12.08.2006

பெண்: நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை



ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலில் காதலின் முகம் பார்த்துப் பரவசமடைகிறோம். இறந்தகாலத்துள் இழுத்துச் செல்லும் எகிப்திய பிரமிட் கண்டு வியக்கிறோம். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அழகிலிருந்து விழிகளை மீட்க முடியாமல் பிரமிக்கிறோம். இலங்கையின் சிகிரியா ஓவியத்தில் கலையின் வண்ணம் காண்கிறோம். ஆனால், உலகமெங்கும் தீரா வியப்பு ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் சென்று பார்க்கவேண்டியதில்லை. நமது வாழ்விலிருந்து பிரித்துவிடமுடியாத, எங்களோடு கூடவே இருக்கிற அதிசயம் அது. அதாவது, ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாரபட்சங்கள். நினைத்துப் பார்க்கும்போது ‘இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்…?’என்னும் கேள்வி ஊடுருவுகிறது. மனித குலத்திற்குள் ஒரு பாலாரின் மீது மற்றையவர் ஆதிக்கம் செலுத்துவதென்பது இயல்பேபோல நம்மில் பலர் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த மனோபாவத்தின் மீது கேள்விகள் எழுப்ப அஞ்சுகிறோம். அவ்வாறு கேள்வி எழுப்புவதையே மரபுமீறலாகக் கொள்கிறோம்.

‘மிருகங்களைப்போல’ என்று பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அதிலுள்ள அபத்தத்தைப் பாருங்கள். ஏனைய மிருகங்களைக் காட்டிலும் பலமுள்ள சிங்கம் எப்படிக் காட்டின் ராஜா ஆனதுவோ அவ்வாறே மனிதனும் தன்னைவிட பலமற்ற உயிர் என்று கருதப்படும் (பெண் ஆணைவிட உடல்வலிமையில் குறைந்தவள் என்பது அறிவியல்ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.) பெண்ணைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் நிறைவு காண்கிறான்.

‘வீடு’என்பது வாழும் இடமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ஆண் ஆசுவாசம் செய்துகொள்வதற்கான அமைதிக்கூடமாக, கட்டற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய இடமாக, அவன் என்றென்றைக்கும் தலைவனாக இருக்கக்கூடிய ஒரு சாம்ராஜ்ஜியமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் புகை பிடிப்பது, மது அருந்துவது இன்னோரன்ன பழக்கவழக்கங்கள் கூட ஆண்களுடைய ஏகபோக (பெரிய சொத்துடமை பாருங்கள்) உரிமையெனவே கொள்ளப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், மது அருந்தியபின் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைக்கும் கூட ஆண் பொறுப்பாக மாட்டான் என்பதுதான். தீமை பயக்கும் பழக்கவழக்கங்களுக்கே ஏகபோக உரிமை கொண்டாடும் ஆண், சமூகத்தை வழிநடத்தும் அறிவியல், கலை, இலக்கியம், அரசியல் இவற்றில் எவ்விதம் நடந்துகொள்வான் என்பது கண்கூடு.

‘எவருக்கும் எவருடைய உடல் மீதும் உரிமையில்லை’ என்றும் ‘சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்குநுனி வரைதான்’ என்றும் பேசிக்கொள்கிறோம். ஆனால், வீட்டில் வன்முறை என்பது அகற்றப்படமுடியாத ஒரு பூதமாக இருந்துகொண்டுதானிருக்கிறது. கணவனிடம் அடி வாங்கும் பெண்ணின் உடற்காயங்கள் நாளடைவில் ஆறிவிடக்கூடும். ஆன்மாவின் மீது விழும் அடிக்கு மருந்திடுவது யார்…? இழிவுபடுத்தப்பட்டதை அவளால் எப்படி மறக்க இயலும்…? வீட்டின் மூலைகளில் கரப்பான்பூச்சிகளைப்போன்று விரட்டி விரட்டி தாக்கப்படும்போது பெண் என்பவள் சக உயிர் என்ற நினைவு முற்றிலும் அழிக்கப்படுகிறது.

“அவர் எனக்கு எல்லாவிதமான சுதந்திரங்களையும் தந்திருக்கிறார்.” என்று சில பெண்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ‘எல்லாவிதமான’என்பதற்கும் ‘எல்லைகள்’ உண்டு. அதற்கு வேறு விதமாக அர்த்தம் கொள்ளலாம். அதாவது ஆணுடைய குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் பெண்ணுடைய சுதந்திர வெளி இருக்கிறது. அந்த வட்டத்திற்குள் பிரவேசிக்க பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மீறிப் பிரவேசித்தால் “உங்களையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேணும் என்று சும்மாவா சொன்னார்கள்…?” என்று வெகுண்டெழுதல் நிகழும். ‘வைக்கவேண்டிய இடம்’என்பதற்கான பொருளை விளக்கப்போனால் ‘பெண்ணடிமை’எனப் பதில் வருதல் சாத்தியம்.

சமையலில் தொடங்கி பிள்ளைகளின் திருமணம் வரை ஆணின் அதிகார நிழல் நீண்டு படர்ந்துள்ளது. முக்கியமான முடிவுகள் அவனாலேயே எடுக்கப்படுகின்றன என்பதை ‘தண்டோராக்காரன்’என்ற கவிதை சொல்லிப்போகிறது.

‘பெண்ணாதிக்கம் பெருகிவிட்டது’
…………………………………
…………………………………
போகிறான்
வேண்டுகோள்களைக் கையேந்தி
தீர்மானங்களுக்காகக் காத்திருக்கும்
பெண் வாழும் தெருவால்…
அறிவார்ந்த சபைகளில்
பரிமாறும் பணி மட்டும் விதிக்கப்பட்ட
அவளைக் கடந்து
அதிர்ந்தொலித்துப் போகிறது பறை.

