1.24.2007

தேவதைகளால் கைவிடப்பட்ட காலத்தில்




அன்பு நித்திலா,

நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன்.

“இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகிழ்ச்சியில் உனது கண்கள் பனிக்கக்கூடும். தெரிந்தே சொல்லும் பொய்கள் உன்னதமான கணங்களை அளிக்கக்கூடுமெனில், நான் பொய்யுரைக்க விரும்புகிறேன்.

தோழி! இருப்பிற்காக அலைந்தது ஒரு காலம். அலைவதற்காகவே இருப்பென்று இப்போது தலைகீழாக்கிவிட்டேன். பால்வீதியில் மிதந்து செல்லும் கோள்களைப் போல நாடுகள். நான் இருக்குமிடமே இப்போதென் சூரியன் மையப்புள்ளி. இங்கு மோட்டார் சைக்கிள்களும் கார்களும் விசையிலிருந்து இழுத்துவிடப்பட்டவை போல விரைகின்றன. பரபரப்பு இந்நகரின் பிரதான தொனி. இங்கு இருக்கிறேன். ஆனால், இல்லை. ரொறன்ரோவில் வெள்ளைத்தோல் பளபளக்க நீண்ட குளிர்க்கோட்டுகள் அணிந்து பாதையைக் கடக்க காத்திருக்கிறார்கள். அவர்களோடு மண்ணிறத்தவளாகிய நானும் கடக்கிறேன். ஆனால் நான் அங்குமில்லை. இலண்டனில் புகையிரதத்தில் கரகரத்த குரலில் இருள் நிறத்திலொருவன் குரலுயர்த்திப் பாடுகிறான். இடையிடையே பிசிறடிக்கும் குரல் வழியே பிரிவின் துயர்பொதிந்த வரிகளை அவன் எனக்குள் விசிறுகிறான். நான் அங்குமில்லை. நேதன்ஸ் பிலிப்ஸ் ஸ்குயாரின் அருகிலுள்ள மரத்தடியில் இருக்கிறேன். நித்திலா! என்னை அவ்விதம் கற்பனை செய்யாதே! நான் அங்குமில்லை!

திருவையாற்றில் கனகாம்பிகைக் குளத்தினருகில் இருந்தேன். நீ சைக்கிளை மரத்தில் சாய்த்துவைத்துவிட்டு என்னை நோக்கி வருகிறாய். சீருடை உனக்கு அழகாகப் பொருந்தியிருக்கிறது. நிழலின் குளிர்ச்சியில், நீரின் தெளிவினில் கோவிலிலிருந்து மிதந்துவரும் ஊதுபத்தி வாசனையில் உன் வார்த்தைகளின் வசீகரிப்பில் அன்றைக்கு நானிருந்தேன். நாங்கள் ‘அறிவமுது’பொத்தகசாலைக்குப் (‘பொத்தகசாலையா…?’என்றதற்கு ‘அதுதான் சரி’ என்றாய்) போயிருந்தோம். என்னைவிடச் சிறியவள்… வாழ்வின் இனிய கணங்களில் இன்னமும் கால்பதிக்காதவள்…(அப்படி இல்லை என்பாய் வேறொரு அர்த்தத்தில்) நீ… குனிந்து புத்தகங்களைப் புரட்டியபோது பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் எதுவோ புரண்டது.

