5.16.2007

வெயில் எழுதியது…



கூடுகையில் துணையிழந்த பாம்பினைப்போல
சினம் தழலும் விழிகளுடன்
துரத்தி வருகிறது கோடை
தெருச்சண்டியனாய்
வலுச்சண்டைக்கிழுக்கும் சூரியனுக்கஞ்சி
வீட்டிற்குள் நுழைகிறேன்
ஒவ்வொரு அறையும் அயர்ந்துகிடக்கிறது
வெயிலின் விசாரணையில்.

அதீதமான துயரம்,கோபம்,மகிழ்ச்சி எல்லாவற்றையும் உறிஞ்சுதாள்போல தனக்குள் இழுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் தன்மையது எழுத்து. ஆனால், அதைக்கூடச் செய்யவொட்டாமல் சிந்தனையின் ஈரத்தை உலர்ந்துபோகச் செய்யும் இந்த வெக்கையுடன் மல்லுக்கு நிற்பதிலேயே இந்நாட்கள் கரைந்துகொண்டிருக்கின்றன. எந்நேரமும் மின்விசிறிகளின் தொணதொணப்பின் கீழ் இருக்கக் கட்டளையிட்டிருக்கும் இக்கனற் காலமானது, சொற்களின் ஊற்றுக்கண் மீது அழிச்சாட்டியமாக அமர்ந்து அடைத்துக்கொண்டிருக்கிறது.
காலநிலை, கண்ணுக்குத் தெரியாத கோலொன்றினைக் கையில் ஏந்தியபடி மனோநிலையை ஆண்டுகொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் மனசு குளிரோடையாகிவிடுகிறது. நடக்கும் இடங்களெல்லாம் பூ மலர்ந்து கிடக்கிறது. மெல்லென சிறகு விசிறிக் கிளையமரும் பறவைகள் தம் குரலெனும் திவலைகளால் விடியலின் வாசல் தெளிக்கின்றன. எவரையும் கடிந்துகொள்வதற்கு முன் யோசிக்கிறோம். மாறாக கோடை தன் வெம்மையை மனிதருக்குள் கடத்துகிறது. வெயிலின் கண்களால் பார்த்து, வெயிலின் உதடுகளால் பேசும்படியாகிறது. அது கொலைக்கும் தற்கொலைக்கும் தூண்டுகிறது. பைத்தியக்காரர்களை உருவாக்குகிறது. காதலைப் பொசுக்குகிறது. கண்ணீரையுமா அது உறிஞ்சிவிட்டது…? ஒரு கையசைப்பு தானுமின்றி மௌனமாக நிகழும் பிரிவுகளை சாத்தானைப்போல இந்த வெயில் ஆசீர்வதிக்கிறது.

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நகரமொன்றில் துப்பாக்கி ஏந்தியலையும் இராணுவத்தானைக் கண்டு பீதியோடு ஒளிவதைப் போன்றிருக்கிறது பதைத்தபடி வேகவேகமாகத் தெருவில் நடந்துபோகிறவர்களின் முகம். மண்டைக்குள் அமிலக்குழம்பென இறங்கித் தகிக்கும் இந்த வெப்பத்திலிருந்து குளிர்நிலமொன்றிற்குத் தப்பித்து ஓடிவிட முடிந்தவர்கள் பாக்கியவான்கள். (அப்படியானால் பாக்கியவதிகள் எங்கே போவார்கள்?)