பூமியென பெண் உவமிக்கப்படுகிறாள். ஆண் பெரும்பாலும் புயலோடு ஒப்பிடப்படுகிறான். பெரும் காற்றாய் வந்து மரங்களைச் சாய்த்து, கூரைகளைப் பிய்த்தெறிந்து, எதிர்ப்படுவனவெல்லாவற்றையும் துவம்சம் செய்து சுழன்றடித்துப் போய்விடுகிறது புயல். பூமி இருக்கிறது துக்கித்து. அதனால் பெயர்ந்து செல்லவியலாது. பெண்ணும் இருக்கிறாள் செயலற்று. குழந்தைகளின் அடைக்கலமாக, வீட்டை அடைகாப்பவளாக, சமூகத்தால் சூட்டப்படும் ‘ஓடுகாலி’ என்ற பட்டத்தைச் சுமக்கத் திராணியற்றவளாக வீட்டோடு அவளைக் கட்டிவைத்திருக்கிறது ஒரு மாயக்கயிறு.

பாட்டும், சத்தமும் என தன்னியல்பாக இருக்கும் வீடு ஒரு ஆணின் வருகையால் எப்படி ஒடுங்குகிறது என நாம் பார்க்கிறோம். ஓசைகள் ஒரு செருப்பொலியில் உறிஞ்சப்பட மௌனப்பந்தாய் கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள்கிறது மகிழ்ச்சி. (இதற்கு விதிவிலக்கான வீடுகள் உண்டு. ஆனால், எத்தனை வீதம்…?)

“அப்பா வாறார்… ஓடிப்போய் படியுங்கோ…!”

“செருப்பெல்லாம் இப்பிடிச் சிதறிக்கிடந்தால் அவருக்குப் பிடிக்காது”

“அவருக்கு மச்சமில்லாட்டில் சரிவராது…”

அவரால், அவருக்காகவே இயங்கும் வீட்டில் பெண்ணின் இடம் எது…?

வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய வீட்டு வேலை அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா…? என்ற கேள்விக்கு பெரும்பாலும் ‘இல்லை’என்றே பதிலளிப்பர். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, பிள்ளைகளைப் பராமரிப்பது, இன்முகத்துடன் இருப்பது… இவையே நல்ல பெண்ணுக்குரிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அதிலிருந்து பிறழ்பவள் ‘நீலி’என்றும் ‘அடங்காப்பிடாரி’என்றும் அடைமொழிகளால் சுட்டப்படுகிறாள்.

‘பெண் இரண்டாம் பிரஜைதான்’ என்று, எம்மால் கொண்டாடப்படும் இதிகாசங்களும் புராணங்களும் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கின்றன.

சீதைக்குக் கோடு…
நளாயினிக்குக் கூடை…
கண்ணகிக்கு பத்தினிப் பட்டம்…
அருந்ததிக்கு வானம்…
புராணம் படி! புரிந்துகொள்…!
நீ அகாலத்தில் இறந்தால்
புன்னகை உறைந்த
உன் புகைப்படத்திற்கு
மாலை போட
மூன்றே மாதங்களில் மற்றொருத்தி…!

மாதவியின் மீது கொண்ட மயக்கம் தீர்ந்து திரும்பிவந்த கோவலனை குற்றம்சொல்லாமல் ஏற்றுக்கொண்ட கண்ணகி கற்புத்தெய்வம். வயதான கணவனை கூடையில் வைத்து பரத்தை வீட்டிற்குத் தூக்கிச்சென்ற நளாயினி போற்றுதற்குரியவள். கல்லிலும் முள்ளிலும் கணவனை நிழலெனத் தொடர்ந்த சீதையின் மீது சந்தேகித்த இராமன் கடவுள். தோற்ற மயக்கத்தால் இந்திரனோடு கூடிய அகலிகை கல்லாய் சபிக்கத்தக்கவள். கோபியரோடு கூடிக்களித்த கிருஷ்ணன் வணங்கத்தக்கவன். நினைத்துப் பாருங்கள்… கிருஷ்ணனைப் போன்று ஒரு பெண் (அவள் தெய்வமேயானாலும்) யாதவர்களோடு கூடிக்களித்திருந்தால் அவளை வணங்கியிருப்போமா என்று. இந்த புராணங்கள், இதிகாசங்கள் வாழ்வியல் நீதியைப் போதித்திருக்கின்றன என்பது ஒரு பக்கம்தான். மறுபக்கம் பெண்ணைக் கீழ்மைப்படுத்தவும் செய்திருக்கின்றன.

புராணங்கள்தான் இப்படியென்றால் நம் பொழுதுபோக்குச் சாதனங்களுள் முதலிடம் வகிக்கும் சினிமாவைப் பாருங்கள். ஆணை முதன்மைப்படுத்தும் கதைகள்…! நேர்மையானவனாக, பத்துப் பேரை பந்தாடும் பலம்பொருந்தியவனாக, இலட்சியவாதியாக, இரக்கமுள்ளவனாக… சற்றேறக்குறைய கடவுளாக கதாநாயகன் சித்திரிக்கப்படுகிறான். பெண் அவனைச் சார்ந்தவளாக, அரைகுறை ஆடைகளோடு வெண்ணிற மேகங்களுக்கிடையில் மிதந்து மிதந்து நடனமாடுபவளாகவே பெரும்பாலான திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறாள். அதாவது கதாநாயகன் விருந்தின்போது தொட்டுக்கொள்ளும் ‘ஊறுகாய்’ மட்டுந்தான் அவள்.

பெண்கள் மீதான அநீதி என்பது காலகாலங்களுக்கும் தொடரும் ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. போரில் வெற்றிவாகை சூடிய தரப்பின் முதற் பார்வை விழுந்த இடமாக அந்தப்புரங்கள் இருந்திருக்கின்றன. கைப்பற்றப்பட்ட நிலத்திற்குரிய பெண்ணை இழிவுசெய்வது அந்த நிலத்தைச் சார்ந்த ஆண்களை இழிவுசெய்வதற்கொப்பானதாகக் கருதப்பட்டது. நிலத்தைப்போல, ஆநிரைகளைப் போல பெண்ணும் ஆணின் உடமை. அவளைக் கவர்ந்து அவள் உடலையும் ஆன்மாவையும் சிதைப்பது ஆண்மையாம். அதை நாம் இன்று எமது நாட்டிலேயே கண்கூடாகக் காண்கிறோம்.

