10.27.2006

போகமுடியாத பாதை

தனிமையின் காடு அடர்ந்தது
மழைமூடும் மாலைகளோவெனில்
பொட்டு வெளிச்சமுமற்ற
இருள் திண்மம்.

விழுதெனப் பற்றியதெல்லாம்
பாம்பெனச் சீறும் அடர்வனத்தில்
முள்கிழிக்க அலைகின்றேன்.
சூரியன் உட்புகா
விசும்பல்கள் வெளியேறா
இலைச்செறிவு விலக்கி
வானம் பார்த்தல்
சாத்தியமற்றிருந்தது நேற்றுவரை.

தனிமையின் பயம் தணிக்க
தனக்குத் தான் பேசியபடி
நடந்துகொண்டிருக்கிறது நதி.
அதனருகில்
ஊர்சேர்க்கும் ஒற்றையடிப்பாதையொன்று
மெலிந்து செல்லப் பார்த்தேன்

போயிருக்கலாம் அதனூடு.
விலங்குகள் காட்டினில் மட்டுமிருந்தால்.

18 comments:

மிதக்கும் வெளி said...

இதற்குப் பெயர்தான் கவிதை என்பது. (ஆனால் ஒரு கமெண்டும் வரவில்லை)

கொண்டோடி said...

சரி,
நானொரு "கமெண்டை"ப் போட்டுவிடுவோம்.

Anonymous said...

எப்படி...எப்படி இதெல்லாம்...

அசத்தறீங்க....

பொறாமைதான் வருது....ஹி..ஹி..

Anonymous said...

நல்ல கவிதை

Anonymous said...

இந்த வருடத்திற்கான சிறந்த கவிதை எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

arumai

tamilnathy said...

என்னங்க இது...! திடீரென வந்து 'இது நல்ல கவிதை'என்று ஆளாளுக்கு சொல்லிவிட்டுப் போகிறீர்கள். 'இது நல்ல கவிதையாய்த்தான் இருக்குமோ..?'என்று எனக்கே சந்தேகம் வரத்தொடங்கிவிட்டது. இதுல வரவணையான் வேறை... பாத்து... யாராவது கவிஞர்கள் சண்டைக்கு வரப்போகிறார்கள்.

Anonymous said...

தமிழ்நதி,

ஒவ்வொரு வரியும் ஒரு கதை சொல்கின்றன. நான்கு பத்திகளில் ஏதேதோ சொல்லி விட்டீர்கள். மறந்து விட முடியாத கவிதை. சிறுகச் சொல்லி நிறைய விளக்கும் கவிதைக்கு என் வணக்கங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

//tamilnathy said...
என்னங்க இது...! திடீரென வந்து 'இது நல்ல கவிதை'என்று ஆளாளுக்கு சொல்லிவிட்டுப் போகிறீர்கள். 'இது நல்ல கவிதையாய்த்தான் இருக்குமோ..?'என்று எனக்கே சந்தேகம் வரத்தொடங்கிவிட்டது. இதுல வரவணையான் வேறை... பாத்து... யாராவது கவிஞர்கள் சண்டைக்கு வரப்போகிறார்கள்.//


sila peruku naakula sani panga athu pola ayitathu en kathai , oru nala kavithaiyai nalla kavithanu sonnathuku vantha vinaiyai paarunga

:)))))))))))))))

tamilnathy payapadathinga innoru thatava sollamatain :))))))))

( sorry for taminglish )

tamilnathy said...

ஒரு ஊரிலே ஒரு ஆடு இருந்துச்சாம். அதும் பாட்டுக்கு புல்லு மேய்ஞ்சுக்கிட்டு இருக்கறப்போ நாலைஞ்சுபேர் வந்து அதை இழுத்துக்கிட்டுப் போய் குளிப்பாட்டிவிட்டு சந்தனம் குங்குமமெல்லாம் வைச்சுவிட்டு கோயிலுக்கு இழுத்துக்கிட்டுப் போனாங்களாம். அப்புறம் எலை கொழையெல்லாம் வைச்சு பெரிய பொங்கல் போட்டாங்களாம். ஆட்டுக்கு ஒரே தெகைப்பு...! அப்றம் பாத்தா... ஐயோ!
அது இப்போ நாந்தாம் போல இருக்கு.

Anonymous said...

நுட்பமான உணர்வுகள் கொண்டு செதுக்கப்பட்டிருக்கும் ஆக்கம். எழுத்தின் 'உட்கிடை'யாகத் தெரிவது அடிநாதமன 'பகிர்வுக்கு ஏங்கும்' உள்ளம். வாழ்த்துக்கள்.

Anonymous said...