கோடை இத்தனை குரூரமாகிவிட்டதற்கு இயற்கைச் சமநிலையைக் குழப்பிய மனிதன்தான் காரணம் என்று நொந்துகொண்டார் நேற்றொரு நண்பர். மரங்களை வெட்டி மழையைத் துரத்திவிட்டோம். மரத்தால் ஆன கதவுகளுக்குள்ளிருந்து, மரத்தால் ஆன மேசையிலமர்ந்து, மரக்கூழால் ஆக்கப்பட்ட காகிதத்தில் ‘மழை’என்ற சொல்லை எழுதிப் பார்ப்பதற்குப் பதிலாக ‘முட்டாள்’என்று எம்மைக் குறித்தொரு வார்த்தையை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

குளிரூட்டப்பட்ட வீடுகளிலிருந்து புறப்பட்டு, குளிரூட்டப்பட்ட கார்களில் பயணித்து, குளிரூட்டப்பட்ட நீண்ட அறைகளுக்குள் பிரவேசித்து போத்தல்களில் அடிக்கப்பட்ட குடிநீர் சகிதம் அனல் தெறிக்கும் வார்த்தைகளால் ‘நாற்காலி’க்கு அடிபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு எல்லாக் காலமும் இளவேனில்தான். ஆனால், நடைபாதைவாசிகளின் மீது காலநிலையும் கருணை காட்டுவதில்லை. மாரியில் காலடியில் வெள்ளம் சுழித்தோட உட்கார்ந்தபடி உறங்குவதும், கோடையில் நெருப்புக் கங்குகளாய் உடலில் இறங்கும் வெயிலைச் சகித்தும் சபித்தும் இருப்பதும் வாழ்வின் பெறுமதி மற்றும் பொருள் குறித்துக் கேள்விகளை எழுப்பத் தூண்டுவன. குறைந்தது மூன்று தடவைகளேனும் குளிக்கத் (குளிக்கும் வழக்கம் உடையவர்களை :)) தூண்டுகிறது இக்கொடுங்கோடை. தண்ணீர் வண்டியை எதிர்பார்த்து வெற்றுக் குடங்களுடன் வரிசையில் காத்திருக்கும் இம்மாநகரத்து கடைக்கோடி மக்களுக்கோ ஒருவேளை குளிப்பென்பதும் ஆடம்பரம்தான்; அதிகபட்சம்தான்.

வெயில் ஊற்றப்பட்டிருக்கும் சுவர்களால் வீடொரு நெருப்புத்துண்டாகிறது. வீட்டின் ஒவ்வொரு அறைக்குள்ளும் அந்தரித்து அலைய வேண்டியதாயிருக்கிறது. எப்போதும் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருப்பதற்கு குற்றவுணர்வைக் கழற்றிவைக்கவேண்டியிருக்கிறது. வீட்டு விலங்குகளை வளர்ப்பதற்கே போதுமான மிகச்சிறிய அறைகளில் வாழ விதிக்கப்பட்டிருக்கும் நகரவாசிகள் மழைக்காலம் வரை உயிர்த்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்தான். தெருவில் நடந்துபோன சாரதியொருவர் வெயிலின் கொடுமை தாளாமல் விழுந்து இறந்தார் என்ற செய்தியைப் படித்தபோது, ‘இப்படிக்கூட நடக்குமா…’ என்றிருந்தது. ஆனால் நண்பர்களே! சென்னை வெயிலில் சில தடவைகள் வெளியில் போய்வந்தபிறகு அது குறித்த வியப்பு தீர்ந்துவிட்டிருக்கிறது. தெருவில் நடந்துசெல்பவர்கள் தண்ணீர் நனைக்கப்பட்ட கைக்குட்டைகளை நெற்றியின்மேல் போட்டுக்கொண்டு போகிறார்கள். வெற்றுப் பாதம் தகிக்க நடந்துபோகிறவர்களைப் பார்த்துத் தலையைக் குனிந்துகொள்ளுமளவிற்கே நமது மனிதாபிமானம் இருக்கிறது. மேலும், இந்த இரக்கம் ஒரு சோடி செருப்புடன் முடிந்துவிடாதென்ற உள்ளுணர்வின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டியுமிருக்கிறது. வாங்கிக் கொடுக்கவியலாமற் போன செருப்பை மனசுக்குள் சுமந்துகொண்டலைய வேண்டியிருக்கிறது.