கிளிநொச்சியில் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய நீலநிறச் சீருடையணிந்த காவலன் என்னைப் பார்த்து எதேச்சையாக உதிர்த்த புன்னகையைப் பிரதி செய்தபோது அங்கு நானிருந்தேன். “பாண்டியன் சுவையூற்று”அந்தப் பெயரை உச்சரித்தபோதெழுந்த கிளர்ச்சியில் இருந்தேன். அந்தச் சாலையின் தூய்மையில், கடைகளுக்குச் சூட்டப்பட்டிருந்த கவித்துவப் பெயர்களில் எங்கெங்கும் ஒலித்த தமிழில் இருந்தேன் சில காலம். வானளாவ என்பதெல்லாம் பொய்…. அலைந்த இடங்களில் நெடிதுயர்ந்த நேர்த்தியான அந்தத்தை அண்ணாந்து பார்க்கவியலாத கட்டிடங்களை கண்டதுண்டு. வியப்பெழுந்த போதும் பெருமிதமோ நெகிழ்ச்சியோ கொண்டதில்லை. ஐந்தாறு தானென்றாலும் கிளிநொச்சி-யாழ் சாலையில் இருந்த கட்டிடங்களின் நேர்த்தியில் நெகிழ்ந்துபோன நினைவுகளில் நானிருந்தேன். மீண்டும் போரெழும் போதினில் இவையெல்லாம் என்னாகும் எனும் துக்கத்தில் நானிருந்தேன். இந்தக் கடிதத்தில் நீக்கமற எங்கும் நானிருக்கிறேன் என்று நீ சிரிப்பாய். வேறெப்படிச் சொல்வதென எனக்குச் சொல்லித்தா நித்திலா! உணர்ச்சி எழுத்தானால் அறிவு விலகிப்போய் வேடிக்கை பார்க்கிறது.

ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணம் போனபோது இலங்கை இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கவசவாகனம் ஒன்றைப் பார்த்தேன். அதில் போராளியொருவனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பூவைத் தொடுமொரு கவனத்துடன் விரல்களால் தடவிப் பார்த்தபோது அழுகை வந்தது. ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போது கட்டுப்படுத்த முடியாமல் எப்படிக் கண்ணீர் பொங்குமோ… அதைப் போல துடைக்கத் துடைக்க வழிந்தது கன்னத்தில். துன்பியலையே நான் எழுதுவதாக நண்பன் ஒருவன் கூறினான். வலிந்து நான் முயலும் கொண்டாட்டங்களை எப்படியோ மேவிவிடுகிறது உள்ளிருக்கும் வலி.

ஆனையிறவு கைப்பற்றப்பட்ட செய்தியை அறிந்த அன்று அலுவலகத்தில் இருந்த நாங்கள் ஒருவரையொருவர் பெருமிதம் பொங்கப் பார்த்துக்கொண்டோம். அன்று உவகை எங்களைக் காவித்திரிந்தது. ஒருவரையொருவர் நேசமுடன் பார்த்துக்கொண்டோம். நீண்ட நாள் முகம் திருப்பித்திரிந்த தோழியொருத்தி எனக்குத் தேநீர் தந்து ‘மன்னித்துக் கொள்’என்றாள்.

இப்போது நான் செய்திக்குருடாயிருக்கிறேன். ஊரிலிருந்து வரும் செய்திகளிலிருந்து செவிடாகி தப்பித்து ஓடிவிட விரும்புகிறேன். இருந்தும் குரல்கள்… குரல்கள்… வலியைச் செவிகளில் வலுக்கட்டாயமாகக் செலுத்துகின்றன. எனது நம்பிக்கைகளின் மீது சம்மட்டிகள் இறங்குகின்றன. ‘இராஜதந்திரப் பின்னகர்வு’ என்ற சொல்லை துரோகிக்கப்பட்ட துக்கத்தோடு கேட்டுக்கொண்டிருக்கிறேன். நித்திலா! ‘சுயநலத்தால் தம் நிலத்தைக் கைவிட்டு ஓடிப்போனவர்கள் குற்றவுணர்வு கொள்வதுதானே நியாயம்… நீயேன் கோபம்கொள்கிறாய்’என்று நீ வியந்துகொள்வாய். எனினும், கையிலிருந்து சொரியும் மணல்போல நம்பிக்கைகள் உதிர்ந்துபோய்விடுமோ என்றஞ்சுகிறேன். அன்றைக்கு எனது தோழிகளில் ஒருத்தி சொன்னாள் “அவர்கள் மௌனமாக்க விரும்பும் எதிர்க்குரலால் நான் பேச விரும்புகிறேன்”என்று. நேற்றொரு தோழன் சொன்னான் “அவர்களின் பாசிசத்தை நான் மறுதலிக்கிறேன்”என்று. நான் கேட்க விரும்பாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். “நாமெல்லோரும் தேசியத்தை விற்றுக்கொண்டிருக்கிறோம்”என்றொரு இளையவன் சொன்னான்.