மேலும், ஓசைநயம் என்பது காதுக்கு இனிமையான விடயமே. ஆனால், அந்த ஓசை நயத்தை பழமொழிகளை இயற்றியவர்கள் எப்படி நாசம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால் தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும்.
‘க’ல்லானாலும் ‘க’ணவன்-‘பு’ல்லானாலும் ‘பு’ருசன்
‘க’ணவனே ‘க’ண்கண்ட தெய்வம்
பொம்பிளை சிரிச்சாப் போச்சு… புகையிலை விரிச்சாப் போச்சு!

சிரிப்பிற்கும் சிறை! 21ஆம் நூற்றாண்டிற்கூட இத்தகைய பழமொழிகள் பிரயோகத்தில் இருக்கின்றன என்பது இன்னும் வேதனையான விடயம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று பலரும் பேசக் கேட்டிருக்கிறோம். அந்தக் காலக்கண்ணாடியைப் படைக்கும் சிருஷ்டிகர்த்தாக்கள் எழுத்தாளர்கள். சமூகத்தில் ஏனைய எல்லோரையும் விட ஆழ்ந்து சிந்திப்பவர்களாக, உணர்வுகளை வாசிப்பவர்களாக, அறிவுஜீவிகளாகப் போற்றப்படுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்தத் துறையும் ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. அந்த உலகத்திற்குள் எப்போதாவது வந்துபோகும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். வீட்டில், வேலைத்தளங்களில், அரசியலில், அறிவியலில், கலையுலகத்தில் ஆதிக்கம் செலுத்திய பழக்கதோஷம் விடவில்லை. அண்மைக்காலங்களில் பெண் எழுத்தாளர்களின், கவிஞர்களின் மொழியை வரையறுப்பவர்களாகவும் இருக்க ஆசை கொண்டிருக்கிறார்கள். ‘இந்த வார்த்தையை நீ எப்படிப் பிரயோகிக்கலாம்’என ஆவேசம் கொள்ளுமளவிற்கு விரிந்திருக்கிறது அவர்களது கட்டற்ற அதிகார வெளி.

பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை. அன்பை, பரஸ்பர மதிப்பை, உணர்வுகளை, வாசிப்பை, நேசிப்பை, துக்கத்தை பகிர்ந்து, புரிந்து வாழக்கூடிய ஆறாம் அறிவைக் கொண்டவர்கள் மனிதர்கள். வெளிமனிதரைப் புரிதல் இரண்டாம் கட்டம். முதலில் வீட்டிலிருந்து பெருகட்டும் அன்பு. வீட்டினுள்ளே நுழையும்போதே செருப்போடு சிரிப்பையும் கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரும் ‘ஆண்மனம்’ மாறவேண்டும். எனது சக உயிர் பெண் என்று ஆண்கள் நினைக்கும் நாளுக்காக எத்தனை நூற்றாண்டுதான் துயரத்தோடு காத்திருப்பது…?

27 comments:

சின்னக்குட்டி said...

//வீட்டினுள்ளே நுழையும்போதே செருப்போடு சிரிப்பையும் கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரும் ‘ஆண்மனம்’ மாறவேண்டும்//

தமிழ்நதி.... நல்ல பதிவு..தேவையான பதிவு கூட...... இந்த சமூக கட்டமைப்பு மாற்றமின்றி...தனி மனித ஆணின் மாற்றம் ...மூலம் சாத்தியம் தானா??

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ்நதி - என் பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றி.

சரியான நேரத்தில் வாஜ்பாயின் கவிதையை நினைவூட்டி உள்ளீர்கள். அதைத் தான் கவிதையில் தெரிவிக்க முயன்றேன். நிறைய பேர் கூட ஆளில்லாமல் இருப்பது தான் தனிமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். தனிமையினும் வறுமை கொடிது தான். ஆனால், நாங்க எல்லாம் காசு பணம் சேர்க்க இங்க வரலாமுங்க..படிக்க வந்திருக்கமுங்கோ :)

தமிழ்நதி said...

திரு.சின்னக்குட்டி,

இந்தப் பதில் நிச்சயமாக நீங்கள் அறிந்திருக்கக் கூடியதே. ஒவ்வொரு தனிமனிதனது மனோபாவத்திலும் மாற்றம் ஏற்படும்போது அது நாளடைவில் சமூகமாற்றமாக உருவெடுக்கும். முதலில் குடும்பத்திற்குள் அன்பு தோன்றட்டும் என்பது போலத்தான் இதுவும். வீட்டிலுள்ளோரை நேசிக்க அவ்வன்பு வெளியிலும் பரவும். தொடர்ந்து பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டும் உங்களுக்கு நன்றிகள்.

Anonymous said...

என் எண்ண ஓட்டத்தையெல்லாம் நீங்களே எழுதிவிட்டீர்களே. அபாரம். தங்குதடையில்லாத உங்கள் தெள்ளத்தெளிவான எழுத்து நடையும் தான்.

Anonymous said...

நீண்ட பதிவாக இருந்தாலும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

தமிழ்நதி said...

வாசித்ததற்கும் நேரம் எடுத்துக்கொண்டு விமர்சித்ததற்கும்(பாராட்டியதற்கும்) நன்றி ஒரு பெண் (பெயர் புதுவிதமாயிருக்கிறது) அந்த ‘ஒரு பெண்’எழுதுவதில்லையா…? பெயர் மூலம் சரியான பக்கத்திற்குப் போகமுடியவில்லை.

Anonymous said...

//அந்த ‘ஒரு பெண்’எழுதுவதில்லையா…?//

எழுதுகிறேன்.

//பெயர் மூலம் சரியான பக்கத்திற்குப் போகமுடியவில்லை.//

அனானிமஸ் ஆகையால்.

தமிழ்நதி said...

சரி ‘ஒரு பெண்’, உங்களுக்கும் ஒளித்துப் பிடிக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் ஆசை திரும்பிவிட்டது. நல்லது ‘பெயரில் என்ன இருக்கிறது?’

sooryakumar said...

பொரிந்து தள்ளியுள்ளீர்கள். இப்படித்தான் எழுத வேண்டும். இன்றைய காலத்திற்கு மிக மிக தேவையான பதிவு...இதை உரிய இடங்களுக்குப் பரப்புதலும் வேண்டும்.என் நண்பர்களுக்கு இணைப்பைக் கொடுக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். நிற்க,,அம்பை யின் >வீட்டின் மூலையில் சமையலறை< படித்தீர்களா..??கட்டாயம் படியுங்கள். நன்றி

தமிழ்நதி said...

உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே,
அம்பையின் அந்தத் தொகுப்பு முன்பு படித்திருக்கிறேன். ‘சிறகுகள் முறியும்’அண்மையில் வாங்கினேன். அவவின் யதார்த்தமான நடை மிகப் பிடிக்கும். என்ன… நிறைய எழுதுவதில்லை. இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு ஒரு நண்பர் கேட்டார் “இவ்வளவிற்கு பெண்ணடிமைத்தனம் இருக்கிறதா என்ன...”என்று. அவர் வாழும் உலகத்தில் உங்களைப்போன்றவர்களும் வாழ்வதைத்தான் முரண்நகை என்பதா…?

பத்மா அர்விந்த் said...

தமிழ்நிதி
புலம்புல் பட்டியலில் நீங்களும் சேரப்போகிறீர்கள்:) அடிமைத்தனம் எங்கே இருக்கிறது. இதுவும் கடவுளை போல உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை.

sooryakumar said...

ஓ..சிறகுகள் முறியும் அதில் தானே கடைசிக் கதையாக >பசி< நாடகம் இருக்கிறது..??
அற்புதம்..வாசித்துவிட்டு சொல்லுங்கள்.,!
பெண்ணிய இலக்கியத்தில் புதிய மைல் கல் அது..!!
நிற்க,,
இதிலென்ன முரண்ணகை...?உண்மையும் அதை உவப்பதும் தானே வாழ்வென்றாயிற்று..!!

தமிழ்நதி said...

அன்புள்ள பத்மா அர்விந்த்,
‘புலம்பல் பட்டியலில் நீங்களும் சேரப்போகிறீர்கள். அடிமைத்தனம் எங்கே இருக்கிறது… இதுவும் கடவுளைப்போல உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை.’
இதை என்ன பொருளில் எழுதியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தபின்னர்தான் முழுமையாக என்னால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் ஒன்று… கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வாதம் நடைமுறையில் வாழ்வின் ஒவ்வொரு விடயங்களையும் பாதிக்கும் என்றில்லை. மதம் என்பதும் கடவுள் என்பதும் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. சிலருக்கு ஒரு பகுதியாகக் கூட இல்லை. ஆனால், பெண்ணடிமைத்தனம் இருப்பது மற்றும் இல்லாதிருப்பது என்பது திருமணம் என்ற கட்டமைப்பை நம்புகிற சமுதாயம் உள்ளவரை (அதற்கப்பாலும்கூட) நிச்சயமாக பாதிக்கும்.

பத்மா அர்விந்த் said...

தமிழ்நிதி நான் வலைப்பதிவுலகில் நடப்பது பார்த்து எழுதினேன். இங்கே பலரும் பெண்கள் நிறைய சுதந்திரம் அடைந்து விட்டதாகவும் புலம்புவதாகவும் எழுதி இருப்பதால். தூங்குவதாக பாவனை செய்பவர்களை எழுப்ப முடியாதல்லவா அதேபோல வாதித்தும் பலன் இல்லை.

Anonymous said...

//பத்மா அர்விந்த் said...
தமிழ்நிதி
புலம்புல் பட்டியலில் நீங்களும் சேரப்போகிறீர்கள்:) அடிமைத்தனம் எங்கே இருக்கிறது. இதுவும் கடவுளை போல உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை. //

கொஞ்சம் உரிமைகளை பெற்ற பெண்களுக்கும் ...சமமாக நடத்தி, ஏன் சில சமயம் அதிகமாகவே கூட உரிமை எங்கள் வீட்டு பெண்களுக்கு தருகிறோமே எனும் ஆண்களுக்கும் இது புலம்பல் போல்
பட்டாலும்.உண்மையில் இன்னும் பாரபட்சம் இருப்பது என்னவோ உண்மை.ஒரு சில சதவீதம் பெண்கள் தான் உரிமைளை அனுபவிக்கிறார்கள்.
கடவுளை உணர்ந்து கொண்டோர் வெகுசிலரே.மற்றவர் கோயிலுக்கு வெளியேயே தடுக்கப்படுகிறார்கள்.
உரிமைகளை பேசினால் குடும்ப சூழல் கெடுமே என்று அமைதி காக்கும் பெண்களும் உண்டு.

வெளிகண்ட நாதர் said...

இது போன்ற் கட்டுபாடுகளை களைந்து தன் இன்பமே சுகமென கருதி வாழா நானும் பெண்களை அழைத்துள்ளேன் இந்த பதிவில்!

தமிழ்நதி said...

பத்மா அர்விந்த்,

நீங்கள் சொல்வதுபோல தூங்குபவர்களை எழுப்ப முடியாதுதான். ஆணாதிக்கம் இல்லையென்று மறுப்பதுகூட ஒருவகையில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். ‘தரவேண்டியதெல்லாம் தந்திருக்கிறமுல்ல… அப்புறம் இன்னும் என்னா புலம்பல்… சும்மா போவியா…’என்பதுதான் அதன் சாரம். கொஞ்சம் நேரம் ஒதுக்கிக்கொண்டு உங்கள் வலைப்பக்கம் போய்ப் பார்க்கலாமென்றிருக்கிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி.

Anonymous said...

