபோகிற மனிதர்கள் வாழும்
அந்நியத் தெருக்களில்
அடையாளமற்றவளாக சபிக்கப்பட்டுள்ளேன்.
என்னைக் குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை.

உனது சிகரங்களிலிருந்தபடி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே…!
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல்பரத்திக் கிடக்கிறது.

தொப்பூள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்…
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு.

என்னைப்போலவே அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்.
தன்னிரக்கத்தில் கரைந்த சொற்களை
எனக்குப் பிறகு கொண்டாட
நீயும் வரவேண்டியதில்லை.

8 comments:

த.அகிலன் said...

என்னுடைய நிலையையும் இக்கவிதை பேசுவதாக உணர்கிறென்.இது அடையாளங்களைத் தொலைத்தவர்களின் குரல்

Anonymous said...

முதலாவது பந்தி பிடித்துக்கொண்டது. நட்சத்திரன் செவ்விந்தியனின் "நகரிலே விழுந்த தெரு"(??) வாசித்திருக்கின்றீர்களா? அதிலும், இதுபோல ஒரு பிடிப்புண்டு. கடைசிப்பந்தியும் பிடித்துக்கொண்டது. நிறைவுறாத பாடல்கள் வரி சேரனை ஞாபகப்படுத்துகிறது. ஆனால், கவிதையிலே பிடித்துக்கொண்ட துண்டம், "எந்த மலையிடுக்கிலோ எந்த நதிக்கரையிலோ விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க இல்லாதொழியலாம் எனதிருப்பு."

Anonymous said...

/உனது சிகரங்களிலிருந்தபடி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே…!/


சிலவற்றை வாசிக்க மட்டுமே முடிகிறது.....

Anonymous said...

பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல்பரத்திக் கிடக்கிறது.



தமிழ் நதி...உங்கை இருந்து கொண்டு நல்ல கவிதையாய் கொட்டுறியள்... இந்த வனவாசம் உதிலும் மோசம்

Anonymous said...

nathy,enathu varikalai thayavu sethu thamil paduthi poduveerkala.....?
nathy,
naan thamilnathiyen kavinathyel neeradi veliyel vara mudiyamal mukkulithu kondu erukkeren...........
nathy, unkal thamilnathyel thodarnthum neerada virumpukiren..........nathy thannai niruthamal oda vendum...............
enakku mikavum piditha oriru kavithaikalil ethuvum onru.

Anonymous said...

நல்ல கவிதை நண்பி.
நிறைய நிறைய எழுதுங்கள்.
அப்போதான் மொழி இன்னும் வசப்படும்.
வாழ்த்துகள்.

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அகிலன்,அனானிமஸ்,சோமி,சின்னக்குட்டி,சூரியகுமார் அனைவருக்கும் நன்றி.

தமிழ்ப்படுத்திப் போடச் சொன்ன நண்பர் அல்லது நண்பியின் வேண்டுகோளுக்கிணங்க இதோ போட்டிருக்கிறேன். இதைத் தமிழ்ப்படுத்தும்போடு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. ஏனென்றால் அதீத புகழ்ச்சியோ என்றிருந்தது.

"நான் தமிழ்நதியின் கவிதையில் நீராடி வெளியில் வர முடியாமல் முக்குளித்துக்கொண்டு இருக்கிறேன். உங்கள் தமிழ்நதியில் தொடர்ந்தும் நீராட விரும்புகின்றேன். நதி தன்னை நிறுத்தாமல் தொடர்ந்தும் ஓட வேண்டும். எனக்குப் பிடித்த ஓரிரு கவிதைகளில் இதுவும் ஒன்று."

போட்டாச்சு. ஆனால் இது கொஞ்சம் அதிகம் போலிருக்கிறது நண்பரே.

மிதக்கும்வெளி said...

இடதுகால் பெருவிரல்நகம்
பிய்ந்து தொங்க
ரத்தம் சொட்டச் சொட்ட
வலதாய்..
இடதாய்..
குறுக்காய்..
நெடுக்காய்..
சென்று சேர்ந்தபோது
காணாமல் போயிருந்தது
என் வீடு.
வீடு செல்லும் வழியை
மறந்தவர்கள் பாக்கியவான்கள்.
அல்லது விதைப்பதற்கும்
அறுப்பதற்கும் அவசியமற்ற
பற்வைகளைப் போலவே மாறிப்போகலாம்.
முகங்களைச் சிலுவைகளாய்ச்
சுமக்கும் அவலம் இன்னும் ஓயவில்லை.
உடைகளின் இறுக்கம் தாங்காது
வலி கொள்கிறது எலும்பு.
கையிடுக்குகளில் மணல்துகள்கள் நழுவிக்கொண்டிருக்கின்றன.
கரையோரங்களில் குடியிருப்பவர்கள்
தங்கள் ஜாகைகளை மாற்றிக்கொள்ளட்டும்.
வெட்டுக்கிளிகளைப் புசித்துத்
தேனைப் பருகி வாழும் ஜானைப்
போலவே சுதந்திரமாயிருக்கிறது காற்று.
இப்போது காற்று...
காற்று மட்டுமே வீசிக்கொண்டிருக்கிறது.
எப்போதும் பெய்யலாம்
உன்னையும் என்னையும்
வீழ்த்துமொரு பெருமழை.
அதுவரைக்கும்
புனையப்படாத பாடல்களைப் பாடுவோரே
நம் சினேகத்துக்குரியவர்கள்.