சென்றவிடங்களிலெல்லாம்
திரும்புதல் குறித்தே பேச்சு
எதிர்பார்க்கைகளிலிருந்து இருப்புக்கு
தனிமையிலிருந்து கலகலப்புக்கு
அந்நியத்திலிருந்து உறவுக்கு
வேகத்திலிருந்து நிதானத்துக்கு
இயந்திரங்களிலிருந்து மனிதருக்கு
தாழ்வுணர்ச்சியிலிருந்து பெருமிதத்திற்கு
சில சுற்றுலாப் பயணிகளுக்கு
சென்றவிடங்களெல்லாம்
திரும்புதல் குறித்தே பேச்சு
சிதைந்த ஊர் முகத்தை
சதுப்புகளாகிவிட்ட வயல்களுள்
விழிக்கக் காத்திருக்கும் அமுக்கவெடிகளை…
துண்டிக்கப்பட்ட தன் கையை நாயிழுக்குமோ என்று
தானெடுத்துப் போய்ப் புதைத்த மனிதனை
தங்கள் வளவுகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும்
பிணங்களின் எண்ணிக்கை பற்றி எவரும் அறிந்திலர்.
மதுவருந்தக் கூடுமிடங்களில்
ஊர்நினைவு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்!
கொன்று தூக்கிலிடப்பட்ட குழந்தையை
கணவன் முன்னிலை பேய்களால்
தின்று தீர்க்கப்பட்ட பெண்ணை
தமிழகத்தின் கடலோரம்
மூட்டை முடிச்சோடு வந்திறங்கி வந்திறங்கி
இனி வாழ்வதற்கு என்ன வழி
என்று விழி ஏங்கியிருப்போர்க்கு
வார்த்தைப் பிச்சையிட்டுப் பேசுகின்றார் உரத்து.
செப்பனிடப்பட்ட வீதிகளால்
உயிர்பெற்றசையும் நகரத்தினூடே
ஊருக்குத் திரும்புதலைப்பற்றியும்
அவர்கள் பேசினர்.
பேச மட்டுமே செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எம் அவலங்களைப் பற்றிய கவிதைகளைப் பார்த்து வெறும் பாராட்டுக்கள் என்ற வார்த்தையினைக் கிறுக்கிச் செல்லுதலே கேவலப்படுத்துதல் ஆகி விடுமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்!!!
இன்னமும் பேசிக்கொண்டே தான் இருக்கின்றனர்
:(
Post a Comment