2.25.2007

வித்தைக்காரன்


இளஞ்சிவப்பு மலர்கள் உதிரும் சாலை வழி
நடந்துகொண்டிருக்கிறேன்
சிக்கல்கள் இன்னும் விழித்தெழாது
கடந்து செல்லும் முதியவரின்
முகமொத்துக்கனிந்திருக்கிறது காலை.

“ஏய்…!”தூங்குமூஞ்சி மரத்தடியிலிருந்து
இரைந்த குரலுக்குரியவன்
மேலும் இறைக்கிறான் தூஷணையை.
திருப்தியுறாத பெண் வந்துபோன
சேலைக்கடையாகிறது காலை.

அன்று பேசாதிருந்திருக்கலாம்
சித்தம் சிதைந்தவனுக்கு இணையென.

திரும்பும்வழியில் கூட்டம் சேர்ந்திருக்கிறது
லேகியம் விற்றுக்கொண்டிருக்கிறான்.
மற்றொருநாள் குரங்காட்டியாயிருந்தான்
பாம்பும் கீரியும்
பில்லி சூனியம்
கயிற்றில் நடத்தல்
குட்டிக்கரணம்
தேசப்பித்து
பெரியோர் வாழ்த்து
கண்கட்டி வித்தை
கூவிக் கூவி முதுகின்பின் குரல் தேய்கிறது.

நேற்றுப் பார்த்தேன்
தூங்குமூஞ்சி மரமும் அவனும்
தனித்துப் பேசிக்கொண்டிருந்ததை.

13 comments:

பங்காளி... said...

ம்ம்ம்ம்...

நல்லா வந்திருக்கு....

Anonymous said...

நவீன கவிதை. நல்லா இருக்கு!

பாரதி தம்பி said...

அந்த காவாளிப் பயபுள்ள யாரு...?

தமிழ்நதி said...

பங்காளி,இனியன்,ஆழியூரான் வந்து போனதற்கு நன்றி.

என்னல எவனப் பத்திப் பேசுறன்னு தெரியாதாங்காட்டியும்...!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சித்தம் சிதைந்தவன் என்று தான்
தெரிந்து விட்டதே
பேசாமல் விட்டால் தான் நல்லது.
பாருங்கள் ..பேசும் மரம் கூட
கிடைக்கவில்லை அவனுக்கு
தூங்குமூஞ்சி மரம் தான்
கிடைத்திருக்கிறது.

சோமி said...

ம்...உங்கள் கவிதையில் இன்னும் இன்னும் மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்யுங்கள். நன்றாக இருக்கிறது

யாழினி அத்தன் said...

இனிதாய் இருக்கிறது உங்கள் கவிதை.

தூஷணை - அர்த்தம் என்ன?

வாழ்த்துக்கள்.

தமிழ்நதி said...

முத்துலட்சுமி,சோமி,யாழினி கருத்துக்கு நன்றி.

யாழினி!இந்தக் கவிதையில் தூஷணை என்ற வார்த்தையை வசைபாடுதல் என்ற பொருள்பட பயன்படுத்தியிருக்கிறேன். ஈழத்தமிழர்களின் வழக்கில் பொதுவாக தூஷணம் என்றால் கெட்டவார்த்தை என்று பொருள். ஆனால், 'தூசணம்'என்று எழுதினாலும் இதுவொரு தமிழ்ச் சொல்லா என்பதில் எனக்குச் சந்தேகமிருக்கிறது.

Mahendiran P said...

Super a ezhudhureenga, Thamizhnathi Madam! Keep it up!

படியாதவன் said...

எப்பிடி இதெல்லாம் உங்களாலமட்டும் முடியுது?
கவித,,கவித..

எனக்கெல்லாம் காதல் கவிதை எண்டு சொல்லி அஞ்சாறு வரி கிறுக்கத்தான் தெரியும்..
அதுவும் அதை புளொக்கில எல்லாம் போடுறன் எண்டு அவளுக்குத் தெரிஞ்சா என்ர கதி அதோகதிதான் :)
(வேற பெயரில புளொக் எழுதுறது கூட தெரியாது)

யாழினி அத்தன் said...

தமிழ்நதி,

மிக்க நன்றி.

உங்கள் கவிதையின் மூலம் இன்னும் பல புதிய தமிழ்ச் சொற்களை அறிவேன் என்று நினைக்கிறேன்.

தமிழ்நதி said...

மகேந்திரன் கருத்துக்கு நன்றி.

படியாதவன்! உங்களைப் பயப்படுத்தக்கூடிய படியாதவள் ஒருத்தி இருப்பதை இன்று தெரிந்துகொண்டேன். நல்லது! காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?(தாளம்)

யாழினி அத்தன், புதிய தமிழ்ச்சொற்களா.. என்னிடமிருந்து கற்றுக்கொள்வதா? அதிகம் நம்பாதீர்கள். நான் இப்பதான் அ... ஆ...

Unknown said...

உவமைகள் அழகாக இருக்கின்றன.

இனிய கவிதைக்கும் வாழ்த்துக்கள்!!!