எனக்கு தேசியம், பாசிசம், நாசிசம், மாக்ஸிசம், சர்ரியலிசம், பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம்… எந்த இசமும் துவமும் தெரியாது. நான் சாதாரணள்.

சக போராளியின் உயிரற்ற உடலைப் போர்த்தியிருந்த புலிக்கொடியை சரிசெய்யும் பாவனையில் கண்ணீரைப் புறங்கையால் துடைத்தவளைக் கண்டேன். மாவீரர் கல்லறையில் ஏந்திய மெழுகுவர்த்தியின்; சுடர் முகத்தில் சிவப்பொளியைப் படர்த்த இறுகிய முகத்தோடு நின்ற இளையவன் ஒருவனைப் பார்த்தேன். மரச்செறிவடர்ந்த காட்டிற்குள் மழை இறங்கியபொழுதொன்றில் வாகனம் பழுதுபட்டு நின்றது. துப்பாக்கியும் கையுமாக எங்கிருந்தோ வந்து தேநீர் தந்தவனின் முகத்தில் எனக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளையைப் பார்த்தேன். உயிரை உறைய வைக்கும் பனியில் கதவு கதவாகத் தட்டிக் காசு கேட்டு ஊருக்கு அனுப்புபவனின் பிய்ந்து போன சப்பாத்தும் அழுக்குத் திரண்டு நிறம்மாறிப் போன குளிர்க்கோட்டும் எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. பின்னிரவில் பத்திரிகைப் பணி முடித்து வீடு திரும்பும் என் சிநேகிதி ஒருநாள் சொன்னாள்… “வேலை முடித்து வெளியில் வரும்போது நடுச்சாமமாயிருக்கும். பனி வெள்ளையாய் படிந்து கிடக்கும் அந்தத் தரையில் கவனமாக நடந்து வந்து காரில் ஏறும்போது நான் நினைத்துக்கொள்வேன் ‘என்னால் என்னருந் தேசத்தில் துயருறுபவர்களின் ஒரு துளிக் கண்ணீரைத் துடைக்கமுடிந்தால்…’என்று. நான் நித்திரை விழிப்பதற்காக வருந்துவதில்லை”.

நான் சாதாரணர்களைப் பார்க்கிறேன். அவர்களின் நம்பிக்கையைப் பார்க்கிறேன். தோற்றனர் என்ற செய்தி வந்துற்றபோது துக்கம் பொங்கத் தாழும் விழிகளை நினைவில் கொள்கிறேன். வென்றனர் என்றபோதில் துள்ளிக்குதிக்கத் தூண்டும் பேருவகை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்பதை ஆராய விரும்பவில்லை. எப்போதும் தொலைவிலிருந்து தங்களது துக்கம் செறிந்த கண்களால் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு விமர்சிக்க என்ன இருக்கிறது. கவிஞர் ஒருவர் சொன்னதுபோல ஆம்! நாங்கள் ‘தொலைவிலிருந்து விசுவசிக்கிற பாக்கியவான்கள்’தான்.

தனது குழந்தைகளை அயலவரின் குற்றச்சாட்டுகளிலிருந்து எப்போதும் பொத்திவைக்கும் ஒரு தாயைப்போல எனது நம்பிக்கைகள் ஆட்டங்கண்டுவிடக்கூடாதே என்று பொத்திப் பொதிந்து வைக்கிறேன்.

ஊரின் மாயக்குரல் கார்வையோடு அழைத்துக்கொண்டேயிருக்கிறது. இழைந்து குழைந்து அழைக்கும் அந்தப் புல்லாங்குழலோசையில் கட்டுண்டு மயங்கிக்கிடக்கிறேன். எப்போதாவது என்னை மறந்தெழுந்து ஓடுகிறேன். உயிர் என்னைக் கடிந்துகொள்கிறது. தன்னைப் பத்திரப்படுத்திவைக்க என்னால் முடியவில்லை என்று சாடுகிறது.

‘நாங்கள் எல்லாத் தேவதைகளாலும் கைவிடப்பட்ட காலத்திலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்…?’என்ற கேள்வி எழுந்து எழுந்து பதிலற்று மடிகிறது.