தமிழ்நதி!
அருமையாகச் சொல்லியுள்ளீர்! ஏதோ இப்படி; அப்போ அப்போ யாராவது சத்தம் போடுவதால் தான் என்னவோ! இப்போ; சில வீடுகளில் "அம்மா வந்து சத்தம் போடுவா" ;ஒழுங்கா வையுங்கோ!! என்ற சத்தமும் கேட்கிறது.
எல்லாம் சரி...உங்கள் அண்ணன் ;தம்பிமார் இதைப் (இருந்தால்) படித்தார்களா???அவர்கள் அபிப்பிராயம் என்ன???
பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்ற அபிப்பிராயமும் உண்டு. தங்கள் தாயார் தன் மருமக்களுக்கு இந்த விடுதலைகளைக் கொடுத்து விட்டாரா???அல்லது உங்கள் சகோதரர்களை(இவ்வுரிமை கொடுத்ததால்) பொண்ணையன் என்று திட்டிக் கொட்டுகிறாரா??,
அடுத்து; என் சிற்றறிவுக்குப் பட்டது. ஆண் எப்போ??தான் பெண்ணிலும் ++++என்று எண்ணும் நிலையைப் பெண்கள் தான் உருவாக்குகிறார்கள்;உதாரணம்: இரவு வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டால்; "ஒருக்கா!!என்னென்று பாருங்கோ"...எனக் கூறிப் பின்னால் நிற்கிறாள்.
இதையே!!!ஓர் ஆண்; கேட்டால்...என்ன???ஆம்பிள்ளையப்பா??நீங்கள்....இப்படிப் பயந்து சாகுறியள்!!
என மாறியடித்து....சிறுகச் சிறுக தங்களைப் பலம் குறைந்தவர்களாகக் காட்டுவது அவர்களே!!
என் சகோதரிகள் உட்பட....
அதனால்..;புரிந்துணர்வு இருந்தால் எதனையும் மாற்றலாம்; ஏற்கலாம்.
மூஞ்சியில் சூச்சா விட்டாலும்; குழந்தையை தூக்கிக் கொஞ்சுவது போல்.
இதேநேரம் பாரதியையும் கூப்பிட வேண்டும்.ஆண்கள் பெண்களை மதிக்க
"தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வமுண்டோ
தாய் பெண்ணே யல்லளோ? தமக்கை,தங்கை
வாய்க்கும் பெண்மகவெல்லாம் பெண்ணேயன்றோ???
மனைவியொருத்தியை யடிமைப்படுத்த வேண்டி
தாய்க் குலத்தை முழுதடிமைப்படுத்தலாமோ!!!
எனவே!!!மாறவேண்டியோர் மாறுவோம்.
யோகன் பாரிஸ்

செல்வநாயகி said...

தமிழ்நதி,

உங்களின் வலையுலக வரவுக்கும், தொடர் பதிவிடுதலுக்கும் மகிழ்ச்சி. "பெண் விடுதலை" பற்றிய பொருள்கொள்ளல் பலரிடமும் குழப்பமானதாக இருக்கிறது நம் சமூகத்தில் (வலையுலகிலும்). "குடிப்பது, புகைபிடிப்பது, குடும்பத்தில் சண்டை போடுவது" என்பதையே பெண்விடுதலை என்று பெண்கள் பேசுவதாக நினைத்துக்கொள்பவர்கள் இங்கு உண்டு:)) அந்த நினைப்பை அகற்றி எதைப் பெண்விடுதலையாகச் சொல்கிறோம் என்பதை விளக்கிக்கொண்டிருப்பதே இங்கு பெரிதும் செய்யவேண்டிய வேலையாயிருக்கிறது:))

யோகன் அவர்கள் சொல்வதுமாதிரி ஒரு பெரும்பகுதியினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்று. மாமியார் மருமகள் சண்டை வேறு இதற்கு ஒரு உதாரணம்:)) மாமியார் ஏன் மருமகளை வேறுமாதிரி நடத்துகிறார்? ஓரு ஆண்மகனைப் பெற்றவள் தான் என்கிற பெருமிதத்திலும், அவனைக் கட்டிக்கொண்ட பெண் அவனை அண்டிப் பிழைக்கவந்தவள் என்ற நினைப்பிலும், எனவே அந்த அவனைப் பெற்ற பெருமையுடைய தன்னை அவள் அன்புடன் பார்க்கவேண்டும் என்பதைவிட மரியாதையுடன் பார்க்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலும் இருக்கிற ஒரு பெண்ணினுடைய மனநிலையும், அந்த மனநிலைக்குத் தகுந்தாற்போல் நடக்கமுடியாத தன் எதிர்ப்பை, அந்த மாமியாருக்குத் தனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் காட்டுகிற இன்னொரு பெண்ணின் மனநிலையும் மோதிக்கொள்கிற இடம் அது. இதற்கு அடிப்படை என்னவென்று பார்த்தால் "ஆண் பெரியவன், எனவே ஆணைப் பெற்றவளும் உயர்ந்தவள்" என்கிற அப்பட்டமான சிந்தனையே. ஆண்டாண்டு காலமாக ஊட்டப்பட்ட சிந்தனை அது. அதுவே இயல்பென்று வாழப்பழகியவர்கள்தான் பெண்களும். அதிலிருந்து மீளும் தேவை ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் இருக்கிறது. இவைதவிரவும் இன்னும் பல மனவியல் காரணங்கள்கூட இந்த மாமியார், மருமகள் பிரச்சினையில் கருத்தில்கொள்ளப்படவேண்டியவை. மெனோபாஸ் நிலையிலிருக்கும் ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணாகவும் அந்த மாமியாரைப் பார்க்கவேண்டும். அந்த உடலியல் இயங்கு உளரீதியாகப் பெண்ணை எப்படிப் பாதிக்கின்றது என்பது குறித்தான விழிப்புணர்வையெல்லாம் நம் சமூகம் இன்னமும் காதுகொடுத்தே கேட்கத் துவங்கவில்லை. குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வருகிற பெண்ணின் மனவியல் பிரச்சினைகளும் அப்படியே. இதையெல்லாம் அறிந்துகொண்டும், புரிந்துகொண்டும் நடக்கமுடியாத சூழலில் அவர்களின் மன அழுத்தங்களுக்கு ஒரு வடிகாலாகக்கூட இந்த மாமியார், மருமகள் சண்டை ஆகிவிடுகிறதோ எனச் சமீபகாலமாக நான் ஆராய்ந்து வருகிறேன் ( சும்மா நினைத்துக்கொள்கிறேன், ஆராய்ச்சி என்பது ஒரு பெருமைக்கு, கண்டுக்காதீங்க:)) பேசலாம் தமிழ்நதி தொடர்ந்தும், நிறையவும். எழுதுங்கள்!