இந்தக்கவிதை யாராலும் சீண்டப்படாமல் தன்பாட்டுக்குக் கிடந்தது.
சுகுணா திவாகர் தொடக்கிவைத்தார்.
அவர் பிரபலமான கவிஞரல்லவா?
அப்ப உது நல்ல கவிதையாத்தான் இருக்குமெண்டு மற்றாக்களும் வந்து ஒரு போடு போட்டிட்டுப் போயிருக்கினம். அதுவும் கவிஞரே, 'என்ன ஒரு பின்னூட்டத்தையும் காணேல' எண்டு வருத்தப்பட்டுச் சொன்ன உடன கேட்டுட்டுச் சும்மா போக (வாசிச்சிட்டு எண்டு வாசிக்கவும்) மனசு வருமோ?

எனக்கு என்ன விளங்கேல எண்டா, உப்பிடி ஒரு பின்னூட்டம் தொடக்கி வைக்க திவாகருக்கு எவ்வளவு காசு குடுத்தனீர் எண்டதுதான். ;-)

ஆனா இது நல்ல தந்திரம்.
நானும் ஓராளைப் பிடிக்க வேணும்.
நீங்கள் வந்து உப்பிடியொரு பின்னூட்டம் போட்டுத் தொடங்கிவைப்பியளெண்டா நானும் கவிதை கிவிதை எழுதலாமெண்டு நினைக்கிறன்.

நான் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமெண்டபடியா (தெரியாட்டியும் தெரியுமெண்டு சொல்லும். இல்லாட்டி, "இதைக்கண்டு பிடிக்கத் தெரியாமல் பிறகென்ன பெரிய கவிதை வேண்டிக்கிடக்கு" எண்டு கேள்வி வரலாம்) பேரில்லாமலே எழுதிறன்.

Anonymous said...

இந்த வருடத்தின் சிறந்த கவிதையை எழுதினதா வரவனையான் சொன்னபோது புஸ்பராசாவின் 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலுக்கு அ.முத்துலிங்கம் எழுதின பாராட்டு வரிதான் ஞாபகம் வந்துது.

tamilnathy said...

அன்பு நண்பர்கள் மிதக்கும் வெளி, கொண்டோடி,பங்காளி,வரவணையான்,மா.சிவகுமார்,நியோ அனைவருக்கும் நன்றி.

"எனக்கு என்ன விளங்கேல எண்டா, உப்பிடி ஒரு பின்னூட்டம் தொடக்கி வைக்க திவாகருக்கு எவ்வளவு காசு குடுத்தனீர் எண்டதுதான். ;-)"

என்று ஸ்மைலி போட்டுச் சொல்லிப்போன அனானி நண்பரே!நீங்கள் யாரென்பதை என்னால் ஊகித்தறிய முடிகிறது. ஆனால்,நான் யாரென்பதை நீங்கள் அறியவில்லை என்பதையிட்டு நான் வருந்துகிறேன். காசு கொடுத்து பின்னூட்டம் விடச் சொல்கிற அளவிற்கு எனது வாழ்வோ எழுத்து சார்ந்த அறமோ தரம்தாழ்ந்து போயிருக்கவில்லை என்பதைத் தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். எனக்குத் தந்திரங்கள் தெரிந்திருந்தால் நான் இங்கிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

வரவணையான் ஏதோ ஒரு நெகிழ்ச்சியில் அந்தக் கவிதையைப் பற்றி அப்படிச் சொல்லியிருக்கலாம். அதை அவர் அதை எழுதும்போதிருந்த மனோநிலையை அறிந்தாலே தெரிந்துகொள்ள முடியும். அதை மறுப்பதனால் அவரது மனதை நான் புண்படுத்திவிடக்கூடும் என்பதனாலேயே அந்த 'ஆட்டுக்கதை'யை எழுதினேன்.

மேலும் இந்தப் பின்னூட்டத்தை நான் போடாமலே விட்டிருக்கலாம். ஆனால், அதைப் போடாமல் விட மேலும் மேலும் யார் யாரோ வந்து அதைக் கொண்டாட உங்களுக்கு மேலும் கடுப்பாகிவிடும் என்ற ஒரே காரணத்தினால் அதைப் போட்டிருக்கிறேன். நண்பரே! எழுத்து என்பது மனங்களை வளப்படுத்த வேண்டும், ரணப்படுத்தக் கூடாது அது பின்னூட்டமே ஆயினும்.
நன்றி.

மிதக்கும் வெளி said...

/இந்த வருடத்திற்கான சிறந்த கவிதை எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்./


பிரியத்திற்குரிய செந்தில், இதைத் தமிழ்நதியின் கவிதைகளுக்குச் சொல்கிறீர்களா, அல்லது ஒட்டுமொத்த தமிழ்க்கவியுலகிற்குச் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. தமிழ்நதியின் பதிவுகளுக்குச் சொல்கிறீர்கள் என்றால் ஆம். தமிழ்நதி இதுவரை எழுதிய கவிதைகளில் இதுதான் சிறந்த கவிதை என்றே கருதுகிறேன்.

மிதக்கும் வெளி said...