வெயில் குடித்த சுவர்களுக்குள்ளிருந்தபடி, அடுத்த வளவிற்குள் ஒரே ஆறுதலாக இருந்து தலையசைக்கும் வேம்புகளைப் பார்க்கிறேன். இலைகளில் ஒரு துளியும் இல்லைக் களைப்பு. போதாததற்கு கபில நிறத்தில் துளிர்கள் வேறு. அந்தப் பச்சையில் முகம் புதைத்துப் பின் தலைதூக்கிப் பார்க்க இந்தக் கோடை கடந்துபோய் விட்டிருந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்!

11 comments:

பங்காளி... said...

மே 24ம் தேதி பருவமழை துவங்குமென வானிலை துறை தெரிவித்திருக்கிறது....ம்ம்ம்ம்

கத்திரி வெயில் காலத்தில் வரும் மழை இந்த வருடம் கானோம்...

Ayyanar Viswanath said...

தமிழ்நதி

உங்க பார்வை அற்புதம்.வார்த்தைகளில கவித்துவம் ..பிரம்மிக்க வைக்கிற நடை..

/மரத்தால் ஆன கதவுகளுக்குள்ளிருந்து, மரத்தால் ஆன மேசையிலமர்ந்து, மரக்கூழால் ஆக்கப்பட்ட காகிதத்தில் ‘மழை’என்ற சொல்லை எழுதிப் பார்ப்பதற்குப் பதிலாக ‘முட்டாள்’என்று எம்மைக் குறித்தொரு வார்த்தையை எழுதிப் பார்க்கலாம்/

ஆஹா மேற்கோள் காட்டுவது முட்டாள்தனம்.மொத்த பதிவையுமே காபி பேஸ்ட பண்ணனும்..

ஆனா தமிழ்..இந்த பருவ நிலைகளை பற்றிய சலிப்பே ஓய்வாக இருக்கும்போதுதான் தோன்றுகிறது ன்னு ஏதோ ஒரு நாவலில் வரும் ??? எப்பவோ படிச்சது :)..

கலை said...

வெயிலின் கொடுமையை கூட அழகாக வர்ணனை செய்திருக்கிறீங்க.

மங்கை said...

தமிழ்நதி..

அதான் உங்க பேர்லயே நதி இருக்கே...:-)

இது தில்லி சார்பா...போட வேண்டிய ஆள் இல்லாதனால நான் போடற பின்னூட்டம்...

மங்கை said...

நாங்க எல்லாம் என்ன சொல்ல...45 டிகிரி...உண்மையாவே வெந்துட்டு இருக்கோம்பா..ஹ்ம்ம்..

இதுல மெட்ரோ வருதுன்னு நல்ல பெரிய பெரிய வேப்பம் மரங்களை வெட்டி போட்டுட்டாங்க..நீங்க சொன்னது ரொம்ப சரி..முட்டாள்களே தான்...

//ஆனால், நடைபாதைவாசிகளின் .....மற்றும் பொருள் குறித்துக் கேள்விகளை எழுப்பத் தூண்டுவன//

இவர்களை பார்க்கும் போது...நாம் அவதிபடுவது ஓன்றும் இல்லை...

காயத்ரி சித்தார்த் said...

தமிழ்நதி மேடம்..

உங்கள் எழுத்துக்களை விமர்சிப்பதற்கே தனி தகுதி தேவைப்படுகிறது எனக்கு!

//அந்தப் பச்சையில் முகம் புதைத்துப் பின் தலைதூக்கிப் பார்க்க இந்தக் கோடை கடந்துபோய் விட்டிருந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்!//

உங்கள் எழுத்துக்களில் புதைந்து கொள்வது கூட இதே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. நல்லதோர் அனுபவம் கொடுத்தமைக்கு நன்றி.

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் பங்காளி,அய்யனார்,கலை,மங்கை,காயத்ரி அனைவருக்கும் நன்றி. என்னத்தைச் சொல்ல... வெயில் தன்னைப் பற்றி என்னைக் கொண்டு எழுதுவித்தது என்பதைத் தவிர.