மற்றபடி யோகன்,

///இப்போ; சில வீடுகளில் "அம்மா வந்து சத்தம் போடுவா" ;ஒழுங்கா வையுங்கோ!! என்ற சத்தமும் கேட்கிறது.///


இதை மிகவும் ரசித்துப் படித்துச் சிரித்தேன். அம்மா ஊருக்குப் போனவுடன் அப்பா, பிள்ளைகள் எல்லாம் "ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று" பாடிக்களிக்கிற சூழலும் இருக்கவே செய்கிறது. ஆனால் அதற்கும் பெண்விடுதலைக்கும் சம்பந்தமில்லை:))

சாரா,
உங்களைக் "காணவில்லை" என அறிவிப்புச் செய்யலாமென இருந்தேன்:)) வந்துசேர்ந்ததற்கு மகிழ்ச்சியும், நன்றியும்.

தமிழ்நதி said...

அன்புள்ள நண்பர்கள் சூரியகுமார், சாரா, யோகன், செல்வநாயகி,

வாசித்து நேரம் எடுத்துக்கொண்டு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

நீங்கள் சொன்னதுபோலவே இந்த ஆணாதிக்கம், பெண்ணியம், பெண்ணடிமைத்தனம் இன்னோரன்ன சொற்களுக்கு வரைவிலக்கணம் கொடுப்பதென்பதோ முடிந்த முடிபொன்றிற்கு வருவதென்பதோ சாத்தியமான ஒன்றல்ல. ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுத்துவதென்பது தொடர்பாக விவாதம் ஒன்றைத் தொடங்கினால் ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா…. முட்டையிலிருந்து கோழி வந்ததா…’என்பது மாதிரியான சுழலுக்குள் மாட்டிக்கொள்ளவேண்டியேற்படும். உண்மையைப் பேசுபவர்களை விட மலினமான விடயங்களை உரத்த குரலில் பேசுபவர்களுக்கு கைதட்டல் அதிகம் என்பதை நாம்தான் நாளாந்தம் பட்டிமன்றங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோமே…
எது எவ்வாறு இருப்பினும், எனது பார்வையில், பெண் என்பவள் இரண்டாவது பிரஜையாக நடத்தப்படுகிறாள் என்பதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. அதில் சமரசம் செய்துகொள்வதற்கு ஒன்றுமில்லை. அந்தப் பாரபட்சத்திற்கு ஒருவகையில் இன்னொரு பெண்ணே காரணம் என்று யோகன் நீங்கள் கூறினால் அதை முற்றுமுழுதாக மறுத்துவிடமுடியாது. ஆனால், மாமியார்களை மட்டும் கொண்டதல்ல பெண்ணுலகம். மேலும், யார் காரணம் என்பதல்ல பிரச்சனை. எது மூலாதாரம் என்பதுதான் பிரச்சனை.
‘ஒருக்கா என்னென்று பாருங்கோ’என்று பெண் பயப்படுகிறாள் என்று கூறுகிறீர்கள். இதையே இப்படி மாற்றி யோசித்துப் பாருங்கள். வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்கும்போது உங்கள் மனைவியோ சகோதரியோ முன்னே சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தால் ‘நான் ஒரு ஆம்பிளை இஞ்சை இருக்கிறன். நீயேன் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னுக்குப் போறாய்’நீங்கள் கேட்க மாட்டீர்களா…? திருமண வீடுகளில் மேடைக்குப் போய் வாழ்த்த வரிசையில் நிற்கும்போது பெண் ஆணுக்கு முன்னால் நின்றால் என்ன செப்படி வித்;தை செய்தோ ஆண் பெண்ணைத் தனக்குப் பின்னால் ஒளித்துக்கொள்வதை நீங்கள் கண்டதில்லையா…? (இத்தகைய விவாதங்கள் சின்னப்பிள்ளைத்தனமானவை என்பதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே உணர்கிறேன்.)
விவாதங்களால் ஒரு பயனுமில்லை. உரத்த குரலும் வாதிக்கும் திறனும் உடையவரே விவாதங்களில் வெல்வர். ஆனால், உண்மை என்பதொன்றுண்டு. காலம் முழுக்க ‘நான் ஆம்பிளை’என்ற குரலைக் கேட்டுத்தான் நானும் என் போன்ற பெண்களும் வளர்ந்திருக்கிறோம். அப்பா, அண்ணா, கணவன், மகன் என மாறுபடுமேயன்றி குரல் ஒன்றுதான். எனது அண்ணா அல்லது தம்பி இதை வாசித்தால் என்ன கூறுவார்கள் என்று கேட்டிருந்தீர்கள். அவர்கள் தெரிந்தே செய்கிற தவறுகளை நான் சுட்டிக்காட்டும்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுகிற நிலைமைதான் எங்கள் வீட்டில். எனது தாய் நீங்கள் சொல்வது போன்ற ஒரு சாதாரண ‘மாமியார்’தான். ஆனால், எப்போதும் அண்ணியின் பக்கம் நின்று பேசுகிற நானும் பெண்தான். (இதற்கு கொஞ்சம் சொந்தக்கதை சொல்லவேண்டும். அதற்கு இவ்விடம் தகுந்ததல்ல.)
முன்பே சொன்னதுபோல ‘பகிர்தலும் புரிதலுமே’ வாழ்க்கை. சாரா கூறியிருப்பதைப் போல ஒவ்வொருவரும் தன்னளவில் அதைச் செயற்படுத்துவது சுலபமல்ல. நாம் ஆண், பெண் என்பதையெல்லாம் ஒருபுறம் விட்டுவிடுவோம். ஒரு உயிர் இன்னொரு உயிரை அழுத்தி மிதிக்கக்கூடாது என்பதுதான் என் வாதம். ஒப்பீட்டளவில், விகிதாசாரப்படி பார்த்தால் அழுத்துவது ஆணாகவும் மிதிபடுவது பெண்ணாகவும் இருப்பதே எனது வருத்தம். அண்மைய நாட்களில் குடும்ப வன்முறை காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். அதன் பொருள் என்ன…. ‘உயிர்போல நேசிக்கிறோம்’என்று பேசுகிறோம். அந்த உயிரையே விட்டுவிடுமளவிற்கு அவளைத் தூண்டுவது எது?

