நேற்றிரவையும் குண்டு தின்றது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது.
பச்சைக் கவசவாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்.
சொல்லாமல் படகேறிப் போயினர் முன்வீட்டார்
அவர்களின் கறுப்பு நாய்க்குட்டி
சோற்றுக்கு அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டு
என்புதோல் போர்த்தி
இருக்கிறது பலநாளாய்.
நேற்று முன்தினம் பக்கத்துவீடும்
கையசைத்துப் போயிற்று.
மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுப்போன ஆச்சியின்
தளர்நடை இன்னும் ஒழுங்கையில்.
ஒவ்வொரு வீடாய் இருளப்
பார்த்திருக்க முடியவில்லை.
யாருமறியாமல் சுவர் சுவராய் தழுவி
கிணற்றடிக் கல்லில் கன்னம் உரசி
மல்லிகைக்கு வெறியோடு நீரிறைத்து….
பிரியமுடியாமல் எரிகிறது நெஞ்சு.
இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன்
கூடவே சிரிப்பையும்.
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
விட்டுப்போகும் மனிதரை…
வீட்டை… வேம்பை…
அது அள்ளியெறியும் காற்றை…
காலைச் சுற்றும் என் பூனைக்குட்டிகளை.
Web Counter
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்ல கவிதை தொடர்ந்தும் எழுதுங்கள்..
கவிதை படிக்கும்போதை ஒரு வித வித்தியாசத்தை உணரமுடிகிறது...
Keep it up
இரண்டு தசாப்தங்களாக எம்மண்ணின் நிகழ்வும் நினைவும் இப்படித்தானே இருக்கிறது.......நல்ல கவிதை.
நம்மூரின் நிகழ்வுகளை இம்மாதிரிப் படைப்புக்கள் மூலமும் வெளியுலகிற்கு காட்டவேண்டும், தொடரட்டும்.
நல்ல கவிதை தொடர்ந்தும் எழுதுங்கள்..
/வீட்டை… வேம்பை…
அது அள்ளியெறியும் காற்றை…
காலைச் சுற்றும் என் பூனைக்குட்டிகளை/
துயரின் நிழல் கூட படிந்திராத என் பாதுகாப்பான உலகம் திடுக்கிடும்படியாய் இருக்கிறது..படைப்பின் வெற்றி என்று சொல்லக்கூட தயக்கமாக இருக்கிறது.நல்ல கவிதை என சொல்லிவிட்டால் அது எழுத துவங்குமோ மீண்டும் ஒரு கவிதையை?
என்னவாயிற்று அய்யனாரே!அஞ்சலைத் திறந்ததும் எனது கவிதைகளின் மீதெல்லாம் பூ விழுந்திருக்கிறது. போட்டது நீங்கள். இன்று ஞாயிறு என்பதால் நிறைய நேரம் கிடைத்திருக்கும் என்று சொல்லி துள்ளிய மனதிற்குக் கடிவாளமிட்டேன். வாசித்தமைக்கும் அதைப் பொத்திவைத்திராமல் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிகள்.
உங்கள் இந்தக் கவிதையும் "அற்றைத் திங்க" ளும் உங்களைப் பற்றிய சிறு குறிப்போடு விகடனில் வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்நதி !!
நன்றி ஜெயசிறீ! பார்த்தேன். புத்தகம் கிடைத்தது.
//எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
விட்டுப்போகும் மனிதரை…
வீட்டை… வேம்பை…
அது அள்ளியெறியும் காற்றை…
காலைச் சுற்றும் என் பூனைக்குட்டிகளை.//
எளிமை..இனிமை..அருமை..
வாழ்த்துக்கள்!!
துயரின் அனலை துல்லியமாய் உணர வைக்க முடியும் என்று நிரூபிக்கும் எழுத்து.
இக்கவிதை ஏற்றி வைக்கக்கூடும் இன்னும் சில விளக்குகளை..
விகடனின் புதிய படைப்பாளியாகியிருப்பதற்கு வாழ்த்துகள்.
நன்றி.
Post a Comment