12.06.2006

பழைய கவிதை ஒன்று

ஒரு மாதத்தின் முன் வாங்கிய புத்தகங்களை எடுத்துப் புரட்டியபோது ‘பறத்தல் அதன் சுதந்திரம்’என்ற கவிதைத் தொகுப்பு அல்லது தொகுப்புக் கவிதைகள் அகப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள் என்ற வகைக்குள் க்ருஷாங்கனி மற்றும் மாலதி மைத்ரி தொகுத்திருந்தனர். புரட்டிக்கொண்டு போனபோது தற்செயலாக எனது பெயர் (தமிழ்நதி அல்ல-இயற்பெயர்) தட்டுப்படவே மகிழ்ச்சி கலந்த வியப்படைந்தேன். ‘யாரிடத்தில் முறையிட’என்ற தலைப்பிலான அந்தக் கவிதை 2001ஆம் ஆண்டு எழுதப்பட்டிருந்தது. கணையாழி கனடா சிறப்பிதழில் வெளிவந்தது. அக்கவிதையை தெரிந்தெடுத்தவருக்கும் தொகுப்பில் சேர்த்தவருக்கும் காலம்தாழ்த்திய எனது நன்றி. பழையதுதான், பெரிய கவித்துவம் மிக்கதென்று சொல்வதற்கும் இல்லைத்தான். எனினும் பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பார்க்கும்போது எழுவதைப்போல அதன்பால் ஒரு நேசம் கிளர்ந்தது உண்மை. அது தந்த நெகிழ்வோடு பதிவில் இடுகிறேன்.

வானமும் ஏரியும்
கூடும் அழகு குறித்து
ஓடுகின்ற பேரூந்தில் வைத்தென்
தோழி சொன்னாள்.
இலையுதிர்கால மரங்களின்
நிறங்கள் பற்றி
வானொலியில் யாரோ ஆச்சரியப்படுகிறார்கள்.
மேலும்…
பனியின் வெண்மை குறித்தும்கூட.

என் பேனா மௌனித்திருக்கிறது.

வீதியோரத்தில் உறங்கும் குழந்தைகளை…
உயிரையே உண்டுயிர்க்கும் பசியை…
என்கூடப் படித்தவள்
கபாலம் பிளந்திறந்த கொடுமையை…
இன்னும்…
என் வீட்டுக் கிணற்றடிச் செம்பரத்தை
செத்துப் போனதை…
நாங்கள் திரும்பி வருவோமெனக் காத்திருந்து
எலும்புந்தோலுமாய் செத்துக்கிடந்த
நாய்க்குட்டியைப் பற்றி…
போகிற போக்கில் காதில் விழுகிறது.

என் பேனா செவிடாயிருக்கிறது.

உள்ளுலவும் ஒளியை
ஏந்திவரும் வழியில்
எந்தக் காற்றோ அணைக்கும்.
சங்கீதம் போல ஒன்று
உதடு தொடும் நேரம்
வெறும் சத்தமாய் தேய்ந்துபோகிறது.
அற்பாயுளில் மடியும் கவிதைகட்கு
கருவறையே கல்லறையாகிறது.
புணரும் பொழுதில் கூட
கடிகாரமே கண்களில் நிற்கிறது.

என் பேனா மலடாயிருக்கிறது.

6 comments:

Anonymous said...

பதினாறும்
பெற்றுவிட்ட
பெருமைமிக்க
பேனாவை வைத்துக்கொண்டு
மலடு என்றழைப்பது
மறுக்கப்படக்கூடியது!

எத்தனை வருடம்
எங்கேயோ
குப்பைக்குள் கிடந்தாலும்
எடுத்துப் பார்க்கும்போது
தங்கம் ஜொலிக்கும்!

வைர வரிகளுக்கு
வாழ்த்துக்கள்!

தமிழ்நதி said...

பிரேம்,
கவிதைக்கு கவிதையிலேயே பின்னூட்டமா.. நன்றி நண்பரே. ‘வைர வரிகளோ’ இல்லையோ அந்தந்த வயதில் ‘நாங்கள் மிகுந்த அறிவோடிருக்கிறோம்’என்று நம்பிக்கொண்டிருந்தோமல்லவா… ஆனால், காலாகாலத்துக்கும் பார்வைகள் மாறிக்கொண்டேயிருக்கும். இப்போதெனில் இந்த ‘மலடு’என்ற சொல்லைப் பிரயோகிப்பதைப் பற்றி ஒன்றுக்கு நான்கு தடவைகள் சிந்தித்திருப்பேன்.

Anonymous said...

உண்மைதான்!
கவிதையில் கூட
காண கண் கூசும்
கடுமையான
வார்த்தைதான் அது!
அந்த காலகட்டத்தில்
அதிகம்
பயன்படுத்தப்பட்டதும் கூட!
வார்த்தையில் கூட
வரவேண்டாம் இனி இவைகள்!
கவலையை
விட்டுத் தள்ளுங்கள்
கவிதைக்காக வந்ததுதானே!
கவிஞர்கள் வரியில்
இதெல்லாம் சாதாரணமப்பா...
take it easy ya!

Anonymous said...

ஹய்யா!
அப்ப கவிதை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இனி யாரும் பரணத் தேட வேண்டாம்ம்!

-தீபா

தமிழ்நதி said...

தீவா… வா… வா…பார்த்தீர்களா… பரணில்தான் போட்டிருந்தீர்கள் போலிருக்கிறது. ம்… இந்த எழுத்தை வேறெங்குதான் போடுவது…? ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் இனி நிம்மதியாகத் தூங்கலாம். (பின்மதியம்வரை)

கலை said...

அருமையான கவிதை.