
ஞாபகக்கிணற்றின் ஆழத்துள்ளிருந்து
சுரந்தபடி இருக்கும் ஊற்றினை
‘உயிர்ப்பயம்’ என்ற ஒற்றைச்சொல்லால்
மூடாதே என் அம்மா!
அச்சம் சுமந்தலையும் காற்று…
கிணற்றில் மிதந்த பிணம்…
அகதிமுகாம்களில் கரைந்துமறையும் மனிதர்கள்…
நடுநிசியழகை விழுங்கும்
நாய்களின் குரைப்பொலி…
எல்லாம் சரிதான்
எனின்
காகக்கூட்டிலிருந்து கொத்தி விரட்டப்படும்
குயில்குஞ்சு நான் அம்மா!
உயிர்சுமந்து அலைபவளை
ஊருக்குத் திரும்பவிடு.
கருணைப் பசுமையிலா
பாழ்வெளியில்
குந்தவொரு மரமுமிலை
அந்தரத்து வானத்தில்
நெடுங்காலம் சஞ்சரிக்கவியலாது.
உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன
பீனிக்ஸ் பறவைகளின்
கரிந்துபோன சிறகுகளை
பொறுக்கிக் களைத்தேன்
போதும் இனித் திரும்புகிறேன்.
பெருமிதவெளிச்சம் அணைந்த விழிகளும்
துரோகிக்கப்பட்ட இதயமும்
தீர்ந்துபோன சொற்களுமாய்
வாழ்வென்ற பெயரில்
எப்படியோ நாட்களை நாம்
எரித்துவிட்டுச் சாகலாம்.
உன் மூக்குத்திக்கல் பதிய
முத்தமிட்டு வாவெனச் சொல்.
பளிங்குமாளிகை முன்
தொட்டிச்செடியாயிருப்பதிலும்
எனது தாழ்வாரத்தினோரம்
சிறுபுல்லாய் சீவித்தல் சுகம் அம்மா.
முள்ளிவாய்க்கால் குருதி தொட்டு
எழுதப்படவிருக்கும்
‘செம்மொழி’யின் பேரிரைச்சல்
செவிகிழித்து நெருங்குது கேள்!
மரணக்கூடெனினும்
என் மண் இனிது தாயே
மறுக்காதே! வருகின்றேன்.
9 comments:
நல்லாருக்குன்னு சொல்ல பதறுகிறது, வலி.
தலைப்பு தொடங்கி.
//உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன
பீனிக்ஸ் பறவைகளின்
கரிந்துபோன சிறகுகளை
பொறுக்கிக் களைத்தேன்
போதும் இனித் திரும்புகிறேன்.//
நானும் ....
பளிங்குமாளிகை முன்
தொட்டிச்செடியாயிருப்பதிலும்
எனது தாழ்வாரத்தினோரம்
சிறுபுல்லாய் சீவித்தல் சுகம் அம்மா.//
வலி உணர்த்தும் கவிதை இது .
வலி உணர்ந்தேன்.
மவுனமாய் படிகிறேன்.
வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம்.
//முள்ளிவாய்க்கால் குருதி தொட்டு
எழுதப்படவிருக்கும்
‘செம்மொழி’யின் பேரிரைச்சல்
செவிகிழித்து நெருங்குது கேள்!
மரணக்கூடெனினும்
என் மண் இனிது தாயே
மறுக்காதே! வருகின்றேன்//
வலிக்கிறது...கவிதை நல்லா இருக்கிறது.
//முள்ளிவாய்க்கால் குருதி தொட்டு
எழுதப்படவிருக்கும்
‘செம்மொழி’யின் பேரிரைச்சல்
செவிகிழித்து நெருங்குது கேள்!
மரணக்கூடெனினும்
என் மண் இனிது தாயே//
மனதொங்கும் வழி....
"உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன
பீனிக்ஸ் பறவைகளின்
கரிந்துபோன சிறகுகளை
பொறுக்கிக் களைத்தேன்
போதும் இனித் திரும்புகிறேன்"
Also read your heart rending essay in AMRUTHA about Today's Jaffna. I think this is the poetic structure of that experience. Both of them are touching and a slap on the face of every Tamilian in Tamil Nadu.
தமிழ்.
இது அவநம்பிக்கைக்களுக்கான காலம் போலிருக்கு தமிழ்..
செம்மொழிக்கு போட்டிபோட்டுக்கொண்டு நம் படைப்பாளிகள் கட்டுரைகளை அனுப்புவதும், சில இலக்கிய நிகழ்வுகள் மாநாட்டுக்கு பிறகென ஒத்திவைக்கச்சொல்லுவதும் தமிழ்ச்சூழலில் மாத்திரமே நிகழும்.
உயிர்த்தெழுவதாய்ச் சொன்ன
பீனிக்ஸ் பறவைகளின்
கரிந்துபோன சிறகுகளை
பொறுக்கிக் களைத்தேன்
போதும் இனித் திரும்புகிறேன்.//
பற்றுவதற்கு ஏதுமற்ற கையறுநிலையில் பற்றியிருப்பதை துடுப்பென நம்புவோம்.
சேரன் கவிதை போல
தேநீர்
குருதியாக மாறும் காலம் மாநாட்டிலும் நிகழும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜாராம், செந்தில், கருணாகரசு, அரைக்கிறுக்கன் (அது சரி பின்ன நாமெல்லாம் யாரு:)), மதுரை சரவணன், சங்கவி, தன்ராஜ், விஷ்ணுபுரம் சரவணன்.
தன்ராஜ், உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. தொடர்ந்து வாசித்துக் கருத்துச் சொல்லிவரும் உங்கள் அன்புக்கும் நன்றி.
Post a Comment