செல்வநாயகி, மாமியார்-மருமகள் சர்ச்சைகளுக்கான காரணங்களை ஆழ்ந்து சிந்தித்து எழுதியிருந்தீர்கள். ‘மெனோபாஸ்’போன்ற விடயங்களைப் பற்றி-இப்படியொரு கோணம் இருக்கலாம் என்பது நீங்கள் எழுதியபோது தெரிந்துகொண்டேன். நன்றி.

ஆண்தான் பெரியவன் என்ற மரபுமனம் மாறாதவரையில் இந்தப் பிரச்சனை தொடர்ந்துகொண்டே போகும். விவாதங்களும்கூட. ஒரு உயிர் இன்னொரு உயிரை உடல் ரீதியாகவோ மனோரீதியாகவோ துன்புறுத்தல் தகாது என்பதே என்பதே நான் சொல்லவந்தது. நானொரு ஆணாக இருந்திருந்தாலும்கூட இதே மனம் கொண்டவளாக இருந்திருப்பின் இவ்விதமே பேசியிருப்பேன். இது நான் சார்ந்த பால் தொடர்புடையது அல்ல. மனிதம் என்பது தொடர்பானது.

விவாதங்களல்ல, புரிந்துணர்வுடன் கூடிய நடத்தைகளே நமக்கு வேண்டியது.

நட்புடன் நதி

பொன்ஸ்~~Poorna said...

நதி,
நல்ல பதிவு என்று உங்களை அழைத்துச் சொல்லவேண்டும் என்று நினைத்து நினைத்தே, இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் நீண்டு விட்டன :) இப்போது கடைசி பின்னூட்டம் உட்பட, எல்லாமே அருமை என்று சொல்லும் வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது :)

பத்மா, லக்ஷ்மி, சாரா, எல்லாருடைய கருத்துக்களையும் மிகவும் ரசித்தேன்..

செல்வா, உங்கள் பின்னூட்டத்தை நீங்கள் தனிப் பதிவாக்கி இருக்கலாம் போலிருக்கிறது.. மாமியார் மருமகள் பற்றிய உங்களின் (இன்னும் முற்றுபெறாத) ஆராய்ச்சி பற்றி தனிக் கட்டுரையாகவே பதியுங்களேன் :)

Anonymous said...

சூறாவளி பதிவு சூப்பர்!
இதில் என் பின்னோட்டம் பின்னுக்கு தள்ளப்படும் போலவே!
என்ன எழுதினாலும் இந்த சுனாமி பதிவுக்கு பதில் சொல்ல முடியாதுபோலவே!

பெண் என்பதால் இப்படி எழுதமுடிந்ததா அல்லது ஆண்கள் மீது வெறுப்பா? எதுவா இருந்தா என்ன, இத படிக்கும் போது ஆணாக பிறந்த எனக்கே ஆண்கள் மீது வேகம் வருகிறது, உலகத்தில் எல்லா பெண்களும் இப்படித்தான் வாழ்கின்றார்கள் என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்... ஏனெனில் எங்க நாட்டில்(தற்பொழுது) எல்லாம் பார்த்தா அதுக்கான அறிகுறியே கிடையாது, இங்கே ஆண்கள் சும்மா....சும்மாதான்!
உஹீம்.....போய்கிட்டே இருக்கவேண்டியதுதான்...எனக்கு என்னவோ இந்தியா போன்ற ஒரு சில வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளில்தான் இதுபோன்ற சூழ்நிலை பெண்களுக்கு இருப்பதாகத் தெரிகிறது, வளர்ந்த நாடுகளில் அதுபோன்ற பாராபட்சம் குறைவு என்பதைவிட இல்லை என்றுதான் சொல்லவேண்டும்... இருந்தாலும் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதற்கு இணங்க தனி ஒரு பெண் கஷ்டப்பட்டால் கூட அந்த துயரத்தை இந்த உலகத்தைவிட்டு விரட்டவேண்டும்..
அதற்கு என்ன செய்ய முடியும்!

ஒன்று செய்யலாம், ஆண்டவனிடம் அடுத்த முறை உலகத்தை படைக்கும் பொழுது ஆதாம், ஏவால் என்று படைக்காமல் 2 ஆதாம் அல்லது 2 ஏவால் என்று படைக்கும் மாறு வேண்டிக்கொள்ளலாம்!

தமிழ்நதி said...

பொன்ஸ்,

பிந்திவந்தாலும் பிரியத்தோடு வந்திருக்கிறீர்கள். அதற்கென் நன்றி. ‘பெண்களைக் கொடுமைப்படுத்தறாங்க’என்று கீழே விழுந்து கையைக் காலை உதைத்து அழுதால்தான் ஒத்துக்கொள்வார்கள் போலிருக்கிறது. சரி… ஏதோ நம்மளாலானது.

பிரேம்,
சிங்கப்பூரில் ஆணாதிக்கம் இல்லையா…? நம்ப முடியாதிருக்கிறது. அங்கே இருக்கும் நீங்கள் சொல்கிறீர்கள். நம்பத்தானே வேண்டும். ஆனால், வளர்ந்த நாடுகளில் பொதுவாக இல்லையென்பது… அதற்கு நிறையச் பேசவேண்டும். நீங்கள் அதிர்ச்சியடையக்கூடிய பல தரவுகளைத் தரவேண்டும். ஆனால்,பேசிப் பேசி என்ன பண்ணப்போகிறோம் என்று அயர்ச்சியாக இருக்கிறது. ‘என்னமோ போங்க’நான் கண்டது இது… நீங்கள் சொல்வது இது… நானோ நீங்களோ ஒரு புள்ளியில் சந்தித்துக்கொண்டு எனதோ உங்களதோ கருத்தை ஒத்துக்கொள்ளப்போவதில்லை… பிறகு எதற்கு… செய்யமுடிந்தது ஒன்றுதான்… அதாவது ‘இல்லை… இல்லை என்கிறோமே… இப்போ இப்பிடி நடந்துகொள்கிறோமே…’என்ற சின்ன உறுத்தலை ஆண்களிடம் கொடுக்கமுடிவது. நாளடைவில் அது ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவருகிறதா என்று பார்க்கலாம்.

அரை பிளேடு said...

கரக்டுதாங்க இல்லன்ல.. எல்லாமே கரீக்டுதான்..