பங்காளி! இதற்குப் பெயர் கத்திரி வெயிலா... அரிவாள் மாதிரி அறுக்கிறது.

அய்யனார்! உங்கள் கவிதையைப் புரட்டிப் போட்டு மறுவளமாக எழுதுகிற அளவிற்கு (பார்க்க நேற்றைய கும்மி) நீங்கள் பெரிய கவிஞரல்லவா...(ஐஸ் ஐஸ்) நீங்களே புகழ்வது வெயிலுக்கு இதமாகத்தானிருக்கிறது.

நன்றி கலை!வெயில் கொடுமையானதே. எனினும் எனக்கொரு நினைவை,பதிவைத் தருமளவிற்கு கருணையோடிருக்கிறது.

மங்கை!முத்துலட்சுமியை பெரும்பாலும் சந்திப்பேன் என்று நினைக்கிறேன். டில்லி சார்பாக பின்னூட்டமிட்டதற்கு நன்றி:)

காயத்ரி!நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டியிருக்கிறதா...? :)இப்படியெல்லாம் புகழக் கேட்க பயம் பயம்மா வருதுப்பா! ஆனா... உண்மையோ பொய்யோ நல்லாத்தானிருக்கு காயத்ரி. நானும் மனுசப் பிறவிதானே... (நானே சொல்லிக்க வேண்டியதுதான்)

மஞ்சூர் ராசா said...

ஒரு கவிதாயினியின் பார்வையில் அல்லது அனுபவத்தில் வெயில் கூட எப்படி கவிதையாய் மாறுகிறது என்பதை படிக்கையில் வியப்பைவிட அந்த வெயிலின் தகிப்பை குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து படிக்கையில் உணரவைக்கும் சக்தியை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். தலைப்பின் கீழ் உள்ள கவிதையும், வண்ண ஓவியமும் அதை மேலும் அதிகரிக்கின்றது. வெயில் ஊற்றப்பட்ட சுவர்கள், கோடைத்தெருச்சண்டியனாய், துப்பாக்கி ஏந்தியலையும் இராணுவத்தானை ... போன்ற வார்த்தைக்கோர்ப்பும், வேம்பின் குளிர்ச்சியை இணைத்தவிதமும் நன்று.

தென்றல் said...

/அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நகரமொன்றில் துப்பாக்கி ஏந்தியலையும் இராணுவத்தானைக் கண்டு பீதியோடு ஒளிவதைப் போன்றிருக்கிறது பதைத்தபடி வேகவேகமாகத் தெருவில் நடந்துபோகிறவர்களின் முகம்./

ம்ம்ம்ம்...
உங்கள் எண்ணங்களும்.... வார்த்தைகளின் ஆழமும்...

மஞ்சூர் ராசா குறிப்பிட்டது போல
'அந்த வெயிலின் தகிப்பை குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து படிக்கையில் உணரவைக்கும் சக்தியை நினைத்து'

பிரம்மிக்கவே செய்கிறேன்..

Jazeela said...

நான் சொல்ல வந்ததை அப்படியே அய்யனாரும் மஞ்சூரும் சொல்லி என் சேவையை மிச்சப்படுத்திட்டாங்க. ஒரு வருஷக் கோடைக்கே இப்படியா? எங்க ஊருக்கு வந்து பாருங்க எல்லா வருஷமும் இப்படித்தான். ;-)

மிதக்கும்வெளி said...

sugu/வெயில் ஊற்றப்பட்டிருக்கும் சுவர்களால் வீடொரு நெருப்புத்துண்டாகிறது/

நல்ல படிமம். உங்கள் எழுத்தில் வெயிலடிக்கிறதா, மழையா?

/உங்கள் எழுத்துக்களை விமர்சிப்பதற்கே தனி தகுதி தேவைப்படுகிறது எனக்கு!/

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.