நகுலனின் படைப்புகளை அங்குமிங்குமாக வாசித்திருந்த நிலையில், அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகிய 'கண்ணாடியாகும் கண்கள்' புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. அந்த வரிகளில் இருந்த தனிமை மிக வருத்தியது. அந்தப் புத்தகத்திலிருந்த புகைப்படங்கள் பேசியதும் அதிகம். எளிமையான வரிகள் ஊடாக அவரால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகள் வாழ்வின் பொருளின்மையை எள்ளும் அதேநேரம் எளிதில் மறுத்தோடவியலாத அதன் இருப்பையும் உணர்த்துவன. காவ்யா சண்முகசுந்தரம் அவர்களால் தொகுக்கப்பட்ட 'நகுலனின் இலக்கியத்தடம்' என்ற நூலின் பதிப்புரையில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.
"வாழ்க்கை என்பதுதான் என்ன? ஒன்றுமில்லை என்று சொல்லிவிடலாமா?? அதெப்படி? இல்லாத ஒன்றுக்கா இத்தனை பிரயத்தனங்கள்... இருத்தலுக்கான முயற்சிகளும் இருப்புக்கான அர்த்தங்களைத் தேடுவதும்தான் வாழ்வு. பலர் வெளியே தேடுவர்; தனக்கு வசதியான இடங்களில் தேடுவர்; தன்னைத் தேடுவர்; கண்டவர்கள் கொஞ்சம்; விண்டவர்கள் அதனினும் கொஞ்சம். எழுதுதலும் ஒரு தேடலே; எழுத்தும் ஒரு கண்டடைதலே. கதை, கவிதை,கட்டுரை,உரையாடல் எல்லாமே படைப்பு முயற்சிகளின் பன்முகங்கள்."
இன்று காலை,வா.மணிகண்டனின் பதிவின் மூலம் நகுலன் 'காலம்' ஆகிவிட்டதாக அறியக் கிடைத்தது. நகுலனின் கவிதைளிற் சில:
இல்லாமல் இருப்பது
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.
----
கடைசிக் கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்
---
"எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்கி
ன்
ற
ன
அவைகளைத்
துடைத்தெறிய வேண்டும்
வேண்டும்"
----
"இன்று காலையில்
உறங்கி
விழித்ததும்
என்னை நான்
காணவில்லை"
இதைப் படித்ததும்
எஸ். நாயர்
சொன்னது நினைவில் வருகிறது:
இங்குதான்
சர்ப்பம் சீறுகிறது
என்று;
அப்பொழுது
எனக்கு எமிலி டிக்கின்ஸன்
ஒரு கவிதையில் எழுதியது
ஞாபகம் வந்தது:
'கண்கள் ஒரு தடவை கண்ணாடியாகின்றன'
இது சாவு.
---
வெளித் திண்ணையை
அணைத்த நீண்ட தட்டியை
சுருட்டிக் கட்டி
திட்டையருகே சூரல் நாற்காலியை இழுத்து
முன்கிடந்த வெற்றுப்பாதையை
எட்டிப் பார்க்க இரு கண் பசித்த
என் முன்னர்
வேறாக வந்தவர் எவரும் சேறாக
அவர் பேச்சும் மாறி வீச
நான் தனியாக
என்னை மீறிய
என்னினும் வேறாய
நானே ஆய ஒரு நிலை.
அந்நிலையில்
சூரல் நாற்காலி
என்னைத் தாங்கிச்
என்னைத் தாங்கிச்
சமைந்து சலனமற்றுக்
காலபீடமாகப் பரவெளியாகப்
படர்ந்து விரியும்.
---
மீண்டும் வீதியில் யாருமில்லை
வெறும் தனிமை.
வெகு துலைவில்
வேகம் குறைந்துவரும்
டாக்சி என் வீடு வரும் என்று
நம்பிக்கையின்
வேதனை தாங்கி
நான் வாழ மனந்தூண்ட
நான் வறிதே வீற்றிருக்க
வந்த வண்டி
என் வீடு தாண்டிப்போகும்.
---
நான்
எனக்கு
யாருமில்லை
நான்
நான்
கூட....
----
"நந்தனைப் போல்
நான் வெளியில் நிற்கிறேன்
நானும் ஒரு பறையன்தான்
அதில்தான் எவ்வளவு செளகரியங்கள்
எல்லாக் குழுவிற்கும்
வெளியில்
இருப்பதால் ஒரு தனி செளகரியம்"
----
ராமச்சந்திரன்
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை.
----
"அறையில் நாற்காலி
சுவரில் எட்டுக்காலி
தெருவில் விட்டவழி
அறையுள்
தட்டுமுட்டுச் சாமான்கள்
பயணத்தின் முடிவில் ஒருவன்
பயண வழி நெடுக
ஒருவன்
கடலின் இக்கரையில்
மணல் வெளி
அக்கரையில்
அலைகளின்
அடங்காத வெளி
கரையிரண்டும்
மணலென்று
கண்டால்
எல்லாம் வெட்ட வெளி"
---
நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை
கவிஞர் நகுலனின் முதுமையை, வாழ்க்கை வழங்கிய வார்த்தைகளின் தனிமையைப் பார்த்தபிறகு அவர் சொன்னதையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. நகுலன் கவிஞர் மட்டுமல்ல; கதை, கட்டுரை எனப் பன்முக ஆற்றல் மிக்க படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.