/இந்தக்கவிதை யாராலும் சீண்டப்படாமல் தன்பாட்டுக்குக் கிடந்தது.
சுகுணா திவாகர் தொடக்கிவைத்தார்.
அவர் பிரபலமான கவிஞரல்லவா?
அப்ப உது நல்ல கவிதையாத்தான் இருக்குமெண்டு மற்றாக்களும் வந்து ஒரு போடு போட்டிட்டுப் போயிருக்கினம். அதுவும் கவிஞரே, 'என்ன ஒரு பின்னூட்டத்தையும் காணேல' எண்டு வருத்தப்பட்டுச் சொன்ன உடன கேட்டுட்டுச் சும்மா போக (வாசிச்சிட்டு எண்டு வாசிக்கவும்) மனசு வருமோ?/


என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலிய்யே?

/எனக்கு என்ன விளங்கேல எண்டா, உப்பிடி ஒரு பின்னூட்டம் தொடக்கி வைக்க திவாகருக்கு எவ்வளவு காசு குடுத்தனீர் எண்டதுதான். ;-)

ஆனா இது நல்ல தந்திரம்.
நானும் ஓராளைப் பிடிக்க வேணும்.
நீங்கள் வந்து உப்பிடியொரு பின்னூட்டம் போட்டுத் தொடங்கிவைப்பியளெண்டா நானும் கவிதை கிவிதை எழுதலாமெண்டு நினைக்கிறன்.

நான் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமெண்டபடியா (தெரியாட்டியும் தெரியுமெண்டு சொல்லும். இல்லாட்டி, "இதைக்கண்டு பிடிக்கத் தெரியாமல் பிறகென்ன பெரிய கவிதை வேண்டிக்கிடக்கு" எண்டு கேள்வி வரலாம்) பேரில்லாமலே எழுதிறன்./

நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. யாராவது ஈழத்து ஆக்களாகத்தானிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. எனக்குக் காசெல்லாம் கொடுக்க வேண்டாம், குவார்ட்டரும் பிரியாணியும் கொடுத்தால் போதுமென்று என் அருமை நண்பரும் ரசிகருமான பாலா வந்து பின்னுட்டமிடுவார்.

tamilnathy said...

அன்புள்ள நண்பர்களுக்கு,

'காசு கொடுத்தா பின்னூட்டம் போட்டீர்கள்...?'என்று எனது பிரியத்திற்குரிய நண்பர்களில் ஒருவர்தான் கலாய்த்ததாக அறிந்தேன். அதைப் பற்றி மேலும் மேலும் பின்னூட்டம் இடுவது அவரது மனதைப் புண்படுத்துவதாக அமையும்.

இந்தக் கவிதையை(?) இத்துடன் விட்டுவிடுவோம். உற்சாகம் தந்த மிதக்கும் வெளி, ஊக்கப்படுத்திய வரவணையான் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

நிறைய பின்னூட்டங்களை வேண்டி நிற்கும் மலின உத்திகளை, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளை, வம்பு பேசுகிறேன் வந்து பாருங்கள் என்ற லேகியக்காரக் குரல்களைக் கண்டு வெறுத்துப்போயிருப்பவர்களில் நானும் ஒருத்தி என்ற வகையில் 'இதை இத்துடன் நிறுத்திவிடுவோம்'என்று சொல்வதே இவ்விடத்தில் உத்தமம்..

நாம் எல்லோரும் எழுத்து என்ற அற்புதமான பட்டறையில் பயின்றுகொண்டிருப்பவர்கள். எமக்குள் எதற்கு வீண் சர்ச்சை?

'பெரிய பாதிரியார் கணக்கில பேசிட்டுப் போறா பார்றா' என்று எனக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்கிறது.

Anonymous said...

//பிரியத்திற்குரிய செந்தில், இதைத் தமிழ்நதியின் கவிதைகளுக்குச் சொல்கிறீர்களா, அல்லது ஒட்டுமொத்த தமிழ்க்கவியுலகிற்குச் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. தமிழ்நதியின் பதிவுகளுக்குச் சொல்கிறீர்கள் என்றால் ஆம். தமிழ்நதி இதுவரை எழுதிய கவிதைகளில் இதுதான் சிறந்த கவிதை என்றே கருதுகிறேன்.//

தோழமைக்கினிய சுகுணா, தமிழ்நதி கவிதைகளில் தான் சொன்னேன். அது எனக்களித்த வாசிப்பனுபவமே அப்படி சொல்லவைத்தது. நிச்சியமாக இது நல்லதொரு கவிதை.


பின்குறிப்பு : யெக்கா , ஃபீளிஸ் ஃபீளிஸ் இந்த ஒரே ஒரு பின்னுட்டம் மட்டும் அனுமதியுங்கள்

அய்யனார் said...

அடர்வு மிகுந்த வார்த்தைகள் மீது உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது..

நிறைவானது