நித்திலா! காத்திருக்கிறேன். காத்திருக்கிறோம். சொற்கள் அழிந்தவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, வலிகிளர் வார்த்தைகளைச் செவிமடுக்கிறவர்களாக தொலைவிலே காத்திருக்கிறோம்.

நட்புடன் நதி

22 comments:

-/பெயரிலி. said...

எழுத்தில் ஓட்டமும் உயிர்ப்புடன் சேர்ந்திருக்கின்றது. இடுகைக்கு நன்றி

Anonymous said...

என்னத்தைச் சொல்லுறது....

தமிழ்நதி said...

நன்றி பெயரிலி. உங்கள் பின்னூட்டம் வழக்கம்போல உற்சாகத்தைத் தருகிறது. தேங்காய்ப்பூ,அரிசிமா எல்லாம் அளவாகக் கலந்திருக்கிறேனா...:)

சோமி,
என்னத்தைச் சொல்லுறது என்று மினக்கெட்டு வந்து சொல்லிவிட்டுப்போவதன் அர்த்தம் புரிகிறது.

Anonymous said...

தீவிர இலக்கிய ஆக்களை மட்டுமன்றி.. என்னை போன்ற சராசரிகளை கூட உங்கள் நடையால் கவர வைக்கிறது. உங்கள் பதிவுகள்...நன்றிகள்
ஏங்க இந்த so call வணிக சஞ்சகைகளிலும் எழுதி என்னை போன்ற சராசரிகளையும் ரசிக்க வைக்க கூடாது..

தமிழ்நதி said...

"ஏங்க இந்த so call வணிக சஞ்சகைகளிலும் எழுதி என்னை போன்ற சராசரிகளையும் ரசிக்க வைக்க கூடாது.."
சின்னக்குட்டியர், நீங்கள் சராசரியா இல்லையா என்பதை நாங்கள் அல்லவா சொல்லவேண்டும்...? எனது மிக நெருங்கிய நண்பரிடம் சொன்ன வாசகங்களையே உங்களிடமும் சொல்கிறேன் 'நான் இப்போதுதான் எழுதிப் பயில்கிறேன்'

கலை said...

//வலிந்து நான் முயலும் கொண்டாட்டங்களை எப்படியோ மேவிவிடுகிறது உள்ளிருக்கும் வலி.//

உண்மைதான் நதி, பல சமயங்களில். ம்ம்ம்ம்ம்ம்ம்

✪சிந்தாநதி said...

நிறைவு

தமிழ்நதி said...

பின்னூட்டத்திற்கு நன்றி கலை மற்றும் சிந்தாநதி.

மிதக்கும்வெளி said...

கடந்தகாலங்கள் சுமையாயிருக்கலாம். எதிர்காலம் குறித்த போலி நம்பிக்கைகளால்
நிகழ்காலம் நகரலாம். என்றாலும் கசப்பின் இடுக்குகளிலிருந்து மெல்லியதாய்க்
கசியும்
வெளிச்சத்தைக் கண்டுகொள். நிகழ்காலம் எந்தப் பொய்களாலும் ஆனதில்லை.
பொய்யான ஆறுதலின் வசம் ஒப்படைக்கப்பட்டதில்லை. பூத்துக்குலுங்கும் பூக்கள்
எல்லாம் உன்
சிரிப்பிற்காய்ப் பூத்திருக்கின்றன. மலைமுகட்டில் தவழும் மேகம் உனக்காக,
உனக்காக மட்டுமே மழைபொழியக் காத்திருக்கிறது. இந்த பூமி உனக்காக, உனக்காக
மட்டுமே
விரிந்திருக்கிறது. இந்தக் கணம் இந்தக் கணம் மட்டுமே முக்கியமானது. this
moment.தத்சவா

Anonymous said...