ஆனா பாருங்க இந்த சமுதாயம் கீதே.. அது பொம்பளைங்கள மட்டும் குடும்பம்ன்ற அமைப்புல கட்டி வச்சுல்ல.. ஆம்பிளையையும் சேத்தேதான் கட்டி வச்சி கீது...

ஆனா பாருங்க நாட்டுல இரண்டு சைடுலயும் கஷ்டம் கீது.. பொண்டாட்டி கையால அடி வாங்கற ஆம்பிளைங்களும் நிறயவே கீறோம்.. ஆனா அத்த வெளிய சொல்லி ஆணுரிம வேணும்னு கேக்க முடியுமா... இன்னாயா நீ ஆம்பிளை, பொம்பளை கையில அடிவாங்கறியேன்னு பொம்பளைங்களே கேட்டுடுவாங்கோ... அடக்கி வாசிக்க வேண்டி கீது...

ஒத்துக்கறேன்.. ஆண் பெண் சம உரிம வேணும்.. அதாவது வூட்ல ஆம்பிளைக்கும் பொம்பளைக்கு சமமா உரிம வேணும்...

ராசா.. அந்தப்புறம்.. போர்னு இன்னும் அந்த காலத்தையே எயுதிக்னு.. நாம 21ஸ்ட்டு செஞ்சுரில இல்ல இருக்கோம்... நாலு நாளக்கி முன்னாடி சமச்சத ஃப்ரிட்ஜில வச்சு சுட பண்ணி சாப்டுக்னு இருக்கோம்.. அடுத்த வேள சாப்பாட்டுக்கு நாம சமச்சாதான் உண்டு..
சும்மா இன்னும் தேவையில்லாம சீதை, கண்ணகி, நளாயினின்னு யார் யாரையோ இழுத்துக்கினு.. ஆமா இவங்கள்ளாம் யாரு...

தெரியாம எக்ஸ்ட்ராவா இரண்டு வார்த்தை வுட்டம்னா டைவார்ஸ்னு சொல்றவங்க இருக்கற நாட்டுல போயி...

தகிரியமா எயுதிட்டேன். நம்ப வூட்டுக்காரம்மா தமிழு பிளாக்கெல்லாம் படிக்க மாட்டாங்க... அல்ட்ரா மாடர்ன்.. தமிழு பிளாக்கெல்லாம் நம்பள மாதிரி பொயக்க தெரியாத புண்ணாக்குங்கதான் படிக்கும்.. ஒயுங்கா வேலைக்கு போனோமா வந்தமா, பொண்டாட்டி பேச்ச கேட்டோமா வாய்க்கையில முன்னேறினமான்னு இல்லாம.. இங்கல்லாம் வந்து தேவையில்லாம எயுதிக்னு.. இன்னாமோ எயுதனும்னு தோணிச்சு.. எயுதிட்டேன்...

நானும் உங்க சைடுதான்... வாய்க மகளிர் உரிம....

தாங்ஸ்ங்க....

தமிழ்நதி said...

அரை பிளேடு சாரு,
தாங்ஸ்ங்க நம்ம பிளாக்குக்கு வந்து ஒங்க கர்த்த ஷொன்னதுக்கு… ஒங்கள மாதிரி பாவப்பட்ட சென்மங்க செலது இருக்குன்னு எனக்குந் தெரியுஞ் சார். ஆனா நாங்க ஒங்கள விட பாவமுங்க… அததானுங்க சொல்ல வந்தேன். நீங்க பொண்டாட்டி கையால அற வாங்குறத நென்ச்சா எனக்கும் கண்ணுல தண்ணி வருதுங்க. ஆனா பாருங்க… தெனோம் தெனோம் பொண்ணுங்க அற வாங்குறத பாத்ததால வந்த வேகத்துல ஏதோ எழுதிட்டனுங்க. மத்தபடி நானும் பொழைக்கத் தெரியாத புண்ணாக்குத்தானுங்க. கடேசியா வந்த உயிர்மை பொத்தவத்துல மனுஷ்ய புத்திரன் சார் ஒரு விஷயம் எழுதியிருக்காருங்க. ரொம்ப டச்சிங்கா இருந்துச்சுங்க.

“தன் மனைவியை அடித்ததற்காக குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்ட செய்தி குடும்ப உறவுகளை ஜனநாயகப்படுத்துவதான திசையில் முதல் முயற்சி என்று கொள்ளலாம். குடும்பம் என்பது கடவுள்கூட குறுக்கிட முடியாத சுயேச்சாதிகாரம் படைத்த உலகாக ஆண்களின் எல்லையற்ற அதிகாரபீடமாகத் திகழும் இந்திய சமூகத்தில் இது ஒரு அழுத்தமான குறுக்கீடு. பெண்களைத் துன்புறுத்துவது மண வாழ்க்கையின் தார்மீக உரிமையாகவும் இன்பமாகவும் இருக்கும் சூழலில் ஆண்களின் அடிக்க உயரும் கைகளை இந்தச் சட்டம் சற்றே தயங்கச் செய்யும்.
உண்மையில் இன்னும் ஐம்பதாண்டுகளில் நாம் ஒரு சிவில் சமூகத்தை வந்தடைந்துவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது.”

அரை பிளேடு சார்! கரீக்டா சொல்லியிருக்காருல்ல.

மலைநாடான் said...

தமிழ்நதி!

//ஒவ்வொரு தனிமனிதனது மனோபாவத்திலும் மாற்றம் ஏற்படும்போது அது நாளடைவில் சமூகமாற்றமாக உருவெடுக்கும். முதலில் குடும்பத்திற்குள் அன்பு தோன்றட்டும் என்பது போலத்தான் இதுவும். வீட்டிலுள்ளோரை நேசிக்க அவ்வன்பு வெளியிலும் பரவும்//

எனக்கு மிக உடன்பாடான வரிகள். உண்மைநிலை சொல்லும் வரிகளும் கூட

Chandravathanaa said...

தமிழ்நதி
உங்களிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல பதிவு.

நாளாந்தம் அனேகமான ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகளையும் நடைமுறைகளையும்
இயல்பான முறையில் எழுதியுள்ளீர்கள். நன்றி.

மீண்டும் உங்கள் பதிவை, எனது பெண்கள் பதிவில் சேர்த்துள்ளேன்.