மிக மிக அழகான( இந்தச் சொல் இங்கு சரிதானா தெரியவில்லை!) பதிவு.
பதிவின் கட்டமைப்பும், சொல்நேர்த்தியும் நன்றாக இருக்கின்றன.
எனக்குள்ளிருக்கும் எதோ ஒரு உணர்வைத் தட்டிவிட்டிருக்கிறீர்கள்.
மோனமாக மீண்டுமொருமுறை பதிவைப் படிக்கத் தொடங்கிறேன்!
நன்றி!
-பிரதாப்

இதே போன்ற சூழலில் எழுதப்பட்ட பாலத்தீனக் கவி மக்முது தார்வீசின் கவிதை
ஒன்று நினைவுக்கு வருகிறது.
வேறு ஒரு தளத்தில் மொழிபெயர்த்திருந்தேன் இதை.


ஏதிலியிடமிருந்து ஓர் மடல்

வாழ்த்துக்களும் கன்னதிலோர் முத்தமும்
வேறு என்ன சொல்வது.. சொற்கள் வீண்..
எங்கு தொடங்குவது? எங்கு முடிப்பது?
காலச் சக்கரம் எல்லையற்றது
என்னிடமிருப்பது ஏதிலிமை, தனிமை மட்டுமே.
என்னிடமுள்ள ஒரு பருத்து மண்டையும் கொஞ்சம் ஏக்கமும்
ஒரு குறிப்பேடும் தாம், என் மனப் பாரத்தை பகிர்ந்து கொள்கின்றன.
என் படிறிமையைப்(விரோதம்) பெருக்கெடுத்தோடாமற் தடுக்கிறன.

எங்கு தொடங்குவது?
எல்லாம் சொல்லப்பட்டு விட்டது அல்லது
நாளை சொல்லப் பட்டுவிடும்!
ஒரு தொடுகையுடனோ ஒரு அணைப்புடனோ முடியப் போவதில்லை
ஓர் ஏதிலியை அவன் தாய்நாட்டுக்கு திருப்பப் போவதில்லை
மழையைத் தரப்போவதில்லை
ஓர் பறவையின் தொலைந்த உடைந்த இறக்கையில்/செட்டையில்
எந்தச் சிறகையும் முளைவிக்கப் போவதில்லை
எப்படித் தொடங்க..
வாழ்த்துக்கள், ஓர் முத்தம், பின்னர்..

நான் ஒலிவாங்கியிடம் சொன்னேன்
'நான் நன்றாக இருக்கிறேனென அவளிடம் சொல்!'
பறவையே, அவளை எதிர்கொள்வாயானால் ?,
நான் நன்றாக இருக்கிறேனெனச் சொல்ல மறக்காதே!
நான் நன்றாக இருக்கிறேன்!

இன்னும் எனக்குப் பார்க்குந் திறனுள்ளது
வானில் ஓர் நிலவு இன்னமுங் காய்கிறது!

என் பழைய கொத்துடையின்(suit) விளிம்புகள் தேய்ந்துவிட்டாலும்
இன்னும் முழுவதுமாகக் கிழியவில்லை அது
அதை நான் ஒட்டுப்போட்டணிந்து கொள்கிறேன்
இன்னும் சரியாகவே இருக்கிறது

நான் பெரிய ஆளாக வளர்ந்து விட்டேன்
இருபதைத் தொட்டுவிட்டேன்
எண்ணிப் பார் நான் இருபது அகவையன்

அம்மா,
மற்ற எல்லா மாந்தரையும் போல் வாழ்க்கையை எதிர்கொள்கிறேன்
மற்ற ஆண்களைப் போல் அதன் சுமைகளைச் சுமக்கிறேன்
உணவகத்தில்(restaurant) வேலை செய்கிறேன்
தட்டுக் கழுவுகிறேன்
வாடிக்கையருக்கு குளம்பி(coffee) போடுகிறேன்
அவர்களை மகிழ்விக்க புன்னகையை முகத்தில் பொருத்திக் கொள்கிறேன்.

நான் நன்றாக இருக்கிறேன்
இருபது அகவையனாக....
அம்மா, நான் மற்ற இளைஞரைப் போல் ஆகிவிட்டேன்!
புகைக்கிறேன், சுவரிற் சாய்ந்துகொண்டு
அழகுப் பெண்களுக்கு 'எல்லா'(Hello) வைக்கிறேன்
மற்றோரைப் போல்.

உடன்பிறந்தாரே, பெண்கள் எத்துணை அன்பானோர்!
அவர்களில்லாது வாழ்க்கை எவ்வளவு கசப்பானதாக
இருக்குமென எண்ணிப் பாருங்கள்.

வாழ்வு கசப்பானதே.
நண்பனொருவன் கேட்டான்:
உன்னிடமோர் துண்டு பருத்து(bread) இருக்கிறதா?
உடன்பிறந்தோரே, அன்றாடம் பட்டினியாய்
ஒருவன் உறங்கச் செல்வானெனில் அம் மாந்தனின்
பெறுமதி தானென்ன?

நான் நன்றாக இருக்கிறேன் அம்மா,
நன்றாகவே இருக்கிறேன்.

என்னிடமோர் துண்டு கருங் குரால்(dark brown) பருத்தும்
சிறு கூடை நிறையக் காய்கறிகளும் இருக்கின்றன.

வானொலியில்
நாடற்றோர் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதைக் கேட்டேன்.
எல்லோரும் தாங்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்
யாரும் துயருற்றிருக்கவில்லை.

என் தந்தை எங்ஙனமுள்ளார்?
அவர் முன்னர்போல் இன்னமும் அல்லாவின் பெயர்,
மகன்கள், மண், ஆலிவு(olive) மரங்கள் பற்றிக் குறிப்பிடுவதில்
விருப்பங் கொண்டிருக்கிறாரா?
என் உடன் பிறந்தார் எப்படி இருக்கின்றனர்?
அவர்கள் ஆசிரியர் ஆகவேண்டுமெனத் தந்தை
சொன்னதை ஒரு முறை கேட்டிருக்கிறேன்
அவர்களுக்கு குறிப்பேடுகள்,பொத்தகங்கள் வாங்க
நான் பட்டினியாயிருப்பேன் எனத் தந்தை சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
எம் சிற்றூரிலுள்ள
எம் தங்கை எப்படியிருக்கிறாள்?
வளர்ந்து விட்டாளா? அவள் கைப் பற்ற மணமகன்கள் எவரேனும் வந்தனரா?
என் பாட்டி எப்படியிருக்கிறாள்?
முன்பு போல் வாயிலில் அமர்ந்து
எமக்குச் செல்வமும், நலமும், அல்லாவின் ஆசிகளும் கிடைக்க வேண்டுமென
இறைஞ்சிக் கொண்டிருக்கிறாளா?
எம் வீடு எப்படியுள்ளது?

ஏதிலிகளிடமிருந்தது ஏதிலிகளுக்கான செய்திகளை
வானொலியிற் கேட்டேன்
அவர்களெல்லோரும் நலமே உளர்.

ஆனால், நான் சோகமாயிருக்கிறேன்
முழுதாகக் கவலைகளாற் தின்னப் பட்டு...

வானொலி உங்களிடமிருந்து எனக்கு எந்தச் செய்தியையுங் கொண்டு வரவில்லை
துயரச் செய்தியைக்கூட..
துயரச் செய்தியைக் கூட....

அம்மா.....
இரவு, அலைபவன் எங்கு சென்றாலும் துரத்தி வேட்டையாடும்
ஓர் பசி தின்னுங் கொலைகார ஓநாய்
அது தொடுவானங்களை பூதங்களுக்குத் திறந்து விடும்
விலவு(willow) மரக்காடுகள் இன்னமும் காற்றை அணைத்திருக்கின்ற஠ ?

வாழ்க்கையில் ஒருமுறை
மரணத்துள் இன்னொரு முறையென
இரண்டு முறை மரிக்க நாம் என்ன தவற்றினோம், அம்மா?
எது என்னை விம்மலுக்குள் நிரப்புகிறது தெரியுமா?
நான் ஓரிரவு நோயுற்று,
வருத்தம் என் உடலை வதைக்க நேரிடுமேயானால்
அந்த மாலை என்னை நினைக்குமா?
சவச்சீலையின்றி(shroud) இறந்த ஒரு குடியேறியை(migrant) நினைக்குமா?
விலவு(willow) மரக்காடுகளே,
எவனை -செத்தவற்றைப் போல்- உங்கள் சோக நிழலின் கீழெறிந்தீரோ
அவனை ஓர் மாந்தனென நினைவுகூருவீரா?
என் சடலத்தை பிணந்தின்னிக் காகங்களிடமிருந்தது காப்பீரோ?

என் அம்மா, எவருக்கு இந்தப் பக்கங்களை எழுதியிருக்கிறேன்?
என்ன மடலை அவர்களுக்குக் கொண்டு போவேன்?
அவர்களுக்கு எப்படி எடுத்துச் செல்வது?
நில,கடல்,ஆகாய வழியனைத்தும் மூடப் பட்டிருக்கின்றன
என் அன்னையே, நீயும்,என் தந்தை,உடன்பிறந்தார், உறவுகள், நண்பர்கள் என அனைவரும்
ஒரு வேளை உயிரோடிருக்கலாம்!
ஒருவேளை மாண்டிருக்கலாம்!
ஒருவேளை என்னைப் போல் உங்களுக்கும் முகவரியில்லாதிருக்கலாம்!

என்ன பெறுமதியிருக்கிறது?
தாய்நாடில்லாதிருப்பதில்
கொடியில்லாதிருப்பதில்
முகவரியில்லாதிருப்பதில்..?
அப்படியான மாந்தனுக்கு என்ன பெறுமதியிருக்கிறது?

தமிழ்நதி said...

நீண்ட கவிதையை அனுப்பிய என் அன்பான அனானி நண்பரே!
அந்தக் கவிதையைப் படித்து நான் அழுதேன். அந்தக் கவிதை எங்களைக் குறித்தே பேசுகிறது என்பதனாலா... இதயத்தின் மெல்லுணர்வைத் தூண்டிவிட்ட அதை மீளவும் மீளவும் வாசித்தேன். ஒரு பதிவினால் நல்லதொரு கவிதையை வாசிக்கக் கிடைத்தது. இந்த சம்பிரதாயங்களையெல்லாம் கடந்து அதை எழுதிய விரல்களில் கண்ணீர்த்துளி படிய முகம்புதைத்து அழ விரும்புகிறேன். நன்றி! நன்றி!

இளங்கோ-டிசே said...

நதி, உங்கள் எழுத்தின் வழியே நடந்தபடி என்னையும் மீள ஒருமுறை பார்க்கமுடிந்தது. எங்கிருப்பினும் -ரொரண்டோவாயிருந்தாலென்ன, சென்னையாயிருந்தாலென்ன- வலிகளிலிருந்தும் உணர்ச்சிகளிலிருந்தும் விடுபடல் அவ்வளவு இலகுவாயிருக்கப்போவதில்லை.

(wrote it yesterday but couldn't post it bec of some technical problems.)

Anonymous said...

பதிவெங்கும் விரவியிருக்கும் வலியை உணர்கிறேன்..பகிர்ந்து கொள்கிறேன் என்றெல்லாம் என்னால் சொல்லமுடியவில்லை....

ஒன்றுமட்டும் சொல்லத் தோன்றுகிறது....

என் கைகளை பிடித்துக்கொள்ளேன்...
நீ விரும்பும் வெளிச்ச தூரம்வரை
நானும் வருகிறேன்.....

சீக்கிரம் நட...
வீட்டில் எனக்கும் நிறைய வேலை பாக்கியிருக்கிறது...

(நானும் எழுத பழகிக்கொண்டிருப்பவன்தான்....)

Anonymous said...

அட, பேரப் போட்டிருக்கேங்க.
அனானி ஆக்கிப் புட்டீங்களே!
ஊற்றுகையாக(original) கவிதை Mahmoud Darwish உடையது.
உங்கள் கண்ணீரும் அவர் விரல்களுக்கே.
மொழிபெயர்ப்பு மட்டுந் தேன் அடியேன்.
இதை முதலில் ஆங்கிலத்தில் படித்த போது இதே எண்ணங்களும்
கண்ணீருந் தான் எனக்கும் வந்தன.

- பிரதாப்

தமிழ்நதி said...

பார்த்தேன் பிரதாப், ஆனால் அது உங்கள் உண்மைப்பெயரா என்று தெரியவில்லை. அனானிகள் குழப்பிவிட்டன. மொஹம்மது தார்வீஷ்ஷின் கவிதைகள் நான் முன்பே படித்திருக்கிறேன். அருமையாக இருக்கும்.ஆனால் இந்தக் கவிதை படித்ததில்லை. எவ்வளவு யதார்த்தமான உணர்வுகள்... கவிதையின் மீதான கண்ணீர் யார் மீதில் உதிர்ந்தாலென்ன...?

ஜெயச்சந்திரன் said...

உணர்வுகளை எழுத்தில் வடிப்பது அவ்வளவு இலகு அல்ல. உங்களுக்கு அது மிக திறம்பட வருகிறது. உங்கள் ஆக்கங்கள் அனைத்தையும் வாசித்தாலும் பின்னூட்டம் இடுவதில்லை.
மனிதர்கள் தனித்தனி என்றாலும் சில விடயங்களில் அவர்களின் உணர்வுகள் ஒன்றானவை.
அதைவிட மேலதிகமாக ஏதும் சொல்ல முடியவில்லை.

Anonymous said...

தமிழ் நதி ,

உயிரோட்டமான எழுத்து,
நம்பிக்கை தான் வாழ்க்கை
போராட்டம் எல்லாமே,
அதனால நம்பிக்கையைத் தளரவிடாதையுங்கோ.
எமக்கென ஒரு தேசம் ஓர் நாள் உதயமாகும். நம்பிக்கையுடன் இருங்கள்.

சினேகிதி said...

எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில்தான் இருக்கிறோம் போலுள்ளது.
முந்தி ஒரு காலத்தில தமிழ்நெற் பதிவு போன்ற தளங்களுக்கு அடிக்கடி போய்ப்பார்த்து வந்த பலர் இப்போது போவதே இல்லை.காரணம் செய்திக்குருடாக இருப்பது எவ்வளவோ மேல்.
அருமையான கடிதம் தமிழ்நதி.இப்போதுதான் யாழில் இதை வாசித்தேன்.முதற்தடவையாக உங்கட வலைப்பதிவுக்கு வந்திருக்கிறேன்.வாசிக்கத் தெரிந்துகொள்ள நிறைய விடயங்கள் வைத்திருக்கிறீர்கள்.நல்ல எழுத்துநடை தொடர்ந்து வாசிக்க வைக்குது.

LakshmanaRaja said...

முதல் முதலாய்
எம் தமிழினத் துயரத்தை
நேரெ கண்டதென உணர்கிறேன்

என்ன‌ அவ‌ல‌ம் இது
த‌மிழ் நாட்டில் வாழ்ந்தும்
எம் இன‌த்தின் நிலை அரியாத
வாழ்த்த‌ல்.

என‌க்கு தெரிய‌வில்லை த‌மிழ் நதி..
நாங்க‌ளும் எங்க‌ள் இருப்பின்
கார‌ண‌ காரிய‌ங்காலும்..

thamirabarani said...

மனதை தொடுகிறது வார்தைகள் இந்த தோழனின் பாரட்டுக்கள்

thamirabarani said...

மனதை தொடுகிறது வார்தைகள் இந்த தோழனின் பாரட்டுக்கள்

தமிழ்நதி said...

தாமிரபரணி, உங்களது மற்றைய பின்னூட்டத்தில் சில வார்த்தைப் பிரயோகங்கள் மிகக் கடுமையாக இருந்தன. அதை 'எடிட்'பண்ணிப் போடவும் எனக்குத் தெரியவில்லை. அதனால் வெளியிடவில்லை. ஆனால், எனக்கொரு சந்தேகம் அது உங்களால் எழுதப்பட்டதுதானா... ஏனென்றால் அதிலுள்ள உங்கள் பெயரை கிளிக்கினால் உங்கள் வலைப்பூவிற்குப் போகவேண்டும். ஆனால் போகவில்லை. எனவே வேண்டுமென்றேகூட அதை யாராவது போட்டிருக்கலாம். என்னைச் சிக்கலில் மாட்டிவைக்கவும் நினைத்திருக்கலாம். நீங்கள்தானா என்று தெரியப்படுத்துங்கள். நன்றி.